மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : விளையாண்ட கவின்

எழு வேலைக்காரா இன்றே இன்றே...
இனி செய்யும் வேலை நன்றே...

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே...
வரலாறை மாற்று வென்றே...

வேர்வை தீயே... தேசம் நீயே...

உன் சொல் கேட்டே... வீசும் காற்றே...

ஓயாதே... தேயாதே...  சாயாதே...

ஆராதே... சோராதே... வீழாதே.... போராடு.

Image result for bigg boss 86th day images sherin

ந்தப் பாட்டைத்தான் திருப்பள்ளியெழுச்சியாய் 86 ஆம் நாள் காலையில போட்டானுங்க... எவனும் ஆடணும்ன்னு நினைக்கலை... சேரன் கழுவிக்கிட்டு இருந்தார்... சாண்டியும் தர்ஷனும் மட்டும் ஆட முயற்சி பண்ணினானுங்க... பாட்டு நின்னுருச்சு.

தன்னுடைய உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த ஷெரினிடம் தனது வம்பைத் தொடர்ந்து கொண்டிருந்தான் கவின். நமக்கே கடுப்பாகுது அவன் பண்றது... ஷெரினுக்கு எரிச்சலாக இருக்காதா என்ன... இருந்தாலும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கவின் ஷெரினை எரிச்சலூட்டும் போதெல்லாம் அங்கே யார் இருக்கான்னு பார்த்தா... வேற யார் அவுக லாஸ்லியாதான்... இதற்காகத்தானே இம்புட்டுத் தூரம் பிரயாசைப் படுகிறார் கவின்ராஜா.

ஷெரின் எரிச்சலடைய, லாஸ்லியா ஒவ்வொரு கணத்தையும் ரசித்துக் கொண்டிருக்கிறார்... முகத்தில் அவங்க அம்மா வீட்டில் சுடும் பூரி போல பூரிப்பு... ஆஹா... என்ன சிரிப்பு... கவிராஜனுக்குள்ள அவுத்து விட்ட கன்னுக்குட்டி மாதிரி அம்புட்டு ஆனந்தம்... வெளிய காட்டிக்காம ஷெரினையே எரிச்சலூட்டிக் கொண்டிருந்தான். 

அதை வெளியில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த தர்ஷனின் முகத்தில் கோப ரேகைகள் இருப்பினும் கோபத்தைக் காட்டாது சிரித்துக் கொண்டே, ஷெரினை யாராச்சும் எதாச்சும் பண்ணுனீங்கன்னா... கொலை பண்ணுவேன்னு கத்த, ஷெரினுக்கு ஆச்சர்யம்.... ஆஹா... இந்தச் சத்தம் எங்கயிருந்து வருது... தர்ஷ் நீயா கொடுத்தே... சனம்... சனம்... உன் தரி'சனம்'... எனக்கு நீ தரணும் உன் மனசுல அரியா'சனம்'ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு சிரிச்சாங்க... வெட்கப் புன்னகை வேற லெவல் போங்க.

அப்புறம் எல்லாரையும் கூப்பிட்டு தின்னுட்டு தின்னுட்டு சும்மாவே உக்காந்திருக்கீங்களேடா... வனிதா இருந்தாலும் வம்படியா வம்பிழுக்கும்... இப்ப அதுவும் இல்லை... நான் என்ன எழவைத்தான் முக்காமணி நேரம் போடுறது... முக்கி முக்கித் தேடி எடுத்தாலும் முப்பது நிமிடம் கடக்குறதே பெரிய விஷயம் போலவேன்னு தன்னோட நிலமையை எடுத்துச் சொல்லி, எப்பா டேய் விளையாடுங்கடான்னு கால்ல விழுந்து கெஞ்சி, பிக்பாஸ் வெற்றியாளரான உங்களோட மனநிலை எப்படியிருக்கும்ன்னு நடிச்சிக் காமிங்கன்னு சொன்னார் தலையைப் பிச்சிக்கிட்டு நிக்கிற பாஸ்.

முகன் ஹே... ஹேயின்னு கத்திட்டு பொறந்து ஊருக்குப் பெருமை... இந்த ஊருக்குப் பெருமை... மக்களுக்குப் பெருமையின்னு என்னவோ ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாதிரிச் சொன்னான். கவின் எதையுமே அந்த நேரத்துல உணர்ந்தாத்தான் நல்லாயிருக்கும்... இப்ப எப்படிச் சொல்றது... விளையாடவே மாட்டேன்... ஜெயிச்சா என்ன பண்ணுவேன்னு கேட்டான்னு சொன்னான். தர்ஷன் வேற நாட்டுல இருந்து வந்திருக்கேன்னு சொல்லி என்னமோ சொன்னான். சாண்டி கமலுக்கு பிக்பாஸ்க்கு எல்லாம் நன்றி சொன்னார். லாஸ்லியாவும் எதுக்கோ நன்றி சொன்னார். ஷெரினும் அப்படியே.

சேரன் வந்தார்... நாலாவது இடத்தில் இருந்த தன்னோட போட்டோவை முதல் இடத்தில் வைத்து அப்பத்தானே நான் வெற்றியாளன்னு சொன்னார். இளைஞர்கள் விளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலையின்னு சொன்னாங்க... என்னோட தனித்துவத்தைக் காட்டிட்டேன்... என்னால முடிஞ்சளவுக்கு விளையாண்டேன்... நிறைய கத்துக்கிட்டேன்... நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன்... நட்பையும் எதிரியையும் பெற்றேன்... எல்லாருக்கும் ஆர்மியெல்லாம் இருக்கு... எனக்குன்னு மக்கள் வோட்டு இருக்கு... அதுபோக மற்றவர்களின் ஆர்மிக்கும் என்னைப் பிடிச்சிருக்கு... இந்த வெற்றி எனக்குக் கிடைக்க காரணமாய் இருந்த மக்களுக்கும் விஜய் டிவிக்கும் நன்றின்னார்.

சேரன் பேசிய போது பேதி போன பெருச்சாளி மாதிரி உக்கார்ந்திருந்தான் கவின். லாஸ்லியாவோட நிலமைதான் சேரனுக்காக சிரிக்கிறதா... இல்ல கவினுக்காக தானும் பேதி போன பொம்பளப் பெருச்சாளியா மாறுறதான்னு... பார்க்கவே பாவமாயிருந்துச்சு... எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேங்கிற மாதிரி எப்படியிருந்த புள்ள... இந்த பய போட்ட பிராக்கெட்டுல பிரேக் இல்லாத வண்டி  பள்ளத்துல விழுந்த மாதிரி ஆயிருச்சு.

மறுக்கா கொஞ்ச நேரம் சமையல் கிமையல் பண்ணுங்கடான்னு விட்டாரு பிக்பாஸ்... சாண்டி சாண்டிமான் கதை சொல்லி எல்லாரையும் சிரிக்க வைச்சிக்கிட்டு இருந்தார். கவின் மற்றும் லாஸ்லியா மிஸ்ஸிங்... சாண்டிக்கிட்ட நல்ல திறமைகள் நிறைய இருக்கு... அடுத்தவரை ஓட்டுவதை மட்டும் விட்டுட்டா மனுசன் மனுசனாக இருப்பார்.

ஷெரினை விரட்டும் கவின்... பாத்ரூம் வரைக்கும் பொயிட்டான்... விட்டா உள்ள போயி உக்காந்து கதை பேசுவான் போல... படுத்திருக்கும் ஷெரினின் முழங்காலைப் பிடித்துக் கொண்டு இருந்தான்... இப்பவும் அங்கே லாஸ்லியா இருந்தார். என்னை ஏன்டா விரட்டுறேன்னு கேட்டதும் எனக்கு யார் இருக்கா... இப்படி விளையாடன்னு சொன்னான். எல்லாமே லாஸ்லியாவுக்கான பதில்களாய்த்தான் இருந்தன.

என்ன ஜென்மமோ இவன்னு தோனினாலும் அவனையும் அவளையும் காப்பாத்திக்கவும், அவளை அவனுடையவளாக ஆக்கிக் கொள்ளவும் மிகவும் சிரத்தையாக கவனமாக விளையாடுகிறான். எல்லாருக்கும் அவன் செய்வது பிடிக்கவில்லை என்பது முகத்தில் தெரிகிறது. சேரனைப் பொறுத்தவரை எதாவது சொல்லப் போனால் லாஸ்லியா காதலைத்தான் கெடுத்தே இவகிட்ட விளையாடுறதையும் ஏன் கெடுக்கிறேன்னு எகிறுவான் என்பதால் ஒதுங்கியிருக்கிறார். மற்றவர்கள் எல்லாரும் பூனைக்கு யார் மணி கட்டுவது என யோசிக்கிறார்கள்... பூனை விரட்டும் எலிதான் கட்ட வேண்டும்... எப்படியும் ஷெரின் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லாரையும் மறுபடியும் கூப்பிட்ட பிக்பாஸ், மிகப்பெரிய டாஸ்க்கான 'சாயம் வெளுத்துப் போச்சு' கொடுத்தார். கலர்கலராய் தண்ணீர் நிரப்பப்பட்ட சோதனைக் குழாய்களில் இருப்பதை, எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப, யார் பொருத்தமானவர் என இருவரைத் தேர்ந்தெடுத்து அவரின் முன்னால் இருக்கும் கண்ணாடிக் குடுவையில் ஊற்ற வேண்டும். எல்லாரும் செய்த பின் அடுத்த சீட்டு, அடுத்த சுற்று. இறுதியில் யாருக்கு குறைவாக இருக்கிறாதோ அவரே வெற்றியாளர்.

சேரனை மக்கள் ஆதரவுக்காக நடிக்கிறார் என தர்ஷன் சொன்னது, கவினைச் சொன்னதால் சேரனையும் தர்ஷனையும் லாஸ்லியா சொன்னதென நிறைய நிகழ்ந்தது என்றாலும் பெரும்பாலும் லாஸ்லியா, கவினுக்கே ஊற்றப்பட்டது. இதில் ஷெரின், சேரன், தர்ஷன், முகன், லாஸ்லியா, சாண்டி, கவின் என வெற்றி பெற்றார்கள். முகனும் லாஸ்லியாவும் ஒரே எண்ணிக்கை பெற்றிருந்ததால் கூடிப் பேசி முகன் நாலு, லாஸ்லியா அஞ்சு என மாற்றிக் கொண்டார்கள்.

சேரன் ஷெரினிடம் இனி ரெண்டு வாரம்தான் முடிந்தவரை உன்னோட விளையாட்டை விளையாடு, எது மனதுக்கு சரியின்னு படுதோ அதைச் செய், யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். முடிந்த வரை விளையாடு இல்லைன்னா போயிடலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். இப்ப லாஸ்லியா சேரனிடம் அதிகம் ஒட்டுவதில்லை... இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் கூட இல்லை... ஒருவேளை கவினுடன் ஒதுங்கியிருப்பது போல் நடிப்பதால் சேரனுடன் ஒதுங்கியே இருக்கலாம்.

அப்புறம் சமையல் நடக்க, கவின் தாளம் போட, மற்றவர்கள் ரசிக்க, அருமையாகப் பாடினான் முகன். அவனே எழுதிய பாடல் போல... நல்ல வரிகள்... லாஸ்லியாவைப் பார்த்து கவின் பாடுவதைப் போல... கவின் முகம்தான் தேவாங்கு போல இருந்தது. லாஸ்லியா ரசித்தார்... இன்னும் பாடல் ரிலீஸ் பண்ணவில்லையாம்... எல்லாருமே பாராட்டினார்கள்... ஆமா அந்த வரிகள் எல்லாமே அச்சு அசலா கவின் லாஸ்லியாவைப் பார்த்துப் பாடுவதைப் போல்தான் இருந்தது.

மறுபடியும் கக்கூஸ்க்கு ஷெரினை விரட்டிப் போனான் கவின்...ஷெரின் கொஞ்சம் சூடாகப் பேசவே, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நேர வந்து சமையல் செய்யப் போவது போல் அடுப்பைப் பற்ற வைத்த லாஸ்லியாவிடம் வந்து சிவாஜியை முன் நிறுத்தினான். என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல்லன்னு என்னமோ பேசினான்... சப்டைட்டில் போட மறந்துட்டார் பிக்பாஸ்... அதென்ன ஷெரின்கிட்ட பேசும் போது மைக் உடையுற அளவுக்கு சப்தம்... லாஸ்லியாக்கிட்ட மைண்ட் வாய்ஸைவிட கம்மியாய்... நடிகன்டா நீ.

மறுபடியும் வாங்கடா டாஸ்க்குக்குன்னு மரக்கடை தராசோட ஒரு பக்கத்தை காலில் மாட்டி பேலன்ஸ் பண்ணி கொடுத்த மரக்கட்டைகளை அதில் அடுக்கி விழாதவாறு நிறுத்தி வைக்க வேண்டும்... ஒவ்வொரு மணி அடித்ததும் ஒரு கட்டையை எடுத்து வைக்க வேண்டும்... யார் கால் வலி பொறுத்து, மரக்கட்டை விழாமல் ஒவ்வொன்றாய் அடுக்கி கடைசி வரை நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.

சேரன் உடனே வெளியேற, அடுத்து தர்ஷன், அவன் பின்னே ஷெரின், சாண்டி வெளியேற, லாஸ்லியா, கவின், முகன் ஐந்து கட்டைகளையும் வைத்து நின்றார்கள். லாஸ்லியா கவின் பொறுமையா விளையாடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டுக்காரரை விட்டுக் கொடுக்க முடியுமா..? லாஸ்லியா லாஸ் ஆக... முகனும் கவினும்... கவினுக்கு நிறைய ஆதரவு... இறுதியில் முகன் வெற்றியாளன்.... 27 நிமிடம் நின்றானாம்... கவின் 26 நிமிடங்களுக்கு மேல்... உண்மையில் இந்த 86 நாளில் கவின் முதல் முறை விளையாண்டிருக்கிறான்.

அழுகணும்ன்னாலும் கக்கூஸ்க்கு ஓடுறான்... கால் வலின்னாலும் கக்கூஸ்க்கு ஓடுறான்... அங்க வச்சே காலைச் சரி பண்ணுனாங்க... சேரன் அருமையா விளையாண்டாய் என அணைத்துக் கொண்டார். காலைப் பிடித்து விட்டார்... கவின் நல்லா விளையாண்டான் என எல்லாரிடமும் சொன்னார். அப்பா டேய்... இதெல்லாம் நடிப்புன்னு சொல்லிடாதீங்கடா... உண்மையைச் சொல்றான் அந்த மனுசன்... இன்னைக்கும் அவரு செஞ்சது நடிப்பா... இல்லயான்னு லாஸ்லியா சொல்ற மாதிரி, நடிக்கிறாருன்னு சொல்லிடாதீங்க... திறமையை மதிக்கத் தெரிந்த கலைஞன் அவர்.

அப்புறம் இன்னும் நேரமிருக்கே... உக்காந்து ஏதாவது பேசிக்கிட்டு இருந்துட்டு அப்புறம் சாப்பாடு போடு குருநாதான்னு நிப்பாங்களேன்னு சொல்லிட்டு, ஏய் எல்லாரும் இங்க வா... உங்களுக்குப் பிடிச்ச, பிடிக்காத, வருந்திய, கோபப்பட்ட என என்மேல எதாயிருந்தாலும் சும்மா சொல்லுங்க... கேட்டுக்கிறேன்னு பிக்பாஸ் சொன்னார். எவனும் நம்மளைக் கழுவி ஊத்த மாட்டாங்கன்னு நம்பிக்கை போல. 

படுக்கை அறைக்குள் போய் பேசிய ஷெரின், என்னை ஷெரின்னு சொல்லுடா என் செல்லக்குட்டின்னு சொன்னுச்சு... ரொம்ப நேரம் பிக்பாஸை லவ் பண்ண, அதையா கூப்பிட்டே குருநாதா... அங்கயே பேசிட்டு தூங்கியிருக்குமேன்னு சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

சேரன் பிக்பாஸ் குரலை ரொம்ப நேசிக்கிறேன் என்றார். முகன் பிக்பாஸை பார்க்கலைன்னாலும் அந்த அரட்டலான குரல் பயமுறுத்துது கொஞ்சம் அன்பாக் கூப்பிடுங்கன்னு சொன்னான். சாண்டி என்னை சிஷ்யனா ஏத்துக்கிட்டதுக்கு... அப்பப்ப கலாய்ப்பதற்க்கு கட்டிப் புடிச்சி முத்தம் கொடுக்கணும் என்றார். 

லாஸ்லியா தன்னை லாஸ்லியா என அழகாய் அழைப்பது பிடிச்சிருக்கு... யாரிடமும் சொல்ல முடியாத விஷயத்தை உங்களிடம் சொல்ல முடிகிறது என்றார். கவின் லவ் யூன்னு நாந்தான் அதிகமாச் சொல்லியிருப்பேன் குருநாதான்னு சொன்னான்... பின்னே அபி, சாக்சி, லாஸ்லியா,ஷெரின்.. அப்பப்ப பிக்பாஸ்... அவன் சொல்றது உண்மைதானே... மேலும் வெளிய வந்து கட்டிப்புடிச்சி உனக்கு முத்தம் கொடுப்பேன்னு வேற சொன்னான். சாக்சிக்கு ஊட்டி விட்டது ஞாபகம் இருக்கட்டும் குருநாதா... உதடு பத்ரம்.

தர்ஷன் எப்பப் பேசணும்ன்னு சொன்னாலும் கூப்பிட்டுப் பேசுறீங்க... எங்க மேல பாசமாயிருக்கீங்க... அப்படியே புரோட்டாவும் சிக்கன்கறியும் கொடுத்து விடுங்களேன்னு பிட்டைப் போட்டான். எது எக்கேடு கெட்ட எனக்கென்ன... எனக்கு வேலா வேலைக்கு சட்டிச் சோறும் தனியே கோழியும் வேணும் ரகம் இவன்... தமிழன்டா... திங்கிறதுக்கு கேக்குறதுல இருக்க ஒற்றுமை விளையாட்டில் இல்லை.

எல்லாரும் முடிச்சதும் சரி எல்லாரும் பேசிட்டீங்க... இனி போங்க... போயி சமையல் பண்ணுங்க... சாப்பிடுங்க... அப்புறம் நல்லாத் தூங்குங்க... குட்நைட்டுன்னு சொல்லிட்டு பிக்பாஸ் ஓடிட்டாரு... பின்னே தினமும் தின்னு தீர்த்தா சென்னையில இருக்க எல்லாக் கடையிலயும் வாங்கிக் கொடுத்தாச்சாம்... இனி செங்கல்பட்டுப் பக்கம்தான் போகணுமாம்... தின்னே விஜய் டிவி சொத்தை அழிச்சிருவானுங்க போல...

எங்களுக்கு புரோட்டா, சிக்கன் வேணுன்னு கத்திக்கிட்டு இருந்தானுங்க... முகன் புரோட்டாவோ சாப்பிட்டதில்லைன்னு வேற சொன்னான். மலேசியா முழுவதும் நம்மாளுகதான் கடை வச்சிருக்கானுங்க... வேணும்ன்னா நேர கேளுங்கடா... நேத்து ஒண்ணுதான் தின்னேன்.... எனக்கு புரோட்டாவும் குருமாவும் டேஸ்ட் பாக்கணும்ன்னு புழுகாதீங்கடா... எல்லாரும் கத்த, பிக்பாஸ் கடையை மூடிட்டாரு...

எங்க வனிதாக்கா இருந்தா வாங்காம விட்டிருக்குமா... பிக்பாஸை ஓடஓட விரட்டி வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கும்ல்ல... அக்கா மிஸ்ஸிங்கால புரோட்டாவும் மிஸ்ஸிங் போல...

எப்படியும் அழுதாச்சும் வாங்கித் தின்னிருப்பானுங்க...

இதைப் பார்த்துக்கிட்டே நான் தின்னது...

பாவக்காய் கூட்டு...

டிஸ்கி : நாளை முதல் அதிகமாக ஆணி புடுங்க இருப்பதால் இரவே உக்கார்ந்து எழுதியாச்சு. இனி தினமும் அப்படிதான் எழுதணும். இப்படிப் படிச்சிருந்தா கலெக்டர் ஆகியிருக்கலாம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// தின்னே விஜய் டிவி சொத்தை அழிச்சிருவானுங்க போல...//

சரி தான்... ஹா... ஹா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

டிஸ்கி : பாவக்காய் கசப்பு... பகிர்வு என்றும் இனிப்பு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதானே அண்ணா...
சாப்பாடு சாப்பாடுன்னுதான் கிடக்காணுங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி அண்ணா...

நிலாமதி சொன்னது…

'இப்படிப் படிச்சிருந்தால் கலெக்டெர் ஆகி இருக்கலாம்.' நானுந்தான் ..

காலம் கடந்த ஞானம் பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா...ஹா... உண்மைதான்...
காலம் கடந்த ஞானம்தான்...
இருப்பினும் ஏதோ ஒரு வகையில் சாதிப்போமென நம்புவோமாக...
நன்றி.