கவின் வெற்றி பெறணும்ன்னு நினைச்சி விளையாடலைன்னு சொல்றவங்களை நினைச்சாச் சிரிப்புத்தான் வருது. ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கவின்..?
இலங்கையில் துன்பப்பட்டு சனமின் காதலனாய், மாதவனாய் தர்ஷன் வந்திருக்கிறான்... அவன் வெல்லட்டும்.
இலங்கையில் குடும்பத்தை விட்டுவிட்டு தமிழகத்தில் குத்துவிளக்கு ஏற்ற லாஸ்லியா வந்திருக்கிறாள்... அவள் வெல்லட்டும்.
மலேசியாவிலிருந்து மக்குப் பயலாய், பலர் மதிக்கும் பயலாய் முகன் வந்திருக்கிறான்... அவன் வெல்லட்டும்.
லாலாவை விட்டுவிட்டு வோலாவுலா மாமியாருக்கு அப்பனாய் மகத்தான மனிதானாய் சாண்டி வந்திருக்கிறார்... அவர் வெல்லட்டும்.
இப்படித்தான் இதுவரை பேசி வருகிறான். இது எப்படியிருக்குன்னா பக்கத்து இலைக்குப் பாயாசம் போடுங்க தம்பின்னு சொல்லிட்டு, அப்படியே நமக்கு ரெண்டு கரண்டி முந்திரி, கிஸ்மிஸோட அள்ளிப் போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு.
எங்கய்யா ஒருத்தர் இருக்கார்... அவரோட திருமண, திருவிழா, கோவில் பூஜைகளுக்குச் சென்றால், அவர் அருகில் அமர்ந்தால் நமக்கு அதை வை, இதை வையின்னு சொல்லிக் கூப்பிட்டு தனக்கும் வைத்துப் போகச் சொல்வார். அதுதான் கவின்.
அவனோட விளையாட்டு அபி. சாக்சி, லாஸ்லியா என்பதையெல்லாம் தாண்டியது. உனக்கு நானிருக்கேன் மச்சான் என்பதாய்க் காட்டிக் கொண்டு, மலையிலிருந்து தள்ளி விடும் நம்பியார் ரகம் அவன்.
இதுவரை அவன் போட்ட எந்தத் திட்டமும் வேலை செய்யாமல் போனதில்லை... எந்த ஒரு திட்டத்திலும் அவன் நேரடியாக களமிறங்க மாட்டான். அதுக்குத்தான் லாஸ்லியா, சாண்டி, முகன் மூவரையும் வைத்திருக்கிறான். நாமினேசன் நாட்களில் பெரும்பாலும் பெண்களின் முந்தானையைப் பிடித்தபடியே திரிவான்... இவன் வித்தியாசமான வில்லன்.
நேற்று ஷெரினுடன் அவன் நடத்திய நாடகத்துக்கான காரணங்கள் இரண்டுதான்... அது என்ன என்பதைப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இப்ப பிக்பாஸ் வீட்டுக்குள்ள தூங்குறவனுங்களை எழுப்பலாம்.
85ஆம் நாள் திருப்பள்ளி எழுச்சியாய் 'நிமிர்ந்து நில்... துணிந்து செல்...' பாட்டைப் போட, எவனுமே எந்தரிக்கவே இல்லை... இன்னும் பதினைந்து நாள்தான் இருக்கு வீரமாய் விவேகமாய் விளையாடுங்கடான்னு சொல்றதுக்கு அறிகுறியாப் பாட்டைப் போட்டா, பயபுள்ளைங்க சனிக்கிழமை இரவு சரக்கடிச்சவனுங்க மாதிரி மட்டையாகிக் கிடக்கானுங்க...
உங்களை வச்சி இந்த பிக்பாஸை நடத்துறதுக்கு பழனிக்கு ரெண்டு தடவை நடந்து போய் மொட்டையும் போட்டுட்டு பஞ்சாமிர்தமும் வாங்கித் தின்னுட்டு வந்திருப்பேன்னு நினைச்ச பிக்பாஸ் இருங்கடி இன்னைக்கு ஆப்படிக்கிறேன்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டே பாட்டை நிறுத்தியிருப்பார்ன்னு தான் நினைக்கிறேன்.
அன்னை வனிதா இல்லாத சமையலறை ஜெயலலிதா இல்லாத அதிமுக மாதிரி அதகளப்பட்டுக்கிட்டு இருந்துச்சு... ஆளாளுக்கு ஆட்டம் போட்டானுங்க... எவனுக்கும் எதுவும் தெரியலை... இருந்தாலும் ரெண்டு வருசமா அவுகளை ஏத்துக்கிட்ட மாதிரி இவுகளையும் இன்னும் பதினைஞ்சி நாளைக்கு ஏத்துக்கத்தானே வேணும்... அதுதானே நம்ம தலையெழுத்து.
சாண்டி தோசை ஊற்றி கல்லைச் சுற்றினார்... கருப்பாக ஏதோ இருக்க... ஈஈஈ தோசை என்றார். பின்னர் இது ஈயல்ல வண்டுத் தோசை... எனச் சொன்னார். எப்படியும் எவனும் ஒழுங்காச் சாப்பிடிருக்க மாட்டானுங்க... எதாவது ஹோட்டல்ல இருந்துதான் போயிருக்கும்... நேற்றுச் சொன்னது மாதிரி பிக்பாஸ்க்கு தீனிச் செலவு அதிகம், இம்முறை தீனிக்கான செலவைக் கழிச்சிக்கிட்டே சம்பளம் போட்டாலும் ஆச்சர்யமில்லை.
அப்புறம் நாமினேசன்... எப்பவும் போல அவங்க இவங்களைச் சொன்னாங்க.... இவங்க அவங்களைச் சொன்னாங்க... எல்லாரும் சொன்ன ஒரே காரணம் நாம இங்க எப்படியோ அதே மாதிரி அங்கிட்டு அவங்க பெரிய தலைக்கட்டுங்கிறதுதான்.
சேரன், ஷெரின், கவின், லாஸ்லியான்னு சேரன் ரகசிய அறைக்குச் சென்ற வாரத்தில் இருந்த அதே நால்வர்... இம்முறை சேரன் அல்லது ஷெரின், அப்ப அடுத்த வாரம் ஷெரின் அல்லது சேரன்... ஹி...ஹி... இருவாரங்களில் இருவரும் விரட்டப்படுவார்கள்.
யாரை நாமினேசன் பண்ணினோம்ன்னு அவனவன் சொல்லிக்கிட்டு இருந்தான்... சட்டதிட்டங்கள் எல்லாம் எங்களுக்கு கழட்டிப் போட்ட சட்டை மாதிரியின்னு எல்லாத்தையும் சொல்லிடுறானுங்க... கமல் ஒருமுறை கூப்பிட்டு தனித்தனியா கேமை விளையாடுங்கன்னு சொன்னதை லாஸ்லியால்லாம் அப்பவே கவின்கிட்ட சொல்லிருச்சுன்னு நேற்றும் சொன்னுச்சு... பிக்பாஸ் தண்டிக்க மாட்டார் மாறாக காப்பாற்றுவார்.
எல்லாரையும் உக்கார வைச்சி, இந்த வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளெல்லாம் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே, நீங்கள் விளையாடுவதைப் பொறுத்து உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றார் பிக்பாஸ். ஆமா பெரிசா என்ன டாஸ்க் கொடுக்கப்போறே... மதியத்துக்கு சாப்பாடு அனுப்புனியா இல்லையா..? அதைச் சொல்லு முதல்ல... என்பதாய் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
பாட்டுக்கு ஆடலை... நாமினேசன் பண்ணிட்டு உன்னைத்தான் பண்ணுனேன்னு சொல்லிக்கிறானுங்க... இது இறுதிப்போட்டிக்கு நேரடித்தகுதிக்கான வாரம்ன்னு சொன்னதுக்கும் பெரிசா எதுவும் காட்டிக்கலை... இவனுகளுக்கு விளையாடுற எண்ணத்தைவிட, கமல் சார் சொன்ன மாதிரி பிக்னிக் வந்திருக்க நினைப்புத்தான் இருக்கும் போல, முதல் போட்ட நாம கடைசியில முக்காடா போட்டுக்கிட்டுப் போக முடியும்ன்னு நினைச்ச பிக்பாஸ், பாடலுக்கு ஆன கடுப்புடன் எல்லாரையும் லிவிங் ஏரியாவுல உக்கார வச்சி, நாங்க கூட்டியும் கொடுப்போம்... காட்டியும் கொடுப்போம் டாஸ்கை செஞ்சிட்டார்.
ஆம்... குடும்பங்கள் வந்த போது ரகசியமாய் சொல்லிச் சென்ற யாரையும் நம்பாதே, விளையாட்டை விளையாடு, எல்லாரும் உன்னைப் பயன்படுத்திக்கிறாங்க, உறவு முறையெல்லாம் சும்மா என எல்லாத்தையும் போட்டுக் காட்டிட்டார். இப்பவாச்சும் அறிவு வந்து ஆக்ரோசமாக விளையாடுங்கடான்னு சொல்லாமல் சொன்னார். விளையாடுறானுங்களான்னு பார்ப்போம்.
பிக்பாஸ்... தாங்க்யூ பிக்பாஸ்... லவ் யூ பிக்பாஸ்... எனக்கு எடுத்துக் கொடுத்துட்டீங்க பிக்பாஸ்... இனிப் பாருங்க என்னோட செயல்திறனை... அடிச்சி ஆடுவேன் பிக்பாஸ்... அப்படின்னு மனசுக்குள்ளே கத்தியிருப்பான் போல கவின். பிக்பாஸூம் அடிச்சி ஆடுவான்னு மகிழ்ந்திருப்பார் போல. பய லாஸ்லியாவை திரும்பி தன்னோட கட்டுக்குள் கொண்டு வர நடிக்க ஆரம்பிச்சிட்டான்.
கரகாட்டக்காரன் செந்தில் போல (திருவிழாவுல காணமப் போன பிள்ளை மாதிரி) முகத்தை வைத்துக் கொண்டு லாஸ்லியாக்கிட்ட, உங்கம்மா என்னைத்தான் சொல்றாங்க... உன் தங்கச்சி என்னைத்தான் சொல்றா... உங்கப்பா என்னைத்தான் சொல்றாரு... கமல் சார் என்னைத்தான் சொல்றாரு...பிக்பாஸ் என்னைத்தான் சொல்றாரு... நீ கூட கமல் சார்க்கிட்ட என்னைத்தான் சொன்னே... சேரப்பாவும் என்னைத்தான் சொல்றாருன்னு நடிக்க ஆரம்பிச்சிட்டான். முகத்தை டிசைன் டிசைன்னா மாத்துறதுல கில்லாடி போல... நவரசநாயகன் கார்த்திக் தோத்தார் இவனிடம்.
இவன் புலம்பவும் லாஸ்லியாவுக்கு கண் கலங்கிருச்சு... உன்னைச் சொல்லலை... சேரப்பாவோட பாசம் உண்மையா நடிப்பான்னு தெரியலைன்னுதான் நான் அப்பவுல இருந்து இப்ப வரைக்கும் சொல்லுறேன்னு தேத்த ஆரம்பிக்க, ஹிஹி... புள்ள கவுந்திருச்சு... கவினு கண்ணாடியைக் கலட்டிறாதேடான்னு தேவாங்கு முகத்தை தேதே...வாவா...ங்ங்...குகு முகமா மாத்திக்கிட்டான். லாஸ் totally loss.
சேரனின் அன்பை, பாசத்தை பலரும் சொல்லிச் சென்ற பின்னும் இன்னும் அது உண்மையா பொய்யான்னு ஆராய்ச்சி செய்யுற, எதையுமே நான் எனக்குள்ள யோசிச்சித்தான் முடிவெடுப்பேன்னு சொல்ற லாஸ்லியவால் கவினின் நடிப்பை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை... அது 100% உறுதியானது... நம்பகத்தன்மையானது... ராணாடார் முறுக்குக் கம்பியைவிட சிறந்தது, சங்கர் சிமிண்டைவிட தரமானதுன்னு நம்புறதை என்னத்தைச் சொல்றது... உன் விதி எழுதப்பட்டது... அதை மாற்றவா முடியும்..?
போட்டியாளர்களைச் சந்திக்க ரெண்டு பேரை அனுப்புனானுங்க... என்னவோ அத்தை மக்கள் மாமன் மக்கள் பாத்துக்கிற மாதிரி வந்தவனுங்களும் இருக்கவனுங்களும் அளவளாவி மகிழ்ந்தானுங்க... அவனுக பாட்டுப் பாடச் சொன்னானுங்க.... அதுவும் ஸ்கூல் டாஸ்க் மாணவர்களைப் போல, என்ன ரசனையோ தெரியலை.... சாண்டி கதாபாத்திரத்துக்குள் போய்விட்டார்... சேரன் தலைமையாசிரியராயிட்டார்.. நாம பள்ளிக்கூடம் போகாம படத்துக்கு போற பயலா எஸ்கேப் ஆயிட்டோம்.
முதல் போட்டி : பலூன் உடைத்தல்
இரண்டு கணுக்காலிலும் கட்டிய பலூனை மற்றவர் உடைக்காமல் பாதுகாக்க வேண்டும்... அப்படிக் கடைசி வரை பாதுகாப்பவரே வெற்றியாளர்... லாஸ்லியாவைப் பாதுகாக்குறதுன்னா திங்காமத் தூங்காமச் செய்வான். இது விளையாட்டுல்ல... அதெப்படி விளையாட முடியும்...? அதனால முதல் அவுட்... அப்புறம் முகன், லாஸ்லியா, சேரன், ஷெரின்ன்னு வரிசையா அவுட்டு... தர்ஷனும் சாண்டியும் ரொம்ப நேரம் விளையாண்டாங்க... கால் வலியுடனும் விடாமல் விளையாண்டு தர்ஷனே வெற்றி.
இரண்டாம் போட்டி : கயிறு இழுத்தல்
ஷெரின், தர்ஷன், கவின் இழுக்க சாண்டி, லாஸ்லியா, முகன் வீழ்ந்தார்கள். சேரனை நீ ஒரு ஓரமா நின்னு வீடியோ எடுப்பான்னு சொல்லிட்டானுங்க... அவரும் கர்ம சிரத்தையோட வீடியோ எடுத்தார். இந்த வார விளையாட்டுல சேரனை சேரனை இப்படி ஓரமா நிக்கச் சொல்லிட்டா எப்படி நேரடி இறுதிக்கு அவரும் களத்தில் இருப்பார்ன்னு தெரியலை... சரி விடுங்க... கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் பிக்பாஸ் போடுற கணக்குச் சரியா வரும்.
ஷெரின் முட்டையைக் கலக்கி எதோ ஒண்ணு செஞ்சாங்க... அவங்களுக்கு உதவியாய் லாஸ்லியாவும் உபத்திரவமாய் கவினும்... உனக்கென்னடா பிரச்சினை என்பதை சிரிச்சபடியே ஷெரின் கேட்டாங்க... வரும் நாட்களில் சிரித்தபடி கேட்பாரா என்பது சந்தேகமே.
மூன்றாவது போட்டி : வரிசைப் படுத்துதல்
யார் வெல்லக் கூடிய தகுதி படைத்தவர் என்பதை அவரவர் பார்வையில் வரிசைப்படுத்தி நிற்கச் சொல்ல வேண்டும்... பெரும்பாலும் தர்ஷன் முதலிடம் முகன் இரண்டாமிடம்... சேரனுக்கு நாலவது இடம்... தன் காதலுக்கு எழவைக் கூட்டியவன் என்பதால் கவின் மட்டும் அவருக்கு ஏழாவது கொடுத்தான்... லாஸ்லியா மற்றும் கவினுக்கு ஆறு மற்றும் ஏழு.
கவினை இறுதியில் நிறுத்திய போதெல்லாம் லாஸ்லியாவின் முகத்தில் இருபது கோடி சூரியன். கவினுக்குச் சேரன் நாலு கொடுத்தார், தர்ஷனுக்கும் முகனுக்கும் கடைசி... அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு இறுதிப் போட்டிக்கான நேரடி வாய்ப்பு வேணுமய்யா என்பதே... இதுவும் ஒரு சரியான சிந்தனையே.... உடல் வலிமை காட்டி வெல்ல முடியாத போது அறிவால் வெல்ல முயற்சிக்கலாம்... தப்பில்லை.
லாஸ்லியா முக அழகுக்கு மாவு பூசி கண்ணுக்கு வெள்ளரி வைத்துப் படுத்துவிட, ஷெரினைக் கலாய்த்துக் கொண்டிருந்தான் கவின்... ஷெரினும் முடிந்தவரை போராடிக் கொண்டிருந்தார்... லாஸ்லியா படுத்தபடி அதை ரசித்துக் கொண்டிருந்தார் என்று தோன்றினாலும் மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்திருப்பார்... கவினை அல்ல பெத்த அப்பனை... தர்ஷன் இருமுறை பார்த்துக் கொண்டே சென்றான்... கவினுக்கு எப்படியும் கச்சேரி இருக்கும்ன்னு தோணுது.
இப்ப வருவோம் ஆரம்பத்தில் சொன்ன கவினின் நாடகத்துக்கு... ஷெரினைச் சீண்ட இரண்டு காரணமே உண்டு.
அதில் முதலாவது, லாஸ்லியாவை விட்டு விலக முடியாது என்பதையும் அவளைக் கைக்குள் வைத்திருந்தால்தான் இன்னும் மூன்று வாரங்களுக்கு பிரச்சினையில்லாம் இருக்கும் என்பதையும், அவ அப்பன் ஆத்தா சொன்னா என்ன... கவின்தான் என் மூச்சுன்னு சொல்ல வைக்கிறேனா இல்லையா பார்ன்னு முடிவு பண்ணிட்டான். அதற்கான ஆரம்பமே இவ்விளையாட்டு.
எந்தப் பொண்ணுக்குமே தன்னை விட்டுவிட்டு அடுத்தவளுடன் தன் அன்புக்குரியவன் கடலை போடும் போது கோபம் வரத்தான் செய்யும்... இதே வீட்டில் சாக்சியைப் பார்த்தோம்தானே.. அபியைப் பார்த்தோம்தானே... அப்படி ஒரு கோபத்தை லாஸ்லியாவிடமிருந்து வெளிக்கொண்டு வந்து தன் காதலைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து லாவகமான காய் நகர்த்துகிறான்.
இரண்டாவது இப்ப அவன் நாமினேசனில்... லாஸ்லியா ஒதுங்கி நிற்கிறாள்... சேரனுக்குக் கூட வீட்டுக்குள் நிற்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கலாம் என்றாலும் அவரோட நேரடியாக மோத முடியாது. மறைமுக மோதல்தான்... சாண்டி கூட சேரனுடன் ஒட்டுதலாகி விட்டார்... இனி சாண்டி இந்தத் தாக்குதலுக்கு ஒத்துப்பாரான்னு தெரியலை. எனவே தானும் லாஸ்லியாவும் வெளியேற்றத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் ஷெரினைக் கோபத்தின் உச்சிக்கு கொண்டு போய், கவின் ஜாலியாத்தான் விளையாண்டான் ஷெரின்தான் இப்படிப் பண்ணுறாள்ன்னு சக போட்டியாளர்களை வைத்தே சொல்ல வைத்து , மக்கள் ஓட்டில் பின்னுக்குத் தள்ளி, தாங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு. இது அவனுக்கு நிறையத் தடவை சரியாக வேலை செய்திருக்கிறது. தனக்கு ஓட்டு விழும் என்பதை உணர்ந்தே வைத்திருப்பதால் லாஸ்லியாவை நிறுத்தச் செய்யும் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டு காரணம் மட்டுமே ஷெரின் சீண்டலில் முக்கியமானதாய்...
இதில் ஷெரின் எப்படியும் புரிந்து அதைத் தவிர்த்து தன் விளையாட்டில் நேர்மையாய் இருக்க வாய்ப்பிருக்கு... ஆனால் லாஸ்லியா, இவனின் நடிப்பெல்லாம் எதற்கானது என்பதை உணரும் நிலையில் இல்லாததால் மீண்டும் வீழ்வார்... மரியதாஸின் பாசத்தை கவினின் நடிப்பு காவு வாங்கும் நாள் விரைவில்.
விளக்கணைத்த பின் இருவரும் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கவிராஜனை இப்படியே இரு... அழகாயிருக்கு... ஜாலியா இருக்குன்னு லாஸ்லியா சொன்னாங்க... கவினின் கணக்கு சரியான பாதையில் நகர ஆரம்பிப்பதில் தேவாங்கு முகம் தேவதர்ஷினி முகமாய் மாறியிருந்தது... அது சில நாட்களுக்குச் ஷெரினிடம் சந்திரமுகி முகத்தைக் காட்டும்.
லாஸ்லியா காதலோடு பேச, கவின் லாஸ்லியாவுக்குச் சொன்னது...
குட் நைட்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
// ஜெயலலிதா இல்லாத அதிமுக மாதிரி //
ஹா... ஹா...
// மலையிலிருந்து தள்ளி விடும் //
வாராய்... நீ வாராய்... போகும் இடம் வெகு தூரமில்லை...
நம்பியாரா...?!
// ராணாடார் முறுக்குக் கம்பியைவிட சிறந்தது, சங்கர் சிமிண்டைவிட தரமானது... //
ஹா... ஹா...
ஏன் நாடகம்...? இந்த விவரிப்பு தான் செம.....!
கருத்துக்கும் தொடர் ஊக்குவித்தலுக்கும் நன்றி அண்ணா.
அதே.. செம பெர்பார்மன்ஸ்...
அது ஆனந்தன்தானே
நன்றி அண்ணா.
நன்றி அண்ணா.
கருத்துரையிடுக