புதன், 30 ஏப்ரல், 2014

மனசின் பக்கம் : தெனாலியும் நம்மூரும்...


தெனாலிராமன்... அரசியல் விளையாட்டால் தமிழ் சினிமா விலக்கி வைத்த வடிவேலுக்கு இரண்டரை வருட காலத்துக்குப் பிறகு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம். 'அவ்வ்வ்வ்....', 'ரொம்ப ஓவராத்தான் பொயிட்டோமோ...', 'அட பக்கி...', 'உஸ் அப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே...' என்ற வசனங்களை தொலைக்காட்சிகளில் தினமும் கண்டுகளித்தவர்களை இந்தத் தெனாலிராமன் கவர்ந்தானா என்றால் அரைக்கிணறுதான் தாண்டியது என்று சொல்லலாம்.  வடிவேலுவின் முகத்தில் முதிர்ச்சி, உடலமைப்பு எல்லாமாக சேர்ந்து காதல் காட்சிகளைக் களவாடிவிட்டது. குறிப்பாக 'ஆணழகா...' பாடல்.... ரொம்பக் கஷ்டம். 

இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஒரு கலைஞன் திரும்பி வரும் போது 'அட... அட... என்னமா கலக்கியிருக்காரு...' என்று சொல்ல வைக்க வேண்டாமா. இம்சை அரசனைப் போன்றதொரு கதை அமைப்பு... சிரிப்பு என்று செய்ததெல்லாம் புலிகேசியைப் போல சலிப்பைத்தான் தந்தது எனலாம். இருந்தும் மன்னனைவிட மதியூகி கதாபாத்திரம் சிறப்பு. பானை வயிற்றையெல்லாம் வைத்துக் கொண்டு டூயெட்டெல்லாம் பாடாமல் எப்பவும் போல் தனி ஆவர்த்தனம் பண்ணியிருந்தால் இன்னும் உச்சம் தொட்டிருக்கலாம். இப்போதே சந்தானங்களுக்கெல்லாம் கிலி பிடித்திருக்கும்.

பெரும்பாலான நடிகர்களைப் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்..படம் முழுவதும் முகம் தெரிந்த நடிகர் பட்டாளமாக இருந்தும் பயனில்லை, தொப்புள் காட்டும் நாயகியாக இருந்தாலும் வடிவேலுவுடன் டூயட் பாடியதற்காக பாராட்டலாம். மற்றபடி அவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. மொத்தத்தில் வடிவேலுக்கு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம் என்றாலும் வைகைப் புயலின் எப்போதும் ரசிக்கும்படியான காமெடிகளுடன் அடுத்த படத்தை அதிகம் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.


டந்த நான்கைந்து நாட்களாக ஊருக்குச் செல்வதற்கான வேலைகள் என்றாலும் அலுவலகத்திலும் அதிகம் வேலை இணையம் பக்கம் வருவதற்கே நேரமில்லை. எனது நட்புக்களின் பதிவுகளைப் படிக்கவில்லை என்பது வருத்தம்தான். இனி ஒரு மாதத்திற்கு அப்படித்தான்... முடிந்தவரை படிக்கிறேன்.... நாளை இங்கிருந்து ஊருக்குப் புறப்படுகிறேன். நாளை இரவு திருச்சியில் வந்து இறங்கிவிடுவோம்.. மனைவியையும் குழந்தைகளையும் விமான நிலையத்தில் வைத்துப் பார்த்துவிடுவோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கே இப்படி என்றால் நான் ஊருக்கு வருகிறேன் என்று சொன்ன தினத்தில் இருந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகள், மகன் மற்றும் மனைவிக்கு... சொல்லவா வேண்டும். அப்புறம் ஒரு மாதம் ஊரில்தான்... நண்பர்கள் தொடர்பில் வாருங்கள்... தொடர்பு கொள்ள 0091- 8012811774-ல் அழையுங்கள். என்னிடம் சில உறவுகளின் தொலைபேசி எண் இருக்கிறது. கண்டிப்பாக அனைவரையும் அழைக்கிறேன்... நன்றி.

-மனசின் பக்கம் வளரும்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 64

முந்தைய பதிவுகளைப் படிக்க...



64.  மீண்டும் திருமணப் பேச்சு.

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள். இருவரும் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாமா என யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

இனி...

தேவகோட்டை பேருந்து நிலையம்...

"என்னடா... புவனா விஷயமா இனி பேச ஆரம்பிக்கலாம்ல... இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிடும்... அதோட நீயும் சேவியர் கூட சேர்ந்து பிசினஸ் ஆரம்பிக்க போறே... அப்புறம் என்ன..." வண்டியில் அமர்ந்தபடி அண்ணாத்துரை கேட்டான்.

"ஆரம்பிக்கலாம்டா... இப்ப என்ன அவசரம்... அதான் சொன்னேனுல்ல... சேகர் கல்யாணத்துக்கு வந்தவக்கிட்ட அம்மா நடந்துக்கிட்ட விதம் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு... அதே சமயம் அவ வீட்டுப் பக்கம் சரி பண்ணனுமில்ல..."

"டேய்... சும்மா தேஞ்சுபோன ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே சொல்லாதடா... அம்மா அவள மருமகளா ஏத்துக்கிறேன்னு சொன்னாங்களா... அந்த மாதிரி வார்த்தை அவங்க வாயில வந்துச்சா.. சும்மா அம்மா ஏத்துக்கிட்ட மாதிரி தெரியுது... தெரியுதுன்னு..." சரவணன் கடுப்பானான்.

"அது..."

"என்ன அது...நொதுன்னுக்கிட்டு... முதல்ல அதைக் கண்பார்ம் பண்ணு... அப்புறம் மணிப்பயலும் கொஞ்ச நடக்க ஆரம்பிச்சிருக்கான்... ஆனா அவன் இனி உன்னோட லைன்ல கிராஸ் ஆக மாட்டான்... ஏன்னா புவனாவே அவனைக் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..." என்றான் அண்ணாத்துரை.

"டேய்ய்ய்ய்ய்ய்..... என்னோட புவனா அவனையா...." ராம்கி கத்தினான்.

"இங்க பாரு தம்பி நெருப்புன்னு சொன்னா வெந்துடாது... ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... அவன் இனி வம்பு தும்புக்குப் போனா மொத்தமாப் போக வேண்டியதுதான்... அதனால அவனை விடு... நீ முதல்ல நம்ம பக்கம் பிரச்சினை இல்லாம இருக்கான்னு பாரு... அப்புறம் புவனா அப்பாக்கிட்ட பேசுறதுக்கு ஒரு நல்ல ஆளா... ம்.. ஐயாவையே பிடி அதுதான் சரியா வரும்... என்ன முடிவுன்னு தெரிஞ்சிக்கலாம்..."

"இதைத்தான் நானும் சொன்னேன்... ஆனா புவிதான் இன்னும் கொஞ்சம் நாளாகட்டுன்னு சொல்லிட்டா...."

"இன்னும் கொஞ்ச நாள்... இன்னும் கொஞ்ச நாள்ன்னா... அவ படிப்பை முடிச்சிடுவா... கட்டிக் கொடுத்துருவானுங்கடா... அவ சித்தப்பன் ஊரெல்லாம் மாப்பிள்ளை பாக்குறான்... அப்புறம் கல்யாண வீட்டுக்கு தாடியோட போக வேண்டி வந்திரும் ஜாக்கிரதை."

"அடேய் ஏன்டா... நல்லாதாவே உனக்குத் தோணாதா... இந்தப் பழனியும் அறிவும் எங்க புடுங்கப் போனானுங்க... வரேன்னு சொல்லிட்டு வரலை..."

"எதாவது வேலையா இருக்கும்... சரி நீ கிளம்பு...சொன்னதை ஞாபகம் வச்சிக்க... சேவியரை ரொம்பக் கேட்டோம்ன்னு சொல்லு... சரியா... நாங்க வரட்டா..."

"சரிடா... பைடா..." என்றபடி பேருந்தில் ஏற அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

"என்னடி படிப்பு முடியப் போகுது... உங்க பிளான் என்ன?" பேருந்துக்காக காத்திருக்கும் போது மல்லிகா கேட்டாள்.

"பிளான்னுன்னா... என்ன பிளான்...?" புவனா திருப்பி அவளைக் கேட்டாள்.

"அதான்டி.... ராம்கி எதாவது சொன்னானா?" கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"இப்ப என்ன கேட்டுட்டேன்னு நாக்கைக் கடிச்சிக்கிறே..?"

"இல்ல பழக்க தோஷத்துல அவன்னு சொல்லிட்டேன்... அம்மணிக்கு கோபம் வந்திருச்சின்னா..."

"எனக்கு எதுக்கு கோபம் வருது... உன்னோட பிரண்ட் நீ சொல்றே... ஆமா என்ன கேட்டே..."

"இல்ல... படிப்பு முடியப்போகுது என்ன பிளான்னு கேட்டேன்..."

"இன்னும் முடிவுக்கு வரலை... அவங்க அம்மா கொஞ்சம் மாறிட்டாப்ல தெரியுதுன்னு சொன்னேன்ல... அது கொஞ்சம் நம்பிக்கை இருக்கு... நம்ம வீட்டுப் பக்கம் அப்பாக்கிட்ட யாராவது ஒருத்தர்... இவர் சொன்னா அப்பா தட்டமாட்டார்ங்கிற மாதிரி ஒருத்தரை பேச விடணும்... "

"அப்ப ஐயாவையே பேசச் சொல்லலாம்ல..."

"அப்படித்தான் அவரும் சொன்னார்... எனக்குத்தான் பயமா இருக்கு..."

"இதுல என்னடி பயம்?"

"இல்ல எங்களுக்காகப் பேச போயி அவருக்கு மரியாதை குறைவாயிருச்சின்னா... அதனால..."

"அதானால..."

"எங்க அண்ணன்கிட்ட நானே பேசலாம்ன்னு பார்க்கிறேன்..."

"பிரச்சினை எதுவும் வராதுல்ல..."

"வர வாய்ப்பில்லை... அவனுக்கு எங்க அத்தை பொண்ணு மேல கண்ணு... ஆனா அவ கண்டுக்கலை... அதைச் சரி பண்ணிக் கொடுத்து நம்ம காரியத்தை சாதிக்கலாம்ன்னு எண்ணம்..."

"அடிப்பாவி... காதலுக்காக நீ கூட்டிக்....." மல்லிகா முடிக்கும் முன்னர் புவனா கத்தினாள்.

"அடி வாங்கப் போறே... நான் சேர்த்து வைக்கப் போறேன்னு சொன்ன நீ என்ன சொல்றே... ஏன்டி புத்தி இப்படிப் போகுது..."

"சரி... காதலனை அடைய அண்ணனுக்கு அண்ணியை லஞ்சமாக்கப் பாக்கிறே... நடப்பது நலமாக எனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு..."

"பார்றா... பெரிய மனுஷி ஆசிர்வாதம் பண்ணுறாங்க... வாடி பஸ் வந்திருச்சி..."


"அத்தாச்சி... அத்தாச்சி..." கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் புவனாவின் சித்தப்பா.

"என்னம்மா... திருப்பத்தூர் கூவிக்கிட்டு வருது..." வைரவன் மெதுவாக அம்மாவிடம் கேட்டான் 

"நீ சும்மா இருடா...." மகனை சத்தமில்லாமல் அடக்கிவிட்டு "வாங்க தம்பி... அவ வரலை..."

"இல்ல... நாந்தான் ஒரு வேலையா வந்தேன்... கொஞ்சம் தண்ணி கொடுங்க... அடடே வைரா இருக்கான்.... மைனரு பேசக் காசு கேக்க ஆரம்பிச்சிட்டாரு... எப்படா வந்தே...?"

"வந்து ரெண்டு நாளாச்சு... அம்மா நான் வெளியில பொயிட்டு வாரேன்..."

"முன்னாடி நடந்ததை அவனே மறந்துட்டான்... இவரு மறக்கலை... இன்னும் முறுக்கிக்கிட்டுத் திரியிறாரு... எம்புட்டு நாளைக்கு..."

"சரி விடுங்க தம்பி... அவனைக் காப்பாத்துன பையனை அப்படிப் பண்ணிட்டீங்கன்னு அவனுக்கு வருத்தம்... அதான்..."

"அதுக்காக நம்ம பொண்ணு கூட சுத்துனா விட்டுருவோமா என்ன... ஆமா புவனா எங்க பொயிட்டா...?"

"பக்கத்துலதான் அவ சித்தப்பன் வீட்ல ஒருத்தி இருக்காள்ல அவ கூட தாயம் விளையாடுவா... சும்மா கத்தி கித்தியின்னு தூக்கிக்கிட்டு திரியாதிய தம்பி.... ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது.... பாத்தியளா எம்புட்டு வெட்டுக்குத்துன்னு திரிஞ்சான்... பாஞ்சி திரிய வேண்டிய வயசுல அந்த மணிப்பய நிலமை என்னாச்சின்னு... உங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்காங்க... பாத்து சூதனமா இருக்கக் கத்துக்கங்க...."

"சரி அத்தாச்சி... இப்பல்லாம் அடிதடிக்கு எங்க போறேன் சொல்லுங்க... உங்க தங்கச்சிதான் புரியாமப் பேசுறான்னா... எல்லாந் தெரிஞ்ச நீங்களும் பேசுறீங்க... சரி ஒரு சந்தோஷமான சமாச்சாரம்..."

"என்னது?"

"நம்ம புவிக்கு படிப்பு முடியப் போகுதுல்ல... வேலாயுதபட்டினத்துல கை நிறைய சம்பாரிக்கிற. படிச்ச மாப்ள இருக்கான்... வீட்டுக்கு ஒத்தப்புள்ள...  நல்ல வசதி... நம்ம குடும்பத்துக்கு எந்த விதத்துலயும் குறைச்சல் இல்லாத குடும்பம்... என்ன பேசி வச்சிடலாமா?" என்று சொல்லும் போது வீட்டிற்குள் வேகமாக நுழைந்த புவனா சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.

புவனாவின் அம்மா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தனது மகளின் முகத்தைப் பார்த்தாள்.

"என்ன நாங்கேட்டதுக்கு பதிலையே காணோம்.... ஓ... பொண்ணே வந்துட்டாளா? அத்தாச்சி அண்ணனும் நானும் முதல்ல போயி பார்த்துப் பேசட்டுமா? அண்ணன்கிட்டச் சொல்லுங்க... ஒரு நல்ல நாள்ல வேலாயுதபட்டணத்துக்கு ஒரு எட்டு பொயிட்டு வந்திடலாம்..." 

"இல்ல தம்பி... அவ படிப்பு முடிய இன்னும் கொஞ்ச நாள் இருக்கு... அப்புறம் வேலைக்கு டிரைப் பண்ணனும்... இம்புட்டுப் படிச்சிட்டு அடுப்படியில போயி கிடந்தா நல்லாவா இருக்கும்... அவரு வேற எதாவது சொல்வாரு... கொஞ்சம் நாளாகட்டும்... பாக்கலாம்..."

"இப்படி தள்ளிக்கிட்டே போங்க... அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கனும்... அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்... நல்ல இடம்... சரி கொஞ்ச நாள் பொறுக்கச் சொல்றேன்... எதுக்கும் கடைக்குப் போயி அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்...  அவுக முறுக்கிக்கிட்டுப் போனா இவுக திருகிக்கிட்டு நிக்கிறாக.... இந்த வீட்ல சித்தப்பன்னு சொல்லக்கூட புள்ளக இல்லாமப் போச்சு... கிளம்புறேன் அத்தாச்சி..."

"இருங்க சாப்பிட்டுப் போகலாம்..."

"வேண்டாம்... வர்றேன்... " என்று கிளம்ப "ஏன்டி வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்டா நீயும் உங்கண்ணனும் கொறஞ்சா போயிடுவீங்க... அப்படி என்ன உங்களுக்கு வீராப்பு..."

"அதை விடுங்கம்மா... ரொம்ப நன்றிம்மா"

"எதுக்கு..?"

"இல்ல சித்தப்பா சொன்னதுக்கு ஒத்துக்காததுக்கு..."

"நான் படிப்பு முடிச்சி வேலைக்குப் போகட்டும்ன்னு சொன்னேன்... வேற அர்த்தத்துல இல்ல... சரியா" என்றபடி உள்ளே போக, 'எந்த அர்த்தமா இருந்தா என்ன... வேண்டான்னு சொல்லிட்டீங்கள்ல...' என்று மனசுக்குள் நினைத்தபடி வைரவனின் பேசிவிடலாமா என்று யோசிக்கலானாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

புதன், 23 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 63

முந்தைய பதிவுகளைப் படிக்க...



63.  உரசிய உதட்டால் உள்ளம் மகிழ்ந்தது 

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள்.

இனி...

புவனாவின் பின்னால் வந்த ராம்கி அவள் சைக்கிளை எடுக்கவும் "இரு நானும் கொஞ்சத்தூரம் வர்றேன்" என்றபடி அவளோடு நடக்க, "இங்க வேலை இருக்குமில்ல... எதுக்கு நீங்க... நான் போயிடுவேன்" என்றாள்.

"என்ன மகாராணிக்கு கோபமாக்கும்... என்ன பண்ணச் சொல்றே... இவங்க எல்லாம் கிராமத்துச் சனங்க... நாம ரெண்டு பேரும் உக்காந்து சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தா கண்ணு காது வச்சி பேசிருவாங்க.... அதான்..."

"ம்... இப்ப மட்டும் ஜோடி போட்டுப் போகயில கண்ணு காது வைக்க மாட்டங்களாக்கும்..."

"சரி... சரி... பேசாதது தப்புத்தான்... இந்தச் சேலையில சூப்பரா இருக்கே"

"என்ன பேச்சை மாத்துறதுக்கு அழகின்னு சொன்னா நம்பிடுவோமாக்கும்..."

"ஏய் உண்மைக்குந்தான்... இந்த சேலையில தேவதை மாதிரி இருக்கே..." என்றவன் அவளை உரசியபடி நடந்தான்.

"ஏன்... நீங்க கூடத்தான் வேஷ்டி சட்டையில சும்மா ராமராஜனாட்டம்... சேச்சே... ராஜாவாட்டம் இருக்கீங்க..." என்று வம்புக்கு இழுத்தாள்.

"என்ன ராமராஜனா... கிண்டலா?"

"இல்லப்பா... டங்கு சிலிப்பாயிருச்சு... இப்ப நம்மளைப் பாக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு சொல்லுங்க..."

"ம் என்ன நினைப்பாங்க... இங்க பாரு காலம் கெட்டுக் கிடக்கு... ஜோடி போட்டுப் போறதைப் பாருன்னு நினைப்பாங்க..."

"அறிவு..." என்று அவன் தலையில் குட்டினாள்.

"அப்புறம் என்ன நினைப்பாங்க... நீயே சொல்லு..."

"ம்... புதுசா கலியாணம் ஆனவங்க போல.... அதான் ஜோடியா போகுதுக.... பொருத்தமான ஜோடியா இருக்குதுக... அப்படின்னு நினைப்பாங்க..."

"ஆமா புதுசா கலியாணம் பண்ணுனவங்க நாம... அது சரி... அதுதான் பொண்டாட்டி ஒரு ஓட்டைச் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வர, புருஷன்காரன் அது கூட இல்லாம நடந்து போறானாக்கும்..."

"ஏய்... என்ன லொள்ளா... ஆசையாச் சொன்னா அதுக்கும் ஒரு பதில்... எல்லாத்துக்கும் எகனைக்கு மொகனை பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை...." முகத்தை கோபமாக இருப்பதுபோல் வைத்துக் கொண்டாள்.

"இங்க பார்டா கோபத்தை... சும்மா உன்னைய சீண்டிப்பாத்தா.... இம்புட்டுக் கோபம் வருது... சரி... கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை.... அதனால..." பேச்சை நிறுத்தி சைக்கிள் பிரேக்கைப் பிடித்து நிறுத்தினான்.

"அதனால..." கலவரமாகக் கேட்டாள்.

"அதனால...." என்று அவளது முகத்துக்கு அருகில் தன் முகத்தைக் கொண்டு போனான்.

"அ... த... னா...ல.." என்ன செய்யப் போறான்னோ என்ற பயத்தில் உலர்ந்த உதடை நாக்கால் எச்சில் படுத்திக்கொண்டாள்.

"அதனால கண்ணம்மா... இன்னைக்கு எனக்கு...." என்றவன் பேச்சை நிறுத்தி அவளது உதட்டில் 'இச்' பதிக்க, அவனைத் தள்ளித் தோற்றாள்.

ராம்கியின் உதடுகள் தனது உதட்டில் செய்த வித்தையால் அதிர்ந்து நின்ற புவனாவை ' டேய் மாப்ளே ரோட்டுக்கரையில வச்சி பொம்பளப்புள்ளைய என்னடா பண்ணுறே..?' என்று வயலுக்குள் இருந்து கேட்ட குரல் வெட்கப்பட வைத்தது.

'எவனுமே இல்லைன்னு முத்தம் கொடுத்தா இந்த நாயி வயலுக்குள்ள மாட்டோட மாடா நின்னுச்சா' என்று முனங்கியபடி "கண்ணுல தூசி விழுந்திருச்சின்னு சொன்னாங்க... அதான் பார்த்தேன்... கருத்தெருமை அங்கிட்டு போகுது பாருங்க... அதைப் பார்த்து திருப்புங்க... இல்லைன்னா சாயங்காலம் அயித்தை உங்களுக்கு அர்சசனை பண்ணும்மாமோய்ய்ய்..." என்று கத்திவிட்டு "வா... புவி போகலாம்" என்றான்.

"உங்களுக்கு ரொம்பத் தைரியந்தான்... உதட்டுல முத்தம் கொடுக்கிறியளோ, யாருமே இல்லைன்னு சொல்லி எவனோ கத்துறான் பாருங்க... எனக்கு வெக்கமாப் போச்சு..."

"அவன் கத்துனதுதான் உனக்கு வெக்கமா... அப்ப முத்தத்தால இல்ல... அது சரி... அப்ப இன்னொன்னு..."

"உதைபடுவீங்க... பேசாம போயிடுங்க..."

"சரி... போறேன் பாத்துப் போ... போனதும் போன் பண்ணு..."

"ம்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்றபடி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

"என்ன சந்தோஷம்... தித்திப்பான முத்தம் கொடுத்ததா?"

"ஆமா ரொம்ப முக்கியம்... உங்கம்மா நம்மளை ஏத்துக்கிட்டாங்க போல இருக்குல்ல அவங்க நடவடிக்கை அதான்..."

"எனக்கும் அதுதான் புரியலை... எங்கம்மாதானா இப்படி மாறினாங்கன்னு... எனிவே ஒரு பக்கம் பிரச்சினை இல்லைன்னு தெரியுது... இனி அம்மணி பக்கம்தான் சரி பண்ணனும்..."

"ம்... ஆனா எங்க வீட்டுல அவ்வளவு சீக்கிரத்துல ஒத்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது... சிலப்பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்... ஆனா எத்தனை பிரச்சினை வந்தாலும் உங்களோடதான் வாழ்க்கை..."

"எல்லாம் நல்லபடியா நடக்கும்... இன்னும் கொஞ்ச நாள்தான்... சாயந்தரம் ஐயா வீட்டுக்கு வாறியா... நானும் வர்றேன்... கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசலாம்..."

"இனிமே நான் திரும்ப சாயந்தரம் வர்றது... சான்ஸே இல்ல... அம்மா கத்த ஆரம்பிச்சிருவாங்க..."

"அப்ப மல்லிகா வீட்ல இரு... சாயந்தரமா ஐயா வீட்டுக்குப் போயிட்டுப் போகலாம்..."

"இங்க பார்றா... இவரு கொடுக்கிற ஐடியாவை... வேண்டாம்... போன்ல பேசிப்போம்... இப்ப நான் கிளம்புறேன்...." என்று சைக்கிளை எடுத்தாள்.

"ஐயாவை விட்டு உங்க அப்பாக்கிட்ட பேசச் சொல்லலாமா?"

"ஐயாவையா... ம்... இப்ப வேண்டாம்...படிப்பு முடியட்டும் பேசலாம்... ஒத்துக்கிட்டா அவங்க ஆசியோட... இல்லைன்னா அவங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துட்டு நாம எஸ்கேப் ஆகிடலாம்..."

"அதெல்லாம் வேண்டாம்... ஐயா பேசினா சரியாகும்... எல்லாம் நல்லா நடக்கும்... பாத்துப் போ... போனதும் போன் பண்ணு..." என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டு அவள் சைக்கிளில் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான் ராம்கி, அதே நேரம் ராம்கியின் உதடுகள் பதிந்த தனது உதட்டை ஒற்றை விரலால் தடவியபடி சைக்கிளைச் செலுத்திய புவனா வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நேசத்தின் ராகம்

ராகவன் சாருக்கும் எனக்குமான உறவு குறித்து இந்த சமூகத்தின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது என்பதை இருவரும் அறிவோம். ஆனால் அது குறித்து நானோ அவரோ கவலைப்படுவதில்லை. வயது என்று பார்த்தால் அவரோ எழுபதை நெருங்கிக் கொண்டிருக்க, எனக்கோ அதில் பாதி தான்... 

எங்களுக்குள் நட்பு உருவானது ஒரு பெரிய கதை... கல்லூரியில் படிக்கும் போது எனது தோழி ராகினியின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவள் வீட்டு அருகில்தான் ராகவன் சார் வீடும் இருந்தது. ராகவன் சாரின் மகளும் எங்கள் வயதுதான்... அவளுடன் பழக ஆரம்பித்து அப்படியே அவரது வீட்டுக்குள்ளும் போக ஆரம்பித்தேன். எங்களை வாங்கம்மா என்று சொல்லிவிட்டு பேப்பரிலோ எதாவது புத்தகத்திலோ ஆழ்ந்திருப்பார். அவர் ஒரு புத்தகப்புழு என்று ராகினி சொல்லியிருக்கிறாள். எனக்கும் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். அவரின் வீட்டில் ஒரு அறைக்குள் எங்கும் புத்தகமாக கிடக்கும். இதையெல்லாம் அடிக்கி வைக்க மாட்டீர்களா என்று அவளிடம் கேட்டபோது எப்படி அடுக்கி வைத்தாலும் அப்பா எதையாவது தேடுறேன்னு கலைச்சிருவாருன்னு சொன்னா... சரி நமக்கெதுக்கு இந்த வேலையின்னு பேசாம விட்டுட்டேன்.

அப்புறம் ஒரு நாள் அந்த அறைக்குள் நுழைந்து எதவாது படிக்கலாமென தேடி லேவ்தல்ஸ்தோயை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் எனக்குப் பின்னால் ஒரு செருமல் சத்தம்... திடுக்கிட்டுத் திரும்பினால் அங்கே ராகவன் சார் நிற்கிறார். நான் பயந்து எழ, உக்கார்... உக்கார் என சைகையால் சொன்னார். எனக்கு எதிரே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவர் 'என்னம்மா... இந்த மாதிரி புக்கெல்லாம் படிப்பியா? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார். எனக்கு இவை... இவை... பிடிக்கும் என பட்டியலிட ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகான நாட்களில் எனது மாலை நேரங்கள் எல்லாம் ராகவன் சாருடன் இலக்கியம் பேசும் வேளையாக மாறியது. அதன் பிறகு பெரும்பாலான நேரங்களை ராகவன் சாருடன் கழிக்க ஆரம்பித்தேன். அவரு ஒரு புத்தகப் புழு... அவருக்கு தோதா இவ சேர்ந்திருக்கா பாரு என்று தோழிகள் இருவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். 'வாம்மா இலக்கியம்... எங்கப்பாவுக்கு புலம்புறதைக் கேட்க ஆளில்லாம இருந்துச்சு... வந்து சேர்ந்துட்டே... இனி காதுல ரத்தம்தான்..' என்று சாரின் மகனும் கேலி செய்வான் 

எப்பவும் ராகவன் சாரின் மனைவியை நான் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். அவர்களும் என்னை தனது மகளைப் போலத்தான் பார்த்தார். எப்போது வீட்டுக்குப் போனாலும் மணக்க மணக்க டிகிரி காபியை கொடுத்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார்கள். ஒரு சில நாட்களில் ராகவன் சாரின் வண்டியோ செருப்போ வாசலில் இல்லை என்றால் எனக்கு அங்கு எதோ ஒரு அமைதி நிலவுவதுபோல் தெரியும்.  எதாவது புத்தகத்தை எடுத்தாலும் மனசு சார் எங்கே என்று தேட ஆரம்பித்துவிடும். .என்னம்மா உங்க சாரைக் காணுமேன்னு நினைக்கிறியா... கடைத்தெரு வரைக்கும் போயிருக்காக... இப்ப வந்துருவாங்க... என்றபடி அம்மா வேலையைத் தொடர ஆரம்பித்து விடுவார்கள்.

நான் அந்த அறைக்குள் நிறைந்திருக்கும் புத்தக வாசத்தை நுகர்ந்தபடி வாசிப்பில் ஆழ்ந்து விடுவேன். அதன் பிறகு சுற்றி நடப்பதை நான் காதில் வாங்குவதில்லை. வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தமோ சார் வீட்டுக்குள் நுழையும் சப்தமோ எனக்கு கேட்பதேயில்லை. என்னம்மா... படிப்பாளி... எப்போ வந்தே? என்றபடி சார் எனக்கு எதிரே வரும்போதுதான் எழுத்தின் வாசத்தில் இருந்து மீள்வேன்.

சாருடன் எனது உறவு படிப்படியாக இறுகியபோது அந்த அறைக்குள் புத்தகங்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டது. எதை படிக்கிறாரோ... எதை எழுதுகிறாரோ... அது மட்டும் அவருக்கு முன்னே இருக்க வேண்டும் என்றும் மற்றதெல்லாம் எடுத்தது எடுத்த இடத்தில் இருக்க வேண்டும் என்றும் நான் இட்ட அன்புக் கட்டளை அவர் ஏற்று அதை முடிந்தளவு செயல்படுத்தவும் ஆரம்பித்தார். நீ இந்த அறைக்குள்ள வந்த பின்னாலதான் குப்பையாட்டம் இருந்த இடம் கோயிலா மாறியிருக்கு என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.



வீட்டிற்குள் இலக்கியம் பேசிய என்னை வாயேன் அப்படியே பேசிக்கிட்டு பொயிட்டு வரலாம் என்று சார் கூப்பிட்ட போதெல்லாம் அவருடன் இலக்கியம் பேசியபடி வீதிகளில் வலம் வர ஆரம்பித்தேன். சில நாட்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்தோம். ராகவன் சாருக்குள் இலக்கியச் சுரங்கமே இருப்பதை அவரின் ரசனை மிகுந்த இலக்கியப் பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். ராகவன் சார் வீட்டுக்குப் போகாத நாட்கள் எனக்குப் போரடிக்க ஆரம்பித்தன.  இது வெறும் நட்புத்தானா இல்லை வயதான ஆள் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டதா என்று தோழிகள் கேலி செய்ய, அவரை நல்ல தோழனாக, சகோதரனாக, அப்பாவாக, குருவாகத்தான் பார்க்கிறேன். வேறு பார்வையில் பார்க்கவில்லை என்று சொல்லிய பிறகு அவர்கள் தங்களது கேலியை அத்துடன் விட்டு விட்டார்கள்.

எனக்குத் திருமணம் நடந்தது. என்னோட திருமணத்தில் ராகவன் சாரின் குடும்பம் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தது. மணமேடையில் என்னருகே வந்த ராகவன் சார் 'இங்க பாரும்மா... புகுந்த வீட்டுல நல்லவன்னு நீ எடுக்கப் போற பேருதான் எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்... சரியா' என்று சொல்ல, இவர்களைப் பிரிந்து செல்ல வேண்டுமே என்று நினைக்கும் போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் வாசம்... எனக்கு இலக்கியம் தான் வாழ்க்கை... எனக்கு வாய்த்தவரோ இலக்கியம் என்ன விலை என்று கேட்பார். அவரைப் பொறுத்தவரை நான் செக்சுக்காக மட்டுமே. எப்போ கூப்பிட்டாலும் அவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும். மற்றபடி எதைச் செய்தாலும் அதை ஏன் செய்தாய் இதை ஏன் செய்தாய் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஒட்டாத வாழ்க்கையில் அன்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை... அவர் அணைக்கும் போதெல்லாம் எனக்குள் எரிய ஆரம்பித்த தீ ஒரு நாள் வெடித்தது. விவாகரத்து வாங்கி வீட்டோடு வந்துவிட்டேன்.

மீண்டும் இலக்கியம் பேச ராகவன் சார் வீடு போகும் போது வீட்டில் பிரச்சினை வெடித்தது. பக்கத்தில் எல்லாம் அந்தக் கிழவனோடு சுத்தத்தான் கிடைத்த வாழ்க்கையைத் தொலச்சிட்டு வந்திருக்கா என்று சொல்ல ஆரம்பிக்க, வீட்டுக்குள் முடங்கினேன். இதற்கிடையில் ராகவன் சாரின் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடிய, அவரின் மனைவி... அந்த மகாராசி மாரடைப்பில் சென்று விட்டார். சார் மட்டும் தனியாக கஷ்டப்படுவதைப் பற்றி ராகினி சொல்லவும் என்ன நேர்ந்தாலும் சரியென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன். 

அவரோடு இருந்து விடுகிறேன் என்று சொல்ல, வேண்டாம்மா... என்னால உனக்குப் பிரச்சினை வரக்கூடாது. வாழ வேண்டிய பொண்ணு... நல்ல மாப்பிள்ளையாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு... உனக்கென்ன வயசாயிடுச்சா என்ன... இரண்டாம் கல்யாணம் பண்ணுறது தப்பொண்ணும் இல்லையே... என்று எனக்கு அவர் எவ்வளவோ சொல்லியும் நான் உங்க கூடவே உங்களுக்குத் துணையாக இருந்துடுறேன்னேன்னு என்னோட நிலையில் பிடிவாதமாக இருந்தேன்.

இதை சமூகம் வேற கண்ணோட்டத்தோட பாக்கும்மா... வேண்டாம் என்று மறுத்தார். சமூகத்தோட பார்வை எப்படி வேணுமானாலும் இருக்கட்டும்... நம்ம மனசுக்குத் தெரியுமில்ல சார்.... அப்புறம் சமூகத்துக்கு எதுக்கு பயப்படணும்... அழுக்கு நிறைந்த மனங்கள் ஆயிரம் பேசும்... அப்பழுக்கில்லாத மனசு நமக்கிருக்குல்ல... அடுத்தவங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை... நீங்க தனியா கஷ்டப்படக்கூடாது என்று அவரைக் கரைக்கப் பார்த்தேன்.

இல்லம்மா... என்னோட மகன் நல்லாத்தான் பார்த்துக்கிறன்... வேலையாள் வைக்கிறேன்னு சொன்னான்... நாந்தான் வேண்டானுட்டேன்.... நீ வரப்போக இரு... அதுதான் நல்லது... இங்கே வந்து தங்குறதுங்கிறது அவ்வளவாக சரிப்படலைன்னு சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்தார். நான் பெரும்பாலான மாலை வேளைகளை சாருடன் கழிக்க, விவரம் மகனுக்கும் மகளுக்கும் போக பிரச்சினை உருவானது. அவரும் சொல்லிப் பார்க்க, அவர்கள் நம்பவில்லை. பின்னர் எக்கேடோ கெட்டுப் போங்க என்று விட்டு விலக, நான் உரிமையோடு உள்ளுக்குள் சென்றேன்.

என் குடும்பத்தாரும் கத்திப் பார்த்தார்கள்.... மிரட்டிப் பார்த்தார்கள்... எதற்கும் அடி பணியாமல் அவரோடு வாழ ஆரம்பித்தேன். சமூகத்தின் பார்வையில் தரங்கெட்டவளாக... அவரின் பார்வையில் அம்மாவாக...

தினமும் காலையில் குளித்து சாமி கும்பிடும் போது எம்புள்ளைங்க மூணையும் நல்லா வச்சிக் காப்பாத்து என்று என்னையும் சேர்த்தே சாமியிடம் முறையிடுவார். எப்போதும் சார் என்றே கூப்பிட்டாலும் எனக்கு நல்ல தோழனாக, ஆசானாக, சகோதரனாக, அவ்வளவு ஏன் நல்ல அப்பாவாகத்தான் மனசுக்குள் இருந்தார்.

என்னோடு திகட்டத் திகட்ட இலக்கியம் பேசிய அந்த ஆத்மா, இதோ தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டு கிடக்கிறது. அவர் விரும்பியபடி அவரைச் சுற்றி புத்தகங்கள் எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன... ஊரில் இருந்து மகனும் மகளும் வந்தாச்சு... என்னைப் பற்றி பலர் பேசிய போதும் கடைசி காலத்தில் அப்பாவுடன் இருந்தது அவதான்... அவருக்கு எல்லாம் பார்த்தும் அவதான்... அவரோட கடைசி நிமிடத்தில் அவ அவருக்கிட்ட இருக்கணும்... அதுதான் நல்லது என்று சொன்ன ராகவன் சாரின் மகன் சாரைப் போலவே குணத்தில் உயர்ந்து நின்றான்.

ராகவன் சார் கடைசி மூச்சை இழுத்து விட, எல்லாப் பக்கமும் குரல்கள் கூக்குரலாய் ஒலிக்க, அதுவரை அடக்கிய எனது அழுகை "அப்பா" என வெடித்தது. அவருக்கு அருகே கிடந்த கார்ல் மார்க்ஸின் அட்டை கிழிந்த புத்தகத்தில் எனதன்பு மூத்தமகள் சுபத்ராவுக்கு என நான் படிக்கும் காலத்தில் அவர் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்த பேப்பர் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

மனசின் பக்கம் : கனவுகளைச் சுமக்கும் காலம்

மே மாதம் ஊருக்குப் போக டிக்கெட் எல்லாம் போட்டாச்சு. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஓகே என்று சொன்னவன் போன வியாழன் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் போனில் கூப்பிட்டு உன்னோட லீவை மேனேஜ்மெண்ட் 15 நாள் ஆக்கியிருக்கு அப்படின்னான். இவன்தான் எல்லாம்... மேனேஜ்மெண்ட் மேல பலி போடுறான்னு கொஞ்சமாக குரலை உயர்த்தினேன். 

உடனே நீ போன பாக்குறதுக்கு ஆள் இல்லை... இப்ப ரெண்டு பேர் ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்க... ஒம்பது பேர் பாக்க வேண்டிய புராஜெக்டை நாலு பேர வச்சி சமாளிக்கிறோம்... உன்னைய நான் விட்டாலும் நம்ம கிளையண்ட் விட மாட்டாங்க... நீ போகணுமின்னு சொன்ன ரெண்டு வாரம் பொயிட்டு வான்னு போன்ல சொன்னான். இதுக்கு முன்னால உன்னைய மாதிரி பொறுப்பான ஆள் இல்ல... நீ இருந்தியன்னா எனக்கு கவலையில்லை... உன்னை மாதிரி ஆகுமா... மானே... தேனே... பொன்மானே எல்லாம் போட்டான். 

பொறுமையாக் கேட்டுட்டு ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்கன்னா அது என்னோட பிரச்சினையா... உன்னோட பிரச்சினையான்னு கேட்டேன். மழுப்பலாகப் பதில் சொன்னான். உனக்கு வேலை இருந்தா இங்க இருக்கணும்... வேலையில்லைன்னா ஊர்ல இருக்கணும்... இது என்ன கணக்குன்னு கேட்டதும்.... நண்பா நம்மளோட இப்போதைய பிரச்சினையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னு கெஞ்சலாகச் சொன்னான். ஓகே...ஓகே... நான் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை பார்க்கிறேன்... நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்யி.... என்னோட குடும்பத்தைக் இங்க கொண்டு வர்றதுக்கு கம்பெனி மூலமா ஏற்பாடு பண்ணிக் கொடு, குடும்பம் நடத்த பணம் கொடுன்னு சொன்னதும் நீ ரொம்ப கோபமா இருக்கே அப்புறம் பேசுவோம்ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான். 

நேற்று காலையில கிளையண்ட் அலுவலகத்துல மீட்டிங் இருந்தது. அங்கு வந்தவன் ஒன்றும் பேசவில்லை. குமார் நீ பொயிட்டு வா... ஒண்ணும் பிரச்சினை இல்லை... குடும்பத்தை விட்டுட்டு நீ இங்க இருக்கது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குந் தெரியும். கம்பெனியில 3 வாரம் லீவ் அப்ரூவ் பண்ணச் சொல்றேன். அப்புறம் ஒரு வாரம் பண்ணிக்கலாம்.. நீ ஒரு மாதம் இருந்துட்டு வா அப்படின்னு சொன்னான். எனக்கு ஒரு மாதம் கண்டிப்பா வேணும் மூணு வாரத்துல எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னதும் ஓகே... ஓகே... இங்க மட்டும் 2 வாரத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போன்னு சொன்னான். சரிடா... நான் ஒரு மாதம் இருந்துட்டுத்தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன். 

பின்னர் கிளையண்ட் அலுவலகத்தில் இருக்கும் ஆந்திரா நண்பரிடம் சொன்னபோது நீ எதுக்கு 15 நாளுக்கு ஒத்துக்கிறே.... அரபிக்காரனுக்கெல்லாம் அடிக்கடி வீவு கொடுக்கிறானுங்க... உனக்கு மட்டும் என்னவாம்... ஒரு மாதம் இருந்துட்டு வா... பாத்துக்கலாம் என்று சொன்னார். நமக்கு இவனுக சப்போர்ட் இருக்குன்னு எங்க ஆளுக்குத் தெரியாது. அங்க இருக்க மேனேஜர் அரபி நானே உன்னைய இங்க எடுத்துக்கிறேன். ஆனா ஆறு மாசம் பொறு..  உங்க புராஜெக்ட் முடியப் போகயில இங்க வந்திடலாம். இப்ப எடுத்தா உங்க கம்பெனிக்கும் எங்களுக்கும் பிரச்சினையாகும்ன்னு சொல்லி வச்சிருக்கான். நடக்குமா பார்க்கலாம்.

குமார் பொயிட்டா என்ன பண்ணுறதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி புலம்பியிருக்கான். எனக்கு மேல உள்ளவன் செய்ய வேண்டியதை எல்லாம் கிளையன்ட் ஆபிசில நாந்தானே செய்யிறேன். இனி அது என்னோட மலையாளி நண்பனுக்கு வரும். தக்காளி எல்லா வேலையும் பாக்க குமார் வேணும்... சம்பள உயர்வோ, பேமிலி அலவன்சோ கொடுக்கிறதுன்னா கசக்கும். ரெண்டு இடத்துல வேலைக்கான முயற்சி பண்ணியிருக்கிறேன். ஊருக்குப் பொயிட்டு வந்ததும் வேலை மாற்றம் இருக்கும் அப்ப இருக்குடின்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தெய்வங்களின் எண்ணம் எப்படி என்று பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு சித்ரா பௌர்ணமிக்கும்அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில் ஒரு முறை கலந்து கொண்டிருக்கிறேன். ஊரில் இருக்கும் போது வருடா வருடம் குலதெய்வத்தின் விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. இந்த முறை அதற்குள் ஊருக்குப் போய் விடுவேன் என்று நினைக்கிறேன். அழகர் ஆற்றில் இறங்கும் அன்று மதுரையில் மனைவியின் அம்மா வீட்டில்தான் ஜாகை என்று முடிவு செய்திருக்கிறேன். அழகு மலையான் அருள் கிடைக்குமா தெரியவில்லை.

ஊருக்குப் போவதால் கலையாத கனவுகள் தொடர்கதையை தொடர்ந்து சில நாட்கள் பதிந்து முடிக்க எண்ணம்.... முடியுமா தெரியவில்லை. ஊருக்குப் போனால் ஒரு மாதம் மனசு வலைப்பூவுக்கு விடுமுறை என்பது கண்டிப்பாக விடப்படும். மீண்டும் வந்து கதையைத் தொடர்ந்தால் கதையின் போக்கு நன்றாக அமையாது. எனவே இனி தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் கலையாத கனவுகள் வெளிவந்தாலும் வரலாம். சோர்வு என்னும் சோம்பேறியும் ஐபிஎல் கிரிக்கெட்டும் இடையில் வராமல் இருந்தால் இது சாத்தியமே.

ஊரில் இருக்கும் ஒரு மாதமும் தேவகோட்டை, காரைக்குடியில்தான் திரிவேன். என்னடா திரிவேன்னு போட்டிருக்கான்னு நினைக்கிறீங்களா? ஊரு சுத்துறதுதானே வேலை... திருச்சி, மதுரை வருவேன். நண்பர்களைச் சந்திக்க எண்ணம். ஊருக்குப் போகுமுன் எனது செல்போன் எண்ணைச் சொல்கிறேன். நண்பர்கள் தொடர்பில் வரவும். குடந்தையூர் சரவணன் அண்ணன், மதுரை சரவணன், தமிழ்வாசி பிரகாஷ், முத்து நிலவன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, திண்டுக்கல் தனபாலன் சார், அ. பாண்டியன், விமலன் அண்ணா இன்னும்.. இன்னும்... நான் வாசிக்கும்... என்னை வாசிக்கும் எல்லா நட்புக்களையும் சந்திக்க ஆசை. மேலும் எனது வீட்டிற்கு வந்து செல்லும் சீனா ஐயா வீட்டிற்கு இந்த முறையாவது செல்ல வேண்டும். பெரிய்ய்ய்ய்ய்ய ஆசை இது... நிறைவேறுமா என்று எனக்குத்  தெரியவில்லை.  

சிறுகதை தொகுப்பு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் முளைத்து ஒரு வயதாகிவிட்டது. சென்ற முறையே அகநாழிகை பொன். வாசுதேவன் அண்ணாவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்புறம் சில பல பிரச்சினைகளால் எல்லாம் விட்டாச்சு. இப்போ போய் எனது பேராசான். மு,பழனி இராகுலதாசன் அவர்களிடம் ஆலோசித்து இறங்கலாம் என்று எண்ணம். நிறைவேறுமா அல்லது ஒரு வயது என்பது அதிகரிக்குமா தெரியவில்லை.

ஊருக்குப் போகும் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் என் வருகையை எண்ணி, அதையே பேசி. சுவாசித்து வாழும் எனது அன்பான குழந்தைகள் மற்றும் மனைவியை மீண்டும் அழ வைத்துத் திரும்ப வேண்டும் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் கிடைக்கும் ஒரு மாத விடுமுறையில் முடிந்தவரை குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருந்து வரவேண்டும் என்று மனசுக்கு சொல்லிக் கொள்கிறேன். பிரிவுக்கும் ஒரு முடிவு இந்த வருடத்திலாவது வரும் என்று நினைக்கிறேன். ஆண்டவன் வழி செய்ய வேண்டும்.

- மனசின் பக்கம் மீண்டும் மலரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 19 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 62

முந்தைய பதிவுகளைப் படிக்க...



62.  ஜோடி சேர்ந்தாச்சு

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்தில் இருவரும் பார்த்துக் கொள்ள, சீதாவும் புவனாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேகரின் திருமணத்திற்காக வந்த புவனாவையும் போட்டோவுக்கு நிற்க கூப்பிடச் சொல்கிறாள் நாகம்மா.

இனி...

ந்தப் புள்ளையையும் கூப்பிடு என்று அம்மா சொன்னதும் நம்ப முடியாமல் பார்த்தான். சொல்வது அம்மாதானா... இது உண்மைதானா... என்று அவனுக்குள் கேள்வி எழ, "எதுக்கும்மா அவங்க... அதான் அக்காவும் மச்சானும் சேர்ந்து நின்னு போட்டோல்லாம் எடுத்துட்டாங்கள்ல... நாம குடுத்துட்டு வருவோம்..." என்றான் மெதுவாக.

"அட ஏ உங்கக்கா உனக்குப் பக்கத்துல நின்னா உனக்கு கவுரதை போயிருமோ..? கூப்பிடுடான்னா... வியாக்கியானம் பேசுறே..."

"ம்...அதுக்கில்ல... அந்தப் பொண்ணையும் கூப்பிடணுமான்னு..."

"அவள உன்னோட பொண்டாட்டியாவா கூப்பிடச் சொன்னேன்... உனக்குத் தெரிஞ்சபுள்ள இங்க யாரும் தொணைக்கு இல்ல... அதான் நம்ம கூட போட்டாவுக்கு நிக்கட்டுமேன்னுதான் கூப்பிடச் சொன்னேன்..."

இதுக்கு மேல பேசி அம்மா வேணான்னு சொல்லிட்டா உள்ளதும் போயிடும் என்று நினைத்தவன் "சரிம்மா... இந்தாக் கூப்பிடுறேன்..." என்றபடி அவர்களிடம் போய்க் கூட்டி வந்தான். புவனாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரு பக்கம் பயமாகத்தான் இருந்தது. மெதுவாக தயங்கித் தயங்கி வந்தாள்.

"என்ன யோசனை... சும்மா வா... என்னமோ எங்கம்மா மனசு வந்து கூட்டியாரச் சொல்லியிருக்கு... அப்புறம் மனசு மாறினாலும் மாறிடும்." என்றபடி புவனாவின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா.

மணமக்களுக்கு அருகில் சீதா அம்மா பக்கத்தில் நிற்க, ராம்கி சேகருக்கு அருகில் நின்றான். அவனுக்கு அருகில் புவனா போய் நிற்கப் போக, "டேய் நீ இங்கிட்டு வா...அக்காவும் அந்தப் புள்ளையும் அங்கிட்டு நிக்கட்டும்" என்ற அம்மாவின் ஆணைக்கு இணங்கி ஒன்றும் பேசாமல் காவேரிக்கு அருகில் போய் நின்றான். புவனா சிரித்துக் கொண்டாள்.

"என்ன எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி போட்டுட்டிங்களா?" என்று அவனின் காதைக் கடித்தாள் காவேரி.

"நீ சும்மா இரு... எங்கம்மாவே எப்படி இப்படி மாறிச்சின்னு எனக்கு இன்னும் புரியல... நீ பாட்டுக்கு எதையாவது கிளப்பி விடாதே..." என்றான் மெதுவாக.

"அருமையான ஜோடிடா... சூப்பர்...  உங்க ரெண்டு பேரையும் தனியா போட்டோ எடுக்கச் சொல்லணும்" என்றாள்.

"ஆமா இப்ப அதுதான் குறைச்சல்... பேசாம கேமராவைப் பாரு..."  

"சரி... நீ உடனே போயிடாதே... எனக்கு உன்னோட ஆளுக்கிட்ட பேசணும்"

"சரி..." என்றவன் இயல்பாய் சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தான்.

"சரி வாடா..." என்றபடி அம்மா இறங்க, "நீ போம்மா... நான் சேகர்கிட்ட பேசிட்டு வாறேன்..." என்றபடி சேகர் பக்கம் நகர்ந்தான். அக்காவும் அம்மாவும் இறங்க, புவனாவிடம் நிற்கும்படி கண்காட்டினான்.

அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாதிசனம் மெதுவாக முத்துவின் வாயைக் கிளறியது.

"யாருடி அவ சினிமாக்காரியாட்டம் இருக்கா... அப்பவே உனக்கிட்ட கேக்கணுமின்னு பாத்தோம்... இந்த நாகம்மா வேற சொந்தக்காரியாட்டம் அவளையும் கூட்டிக்கிட்டுப் போயி போட்டோ எடுக்கிறா?"

"ம்... அவதான் நாகம்மாவோட சின்ன மருமவ... சீதா கலியாணத்துக்கு வந்திருந்தாளே... பாக்கலையா" தான் சொன்னதை நாகம்மா கேட்கவில்லை என்ற கோபத்தில் இருந்த முத்து மெதுவாக பத்த வைத்தாள்.

"என்னடி சொல்றே... பாத்த மாதிரித் தெரியலையே... ஆமா அவளப் பாத்தா ......சாதிக்காரி மாதிரி இருக்கா....?"

"ஆமா அவ அந்த சாதிக்காரிதான்... பய அவளை விரும்புறான்... அப்புறம் நாகம்மா என்ன பண்ணுவா..."

"நல்லாயிருக்கே... சாதிசனத்துல பொண்ணு இல்லாமயா போச்சு... எவளோ ஒரு சாதிக்காரிய கட்டிக் கூட்டியாற..." ராம்கிக்கு தனது மகளைக் கட்டி விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டும் மீனா எங்கே தனது மகளுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையில் குதித்தாள்.

"இதுவரைக்கும் அவளுக்கு இதுல விருப்பம் இல்ல... ஆனா இன்னைக்கு இந்த சீதா அவளைக் கூட்டி வச்சிப் பேசவும் இவ மாறிட்டாளோன்னு தோணுது..."

"ஆமா... குடும்பத்தை தூக்கி நிறுத்துவான்னு கட்டிக்கிட்டு வந்தவ அத்துக்கிட்டுப் பொயிட்டா... இவளப் பாத்தாலே பெரும் பந்தாக்காரி மாதிரி இருக்கு... சாதிவிட்டு சாதி கலியாணம் பண்ணிக்கிட்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்...  அப்புறம் சாதி சனமுன்னு நமக்கு என்ன மருவாதை இருக்குன்னேன்"

"அட விடுங்க... நமக்கென்ன வந்துச்சு... ஆனா அவள மருமவளாக்குவேன்னு நாகம்மா சொன்னா ஊருல கூட்டம் போட்டு ஒண்ணுல ரெண்டு கேட்டுப்புடணும்... ஆமா..." முத்து மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள்.

"ஆமா...ஆமா... நம்ம் சாதிசனத்துக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல... இதுவரை யாருஞ்செய்யாததை இவன் செஞ்சா... விட்டுடுவோமா என்ன..."  இவர்களின் பேச்சு காரசாரமாகப் போய்க் கொண்டிருக்க, மணமக்கள் அருகில் நின்ற புவனாவிடம் "ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி.... நீ இங்க வந்தது... அதைவிட சந்தோஷம் எங்க அயித்தை உன்னையும் கூட்டிக்கிட்டு வந்து போட்டோ எடுத்தது" என்றான் சேகர்.

"எனக்கு இது கனவா... நனவான்னே தெரியலண்ணே..... சந்தோஷமா இருந்தாலும் இன்னும் படபடப்பு அடங்கலை... "

"இனி பிரச்சினை இல்லம்மா... பயப்படாதே.... டேய் மச்சான்... எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..."

"ம்..."

"என்ன உம்மு... வாங்க நாங்க ரெண்டு பேரும் ஒரு பக்கமா நிக்கிறோம்... நீங்க ரெண்டு பேரும் ஒரு பக்கம் நில்லுங்க... போட்டோ எடுக்கலாம்..." என்றாள் காவேரி.

"அடி ஆத்தி... நீ வேற... எங்கம்மா முன்னாடி உக்காந்து பாக்குற பார்வையைப் பாத்தியா... சும்மா பத்த வச்சி விட்டுறாதே..."

"அட எதுக்குப் பயப்படுறே... பேசாம நில்லு அப்புறம் பாத்துக்கலாம்... இப்ப போட்டோ எடுப்போம்... அண்ணி கூட நின்னு ஜோடிப் பொருத்தம் எப்படின்னு நம்ம மக்களைப்  பேச வைக்கலாம்... அண்ணி நீங்க நில்லுங்க... இவன் ஒரு பயந்தாங்கொள்ளிப் பய... அழகான அண்ணிக்குப் பக்கத்துல நிக்க இப்படிப் பயப்படுறே... எதோ ரெண்டு புள்ளங்க வந்தப்ப என்னோட ஆளு என் பக்கமே திரும்பல... முகத்துல வந்த சிரிப்பைப் பாக்கணுமே... சீ... போ... போயி நில்லு..." என்று காவேரி சொல்ல பேசாமல் புவனாவுக்கு அருகில் நிற்க, "அண்ணி அவனோட கையை நறுக்குன்னு புடிங்க... விடாதீங்க" என்று சொல்ல புவனா சிரித்தபடி அவனைப் பார்க்க கேமரா அந்தக் காட்சியை தனக்குள் வாங்கிக் கொண்டது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கவும் வந்திருந்த சாதிசனமெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்தது. நாகம்மா பார்த்தும் பார்க்காதது போல் சீதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, சீதா அதைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டாள்.

ராம்கி புவனாவுடன் நேராக அம்மாவிடம் வந்தான். அவனைப் பார்த்தவள் "என்னடா... ஊருக்குச் சொல்லிட்டியா?" என்றாள்..

"எதை..?" தெரியாதது போலக் கேட்டவன் "சரி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு இந்தா வாறேன்..." என்றபடி அங்கிருந்து நகர, சீதை உக்காரு என்று கண்ணைக் காட்ட, நாகம்மாவைப் பார்த்தபடி புவனா மறுத்தாள்.

"ஊருக்கு முன்னால  ஜோடி போட்டு நிக்கிறாக ஜோடி போட்டு... இதுல எதுவுமே தெரியாத மாதிரி கேள்வி வேற..." என்று சொன்னவள் புவனாவைப் பார்த்து "எதுக்கு நிக்கிறே... ஒக்காரு..." என்றபடி நாகம்மா தள்ளி அமர,  அவளுக்கு அருகே பேசாமல் அமர்ந்தாள்.

இதையெல்லாம் பார்த்த முத்துவின் வயிறு எரிய ஆரம்பிக்க "பாருங்கடி மருமவள பக்கத்துல உக்கார வைக்கிறதை... இதுக்கெல்லாம் இவ ஊருக்கு பதில் சொல்லித்தான் ஆவணும்..." மனசுக்குள் கருவியபடி மற்றவர்களிடம் சொல்லி விட்டு நாகம்மா என்ன பண்ணுகிறாள் என்பதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

"வீட்ல ஒத்தப் புள்ளையா நீயி...?" நாகம்மா மெதுவாகக் கேட்டாள்.

"இல்ல அண்ணன் இருக்கான்..."

"ம்... பொட்டப்புள்ளயா ஒத்தப்புள்ளையான்னு கேட்டேன்..." என்றாள் கடுப்பாக.

"ம்... ஆமா..." பயத்துடன் பதில் சொன்னாள்.

"ஆமா... ஆத்தா அப்பனைவிட எங்கவூட்டுப் பய முக்கியமாப் பொயிட்டானா?"

"...." பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி இருந்தவள் 'மாட்டி விட்டுட்டு இவன் எங்க போனான்...லூசு...' என்று மனதுக்குள் ராம்கியைத் திட்டினாள்.

"அம்மா... இப்ப எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம்... தம்பிய அவளுக்குப் பிடிச்சிருக்கு... இவகிட்ட என்ன குறை இருக்கு சொல்லு... அவனுக்கு மனசுக்குப் பிடிச்சவ பொண்டாட்டியான அவனோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குமுல்ல..."

"அதுக்காக... வேலியில போற ஓணானை பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு கத்தச் சொல்றியா... இவ இங்க ஜோடி போட்டதுக்கே நாக்கு மேல பல்லப் போட்டு நாலு பேரு பேசியிருப்பாளுங்க... ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமுன்னு எதாவது பண்ண ஆரம்பிச்சிருவாளுங்க..."

"நல்லாயிருக்கே... ஊருக்காக நம்ம இல்லம்மா... நமக்காகத்தான் நாம... அவனோட மனசுக்குப் பிடிச்சவளை கட்டிக்க ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமெல்லாம் எதுக்குன்னேன்.... அவன் பாட்டுக்கு இவளக் கட்டிக்கிட்டு வாழட்டும்...."

"இப்ப ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல... பின்னாடி பாக்கலாம்..."

அப்போது ராம்கி அங்கு வர,  புவனா எழுந்தாள்... அம்மா கவனிக்காத சமயத்தில் சீதா அவனிடம் புவனாவைக் கூட்டிக்கிட்டு போகும்படி கண் ஜாடை செய்தாள்.

"அப்ப... நான் கிளம்புறேம்மா...  அக்கா வாறேங்கா..." என்றபடி புவனா கிளம்ப, ராம்கி அவளுடன் சேர்ந்து நடந்தான். நாகம்மா அவர்கள் போவதையே வெறித்துப் பார்க்க, திருமணத்திற்கு வந்த பெரும்பாலான கண்கள் அவர்களின் பின்னே பயணித்ததன.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.