செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நேசத்தின் ராகம்

ராகவன் சாருக்கும் எனக்குமான உறவு குறித்து இந்த சமூகத்தின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது என்பதை இருவரும் அறிவோம். ஆனால் அது குறித்து நானோ அவரோ கவலைப்படுவதில்லை. வயது என்று பார்த்தால் அவரோ எழுபதை நெருங்கிக் கொண்டிருக்க, எனக்கோ அதில் பாதி தான்... 

எங்களுக்குள் நட்பு உருவானது ஒரு பெரிய கதை... கல்லூரியில் படிக்கும் போது எனது தோழி ராகினியின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவள் வீட்டு அருகில்தான் ராகவன் சார் வீடும் இருந்தது. ராகவன் சாரின் மகளும் எங்கள் வயதுதான்... அவளுடன் பழக ஆரம்பித்து அப்படியே அவரது வீட்டுக்குள்ளும் போக ஆரம்பித்தேன். எங்களை வாங்கம்மா என்று சொல்லிவிட்டு பேப்பரிலோ எதாவது புத்தகத்திலோ ஆழ்ந்திருப்பார். அவர் ஒரு புத்தகப்புழு என்று ராகினி சொல்லியிருக்கிறாள். எனக்கும் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். அவரின் வீட்டில் ஒரு அறைக்குள் எங்கும் புத்தகமாக கிடக்கும். இதையெல்லாம் அடிக்கி வைக்க மாட்டீர்களா என்று அவளிடம் கேட்டபோது எப்படி அடுக்கி வைத்தாலும் அப்பா எதையாவது தேடுறேன்னு கலைச்சிருவாருன்னு சொன்னா... சரி நமக்கெதுக்கு இந்த வேலையின்னு பேசாம விட்டுட்டேன்.

அப்புறம் ஒரு நாள் அந்த அறைக்குள் நுழைந்து எதவாது படிக்கலாமென தேடி லேவ்தல்ஸ்தோயை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் எனக்குப் பின்னால் ஒரு செருமல் சத்தம்... திடுக்கிட்டுத் திரும்பினால் அங்கே ராகவன் சார் நிற்கிறார். நான் பயந்து எழ, உக்கார்... உக்கார் என சைகையால் சொன்னார். எனக்கு எதிரே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவர் 'என்னம்மா... இந்த மாதிரி புக்கெல்லாம் படிப்பியா? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார். எனக்கு இவை... இவை... பிடிக்கும் என பட்டியலிட ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகான நாட்களில் எனது மாலை நேரங்கள் எல்லாம் ராகவன் சாருடன் இலக்கியம் பேசும் வேளையாக மாறியது. அதன் பிறகு பெரும்பாலான நேரங்களை ராகவன் சாருடன் கழிக்க ஆரம்பித்தேன். அவரு ஒரு புத்தகப் புழு... அவருக்கு தோதா இவ சேர்ந்திருக்கா பாரு என்று தோழிகள் இருவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். 'வாம்மா இலக்கியம்... எங்கப்பாவுக்கு புலம்புறதைக் கேட்க ஆளில்லாம இருந்துச்சு... வந்து சேர்ந்துட்டே... இனி காதுல ரத்தம்தான்..' என்று சாரின் மகனும் கேலி செய்வான் 

எப்பவும் ராகவன் சாரின் மனைவியை நான் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். அவர்களும் என்னை தனது மகளைப் போலத்தான் பார்த்தார். எப்போது வீட்டுக்குப் போனாலும் மணக்க மணக்க டிகிரி காபியை கொடுத்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார்கள். ஒரு சில நாட்களில் ராகவன் சாரின் வண்டியோ செருப்போ வாசலில் இல்லை என்றால் எனக்கு அங்கு எதோ ஒரு அமைதி நிலவுவதுபோல் தெரியும்.  எதாவது புத்தகத்தை எடுத்தாலும் மனசு சார் எங்கே என்று தேட ஆரம்பித்துவிடும். .என்னம்மா உங்க சாரைக் காணுமேன்னு நினைக்கிறியா... கடைத்தெரு வரைக்கும் போயிருக்காக... இப்ப வந்துருவாங்க... என்றபடி அம்மா வேலையைத் தொடர ஆரம்பித்து விடுவார்கள்.

நான் அந்த அறைக்குள் நிறைந்திருக்கும் புத்தக வாசத்தை நுகர்ந்தபடி வாசிப்பில் ஆழ்ந்து விடுவேன். அதன் பிறகு சுற்றி நடப்பதை நான் காதில் வாங்குவதில்லை. வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தமோ சார் வீட்டுக்குள் நுழையும் சப்தமோ எனக்கு கேட்பதேயில்லை. என்னம்மா... படிப்பாளி... எப்போ வந்தே? என்றபடி சார் எனக்கு எதிரே வரும்போதுதான் எழுத்தின் வாசத்தில் இருந்து மீள்வேன்.

சாருடன் எனது உறவு படிப்படியாக இறுகியபோது அந்த அறைக்குள் புத்தகங்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டது. எதை படிக்கிறாரோ... எதை எழுதுகிறாரோ... அது மட்டும் அவருக்கு முன்னே இருக்க வேண்டும் என்றும் மற்றதெல்லாம் எடுத்தது எடுத்த இடத்தில் இருக்க வேண்டும் என்றும் நான் இட்ட அன்புக் கட்டளை அவர் ஏற்று அதை முடிந்தளவு செயல்படுத்தவும் ஆரம்பித்தார். நீ இந்த அறைக்குள்ள வந்த பின்னாலதான் குப்பையாட்டம் இருந்த இடம் கோயிலா மாறியிருக்கு என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.



வீட்டிற்குள் இலக்கியம் பேசிய என்னை வாயேன் அப்படியே பேசிக்கிட்டு பொயிட்டு வரலாம் என்று சார் கூப்பிட்ட போதெல்லாம் அவருடன் இலக்கியம் பேசியபடி வீதிகளில் வலம் வர ஆரம்பித்தேன். சில நாட்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்தோம். ராகவன் சாருக்குள் இலக்கியச் சுரங்கமே இருப்பதை அவரின் ரசனை மிகுந்த இலக்கியப் பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். ராகவன் சார் வீட்டுக்குப் போகாத நாட்கள் எனக்குப் போரடிக்க ஆரம்பித்தன.  இது வெறும் நட்புத்தானா இல்லை வயதான ஆள் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டதா என்று தோழிகள் கேலி செய்ய, அவரை நல்ல தோழனாக, சகோதரனாக, அப்பாவாக, குருவாகத்தான் பார்க்கிறேன். வேறு பார்வையில் பார்க்கவில்லை என்று சொல்லிய பிறகு அவர்கள் தங்களது கேலியை அத்துடன் விட்டு விட்டார்கள்.

எனக்குத் திருமணம் நடந்தது. என்னோட திருமணத்தில் ராகவன் சாரின் குடும்பம் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தது. மணமேடையில் என்னருகே வந்த ராகவன் சார் 'இங்க பாரும்மா... புகுந்த வீட்டுல நல்லவன்னு நீ எடுக்கப் போற பேருதான் எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்... சரியா' என்று சொல்ல, இவர்களைப் பிரிந்து செல்ல வேண்டுமே என்று நினைக்கும் போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் வாசம்... எனக்கு இலக்கியம் தான் வாழ்க்கை... எனக்கு வாய்த்தவரோ இலக்கியம் என்ன விலை என்று கேட்பார். அவரைப் பொறுத்தவரை நான் செக்சுக்காக மட்டுமே. எப்போ கூப்பிட்டாலும் அவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும். மற்றபடி எதைச் செய்தாலும் அதை ஏன் செய்தாய் இதை ஏன் செய்தாய் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஒட்டாத வாழ்க்கையில் அன்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை... அவர் அணைக்கும் போதெல்லாம் எனக்குள் எரிய ஆரம்பித்த தீ ஒரு நாள் வெடித்தது. விவாகரத்து வாங்கி வீட்டோடு வந்துவிட்டேன்.

மீண்டும் இலக்கியம் பேச ராகவன் சார் வீடு போகும் போது வீட்டில் பிரச்சினை வெடித்தது. பக்கத்தில் எல்லாம் அந்தக் கிழவனோடு சுத்தத்தான் கிடைத்த வாழ்க்கையைத் தொலச்சிட்டு வந்திருக்கா என்று சொல்ல ஆரம்பிக்க, வீட்டுக்குள் முடங்கினேன். இதற்கிடையில் ராகவன் சாரின் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடிய, அவரின் மனைவி... அந்த மகாராசி மாரடைப்பில் சென்று விட்டார். சார் மட்டும் தனியாக கஷ்டப்படுவதைப் பற்றி ராகினி சொல்லவும் என்ன நேர்ந்தாலும் சரியென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன். 

அவரோடு இருந்து விடுகிறேன் என்று சொல்ல, வேண்டாம்மா... என்னால உனக்குப் பிரச்சினை வரக்கூடாது. வாழ வேண்டிய பொண்ணு... நல்ல மாப்பிள்ளையாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு... உனக்கென்ன வயசாயிடுச்சா என்ன... இரண்டாம் கல்யாணம் பண்ணுறது தப்பொண்ணும் இல்லையே... என்று எனக்கு அவர் எவ்வளவோ சொல்லியும் நான் உங்க கூடவே உங்களுக்குத் துணையாக இருந்துடுறேன்னேன்னு என்னோட நிலையில் பிடிவாதமாக இருந்தேன்.

இதை சமூகம் வேற கண்ணோட்டத்தோட பாக்கும்மா... வேண்டாம் என்று மறுத்தார். சமூகத்தோட பார்வை எப்படி வேணுமானாலும் இருக்கட்டும்... நம்ம மனசுக்குத் தெரியுமில்ல சார்.... அப்புறம் சமூகத்துக்கு எதுக்கு பயப்படணும்... அழுக்கு நிறைந்த மனங்கள் ஆயிரம் பேசும்... அப்பழுக்கில்லாத மனசு நமக்கிருக்குல்ல... அடுத்தவங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை... நீங்க தனியா கஷ்டப்படக்கூடாது என்று அவரைக் கரைக்கப் பார்த்தேன்.

இல்லம்மா... என்னோட மகன் நல்லாத்தான் பார்த்துக்கிறன்... வேலையாள் வைக்கிறேன்னு சொன்னான்... நாந்தான் வேண்டானுட்டேன்.... நீ வரப்போக இரு... அதுதான் நல்லது... இங்கே வந்து தங்குறதுங்கிறது அவ்வளவாக சரிப்படலைன்னு சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்தார். நான் பெரும்பாலான மாலை வேளைகளை சாருடன் கழிக்க, விவரம் மகனுக்கும் மகளுக்கும் போக பிரச்சினை உருவானது. அவரும் சொல்லிப் பார்க்க, அவர்கள் நம்பவில்லை. பின்னர் எக்கேடோ கெட்டுப் போங்க என்று விட்டு விலக, நான் உரிமையோடு உள்ளுக்குள் சென்றேன்.

என் குடும்பத்தாரும் கத்திப் பார்த்தார்கள்.... மிரட்டிப் பார்த்தார்கள்... எதற்கும் அடி பணியாமல் அவரோடு வாழ ஆரம்பித்தேன். சமூகத்தின் பார்வையில் தரங்கெட்டவளாக... அவரின் பார்வையில் அம்மாவாக...

தினமும் காலையில் குளித்து சாமி கும்பிடும் போது எம்புள்ளைங்க மூணையும் நல்லா வச்சிக் காப்பாத்து என்று என்னையும் சேர்த்தே சாமியிடம் முறையிடுவார். எப்போதும் சார் என்றே கூப்பிட்டாலும் எனக்கு நல்ல தோழனாக, ஆசானாக, சகோதரனாக, அவ்வளவு ஏன் நல்ல அப்பாவாகத்தான் மனசுக்குள் இருந்தார்.

என்னோடு திகட்டத் திகட்ட இலக்கியம் பேசிய அந்த ஆத்மா, இதோ தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டு கிடக்கிறது. அவர் விரும்பியபடி அவரைச் சுற்றி புத்தகங்கள் எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன... ஊரில் இருந்து மகனும் மகளும் வந்தாச்சு... என்னைப் பற்றி பலர் பேசிய போதும் கடைசி காலத்தில் அப்பாவுடன் இருந்தது அவதான்... அவருக்கு எல்லாம் பார்த்தும் அவதான்... அவரோட கடைசி நிமிடத்தில் அவ அவருக்கிட்ட இருக்கணும்... அதுதான் நல்லது என்று சொன்ன ராகவன் சாரின் மகன் சாரைப் போலவே குணத்தில் உயர்ந்து நின்றான்.

ராகவன் சார் கடைசி மூச்சை இழுத்து விட, எல்லாப் பக்கமும் குரல்கள் கூக்குரலாய் ஒலிக்க, அதுவரை அடக்கிய எனது அழுகை "அப்பா" என வெடித்தது. அவருக்கு அருகே கிடந்த கார்ல் மார்க்ஸின் அட்டை கிழிந்த புத்தகத்தில் எனதன்பு மூத்தமகள் சுபத்ராவுக்கு என நான் படிக்கும் காலத்தில் அவர் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்த பேப்பர் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  2. மனதை கனக்கச் செய்யும் கதை நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. நெகிழ வைத்த கதை...

    [கதையா... உண்மை சம்பவமா...?]

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும் உதவக் கூடும் :

    சில "பாடல்" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    பதிலளிநீக்கு
  5. மனதை ஒரு உலுக்கு உலுக்கியது.என்று தான் நம் சமூகம் திருந்துமோ?

    பதிலளிநீக்கு
  6. சமுதாயத்தில் தனியாக வாழும் பெண் பற்றிய மதிப்பீடு இன்னும் மாறவில்லை . நட்பு என்ற உறவு அவளுக்குப் பள்ளிப் படிப்பு முடியும் வரைதான் .அதன்பிறகு அவள் எந்த ஆணுடன் பழகினாலும் அதை செக்ஸ் கண்ணோட்டம் கொண்டே பார்க்க ஆரம்பித்து விடுகிறது சமுதாயம் . இதற்கான முதல் குற்றவாளி , தாழ்வு மனப்பான்மையும் கோழைத்தனமும் கொண்ட இளைஞர்களே.

    பதிலளிநீக்கு
  7. அருமை, கதையும் நடையும்.

    பதிலளிநீக்கு
  8. கதையின் முடிவு அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நிகண்டு வலைத்தளத்துக்கு
    தங்கள் அழைப்பிக்கு நன்றி.
    கண்டிப்பாக இணைவோம்

    பதிலளிநீக்கு

  10. வாங்க ஜெயக்குமார் ஐயா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க தனபாலன் சார்...
    பதிவு படித்தேன்... அலுவலகத்தில் பார்த்ததால் கருத்திட முடியவில்லை...
    இது கற்பனைக் கதைதான்...
    மூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதியபோது நினைத்த கருத்தில் இருந்து மாறி வந்தது... நன்றாகவே தெரிந்ததால் அப்படியே விட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு

  11. வாங்க யோகராஜா அண்ணா...
    தங்கள் தொடர் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி என்று சொல்லி ஒரு வரியில் முடிக்க எண்ணமில்லை... உங்கள் தொடர் வருகையும் தொடரும் நம் உறவும் என்றும் தொடர வேண்டும்...

    வாங்க செல்லப்பா ஐயா...
    மிகவும் அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்...
    தாழ்வு மனப்பானமையும் கோழைத்தனமுமே முக்கியக் காரணம்...

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலெஷ்மி அக்கா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ. சுரேஷ்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மனதைத் தொட்ட கதை. பல நேரங்களில் உறவுகள் புரிந்து கொள்ளப் படுவதே இல்லை......

    பதிலளிநீக்கு
  14. இந்த கருவை எடுத்துகொண்டதற்காகவே உங்களை பாராட்டவேண்டும் சகோ! கதையும் அருமை. சாதித்த பெண்கள் எல்லாம் சறுக்கிய (!?) பெண்கள் எனும் கீழான சமுதாயத்தின் எண்ணம் மாறவேண்டும் சகோ:((

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி