இன்று உலக புத்தக தினமாம்... நேற்று பூமி தினமாம்... சமீபமாய்த்தான் இவையெல்லாம் அட்சய திரிதியை போல பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கின்றன. படிக்கும் காலத்தில் எல்லாம் இப்படித் தினங்கள் எல்லாம் இல்லவே இல்லை.
வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று... படிக்கும் காலத்தில் வீட்டில் ராணி மட்டுமே... அதுவும் அம்மா தொடர்ந்து (இப்போது வரை) வாசிப்பதால் செவ்வாய்க்கிழமை காலை கடையில் பால் கொடுத்துவிட்டு வரும்போது புத்தகத்துடன் வரவேண்டும். எங்களுக்குப் புத்தகமெல்லாம் எங்க சின்னம்மா வீட்டில் இருந்துதான்... இரண்டு ஊருக்கும் இடையில் ஒரு கண்மாய்... வயல்கள், கண்மாய் எனக் குறுக்குப் பாதையில் கடந்து சென்று விடலாம்... புத்தகங்களுக்காகவே வாராவாரம் அங்கு செல்வோம் அல்லது சின்னம்மா மகன் பழனியப்பன் (இப்போது தினத்தந்தியில் துணை ஆசிரியர்) வீட்டிற்கே அள்ளிக் கொண்டு வருவான் (இருவருக்கும் ஒரே வயதுதான்).
சித்தப்பா ஆசிரியர் என்பதாலும் அண்ணன், அக்கா, பழனி என எல்லாருமே தீவிர வாசிப்பாளர்கள் என்பதாலும் காமிக்ஸ் முதல் இந்தியா டுடே வரை எல்லாப் புத்தகங்களும் க்ரைம், பாக்கெட் நாவல் போன்ற நாவல்களும் வாங்குவார்கள்... எல்லாமும் அங்கிருந்து எங்க வீடு வந்து சேரும்... நாங்களும் வாசித்து விடுவோம்.
கல்லூரியில் படிக்கும் போது பழனி ஐயா வீட்டில் இருந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று வாசிக்க முடியும்... அவரிடம் கேட்க வேண்டியதே இல்லை... விரும்பியதை எடுத்துச் சென்று படிக்க எப்போதும் அனுமதி உண்டு. விடுமுறை தினங்களில் நாங்கள் எல்லாம் பரிட்சைக்குப் படிப்பது போல் ஐயா வீட்டில் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்போம்... மதிய உணவு, காபி என எல்லாமே அங்குதான்... எல்லாருக்குமாய் அம்மா சமைப்பார்கள்... சில புத்தகங்கள் நமக்கே நமக்கென ஐயா கொடுப்பதும் உண்டு.
புத்தகம் எடுக்க கல்லூரி நூலகத்தில் இரண்டு டோக்கன் உண்டு... பெரும்பாலும் பாடம் சம்பந்தமான புத்தகம் எடுப்பதில்லை என்பதால் ஜெயகாந்தனையோ, சுஜாதாவையோ எடுத்துச் செல்வோம்... அதுபோக தோழி சுபஸ்ரீ நூலகத்தில் தன்னார்வப் பணி செய்ததால் அவர் மூலமாக நிறையப் புத்தகங்களும் வாசிக்கக் கிடைத்தது.
கல்லூரி முடித்த பின் வாராந்தரி, மாதமிருமுறை, மாத இதழ்கள்தான் வாசிப்பாய்... அம்மாவுக்கு ராணியும் எனக்குப் பாக்யாவும் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தேன்... பெரிய புத்தகங்கள் எதுவும் வாசிப்பதில்லை... எம்.சி.ஏ., படித்த போது புத்தக வாசிப்பு என்பது சுத்தமாக இருக்கவே இல்லை... வேலைக்குச் சென்ற பின்னும் வாசிப்பு என்பது எழுத்துப் போல எப்போதாவது என்ற நிலையில்தான் இருந்தது.
அபுதாபி வந்த பின்னர் கூட பெரும் வாசிப்பு எல்லாம் இல்லை... எப்பவும் வாசிப்பு பிடிக்கும் என்றாலும் அப்போதைய சூழல் எதிலும் கவனம் கொள்ளாத நிலைதான்... இப்போது போல் பத்து வருடம் முன்பு முகம் பார்த்துப் பேசும் வசதியும் இல்லை... போனில்தான் என்பதால் வருத்தமே எப்போது எஞ்சி நிற்கும். அதுபோக இங்கு புத்தகம் கிடைப்பதே அரிது என்ற நிலையில் சில வருடங்கள் சென்றன... அப்போது இணையத்திலும் அவ்வளவாக மேய்வதில்லை... வலையில் எழுதுதல்... மற்ற வலைப்பூக்களை வாசித்துக் கருத்திடுதல் என்ற நிலையில்தான் இருந்தது. இப்போது எங்கும் அலசி புத்தகங்கள் எடுத்து வாசிக்க முடிகிறது.
சகோதரர்கள் 'கலியுகம்' தினேஷ், தமிழ்வாசி பிரகாஷ், 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷாந்தினி அக்கா என ஒரு கூட்டணி வாசிக்க ஆரம்பிக்க, நானும் இணைந்து கொண்டேன்... அப்போதுதான் கல்கி, பாலகுமாரன், சாண்டில்யன், தி.ஜானகிராமன், வேல ராமமூர்த்தி எனப் பெரும் எழுத்தாளர்களின் புத்தகங்களின் பிடிஎப்பை வாங்கித் தீவிர வாசிப்பில் இறங்கினோம்... வாசித்த பின் எங்களுக்குள் விவாதமெல்லாம் அரங்கேறும்... அவ்வப்போது இங்கு எழுதவும் செய்தேன்... மனசு பேசுகிறது, புத்தக விமர்சனமென 40க்கும் மேல் எழுதியிருக்கிறேன்... எடுத்து வாசித்தால் இத்தனை தீவிரமாய் நாம்தான் எழுதினோமா என்று தோன்றுகிறது. சினிமா தவிர்த்து நல்ல புத்தகங்களுக்கும் எழுதி வைத்திருக்கிறேன்.
மேலும் வாசிப்பு தொடர எங்களது அமீரக எழுத்தாளர்கள் மற்றம் வாசகர் குழுமம் பெரும் உதவியாக இருந்தது. பல எழுத்தாளர்கள் குழுமத்தில் இருப்பதால் அவர்களின் புத்தகங்கள் எல்லாம் வாசிக்கக் கிடைக்கின்றன... வாசிப்பை நேசிப்போமென கூட்டமெல்லாம் நடத்தி எல்லாரையும் வாசிக்கவும் வைக்கிறார்கள்.
சகோதரர் நெருடா புத்தகமாக வாங்கிக் குவிப்பதும் அவர் என்னுடன் இருப்பதும் ஒரு வகையில் எனது வாசிப்பை தன் மெருகு குறையாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதைப் படியுங்கள்... இது உங்களுக்குப் பிடிக்கும்... இதை படித்து உங்களுக்குத் தோன்றுவதைச் சொல்லுங்கள் எனப் புத்தகங்களாகக் கொடுத்து வாசிக்கச் சொல்வார்... சகோதரர்கள் இராஜாராம், நௌஷத்கான் போன்றோர் பல புத்தகங்கள், பிடிஎப் அனுப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இப்போது வாசிப்பு தீவிரமாய்த்தான் தொடர்கிறது.
தினமும் பத்துப் பக்கமேனும் வாசிக்காமல் இருப்பதில்லை... வாசிப்பு ஒரு போதை என்று முன்பு எழுதியிருக்கிறேன்... இப்பவும் சொல்கிறேன்... வாசிப்பு போதைதான்.. அதேபோல் திரு. பவா செல்லத்துரை சொல்லும் கதைகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்... சுருதி டிவி புண்ணியத்தில் தினமும் ஒரு கதை கேட்க முடிகிறது.... வாசித்த நிறைவைக் கொடுக்கும் குரல் பவாவினுடையது.
பல நேரங்களில் வாசித்தல் அல்லது கதை கேட்டல் என்பது நம் பிரச்சினைகளைத் தள்ளி வைத்து மனம் அமைதி கொள்ளச் செய்கிறது... வாசிக்க வாசிக்கவே எழுத்து இன்னும் அழகாகும்... வாழ்வும்தான்.
வாசியுங்கள்... நிறையக் கற்கலாம்...
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
வாசிப்போம். சுவாசிப்போம்.
மனம் அமைதி - இதுவே முக்கியம்...
நல்ல விஷயம் குமார். உங்கள் மனதை அமைதிப்படுத்தி உதவுகிறது நல்ல விஷயம் தொடருங்கள்.
துளசிதரன்
குமார் நான் எழுத்தாளர்கள் பெயர்கள் மற்றும் ஒரு சிலர் குறித்து அறிந்திருந்தாலும் அத்தனை வாசிப்பனுபவம் கிடையாது. வலையுலகம் வந்துதான் நட்புகள் நீங்கள் எல்லோரும் சொல்வதைக் குறித்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
கண்டிப்பாக வாசிப்பு பல சமயங்களில் வீட்டு வேலைகள் கூடச் செய்ய மனமில்லாமல் போகிறது ஆனால் கடமைகள் எனவே அதில் மனம் செல்லும் போது வாசிப்புக்கு நேரமில்லாமல் குறைந்துவிடுகிறது. இப்போது தினமும் கொஞ்சமேனும் வாசிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். கணினியில்தான்
கீதா
வாசிப்பதில் கிடைக்கும் சுகமும், மன நிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அருமையான பதிவு. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
வாசிப்பு தொடரட்டும். தில்லி வந்த புதிதில் நிறைய வாசிக்கக் கிடைத்தது - அறை நண்பர் பல புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். மாத வாடகைக்கு நூல் எடுத்து வாசித்தவர்களில் நானும் அறை நண்பரும் அதிக அளவில் எடுப்பதாகச் சொல்லி வாடகை அதிகம் கேட்கும் அளவிற்கு வாசித்திருக்கிறோம். இப்போதும் வாசிப்பு தொடர்கிறது என்றாலும் முன்னர் போல இல்லை.
நினைவுகள் நன்று.
வாசிப்பு
வரம்
தொடர்க
கருத்துரையிடுக