மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஒரு சிறு இசை

ரு சிறு இசை...

வண்ணதாசன் இசைத்திருக்கும் அழகான புல்லாங்குழல் இசைதான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. கவிஞராய் அவர் எழுதும் கவிதைகள், சின்னச் சின்னச் செய்திகள் என முகநூலில் வாசித்திருக்கிறேன்... ரசிக்க வைக்கும் எழுத்து அது... ஆனால் சிறுகதை வாசித்ததில்லை... இதில் இருக்கும் எழுத்தோ அழுத்தம் கொடுக்கும் எழுத்து... ஆர்ப்பாட்டமில்லாத அன்பைச் சொல்லும் எழுத்து.

ஊருக்குப் போனபோது எனது முதல் சிறுகதைத் தொகுப்பின் பிரதி ஒன்றை என் பேராசான் மு.பழனி இராகுலதாசனிடம் கொடுக்கச் சென்ற போது நிகழ்ந்த நீண்ட உரையாடலில் இந்த புத்தகத்தை எடுத்துக் கொடுத்து 'வண்ணதாசனை வாசித்து இருக்கிறீர்களா..?' என்று கேட்டார். சின்னச் சின்னதாய் முகநூலில் எழுதுவதை வாசித்திருக்கிறேன் என்றதும் 'நீங்க அவரைக் கண்டிப்பாக வாசிக்கணும்... இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவரின் சிறுகதைத் தொகுப்பு... வாசிங்க... உங்களுக்குப் பிடிக்கும்' என்று எனக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுத்த போது வண்ணதாசனின் இல்ல முகவரி, செல்போன் எண் எல்லாம் எழுதிக் கொடுத்து வாசித்துவிட்டு அவருடன் பேசுங்கள் என்றார். ஊரில் வாசிக்கும் சூழல் அமையவில்லை... இங்கு வந்ததும் வாசித்து முடித்தேன்... அது குறித்து எழுதத்தான் ரொம்ப நாளாகிவிட்டது... எப்படி எழுதுவது என்ற எண்ணமே எழுத விடாமல் தடுத்தது.

வாழ்க்கைக் கதைகள் எதற்காக எழுதுகிறீர்கள்..? தரவுகளுடன் எழுதுங்கள்... படிக்கிறவனை அழ வைக்கிறதுக்கா எழுதுறது..? புனைவு எழுத்தி ஈடுபாடு காட்டுங்கள்... என என் நண்பர்கள் பலர் என் கதைகளைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது எனக்கு இப்படியான கதைகளைதான் எழுத வரும்... கிராமத்து வாழ்க்கையில் ஜிகினா பூசி எழுத எனக்கு வருவதில்லை என்பதுதான்... வண்ணதாசன் எந்தக் கதையிலும் ஜிகினா பூசவில்லை... அவரே கதைசொல்லியாய் நின்று கதையைச் சுமக்கும் கதாபாத்திரத்தின் பின்னே நம்மை நடக்க வைக்கிறார்... அதுதான் அவரின் வெற்றி.

'சில சமயம் சன்னல்களின் திரைச்சீலை கூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச் செல்வதுண்டு. சில சமயம் மழைக்குப் பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சில சமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுத வந்தவர். தமிழில் அவருக்கு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக் கொண்ட செல்வம்' என ஜெயகாந்தன் இந்தச் சிறுகதைத் தொகுப்புக் குறித்து புத்தகத்தின் முதல் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

'அவரது கதைகள் நெருக்கடியும் பிரச்சினைகளும் நிறைந்த வாழ்வின் இடையில் அன்பின் இருப்பையும் அன்பு வெளிப்படும் அரிய தருணங்களையும் வெளிப்படுத்துபவை' என எஸ்.ராவும் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான்...

இருவரும் மொத்தமாய் சொல்லிவிட்டார்கள்...

இவர்கள் இருவரும் சொன்னதை விட வேறென்ன சொல்ல முடியும்..? 


புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் நம்மை ஆட்கொள்கிறது. ஒரு கதையை வாசித்து முடித்துவிட்டு அடுத்த கதைக்குச் செல்ல நேரம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது. அந்தக் கதாபாத்திரம் குறித்து யோசிக்கச் சொல்கிறது... யாரிடமாவது அவரைப் பற்றி, அவரைப் போன்று நாம் சந்திந்த நபரைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமென மனசு ஆர்ப்பரிக்கிறது.

எல்லாக் கதைகளுமே குறிப்பிட்ட வருட இடைவெளிக்குள் பத்திரிக்கைகளில் எழுதிய கதைகள்தான்.

ஒரு தாமரைப் பூ ஒரு குளம் என்னும் முதல் கதை முதல் ஒரு சிறு இசை என்னும் பதினைந்தாவது கதை வரை நம்மை விதவிதமான வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்கின்றன... ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசை... அத்தனையும் வாழ்வின் இசை... அது மகிழ்வாய் வருவதைவிட வருத்தங்களையும் வலிகளையும் சுமந்தே நகர்கின்றது. வண்ணதாசனின் எழுத்துக்கு வசீகரிக்கும் தன்மை அதிகமிருக்கிறது. அது நம்மை ஈர்த்துக் கொள்கிறது. அதனோடு நம்மையும் பயணித்து வாழ வைக்கிறது.

நாய்க்குட்டியைத் தூக்கி வரும் பெரியவர், நெருக்கமான சோமு இறந்ததை எதார்த்தமாய் அறிந்து அவன் வீடு செல்லும் ஜான்சி,  சூரி மாமா வீட்டுக்குச் செல்லும் சுந்தரம், எதார்த்த மனிதனாக வாழும் பூரணலிங்கம், திருடனின் மகளைப் பார்த்து கண்ணு அழகா இருக்குன்னு சொல்லும் தினசரி, நிரப்புதலில் வாழும் சுப்பு, எதுவும் மாறிவிடவில்லை எனச் சொல்லும் ஜெயராஜ், கல்பனா ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க நினைக்கும் பிரமநாயகம், இன்னும் இன்னுமாய் லெட்சுமணன், கதிர்,பரமன், சுந்தரம், சந்தனம், ஜானகி, காந்தி டீச்சர் இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நம்முன்னே நிறுத்தி நம்மையும் அவர்களுடன் வாசம் செய்ய வைத்திருக்கிறார். 

பெரும்பாலான கதைகளின் கதை சொல்லியே அவர்தான் என்பதால் அவரிடத்தில் நம்மை நிறுத்தி அவர் சொல்லும் மற்றொரு நபரின் வாழ்க்கையை நம்மால் பார்த்து ரசிக்க, வருத்தப்பட, ஆறுதல் சொல்ல முடிகிறது. ஒவ்வொரு கதை முடிவிலும் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மையும் இறக்கி விட்டு விடுகிறார்... மீள்தல் எளிதல்ல.

விரிவாய் ஒவ்வொரு கதையையும் பற்றிப் பேசினால் உங்களுக்கு வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அதன் அற்புதத்தை அனுபவிக்க முடியாது.  எழுத்தில் அசத்தியிருக்கிறார் என்று சொல்வதை விட இப்படியான கதைகளை எப்படி எழுதினார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

ஒவ்வொன்றும் நாம் யாரும் யோசிக்காத கதைக்களம்... நாம் நினைக்காத பாதையில் நகர்ந்து எதிர்பாராத இடத்தில் நிறைவு பெறுகிறது. கல்யாண்ஜி என்னும் கவிஞனைவிட வண்ணதாசன் என்னும் சிறுகதை ஆசிரியன் இன்னும் நிறையக் கதைகளை நிறைவாய் எழுத வேண்டும். கவிதை சொல்லும் அவரின் பேனாவுக்கு அழகாய் கதை சொல்லவும் வாய்த்திருப்பது மிகப்பெரிய கொடுப்பினை என்றே தோன்றுகிறது.

ஒரு சிறு இசை... இதுதான் பதினைந்தாவது கதை... மூக்கம்மா ஆச்சியின் இறப்பில் ஆரம்பிக்கிற கதை, அவளைக் குறித்து விரிவாய்ப்பேசி டிரங்குப் பெட்டியில் வந்து நிற்கிறது. ஆச்சி விரக்தியாய்ச் சொல்லும் 'எது அளவுப்படி நடந்தது இதுவரைக்கும்' என்ற வரிகள் கதையின் மொத்த வலிகளையும் சேர்த்துச் சொல்லிவிடுகிறது.  அதனால்தான் இந்தப் புத்தகத்துக்குப் பெயர் ஒரு சிறு இசை...

எந்தக் கதையிலும் பேரிச்சலான இசை இல்லை... இளையராஜாவின் இசை கேட்கும் போது மனசு ஒரு துள்ளலான நிலைக்குப் போய்விடும்... அது மகிழ்வோ, சோகமோ அந்த இசை நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்ளும்... அப்படித்தான் இத்தொகுப்பும்... நம்மை வசீகரித்துக் கொள்கிறது.

'கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமை  உடையது' என்று சொல்லியிருக்கும் வண்ணதாசன், 'அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிருக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்... நான் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்?. துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காய்ந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் 'நீல ஓம்'களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்' என்றும் சொல்லியிருக்கிறார். ஆம் அவரவர் வாழ்க்கையைத்தான் அவர் எழுதியிருக்கிறார்.

கதைகளை வாசித்து முடித்த போது நம்மால் இப்படி ஒரு கதை எழுத முடியுமா..? என்ற கேள்வியே மனசுக்குள் எழுந்தது. எப்படியும் இதுபோல் ஒரு கதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணமே மனசுக்குள் எழுந்து நிற்கிறது. எழுதிப் பார்க்க வேண்டும் இப்போதில்லை என்றாலும் எப்போதேனும் வாய்க்கும் போது.

வண்ணதாசன் கதைகளால் கட்டிப் போட்டிருக்கிறார். ஐயா சொன்னது சரிதான்... எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது... மீண்டும் மறுவாசிப்புச் செய்வேன்.  முடிந்தால் அவருடன் தொடர்பு கொண்டு பேசுவேன்.

இன்னும் விரிவாய் இந்தச் சிறு இசையை நுகர ஆசைதான்... இப்போதைக்கு இதுவே போதுமென்று தோன்றுகிறது... வாசித்துப் பாருங்கள் நீங்களும் இசையை ரசிப்பீர்கள்.

சாகித்ய அகாதெமி விருதுக்கு தகுதி பெற்ற கதைகளே அத்தனையும்... ஒன்று கூட சோடை இல்லை.

ஒரு சிறு இசை
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
விலை : 140
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் வாசிப்பு ரசனை, உங்கள் மனதை மாற்றுவதில் மகிழ்ச்சி... அதை பகிர்ந்து கொண்டதில் அதிக மகிழ்ச்சி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் வலைத்தமிழில் வண்ணதாசன் அவர்களின் கதைகள் இருக்கின்றன கொஞ்சம் அவற்றைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது. எப்போது நெட் இருக்கும் நேரம்..பவர் இருக்கும் நேரம் என்று..

அவரது எழுத்து அருமையான எழுத்து. உங்களைப் போன்று எனக்கும் தோன்றியது. இப்படி எழுத முடியுமா என்று.

கூடவே, எனக்கெல்லாம் அப்படியான ஆழ்ந்த அறிவு எல்லாம் கிடையாதே என்றும் மற்றொரு புறம்...

நீங்கள் எத்தனை ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நல்லா எழுதியிருக்கீங்க. உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா!!!

கீதா

கோமதி அரசு சொன்னது…

அருமையான விமர்சனம்.

சிகரம் பாரதி சொன்னது…

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 24 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

25ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

எங்கள் தளத்தில் தங்களது பதிவு: மனசு பேசுகிறது : ஒரு சிறு இசை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.வண்ணதாசன் அவர்களுடைய சிறுகதைகளைப் பற்றிய தங்கள் எண்ணவோட்டங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.வண்ணதாசன் அவர்களுடைய சிறுகதைகளைப் பற்றிய தங்கள் எண்ணவோட்டங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!