கெட்டியோளானு எண்ட மலாஹா (ketiyolaanu Ente Malakha)...
பேரைத் தமிழ்ப்படுத்தியது சரியான்னு தெரியலை... சரி அத விடுங்க... இவன் என்னடா வெறும் மலையாளப் படத்துக்கா எழுதிக்கிட்டு இருக்கானேன்னு கூடத் தோணலாம்... கதைகள் இழுக்கின்றனவே... எப்படிக் கதையாகினும் படத்தை ஒரு ஈடுபாட்டோட பார்க்க முடிவதே இதற்குக் காரணம்.
நாலு பெண்களுடன் பிறந்த சிலீவச்சன் (ஆசிப் அலி), அவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்தும் தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். புதிய ரக மிளகு ஒன்றைக் கண்டுபிடிக்கும் பணியில் மும்மரமாக இருக்கிறான். அம்மாவின் வற்புறுத்தலுக்காக சில பெண்களைப் பார்த்தும் அவனுக்கு மாலை சூடும் நாள் வரவில்லை. அதைப் பற்றி அவன் கவலைப்படவும் இல்லை.
பாதிரியார் சொல்லியதால் ரிஞ்சியை (வீணா நந்தகுமார்) பெண் பார்க்கப் போகிறான். அப்போதுதான் வேறொரு குடும்பம் பெண் பார்த்துவிட்டுச் சென்றிருந்தாலும் பாதிரியார் சொன்னதற்காகப் பார்த்து விட்டுப் போகட்டுமே எனச் சொல்ல, அங்கே இருக்கும் உடல் நலமில்லாத ரிஞ்சியின் அம்மச்சியிடம் சிலீவச்சன் நடந்து கொள்ளும் விதத்தால் எல்லாருக்கும் பிடித்துப் போக, திருமணம் முடிகிறது.
இதன் பிறகுதான் பிரச்சினையின் தொடக்கம்...
நாலு பெண் பிள்ளைகளுடன் பிறந்தவன்... பெண்களைத் தெய்வமாக மதிப்பவன்... அப்படியே வளர்ந்தவன்... வளர்க்கப்பட்டவன் என்பதால் ரிச்சியைத் தொடாமல் தவிர்க்கிறான்... இரவுகளில் அவளிடமிருந்து விலகி இருக்க நினைத்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியில் தங்கி விடுகிறான். தேன்நிலவு சென்ற இடத்திலும் குளிர்காய்ச்சல் எனச் சொல்லி வீடு வந்து சேர்கிறான்.
எதற்காகத் தன்னை ஒதுக்குகிறான் என்பதை ரிச்சியால் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறாள். உடம்புல ஏதும் பிரச்சினையா என்று கூட கேட்டுப் பார்க்கிறாள்... இதே கேள்வியை நேற்றுப் பார்த்த விகிர்தியில் திருமணமான ரெண்டொரு நாளில் நாயகி, நாயகனின் அம்மாவிடம் சமைத்துக் கொண்டே மெல்லக் கேட்பாள்.
ஒரு நாள் நண்பர்கள் ஏத்திவிட, சரக்கும் கூடுதலாய் உள் நுழைய, வீட்டுக்கு வருபவன் அன்போடு அணைக்க வேண்டிய மனைவியைக் ஆக்ரோஷமாக ஆக்கிரமிக்கிறான்... அதாவது அவளின் விருப்பமின்றி அவளைக் கற்பழிக்கிறான். அவள் உடம்பு முழுவதும் காயங்களுடன் மூர்ச்சையாகிறாள். ஹாஸ்பிடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்படுகிறாள்.
இருவருக்குள்ளும் மெல்ல ஒரு திரை விழுந்து அது பெரிய சுவராக மாறுகிறது. மாமியாரிடம் அம்மா வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லும் ரிச்சியிடம், அவர் இதெல்லாம் உங்க வீட்டில் தெரிந்தால் பிரச்சினை... அவன் ரொம்ப நல்லவன்ம்மா... நான் உன்னைப் பார்த்துக்கிறேன் என்று கெஞ்ச, அங்கயே தங்கினாலும் அவனிடம் பேசுவதை சுத்தமாகத் தவிர்த்துவிடுகிறாள்.
நகரும் நாட்களில் மற்றவர்களுக்கான அவனின் செயல்பாடுகள், புதிய குறுமிளகு கண்டுபிடித்ததற்காக கின்னஸ் சாதனையாளர் ஆகுதல், பேட்டி என அவளுள் உயரமான இடத்தைப் பிடித்தாலும், அவளால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அம்மா வீட்டுக்குப் போக வேண்டுமெனவும் நாம் பிரிந்து விடலாமெனவும் அவனிடமே கேட்கிறாள். அவனும் அவளைச் சமாதானம் செய்ய முடியாது என்ற நிலையில் அதற்கு ஒத்துக் கொள்கிறான்.
அம்மாவிடம் உண்மையைச் சொன்னால் அவர்கள் தாங்க மாட்டார்கள்... தப்பெல்லாம் என் மீதுதான்... அவங்க அம்மா வீட்டில் கொஞ்ச நாள் இருந்து வரட்டும் என்று சொல்லி விடுகிறேன் என்று சொல்கிறான். அவளும் சரியென்று சொல்ல, அவளைக் கூட்டிக் கொண்டு மாமியார் வீட்டிற்குப் போகிறான்.
இவர்கள் இருவரும் பிரிந்தார்களா...? அல்லது சேர்ந்தார்களா..? என்பதுதான் படத்தின் முடிவு. நல்லதொரு கதை... அதைச் சொன்ன விதமும் திரையில் காட்சிகளாய் நகர்த்திய விதமும் அருமை.
ஆசிப் அலியை ஒரு காட்சியில் கூட இது நடிகர் ஆசிப் அலி என்பதாய்க் காண முடியவில்லை... வேஷ்டியை பின்பக்கமாகத் தூக்கி கைகளுக்கு இடையே வைத்தபடி, பின்னால் கைகட்டிக் கொண்டு நடந்து வரும் சிலீவச்சனாய்த்தான் நமக்குத் தெரிகிறார். அதேபோல் வீணா... என்ன அழகு... மும்பை இறக்குமதி... நீண்ட முடியும் அழகும் சேர நன்நாட்டிளம் பெண்ணாய்த்தான் நமக்குத் தெரிகிறது.
அம்மாவாக மனோகரி ஜோய் பாந்தமான நடிப்பு... அக்காக்களாக வருபவர்கள் அடித்து ஆடியிருக்கிறார்கள்.
அஜூ பீட்டர் தங்காமின் கதையை லிஸ்டின் ஸ்டீபன், ஜஸ்டின் ஸ்டீபன் மற்றும் விச்சு பாலமுரளியின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நிஜாம் பஷீர் இயக்கியிருக்கிறார். படத்துக்கான இசையை வில்லியம் பிரான்ஸிஸும் படத்தொகுப்பை நூபுல் அப்துல்லாவும் ஒளிப்பதிவை அபிலாஷ் சங்கரும் செய்திருக்கிறார்கள்... மூவரின் பணியும் மிகச் சிறப்பானது.
குடும்பக் கதைப் படம்தான் என்றாலும் மிகச் சிறப்பான படம்... எந்த இடத்திலும் 'என்ன படம்டா இது நடகம் மாதிரி இருக்கு' என்ற எண்ணமே தோன்றாமல் 2.15 மணி நேரம் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கும்.
முடிந்தால் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
நீங்கள் சொன்னால் தான் இது போல் படங்கள் இருப்பது தெரியும் குமார்...
தலைப்பின் மொழிபெயர்ப்பு : மனைவியே என் தேவதை.
படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி நண்பரே
குமார் இதுவும் நல்லாருக்கா?
வேற வேற ஒப்பீனியன் வருது அதான்...
நோட்டட்.
கீதா
குமார் இதுவும் நல்லாருக்கா?
வேற வேற ஒப்பீனியன் வருது அதான்...
நோட்டட்.
கீதா
உங்க விமர்சனம் பார்த்து...இப்படத்தின் பாடல் காட்சிகளை கண்டேன்...மிக அழகு...
இயற்கையின் அழகை மிக அழகாக தந்து இருக்கிறார்கள்...
இங்கு படிக்க வில்லை என்றால் இப்படி பட்ட காட்சிகளை காணும் வாய்ப்புகள் எனக்கு இல்லை..
கருத்துரையிடுக