சென்ற பதிவில் ஸ்ரீராம் அண்ணன் தனது கருத்தில் 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்' பாடலும் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். உண்மைதான்... பாடலின் வரிகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எனக்கும் ரொம்பப் பிடித்தமான பாடல் அது. அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...
'அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா!'
சின்ன வயது முதல் முருகன் மீதுதான் காதல்... அது ஏன்னு எல்லாம் தெரியாது... ஆனாலும் அவர் மீது தீராத தொடரும் பக்தி இப்ப வரைக்கும்... அப்பா முருகா என்ற வார்த்தை உட்காரும் போது, எழும் போது, தும்மல் வரும் போது என எதைச் செய்தாலும் அப்பா முருகா என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.
படிக்கும் போதெல்லாம்... படிக்கும் போதென்ன இப்போதும் சில நேரங்களில் 'அப்பா... முருகா... என்னை மட்டும் காப்பாற்று...' என்று சொல்வேன். அதென்ன உன்னை மட்டும்ன்னு பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால் 'என்னை மட்டும் என்றால்... நான் ஒரு பத்துப் பேருக்கு உதவுவேன்... பத்துப் பேர் நூறு பேருக்கு உதவுவான்... நூறு ஆயிரமாகும்... ஆயிரம் லட்சமாகும்... இப்படியே உதவிகள் போய்க் கொண்டே இருக்கும்... முருகா எல்லாரையும் காப்பாத்துன்னு சொன்னா அவர் எப்படிக் காப்பாற்றுவார்' என்றதும் போதும்ப்பா உன்னோட நல்ல எண்ணம் என எழுந்து போய்விடுவார்கள்.
எங்க பக்கம் பழனிக்கு அதிகம் பேர் நடந்து போவாங்க.... தேவகோட்டை நகரத்தார் காவடிக்கு பழனியில் தனி மரியாதை உண்டு. கூட்டம் கூட்டமாய் பழனிக்கு நடந்து போகும் போது சபரிமலைக்குச் செல்வோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கார்த்திகை மாதம் காவி வேட்டியைப் பார்ப்பதைவிட கருப்பு வேட்டி அதிகமானது. அப்போதும் நமக்கு முருகன்தான்... மார்கழி மாதம் அதிகாலையில் யாரேனும் ஐயப்பன் பாட்டுக் கேசெட் போட்டால் ஓடிப்போய் முருகன் பாடலை மாற்றி விட்டுட்டு வருமளவுக்கு முருகன் வெறியன் நான்.
பழனிக்கு ஆறு வருடம் நடைப் பயணம்... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அனுபவம்... அதையெல்லாம் தனிப்பதிவாக எழுதலாம். மறக்க முடியாத நடைப்பயணம் அது.... மீண்டும் ஒரு முறையேனும் நடந்து செல்ல வேண்டும் என்ற ஆவல் இப்போதும் மனசுக்குள்... நடக்கும் என்று நம்புகிறேன்.
முருகன் பிரியத்தில் இருந்த போதும் கல்லூரியில் வேலை பார்க்கும் போது சபரிமலைக்குப் போகலாம் என எங்கள் இயற்பியல்துறை பேராசிரியர் எம்.எஸ். அழைத்ததும் நானும் முருகனும் முதல்முறை சபரிமலைக்கு மாலை போட்டோம்... முதல் பயணம் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
மழை பெய்து கொண்டிருக்கும் போது பம்பையில் குளித்தது...
லேசான தூறல் இருக்கும் போதே மலையேற ஆரம்பித்தது...
ஒரு சில இடங்களில் மேலிருந்து கீழ் நோக்கிப் பயணித்த தண்ணியால் மலைப்பாதை வழுக்கிய போதும் பாதுகாப்பாய் நடந்து சன்னதி அடைந்தது...
லேசான மழை பெய்யும் போதும் நடைபெற்ற படி பூஜையை நனைந்து கொண்டே பார்த்தது...
மழையோடு பஸ்மக் குளத்தில் குளித்து மகிழ்ந்தது....
அடித்துப் பெய்யும் மழை நேரத்தில் ஒரு நாள் முழுவதும் மலையில் அறை எடுத்துத் தங்கியது...
ஐயப்பனுக்கு அபிஷேகப் பொருட்கள் ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்து அருமையான தரிசனம் செய்தது என எல்லாமே வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது.
நான்கு முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறேன். மலையேறியதும் கூட்டமில்லை என்றால் நேரடியாக ஐயப்பனைப் பார்க்க முடியும். நம்ம ஊரில் போல சாமியை அருகில் பார்க்க 100, சற்று தள்ளி நின்று பார்க்க 50, வரிசையில் பார்த்தபடி கடக்க 10, கூட்டத்தில் நசுங்கி, நீந்தி காலையோ தலையையோ அல்லது ஐயரின் பின்புறத்தையோ பார்த்துச் செல்ல தர்ம தரிசன வரிசை என்பதெல்லாம் கேரளாவில் இல்லை. தெய்வத்தின் முன் அனைவரும் சமமே. இங்கு பிரபலம் என்றால் மட்டுமே சாமிக்கு கை கொடுக்கலாம். அத்தியின் தரிசனத்தில் காணவில்லையா... ஏற்றத்தாழ்வுகளை.
படியேறியதும் கண் முன்னே காட்சி தந்த ஐயப்பனின் அந்த அழகிய குட்டிச் சிலை மனசுக்குள் வந்து அமர்ந்து கொள்ள, பள்ளிக் கட்டு சபரிமலைக்கு என்னும் பாடலும் முருகனின் பாடல்களுடன் எனக்குள் வந்து அமர்ந்து கொண்டது. அதேபோல் மலையில் நடை திறக்க, நடை அடைக்க மட்டுமின்றி பெரும்பாலும் அதிகமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் யேசுதாஸ் அவர்களின் ஹரிவராசனம் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இல்லையா அது.
'சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா'
இந்த வரிகளை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டுக்கேட்டு ஐயப்பனைத் தரிசித்த நாம் ஒரு மழலையின் குரலில் கேட்போமே...
ஐயப்பனில் இருந்து மீண்டும் முருகனுக்குப் போவோம்...
'வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா - தேவ குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாகனா முருகா முருகா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ
சுப்ரமணிய தேவா
ஷண்முக சரவணா முருகா முருகா'
வேலவா... வேலவா.... வேல் முருகா வா... வா.. என்ற இந்த முருகனின் பாடலை சிறுமிகள் மிக அழகாகப் பாடியிருப்பார்கள். எனக்கு இந்தப் பாடலும் வீடியோவும் ரொம்பப் பிடிக்கும்... அதையும் கேட்கலாம்.
குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல் ரொம்பப் பிடிக்கும்... பெரும்பாலும் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடும் போது கொலையாய்க் கொன்னு எடுத்துருவாங்க... ஒன்னு ராகம் ஒட்டாது... இல்லைன்னா இசை ஒட்டாது... நான் எல்லாரையும் சொல்லவில்லை.... எங்காவது ஒரு சிலர் மிகச் சிறப்பாய் பாடுவார்கள்... பாடியிருப்பார்கள்.
அப்படித்தான் இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்துத் திருவிழாவில் தஞ்சை சின்னப்பொண்ணு கச்சேரி... ஆமா சின்னப்பொண்ணு நாட்டுப்புறப்பாட்டுல்லன்னு தோணலாம்... எந்தக் கச்சேரி என்றாலும் ஆரம்பத்தில் சாமிப்பாடல்கள்தான்... அந்தக் கச்சேரியில் ஒரு இளம்பெண் தான் பாடிய பாடல்களை எல்லாம் சிறப்பாகவே பாடினார். இந்தப் பாடலைப் பாடுபவர் வராததால் நான் முதன் முதலில் பாடுகிறேன் என்று சொல்லித்தான் பாடினார்... அவ்வளவு அருமையாகப் பாடியிருப்பார். என்னிடம் அந்த வீடியோ ரொம்ப நாள் இருந்தது. அடிக்கடி கேட்கும் பாடலாகவும் அது இருந்தது. தேடினால் கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிர்கிறேன்.
அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...
'கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா'
இப்ப நாம சித்ரா அவர்கள் பாடிய மறை மூர்த்திக் கண்ணனைக் கேட்போம்.
அப்படியே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களையும் கேட்டுவிடலாம்... ரசித்துக் கேட்டு கண்ணனை நினைத்து உருக வைக்கும் பாட்டு இது... சில வரிகள் இங்கே...
'குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்'
சரி அப்படியே வைக்கம் விஜயலட்சுமி பாடிய 'பொம்ம பொம்மைதா' பாடலையும் கேளுங்கள்... இந்தப் பாடலைப் பெங்களூர் ரமணியம்மாள் பாடிக் கேட்டிருக்கிறோம்... மறக்கக் கூடிய குரலா அந்தக் கணீர்க்குரல்... அதே பாடலை விஜயலெட்சுமி எப்படிப் பாடியிருக்கிறார் என்று கேளுங்கள் / பாருங்கள்... நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
விஜயலெட்சுமி பாடிய, பழனிபாரதியின் வரிகளான 'காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன..' கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தபாடல் அது. திரையிசைப் பாடல்கள் பகிர்வில் அது குறித்து விரிவாய்ப் பார்க்கலாம்.
இப்ப பொம்ம பொம்மைதாவைக் கேட்போம்.
எந்தச் செயலையுமே கணபதியைத் தொடங்கி ஆரம்பிக்கணும்... அப்படித்தான் அரம்பித்து கணபதியிலேயே முடிந்திருக்கிறது சாமிப் பாடல்கள் குறித்த பகிர்வுகள்.
இத்துடன் சாமிப் பாடல்கள் குறித்தான பகிர்வு முடிந்தது. அடுத்த பதிவு முதல் பிடித்த திரையிசை, நாட்டுப்புறப் பாடல்கள் குறித்துப் பார்ப்போம்.
பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
மிகவும் ரசித்தேன்... ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை... அருமை அருமை...
ரொம்ப நன்றி அண்ணா...
வேலவா வேலவா வேல் முருகா பாட்டு முன்பு கேட்டு இருக்கிறேன், குழந்தைகள் மிக நன்றாக பாடுகிறார்கள் மீண்டும் கேட்டு மகிழ்ந்தேன்.
எல்லா பாடல்களையும் கேட்டேன்.
நன்றி.
ரொம்ப நன்றிம்மா... எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.
வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. இன்று தாங்கள் பகிர்ந்துள்ள எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்த பாடல்கள். இறையுணர்வுடன் அருமையான பாடல்களை தொகுத்து பதிவிட்டிருக்கிறீர்கள். பதிவும் படித்தேன். அருமையாக எழுதியுள்ளீர்கள். நானும் தொடர்கிறேன். இதன் முந்தைய பதிவுகளையும் படித்து விட்டேன். பாடல்களையும் கேட்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கும் சின்ன வயதிலிருந்தே முருகன்தான். எதையாவது தொலைத்துவிட்டு தேடுவது என் வழக்கம். பொறுக்கமுடியாத ஒரு கட்டத்தில் "முருகா... எங்கப்பா அது?" என்று கேட்டால் உடனே கிடைக்கும்! முதலிலேயே முருகனைக் கூப்பிடும் வழக்கம் இல்லை. பத்து வயது முதல் இன்றும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் சொல்கிறேன்!
முருகன் பாடல்கள் என்றால் நிறைய பாடல்களை சொல்லலாம். சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள்.. டி எம் எஸ் பாடல்கள்... எஸ் பி பி பாடல்களில் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன் "நல்ல தமிழ்ச் சொல்லாலே... வள்ளலே உனைப்பாட வல்லமை எல்லாம் தருவாய் வடிவேலா..." இரண்டாவது "திருத்தணிகை வாழும் முருகா... உனைக்கண காண வருவேன்..."
அன்றைய காலை பொழுதுகள் டி எம் எஸ், சீர்காழி, சூலமங்கலம், பெங்களூர் ரமணி அம்மாள் பாடல்கள் இல்லாமல் விடியாது..
மிக அருமையான பாடல்கள் ...
ஐயப்பன் பாடல் யேசுதாஸ் பாடி கேக்கும் போது ஒரு பரவசம் தானே வரும் ..
இந்த பொம்ம தா பாடல் சமீபத்தில் தான் கேட்டேன் பிடித்து இருந்தது ...
கிருஷ்னர் பாடலும் முருகன் பாடலும் தினம் தினம் மாறி மாறி எங்கள் வீட்டில் ஒலிக்கும் ...
அத்தனை பாடல்களும் அருமை குமார்.
ஹரிவராசனம் இப்போதும் கேரளத்தில் எங்கும் ஒலிக்கும் பாடல். அதுவும் ஐயப்பன் சீசன் என்றால்.
துளசிதரன், கீதா
மனதிற்கு சுகம் தரும் இனிய பாடல்கள். மேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட விதம் அருமை.
கருத்துரையிடுக