102ம் நாள் காலை 'ஆலுமா டோலுமா' பாடலுடன் விடிந்தது. இன்னைக்கும் வெளியில இருந்து ஒரு குழு வந்து வீட்டுக்குள்ள வந்து ஆடுனானுங்க... நாளைக்கு கக்கூஸ்ல போயி ஆடுவானுங்க போல... எல்லாரும் வந்து அவங்க கூட ஆட, வனிதா மட்டும் அடப்போங்கடா... நீங்களும் உங்க டான்ஸூம் அப்படின்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குச்சு.
கக்கூஸ்ல 'நீயெல்லாம் இறுதிப் போட்டியில் இருப்பதை ஜீரணிக்க முடியலை' என ஷெரினை வம்பிழுத்துக் கொண்டிருந்தார் சேரன். சாக்சியும் சேர்ந்து கொண்டார். உன்னை நாமினேசன் எல்லாம் பண்ணினேன் எனச் சேரன் சொல்ல, உன்னை இல்லை என்னைத்தான் நாமினேசன் பண்ணியிருக்கார்... அதுவும் காரணம் சரியானதுதான்னு சாக்சி சொல்ல, வெளியில வந்து பாரு தெரியும்... நான் நீ இறுதிப் போட்டிக்குப் போகணும்ன்னு சொல்லியிருக்கேன் தெரியுமா..? எனச் சேரன் கேட்டதும் தாங்க்யூ சேரன் சார் அப்படின்னு கன்னத்தோட கன்னம் வைத்து முத்தம் கொடுத்தார்.
அடுத்து ஒரு டாஸ்க்... நடந்த நிகழ்வு ஒளியில்லாமல் ஒலியாய் மட்டுமே பகிரப்பட, அது எந்த இடத்தில் நிகழ்ந்தது யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைப் பேப்பரில் எழுதி, அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதில் ஷெரின் 5 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்து என்ன செய்யணும் என்ற கேள்வி எழுந்த போது சாண்டி காத்திருங்கள் குருநாதர் கலாய்ப்பார்ன்னு சொன்னதும் வனிதா போய் வேலையைப் பாருங்க என்றார். உடனே பிக்பாஸ் எல்லாரும் வனிதா சொல்வதைக் கேளுங்கன்னு சொன்னதும் அம்புட்டுப் பேரும் கெக்கப் பிக்கன்னு சிரிச்சானுங்க.
அடுத்து ஒரு பஸ்ஸர் அடிக்கும் அப்ப யார் வந்தாலும் கண்டுக்காதீங்கன்னு சொல்லி. அடுத்த பஸ்ஸர் அடிக்கும் வரை அப்படித்தான் இருக்கணும்ன்னு சொல்லிட்டார். சாண்டியும் முகனும் சிகப்புக் கதவுக்கிட்ட இருக்க, அபிராமி அங்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தார். திடீர்ன்னு இசையும் அதன் பின்னே பாலாஜி, ம.கா.ப., ரக்சன், ரியோ, பிரியங்கான்னு தன்னுடைய தொகுப்பாளர்களை தொகுத்து அனுப்பினானுங்க.
உள்ள நுழைந்ததும் எல்லாருடைய டார்க்கெட்டும் சாண்டிதான்... தூக்கி, அடிச்சின்னு ஆட்டம் போட்டானுங்க... வந்தது முதல் ஓட்டைப் பானைக்குள்ள நண்டை விட்ட மாதிரி ஒரே சப்தம்... யாரு என்ன பேசினாங்கன்னு எல்லாம் தெரியாது... எல்லாரும் பேசினாங்க... எல்லாரும் சிரிச்சாங்க... கக்கூஸ்ல வச்சி லாஸ்லியாவைக் கலாச்சாங்க... சாண்டியை மித்திச்சாங்க... ஷெரினுக்கு கை கழுவி விட்டாங்க... ஒரே ஆட்டமாப் போட்டானுங்க... ஆனா அவங்க தொகுக்குற நிகழ்ச்சி மாதிரியே எதுவும் புரியலை.
பிக்பாஸ் முடிஞ்சதும் அடுத்து சனி, ஞாயிறுகளில் பிரியங்காவும் மா.க.பவும் தொகுக்கும் இந்தியாவில் முதல்முறையாக, ஆசியாவிலேயே மிகப்பெரிய கேம் நிகழ்ச்சியான 'தி வால்' அபடிங்கிற நிகழ்ச்சியோட புரோமோ போட்டானுங்க... கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லிட்டா ஏதோ பாலைத் தூக்கிப் போடணுமாம். சரியான பச்சைபால் விழுந்தா விழுறதுல என்ன தொகையோ அது கிடைக்குமாம்... சிவப்புன்னா அதுவரை ஜெயித்ததுல இருந்து குறையுமாம்... மொத்தம் 2.5 கோடியாம்... விபரமாச் சொன்னானுங்க.
சாக்சிக்கு எதுவும் புரியலை... சேரன் விபரமாய்க் கேட்டார்... அவங்கள்லாம் திரும்பத் திரும்பக் கேட்டதைப் பார்த்தால் 2.5 கோடிக்கான போட்டியில் கலந்துக்குவாங்க போல... அந்தப் பந்து ஜப்பான்ல இருந்து வருதுன்னு சொன்னானுங்க.
அடுத்து பிக்பாஸ் வீட்டுக்கு வந்தால் நல்ல ஒரு போட்டியாளராக இருப்பது எப்படின்னு நால்வரும் சொல்ல வேண்டும்ன்னு சொன்னானுங்க... சாண்டி எதோ ஆரம்பித்து எங்கயோ போயி ஒண்ணும் புரியலையில்ல... அப்படி இருந்தாப் போதும்ன்னு சொன்னார்... முகன், லாஸ்லியாவெல்லாம் ஏதோ பேசினாங்க. ஷெரின் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மா.க.ப குழு கை தட்டினார்கள். அது பொறுக்காத வனிதா, நான் கமல் சார்க்கிட்ட பேசும் போது மக்கள் கைதட்டினது என் மேல இருக்க அன்பினாலதானான்னு சொல்லிச் சிரிச்சாங்க... அது அன்பினால் இல்லை நீ பண்ணுற வம்பினால் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டானுங்க.
அப்புறம் அந்தக் குருப்பை எல்லாம் வாங்கன்னு சொன்ன பிக்பாஸ், எனக்குச் செலவு வைக்காமல் நான் அகற்ற வேண்டிய சோபாவை செலவில்லாமல் உடைச்சதுக்கு நன்றி பிரியங்கான்னு சொன்னாரு பாருங்க... மறுபடியும் எல்லாரும் கெக்கப்பிக்கே... வனிதா உக்கார்ந்தே உடையாத சோபா நான் உக்கார்ந்ததும் உடைஞ்சிருச்சே... யாரோ சூனியம் வச்சிட்டாங்க... எவ்வளவு தொகையோ அதை நான் தந்திடுறேன் அப்படின்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க.
அப்புறம் போட்டியாளர் நால்வருக்கும் நிறைய பரிசுப் பொருட்கள் வந்தன... மற்றவர்கள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்க, இவங்க நால்வரும் தாங்க்யூ பிக்கின்னு சொல்லிட்டு அந்தந்த கம்பெனிக்காரனுக்கும் தாங்க்யூ சொன்னாங்க.
அப்புறம் எம் பிரண்டைப் போல யாரு மச்சான்னு சொல்லிட்டு ஒரு வீடியோ போட்டாங்க... அந்தச் சூட்டோட சூடா, எல்லாரையும் செயல்முறைப் பகுதிக்கு வரச் சொல்லி, நட்புப் போட்டோக்களைக் கண்காட்சியாக்கி, பார்த்துட்டுப் பேசுங்கடான்னு சொல்ல, எல்லாரும் பேசினாங்க... அபிராமி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அழுதார்... வனிதாவும் லாஸ்லியாவும் போய் அணைத்துக் கொண்டார்கள்.
ஷெரின் என்னோட நட்புன்னா அது வனிதான்னு சொன்னதுதான் நேற்றைய நிகழ்வின் தொகுப்பில் மிகச் சிறப்பானது. ஏன் ஷெரின் இப்படிப் பேசினார்ன்னு யோசிக்க வேண்டியதில்லை... இருக்கும் நாலு நாள்ல இவ ஏழரையைக் கூட்டிப் பேரைக் கெடுத்து வச்சிருவாளே... அதுக்கு இவ நல்லவள்ன்னு சொல்லிட்டா தப்பிச்சிக்கலாம்லன்னு யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க.
அப்புறம் சேரன், சாக்சி, ஷெரின் பேசிக்கிட்டு இருக்காங்க... லைட்டை அமத்திட்டு நிகழ்ச்சியையும் முடிச்சிட்டாங்க.
ஒண்ணுமே இல்லாத ஒரு நிகழ்ச்சியை இப்படிப் பக்கம் பக்கமா எழுதுற மாதிரி ஆயிருச்சே... இறுதி நாட்கள் ரொம்பவும் பாடாய்ப் படுத்தும் போலவே.
பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக