பெரும்பாலான பெண் குழந்தைகள் எப்போதும் அப்பா செல்லமாகத்தான் இருப்பார்கள்... இருக்கிறார்கள். தானாகவே தோன்றும் எதிர்பாலின அன்பா அல்லது அப்பாக்களின் மீதான தனித்த நேசமா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தத் தேவையில்லாத அன்பு அது... அந்த அன்பிற்கு உலகில் எதுவும் ஈடாகாது. எதையும் எதிர்பார்த்து கொடுக்கப்படும் அன்பல்ல அது... எதையும் எதிர்பார்க்காமல் நேசத்தை மட்டுமே யாசிக்கும் அன்பு அது.
எத்தனை வயதானாலும் அப்பாவின் அன்புக்கு ஏங்கும் குழந்தையாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள்... அப்பாக்களும் அப்படியேதான். அம்மாக்களிடம் அதீத ஒட்டுதல் இல்லாது போகக் காரணியாய் அமைவது பெரும்பாலும் உடன் பிறந்தவன் அம்மாவின் நேசத்தை அப்படியே லவட்டிக் கொள்வதால்தான்... ஆண் குழந்தைகள் என்னதான் அப்பா மீது பாசமாக இருந்தாலும் அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகம் தொடர்வதில்லை... அப்படியே தொடர்வதென்பது அரிது.
எங்கள் வீட்டில் இருவருமே அப்பா மீது அதீத பாசம் கொண்டவர்கள்தான் என்றாலும் விஷாலை விட ஸ்ருதியே வெறித்தனமான பாசத்தை மனசுக்குள் வைத்திருக்கும். எத்தனை திட்டினாலும் அடுத்த நொடியே மறந்து விடுபவர்கள்தான் இருவரும் என்றாலும் ஸ்ருதியின் பாசம் எப்போதுமே விஷாலை முந்திக் கொள்ளும். விஷால் மிகவும் நெருக்கமாய் இருக்கும் சமயத்திலெல்லாம் எப்பவும் அவன் கூடத்தான்.... எங்களை எல்லாம் கண்ணுல தெரியாது உங்களுக்கு என்ற கோபம் ஸ்ருதிக்குள் எட்டிப் பார்க்கத் தவறுவதில்லை.
விஷாலைப் பொறுத்தவரை வீட்டில் விகடகவி அவன்... அலுவலகம், கவலை, கஷ்டம் என எல்லாம் மறந்து சிரிப்பதென்பது இரவு ஊருக்குப் பேசும் அந்த ஒரு மணி நேர வீடியோ அழைப்பில்தான்... நல்ல மூடில் இருந்தான் என்றால் அவன் நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். அதனாலேயே ஸ்ருதியை விட அவன் மீது அதீத நேசம் இருப்பது உண்மைதான். தற்போதெல்லாம் அம்மாவும் மகனுமான வாழ்க்கையில் பெரும்பாலும் அம்மாவுக்கான பேச்சுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறான். அப்பாவை விட அம்மாதான் பெரிதென்பதாய் பேசுபவனை எங்கே சிரிக்காமல் பேசு என்றால் சிரித்து விடுவான்.
நாம் பேச வந்தது தங்க மீன்களைப் பற்றி என்பதால் விஷாலை விடுத்து ஸ்ருதியோடு பயணிக்கலாம்.
பதினொன்றாம் வகுப்புக்கு மதுரையில் ஹாஸ்டலில் விட்டு வந்தபின் எழுந்த வேதனைகள் சொல்லி முடிவதில்லை. என்னை விட மகளையும் மகனையும் அருகில் வைத்து பார்த்துப் பார்த்து வளர்த்த மனைவிதான் அழுது கொண்டே இருந்தார். வீட்டுக்குள்ளயே வளர்ந்த பிள்ளை... தனியிடத்தில் அதனுடைய தேவைகளை அதுவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய சூழலில் என்பதையெல்லாம் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
செல்லமாய் வளர்ந்தாலும் அடுத்த வருசம் ஹாஸ்டல்லதான் விடணும்... வீட்டுல வச்செல்லாம் என்னால பார்க்க முடியாது என்று சொன்னவர் எம்மகளைப் பார்க்காமல் இருக்க முடியலைன்னு அழுது என்னிடம் திட்டெல்லாம் வாங்கினார். விஷால் கூட வீட்டுக்குள் தனிமையை உணர்ந்தான். யாருமற்ற வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது போல் எண்ண ஆரம்பித்தான். சண்டைக்கோ சமாதானத்துக்கோ ஆளில்லை... எதுவென்றாலும் அம்மா மட்டுமே என்ற நிலையில் ஸ்ருதி மீதான நேசம் அவனுக்குள்ளும்... தனியே ஒரு அறையில் நான்கு வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் தங்கியிருப்பதால் தம்பி மீதான் கோபமெல்லம் போய் மெல்ல நேசக்கரம் நீட்டும் பாசம் ஸ்ருதிக்குள்ளும் துளிர் விட ஆரம்பித்து இரண்டு மாதத்தில் அதீதமாய் வளர்ந்தும் விட்டிருக்கிறது. கறை நல்லதென்பதைப் போல பிரிவு நல்லதெனக் காட்டியது... எலியும் பூனையுமான அவர்களின் ஒட்டுதல் பாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை நான் பேசலாம் என்று சொல்லியிருப்பதால் விடுமுறை தினம் என்பதால் மதிய உணவுக்குப் பின் எல்லாரும் தூங்கினாலும் நான் மட்டும் விழித்திருப்பேன்... எங்கே தூங்கினால் மகளுடன் பேச முடியாமல் போய்விடுமோ என்பதாலும் பெரும்பாலும் மதிய தூக்கத்தை விரும்பமாட்டேன் என்பதாலும்... என் குரல் கேட்பதற்காகவே என் மகள் அங்கே காத்திருப்பார் என்பதும் கூட இமை மூட மறுக்கும் காரணியாய்.
வார்டனின் நம்பரில்தான் அழைக்க வேண்டும் என்பதால் அழைத்ததும் அவர் ஸ்ருதியை அழைப்பார். பால் பீய்ச்சும் போது கன்றை அவிழ்த்து விட்டதும் ஓடிப்போய் அன்னையின் மடியில் காம்பைத் தேடி வாய் வைக்கும் கன்றை 'அப்ப்ப்பா' என்றழைப்பதில் காண்பேன்... தங்க மீனாய்... கண்ணான கண்ணாய்... அந்தப் பாசம் உயர்ந்து நிற்கும்.
மகிழ்வாய்ப் பேசிக்கொண்டிருக்கும் போதே போனைக் கட் பண்ணிருவானே என்ற நினைப்பு மனதில் தோன்ற ஆரம்பித்ததும் அழுகையுடன் பேச ஆரம்பிப்பார்... பின்னர் மெல்லத் தேற்றி, ஒரு வழியாக அந்த வாரப் பேச்சை முடித்துக் கொள்வேன். பின்னர் சில வாரங்களில் அம்மாவுடன் பேசும் புதன் இரவில் நானும் கலந்து கொள்வதுண்டு.
ஞாயிறன்று பெற்றோர் பார்க்க அனுமதித்திருந்ததால் வீடியோ காலில் மகளைப் பார்த்துப் பேசலாம் என்பதாலும் வெள்ளி சில காரணங்களால் கூப்பிட இயலாதென்றும் மனைவியிடம் சொல்லியிருந்தேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டார்.
இரவு எட்டு மணியைப் போல் வார்டன் வீட்டுக்குப் போன் பண்ணி 'ஸ்ருதி அப்பா ஏன் பேசலை...? அவரைப் பேசச் சொல்லுங்க... ஸ்டெடிக்குப் போச்சொன்னா ப்ளீஸ் மிஸ் அப்பா இப்பப் பேசிடுவாங்க... பேசுன உடனே போறேன்னு சொல்றா... பார்க்கப் பாவமா இருக்கு... அப்பா மேல இம்புட்டுப் பாசம் வச்சிருக்கா' அப்படின்னு சொல்ல, 'இல்லை அவரு ஏதோ வெளியில இருக்காராம்... பேச முடியலைன்னு சொன்னார்.... ஞாயிற்றுக்கிழமை பேசச் சொல்றேன்'னு சொல்லியிருக்காங்க. 'ஞாயிற்றுக்கிழமையா..? நாளைக்காச்சும் பேசச் சொல்லுங்களேன்... அவ ரொம்ப ஏங்கிப் போயிருவா போல'ன்னு சொன்னதும் சரி சொல்றேன்னு சொல்லியிருக்காங்க.
அவங்க பேசிட்டு வச்சதும் எனக்கு என்னவோ மகள்கிட்ட பேசணும்ன்னு தோண, அவங்க சித்தப்பா (சித்தியின் கணவர்) போனில் இருந்து அழைத்தேன்... அப்பவே வார்டன் நல்லவேளை பேசுனீங்க.... காத்துக்கிட்டே இருந்துட்டு இப்பத்தான் ஸ்டெடிக்குப் போனான்னு சொன்னாங்க... எனக்கு சூழலின் தீவிரமெல்லாம் தெரியாது... வார்டன் மனைவியிடம் சொன்னது தெரியாது... அப்பா பேசுவாங்கன்னு காத்திருந்தது தெரியாது... ஆனா பேசாம இருக்க வேண்டாம் ரெண்டு வார்த்தையாவது பேசலாம்ன்னு மட்டும் தோணியதாலேயே பேசினேன்.
எப்பவும் போல் மகிழ்வாய்ப் பேசினார்... நீண்ட நேரம் பேசினார்... இடையில் சித்தப்பாவுடனும் பேசினார்... பேசி முடிக்கப் போகும் தருவாயில் வெடித்து அழுதார்... ஏய் என்னடா ஆச்சி.... அதான் அப்பா பேசினேனுல்ல... ஞாயிற்றுக்கிழமை வீடியோ கால் பண்ணுறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லி... முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி முடித்துக் கொண்டேன். அதன் பின் என் வேலைகள் முடித்து மனைவிக்குப் போன் பண்ணியபோது பாப்பாக்கிட்ட பேசிட்டேன்னு சொன்ன போது எப்பப் பேசினீங்க... பேசலைன்னு சொன்னீங்க... வார்டன் போன் பண்ணினப்போ அவரு வெளியில இருக்கார் பேச மாட்டாருன்னு சொன்னேன்னு சொன்னாங்க.
வார்டன் பேசுனாங்களா... எதுக்குன்னு கேட்டதும் மேலே சொன்ன காத்திருந்த கதையைச் சொன்னார்... வார்டன் சொன்னதும் எனக்கு அழுகை வந்திருச்சு என்றார்... நானும் அழுதிட்டேன்... என் போனுக்காக... குரலுக்காக காத்திருக்கும் குழந்தையின் மனசு தெரியாமல் நாளை பேசிக் கொள்ளலாம் என்று இருந்தது எவ்வளவு பெரிய தவறென்பதை உணர்ந்தேன். பெண் குழந்தைகள் அப்பாவின் அன்புக்காக ஏங்குபவர்கள்தான் என்பதை என் மகள் எனக்குக் காட்டினார்.
இன்று காலை மகளை பார்க்கப் போன மனைவியிடம் பேசி மகளுடம் பேசும் போது அப்பா ஊருக்கு வரவாடா என்றதும் வாங்க இங்க வந்து ஜென்ஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கங்க.... நான் தினமும் உங்களைப் பார்த்துப்பேன் என்றார் கண்ணீருடன்.. விஷாலுக்கு அப்பா வரணும் என்ற எண்ணம் மனசுக்குள் இருந்தாலும் அங்கயே இருங்க என்று சத்தமாய்ச் சொல்வான் அம்மா பிள்ளை என்பதை நிரூபிக்கும் பொருட்டு. மகளோ வா என்கிறார் அப்பா பெண்ணாய்...
தங்க மீன்களுக்கு எப்பவும் அப்பாதான் நாயகன்... அப்பாதான் உலகம்... அப்பாதான் கடவுள்...
அப்பாக்களுக்கு அவர்கள் ஆத்தாக்கள்.
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
மனது நெகிழ்ந்து விட்டது குமார். தினம் தினம் பேசி விடுவது எனக்கும் வழக்கம்.
//தங்க மீன்களுக்கு எப்பவும் அப்பாதான் நாயகன்... அப்பாதான் உலகம்... அப்பாதான் கடவுள்// உண்மையான வார்த்தைகள்.
அழ வைத்து விட்டீர்கள்... ஆனந்தக்கண்ணீர்...
நெகிழ வைத்து விட்டீர்கள் குமார். கண்கள் கலங்கி விட்டன. எதிர்பார்த்து ஏமாறும் நேரம் நீங்கள் பேசிவிட்டது நல்ல விஷயம்.
குமார் மனம் நெகிழ்ந்து கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர். நல்ல காலம் குழந்தை எதிர்பார்த்திருக்க நீங்கள் பேசிவிட்டீர்களே! அதுவும் அன்று பேசவில்லை மறுநாள் என்று நினைத்திருந்த உங்களுக்குத் தோன்றியிருக்கிறது பாருங்கள்! அங்கு உங்கள் ஸ்ருதியின் அன்பும், ஏக்கமும் எதிர்பார்ப்பும் அந்த அலைவரிசை ஸ்ருதியாய் உங்களை உங்களுக்கு அறியாமலேயே வந்தடைந்த்ருக்கிறது அதுதான் அன்பு! பாசம்! டெலிபதி என்று சொல்லலாமா?!
பெண் குழந்தைகள் அப்பா என்றதும் நம் பதிவர்கள் பலரும் நினைவுக்கு வந்துவிட்டார்கள். அதுவும் இரு பெண் குழந்தைகள், ஒரே பெண் குழந்தை உள்ளவர்கள் என்று அனைவரும் கண் முன் வந்தார்கள்.
கீதா
கருத்துரையிடுக