சனிக்கிழமை - ஆண்டவர் வரும் முன்னே அபிராமியின் ஓலத்தைக் காட்டினார்கள்... நான் என்ன செஞ்சேன்... வெளியில போகப்போறேன்னு புலம்பல்... சிலரின் ஆறுதல் வார்த்தைகளால் தேறுதல் பெற்றார். இதை நேற்றைய முன்னோட்டமாக விஜய் டிவி வெளியிட்ட போது மோகன் வெளியேறுவதற்காக அபிராமி 'அப்பா போறாரே'ன்னு அழுதுன்னு இணைய விமர்சகர்களும் இதை வைத்துப் பொழப்பை நகர்த்தும் யூடியூப் சேனல்களும் பொங்கல் வைத்தார்கள். எப்பா சாமிகளா எல்லாத்துலயும் உங்க முன் முடிவைக் காட்டாதீங்கப்பா... என்ன ஏதுன்னு கொஞ்சம் யோசிச்சி எழுதுங்க... பேசுங்க...
அப்புறம் சாப்பிடும் போது நம்ம தமிழச்சி மது தர்ஷனை அண்ணன்னு சொல்ல, கவின் அவன் எப்படி உங்களுக்கு அண்ணனாவான்... உங்க வயசென்ன என்றதும் ஒரு ஆறு மாசம்தான் எனக்கும் அவனுக்கும் வித்தியாசம்... என்ன இப்ப அவனைவிட வயசான ஷெரினை லவ் பண்ணலாம்... நான் அண்ணன்னு கூப்பிடக்கூடாதா... பேசவா... பேசவா... அப்படின்னு ஏதோ தேரை இழுத்துத் தெருவுல விடப் பார்த்துச்சு... அம்மாடி வண்டி நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு நீ எதுக்கு இப்ப தேவையில்லாம கியரை மாத்துறேன்னு கவின் பார்க்க, ஷட்டரை சாப்பாட்டுக்கு மட்டும் திறந்துக்க தாயின்னு தர்ஷனும் சொல்லிட்டான்.
கோட்டுப் போட்டு வந்தார் ஆண்டவர்... நடையில் ஒரு துள்ளல்... அதாம்ய்யா கமல்...
'அறிவுஜீவி' கமல் இந்த நிகழ்ச்சியை நடத்தலாமான்னு ரொம்பப் பேர் கேட்கிறாங்க... இதை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்... உங்களுடன் பேச எனக்குக் கிடைத்த இந்த மேடையை நான் விட்டுட்டு போகமாட்டேன்... நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.... நான் அறிவுஜீவி எல்லாம் இல்லை... அப்படின்னு என்னென்னமோ பேசினார்.... பார்வையாளர்கள் முகத்தில் ஈயாடவில்லை... சாமி... முடிச்சிக்கங்க... போதும்ன்னு சொல்வது போல் இருந்தது. சரி போட்ட பிளேடு போதும்ன்னு அவரே முடிவு பண்ணி அகம் டிவி வழியே அகத்துக்குள்ள பொயிட்டார்.
வாரம் ஒரு பிக்பாஸ் ரசிகர் பேசியதில் இன்று இருவர்... மீராவிடம் 'நீங்க வேலை பார்க்காமல் பார்க்கச் சொல்பவர்களிடம் சண்டை போடுறீங்களே ஏம்மா... எப்பவுமே அப்படித்தானா இல்ல இங்கதான் அப்படியா'ன்னு கேட்க, 'அப்படியில்லை நான் பார்க்க வேண்டியதைப் பார்த்துட்டுத்தான் இருக்கேன்... இவங்க கூடுதலா வேலை கொடுக்கும் போது என் உரிமை.. என் கடமையின்னு சண்டை போடுவேன்'னு சொன்னதும் கண்டிப்பா அந்தக் கேள்விகேட்ட பொண்ணு 'அடி மூதேவி... நீ வேலையே பாக்கலைங்கிறதைத்தான் நாங்க பாக்குறோமே... அதைக் கேட்டா உரிமை... எருமை'ன்னு அப்படின்னு கேட்டிருக்கலாம்... ஒரு கேள்விதான் என கட் பண்ணி விட்டார்கள்.
அடுத்த கேள்வி ரேஷ்மாவுக்கு... 'நீங்க செந்தில் மாதிரி கவுண்டமணிகளோடவே இருக்கீங்களே... எப்ப வடிவேலா மாறி சோலோ பெர்ப்பார்மன்ஸ் பண்ணப் போறீங்க...?' அப்படின்னு ஒருவர் கேட்க, 'வடிவேலு மாதிரி என்ன... செந்தாமரை மாதிரிக்கூட என்னால் பண்ண முடியும்... இருந்தாலும் தனியாவே வாழ்ந்துட்டேன்... தனிமையை போக்கும் இவர்களோட சேர்ந்து இருக்கதாலதான் இப்படியே இருக்கலாம்ன்னு எண்ணம்' என என்னவோ பேசிச் சமாளித்தார்.
அப்புறம் உங்களைப் பற்றி உங்க முதுகுக்குப் பின்னால பேசின சில வரிகளைச் சொல்லுவேன்... யார் சொல்லியிருப்பார் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் கமல். அதாவது இவன்/இவள் உன்னையை இப்படிப் பேசினார்கள் என போட்டுக் கொடுத்தல்... அடுத்த வார முட்டலுக்கான சிறு துரும்பு இது. முதலில் சேரன்... சேரன் செங்குட்டுவன் என சரவணன் பேசியது அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்கன்னு சேரன் அடித்துச் சொல்ல சொன்னாங்க சார் என்றவர் அடுத்த கேள்விக்குப் போனார் 'என்ன சாத்தான் வேதம் ஓதுதா?' என சாண்டி சொன்னது... அதைச் சரியாகச் சொன்னார். அடுத்து மீரா சொன்ன 'நான் பாக்குறது வேற முகம்' அதையும் சரியாச் சொன்னார். அதேபோல் மீராவுக்கு சொன்ன போது அவர் சேரனையும் மதுவையும் சொன்னார்... கமல் அது தவறென்றார். ரேஷ்மாவை நான் நியூட்ரல் என்று சொல்லுறா ஆனா அவ இங்கிட்டும் அங்கிட்டும் போட்டுக் கொடுக்கிறான்னு மது சொன்னதை, கமல் சொன்னதும் ரேஷ்மாவோ கவின் என்றார். நான் இல்லை மச்சான்... நீ நியூட்ரல்ங்கிறதே இன்னைக்குத்தான் மச்சான் தெரியும்ன்னு போட்டானே பார்க்கலாம்... ரேஷ்மா கிளீன் போல்ட்.
இப்படி போட்டுக் கொடுக்கும் வேலையை ஆண்டவரே பார்த்தாலும் சொன்னது நண்பனா இருக்கும் காரணத்தால் பலர் தெரியாதது போலவே முழிக்க, நான்தான் சொன்னேன் என மது போன்ற சில முந்திரிக் கொட்டைகள் முந்திக் கொண்டு பதிலளித்து மாட்டிக் கொண்டன. இந்த மாதிரி வேலையெல்லாம் எதுக்கு ஆண்டவரேன்னுதான் தோணுச்சு. அதுக்கு அப்புறமும் மோகன் கிளம்பினா என்ன பாட்டுப் பாடலாம்ன்னு டியூனெல்லாம் போட்டு வச்சிருக்கும் சாண்டியையும் கவினையும் மாட்டி விடத் தவறவில்லை. மோகனுக்கு முகமெல்லாம் கோபம் முட்டிக்கிட்டு நின்னுச்சு.
அப்புறம் இப்ப வழியனுப்பு விழான்னு சொல்லிட்டு மீராக்கிட்ட 'ஏம்மா நீ எப்பவுமே பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்கே'ன்னு கேக்கும் போதே காதுல ரத்தம் வர்ற அளவுக்குப் பேசுவாளேன்னு கமல் நினைச்சதை முகம் காட்டுச்சு... உடனே மீராவும் 'இங்க தொலைநோக்குப் பார்வையில்லை... தொல்லை நோக்குப் பார்வைதான் இருக்கு... எனக்கு யாரையும் உறவு வைத்துக் கூப்பிடப் பிடிப்பதில்லை... (மாச்சீ, சித்தப்பு மட்டும் பிடிக்கும் போல) அம்மா, அப்பாங்கிறது என்னைப் பெத்தவங்களுக்கு மட்டும்தான் அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது' அப்படின்னு கீதையெல்லாம் சொல்லி ஆத்து ஆத்துன்னு ஆத்த, ஆத்தினது போதும்ன்னு ஆண்டவர் அவசரமாக் களம் இறங்கிட்டார். அதைப் பார்த்த நமக்கே கொஞ்சம் தண்ணி தேவைப்பட்டுச்சு.
சரி இப்ப உங்களில் ஒருவர் காப்பாற்றப்படுவார்... அதுவும் என்னைப் போல் ஒருவர் அங்கு வந்து காப்பாற்றுவார் என்றதும் 'ரப்பப்பா... ரப்பப்பரி...' பாடலின் பின்னணியில் ஒரு பபூன் வந்து கொஞ்சம் நகைச்சுவை என நாரசம் பண்ணி மீராவைக் காப்பாற்றி ஒரு ஆட்டமும் போட்டார். மீராவின் ஆட்டம் காணச் சகிக்கலை...இவர்களெல்லாம் ஆடலைன்னு எவன்யா அழுதான்... மீரா உட்காருவதற்கே சென்சார் வைக்கணும் போல... இதெல்லாம்தான் மக்களிடம் தன்னை நிலை நிறுத்தும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை ஏனோ...?
இவர்களால் காப்பாற்றப்பட்டீர்கள்... இதே தொடரும் என நினைக்க வேண்டாம்... நாளையே காட்சி மாறலாம்... என கொஞ்ச நேர இடைவெளிவிட்டு மீண்டும் வந்து நால்வரில் அடுத்ததாய்க் காப்பாற்றப்படப் போகும் நபர் யாராக இருக்கும் எனக் கேட்டு, இதயத் துடிப்பை எகிற வைத்து சரவணனை மக்கள் வெளியே வரவேண்டாம் என்கிறார்கள் என்றதும் சரவணனுக்கு சந்தோஷமெல்லாம் இல்லை... ஏதோ பாத்துப் போட்டு அனுப்பிவிடுங்க சாமியின்னு நின்னார். அப்புறம் அபிராமியும் காப்பாற்றப்பட, அப்பாக்கள் இருவர் மட்டும் ஆப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.
இடையில் கிடைத்த இடைவேளையில் மோகனின் மூர்க்கக் குணம் வெளிப்படையாக வெளியில் வந்தது... சாண்டி, கவின் கூட அப்படி ஒரு மோதல்... சித்தப்பு சித்தப்புன்னு அந்தாளுக்கிட்டத்தானே நின்னீங்க... எங்கிட்ட நைனான்னு நிக்கலையே.... நான் காமெடிப் பீசுன்னு கத்தி ஆட்டம் போட்டார். சேரன் இன்னைக்குப் போயிருவோம்ன்னு பேசாதீங்க... நீங்க போகாம இங்க இருக்கும் பட்சத்தில் அவங்களோடதான் பழகணும்... அப்ப எப்படி முடியும்ன்னு கேட்டு மனசைத் தளரவிடாதீங்கன்னு ஆறுதல் சொன்னார். சேரனின் முதிர்ச்சி... அனுபவம் வாய்ந்த பேச்சு... எல்லாமே சிறப்பாய்... அதுவும் தானா... அவரா... என்ற சூழலில் படபடப்பு நிறைந்த மனதுடன் இருந்த போதும் பக்குவமாய்ப் பேசுவது அவ்வளவு எளிதல்ல... ஆனாலும் கவின், சாண்டி, சரவணன், மீராவைப் போல இணைய எழுத்தாணிகளுக்கும் சேரன் கசப்பாய் இருப்பது ஏனோ?... புரியாத புதிர்.
'அப்பாக்களில் யார்?' என கமல் ஆட்டத்தை ஆரம்பித்து சாண்டி, கவினைப் பார்த்து சரி பாடிடுங்களேன் அவரும் கேட்டுக்கட்டும் என்றதும் அவர்களும் பாட, மீரா, சரவணன் தவிர்த்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக எரிச்சல். அதை மாற்றும் விதமாக லாஸ்லியாவிடம் எந்தப்பா போகணும் என்ற கேள்விக்கு 'யார் போகணும்ன்னு சொல்ல மாட்டேன்... ஆனா எனக்கு சேரப்பா இருக்கணும்' என்றார். இறுதிச் சுற்றுக்குள் சேரன் வந்த போது வெடித்து அழும் நிலையிலேயே லாஸ்லியா இருந்தார்... ஒரு தகப்பனின் கதகதப்பை சரியாக கொடுத்தும் பெற்றும் கொண்டிருக்கிறார்கள் என்பது அதில் தெரிந்தது. சாண்டியோ மோகன் நைனாதான் வேண்டும் என்றார்.
ஒருவழியாக மோகன் வேளியேறுகிறார் என்று கமல் சொன்னதும் மோகனின் அழுகையும் ஆர்ப்பாட்டமான நடிப்பு ஆரம்பமானது. வாரம் ஒருவர் போய்த்தான் ஆகவேண்டும்... கமல் சொல்வது போல் உள்ளிருப்பவர்கள் முடிவில் யாரும் வெளியாவதில்லை... மக்கள் வாக்கு என்ற விஐய் டிவியின் முடிவால்தான் வெளியேற்றம்... மக்கள் வாக்கென்றால் மீராவும் மதுவும் போயிருக்க வேண்டுமே... இன்று நீ நாளை நான் என்ற கோட்பாடுதான்... இதில் அழுவதென்பது இயற்கை... ஆனால் சிவாஜிக்கே நடிப்புச் சொல்லிக் கொடுக்கும் அளவு என்றால்... செம நடிப்பு... நமக்குத்தான் சூடு கிர்ருன்னு ஏறுச்சு.
அதிலும் எல்லாருக்கும் கட்டிக்கொடு வேற... மீரா, கவின், சாண்டி ஒதுக்கப்பட, நாங்க என்ன பண்ணினோம் என அவர்கள் ஆதங்கத்துடன்... சேரன் பேசி, சமாதானப்படுத்தி மீண்டும் அவர்களுக்கும் கட்டிக்கொடு... ஓயாத அழுகை... ஒரு போட்டோ என சீனைப் போட்டுட்டு மேடைக்கு வரும் போது ஆடலுடன்... சரவணன் மட்டும் அடேய் ரொம்ப பீல் பண்ணாதீங்க... அந்தாளு நடிச்சிட்டுப் போறான்... அங்கிட்டுப் போயி சந்தோஷமா இருப்பான்னு சொன்னார்... அதே நிகழ்ந்தது.
அதன்பின் கொஞ்சம் பேச்சு... சாண்டிக்கு வரும் கைதட்டலுக்கு வருத்தமாய் சந்தோஷம் காட்டினார். ஒரு குறும்படம் போடப்பட்டது... எல்லாமே நல்லதாய்... முத்த மழைக்கு மட்டும் 'இச்' என்பது சற்றே சப்தமாய்... மோகன் கமலிடம் கைகாட்டிச் சிரித்தார்... அவருக்கு வெளியில் வந்ததும்தான் தெரிகிறது போல... மனைவி குறித்தான பேச்சைக் கேட்டதும் அழுதார்... கமல் ஆறுதலாய் அணைத்தார்... உள்ளிருப்பவர்களிடம் பேசி உருகினார்... முகின், தர்ஷனிடம் ஹீரோ ஆவீங்க எனக்குத் தங்கச் சங்கிலின்னு சொல்லி, சாமிக்குப் போடுங்க என பல்டி அடித்தார். என்னை ஏன் அனுப்பினார்கள் என்ற போது அதெல்லாம் வீட்ல போயி பாருங்க... தெரியும் என்றபோது கமலின் முகத்தில் 'முத்த' பிரகாசம்.
கமல் அடுத்த வாரம் பார்ப்போம் எனப் போனதும் ரேஷ்மா காலர் கேட்டதை வைத்துக் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார். சந்தடி சாக்கில் மதுவுடன் நீ சேர்ந்திருப்பதைத்தான் அப்படிக் கேட்டார்ன்னு மீரா கொழுத்திப்போட, மது கந்தர் ஷஷ்டி கவசம் படித்துக் கொண்டிருந்ததால் பேசாமல் இருக்க, சூழல் இறுக்கமாகும் தேவையில்லாத சண்டை வரும் என்பதால் ரேஷ்மா உன்னோட கா... உன்னோட கா... கா...கா... போ... அப்படின்னு காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்.
அப்புறம் மோகனுக்கு எழுதிய பாட்டு குறித்து ஓடி, அதில் மீதமிருந்ததைப் பாடி, மகிழ்வாய் நகர, சரவணன் எனக்குக் கூட பாட்டு எழுதி வச்சிருக்கானுங்க என்றதும் சேரன் எனக்கு அடுத்த வாரத்துக்கு எழுதுங்கன்னு கேட்டு வைக்க, சாண்டி 'ஞாபகம் வருதே...' பாடலை வைத்து வரிகள் அமைத்துப் பாட, கவினும் சரவணனும் மட்டுமே அதைக் கேட்கும் வாய்ப்பை நம்முடன் பெற்று ரசித்தார்கள்.
சாண்டி எம்புட்டு நாளைக்குத்தான் வடிவேலாவே இருப்பார்... அவரையும் வண்டியில ஏத்தப் போறது யாரா இருக்கக் கூடும்..?
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
மோகன் போல நம் வலைப்பதிவருக்குள் ஒருவர் (தற்போது உள்ள வலைப்பதிவர்களில்) உண்டு... கண்டுபிடிங்க... இது உங்கள் டாஸ்க்...!
கருத்துரையிடுக