ஜூலை-2019 தேன் சிட்டு மின்னிதழில் வெளியான சிறுகதை. பெரும்பாலும் அப்பத்தாக்கள் மீது பேரன் பேத்திகளுக்கு அதிகப் பற்றுதல் இருப்பதில்லை... அப்பத்தாக்களும் அப்படியே ஆயாக்களாக இருக்கவே விரும்புவார்கள். நான் அப்பத்தாக்களை மையப்படுத்தி, அவர்கள் மீதான் பேரன்பேத்திகளின் பாசத்தை கொஞ்சம் அதிகமாகவே வைத்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். அப்படியான கதைகளில் ஒன்றுதான் இது.
ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க... மகனோட பிள்ளையை நடக்கவிட்டுட்டு மகளோட பிள்ளையைத் தூக்கிட்டு வரப்புல நடந்து போனாளாம் ஒருத்தி, அப்ப வயல்ல பயிரை மாடு மேஞ்சிச்சாம்... இடுப்புல இருந்த பிள்ளை 'ஆயா உங்க வயல்ல மாடு மேயுது'ன்னு சொன்னுச்சாம். நடந்து வந்த பிள்ளையோ 'ஆத்தி... அப்பத்தா நம்ம வயல்ல மாடு மேயுது'ன்னு கத்திக்கிட்டே ஓடுச்சாம். எங்களுக்கெல்லாம் அப்பத்தாவின் அன்பு கிடைக்கலை
அப்பத்தாவைப் பற்றி என்னும் போது நினைவுகளுடந்தான் பயணிக்க வேண்டும். நினைவுகளுடன் பயணிக்கும் கதைகளா... இதெல்லாம் நான் வாசிப்பதேயில்லை என்று சொல்வோர் மத்தியில் இதை வாசிக்கவும் ஒரு சாரர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உண்மையான கருத்துக்களே எப்போதும் என்னை வழி நடத்தும் என்று நம்புகிறேன். வாசித்துக் கருத்துச் சொல்லுங்க... என் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
நன்றி 'தளிர்' சுரேஷ்.
*****************************************
அப்பத்தா
அப்பத்தாவுக்கு இப்ப வயசு தொன்னூறை நெருங்கிக்கிட்டு இருக்கு... அது நடபொடயாத் திரிஞ்சி வருசம் ரெண்டாச்சு. இப்பக் கண்ணும் தெரியல, காதும் கேக்கலை... இப்பல்லாம் பக்கத்துல போயி உக்காந்து அப்பத்தான்னு கத்திக் கூப்பிட்டாலும் கேக்குதில்ல.. மொதல்லாம் யாரு அதத் தொட்டாலும் எலும்பாகிப் போன கையால மெல்லத் தடவி எதையோ கண்டுக்கிட்ட மாதிரி சிரிச்சிக்கிட்டே அவங்க பேரச் சொல்லி நீதானேன்னு மெல்லக் கேட்டுட்டு நாந்தே கெடக்கேனே போயிச் சேராமன்னு அது சொல்லும் போது சுருக்கமான முகத்துல கண்ணீர் இறங்கி காதுப்பக்கமாப் போகும். இப்ப எதுவுமில்ல... உயிரிருக்கு அம்புட்டுத்தான்..
கொஞ்ச நாளாவே பீ, மூத்தரமெல்லாம் கட்டிலலதான்... காலயிலயும் சாயந்தரமும் தூக்கித் தொடச்சி படுக்கு வைக்கிறதும் அப்பப்ப தண்ணியாக் கரச்ச கஞ்சிய கீழ மேல சிந்தினாலும் குடிக்க வைக்கிறதும் அம்மாதான். அம்மாக்குத் தொணயா அப்பத்தாவ தூக்கிக் குளிப்பாட்ட ஓடியாரது எங்க சின்னத்த மவ செவ்வந்திதான்... அவ எனக்கு ரெண்டு வயசு இளையவதான்... இந்த ரெண்டு வருசமா அம்மா முகஞ்சுழிக்காம பாக்குறதப் பாத்துட்டு பெரியநாயகி செஞ்சதுக்கு பாஞ்சாலி இப்புடி பாப்பான்னு நெனக்கவேயில்ல... அவளோட மனசு யாருக்கு வருமுன்னு ஊரே பேசுது.
கல்யாணத்துக்கு முன்னால திருச்சியில இருந்தேன்.. ஊருக்கு பதினைஞ்சி நாளைக்கி ஒருதரம் போயிருவேன்... இப்ப குடும்பத்தோட சென்னைப் பக்கம் வந்துட்டேன்... பொண்ணு பத்தாவதும் பையன் ஆறாவதும் படிக்கிறாங்க.. எம் மகளுக்கு கோயில்ல பேர் கூப்பிடும் போது பெரியநாயகின்னு அப்பத்தா பேரைத்தான் கூப்பிட்டாக.
மனைவியும் வேலைக்குப் போறதால, வார விடுமுறைதான் குடும்பத்தோட கழிக்கிற நாளாகிப் போனதாலயும் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துட்டுப் போக ஒரு அமொண்ட் வேணுங்கிறதாலயும் இப்பல்லாம் விசேசத்துக்குத்தான் ஊருக்கே போக முடியுது. நெருங்கிய சொந்தம்ன்னா மட்டுமே சாவுக்கு பொயிட்டு ஓடியாருவேன். சென்னையில வீட்டு வாடகைக்கே தனியாச் சாம்பாதிக்கணும்... அதுபோக பசங்க படிப்பு.. அது இதுன்னு ரெண்டு பேரு சம்பளத்துலயே மாசக்கடைசியில துண்டு விழுக ஆரம்பிச்சிரும். அப்புறம் எங்கிட்டு அடிக்கடி ஊருக்கு ஓடுறது.
அம்மாக்கிட்ட பேசும் போதெல்லாம் அப்பத்தா எப்படியிருக்குன்னு கேட்பேன். ரெண்டு நாள் முன்னால பேசும் போதுகூட இப்புடிக் கெடயாக் கெடக்கதுக்கு போயித் தொலஞ்சா நிம்மதின்னு அப்பா கூட புலம்புறாருடான்னு சொன்னுச்சு... ஆமாம் அதோட வேதனைகளை வெளியில சொல்ல முடியாமக் கெடக்கு... ஒரே பக்கமா எப்படித்தான் நாளெல்லாம் கிடக்க முடியும்..? நரக வேதனையை அனுபவிச்சிக்கிட்டு இருக்கு.. அப்பா சொல்றதும் சரிதானே.. இப்படிக் கஷ்டப்படுறதுக்கு செத்துச்சின்னா அதுக்கும் நிம்மதி... இருக்கவுகளுக்கும் நிம்மதியில்லையா... நல்லா வாழ்ந்த மனுசி... பெரியநாயகின்னா ஊருக்குள்ள இப்பவும் ஒரு பயமிருக்கு... அது நடபொடயாத் திரிஞ்ச வரைக்கும் யாரும் அதுக்கிட்ட சண்டைக்கு வரமாட்டாங்க... எதுக்கும் பயப்படாது... ஆம்பள மாதிரி இருந்த பொம்பள.
பத்து வருசமா படுக்கையில கெடந்து உடம்பெல்லாம் புண்ணாகி, பக்கத்துல போகமுடியாத அளவுக்கு நாத்தமெடுத்துச் செத்தவங்கள நான் பாத்திருக்கேன். அப்பல்லாம் எதிரிக்கு கூட இப்படிப்பட்ட சாவு வரக்கூடாதுன்னு நினைச்சிப்பேன்.
செத்தா சூரங்குடியார் வீட்டு சுப்ரமணி மாமா மாதிரி சாவனும்... என்ன சாவுய்யா மனுசனுக்கு... குளிச்சிட்டு வீட்டுக்கு வந்து சாமி கும்பிட்டு நெத்தி நெறய தூணூறைப் பூசி, கமலத்த கஞ்சி ஊத்த, ரெண்டு தட்டு குடிச்சிட்டு, கை கழுவி வாயக்கொப்புளிச்சி வாசலுக்கு வந்து துப்பிட்டு, எரள்ளிக்கிட்டு இருந்த அவரு தம்பி செல்வராஜூ பொண்டாட்டிக்கிட்ட, என்னடி நெடுங்கொளத்தா சாணிக்கி வலிக்கிங்கிற மாதிரி மெல்ல அள்ளுறே... வேகமா அள்ளுடி... நெத்தியில வேர்த்திருக்கு தொடச்சி விட வரவா... நா நல்லாத் தொடப்பேன்டின்னு கிண்டல் பண்ணிட்டு கட்டில்ல வந்து உக்காந்து கமலத்த கொடுத்த காபியக் குடிச்சிக்கிட்டு இருந்தவரு நெஞ்சைப் பெணையிறது மாதிரி இருக்கு கமலம்ன்னு சொல்லியிருக்காரு... அது என்ன ஏதுன்னு பாக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி..
அந்த மாதிரி சாவு எல்லாருகும் வராது. அதுக்கெல்லாம் கொடுப்பின வேணும் போல. அந்தக் கொடுப்பின எனக்கு இருக்கான்னு கூடதெரியல ஆனா என்னைச் சேர்ந்த எல்லாருக்கும் அந்தக் கொடுப்பினையைக் கொடுன்னு முருகனுக்கிட்ட அடிக்கடி வேண்டிக்குவேன். எங்கண்ணு முன்னால உறவுகள் எல்லாம் கஷ்டப்பட்டு சாவுறத பாக்குற சக்தி எனக்கில்லை.
அம்மா கல்யாணமாகி அந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வந்து பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லையாம். காலையில சூடாச் சோறு சாப்பிட்டா ஏம் மசுத்துக்கு கஞ்சி எறங்காதோ... மகாராசா வீட்டுல இருந்து வந்துட்டிய... தட்டுக்கெட்டவன் வீட்டுல பொறந்துட்டு தர்ம மவராசா மகளாட்டம் சுடு சோறு சாப்பிடுறாக சுடு சோறுன்னு அப்பத்தா திட்டுமாம்.
தொடர்ந்து ரெண்டு பொம்பளப்பிள்ள பொறந்த பின்னால நா அம்மா வயித்திலிருந்தப்போ, இதுவாச்சும் ஆம்பளபுள்ளயாப் பொறக்கட்டும்ன்னு யாராச்சும் அப்பத்தாக்கிட்டச் சொன்னா, அம்மா காதுல விழுகுற மாதிரி ஆமா மசுருல பொறக்கும்... இதுவும் பொட்டையாத்தான் பொறக்கும்ன்னு சொல்லுமாம். ஐயா கூட எதுக்கு அந்தப்புள்ளய கரிச்சிக் கொட்டிக்கிட்டு இருக்கேன்னு சத்தம் போடுவாராம்...
சித்தப்பாக்களுக்கு கல்யாணமாகுற வரைக்கும் அம்மாதான் அப்பத்தாவோட கிரிக்கெட் மைதானம்... எல்லாப் பந்தையும் அம்மா மேல டைரக்டா இறக்குமாம். அம்மாவோட தலமுடியப் பிடிச்சி இழுத்துப் போட்டெல்லாம் அடிக்குமாம்... அம்மா நிறையத் தடவை அதோட கதயச் சொல்லியிருக்கு.. அப்பல்லாம் அம்மாவோட கண்ணு கலங்க, நாங்களும் அம்மாவுக்காக அழுதிருக்கோம்.
அப்பா செட்டிய வீட்டுக் கணக்குப் பிள்ளங்கிறதால காலையில பொயிட்டு ராத்திரி ஏழெட்டு மணிக்குத்தான் வருவாராம்... அப்ப குடியும் இருந்திச்சாம்... அப்பத்தா அடிச்சிச்சு, திட்டுச்சுன்னு அம்மா சொன்னா, ஆதரவாக்கூட எதுவும் பேசமாட்டாராம். ஆனா அம்மா இப்புடிப் பேசுச்சு... அப்புடிப் பேசுச்சின்னு அப்பத்தா சொன்னாப் போதுமாம்... உடனே என்ன ஏதுன்னு கூட கேக்காம இழுத்துப் போட்டு அடிப்பாராம்.
அம்மா திடீர் திடீர்ன்னு கோவிச்சிக்கிட்டு ஆயா வீட்டுக்குப் போயிடுமாம்... ஐயாதான் சமாதானம் பண்ணி கூட்டியாந்து விடுவாராம். அப்பாக்கிட்ட சடங்கான பின்னால எம்மவள நாங்கூட அடிச்சதில்ல... உங்காத்தா அடிக்கிறதெல்லாம் நல்லாயில்லப்பான்னு பல தடவ சொல்லியும் அவரு திருந்தலையாம்... மாமால்லாம் அம்மாவக் கொடுமப் படுத்துற அப்பாவ அடிக்கக்கூட போனாங்களாம். ஐயாதான் வீட்டுக்கு வந்த மாப்ளய அடிக்கிறது அழகில்லைன்னு திட்டுனாராம்.
ரெண்டு சித்தப்பா தனியாப் பொயிட்டாலும் நாங்க அந்த வீட்டுலதான் இருந்தோம்... கடைசித் தங்கச்சி பொறந்ததுக்குப் பின்னாடித்தான் ரோட்டோரமாக் கிடந்த பனஞ்செய்யில சின்னதா ஒரு வீட்டைக் கட்டி தனிக்குடித்தனம் வந்தோம். அதுக்கும் அம்புட்டுப் பிரச்சனை... அப்பத்தா நல்லாவே இருக்க மாட்டேடான்னு மாரியாத்தா கோவில் முன்னால மண்ணள்ளித் தூத்துச்சு.
தனியா வந்த பின்னாலதான் அப்பாக்கு பொறுப்பே வந்திச்சி... தண்ணிய விட்டாரு... சின்னதா ஒரு கட வச்சாரு. அப்பா கொடுமக்காரராத் தெரிஞ்சதாலயோ என்னவோ நாங்கள்லாம் அப்பாக்கிட்ட அதிகமாப் பேசுறதில்ல... எதாயிருந்தாலும் அம்மாக்கிட்டதான் சொல்வோம். அப்பா வீட்டுக்குள்ள வந்துட்டா நாங்க வெளிய எந்திரிச்சிப் போயிடுவோம். இப்பவும் அதிகம் பேசுறதில்ல... கேக்குற கேள்விக்கு அவரும் பதில் சொல்வார்... நாங்களும் பதில் சொல்வோம்.
நாங்கள்லாம் பழைய வீட்டுல இருந்தப்போ அப்பத்தா அம்மாக்கிட்ட சண்ட போட்டாலும் எங்ககிட்ட நல்லாத்தான் நடந்துக்கும். அப்பத்தா நிறைய எரும மாடுக வச்சிருந்துச்சு... அது ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு வச்சிருக்கும். அதச் சொல்லிக் கூப்பிட்டா திரும்பிப் பார்த்து கத்துங்க... காலையிலயும் சாயந்தரமும் பால் பீச்சி... இரவு அதைப் பக்குவமாக் காய்ச்சி உறை ஊற்றி வைக்கும். காலையில எந்திரிச்சவுடனே தயிர மத்தால் கடையும்... அதுக்கு முன்னால வீட்டுக்குத் தனியா... சிதம்பரம் செட்டியாருக்குத் தனியா கெட்டித்தயிர் எடுத்து வைக்கும்.
என்ன செட்டியாருக்கு மட்டும் கெட்டித் தயிருன்னு யாராச்சும் கேட்டா... அவருக்கு எருமத்தயிர சோத்துல கெட்டியாப் போட்டு பெசஞ்சி சாப்பிடத்தான் பிடிக்குமாம்ன்னு சொல்லுறதோட, இதுக்கு காசு கொஞ்சம் அதிகமாவே கொடுக்கும் செவாமி ஆச்சி... அதுபோக நல்லதபில்லத அள்ளிக் கொடுத்து விடுதுல்லன்னு சொல்லிச் சிரிக்கும்.
தயிரக் கடஞ்சி.... வெண்ணயெடுத்து ஒரு டப்பால கொஞ்சம் தண்ணி வச்சி அதுல உருண்டை உருண்டையா உருட்டிப் போட்டு வைக்கும். யாராச்சும் நெய் கேட்டா எடுத்து அதுக்குன்னே வச்சிருக்கிற சின்ன இருப்புச் சட்டியில வேணுங்கிற உருண்டய எடுத்துப் போட்டு சீரகமும், கருவப்பில்லையும் போட்டுக் காச்சி கொண்டு போய்க் கொடுக்கும். நெய் காச்சுன இருப்புச் சட்டியில சோத்தப் போட்டு பெசஞ்சி எங்களுக்கு கொடுக்கும். அந்தச் சுவை இன்னக்கி கடயில வாங்குற நெய்யில இல்ல.
காலையில எங்கூருல இருந்து நிறையப் பேர் தயிர் விக்கப் போவாங்க... ஆனா அப்பத்தா அவங்க கூடல்லாம் சேந்து போகாது.. எட்டுமணிக்கு மேல தயிர்ப்பானை, ஒலக்கு, குண்டுக்கரண்டி. தொடக்கிற துணி, சிதம்பர்ம் செட்டியாருக்கு எடுத்து வச்ச கெட்டித்தயிருன்னு எல்லாத்தையும் ஒரு சின்ன ஓலப்பொட்டிக்குள்ள வச்சி, சீல முந்தானையில சுருமாடு சுத்தி தலயில வாக வச்சி சரிபாத்து பேட்டாச் செருப்பு டப்புட்டப்புன்னு அடிக்க நடந்து போகும். தயிருப்பெட்டிய தூக்கி வச்சிட்டா கையால புடிக்கவே புடிக்காது. தயிரூத்திட்டு திரும்பும் போது ரெண்டு மணியாயிரும்..
அப்பத்தா ஒருநா கூட முடியலன்னு படுத்ததில்லை. இருந்தாலும் ஒருவேளை முடியாம வந்திட்டா முடியாதன்னக்கி அம்மாதான் போவணுமின்னு வீடுகளயெல்லாம் கூட்டிக் கொண்டு போய் காட்டி வைக்கும். அம்மா தயிரூத்தப் பொயிட்டு வந்தா கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொன்னு எடுத்துடும்.
தயிரூத்திட்டு வரும்போது எங்களுக்கு கடலமிட்டாய், கலுக்கோனால்லாம் வாங்கிட்டு வரும் , லீவு நாள்ன்னா அதிரசமும் முறுக்கும் வாங்கிக்கிட்டு வரும். நாந்தான் பெரும்பாலும் மாடு மேய்க்கப்போவேன்.. அதுக்கு செவ்வந்தியும் ஒரு காரணம்... வரும்போதே ரோட்டுல நின்னு ஏ பாசுன்னு கத்திக் கூப்பிட்டு எனக்கும் செவ்வந்திக்கும் திங்கிறதுக்கு எடுத்துக் கொடுத்துட்டுப் போகும். அப்பல்லாம் என்ன வெயிலுன்னு சொல்லிக்கிட்டு முந்தானயால மொகந்தொடச்சிக்கிட்டு கொஞ்சம் தயிரு கெடக்கு குடிங்கன்னு சொல்லி ஒலக்குல ஊத்திக் கொடுக்கும். நானும் செவ்வந்தியும் பாதிப்பாதி குடிச்சிப்போம்.
தனியா வந்தப்புறமும் எதாச்சும் வாங்கிட்டு வந்து வீட்டு வாசல்ல நின்னு அடியேய்... டேய் பயலுகளான்னு கத்தி கொடுத்துட்டுப் போகும். வீட்டுக்குள்ள வராது... அப்பா வீட்ல இருந்தா மண்ணள்ளித் தூத்துச்சு அதுக்கிட்ட வாங்கித் தின்னுங்கன்னு சத்தம் போடுவாரு. அம்மா எதுவும் சொல்லாது. எங்க மேல அம்புட்டுப் பாசம் வச்சிருக்கிற மனுசிக்கு அம்மா மேல மட்டும் பாசமில்லாமப் போச்சேன்னு தோணும்... அப்பல்லாம் பாவம் அம்மான்னு நினைப்பு வரும்... இப்ப கெடையாக் கெடக்க அப்பத்தா பாவம்ன்னு தோணுது.
ஐயா இருக்க வரைக்கும் ராசாத்தியா இருந்த அப்பத்தா, அவரு போனதுக்குப் பின்னால ரொம்ப சிரமப்பட்டுச்சு. பழைய வீடு சின்ன சித்தப்பாவுக்கு கொடுத்துட்டு எல்லாரும் தனியாப் பொயிட்டாங்க... ஐயா கண்ணோட சொத்தெல்லாம் பிரிச்சிக் கொடுத்துட்டாரு... ஐயா இருக்கும் போதே சின்னச் சித்திக்கும் அப்பத்தாவுக்கும் சரியா வரல...
அவரு போன பின்னாடி ஒரு தடவ சித்தி அப்பத்தாவை அடிச்சிருச்சின்னு தெரிஞ்சி அம்மா வருத்தப்பட்டப்ப, அன்னைக்கி ஒன்னைய அடிச்சிச்சில்ல... வாங்கட்டும்ன்னு அப்பா சொல்ல, ஆமா அன்னைக்கி நாம ஆத்தா பேச்சுத்தானே கேட்டோம்... ஏ எம்பொண்டாட்டிய அடிக்கிறேன்னு ஒருவாத்த கேட்டிருப்பியலா... பத்தாததுக்கு நீங்களுந்தான் தூக்கிப்போட்டு மிதிச்சிய... என்னய அடிச்சிருந்தாலும் ஒரு பெரிய மனுசிய அடிக்கிறது தப்பில்லையா... நாமதான் அத்துப்பொயிட்டோம் சின்னவுகளுக்கு... ரெண்டு பேருக்கும் சரிவரலைன்னா ஒங்க தம்பிககிட்ட சொல்லி அங்கிட்டு வச்சிக்கச் சொல்லியிருக்கலாமுல்ல... இன்னக்கி இவ அடிச்சா நாளக்கி அவபுள்ள அவள அடிப்பான்... அம்புட்டுத்தான்... முன்னத்தி ஏரு போற பாததானே பின்னத்தி ஏரு போவும் அப்படின்னு அம்மா சொன்னப்பத்தான் அம்மாவோட மனசு எங்களுக்குப் புரிஞ்சது. ஒங்கொணம் எல்லாருக்கும் வராதுடின்னு அப்பா ஜாகா வாங்கிட்டார்.
சின்ன சித்தப்பா வீட்டுல சரிவராம மத்த சித்தப்பாக்க வீடுகளுக்கும் போயி எல்லா இடத்திலயும் விருந்தும் மருந்தும் மூணு நாளுக் கணக்கா பிரச்சினை வர, ஊருக்குள்ள இருந்த சின்னத்த வீட்ல.. அதான் செவ்வந்தி வீட்ல கூட்டிக் கொண்டு போயி வச்சிருந்தாக...
ஐயா இருக்க வரைக்கும் ஓரளவு பேச்சு வார்த்தையில இருந்த சித்தப்பாக்களோட இப்ப சுத்தமாவே அத்துப் போச்சு... மொறப்பாடு கட்டிக்கிற அளவுக்கு என்ன பகையின்னு தெரியல...
அப்பத்தாவ சித்தாப்பாக்கள் பாக்காதபோது அப்பாக்கிட்ட வெள்ளச்சாமியய்யா அது எதுக்குப்பா வீடு வீடா திரியணும்... மூத்தவன் நீ கூட்டியாந்து வச்சிக்கன்னு சொன்னதுக்கு, செஞ்சதை அனுபவிக்குது சித்தப்பா அனுபவிக்கட்டும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கார். அப்பத்தாவுக்கும் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு யோசனை... அவள என்ன பாடு படுத்தினோம் அவகிட்டயா போயி நிக்கனுமின்னு நெனச்சிருக்கும் போல...
அப்பத்தாவப் பாக்க பெரியத்த வந்தப்போ இங்கன இவனுகளப் பாத்துக்கிட்டு சின்னவ வீட்ல இருக்க கஷ்டமாயிருக்குத்தா உன்னோட வந்திடுறேன்னு சொல்லி அழுதிருக்கு. அத்த எங்க வீட்டுக்கு வந்தப்ப ராணி மாதிரி இருந்த பொம்பள... பெரிய நாயகின்னா ஊரே பயப்பட்டுச்சி... எம்புட்டு கோவக்காரியா இருந்தாலும் பள்ளுப்பறையின்னு அத்தன சனத்துக்கும் சோறு போட்டுச்சு... அது பண்ணுன ஒரே தப்பு அத்தாச்சிய கொடுமப்படுத்துனதுதான்... யாரு சொல்லியும் கேக்கல மனுசி... இந்தா பாசு பொறக்கு முன்னால ரொம்பக் கேவலமாப் பேசுச்சு... இன்னக்கி அதான் ஓம்மூட்டுக்கு வரமுடியாம வீடுவீடா அலையிது.. எங்கூட காட்டூரணிக்கி வாறேன்னு நிக்கிது என்றபோது அப்பா எதுவும் பேசலை.
என்னத்தாச்சி சொல்லுறிய... காட்டூரணிக்கா... நல்லாருக்கு கத... ஆறு ஆம்பளப்புள்ளய பெத்துப்புட்டு... இப்ப ஆரு கொரச்சலா இருக்கா... இங்கருக்கவுக கொறச்சலா இல்ல ஊருப்பக்கமிருக்க மத்த ரெண்டு பேருங் கொறச்சலா... சொல்லுங்க... ஆறு பேரு இருந்துக்கிட்டு அயித்தய நீங்க கூட்டிக்கிட்டுப் போனா நல்லாவாயிருக்கும். பாக்குறவுக என்ன சொல்லுவாக... பெத்தவளுக்கு கஞ்சி ஊத்த வக்கத்த பயலுகன்னு சொல்லமாட்டாவளா... பேசாமா இங்க கொண்டாந்து விட்டுட்டுப் போங்க... நாம்பாத்துக்கிறேன்னு அம்மா சொன்னதும் அத்த யோசனையோடுதான் பாத்துச்சு...
அட என்ன யோசிக்கிறிய... அவுக பண்ணுன கொடுமையவா... அத விடுங்க... அவுக திட்டுனதாலயும் அடிச்சதாலயும் கெட்டா பொயிட்டோம்... ஆத்தா பேச்சக் கேட்டுக்கிட்டு இந்தா இருக்காவளே இவுக அடிக்காத அடியா மிதிக்காத மிதியா... எல்லாத்தையும் வாங்கிட்டு ஆறு புள்ள பெத்துக்கலயா... இல்ல இவுக கூட வாழாம இருந்தேனா... இப்ப வரைக்கும் வாந்துக்கிட்டுத்தானே இருக்கோம். அவுக திட்டினதாலயும் அடிச்சதாலயும் நாங்க கெட்டுப் போயிடல.. நா வந்து கூப்புடல... இப்பல்லாம் சின்னவளுஞ் செரியாப் பேசுறதில்ல... அவுக சண்டயில நாங்க குளிர்காயுறமுன்னு சொல்லுவாக... கூட்டியாந்து விட்டுட்டுப் போங்க... என்று அம்மா அத்தக்கிட்ட சொல்ல அந்த வெள்ளிக்கிழமை அப்பத்தா எங்க வீட்டுக்கு வந்துச்சி.
நாளாக நாளாக அம்மாவோட கொணத்தைப் பாத்து அப்பத்தா மவராசி ஒங்கிட்ட அப்புடி நடந்துக்கிட்டேனே... அப்பவும் அந்தாளு அந்தப்புள்ளய திட்டாத அந்தப்புள்ளய திட்டாதன்னு கத்துவாரு கேட்டேனே... சாகுறதுக்கு முன்னாலகூட ஒனக்கு முன்னால நாம்போயிச் சேந்திருவேன். அதுதான் ஒனக்கு கஞ்சி ஊத்தும் வீம்பு பாக்காம மூத்தவமூட்டுக்குப் போன்னு சொன்னாரு... கேட்டேனா... நாத்துனா மவன்னு கட்டிக்கிட்டு வந்தவதான் தூக்கிப் போட்டு மிதிச்சா... நாஞ்செஞ்ச பாவம்ன்னு புலம்பும். அப்பல்லாம் அம்மா சிரிச்சிக்கிட்டே பழசெல்லாம் எதுக்கத்தேன்னு சொல்லும்.
நாங்க அம்மாக்கிட்ட ஒனக்கு அப்பத்தாமேல கோபமேயில்லயாம்மான்னு கேட்டா, சிரிச்சிக்கிட்டே எதுக்கு கோபப்படணும்... அவுக மாமியா கொடுமப்படுத்தியிருப்பாக... அந்த வைராக்கியத்த எங்கிட்ட காட்டுனாக... ஒங்க சித்தப்பம் பொண்டாட்டிககிட்ட அப்புடியா நடந்துக்கிட்டாக... இல்லையே... நா அவுகளப் பாத்தா நாளக்கி உங்க பொண்டாட்டிக என்னைய நல்லாப் பாத்துப்பாளுகதானே... எல்லாம் சுயநலந்தான்னு சிரிக்கும்..
அம்மா சொல்றது உண்மதானே... நாம என்ன செய்யிறமோ அதுதானே நமக்கு திருப்பிக் கெடைக்கும். நாங்க அங்கிட்டு அங்கிட்டு இருந்தாலும் ஊருக்குப் போயி ஒண்ணா பண்டிகைகளையும் திருவிழாக்களையும் கொண்டாடும் போது எங்க மனைவிங்க எல்லாம் அம்மாவை அம்மா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருப்பதை பாக்குறதே ஒரு சந்தோஷந்தான்.
அப்பத்தா வந்த பின்னால சின்னத்த மறுபடியும் நல்லாப் பேசி வீட்டுக்கு வர ஆரம்பிச்சிச்சி... அதுக்கு செவ்வந்திய எனக்குக் கட்ட ஆசை... ஆனா அப்பா அதெல்லாம் சரிவாராதுன்னு சொல்லிட்டாரு. செவ்வந்திக்கும் ஆச இருந்துச்சின்னு எங்கல்யாணத்துக்கு அப்புறந்தான் தெரியும்... இப்ப மூத்த சித்தப்பா பையனுக்குத்தான் வாக்கப்பட்டிருக்கா...
அப்பத்தா நடபொடயிலாம விழுந்ததுக்குப் பின்னால ரெண்டு சித்தப்பாவும் பெரியத்தக்கிட்டச் சொல்லி சேந்துக்கிட்டாக... வெளியூருல இருக்க சித்தப்பாக்க ஊருப்பக்கம் அதிகம் வாரதில்லை... எப்பவாச்சும் போனுல விசாரிக்கிறதோட சரி. எவ்வளவோ பேரு சிபாரிசு பண்ணியும் சின்னச் சித்தப்பாவோட மட்டும் அப்பா சேரமாட்டேன்னு பிடிவாதமா நின்னாரு...
நாலு மாசத்துக்கு முன்னால திருவிழாவுக்கு ஊருக்குப் போனப்போ வெள்ளச்சாமியய்யா மறுபடியுமா அண்ணந் தம்பியாவாப் பொறக்கப் போறானுக... உங்கப்பனுக்கிட்ட சொன்னா கேக்க மாட்டேங்கிறான்... நீங்கள்லாம் பேரம் பேத்தி எடுக்குற வயசாச்சுல்ல... எடுத்துச் சொல்லி ஒண்ணாச் சேந்துக்கப் பாருங்க பேராண்டின்னு சொன்னாரு. அப்புறம் ஒரு வழியா நாங்கள்லாம் சேந்து அம்மாவ முன்னிருத்தி அப்பாவ சம்மதிக்க வச்சி சேத்து வச்சோம்...
முன்ன மாதிரி குடும்பங்களுக்குள்ள ஒரு ஒட்டுதல் இல்லாட்டியும் வா போன்னு சொல்றளவுக்கு இருக்கு. என்னத்த சாதிச்சிப்புட்டோம்.. அத்துக்கிட்டு நின்னு எதக் கொண்டு போப்போறோம்ன்னுதான் எனக்குத் தோணும்... ஒரு மாருல பால் குடிச்சிட்டு இன்னக்கி மொறப்பாடு... அவனோட வீட்டுல தண்ணிகூட குடிக்க மாட்டேன்னு இருக்கவுகள பாத்தா கடுப்புத்தான் வரும்...
காலயில அம்மாட்டப் பேசினப்ப நேத்துலயிருந்து கரகஞ்சியும் போகலப்பா... நா, செவ்வந்தி, ஒங்க சித்தியன்னு எல்லாருந்தான் மாத்தி மாத்தி பாக்குறோம்... நேத்துலயிருந்து நெனவு தப்பிருச்சி... இன்னம் ரெண்டு நாள்ல ஆடி அம்மாவாச... அதுல அடிச்சிரும்ன்னு வையாபுரி அண்ண வந்து பாத்துட்டு சொல்லிட்டுப் போனாரு... இப்படிக் கெடக்கதுக்கு போகட்டும்ன்னுதான் எல்லாருக்கும் தோணுதுப்பா..
உங்க அப்பத்தாவோட ஆச அது வாந்த வூட்டுல இருந்து கட்டத்தலக்கிப் போனுமின்னு... இப்பத் தூக்கவேணான்னு பெரியவுகள்லாம் சொல்றாக. செத்தா நம்ம பழய வீட்டுலதான் கொண்டேயி போட்டு வக்கணும்... ஓடம்பெல்லாம் பிச்சிக்கும் போல இருக்கு... வவுரு வேற ஊதுனாப்பில இருக்கு... எப்படி அங்க கொண்டு போறதுன்னு தெரியல... அந்த மனிசி போடாத ஆட்டமா... ம்... எல்லாம் முடிஞ்சிருச்சி... இப்ப எப்ப சாவுமின்னு ஊரே காத்துக்கிட்டு கெடக்கு.... என்றபோது அம்மாவின் குரல் கம்மியதை உணர்ந்தேன்.
கண்டாங்கிச் சீலையை வரிஞ்சி கட்டிக்கிட்டு அப்பத்தா வயல்ல வேல பாக்குறது எங்கண்ணுக்குள்ள வந்து போக, எங்கப்பத்தா பத்து ஆம்பளக்குச் சமம்ன்னு ஊரில சொல்லுவாக... அப்படிப்பட்ட மனுஷியோட நிலமையை நினைச்சப்போ கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
எப்படியும் உயிரோடு ஒருமுறை பார்த்திடலாம் என்ற நம்பிக்கையோடு பயணப்பட்டேன்.... அப்பத்தாவின் நினைவுகளைச் சுமந்து....
-‘பரிவை’ சே.குமார்
7 எண்ணங்கள்:
அப்பத்தாவை பார்க்க உங்களுடன் நாங்களும் பயணபடுகிறோம் குமார்.
அருமையான கதை.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.
அப்பத்தாவைப் பற்றி நீங்கள் சொல்ல சொல்ல அவர் கண்ணில் அப்படியே காட்சியாக வந்து விட்டார், தயிர் விற்கும் அழகு, வெண்ணெய் காய்ச்சும் அழகு . பேரன் , பேத்திகளுக்கு வெண்ணெய் கடுகை போட்டு பிசைந்து கொடுக்கும் அழகு எல்லாம் காட்சியாக பார்க்க முடியுது.
தயிர் விற்ற காசில் பண்டங்கள் வாங்கி கொடுக்கும் பாசம் எல்லாம் அருமை.
வரிஞ்சி கட்டி வேலைப்பார்த்த அப்பத்தா இப்போது கிடையா கிடப்பது மனதுக்கு வருத்தம். அவரை நல்லபடியாக இறைவன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டச் சொல்கிறது.
அம்மாவின் குணம் உயர்ந்த மனிஷிக்கு அடையாளம்.
தன்னை அடித்து, வார்த்தைகளால் இம்சை செய்தவருக்கு பணிவிடை செய்யும் மனது! அம்மாவுக்கு வணக்கம் சொல்ல வேண்டும்.
உறவுகள் பூசல், ஒன்று கூடுதல் , எல்லாம் சொன்னது அருமை.
வாழ்த்துக்கள் நல்ல கிராமிய மணம் வீசும் கதைக்கு.
வணக்கம் சகோதரரே
நல்ல கதை. நிஜமான மனிதர்களை கண் முன்னே கதைக்குள் கொண்டு வந்து விட்டீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் எத்தனை வேறுபாடு. அன்பு ஒன்றுதான் அவர்களை இணைக்கும் கயிறு. மாமியாரை அவர் இவர் விஷயத்தில் கடுமையாக நடத்தியிருப்பினும், நல்ல மனித நேயமுள்ள மருமகளாக கடைசிவரை காப்பற்றி அனுப்பும் அம்மா பாத்திரம் மிக சிறந்தது. அப்பத்தா அருமைகளை அவ்வப்போது பாராட்டி, அவளுக்காக அழும் நல்ல உறவுகள்.. கதை கிராமிய மணத்துடன் மனதை வருத்தி, நிறையவும் செய்தது. அருமையான கதை தந்த தங்களுக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குமார் அசத்திட்டீங்க. பல உணர்வுகள். அப்படியே படம் போல விரிந்தது மனதுள். குறிப்பாக அப்பாத்தா. வழக்கமான உங்கள் வட்டார வழக்குச் சொற்களுடன் மணம் கமழ படுத்திருக்கும் அப்பாத்தாவை நாங்களும் பார்க்க வருகிறோம்.
நம்மிடம் சொல்லுவது போல கதை. சூப்பர் குமார்.
எனக்கும் என் அப்பாவழிப் பாட்டியிடம் உரிமையும் அன்பும் அதிகம். என்னுடன் தான் இறுதிவரை இருந்தார். இறக்கும் போது 92 முடிந்து 93 வயது. என் பாட்டியின் நினைவுகள் பல எழுந்தன. ஆனால் அவர் என் அம்மாவைப் படுத்தியதில்லை. பாட்டியும் தாத்தாவும் எங்களிடம் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். என் அத்தைகளின் குழந்தைகளும் சரி நாங்களும் சரி எல்லோருமே ஒரே போலத்தான். என்னிடம் கொஞ்சம் கூடுதல் பாசம் என்றாலும்.
அங்கும் வாசித்தேன் குமார். பாராட்டுகள் வாழ்த்துகள்.
கீதா
வழக்கம்போல அருமையான நடையோடு கதை. அப்பத்தா எங்கள் வீட்டிலும் உண்டு. ஆனால் அந்த அப்பாத்தாருங்கள் அப்பத்தா போல என்னிடம் பிரியம் வைத்ததில்லை!
அப்பத்தா.... மனது நிறைய நிறைஞ்சு இருக்கிறார் குமார். பாராட்டுகள். நேரில் அப்பத்தாவைப் பார்ப்போது போன்ற உணர்வு.
கதைக் களன் உங்களுக்கு மிகவும் கைவர்ந்த கலை. தொடர்ந்து எழுதுங்கள்.
கிராமிய மணம் கமழும் அழகிய நடையில் "அப்பத்தா" மனதை தொட்டு நிற்கிறது
வாழ்துகள்.
நாட்கள் பல கடந்து இன்று இங்குவர வாய்த்தது. அப்பத்தாவும் கதை பேச்சுவழக்கும் மனம் நெகிழ்த்தன. அம்மா - தெய்வச்சாயல்.
அருமை சகோ
கருத்துரையிடுக