அரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றிருந்த திவ்யா, 45 நாள் பயிற்சி முடிந்து கிளம்பிய சமயம், 10-வது படிக்கும் மாணவன் ஒருவன் அவளிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான். அந்தப் புத்தகத்துக்குள் கல்யாணப் பத்திரிகைகளில் இருக்கும் இரட்டை மயில்களை, முருகன் வள்ளி படங்களை, அப்புறம் இதயங்களை, ஆண்-பெண் கைகளை வெட்டி ஒரு காகிதத்தில் ஒட்டி, அதனூடாக எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் இருந்திருக்கிறது. திவ்யா அந்தக் கடிதத்தை ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பிவைத்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த நான், அதை லேமினேட் செய்து என் அலமாரியில் வைத்தி ருக்கிறேன். அந்தக் கடிதம் இதோ...
'ஆயிரம் பூக்கள் பூத்தாலும்
என் மனதில் பூத்த முதல் பூ நீங்கள்தான்...
கனவு என்பது காலை வரை. ஆனால்,
உங்கள் நினைவு என்பது
என் கல்லறை வரை...
மழை மண்ணை நனைக்கும்
என் மனமோ உங்களை நினைக்கும்...
குழந்தைகள் காலில் அணிவது கொலுசு
என் தலைவர் பெயரோ தனுசு
நீ விரும்பினால், நான் உங்கள் மவுசு!
என் உடம்பில் ஓடுவது ரத்தம்
நீங்கள் கொடுக்கலாம் ஒரு முத்தம்
அது கேட்கும் ரொம்பச் சத்தம்
அப்புறம் நடக்கும் காதல் யுத்தம்...
உங்கள் மடியில் படுத்து உறங்க ஆசை,
விடியும் வரை அல்ல என் உயிர் பிரியும் வரை!’
- இதுதான் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்த வரிகள்.
என்னைக் கேட்டால், ஒருவனின் ஆகச் சிறந்த பொக்கிஷம் அவனிடம் இருக்கும் அவன் எழுதிய முதல் காதல் கடிதம்தான். மீசை முளைவிட்ட தேதியில் பாதி குழந்தையாக வும் மீதி பருவமாகவும் ஏங்குகிற, தவிக்கிற நேசத்தைக் கடிதமாக எழுதும்போது நாம் அடைகிற பரவசத்தை, உலக மகா இலக்கியங்களில்கூடக் காண முடியாது!
அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில், எங்கள் ஊரில் இளையராஜா பாடல்களை மனப்பாடமாகப் பாடுகிறவனையும் மோகன், முரளி படக் காதல் தோல்வி வசனங்களை அப்படியே அதே சோகத்தில் கண்ணீர் வடியப் பேசிக்காட்டுகிற வனையும்தான் கவிஞன் என்று சொல்வார்கள். ஆகவே, அன்றைய காலத்தில் எங்கள் பள்ளியில் இருந்த ஒரே ஆகச் சிறந்த கவிஞன், சந்தேகமே இல்லாமல் அடியேன்தான். எவ்வளவு காதல்கள், எவ்வளவு கடிதங்கள், எவ்வளவு அடி, எவ்வளவு உதை, எவ்வளவு அவமானம்... ஆனாலும், நண்பர்கள் வாங்கித் தரும் கோத்தையன் கடை இட்லிகளுக்காகவும், சாவிக் கடையில் கிடைக்கும் காய்ந்த சப்பாத்திகளுக்காகவும் நான் எழுதிக்கொடுத்த எத்தனையோ காதல் கடிதங்கள்தான் என் தீராப் பால்யம்.
எத்தனை பேருக்கு ஆசை ஆசையாக எவ்வளவு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தாலும் அண்ணன் தீக்குச்சி முத்துக்குமாருக்காக பூர்ணிமாவுக்கு நான் எழுதிக்கொடுத்த கடிதம்தான், எப்போதும் என் நினைவில் தங்கிநிற்கும் பெரும் காவியமும் பதறும் பாவமும்கூட. பீடிக்குப் பதிலாக எப்போதும் அண்ணன் முத்துக்குமாரின் வாயில் தீக்குச்சிதான் இருக்கும். அதை வைத்துப் பல் குடைவான், காது குடைவான். அப்புறம் அதைவைத்துதான் நெருப்பில்லாமல் பீடியும் குடிப்பான். பூர்ணிமா பதினொன்றாம் வகுப்பு. முத்துக்குமார் அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு. ஆளு பார்ப்பதற்கு அப்பவே ரகுவரன் மாதிரி அவ்வளவு வளத்தியா, ஒல்லியா, வில்லங்கமா இருப்பான்.
யார் சொல்லி வந்தானோ தெரியவில்லை. என்னைத் தேடி ஒரு நாள் வகுப்புக்கே வந்து, பெருமாள் கோயில் மலைக்குக் கூட்டிப்போனான் முத்துக்குமார் அண்ணன்.
'ஏடே, நீ நல்லா கவிதைலாம் எழுதுவியாமே. எங்க எனக்கொண்ணு எழுதித் தாயேன் பாப்போம்.'
''யாருக்குண்ணே?'
'ஆ... நம்ம கிராஃப்ட் வாத்தியா னுக்குக் கொடுக்கிறதுக்கு. ஆளையும் சைஸையும் பாரு, கேக்குறான் கேள்வி. ஆள் யார்னு சொன்னாத்தான் கவித வருமோ உனக்கு?'
'இல்ல... ஆள் முகம் தெரிஞ்சா கொஞ்சம் ஈஸி. அதவெச்சி எழுதிடுவேன்.'
'ம்ம்ம்... அப்படியா?! சரி... உங்க கிளாஸ்ல பூர்ணிமானு ஒரு பிள்ள படிக்கில்லா... அவள நினைச்சு எழுது.'
'என்னது... பூர்ணிமாவா?'
'ஆமா, உனக்குத்தான் நிலா இருக்கால்ல. நீ எதுக்கு பூர்ணிமான்னு வாயப் பொளக்குற?'
கொஞ்ச நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன். வசமாக அப்படியன்றும் சிக்க வில்லை. அவனேதான் 'பூவே பூர்ணிமா பூச்சூட வா’னு எடுத்துக்கொடுத்தான். அவன் ரசனை மட்டத்தின் அளவும், அவன் காதல் தொடங்கிய கால அளவும் எனக்குப் புரிந்துவிட்டது. கவிதை வேகவேகமாக ரெடியானது.
'என் பூஜைக்கேத்த பூ நீ... பூர்ணிமா
நேத்துதானே பூத்தது நம் காதலும்...
பூவே பூர்ணிமா
என்னை பூச்சூட வா...
பாலான என் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூர்ணிமா நீதான்
என் பூமியம்மா
இனி நீ சுற்ற வேண்டிய சூரியன் நானம்மா
பூவே பூர்ணிமா, நீதான் என் பொன் வசந்தம்மா
புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்மா’
- இப்படியாக இளையராஜாவின் பாடல்களால் நிறைத்து நீண்டுகொண்டுபோன அந்தக் கவிதையை 'இப்படிக்கு’ போட்டு 'முத்துக்குமார்’ என்று எழுதத் தொடங்கும்போது படக்கென்று பிடுங்கிக்கொண்டான்.
'போதும் தம்பி போதும்... அண்ணன் பேரை அண்ணனே அட்டகாசமா ஆட்டின் போட்டு எழுதிக்கிறேன்' என்று சொல்லி எப்படிக் கொடுப்பான், எப்போது கொடுப்பான், என்ன சொல்லிக் கொடுப்பான் என எதையும் சொல்லாமல் விறுவிறுவெனக் கிளம்பிப்போனான். அந்த நேரத்தில், நான் எப்போதும் ஆண் பையன்களைப் பார்த்தால் பாவமாக சுவரில் பதுங்கும் பூர்ணிமாவை நினைத்துப் பார்த்தேன். 'புரியாத புதிர்’ ரேகாவைப் போல விழி பிதுங்கித் தெரிந்தது அவள் முகம். பூவே பூர்ணிமா... நீ ரொம்பப் பாவம்மா!
'இப்படிக்கு’ என்பதற்குக் கீழ் எந்தப் பெயரும் எழுதாத அந்தக் கடிதத்தின் கடைசியில் பெரு விரலை முள்ளால் குத்தி வந்த ரத்தத்தால் ஒரு பொட்டுவைத்து, அன்று மதியமே எங்கள் வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் போய் பூர்ணிமாவின் புத்தகப் பைக்குள் முத்துக்குமார் வைத்துவிட்டான்போல. அதற்கான கொடுமையான விளைவுகளை நாங்கள் மறுநாள்தான் பள்ளிக்குப் போய் அனுபவித்தோம்.
காலையில் முதல் வகுப்பு தொடங்கியவுடனே 'பதினோராம் வகுப்பு மேத்ஸ் குரூப் பசங்க எல்லாரும் ஸ்டாஃப் ரூமுக்கு வரணுமாம்... ஹெட்மாஸ்டர் சொன்னாங்க’ என்று அறிவிப்பு வந்தது. என்ன விஷயத்துக்காகக் கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமல், எல்லாரும் ஓடிப்போய், உள்ளே முட்டிக்கொண்டு நின்றோம். உள்ளே நிர்மலா டீச்சரும் ஹெட்மாஸ்டரும் சேர்ந்து, பசங்களை எல்லாம் ஒரு பிளாக் போர்டுக்கு முன்னால் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு வரிசைப்படுத்தினார்கள். அவர்கள் கையில் ஒரு காகிதம் வேறு படபடத்தது. பக்கத்தில் பாவமாக பூர்ணிமா ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள்.
'ஏல... இங்க பாரு, இந்த லெட்டரை எவன் எழுதி இந்த புள்ள பேக்குக்குள்ள வெச்சான்னு தெரியிற வரைக்கும் ஒரு பய தப்ப முடியாது. வரிசையா ஒவ்வொருத்தனா வந்து நான் சொல்ற வார்த்தைய சாக்பீஸ எடுத்து இந்த பிளாக் போர்டுல எழுதணும். இது எந்த நாயி எழுத்துனு தெரிஞ்சதுக்கு, அப்புறம்லா இருக்கு வேடிக்கை' என்று நிர்மலா டீச்சர் சொன்னபோதுதான் ஆகச் சிறந்த கவிஞனான எனக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று புரிந்தது. எனக்கு முன் வரிசையில் எந்தப் பிரச்னை வந்தாலும் சந்தேக கேஸில் எப்போதும் சிக்கும், வில்லாதி வில்லன்கள் முத்துப்பாண்டி, சிவபெருமாள், கந்தையா, கொம்பையா, ரவி, மகேஷ், சங்கர் என ஒரு பெரிய லிஸ்ட்டே நின்றதுதான் அப்போதைய ஆறுதல் எனக்கு.
முதலில் முத்துப்பாண்டி போனான். 'நீதானே என் பொன் வசந்தம்’ என்று எழுதச் சொன்னார்கள். தலைவன் வேகமாகப் போய் 'நீதானோ ஏன் போன் வசந்தம்’ என்று எழுதிவைக்க, 'பதினோராம் வகுப்பு வந்ததுக்கு அப்புறமும் தமிழ் எழுதுறதப் பார் நாய்’ என்று விழுந்தது இரண்டு பூசைகள். அடுத்து, சிவபெருமாளை வெறும் பூர்ணிமா என்று எழுதச் சொன்னார்கள். பார்ட்டி கொஞ்சம் பதற்றத்தோடு 'பூற்னிமா’ என்று எழுதி, வாங்க வேண்டிய பூசைகளை வாங்கியபடி நகர்ந்துபோனான். மகேஷ் எழுதியது எந்த மொழி என்றே யாருக்கும் தெரியாததால், அவன் உச்சி முடியைப் பிடித்து இழுத்து, ஹெட்மாஸ்டர் அவனை வெளியே அனுப்பிவிட்டார். அடுத்து சங்கர். நல்ல வேளையாக எனக்கு முன்னாடி நின்றான் அவன். சங்கர் மீது ஏன் அவர்களுக்கு அவ்வளவு பெரிய சந்தேகம் வந்ததோ தெரியவில்லை... 'கண்ணே பூர்ணிமா... நீதான் என் பூமியம்மா’ என எழுதச் சொன்னார் கள். அவனும் போய் தைரியமாக எழுதினான். ஆனால், பாவம் அவன் எழுத்தும் காகிதத்தில் இருந்த என் எழுத்தும் ஒரு சாயலுக்கு அப்படியே இருந்ததால், அவனை அப்படியே அமுக்கி வெளுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
என் கண் முன்னாடியே சங்கர் எவ்வளவோ சொல்லிக் கதறிப் பார்த்தான். ஆனால், அங்கு யாருமே அதைக் கேட்பதாக இல்லை. பல நாள் திருடன் ஒருநாள் வசமாக மாட்டிக்கொண்டான் என்பதைப் போல 'முளைச்சி மூணு இல விடல... அதுக்குள்ள துரை லவ் லெட்டரா எழுதுறீங்க’ என்று ஆளாளுக்கு அவனை வெளுத்து வாங்கி னார்கள். பூர்ணிமா ஒரு மூலையில் நின்று அழுதாள். நடப்பது எல்லாவற்றையும் அண்ணன் முத்துக்குமார் நாக்கைத் துருத்தியபடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இதெல்லாம் போதாது என்று ஒரு மாதத்துக்கு முன் மகேஸ்வரி டீச்சர் பையில் இருந்த கடிதத் துக்கும் சங்கர்தான் காரணமாக இருக்கும் என்று மகேஸ்வரி டீச்சர் தன் செருப்பைக் கழட்டி அடிக்கப் போனபோது, நல்லவேளை ஹெட் மாஸ்டர் சத்தம் போட்டுத் தடுத்துவிட்டார்.
எல்லாவற்றையும் சொல்லி முத்துக்குமார் அண்ணனைப் போட்டுக்கொடுத்து சங்கரைக் காப்பாற்றலாம் என்றால், 'பூவே பூர்ணிமா... பூச்சூட வா பூர்ணிமா’ என்று கொட்டெழுத்தில் எழுதிக்கொடுத்தது நான். அதுபோக, பட்டுராஜனுக்காக மகேஸ்வரி டீச்சருக்குக் கடிதம் எழுதிக்கொடுத்ததும், அவ்வப்போது கனகா அக்காவின் பெட்டிக் கடைக்குள் பசங்க வீசி எறிந்த எத்தனையோ கடிதங்களில் பாதிக் கடிதங்களும் அடியேன் எழுதியதுதான். எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு அடி கிடைத்தாலும் பரவாயில்லை... அதை என் மேனி அப்படியே வாங்கி யாருக்கும் தெரியாமல் உதிர்த்துவிடும். ஆனால், ஆகச் சிறந்த என் கவித் திறமையை அம்மணமாக்கி எல்லாரும் அவமானப்படுத்தினால், அதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் சங்கர். ஹெட்மாஸ்டர், 'இன்னையோட உன் டீசியக் கிழிக்கறேண்டா பார்’ என்று சொல்லிக் கிளம்பும்போதுதான், தன்னைச் சாதாரணமாகக் கடந்து போக முயன்ற ஹெட்மாஸ்டரின் தொப்பையைக் கையை வைத்துத் தடுத்து நிறுத்தி, 'நான் சொல்றத நீங்க கேட்கவேமாட்டீங்களா, நான் வேற பொண்ணக் காதலிக் கும்போது, கல்யாணம் கட்டிக்கிடணும்னு ஆசைப்படும்போது இந்தப் புள்ள பூர்ணிமாவுக்கு நான் எதுக்கு லெட்டர் எழுதணும் சொல்லுங்க?’ என்று ரொம்பச் சத்தமாகச் சொல்ல... எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே அமைதியாகிவிட்டார்கள். நிர்மலா டீச்சர்தான் மறுபடியும் அவன் உச்சிமுடியைப் பிடித்து அடித்து, 'என்ன தைரியம் பாரு நாய்க்கு, நம்மகிட்டயே எப்படிப் பேசுது, அது யார்டா?’ என்று கேட்டார். 'எங்கே படுபாவி நம்ம பெயரைச் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் மகேஸ்வரி டீச்சர் ஓடி வந்து அட்வான் ஸாகவே நறுக் நறுக்கென்று சங்கர் தலையில் ரெண்டு கொட்டு கொட்டிவிட்டுப் போய் உட்காந்துகொண்டார்.
மொத்தப் பள்ளியும் கண் கொட்டாமல் சங்கரையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கண்டிப்பாக கொஞ்சம் அழகான டீச்சர்களுக்கு அப்போது இதயத் துடிப்பு எகிறியிருக்கும். 'நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க, நம்ம ஸ்கூலுக்கு வெளிய பெட்டிக்கடை வெச்சிருக்காங்கல்லா கனகாக்கா, அவங்களத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன், போதுமா?’ என்று சொல்லிவிட்டு, வேகமாக வெளியேறிவிட்டான்.
எல்லாரும் அப்படியே கொஞ்சம் நேரம் உறைந்துவிட்டார்கள். வெளியே தன் ஊனப்பட்ட இரண்டு கால்களையும் இழுத்துக்கொண்டு, கனகாக்கா தன் பெட்டிக்கடையை அப்போதுதான் மெதுவாகத் திறந்துகொண்டிருந்தார்!
எழுத்து : மாரி செல்வராஜ், ஓவியம்: ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்.
-'பரிவை' சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக