எதாவது எழுதலாமென... தொரட்டி, அம்புலி, தண்ணீர் மத்தன் தினங்கள் விமர்சனம், என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4 , சிறுகதை என எதையாவது எழுதலாமென காலையில் இருந்து முயல்கிறேன்...
பிரச்சினைகளும் மனச்சோர்வும் எதையும் எழுதவிடாமல் தடுத்துக் கொண்டே போகின்றன... ஒன்றை ஆரம்பித்து அழித்து விடுகிறேன்... மற்றொன்றை ஆரம்பிக்கிறேன்... அடுத்த வரி என்றில்லை வார்த்தை கூட சரியாக அமையாமல் அதையும் அழித்துவிட்டு வெறும் நோட்பேடை வெறித்துக் கொண்டிருக்கிறேன்.
நிகழ்வுகளும் பிரச்சினைகளுமே எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் எப்பவுமே ஏற்றுக் கொள்வதில்லை... அப்படியான சூழல்களை உடைத்து என்னால் எழுத முடியும்... அப்படி எழுதிய கதைகள்தான் வீராப்பும், இணையும்... இரண்டுமே பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தன... ஆனால் மேற்சொன்ன இரு காரணிகளும் சில நேரங்களில் எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதையும் இன்று உணர்ந்தேன்.... எதுவுமே எழுத முடியாமல்... வேலை அதிகமில்லாத ஒரு நாளை சும்மா இருந்தே தீர்த்திருக்கிறேன்.
அப்ப எதாவது பதிவு போடலாம்ன்னு யோசிச்சப்போ சமீபத்தில் எழுதிய சிறுகதைகளில் இருந்து எப்பவும் போல் சில பாராக்களைப் பகிர்வோமென மனசு சொல்லியது... அதான் இங்கே...
வெண்ணெய்யும் சுண்ணாம்பும்
"சின்னவன் விஷயமா எங்கிட்ட ஒண்ணும் பேசாதே... படிச்சித்தான் தொலையலைன்னாலும் பணங்காசு இருக்கவன் வீட்டுல பொண்ணெடுப்போம் அந்த வகையிலயாச்சும் நல்லா இருக்கட்டும்ன்னு பார்த்தா, இவரு அங்கயும் வில்லங்கம்தான் பேசுனாரு... சுந்தரவல்லி அத்தை யாருமில்லாம நாலு பொண்ணுகளை வச்சிக்கிட்டு சிரமப்பட்டுக்கிட்டு இருக்கு... அங்கதான் கட்டுவேன்னு என்னைய எதுத்துக்கிட்டு நின்னு ஒண்ணுமில்லாதவ வீட்டுல இருந்து ஒரு ஏப்புராசியக் கட்டிக்கிட்டு வந்துச்சு... எங்கூடப் பொறந்தவ மேல எனக்கில்லாத அக்கறை இவனுக்கென்ன வந்துச்சு... அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை இவுக... இவுக போயித்தான் மூணு பொட்டச்சிகளக் கரையேத்தியிருக்காக... இவுகளால எனக்கென்ன ஆச்சு... இப்ப எம்புட்டுக் கடன் வாங்கி வச்சிருக்காகன்னு தெரியலை... அதான் சனியன் தொலையட்டும்ன்னு அந்த வீட்டுக்கே புள்ளயா விட்டுட்டேனே... இனி அவுகளுக்குச் சொத்துச் சேர்த்து நானென்ன பண்ணப் போறேன்..." தட்டில் கை கழுவினார்.
"அவன எங்கயும் புள்ள விடலங்க... நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அவன் இங்கதான் வந்து நிக்கிறான்... நம்மளை விட்டுத் தள்ளிப் போகவும் இல்லை... நம்மளைத் தள்ளி வைக்கவும் இல்லை... நல்லா யோசிச்சிப் பேசுங்க... மூணு பொட்டப்புள்ளய கரையேத்தியிருக்கான்னு சொன்னீங்களே... அது மூணு இல்லங்க அஞ்சு... ஆமா அஞ்சு பொட்டப்புள்ளங்களைக் கரையேத்தியிருக்கான்... அவனால எனக்கென்ன ஆச்சுன்னு கேட்டீங்களே...நம்ம வீட்டு ரெண்டு பொட்டைக்கும் யார் செலவு பண்ணுனா... பெரியவன் படிச்சிக்கிட்டு இருந்தான்... உங்களுக்கும் சரியான வேலையில்லை... அப்ப இவன்தானே வெளிநாட்டுல போயி வேல பாத்துக் கரையேத்துனான்... அவ்வளவு ஏன்... பெரியவன் படிச்சிருக்கான்... சம்பாதிக்கிறான்னு சொன்னீங்களே... அவன் படிச்சதுக்கு செலவு பண்ணுனது யாருங்க... நீங்க மட்டும்தானா... சொல்லுங்க பார்ப்போம்... இப்பவும் பெரியவன் அவனோட வாழ்க்கைக்கு எது தேவையோ அதுக்காக மட்டும்தான் உங்ககிட்ட வந்து நிக்கிறான்... வேற என்ன பெரிசா நமக்கோ இல்ல கூடப்பொறந்ததுகளுக்கோ செஞ்சிட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்... கல்யாணத்துக்கு முன்னால கஷ்டப்பட்டு சம்பாதிச்சதையெல்லாம் எங்கே... யாருக்காகச் செலவு பண்ணுனான்..? கூடப் பொறந்ததுகளுக்காக இங்கதானே எல்லாத்தையும் போட்டான்... இப்பவும் கூடப் பொறந்ததுக வீட்டுல நல்லது கெட்டதுன்னா அவன்தானே முன்னாடி நிக்கிறான்... பெரியவன் இல்லையே... இன்னைக்கி நெலமைக்கு பணங்காசு இல்லைன்னாலும் அவன்தாங்க பெரிய மனுசன்..." கண் கலங்கினாள்.
பெத்த சுமை (ஒரு போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன்)
"போ அப்பத்தா... நீ ஏன் அங்க போயி ஆறு மாசம் இருக்கணும்... போய் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதானே... இங்க உனக்கென்ன பிரச்சினை...?"
"வா... வெளியில போவோம்..." என பேத்தியை அழைத்துக் கொண்டு வெளியில் நின்ற வேப்பமரத்தடிக்குக் கூட்டி வந்து "இது அப்பாக்களோட முடிவும்மா... அப்பத்தா என்ன செய்ய முடியும் சொல்லு..?" என்றபோது லெட்சுமிக்குக் கண் கலங்கியது.
"என்ன முடிவு இது..? பாசத்தைப் பங்கு போடுவாங்களா..?" பொட்டில் அடித்தாற்போல் கேட்டாள் பனிரெண்டு வயதான ஸ்ரீதாரிணி.
"ம்... உங்கய்யா செத்த வீட்டுக்குள்ள ஒருத்தனே என்னை வச்சிக்க முடியாதுன்னு நீ ஆறு மாசம்... நான் ஆறு மாசம்ன்னு பேசி முடிச்சிட்டானுங்க... நான் என்ன சொல்ல முடியும்... உங்கய்யா இருக்கவரைக்கும் நான் மகாராணி... இப்ப உங்கப்பனுகளுக்கு தேவையில்லாத ஒரு பொருள்... நீ வச்சிக்க.... நீ வச்சிக்கன்னு மாறி மாறிக் கூறு போட்டானுங்க... கடைசியில ஆறு மாசக் கணக்குக்கு வந்தானுங்க...” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"அழாதீங்க அப்பத்தா..."
"ம்... நல்லாப் படிக்கணும்... நல்ல புள்ளைன்னு பேரெடுக்கணும் சரியா..?"
"ம்... நீங்க இங்க இல்லைன்னா எனக்கிட்ட ஸ்கூல்ல நடந்ததெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க அப்பத்தா... நீங்க சொல்ற மாதிரி கதை சொல்ல மாட்டாங்க... தலை குளிச்சா தொடச்சி விட மாட்டாங்க... எல்லாத்துக்கும் அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க... அப்பா எதையும் கேக்கவே மாட்டாங்க... நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்பப் போரடிக்கும் அப்பத்தா..."
குதிரையெடுப்பு
குதிரையெடுப்பு அன்னைக்கு மட்டும் மழையில்லாமப் பாத்துக்க தாயின்னும் வேண்டிக்கிட்டாங்க.
தேவகோட்டை சிலம்பணி பிள்ளையார் கோவிலைச் சுற்றி குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன... ஒவ்வொரு குதிரையையும் நால்வர் தூக்கத் தயாராய் காத்திருந்தார்கள்.
பூஜாரி இடமிருந்து வலமாகத் தீபம் காட்டியபடி வந்தார்.
'அதென்ன தீபம் அங்கியிருந்து காட்டினாத்தானா... இங்கயிருந்து காட்டினா சாமி ஏத்துக்காதா...?' என வலப்பக்க கடைசியில் நின்ற கண்ணன் அருகிலிருந்த வீராச்சாமியிடம் கேட்டான்.
'இதெல்லாம் ஒரு குத்தமாடா... அவரு பொறகாரம் வார முறையில காட்டுறாரு... எங்கிட்டிருந்தோ காட்டட்டுமே... பேசாம இருங்கடா... பிரச்சினையை இழுத்துறாதீக...' என அடக்கினார்.
காரைக்குடி அருளானந்து டிரம்செட்டின் அடி ஊரையே குலுக்கிக் கொண்டிருந்தது... ஆடாதவர்களையும் அந்த அடி ஆட வைத்தது. ஏய் முத்துப்புள்ளக்கிட்ட புள்ளைய வாங்கிக்கங்க... அவ ஆட ஆரம்பிச்சிருவா... அப்புறம் புள்ளைய விட மாட்டான்னு ஒரு பெரிய மனுசி கத்திக்கிட்டே போக, சில இளவட்டங்கள் 'த்தாத்தா... த்தாத்தா...' என தப்புக்கு ஏற்ப ஆடினார்கள்.
யூசுப் பாய் வானத்தை விட்டுக் கொண்டே முன்னே நடந்தார். குதிரைகள் ஒவ்வொன்றாய் தூக்கப்பட்டு... ஊர்வலமாய் கோவில் நோக்கி நகர ஆரம்பித்தன.
இத்தனை வருசமில்லாத திருவிழா என்பதால் கூட்டம் அலை மோதியது.. பிள்ளையார் கோவிலில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில்வரை நிறைபெருக்காக ஆட்கள்...
அவர்களுக்கு இடையே 'பாம்...பாம்' என்றபடி ஐஸ் வண்டிகள்...
வழி நெடுக தண்ணீர் மோர் பானகப்பந்தல்கள்...
சாக்லெட், சுவிட் கொடுக்கும் செட்டியார்கள்...
பொங்கல் புளியோதரை கொடுக்கும் பெரும் பணக்காரர்கள்...
வழியெங்கும் புதிதாய் முளைத்த வளையல், அல்வா, பாத்திர, சர்பத் கடைகள்...
பூ மாலைக் கடைகள்.. கூடையில் பூ விற்கும் கிழவிகள்...
பொறி உருண்டை விற்பவர்கள்...
ஊசி, பாசி விற்கும் குறவர்கள்...
மண்பானை விற்பனைக் கடைகள்...
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள்....
ஒரு வழியாகக் குதிரைகள் கோவிலை வந்து அடைந்து வரிசையாக வைக்கப்பட்டன...
கதைகள் எப்படியிருக்கு... நல்லாயிருக்கும்ன்னு தோணுதா...?
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
பெத்த சுமை - மனசு பலவற்றை பேச நினைக்கிறது...
குதிரையெடுப்பு - விறுவிறுப்பு...
// நிகழ்வுகளும் பிரச்சினைகளுமே எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் எப்பவுமே ஏற்றுக் கொள்வதில்லை... //
"இதற்கென ஒரு சிந்தனை பதிவே எழதலாம்" எனும் சிந்தனை எனக்கு...!
வழக்கம்போல ரசிக்க வைக்கும் வரிகள்..
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
ஆஹா
எழுதுங்க அண்ணா....
வாசிக்க ஆவல் .
தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா?
மனசு முழுவதும் அங்கு போக முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மனசோர்வா?
நீங்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு அத்தனையும் அருமை.
உங்களின் நடை எங்களை அதில் லயிக்க வைத்துவிடுகிறது.
தீபாவளிக்கா... ஊரில் இருந்து வந்து ஒரு வருடத்துக்கும் மேலாச்சு.
நிறைய பிரச்சினைகள்.... இன்னும் எழ முடியாமல் திணறடிக்கின்றன.
அதன் சோர்வே அம்மா...
கருத்துக்கு நன்றி.
தங்கள் வாழ்த்துக்களே என்னை எழுத வைக்கின்றன.
ரொம்ப நன்றி ஐயா.
வித்தியாசமான தலைப்புகள். அருமையான வரிகள் கதை நடை. வாழ்த்துகள் குமார்.
துளசிதரன், கீதா
குமார் முதல்ல சொல்லிருக்காப்லதான் எனக்கும் பதிவுகள் எழுதுவதில் சுணக்கம் வந்துவிடுகிறது...நிகழ்வுகளும் பிரச்சனைகளும் எழுத்தைப் பின்னுக்குத் தள்ளுவதில் காரணிகள் தான் குமார். பல சமயங்களில். ஒரு சில சமயங்களில் மட்டுமே அதையும் மீறி எழுத முடிகிறது.
கீதா
கருத்துரையிடுக