கனவுப் பிரியன்...
இணையத்தின் மூலம் எனக்குள் வந்தவர்... முகநூலில் தொடர்பு கொண்டு, பின்னர் போனில் பேசி... தொடர்ந்த அன்பில் அபுதாபி ஐ.எஸ்.சியில் நடந்த பாரதி நட்புக்காக பட்டிமன்ற நிகழ்வில் எங்கள் நட்பின் சந்திப்பு நிகழ்ந்தது. அன்று நான், கில்லர்ஜி அண்ணா மற்றும் கனவுப் பிரியன் அண்ணா மூவரும் முதல் சந்திப்பில் நீண்ட நாள் உறவு போல் அளவளாவிப் பிரிந்தோம். அதன் பின்னும் போனிலேயே தொடர்பு... நேற்று அவரின் புத்தகம் கொண்டு வந்து கொடுத்தபோது இரண்டாம் முறை சந்திப்பு...
சரி புத்தகத்துக்கு வருவோம்...
நானும் என்னோட முதல் சிறுகதைத் தொகுப்பை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு முதல் முறை போனில் சொல்லியிருந்தார். அவர் புத்தகப் பணி முடித்து ரத்னவேல் ஐயாவின் முகநூல் செய்திகளில் பலருக்கு அனுப்பிய விவரங்களை தினமும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒருநாள் புத்தகம் வந்ததும் கொண்டு வந்து தருகிறேன் என்று போன் செய்தார். பின்னர் அவருக்கு வந்த நான்கு புத்தகத்தில் எனக்காக ஒன்றும் எடுத்து வைத்திருந்து நேற்று நண்பரின் காரில் வந்து என் இருப்பிடத்திலேயே கொடுத்துச் சென்றார்.
கூழாங்கற்கள்... விதவிதமான வடிவங்களில் தண்ணீர் உரசும் கரையோரம் கிடக்கும்... பார்க்க அழகாய் எல்லாரையும் கவரும்... அப்படித்தான் இதில் இருக்கும் இருபத்தியோரு கதைகளும் வெவ்வேறு கதைக்களத்தில் வாசிப்பவரைக் கவர்க்கிறது. சிறுகதைகள் வாசிக்கும் போது அதன் போக்கில் நாம் பயணிக்க வேண்டும்... அப்படிப்பட்ட கதைகள்தான் நமக்குள் அதன் சந்தோஷம், வேதனை, வலி என எல்லாவற்றையும் இறக்கிச் செல்லும். அப்படியான கதைகள் இதில் அதிகம் இருக்கின்றன.
நம் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி.இராஜநாராயணன் அவர்களின் வாழ்த்தும்.... எழுத்தாளர்கள் திரு. இரா. நாறும்பூநாதன், திரு. சுதாகர் கஸ்தூரி, திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பார்வையில் அணிந்துரையும்... திரு.ஆர்.ஷாஜகான் அவர்களின் வாழ்த்துரையும் தாங்கி... கவிஞர். வதிலை பிரபா அவர்களின் ஓவியா பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் கூழாங்கற்கள், கனவுப் பிரியன் அண்ணாச்சியின் முதல் புத்தகம் என்பதைவிட முத்தான புத்தகம் என்று சொல்லலாம்.
'நீ புக்கு போடலைன்னு இப்ப எவன் அழுதான்?' என்று ஆரம்பிக்கும் இவரின் என்னுரை என்னை ரொம்பப் பாதித்தது. அவரின் வாழ்க்கை... அப்பா, அம்மா மறைவு... சிறுவயதில் குடும்பப் பொறுப்பு... அப்பாவின் பிறந்தநாள் என்ன என்பதை அறிய முயற்சித்து அவரின் டைரிகளை வாசிக்க நேர்ந்தது குறித்தும் அதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் குறித்தும் உள்ளது உள்ளபடி காட்சிகளாய் விரியும் போது நம் அப்பாவின் பிறந்தநாள் எப்போது என்பது நமக்குத் தெரியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்து 'தெரியாது' என்ற பதிலும் முளைத்த போது வெட்கமாக இருந்தது. கல்லூரி காலத்தில் நான் கதை எழுத ஆரம்பித்த போது 'பெரிசா கதை எழுதிக் கிழிக்கப் போறாரு...?' என வீட்டிலேயே சொன்னார்கள். ஆனால் இன்று உன் எழுத்து நடை நல்லாயிருக்கு நிறைய எழுது அப்படின்னு முகம் தெரியாத நட்புக்கள் சொல்லும் போது நாமும் ஏதோ எழுதிக் கிழித்திருக்கிறோம் போல என்று தோன்றுகிறது. அப்படித்தான் இவரும் ஜெயித்திருக்கிறார் என்பதால்தான் தொடர்பே இல்லாமல் தொடர்பில் வந்து அதுவும் அபுதாபியில் இருவரும் சந்தித்துக் கொள்ளவும் முடிகிறது போலும்.
இதுவரை நூல் விமர்சனம் எழுதிய அனைவரும் 'அவரு அணில் கும்பளே மாதிரி' என்ற கதையைப் புகழ்ந்திருந்தார்கள். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக ரசிகர்களை எல்லாம் அந்த ஜுரம் பிடித்துக் கொள்ளும். இங்கு இவர்கள் வேலைக்கு வந்த இடத்தில் விளையாடும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, நானும் நிறைய பார்த்திருக்கிறேன்... வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் நிறையப் பேர் கிரிக்கெட் விளையாடுவதை... அதை வைத்து எழுதிய கதையில் நகைச்சுவைப் பந்தை வீசி வாசிப்பவர்களை சிரிக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார். போட்ட பந்தெல்லாம் சிக்ஸருக்குப் போனாலும் கடைசியில சொன்னானுங்க பாருங்க 'அவரு அப்படியே அணில் கும்ளே மாதிரி...' அதுதான் கதையை வாசித்து முடிக்கும் போது நமக்குள் சிரிப்பை தேக்கி வைத்துச் செல்கிறது.
(எழுத்தாளரின் கையெழுத்துடன்) |
ஒரு பொண்ணு நம்மக்கிட்ட சிரிச்சி பேசிட்டா போதும் சுற்றியுள்ளவர்கள் காதல் கத்திரிக்காய் என்றெல்லாம் சொல்லி ஏத்திவிட, அவளிடம் நாம் நடந்து கொள்ளும் முறையால் அந்த நட்பை இழக்க நேரிடும்... இது பலருக்கு நடக்கும் நிகழ்வு... 'நீயா இப்படி... உன்னை நான் எப்படி நினைத்திருந்தேன் தெரியுமா?' அப்படின்னு அவங்க விலகிப் போகும் போது நம்மை நாமே கொலை செய்து கொள்ளலாம் போல் தோணும். இந்தக் கதையில் அவள் விளக்கமாய் பேசி தனது ராஜினாமாவை எழுதுவது போல் முடித்திருந்தாலும் அவனுக்கு காலமெல்லாம் அது மனதை அரித்துக் கொண்டேதான் இருக்கும் என நம்மை எண்ண வைக்கிறது. 'ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண்'.
இப்படித்தான் மனிதரைப் பார்த்து எடை போடாதீர்கள் என்பதை குண்டு பாகிஸ்தானியும்... மனிதர்களை விட விலங்குகள் மீது பாசம் கொண்டவள் என்பதை 'வடிவு', வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் சுயமாய் சம்பாதித்து அதன் மூலம் மற்ற முதிய நண்பர்களையும் புதிய முயற்சிக்கு இழுக்கும் 'பனங்கொட்டை சாமியார்', வெளிநாட்டில் இருக்கும் நண்பன் மனைவியை சந்தேகித்து அனுப்பும் மெயிலும் அதன் பின் அவனுக்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கும் போது அருகிருந்து பார்க்கும் அவன் மனைவியிடம் பேசியே அந்த மெயிலில் அவன் சொன்ன அத்தனை காரணங்களுக்கும் பதிலைப் பெற்று ஒன்றுமே பேசாமல் கண்ணீரிலேயே நன்றி சொல்ல வைக்கும் 'ரபீக் @ ஜிமெயில்.காம்' அரபிப் பெண்கள் பற்றி, அவர்களின் வாழ்க்கை பற்றி தவறான கண்ணோட்டத்தை உடைக்கும் 'ஜைனப் அல் பாக்கர்'. என எல்லாமே வித்தியாசமாய்... இதேபோதான் இங்கு சொல்லாத மற்ற கதைகளும் பயணிக்கின்றன. எல்லாம் சொல்லிச் சென்றால் எல்லையில்லா மகிழ்வில் நாலைந்து பதிவுகளாகப் பயணிக்க வேண்டியிருக்கும்.
கதைகள் எல்லாம் வெளிநாட்டுக் களத்தில் பயணித்தாலும் ஆசிரியர் மனசுக்குள் தன்னோட ஊர்ப் பாசம் இருப்பதால்தான் இடையிடையே ஊரும் உறவுகளும் நண்பர்களும் வந்து போகிறார்கள். கதைகளில் அவர் தொழில் சார்ந்த குறிப்புக்கள் எல்லாம் வருகின்றன. நாம் அறிந்திராத பல மிஷின்கள், அது சார்ந்த விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். கதைகளை வாசிக்கும் போது எல்லாமே அவரின் தொழில் நிமித்தமான பயணங்களில் கிடைத்த அனுபவங்களே என்றும் தோன்றுகிறது. ஏனெனில் அனுபவங்கள்தானே அழகான சிறுகதைகளாக விரிகின்றன.
ஒவ்வொரு கதையை வாசிக்கும் போது அழகான எழுத்து நடை நம்மை அசரடிக்கிறது. இருந்தாலும் தற்போது அவரின் முகநூல் பக்கத்தில் வாசிக்க கிடைத்த 'தட்டுக் கடை' உள்ளிட்ட சில புதிய கதைகளில் எழுத்து நடை இன்னும் மெருகேறி இருப்பதாய் உணர்கிறேன்... புத்தகத்தில் இருக்கும் கதைகளில் சில இடங்களில் எழுத்து நடை சற்றே விலகிப் போயிருப்பதாய் தோன்றியது. இருப்பினும் எழுத எழுதத்தான் கையெழுத்து நல்லாயிருக்கும் என்பது போல் தொடந்து பயணிக்கும் போது மிகச் சிறப்பாக எழுதுவார் என்பதில் ஐயமில்லை.
ரொம்பப் புகழாதீங்க... உண்மையான கருத்தைச் சொல்லுங்க என்று நீங்க சொல்றது கேட்கிறது. உண்மையிலேயே கூழாங்கற்கள் வித்தியாசமான வாசிப்பு அனுபவம்...சனிக்கிழமை காலை எடுத்த புத்தகத்தை வேலைகளுக்கு இடையே நிறுத்தி நிறுத்தி... சரி அப்புறம் வாசிக்கலாம் என்று ஒதுக்கி வைத்தாலும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது... அதுதான் ஒரு எழுத்துக்கான வெற்றி. உப்புக்காற்று கதையில் ஒரு பக்கத்தில் பாதி இல்லை... ஆனால் உப்புக்காற்று ரொம்ப நல்லாயிருந்துச்சு... இது அவரின் எழுத்து பற்றிய குறையில்லைங்க... புத்தகத்தில் அரைப்பக்கம் குறைவாய் இருந்ததைச் சொல்லி வைத்தேன்.
எது எப்படியாகினும் சில கருத்துக்களைச் சொல்வதில் தவறில்லை என்பதால் குறைகள் என்று பார்த்தால் சில செய்திகள் பல கதைகளில் வருகிறது. நிறைய இடங்களில் எழுத்துப் பிழை சரி செய்யப்படவில்லை. எழுத்தும் ஒரே எழுத்துருவில் இல்லாமல் சிறிது பெரிதாக இருக்கிறது. அபார எழுத்து நடையில் வெளிநாட்டு வாழ்க்கையை கொண்டு வந்திருக்கும் முயற்சியில் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்குமோ என்று தோன்றியது. இதெல்லாம் பெரிய குறைகள் இல்லை... முதல் முயற்சி... எப்படிக் குழந்தை பிறந்திருந்தாலும் அதை நாம் கொஞ்சி மகிழத்தான் செய்வோம். அப்படித்தான் இதுவும்... முதல் முயற்சியிலேயே எல்லாராலும் சதம் அடிக்க முடியாது. கனவுப் பிரியன் அண்ணா 95க்கு மேல் எடுத்திருக்கிறார். இதுவே ஆகச் சிறந்த வெற்றி.... இனி வரும் படைப்புக்களில் எழுத்தாளரின் மிகச் சிறப்பான எழுத்தை நாம் வாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன்....
கூழாங்கற்கள்
கனவுப் பிரியன்
ஓவியா பதிப்பகம்
விலை : ரூ.200
தொடர்புக்கு : usooff@gmail.com
புத்தக வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை (மார்ச் - 5) அன்று நடைபெறுகிறது.
கூழாங்கற்கள்
கனவுப் பிரியன்
ஓவியா பதிப்பகம்
விலை : ரூ.200
தொடர்புக்கு : usooff@gmail.com
புத்தக வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை (மார்ச் - 5) அன்று நடைபெறுகிறது.
வாழ்த்துக்கள் அண்ணா... இந்த விதை விருட்சமாகட்டும்...
-'பரிவை' சே.குமார்.
10 எண்ணங்கள்:
அருமையான விமர்சனம்!கனவுப்பிரியனின் கதை ஒன்றை பேஸ்புக்கில் படித்தேன்,உணர்வுக்குவியலாய் எழுதி இருந்தார் நம்ம வாழ்வில் நடப்பது போல் அத்தனை அனுபவ பூர்வமாய் எழுதி இருந்தார்,னல்ல எழுத்த்தாளர்! மேன் மேலும் வளர வாழ்த்துகள்!
அதெப்படி புத்தகத்தில் அரைப்பக்கம் காணாமல் போகும்? கவனிக்காமல் விட்டிருப்பார்களோ?
த.ம
நல்ல பகிர்வு. நண்பர் கனவுப்பிரியனுக்கு வாழ்த்துகள்.
என் அப்பா பிறந்த நாள் மட்டுமல்ல, நெருங்கிய உறவுகள் பலரின் பிறந்த நாளுக்கு அவர்களுக்கு வரும் முதல் வாழ்த்து எங்களிடமிருந்துதான் இருக்கும்!
T.M. 4
ஆஹா அருமையான விமர்சனம்...விரிவான பதிவிற்கு வாழ்த்துகள்பா.
நல்ல விமர்சனம். நூலை நான் இன்னும் படிக்கவில்லை. படித்த உணர்வு ஏற்பட்டது. விரைவில் படித்துவிட்டு எனது கருத்துகளை எழுதுவேன். நன்றி.
முத்தான புத்தகத்தின் முத்தான விமர்சனம்...
நண்பர் திரு. கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் விமர்சனம் அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் நண்பர் மென்மேலும் சிரகம் தொட வாழ்த்துகள். தங்களுக்கும் எமது வாழ்த்துகள்.
நல்ல நூல் விமர்சனம் குமார். பகிர்வுக்கு மிக்க நன்றி
அருமையான விமர்சனம், புஸ்தகத்தினை வாசிக்கத்தூண்டும் என்பதில் ஐயமில்லை !
கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்' = முதல் முயற்சி... எப்படிக் குழந்தை பிறந்திருந்தாலும் அதை நாம் கொஞ்சி மகிழத்தான் செய்வோம். அப்படித்தான் இதுவும்... முதல் முயற்சியிலேயே எல்லாராலும் சதம் அடிக்க முடியாது. கனவுப் பிரியன் அண்ணா 95க்கு மேல் எடுத்திருக்கிறார். இதுவே ஆகச் சிறந்த வெற்றி.... இனி வரும் படைப்புக்களில் எழுத்தாளரின் மிகச் சிறப்பான எழுத்தை நாம் வாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன்..= அருமையான விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு பரிவை சே.குமார்
கருத்துரையிடுக