இந்தக் குணங்கள்தான் எத்தனை வகை... எல்லாரும் நல்லாயிருக்கணும் என்று நினைக்கும் குணம்... அடுத்தவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கும் குணம்... அடுத்தவனைப் பார்த்து பொறாமைப்படும் குணம்... என்னைவிட அவன் பெரியவனாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் குணம்... அடுத்தவர் வாழ்ந்தால் வயிறெரியும் குணம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனக்குத் தெரிந்து எங்கள் தமிழய்யா பிறருக்கு தீங்கு நினைத்தது இல்லை... எல்லாரும் நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கும் குணம் அவருடையது. இதுவரைக்கும் யாரையும் அதிர்ந்து பேசியதில்லை... அவருடன் நெருக்கமாகி வீட்டிற்குச் சென்று அவர்களது பிள்ளை போல் இருந்த அந்த நாட்களில் தான் சைவம் என்ற போதினிலும் ஐயாவுடன் அப்போது பேச்சுவார்த்தை இல்லாத போதிலும் எங்களுக்காக அசைவம் சமைத்து முகம் சுளிக்காமல் பரிமாறியவர் அம்மா. இன்றும் ஊருக்குப் போனதும் நான் செல்லும் முக்கிய இடங்களில் ஐயா வீடும் ஒன்று. என்னைப் பார்த்ததும் மதுரைப் பேச்சு வழக்கில் (அம்மாவின் ஊர் கோச்சடை) மிகவும் பாசமாகப் பேசுவார். தங்களது பிள்ளைகளைப் போல் வாஞ்சையுடனும் உரிமையுடனும் பேசும் அந்தக் குணத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை.
எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார்... அவருக்கு குடும்பம் குழந்தை இல்லை... நீண்ட காலத்துக்குப் பிறகுதான் ஊர்ப்பக்கமே வந்தார். அதிகமான பணம் வைத்துக் கொண்டு விதவிதமாக வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்து யார் வீட்டிலாவது சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டினார். வீடு கட்டப் போறேன் என்று அவரது இடத்தில் தச்சு செய்து அப்படியே போட்டு வைத்திருந்தார். யார் பணம் கேட்டாலும் கொடுப்பார். திருப்பிக் கொடுத்தால் நான் கேட்டேனா... வச்சுக்க... என்று வாங்க மறுத்துவிடுவார். திடீரென ஒருநாள் காணாமல் போய்விட்டார். அவரது வள்ளல் குணத்தை ஊரே சிலாகித்துக் கொண்டிருந்தது. மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு வந்தார்.... இருந்த பணமெல்லாம் செலவு செய்தார்.... கையில் இருப்பு இல்லை... சந்தனமும் சவ்வாதுமாக இருந்தவர் சாதாரண மனிதரானார். இருந்தும் ஊரார் அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்தனர். சாப்பாடு கொடுப்பவரை என்ன எப்பப்பாரு புளிக்கொழம்பே வச்சு ஊத்துறே... எங்கிட்டே நல்லா வாங்கித் திண்ணியல்ல நல்லதா செஞ்சு போட்டா என்ன என்று சண்டை போட ஆரம்பித்தார். கொஞ்சம் நாளாக நாளாக அவரின் குணம் மாறுவதை அறிந்தவர்கள் அவரை விட்டு விலக, கொஞ்ச நாள் கத்திப் பார்த்தார்.... திட்டிப்பார்த்தார்... ஒருநாள் காணாமல் போய்விட்டார்... மனிதனின் குணம் ஒரு குரங்கு என்பதற்கு இவர் உதாரணம்.
எங்களது உறவில் ஒருவர் இருக்கிறார். அவரது குணம் என்னவென்றால் தன்னை மீறி எவனும் இருக்ககூடாது. எதுவாக இருந்தாலும் தான்தான் முதலில் வாங்க வேண்டும்... செய்ய வேண்டும்... என்ற குணம் படைத்தவர். விரலுக்கேத்த வீக்கம் வேண்டுமென சொல்லுவார்கள். இவர் வீக்கம் பெரிதானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கொண்டவர். நீ வண்டி வாங்கிட்டியா... நான் கார் வாங்குறேன்... நீ வீடு இந்த மாடல்ல கட்டிட்டியா... நான் இதைவிட பெட்டரா கட்டுறேன்... நீ சில்வர் தட்டில் சாப்பிடுறியா... நான் வெள்ளித்தட்டில் சாப்பிடுறேன்... என எல்லாவற்றிலும் மற்றவர்களுடன் போட்டியிடும் குணம். வயதாக ஆக இந்த பொறாமைக் குணம் கூடிக் கொண்டே போகிறதே ஒழிய இன்னும் திருந்தவில்லை.
எங்க பெரியம்மா இருந்தாங்க... அடுத்தவங்களுக்கு கொடுத்து உதவுற குணத்துல அவங்களுக்கு நிகர் அவங்கதான்... அவங்க கொடுத்துக் கொடுத்து சிவந்த கைக்குச் சொந்தக்காரவங்க... எங்க வீட்ல நாங்க படிக்கும் போதெல்லாம் அவ்வளவு வசதியில்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை பலகாரங்கள், காய்கறிகள், அரிசி அது இது என்று கூடை நிறைய அள்ளிக் கொண்டு வந்துவிடுவார்கள். எங்க வீட்டுக்கு மட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சின்னம்மா வீட்டிற்கும் பொருட்கள் வரும். அவரால் முடிந்தவரை எங்களுக்குச் செய்து கொண்டே இருந்தார். நாங்கள் அவருக்கெனச் செய்தது கொஞ்சமே... அவர் எங்களுக்குச் செய்ததை சொல்லில் அடக்க முடியாது. பெரியம்மாவின் குணம் அவரோடு போய்விட்டது. பெரியம்மா வீட்டுச் சொந்தமும் சுருங்கி விட்டது.
இங்கே பார்த்த குணங்கள் சில மட்டுமே... ஊரில் ரொம்ப நல்லவன்னு பேர் எடுத்துட்டா அவனா அவன் தங்கம்... அவனோட குணம் யாருக்கு வரும்... ஆத்தான்னு சொன்னா அம்புட்டுப் பாசம் என்பார்கள்... இதே கெட்டவன்னு பேர் எடுத்துட்டா அதுவா அது சரியான தறுதலை... அதுகூட் சேந்தியன்னா நீயும் பாழாப் போகவேண்டியதுதான் என்பார்கள். இதே சண்டையிடும் பெண்ணாக இருந்தால் அவ ஒரு கிறுசுகெட்ட குணங்கொண்டவ... சண்டைக்கு சடபுத்ரகாளியா வந்துருவா என்பார்கள். எல்லாரிடமும் சிரித்துப் பேசும் பெண்ணாக இருந்தால் எப்பவும் ஆம்பளைகளுக்கிட்ட இழிச்சிக்கிட்டு பேசிக்கிட்டுத் திரிவா... இவ பொம்பளையா என்பார்கள். இதே மாதிரி சவுந்தரக்காவா அது மாதிரி அடுத்தவங்களுக்குச் செய்யிற குணம் வேற யாருக்கும் வராது என்றும்... முத்தக்காவா எச்சிக்கையால காக்காய் விரட்ட மாட்டாளே... அவகிட்ட போயி கேட்டா என்ன கிடைக்குன் என எல்லாருடைய குணங்களையும் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.
இருக்கும் போது எப்படி இருந்தாலும் இறந்தபின் ரொம்ப நல்லவன்பா... அடுத்தவன் நல்லாயிருக்கணுமின்னு நினைக்கிற குணம் கொண்டவன்பா... எல்லாருக்கும் செய்யணுமின்னு நினைக்கிற குணம் கொண்டவன்யா என்று ஊர் பேச வேண்டும். அடுத்தவனுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவன் கெட்டுப் போகட்டும் என்று நினைக்காத குணம் நம்மில் இருந்தாலே போதும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து செல்லலாம்...
மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்
15 எண்ணங்கள்:
வணக்கம்
மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பதிவு சகோதரரே...
நம் கையில் உள்ள விரல்கள் அனைத்துமே
ஒரே அளவில் இருப்பதில்லை..
அப்படியே இருந்தாலும் அதில் சுவாரஸ்யமும்
பயனும் இருக்காது..
அதுபோல பல குணங்கள் கொண்ட மனிதர்களுடன்
வாழ்ந்தால்தான் உலகில் வாழ்ந்ததுபோல ஓர் உணர்வே ஏற்படும்.
யாரும் நம்மால் கெட்டுவிடக்கூடாது...
மனத்தால் கூட யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருந்தாலே
போதும் அதுவே நற்குணம் என்று நீங்கள்
முடித்திருக்கும் விதம் ஏற்புடையது..
வழிமொழிகிறேன்.
அருமை நண்பரே.
மனிதர்கள் பலவகை....
கேரக்டர் மனிதர்கள்....!
மனிதனின் குணங்களை அனுபவத்தோடு சொன்னது அருமை...!
அடுத்தவர்களை எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சந்தோசப்படுத்தினால், முடிவில் சொன்னது நடக்கும்... நல்லதொரு அலசலுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
துன்பத்திற்கு மருந்து என்ன...? முந்தைய பகிர்வின் தொடர்ச்சியாக...
குறளின் குரலாக... : நான் + துன்பம்
அருமையான பகிர்வு!மனிதரில் இத்தனை நிறங்களா?முன் வினைப் பயன்!!!
தொடர்ந்து எழுதுங்க,நேரம் கிடைக்கும் பொழுது தங்கள் பகிர்வுகளை வாசிக்கிறேன்.
கனமான விஷயங்களையும் சர்வ சாதாரணமாகப் பதிவிடுகின்றீர்கள்..
அருமையான பதிவு!.. நன்று!..
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்கிறது குறள்.
மாறும் குணம் கொண்ட மனிதர்களின் மனம் ஒரு குரங்குதான்!
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மகேந்திரன் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க யோகராஜா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
எப்படியிருக்கீங்க....
என் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம் அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக