மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 செப்டம்பர், 2013

புரிதல் இருந்தால்...

ணவன் மனைவிக்குள் புரிதல் என்பது இருந்தால் அவர்களின் வாழ்க்கை கடைசி வரைக்கும் இனிமையானதாக இருக்கும். அதே நேரத்தில் புரிதல் இல்லாத வாழ்க்கையாக அமைந்து விட்டால் வாழ்க்கை என்பது வாழப்பிடிக்காமல் போய்விடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

கணவனோ மனைவியோ தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கவும் செய்தால் போதும் வாழ்க்கை த் தேர் சந்தோஷமாக நகரும். அதற்காக எதைத் தொட்டாலும் நான் தட்டிக்கேப்பேன் என்று  சொன்னால் வாழ்க்கையையும் தட்டிவிட்டுட்டுப் போக வேண்டியதுதான். 

சென்ற வாரம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அறையில் இருந்தோம். அப்போது ஒரு அண்ணனுக்கு ஊரில் இருந்து போன்... அவரது மனைவிதான் அழைத்தார். அண்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டாவது மகளின் திருமணத்திற்காக போய்விட்டு சென்ற மாதக் கடைசியில்தான் மீண்டும் இங்கு வந்தார். எப்பவும் அவரது மனைவியுடன் பேச ஆரம்பித்தால் சந்தோஷமாகப் பேசுவார். இங்க பாரு கடலை போட ஆரம்பிச்சிட்டார் என்று அறையில் சிரிப்பார்கள். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் இருக்கும். எப்பவும் போல்தான் போனை எடுத்தவர் வேகமாக வெளியில் சென்று பேசினார்.

அவர் வெளியில் சத்தமாகப் பேசியது கேட்கவும் வெளியில் சென்று பார்த்தால் யாருடனோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.  பொண்ணு கொடுத்த இடத்துல எதுவும் எதிர்பார்க்கிறார்கள் போலன்னு நெனச்சுக்கிட்டோம். ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்து அமர்ந்தவர் அவராகவே மெதுவாக ஆரம்பித்தார். இவரது மனைவி வீட்டில் இட்லி அவிழ்த்து விற்பார்கள் போல, அங்க வந்து எதோ ஒரு தீப்பெட்டி இவர் ஊருக்கு போயிருந்த போது வேறு பெண்ணுடன் இருந்தார் என்று பத்த வைத்துவிட்டு போயிருக்கிறது.

இவரைப் பற்றி நன்கு புரிந்து வைத்த மனைவி என்ன செய்திருக்க வேண்டும். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்து இருக்கவேண்டும். அதைவிடுத்து இவருக்கு போனடித்து அவர்கள் சொல்வது உண்மைதான் என்று வாதிட்டிருக்கிறார். இவரும் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணி, தெய்வங்கள் மீது சத்தியம் பண்ணி புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார். இத்தனை வருசமாகப் புரிதலுடன் வாழ்க்கை நடத்திய மனைவி இந்த ஒரு விசயத்தில் தான் சொல்வதே சரியென்று சொல்லி சண்டைபிடிக்க, இவர் இனி உன்னுடன் பேசமாட்டேன்... எப்போ இது உண்மையில்லைன்னு தெரிஞ்சு வர்றியோ அன்னைக்குப் பேசுறேன்னு சொல்லி போனை வைத்துவிட்டு மாமியாருக்குப் போன் பண்ணி சத்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

இங்கே இவரைப் பற்றி, சாதாரண கிளினிங் கம்பெனியில் இரவு வேலை பார்க்கிறார். அவர்களுக்கு என இருக்கும் கேம்பில் தங்காமல் எங்கள் அறையில் தங்கிக் கொண்டு பகலில் சாப்பாடு தயார் பண்ணித் தருவார். மேலும் காலையில் இருந்து மாலைக்குள் மூன்று வீட்டில் சமையல் வேலை பார்க்கிறார். ஒரு இடத்தில் வாரம் ஒருமுறை கிளினீங் பண்ணுகிறார். தூக்கம் என்பது அவருக்கு வேலை செய்யுமிடத்தில் இரண்டு மூன்று மணி நேரம், மதியம் ஒரு இரண்டு மணி நேரம் அவ்வளவுதான். கஷ்டப்பட்டு இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்துவிட்டார். பையனை இஞ்சினியரிங்க் படிக்க வைக்கிறார். இன்னும் ஒரு பொண்ணு இருக்கு. இவ்வளவு கஷ்டம் யாருக்காகப்படுகிறார்? ஊரில் ஒரு ஓட்டலை வைத்துக் கொண்டு இருக்கத் தெரியாமலா இருபது வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகிறார். அவருக்குத் தேவையென்றால் இங்கு கிடைக்காதா என்ன ஊரில் போய்தான் தவறு செய்ய வேண்டுமா? எதுவாகயிருந்தாலும் நன்கு யோசித்து நம்மவர் செய்திருப்பாரா என்று யோசித்து கேட்கிறவிதமாக கேட்டிருக்கலாம். இங்கே பெண்புத்தி பின்புத்தியாகிவிட்டது.

எங்கள் அறையில் தண்ணி அடிக்க அனுமதியில்லை என்பதால் தண்ணியடித்த அவரை தடுத்து அடிக்கவிடாமல் வைத்திருந்தோம். அன்று சண்டை போட்டதும் எனக்கு மனசு சரியில்லை இன்று ஒருநாள் கிச்சனில் வைத்து அடிச்சிக்கிறேன்னு சொன்னார். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. வாங்கி வந்து அடித்துவிட்டுத்தான் படுத்தார். இப்போ மனைவி போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. விட்டுப் பிடிப்போம் என்கிறார்... விரைவில் சரியாகும்... இருந்தும் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஆத்மா இங்கே காயப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான விசயந்தானே? 

கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருந்தால் வாழும் காலம் வரை ஒன்றாக வாழ்ந்து இறப்பிலும் ஒருவர் பிரிவை ஒருவர் தாங்காமல் இறப்பார்கள் என்பதற்கு பிரபலத்தை உதாரணமாக சொல்லணும் என்றால் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியை சொல்லலாம். இதே பிரபலமில்லதா ஜோடி என்றால் எங்க சின்னையாவை சொல்லலாம். அவரும் அப்பத்தாவும் அப்படி ஒரு அந்நியோன்யம்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ரொம்ப புரிதல் இருந்ததால்தான் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்கள் போல. எங்கு சென்றாலும் இருவரும்தான் செல்வார்கள். சண்டைக்குப் போனாலும் கூட... இருவரும் சண்டைக்கு கிளம்பிட்டால் நாங்க ஐயாவும் அப்பத்தாவும் முகூர்த்தம் சொல்லக் கிளம்பிட்டாங்கன்னு சொல்லிச் சிரிப்போம்.

இருவரும் இரவில் சேர்ந்து தண்ணியடிப்பார்கள் என்று சொல்வார்கள்.  நான் பார்த்தது இல்லை.மறைந்த அந்த பெரியவர்களைத் தப்பாகச் சொல்ல மனமில்லை. ஆனால் அப்பத்தா இறந்ததும் ஐயாவின் மூளை எல்லாவற்றையும் மறந்துவிட்டது. எதோ வாழ்க்கையை ஓட்டினார் என்பதைவிட நடைபிணமானார் என்பதே உண்மை... எந்த நல்லது கெட்டதுக்கும் போவதில்லை... சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவதில்லை... நடந்தே செல்ல ஆரம்பித்தார்... நடந்து போறவரை நம்ம வண்டியில் ஏற்றினால் ஏறும் போது 'யாரு சேது மகந்தானே... எம் பேராண்டியில்ல' என்று ஏறுவார். இறங்கும் போது 'ஆமா நீங்க யாரு... இந்தக் கிழவனை கூட்டியாந்ததுக்கு நன்றி தம்பி' அப்படின்னு சொல்லுவார். எல்லாம் மறந்து வாழ்ந்தவர் அப்பத்தா நினைவில் விரைவிலேயே அப்பத்தாவிடமே போய்விட்டார்.

நமக்கான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. திருமண  வாழ்க்கையை நல்லதாகவோ... கெட்டதாகவோ மாற்றுவது இரு மனங்கள்தான். அந்த மனசுகளுக்குள் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை கடைசி வரை சந்தோஷத் தேரில் பவனி வரும். எதற்காகவும் யாருக்காவும் உங்கள் துணையை விட்டுக் கொடுக்காதீர்கள். சரியோ தவறோ எதுவாக இருந்தாலும் அதை சொல்லும்விதமாக சொல்லி வாழ்க்கையை வாழக் கத்துக் கொள்ளுங்கள்... வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

மீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசுவோம்.
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

மனசுகளுக்குள் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை கடைசி வரை சந்தோஷத் தேரில் பவனி வரும். //

உண்மை.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//கணவன் மனைவிக்குள் புரிதல் என்பது இருந்தால் அவர்களின் வாழ்க்கை கடைசி வரைக்கும் இனிமையானதாக இருக்கும். அதே நேரத்தில் புரிதல் இல்லாத வாழ்க்கையாக அமைந்து விட்டால் வாழ்க்கை என்பது வாழப்பிடிக்காமல் போய்விடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.//

மிகச்சரி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காலம் மாறிப்போச்செய்யா ஒளிச்சு மறைச்சாதான் வாழ முடியும்னுல்லா இருக்கு இந்த உலகம்....!

ஸ்ரீராம். சொன்னது…

சந்தேகம் கூட அதீத அன்பினாலேயே எழுந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். எதையும் நாம் எடுத்துக் கொள்வதில்தானே இருக்கிறது? கஷ்டம் வந்தால், சோகமாக இருந்தால் உடனே தண்ணி என்ற கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை.

எங்கள் ஏரியாவில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் மனைவி ஒருமாதத்துக்கு முன் காலமானார். உற்சாகமிழந்து காணப்பட்ட அவரின் 80 வயதுக் கணவர் சென்ற சனிக்கிழமை மறைந்தார்.

கவியாழி சொன்னது…

ஒளிவு மறைவில்லாத புரிதல் வேண்டும் உண்மைதான்



வெங்கட் நாகராஜ் சொன்னது…

//நமக்கான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. திருமண வாழ்க்கையை நல்லதாகவோ... கெட்டதாகவோ மாற்றுவது இரு மனங்கள்தான்.//

அருமையாச் சொன்னீங்க.....

புரிதல் மட்டும் இருந்துவிட்டால்..... வாழ்வில் மகிழ்ச்சி தான் என்றென்றும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// நமக்கான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது... ///

100%

துளசி கோபால் சொன்னது…

சந்தேகம் என்பதே பெரிய நோய்:(

பாவங்க அவர்:(

என் மாமனாரும் மாமியாரும் 23 நாள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராகப் போயிட்டாங்க. அவரை அங்கேயும் நிம்மதியா இருக்கவிடாமப் போயிட்டாங்க மாமியார்ன்னு கிண்டல் செஞ்சாலும் நல்ல அந்நியோன்யமான தம்பதிகள்.

Unknown சொன்னது…

#கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருந்தால் வாழும் காலம் வரை ஒன்றாக வாழ்ந்து இறப்பிலும் ஒருவர் பிரிவை ஒருவர் தாங்காமல் இறப்பார்கள் என்பதற்கு பிரபலத்தை உதாரணமாக சொல்லணும் என்றால் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியை சொல்லலாம்.#
அருமையாக சொன்னீர்கள் ...மணிவண்ணன் சம்பத்தப்பட்ட பதிவையும் எதிர்ப்பார்க்கிறேன் !

உஷா அன்பரசு சொன்னது…

கணவன், மனைவி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை.. முழுமையாக புரிதல் இல்லை எனும்போதுதான் இப்படி சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது.

Unknown சொன்னது…

சூப்பரா சொன்னீங்க சகோ எல்லோருக்கும் ஏற்ற பதிவு

Unknown சொன்னது…

என்ன செய்ய?சில வேளைகளில் மனைவியர் அன்னியோன்யமாக புரிந்து வாழ்ந்தாலும் கூட.............சில புல்லுருவிகளின் பேச்சையும் நம்பி சமயங்களில் ஏமாந்து விடுகிறார்கள்,ஹூம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோமதி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க புவனா அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அண்ணா...
உண்மைதான்... இருந்தாலும் 80% உண்மையாக இருந்தாலும் ஓகேதான்... 20% மறைக்கலாம்...ஹி... ஹி...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
அப்படியும் இருக்கலாம். அதீத அன்புகூட கோபத்தின் உச்சிக்குச் செல்ல வைக்கும்...
இங்க சோகமின்னெல்லாம் கிடையாது அண்ணா. வியாழக்கிழமை மாலை வந்ததும் அதை தொடாவிட்டால் செத்துவிடுவோம் என்பது போல் சிலர் அல்ல பலர் திரிகிறார்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க கவியாழி ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க சகோதரி துளசி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பகவான்ஜி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க உஷா அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ சக்கரகட்டி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க சகோ யோகராஜா...
தொடரும் வருகைக்கு நன்றி.
ஆமா புல்லுருவிகள்தான் குடும்பங்களைக் கலைக்கும் சூறாவளிகள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜீவன் சுப்பு சொன்னது…

Good post kumar...!