மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் இன்று 'கெட்டவனுக்கு எட்டா?'



எட்டாம் நம்பர் என்றாலே பெரும்பாலானவர்கள் ராசியில்லாத நம்பர் என்று ஒதுக்கிவிடுவார்கள். வண்டிகளுக்கு நம்பர் வாங்கினால் கூட கூட்டுத்தொகை எட்டு வராமல் பார்த்து வாங்குவார்கள். சரி கெட்டவனுக்குத்தான் எட்டு என்பார்களே அது உண்மையா? கொஞ்சம் எட்டைப் பற்றிப் பார்ப்போமா?

கல்லூரியில் படிக்கும் போது எங்கள் பேராசிரியர் ஒருவரின் ஸ்கூட்டர் எண் ‘0440’ கூட்டுத்தொகை ‘8’. அந்த ஸ்கூட்டரில்தான் கல்லூரிக்கு வருவார். பெரும்பாலும் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தான் சோல்னாப் பை பயன்படுத்துவார்கள். ஆனால் இவரின் தோளிலும் ஒரு சோல்னாப் பை தொங்கத்தான் கல்லூரிக்கு வருவார்.

ஒருமுறை எங்க சந்தேகத்தை அவரிடம் கேட்கவும் சிரித்துவிட்டு நம்பரில் என்னய்யா இருக்கு... மனசுதான்யா எல்லாத்துக்கும் காரணம் என்றவர். எட்டுதான் சிறப்பான எண் என்றார். எப்படி என்று கேட்கவும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை எழுதுங்கள் என்றார். ஒரு நண்பனும் கரும்பலகையில் போய் எழுத ஆரம்பித்தான். அப்போது எல்லாரையும் நன்றாகப் பார்க்கச் சொன்னார். எழுதியதும் என்னய்யா பார்த்தீர்கள் என்றார். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை... எனவே அவரே விளக்கினார். ஒன்று என்று எழுதினால் மேலிருந்து கீழே வந்துதான் முடிப்போம்... இப்படியே எல்லா நம்பரும் கீழேதான் முடியும். ஆனால் எட்டு மட்டும்தான் மேலே முடியும் என்றவர், என்னோட வண்டி எண் கூட்டுத்தொகை ‘8’ தான். அதற்காக நான் கேட்டுவிட்டேனா... இல்லையே... இதோ இந்தா இருக்கிறதே இந்த சோல்னாப் பையில் பத்து லட்சம் வரை வைத்துக் கொண்டு இந்த வண்டியில்தான் போயிருக்கிறேன் என்றார்.

எனக்கு எண்கள் மீது அப்படி எதுவும் நம்பிக்கையில்லைதான். இருந்தும் எட்டுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு. பத்தாவது அரசுத் தேர்வு எண்ணின் கூட்டுத்தொகை எட்டு, அப்படியே பனிரெண்டாவது, கல்லூரி வருகைப்பதிவு எண், கல்லூரித் தேர்வு எண், பிஜிடிசிஏ பண்ணிய போது வரிசை எண், எம்.சி.ஏ. வருகைப்பதிவு எண், தேர்வு நம்பர், வங்கிக் கணக்கு எண்கள் என எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான். வீடு கட்ட நாள் பார்த்த தினம், பூஜைபோட்ட நாள், நிலை வைத்த தினம், குடிபோன நாள் எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான். பாப்பா பிறந்தது-26, விஷால் பிறந்தது-17 – இங்கும் எட்டுதான்.

இவ்வளவு ஏன் இந்த முறை வலைச்சர ஆசிரியனாய் சீனா ஐயா எனக்களித்த நாள் 02/09/2013 – கூட்டுத்தொகை எட்டு வருதா? நான் முதலில் எழுதிய பதிவு 2798வது பதிவு என்று காட்டியது அப்படிப்ப பார்த்தாலும் எட்டுத்தான். எனக்கு எப்பவும் எட்டு சிறப்பானதாகத்தான் இருக்கிறது. குபேரனாக வைக்காவிட்டாலும் வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை கெட்டவனுக்குத்தான் எட்டு என்பதெல்லாம் மூடநம்பிக்கையே... 

பகிர்வை தொடர்ந்து வாசிக்க இங்கே சுட்டவும்...
-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

மூட நம்பிக்கை

Unknown சொன்னது…

நான் கூட எட்டில் தான்(17) பிறந்தேன்.புகழ்ச்சியாக ஒன்றும் வாழவில்லை.ஆனாலும் இன்று வரை 'கை'(அந்தக் கை இல்லை,ஹி!ஹி!!ஹீ!!) நீட்டி வாழவில்லை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// 2798வது பதிவு என்று காட்டியது... //

அசத்துங்க....!

SNR.தேவதாஸ் சொன்னது…

என்னுடைய பிறந்த நாள் 12.01.1957
என்னுடைய திருமண நாள் 09.09.1979
இரண்டுமே கூட்டுத்தொகை 8 தான்.நன்றாகத்தானே உள்ளேன்.
வாழ்க வளமுடன்
னொச்சின் தேவதாஸ்

கோமதி அரசு சொன்னது…

என்னைப் பொறுத்தவரை கெட்டவனுக்குத்தான் எட்டு என்பதெல்லாம் மூடநம்பிக்கையே... //
எனக்கும் அப்படித்தான்.