மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 நவம்பர், 2017

இலக்கில்லா பேச்சின் இனிமை - 2

ழுத்தாளர் எஸ்.ராவுடன் பேசிக் கொண்டே ஷேக் ஷயீத் பள்ளியின் அழகை ரசித்தபடி,  நடந்து சென்றதை சென்ற பகிர்வில் பகிர்ந்திருந்தேன். 

தரையில் ஒட்டியிருக்கும் பூக்களை, சுவரில் ஒட்டியிருந்தாலும் தனியாகத் தெரியும் பூக்களை, பள்ளியில் வந்து தயாரித்துக் கொடுத்த எங்கும் இணைப்பில்லாத மிகப்பெரிய பூ விரிப்பை, ஒன்னறை, நான்கரை டன் தொங்கும் விளக்குகளை. தூண்களில் இருக்கும் கலை நயத்தை ரசித்தபடியே நாங்கள் ரசிக்கும்படியாக பேசிக்கொண்டே நடந்தார்.

ஏசியில்லாது பள்ளி குளுமையாக இருக்க கட்டிடத்தின் கீழே ஓடும் குளிர் நீர் குறித்தும் அதற்காகவே பதிக்கப்பட்ட கற்களுக்கு இடையில் அடைக்காது இடைவெளி விட்டிருப்பது, பள்ளியில் வேலை செய்யும் எல்லாருக்கும் மூன்று வேலையும் பாரபட்சம் பார்க்காமல் ஒரே மாதிரியான சாப்பாடு வழங்கப்படுவது போன்ற விபரங்களை எல்லாம் சுபான்பாய் சொல்லிக் கொண்டே வந்தார்.

வாருங்கள் சிரித்தபடி பெருமழையென பேசிக் கொன்டு செல்லும் எஸ்.ராவின் பின்னே பயணிப்போம்.


இன்றைக்கு இளைஞர்கள் குறிப்பாக பதின்ம வயதுப் பையன்கள் பெயருக்குப் பின்னே சாதியைப் போட்டு சாதியைத் தூக்கிப் பிடிப்பது குறித்த நண்பர்களின் பேச்சுக்குப் பதிலளிக்கும் போது ஆண்கள் வெளியில் செல்லும் போது சாதி பார்ப்பதில்லை ஆனால் பெண்கள்தான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் அதை விட்டால் சாதி ஒழிந்து விடும் என்றார். இது முற்றிலும் உண்மை.... பெரும்பாலும் வீடுகளில் பெண்கள்தான் மற்றவரின் சாதி குறித்துக் கேட்பதும் பேசுவதும்.  

எங்க ஊரில் கூட பள்ளிக் கல்லூரி படிக்கும் பையன்களின் வண்டிகளில் பெயரோடு சாதியும் இரண்டு படங்களும் இருப்பதைக் காண முடிகிறது. ஊருக்குள் சாதியின் பெயரோடு வரவேற்புப் பலகையும் சிரிக்கிறது.

தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். சிறுவயதில் நண்பனுடன் விளையாண்டபடி அவன் வீட்டுக்குச் செல்ல, அவன் தோசை சாப்பிட உக்காரும் போது தானும் உட்கார, அவன் தட்டில் முதல் தோசை விழ, அடுத்த தோசையை கரண்டியில் எடுத்து தனக்கு முன் நீட்டியபடி, என்ன ஆளுகடா என நண்பனிடம் கேட்டு நம்மாளுக இல்லை எனத் தெரிந்ததும் அந்தத் தோசையை தட்டில் போட்டு இனி உனக்கில்லை என்றாராம் அவனின் அம்மா. வீட்டிற்கு வந்ததும்  அம்மா அங்கெல்லாம் சாப்பிடக்கூடாது அவங்க நம்ம ஆளுக இல்லை என்று சொன்ன போதுதான் சாதி பற்றி அறிந்ததாகக் கூறினார்.

எப்போதெல்லாம் சாதி தலை தூக்குகிறதோ அப்போது கல்வி வீழ்ச்சியடைந்திருக்கும்... கல்வி உயர்ந்த நிலையில் இருக்கும் போது கல்வியாளர்கள் போற்றப்படுவார்கள். கல்வித் தரம் தாழும் போது சாதி மீண்டும் தலை தூக்க ஆரம்பிக்கும் என்றார். சாதியையும் கல்வியையும் பணமே தீர்மானிக்கிறது என்றார்.

முன்பெல்லாம் கிளினிக் என்பது வீட்டோடு இருக்கும்... மருத்துவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். தங்களது வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் மருத்துவரை அழைப்பார்கள்... அவரும் செல்வார். தங்கள் வீட்டில் விளைந்ததில் மருத்துவருக்கும் கொண்டு வந்து கொடுப்பார்கள். வீடு ஒரு இடத்தில் மருத்துவமனை மற்றொரு இடத்தில் என்பது 17 ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. அதன் பிறகே மருத்துவருக்கும் மக்களுக்குமான தொடர்பு குறைந்தது என்றார். 

இப்போது பணம் உள்ளவர்கள் மருத்துவமனை கட்டி, மருத்துவர்களை வேலைக்கு வைக்கிறார்கள்... அதனால் முன்பிருந்த அந்நியோன்யம் போய் பணம் பார்க்கும் நிலை வந்துவிட்டது என்றவர் குடும்ப நலம் விசாரித்து... தொட்டுப் பார்த்து... தொடமாலே மருத்துவம் செய்யும் மூன்று வகையை மருத்துவர்களைப் பற்றியும் விவரித்தார்.

தான் ஒரு கல்லூரி ஆசியராகத்தான் நினைத்ததாகவும் அப்பத்தான் நிறைய படிக்க முடியும் எழுத நேரம் கிடைக்கும் என்று எண்ணியதாகவும் சொன்னவர், அவரின் அண்ணன் நீ ஒரு வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர நினைக்கிறாயா இந்த பரந்த சமூகத்துக்கு சொல்லித் தர நினைக்கிறாயா... எது என்பதை முடிவு செய் என்ற போதுதான் வகுப்பறையை விட சமூகத்துக்குத் சொல்லித்தருவதுதான் சிறந்தது என எழுத வந்ததாகத் தெரிவித்தார்.

தான் படித்ததை... நான் அறிந்ததை... மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவேன்.... எனக்குத் தெரியவில்லை என்றால் அது என்ன என்பதை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்... அதை பிறிதொரு தருணத்தில் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவேன் என்றவர், நமக்கு என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றார். நாம் படித்து வைத்திருப்பதன் பலன் அதுவே என்றார்.



பழைய பிறன்மலைக் கள்ளர் குறித்துப் பேசும் போது அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள தொடர்பைச் சொன்னார்... அவர்கள் முஸ்லீமாக மதம் மாறி மீண்டும் இந்து மதத்திற்கு வந்தவர்கள் என்றும் அதனால்தான் அவர்கள் திருமணத்தில் மாப்பிள்ளை இன்றும் குதிரையில் வருகிறார் என்றும் சொன்னவர் அவர்கள் இப்பவும் சுன்னத் செய்வதாக கூறினார். இது எனக்குப் புதிய செய்தி... இதுவரை அறியாதது. சில நண்பர்கள் அவர் ஏதோ ஒரு நாவலில் இது குறித்து எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். 

நான் தற்போது நாவல் ஏதேனும் எழுதுகிறீர்களா என்று கேட்டதும் எழுதி முடியும் தருவாயில் இருக்கிறது... இனி அதை திருத்தி, இன்னும் சிலரிடம் கொடுத்து திருத்தி வாங்கி, அவர்கள் இணைக்கச் சொன்னதை, எடுக்கச் சொன்னதை எல்லாம் இணைக்கணுமா... எடுக்கணுமா என யோசித்து மீண்டும் திருத்தி பதிப்பகத்துக்கு அனுப்ப குறைந்தது இன்னும் ஆறு மாதம் ஆகும் என்றவர் எழுதுவதை விட திருத்துவதற்கே அதிக நாட்கள் எடுத்துக் கொள்வேன்... ஒரு நாளைக்கு பத்துப் பக்கம் திருத்துவதே பெரிய காரியம் என்றார். நானெல்லாம் எழுதி வைப்பதுடன் சரி... யாரிடமும் கொடுத்துத் திருத்தியதில்லை... இது ஒரு பாடம் எனக்கு.

பள்ளியின் எழிலில் மயங்கி வெளியாகி நிலாமகளின் ரசிக்கும் வெளிச்சத்தில் நகர்ந்து காரில் ஏறி, சில வருடங்களுக்கு முன்னர் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக பள்ளியின் அருகே எழுப்பப்பட்டிருக்கும் வஹ்த் அல் கராமாவிற்குச் சென்றோம். 

நினைவுத் தூண்களை எழுப்பி அதில் அந்த நாற்பது வீரர்களின் பெயர்களையும் பொறித்து, அதன் முன்னே வட்ட வடிவமாய் மைதானம் போல் ஒரு இடம் அமைத்து இருக்கிறார்கள். அதில் சிலு சிலுவென அடித்தளத்தோடு ஒட்டியும் ஒட்டாமல் காதல் பேசும் தண்ணீர், அந்தத் தண்ணீரின் பிம்பத்தில் அழகிய விளக்கொளியில் ஜொலிக்கும் ஷேக் ஷயூத் பள்ளியின் நிழலுருவம்... அதைப் பார்க்கும் போது எது நிழல்... எது நிஜம் என்பதை கண்டு பிடிக்க முடியாததொரு அழகு. யமுனையில் குளிக்கும் தாஜ்மகால்தான் இதற்கு முன்னோடி என்பதாய்தான் தெரிகிறது. அதை ரசித்தபடியே கேலரியில் அமர்ந்தோம்.

சுபான் பாய் கொண்டு வந்திருந்த டீயை ஊற்றியபோது செக்யூரிட்டி மெல்ல வந்து 'நண்பர்களே இது உயிர் நீத்தவர்களுக்கான நினைவிடம்... இங்கு எதுவும் சாப்பிடக் கூடாது என அன்பாய்ச் சொல்லிச் செல்ல, ஊற்றிய டீ பேப்பர்  கோப்பைகளில் இருந்து மீண்டும் பிளாஸ்க்கிற்குள் அடைக்கலமானது. 

பின் பேச்சு மீண்டும் பெருமழையாய்... அவர் ஆசானாய் மாறி வகுப்பெடுக்க, குண்டூசி விழுந்தால் கூட சப்தம் கேட்கக் கூடிய நிசப்தத்தோடு நாங்கள் கதை கேட்டோம். எங்களுக்கு சற்றே தள்ளி ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்து பள்ளியின் அழகை தண்ணீருக்குள் இருந்து தனது கேமராவில் விழுங்கிக் கொண்டிருந்தார்.

Image may contain: one or more people and night

நிலவும் எங்களோடு வாசகனாய் பேச்சுக்குச் செவி கொடுக்க, தொடர்ந்த பேச்சை பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

இலக்கில்லா பேச்சின் இனிமை - 1

திர்பாராமல் நிகழும் சில நிகழ்வுகள் கொடுக்கும் சந்தோஷத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. அப்படி ஒரு நிறைவான மாலையாக நேற்றைய மாலை நகர்ந்தது. சென்னையில் மழை என்ற செய்திகளைக் கேட்டபடி பாலை வெயிலில் பணிக்குச் செல்லும் தேசாந்திரிகளின் வாழ்வில் எப்போதேனும் இப்படியான நிகழ்வுகள் மனசுக்குள் சாரலாய் இறங்கி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும். அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய மாலை நிலவின் சுகந்த ஒளியில் தாஜ்மாகாலைப் போன்ற அழகோடும் நேர்த்தியோடும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அபுதாபி கிராண்ட் மாஸ்க்கில் (SHEIKH ZAYED MOSQUE) நிகழ்ந்தது.

ஒரு எழுத்தாளனின் ரசனை மிகுந்த பேச்சை, ஒரு ஹாலில் ஆயிரம் பேர்களுடன் அமர்ந்து கேட்கும் போதும், தனியே வீட்டில் அமர்ந்து வீடியோ அல்லது ஆடியோ வழியாகவோ கேட்க்கும் போதும் கிடைக்காத ஆத்ம திருப்தி அந்த எழுத்தாளருடன் ஆசுவாசமாய் அமர்ந்து ஆத்மார்த்தமாக  பேசும் போது கிடைக்கும்... இதன் சுவை அலாதியானது... அளப்பரியது. இது எப்போதும் கிடைக்காத  பேரின்பம்.

கல்லூரியில் படிக்கும் போது எங்கள் பேராசான். மு.பழனி இராகுலதாசனின் செல்லப்பிள்ளைகளாக மாலைவேளைகளில் அவர் இல்லத்திலும் அவருடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தபடியும் அந்தப் பிரம்மாவின் எழுத்தோடும் பேச்சோடும் நகர்ந்த நாட்களை நினைவில் மீட்டியெடுத்த அருமையானதொரு நிகழ்வு.

இப்படியான ஒரு நிகழ்வில், எங்கள் ஒரு சிலருக்காக மட்டுமே அந்த எழுத்தாளர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார்... அதுவும் அருகில் அமர்ந்து... தோளில் கை போட்டபடி... ஒன்றாய் நடந்து... உணவருந்தியடி.. டீக்குடித்தபடி... இன்னும் இன்னுமாய் ஒரு நிலாக்காயும் இரவை தமிழ் பருகும் இரவாக்கித் தந்தார். எத்தனை விவரங்கள்... எத்தனை ஆச்சர்யங்கள்... எண்ணிலடங்கா கருத்துக்கள்... எப்போது கிடைக்கும் இனி இது போன்றொரு தருணம்.

தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருடன் இலக்கியச் சிந்தனை நிறைந்த சிலர் மட்டுமே அளவளாவுவது என்பது எப்போதேனும் இந்தப் பாலையில் நிகழும் நிகழ்வாக இருக்கலாம்... அது நேற்று எங்களுக்கு நிகழ்ந்தது. அதாவது எழுத்தாளர் மற்றும் அந்த ஒன்பது சிந்தனையாளர்களுடன் பத்தோடு பதினொன்றாய் ரசிகனாய் நானும் இருந்தேன். 

மற்ற நண்பர்களைப் போல் அவரின் எழுத்துக்களை அதிகம் வாசித்தவனில்லை... கேள்விக்கனைகள் தொடுக்கும் அளவுக்கு இலக்கிய அறிவும் இல்லை... சிறுகதைக்கு அவர் சொன்ன இலக்கணத்தில் சிறிதேனும் கடைபிடித்து எழுதுபவன் என்பதால் நட்புக்களுக்குள் எழுத்தாளனாய் அறியப்பட்டவன் என்பதைத் தவிர வேறு சிறப்புக்கள் இல்லை என்றாலும் இலக்கிய அருவிகள் கொட்டித் தீர்க்கும் போது அதில் மணிக்கணக்கில் ஆனந்த குளியல் செய்வதில் அலாதிப் பிரியம் எனக்கு. 

நேற்றைய மாலை சாம்பார் வைத்து விட்டு கணிப்பொறியில் வெள்ளியன்று எழுதிய 'அப்பத்தா' சிறுகதையில் திருத்தங்கள் செய்துவிட்டு படம் பார்க்கலம் என்று நினைத்திருந்தவனை 'அவரு வர்றாருங்க... கெளம்பி வாங்க' என்றழைத்த அண்ணன் கனவுப்பிரியன், 'அட கெளம்பி வாங்கங்க... சும்மா முடிஞ்சா வாரேனு இழுக்காம' என்ற அன்புக் கோபம் கொள்ள.  அதன் பின்னான நிமிடங்களின் இறுதியில் அண்ணன் சுபான் அவர்களைப் பிடித்து அவருடன் பெரிய பள்ளிக்குச் சென்றோம்.

துபையில் இருந்து நேற்று எனக்கு நண்பரான நந்த குமார் என்பவரின் காரில் வந்திருந்தார். கை குலுக்கலுக்கும் போது உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். இது நாம் சொல்ல வேண்டியதல்லவா.?. அதே மகிழ்வோடு மெல்ல நடை போட்டு பள்ளியின் பாதுகாப்புச் சோதனை மையத்தைக் கடந்தோம்.

இலக்கியவாதியின் அருகில் நடப்பது கூட வரம்தான் போலும். இப்படியான  ஒரு நிகழ்வு... அதுவும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நானும் நண்பன் முருகனும் மதுரையில் இருந்து தேவகோட்டைக்கும் தேவகோட்டையில் இருந்து மதுரைக்கும் திரு.இறையன்பு அவர்களுடன் காரில் பயணித்த தினத்தில் கிடைத்தது. மீண்டும் நேற்றைய பொழுதில்... பெரிய பள்ளியைக் கண்டு அவர் வியந்து ரசிக்க, அவரோடு பேசிக் கொண்ட நடந்த நாங்கள், காலம் மெல்லக் கரையக் கரைய அந்தப் பேச்சில் அப்படியே கரைந்து... ரசித்து... வியந்தோம்.

எல்லாராலும் எல்லோரையும் பேச்சால் கட்டிப் போட முடியாது. பேசும் திறமை இருந்தாலும் வரும் வார்த்தைகள் உணர்ச்சிகளை மட்டுமே கொடுக்காமல் உள்ளத்தைக் கவரும் விதமாக அமைந்தால் மட்டுமே கேட்க்கும் மனங்களை மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அப்படியானதொரு பேச்சு... ரசனையாய்... ரகளையாய்... கட்டுண்ட மனம் ஜிமிக்கிக் கம்மலாய் ஆர்ப்பரித்தது.

இப்படி எங்களைப் பேச்சால் ஆட்கொண்டு அலப்பரிய மகிழ்வைக் கொடுத்தவர் எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன்.

தன்னுடைய கதையில் ஒரு வயதான அம்மாளின் வைராக்கியம் குறித்துச் சொன்னபோது அப்படியான ஆட்களைப் பார்த்திருப்பதாய்ச் சொன்னார். பிரபு கங்காதரன் அவர்கள் கூட உறவினர் ஒருவர் இதுபோல் இருப்பதாகவும் கணவர் இறந்தால் வருவியா என்றதற்கு சாகட்டும் என்று சொன்னதாகவும்  சொன்னார். நானும் ஒரே வீட்டுக்குள் இருபது வருடங்கள் பேசாமல் வாழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்... பல வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்குள் பேச்சு என்பது மீண்டும் துளிர்த்தது.

பிடிவாதம் என்ற கதையில் நாயகி ஒவ்வொரு விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதையும் அதனால் குடும்பம் படும் கஷ்டத்தையும் முடிவில் கணவன் உன்னோட பிடிவாதத்துக்கு முடிவு கட்ட நானே உன்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல, அவள் அழுவதாய் முடித்திருப்பதாய் சொல்லி, பிடிவாதம் பிடிக்க ஒரு பிடிமானம் வேணுமில்லையா.. அது இருந்தால்தானே பிடிவாதம் வரும். அது இல்லைன்னா வரதுல்ல என்றவர், பிடிவாத விஷயத்தில் கூட நாம் மகளின் பிடிவாதத்திலும் மனைவியின் பிடிவாதத்திலும் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கும் வேறுபாடுகளைக் குறித்தும் பேசினார்.

சிறுகதைகள் எழுதுவது குறித்துப் பேசும் போது ஒரு பொற்கொல்லர் சிறிய ஜிமிக்கி செய்யும் போது அதற்குள் நுட்பமாக நகாசு வேலைகள் பார்ப்பது போல்தான் மிகுந்த நேர்த்தியுடன் சிறுகதைகளை கையாள வேண்டும்... சிறுகதைகள் எழுதுவதென்பது அவ்வளவு சுலபமில்லை... எழுதிக் கொண்டே இருந்தால்தான் சிறுகதை எழுத்தாளனாய் நீடிக்க முடியும் என்ற போது சிறுகதைகள் எழுதுதல் கடினம் என்கிறீர்கள் என்று கேட்க, ஆம் சிறுகதை எழுதுதல் என்பது எல்லாராலும் முடியாத ஒன்று என்று சொன்னார்.

சிறுகதை எழுதுபவர்களுக்கு அந்தக் கதையே கனவில் வருமாமே என்று ஒரு நண்பர் கேட்க, எனக்கும் அப்படி வருவதுண்டு. முழுக் கதையும் எழுதி முடித்தது போல் வரும்... கணிப்பொறியில் அமர்ந்து எதிரே பேப்பரில் எழுதி வைத்திருப்பதைப் போல கடகடன்னு அடிச்சிடுவேன். சில கதைகள் எழுத அமரும் போது வார்த்தைகள் வரவே வராது.. உளிகொண்டு மெல்ல மெல்லத் தட்டி வார்த்தைகளைக் கொண்டு வர வேண்டியிருக்கும் என்றார்.

கதைகளுக்கான கருக்கள் எப்படி எடுப்பீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு பார்த்த, கேட்ட, வாசித்த செய்திகள், வாழ்வில் நடந்தவை என எல்லாமே என் கதைகளுக்கான கருவாக மாறும் என்றார். இதுவரை 250 சிறுகதைகள் எழுதியிருப்பதாய்ச் சொன்னார். நானும் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிக்கைகளில் வந்தவை, வலைப்பூவில் எழுதியவை, இணைய இதழ்கள் எழுதுபவை, எழுதி எதற்கும் அனுப்பாமல் இங்கும் பதியாமல் வைத்திருப்பவை என மனதிற்குப் பிடித்த மாதிரியான கதைகளில் டபுள் செஞ்சரி அடித்து விட்டேன் என்பதை அங்கு சொல்லவில்லை இங்கு சொல்லிக்கிறேன்.

பல்லவர்களின் கட்டிடக்கலை, முற்காலச் சோழர்களின் கற்கோவில்கள்... சிவகாமியின் சபதத்தால் வாதாபியை வென்ற கதை என எல்லாம் பேசி, திருப்புவனம் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிறிய சிற்பங்கள் குறித்துப் பேசும்போது ராஜா வெற்றிலை மடித்து ராணிக்கு கொடுப்பதையும் சிறு வெற்றிலைத் துகள் வாயில் ஒட்டியிருப்பதையும் சிற்பி வடித்திருக்கிறான், மழையில் சிற்பங்கள் நனைந்த நாளில் தடவிப்பார்த்தால் சிறிய வெற்றிலைத் துகள் தெரியும் என்றார். இராமாயணக் காட்சிகள் சிற்பமாய் இருப்பதில் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்ததை சிற்பமாக்கி, அறுபட்ட மூக்கை மட்டும் தனி சிற்பமாக அடித்தும் வைத்திருக்கிறான். அப்ப அந்த சிற்பிக்கு அறுபட்ட மூக்கை ஜூம் பண்ணத் தெரிந்திருக்கிறது பாருங்கள் என்றார்.

வரிசையாக பார்த்துக் கொண்டே வந்த சிற்பத்தில் 18-ஆம் நம்பர் சிற்பத்தைக் காணவில்லை... அது எங்கே போனதெனத் தேடினால் மேலே உடைந்த இடத்தில் அதை வைத்து ஒட்டி வைத்திருக்கிறான் பழுது பார்த்தவன். அங்கிருப்பவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் இனி என்ன பண்ண முடியும் என்கிறார்கள். இப்ப பதினெட்டாவது சிற்பத்தை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் என்றார். உண்மைதான் பெரும்பாலான கோவில்களில் சிதிலமடைந்த சிற்பங்களை எல்லாம் சிமெண்ட்டால் பூசிவிட்டார்கள்.

சமீபத்தில் மரணமடைந்த மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் விருதுநகருக்கு அருகில்தான் என்பதால் அவரின் மளிகைக்கடைக்கு சாமான் வாங்க வரும்போது தன்னைத் தேடி வந்து பார்த்து பேசிச் செல்வார் என்றும் சில சமயம் தம்பியிடம் சாமான்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் வருவார் என்றும் இருவரும் சினிமாவுக்குச் செல்வோம் என்றும் வாழ்வியல் கதைகள் எழுதிய அந்த மளிகைக் கடைக்காரரைக் குறித்த நினைவைப் பகிர்ந்தார்.

தன்னைப் பற்றிய சுய விவரங்களைச் சரிவர எழுத முடியாமல் திணறுபவன்தான் நான்.. ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பிறந்ததேதியை கூட சரியா எழுதத் தெரியாதா என்று என்னைக் கேட்கும்படி எழுதியவன் நான். நிறையப் படிப்பேன்... படித்ததை எப்போது கேட்டாலும் சொல்வேன்... இதெல்லாம் என் ஒரு பக்க மூலையில் இருப்பவை... அது நல்லா வேலை செய்யும்... இன்னொரு பக்க மூலை வாழ்க்கை சம்பந்தமானது... அது சரியா வேலை செய்யாது. அதனால் அந்த மூளைக்குப் பதிலாய் எனக்கு என் மனைவி...

பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்ன நம்பரையும் இப்போது சொல்வாள். பல வருடங்களுக்கு முன் எனக்கு வந்த கடிதத்தின் முகவரி தெரியாமல் விழித்தபோது இதுதானே அது என்று அவர் சொல்ல, முகவரிக்கு சொந்தக்கார நண்பர் வியந்து போனார். 16 இலக்க வங்கி எண்ணைக் கூட பார்க்காமல் படபடவென படிவத்தில் நிரப்பிவிடுவார்... பார்த்து எழுதினாலும் நான் தப்பாத்தான் எழுதுவேன் என்று சிரித்தார். சுபான் பாய் என் வீட்டிலும் அதேதான் என்று சொன்னார். நம்ம வீட்டிலும் எஜமானி அம்மா  இல்லை என்றால் நாம ஜீரோதான்... மதுரையில் செல்லமாய் வளர்ந்து தேவகோட்டைக்கு வந்து இரண்டு வீடு என் துணையில்லாது கட்டி, தற்போது குழந்தைகள், குடும்பத்தின் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் தனி மனுசியாய் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

கேள்வி மேல் கேள்விகள்... எல்லாவற்றிற்கும் மகிழ்வாய்... விரிவாய்... எடுத்துக்காட்டுக்களுடன் பதில்கள்.. சலிப்பே இல்லாமல் வார்த்தைகள் மடைதிறந்து வாய்க்காலில் சலசலத்து ஓடும் தண்ணீரைப் போல் பாய்ந்தோடி வந்தன. இடையிடையே எங்களுடன் புன்னகையுடன் புகைப்படம்.. கனவுப்பிரியன் அவரின் பேச்சுக்களைக் கரைத்துக் குடித்திருக்கிறார் என்பதால் அதிகம் அவரிடம் கேள்விகள் கேட்டவராய்... சுபான் பாய் கேமராக் கவிஞனாய்... நான் வாசகனாய்.

ஒரு பதிவுல முடிச்சிடணும்ன்னுதான் எழுத ஆரம்பித்தேன்... எப்பவும் போல் நேற்று மாலை கேட்டவை எல்லாம் வரிசையாய் என்னை எழுது என்னை எழுது என்று நிற்க, மெல்லச் சிலவற்றை விலக்கி கொஞ்சாய் எழுதாலாமென எழுதியும் பதிவு நீளமாகிவிட்டது. இது எப்பவும் நடப்பதுதானே... இதன் தொடர்ச்சி அடுத்த பதிவாய்...

பசி - காமம், ஏழை - பணக்காரன், கலாச்சாரம் - பண்பாடு, ஐந்திணைகள், இராமநாதபுரம் மாவட்டம், இடைக்காட்டூர் சர்ச், ஓரியூர் சர்ச், ஆர்.எஸ்.மங்களம் கண்மாய், பிறன்மலைக் கள்ளர்களுக்கும் இஸ்லாமியருக்குமான தொடர்பு இப்படி நிறைய, நிறைவாய் அவர் பேசியவை குறித்தும் பார்ப்போம்.

பிரிதிவிராஜின் ஆடம் ஜோன் பாக்க இருந்த மாலையை ஒரு அழகிய மாலை ஆக்கிய அன்பின் அண்ணன்கள் சுபான், கனவுப்பிரியனுக்கு நன்றி.

போட்டோ அடுத்த பகிர்வில்...

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 4 நவம்பர், 2017

சினிமா : மேயாத சண்டே

வேலைக்குப் போறோம்... அறைக்குத் திரும்புகிறோம்... வீட்டுக்குப் பேசுறோம்... சமைக்கிறோம்... சாப்பிடுறோம்... படுத்து எழுந்து மீண்டும் வேலைக்குப் போறோம் இப்படியான வாழ்க்கை என்பது வாங்கி வந்த மோசமான வரம் என்பதை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.

என்னைப் போன்றோருக்கு எழுத்தும் வாசிப்பும் கைகொடுப்பதால் கொஞ்சம் பரவாயில்லை.... மனைவியிடம் புலம்புவதைத் தவிர்த்து மக்களிடமும் புலம்ப முடிகிறது...:) என் அறை நண்பர்களை நினைத்துப் பார்ப்பேன்... ஊருக்குப் பேசிவிட்டு படம் பார்த்தே விடுமுறைகளைக் கழிக்கும் இந்த வாழ்க்கைக்கு அவர்கள் எப்போதோ பழகி விட்டார்கள். வெறென்ன செய்ய முடியும்../ வெளிநாட்டு வாழ்க்கையில் கணிப்பொறியும் செல்போனுமே இங்கு கண்கண்ட முருகனும் முனீஸ்வரனுமாய்...

நான் உள்பட எல்லாருக்குமே சினிமாதான் இங்கு மிக முக்கிய பொழுது போக்கு... சென்ற வார இறுதி நிகழ்வு போல் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே இதில் இருந்து விலகியிருக்க முடியும். நேற்று மாலை ஷார்ஜாவின் ஸ்டாலில் பேச்சுக்கேட்க அண்ணன்கள் சுபானும் கனவுப்பிரியனும் அழைப்பு விடுத்தார்கள். போகும் எண்ணமில்லாததால் செல்லவில்லை.

முன்பு சொந்தங்கள் சொந்தங்களாய் இருந்தபோது விடுமுறை தினங்கள் எல்லாம் சுற்றோ சுற்று என்று சுற்றினோம்.யுஏஇ-யில் இருக்கும் கடற்கரையெல்லாம் குளித்து மகிழ்ந்தோம். இப்போ எல்லாம் மாறியாச்சு... அறைக்குள் ரொட்டீனாய் நிகழும் நிகழ்வில் எப்படியும் படம் பார்ப்பது என்பதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த இரண்டு பதிவுகள் எழுத்து குறித்தான பகிர்வாய் மலர்ந்ததில் அதிகம் பேர் வாசித்திருக்கிறார்கள். போன பதிவு பிரதிலிபி போட்டி குறித்தான பதிவுதான்... சாதாரண சுண்டலைக் கொடுப்பதை விட வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் சுவை கூடும் என்பதால் நண்பரின் பேச்சையும் இணைத்தேன். அதனால் பலர் நான் வருத்த நிலையில் இருப்பதாய் நினைத்து விட்டார்கள். வருத்தமெல்லாம் எழுத்தில் இல்லை.

இராய. செல்லப்பா ஐயா அவர்கள் என் எழுத்து குறித்துச் சொன்ன கருத்து எப்படியோ காணாமல் போய்விட்டது. பெரும் பெரும் பத்திகளாய் எழுதுவது வாசிப்பவர்களை அயற்சிக்குள்ளாக்கும் என்று சொல்லியிருந்தார். நானும் யோசித்ததுண்டு என்றாலும் இதுவரை அதைச் செய்யவில்லை. இனிமேல் எழுதும் பதிவுகளில் பத்தியைச் சின்னதாக்க வேண்டும். இதில் முயற்சித்திருக்கிறேன்... :)

இரண்டு பதிவுகள் இறுக்கமாய் அமைந்து விட்டபடியால் இந்தப் பதிவு பார்த்த சினிமாக்கள் குறித்து மட்டுமே. நிறைய உலக சினிமாக்கள் பார்த்தாலும் அது குறித்து எழுதும் அறிவு இல்லாத காரணத்தால் உள்ளூர் சினிமாக்கல் பற்றிய கிறுக்கலே இது.

குறிப்பாக புதுப்படங்களை தரமானதாய் தமிழ்க்கண், தமிழ்யோகி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்கள் கொடுக்க, அதுவும் மெர்சலை நம்மூரில் முதல் காட்சி ஓடும் முன்னரே நல்ல தரத்தில் கொடுத்தார்கள்... இங்கு இணைய வேகமும் சிறப்பு என்பதால் படம் பார்ப்பதில் சிரமமிருப்பதில்லை.
Image result for மேயாத மான்
மேயாத மான் - மெர்சல் என்ற மாஸ் நாயகனின் படத்துடன் வந்த சாதாரணமான படம் இது. தமிழிசைகளில் அரசாட்சியில் மெர்சல் ஹிட் அடிக்க, மேயாத மான் மேயாதமானாகவே... இதற்கிடையில் க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் கதை வேறு சென்னையில் ஒருநாள் - 2ஆம் பாகமாய் விறுவிறுப்புக் களம் அமைக்க, இரண்டுக்கும் இடையில் மாட்டிய மான்... மிக நல்ல படம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..? 

காதல் தோல்வி... சாவு வரை அழைத்துச் செல்ல கெட்டபொண்ணுடா அவன்னு சொல்லி, அவளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் தண்ணியின் அணைப்பில் புலம்புபவனாய் நாயகன். இந்தக் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கானது... வைபவ் நிறைவாய் செய்திருந்தாலும் பல இடங்களில் அவர் காட்சியோடு ஒட்டவில்லை. வி.சேயாக இருந்திருந்தால் அடி தூள்தான்.

நாயகி ப்ரியா பவானி சங்கர் செம... நடிப்பிலும். அவருக்கு இப்போ கார்த்தி, விஜய் சேதுபதி என வரிசையாய் படங்கள்... நாயகனின் நண்பன் ரொம்ப அருமையாக நடித்திருக்கிறார். தங்கையாக வரும் பெண் அசத்தல்... ஒரு குத்தாட்டத்தில் கலக்கி எடுத்திருப்பார். பாடல்கள் நன்று.

மேயாத மான் நம் மனதை ஆனந்தமாய் மேயும்.
Image result for Deepti Sati
புள்ளிக்காரன் ஸ்டாரா (PULLIKKARAN STARAA) - மம்முட்டி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வரும் ஆசிரியர். அவர் பிறந்ததும் தூக்கிக் கொண்டு வரும் நர்சின் மார்பின் மீது கை பட, இவன் பெரிய பெண் பித்தனாவான் என திருவாய் மலர்கிறார். அதன் தொடர்சியாக எதார்த்தமாக நடக்கும் எல்லாமே நர்ஸ் சொன்னதாய் அமைய, பட்டப்பெயரும் வர, வயசாகியும் பெண்களுக்கு இவர் மீது பற்று வராத காரணத்தால் திருமணமாகவில்லை.

திருமணமாகி விவாகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆசிரியையும்... மம்முட்டியோடு பள்ளியில் கூடப் படித்த, ஆங்கிலமே அறியாத அந்தப் பள்ளியில் பிரசண்ட் சார் என ஆங்கிலம் பேசிய, இவர் காதல் வயப்பட்டு (அதாவது அஞ்சாப்பு, ஆறாப்புல) நண்பன் மூலம் காதலைச் சொல்ல, அவரோ லவ் இருக்கான்னு கேட்டதற்கு 'மே பி' என்க, தவறான புரிதலால் காதல் கை கூடாத வருமானமான ஆஷா சரத்தும், காதலனுடன் ஓட நினைத்து இரயில் ஏறி, காதலன் பாதியில் காணாமல் போக, தற்கொலை செய்து கொள்ள முயன்று, தன்னால் காப்பாற்றி அழைத்து வரப்பட்ட இளம்பெண் தீப்தியும் அவர் வாழ்வில் என்ன மாற்றத்தை உண்டு பண்ணினார்கள் என்பதே கதை.

மம்முட்டியின் காதல் ஆஷா மீதா... தீப்தி மீதா... என்பதையும் அவர்கள் வாழ்வின் நிகழ்வுகளை சுபமாக்க அவர் என்ன முயற்சிகள் மேற்கொண்டார் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.. பள்ளி, ஆசிரியர்கள் பயிற்சி, நண்பன், பக்கத்து வீட்டுப் பெரிசு, வாட்ஸ்மேனுடன் அடிக்கும் லூட்டி, எல்லாத்துக்கும் சொல்லும் கதை என படம் நகர்கிறது.

மோசமான வசனங்கள்... குடும்பத்துடன் பார்க்க முடியாது... என் நண்பன் குடும்பத்துடன் போயிட்டு பாதியில வந்துட்டான் என்றெல்லாம் அறை நண்பரான மலையாளி சொன்னார். அப்படி ஒண்ணும் ஆபாச வசனங்கள் இல்லை. தமிழ் படங்களில் பார்க்காத வசனமா...? நாம் குடும்பத்தோடு பார்த்து கை தட்டி சிரிக்க வில்லையா...? சந்தானம் படங்களில் பேசுவதை விடவா...?

கொஞ்சூண்டு வசனத்துக்கே குடும்பத்துடன் பார்க்க முடியாது என்றால் தமிழ் படங்களை எல்லாம் சுத்தமாகவே பார்க்க முடியாது.  ஆஷா சொல்ல வேண்டியதில்லை.... நடிப்பு ராட்சஸி என்பதை அறிவோம்... தற்போது ஆஷா இல்லாத படமே இல்லை என்பதாய் ஆகிவிட்டது மலையாள சினிமா. இளம் நாயகியாய் வரும் தீப்தியும் நடிப்பில் சோடை போகவில்லை.... அழகி.

மம்முட்டியை பிடிக்கும் என்றால் தைரியமாகப் பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது.
Related image
தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும் (THONDIMUTHALUM DRIKSAKSHIYUM ) - காதல் கணவனுடன் பேருந்தில் செல்லும் நாயகியின் தாலிச் செயினைத் திருடி விழுங்கிவிடும் திருடனைப் பிடித்து போலீசில் ஒப்படைக்க, அதன் பின் காவல் நிலையத்தில் நடக்கும் கதையே இது.

காதல் ஜோடியான சூரஜ் வெஞ்சிரமோடும் நிமிஷாவும் தங்கள் வாழ்வைத் தொடங்க காசர்கோடு போகும் போது நிகழும் செயின் பறிப்பே கதையின் முக்கியக் களம். அந்தச் சங்கிலியை எடுக்கவில்லை என திருடனான பஹத் பாசில் சாதிக்க, அவனை அடித்துத் துவைத்துப் பார்த்து ஸ்கேன் செய்து வயிற்றில் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

விழுங்கிய செயினை எடுக்க அவனுக்கு சாப்பாடும் தண்ணியும் கொடுத்து வெளிய இருக்க வைத்து தேடுகிறார்கள். ஊரில் பிள்ளைகள் எதையாவது விழுங்கிவிட்டால் மறுநாள் வெளிய போகும் போது வந்துவிட்டதா எனப் பார்ப்பார்களே அப்படி.

அப்படி வெளிய இருக்கச் செல்லும் ஒருநாளில் தப்பியோட, அவனை விரட்டும் போலீசால் பிடிக்க முடியாமல் போக, காவல் நிலையம் அல்லோலப்படுகிறது. போலீசாரெல்லாம் பிடிக்க முடியாத பஹத்தை நகையைப் பறிகொடுத்த சூரஜ் பிடிக்க போலீஸ் பிடித்ததாய் மார்தட்டுகிறது.

இதற்கிடையே நாயகனுக்கும் நாயகிக்கும் அலைச்சலுடன் செலவும்... கேஸ் ராப்பரி கேஸாக மாறி போலீசின் சோடனையுடன் நீதிமன்றம் செல்ல இருக்கிறது. திருடன் என்ன செய்தான்...? நகை என்ன ஆனது...? என்பதை ஒரு நிஜ காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போல் எடுத்திருப்பது சிறப்பு.

நிமிஷாவுக்கு முதல் படம்... தேர்ந்த நடிப்பு... சூரஜை மிகச் சிறந்த காமெடியனாகப் பார்த்த நமக்கு ரொம்ப அமைதியாய்... தாலிச் செயினுக்காக அலையும் மனிதனாய் பார்க்கும் போது அட போட வைக்கிறார்.

எஸ்.ஐ. ஆக வருபவர் சிறப்பு... எஸ்.ஐ. உள்பட நடித்திருந்த காவலர்களில் 90% பேர் உண்மையான காவலர்களே என்பதால் அவர்கள் நடிப்பதாய் தெரியவில்லை... உண்மையான ஒரு காவல் நிலைய நிகழ்வுகளாகவே பார்க்க முடிகிறது.

எல்லாரும் ஆஹா... ஓஹோ என்று சொன்ன படம்தான் என்றாலும் மிக மெதுவாய் நகரும் படம் சில நேரங்களில் அலுப்புத் தட்டுகிறது. மற்றபடி படம் பார்க்கலாம்... ஒரு சின்ன கதையை மலையாள இயக்குநர்கள் எப்படி சிறப்பான திரைக்கதையாக மாற்றுகிறார்கள் என்பதை கண்டு வியந்தும் போகலாம்.

நான் பஹத்தின் படங்களின் ரசிகன் என்றாலும் இந்த இயக்குநரின் செருப்புப் போட மாட்டேன் என்று சொன்ன மகேஷிண்டே பிரதிகாரத்தை விட இது மாற்றுக் குறைவுதான்.

செமப்படம்ன்னு ஆளாளுக்கு பில்டப் கொடுத்தாங்க... நம்ம பாலுமகேந்திராவின் வீடு படத்தை இப்பப் பார்த்தா என்ன பீல் ஆவோமோ அப்படித்தான் டிராமாத்தனமான மெல்ல நகழும் காட்சிகள். பஹத்தின் மற்ற படங்களைவிட இது ஒன்றும் மேலானதாக தெரியவில்லை என்றாலும் சூரஜின் தேர்ந்த நடிப்புக்காகப் பாருங்கள். கண்டிப்பாக சூரஜ், நிமிஷா, பஹத், அந்த எஸ்.ஐ எல்லாரும் உங்களைக் கவர்வார்கள்.
Related image
ண்டே ஹாலிடே (SUNDAY HOLIDAY) - கையில் கதையை வைத்துக் கொண்டு இயக்குநரிடம் கதை சொல்ல அலையும் கல்லூரி ஆசிரியரான சீனிவாசன், பிரபல இயக்குநர் லால் ஜோசை விடாது விரட்டிப் பிடித்து சொல்லும் கதையே படமாய் விரிகிறது. இதில் ஆஷா சரத் டாக்டராய்...

தன்னைக் காதலித்து நல்ல மாப்பிள்ளை வந்த போது சம்மதித்து காதலை கசக்கி எறியும் சுருதி ராமச்சந்திரனை மறக்க, தோல்வியில் இருந்து மீள, நாயகன் ஆசிப் அலியை வேறு ஊருக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார் அவனின் அப்பா. அங்கு அவன் சந்திக்கும் சேல்ஸ் பெண்ணான அபர்ணா பாலமுரளியுடன் ஆரம்பத்தில் பிரச்சினையாகி பின்னர் நல்ல நண்பனாகிறான்.

அவளைப் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து காதல் வயப்பட்டாலும் அவன் சொல்லவில்லை. அதேபோல் அவளுக்குள்ளும். அவனுடன் இருக்கும் நண்பர்களின் லூட்டிகள்... வில்லனைப் போல் முதலில் மோதும் பக்கத்து வீட்டுக்காரன் பின்னர் மிக நல்லவனாய் நட்பாய்... அதேபோல் அவள் தங்கியிருக்கும் வீட்டாரின் அன்பு... அவர்களின் பதின்ம வயதுப் பையனின் காமப்பார்வை... அபர்ணாவை திருமணம் செய்து கொள் எனப் பின்னாலேயே திரியும் காண்ட்ராக்டர்  என படம் விரிகிறது.

கிளைமேக்ஸ் காட்சியில் தான் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவன் தன் நினைவாகவே இருப்பான்... இருக்க வேண்டும் என நினைக்கும் ஸ்ருதி போன்றவர்களுக்கு செமையாக் கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் விட சீனிவாசனின் கதையை தானே படமெடுப்பதாக லால் ஜோஸ் சொல்ல, கதை கேட்கவே முடியாது எனச் சொன்ன இயக்குநரை எப்படி அந்த மாதிரி ஒரு இடத்தில் வைத்துப் பிடித்துக் கதை சொன்னார் என்ற சஸ்பென்சையும் உடைக்கிறார்கள்.

படம் போரடிக்காமல் நகர்கிறது.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 நவம்பர், 2017

மனசு பேசுகிறது : எழுத்தாளனாமே அப்படின்னா...

குடும்பம், வேலை என தராசின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தமான மனநிலையில் இருக்கும் மனசுக்குள் எழுத்து எப்படி உருப்பெறும் சொல்லுங்கள். இதை எழுதலாம் அதை எழுதலாம் என நினைப்பதுடன் சரி... எழுதும் மனநிலை இல்லாமல் எப்படி எழுதுவது..?. என்னைப் பொறுத்தவரை  கதையை இப்படி நகர்த்த வேண்டும் என ஆரம்பித்து அந்தப் பாதையில் பயணிக்காமல் மாற்றுப் பாதையில் பயணித்து எங்கோ ஒரிடத்தில்தான் கொண்டு போய் முடிப்பேன்... இது எப்போதும் நிகழும் நிகழ்வுதான்... இந்த மாதிரி ஒரு கதை எழுதணும்... அப்படி ஒரு கதை எழுதணும் என யோசித்து ஒன்றாத மனநிலையால்  தொலைத்த எண்ணங்கள் ஏராளம்... அதுவும் தற்போதைய சூழலில் இன்னும் அதிகமாய்... முன்பெல்லாம் தினம் ஒரு பதிவு மலரும்... கதையோ... கவிதையோ... கட்டுரையோ ஏதோ ஒன்று. இப்போது அந்த நிலையில் அதிக மாற்றம்... கதைகளைத் தளத்தில் பகிர்வதில்லை... போட்டிகள், இணைய இதழ்களிலுக்கு எழுதியவை மட்டுமே அவ்வப்போது பகிரப்படுகிறது. ஸ்ரீராம் அண்ணாவின் அன்புக்காக அவர் தளத்தில் எழுதியிருக்கிறேன். அப்புறம் கவிதை எழுதுவதை வெகுவாகக் குறைத்தாச்சு... படித்ததை... பார்த்ததை... கேட்டதை... ரசித்ததை வைத்து எப்போதேனும் ஏதாவது ஒன்றை எழுதி பதிவிட முடிகிறது. சினிமா குறித்து எழுதும் போது ஹிட்ஸ் அதிகம் கிடைத்தாலும் பார்க்கும் நண்பர்கள் அது என்னவோ தவறு போல் சொல்கிறார்கள், ஒரு சினிமாப் பகிர்வு டாஷ்போர்டில் தூங்குகிறது. எது எப்படியோ தினம் துடித்த மனசு தற்போது மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறையேனும் துடிக்கிறது என்பதே சந்தோஷம்தானே.

இரண்டு நாள் ஓய்வில்லாத வேலைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை வேலை இல்லாமல் இருந்த காரணத்தால் சென்ற சனிக்கிழமை ஆரம்பித்து பாதியில் நிறுத்திய அலமேலு என்ற கதையை எழுதி முடிக்கலாம் என விட்டதில் இருந்து தொடர்ந்தேன். கதாபாத்திரம் பேசுவதை மட்டும் முழுக்க முழுக்க எங்க பக்கத்து பேச்சு வழக்கில் வைக்காமல் பொதுவான பேச்சு வழக்கையும் கலந்தும் எழுதி பெரும்பாலும் என் பார்வையாய் வருவதைப் பொதுவான வழக்கில் வைத்தும்தான்  கதைகளை எழுதுவது வழக்கம். அலமேலு பாதி பயணிக்கும் போது முழுக்க முழுக்க நம்ம பக்கத்துப் பேச்சு வழக்கில் எழுதினால் என்ன எனத் தோன்ற முதலில் இருந்து வாசித்துப் பொது வார்த்தைகளைத் தேடித்தேடி வட்டார வழக்குக்கு மாற்றினேன்... 'தேவகோட்டைக்குப் போனேன்' என்பதை 'தேவட்டைக்குப் போனே' என்றுதான் சொல்வார்கள். செல்வத்தை... செலுவம், பதினொரு மணி பயினோரு மணி, பத்து மணி பஸ் என்பதை இந்த பத்துமணிக் காரு போயிருச்சா என்பதுதான் வழக்கு. அப்படியே மாத்தி, கதையை நகர்த்தி எழுதி முடித்தேன். 

சனிக்கிழமை எழுத நினைத்து அமர்ந்தபோது அவன் அவளைச் சந்திப்பதில் முடிக்க எண்ணமிருந்தது... நேற்றைய கதையின் போக்கில் கோபமும் அதன் பின்னான 'மசுரு.. மட்டை' என்ற நல்ல(?) சொல்லாடல்களும் வந்து விழ... கிராமங்களில் நடக்கும் சண்டை பார்த்து ரசித்தவர்களுக்குத் தெரியும் இந்த வார்த்தைகள் எல்லாம் வசமாய் விளையாடும் அழகு. வட்டார வழக்கில் எழுதும்பட்சத்தில் ஒரே ஒரு பிரச்சினைதான்... நாம் கெட்ட வார்த்தை என்று தூரத்தில் நிறுத்தும் வார்த்தைகள் சர்வ சாதாரணமாக நாவில் விளையாடும். அதை எழுத்தில் கொண்டு வரும் போது என்ன இம்புட்டுக் கேவலமா எழுதியிருக்கான்னு தோணும். அதனால் நிறைய '*' போட வேண்டிவரும். பிரபல எழுத்தாளர்கள் என்றால் அதை அப்படியே எழுதலாம்... தப்பில்லை. சில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாடோடி இலக்கியன் எழுதிய வட்டார மொழியிலான கதை படித்தேன்... அவர் அடிக்கடி எழுதுவதுண்டு. இதில் '*' அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் கதையின் போக்கு ரொம்ப அடர்த்தியாய்... அருமையாய். இந்த '*' பிரச்சினையால் மற்ற வார்த்தைகளைத் தவிர்த்து 'மசுரு...' மட்டும் பயன்படுத்தி ரொம்ப மென்மையாச் சண்டை போட வச்சேன். அது போக அந்தக் கதையில் சேலையைத் தூக்கிக் கட்டிக்கிட்டு, தலையை அள்ளி முடிஞ்சிக்கிட்டு வாழ்க்கை வரலாறை அள்ளி வீசும் கிராமத்துப் பெண்கள் சண்டையில்லை. தனக்கு வேண்டிய ஒன்று கிடைக்காமல் கோபத்தில் வார்த்தையை விடுவதும் பின் நட்பாய் குழைவதுமாய் இரு மூக்குப்பொடி மனிதர்களின் சண்டைதான். இங்கு மலையாளிகள் எதுக்கெடுத்தாலும் 'மயிரான்' என்றுதான் சொல்லுவார்கள். எனவே முட்டை சைவம் என்பது போல் 'மசுரு' என்பது கெட்டவார்த்தை அல்ல என்பதே எண்ணம். கதையின் போக்கில் நாயகன் நாயகியைச் சந்திக்கணுமான்னு சிந்திச்சு... அந்தச் சிந்தனையை மெல்ல இறக்கி முடிவுக்கு வந்துட்டேன். ஆனா பாருங்க... தலைப்பு 'அலமேலு', கதையில் ஒரு இடத்துல கூட இந்த வார்த்தை வரலை. அப்ப அலமேலு இன்னொரு கதையாக மலர வாய்ப்பிருக்குன்னு வச்சிக்கங்களேன்.

நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களான்னு... அறைக்கு வந்த ஒரு நண்பர் கேட்டார்...  இங்க கதையெல்லாம் என்பதை என்னவோ எல்லாத்தையும் எழுதிக் கிழிக்கிற மாதிரி கதையும் கூட எழுதுவீங்களான்னு அவர் ஆச்சர்யப்பட்டதாய்தான் நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் 'நீ எல்லாம் கதை எழுதுறியா..? வெளங்கிடும்' என்பதாய்க்கூட அவரின் அந்த எல்லாம் இருந்திருக்கலாம். அவரின் கேள்விக்கு பதிலாய் நானும் எழுத்தாளன்தான் என்ற நினைப்போடு வெண்புரவியில் ஏறி வானம் நோக்கிப் பறந்து மீண்டும் இறங்கி புன்னகையோடு 'ம்... எழுதுவேன்' என்றேன். மனசுக்குள் நானும் ரவுடிதான் என்ற எகத்தாளத்தோடு... இன்னைக்கு முகநூலில் எத்தனை பட்டங்களுடன் ஒரு கவிதை எழுதிய கவிஞனெல்லாம் சுத்துறான்... நாம கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரை கதையின்னு ஒண்ணக் கிறுக்கிக்கிட்டுத்தானே இருக்கோம். எழுதுவேன்னு சொல்றதுல என்ன வந்துடப் போகுது. 

சில பேர் சின்னப் பிள்ளையா இருக்கும் போது அவங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க... ரேஷன் அரிசிதான் சாப்பாடா இருந்திருக்கும்... பல வேலை பட்டினி கூட இருந்திருக்கலாம்... ஆனா இப்ப வசதி, வாய்ப்புன்னு அவங்க வாழ்க்கை மாறியிருக்கும். மத்தவங்ககிட்ட பேசும்போது ரேஷன் அரிசியை நானெல்லாம் பாத்ததுகூட இல்லை... அப்பவே ஸ்பூன்லதான் சாப்பிடுவோம் என்றெல்லாம் அள்ளி விடுவதைப் பார்த்திருப்போம்... நான் ஒருசிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்... அவர்கள் மற்றவர்களிடம் அள்ளி விடுவதையும் கேட்டிருக்கிறேன். நானெல்லாம் ரேசன் அரிசியும்... கேப்பைக் கூழும் சாப்பிட்டு வளர்ந்தவன்தான்... பத்தாவது படிக்கும் போதுதான் மின்சாரம் வந்தது... பதினொன்னு போகயில பிபிஎல் பிளாக் அண்ட் ஒயிட் வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு சினிமா சித்தப்பா வீட்டில்தான். பலகாரம் செய்யும் தினத்திலும் எனக்கு கஞ்சிதான் வேணும். அம்மா எனக்காகவே கஞ்சி வைத்திருக்கும். அதான் இன்னமும் கஞ்சியில் மட்டுமே மனம் லயிக்கிறது. விடுமுறை தினங்களில் எருமை மாட்டின் பின்னே 'நரை', 'கிடேரி', 'வெள்ளச்சி'-ன்னு கம்மாத் தண்ணிக்குள்ள விரட்டிக்கிட்டு திரிஞ்சவன்தான். இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை மறைப்பதில் என்ன இருக்கிறது... பின்னாடி திரும்பி வந்த பாதையைப் பார்த்து இதுதான் நான் வந்த பாதை என்று சொல்வதில்தான் பெருமை அதிகம் எனக்கு... அதனால் நான் எப்பவும் எதையும் மறப்பதுமில்லை... மறப்பதுமில்லை. இது எதுக்கு சம்பந்தமில்லாமன்னு யோசிக்கலாம்... நல்லா எழுதுற பல பேர் 'நானா... ஏய் எனக்கு எழுத வராது...' என்று மழுப்புவதையும் ஒரு கதை எழுதிவிட்டு மற்றவர்களுக்கு அப்படி எழுது இப்படி எழுதுன்னு டிப்ஸ் கொடுப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்தானே... அதான் எடுத்துக் கொண்ட பொருளை விடுத்து என் கதைகள் பயணிப்பது போல களம் மாறிட்டேன். சரி மறுபடிக்கும் ஆரம்பித்த பொருளின் களத்துக்குள் புகுவோம்.

நான் எழுதுவேன் என்றதும் அடுத்த கேள்வி 'எப்படியான கதைகள் எழுதுவீங்க...?' என வந்தது. எப்படியான கதைகள் என்றால் சொல்வதற்குத் தெரியவில்லை என்றதும் 'சிலர் அறிவியல்... சிலர் அரசியல்... சிலர் காதல்... சிலர் குடும்பம்... சிலர் அறியாத தகவல்... என ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கும்... இதில் உங்கள் பாதை எது..?' என்றார். நமக்கு இலக்கியம், இலக்கணம், அறிவியல், அரசியல் எல்லாம் தெரியாது... காதல் தெரியும், குடும்ப கஷ்டங்கங்கள் தெரியும்... அவ்வளவே. அறிந்த தகவலை வைத்தே கதை எழுத முடியல... இதில் அறியாத தகவல்களா... ம்ஹூம்... எதாவது கிறுக்குவேன்... வாழ்க்கை கதைகளாக எழுத எண்ணம்... ஆனா அதற்குள்ளும் முழுசாப் போகலை... மொத்தத்துல இன்னும் முழுதாக கதை எழுதத் தெரியாத அரைவேக்காடுதான் நான் என்றதும்... 'எப்பவுமே எழுத்தில் ஒரு தனித்துவம் இருக்கணும்... உங்க எழுத்துன்னா இதைப் பேசும்ன்னு தெரியணும்' என்று அவர் சொன்னதும் நான் சற்றே சப்தமாகச் சிரிக்க, 'ஏன் சிரிக்கிறீங்க..?' என்றார். ஒண்ணுமில்ல... நேற்று இரவு சரவணன் அண்ணன் ஒரு பதிவு முகநூலில் போட்டார்.... அதில் கணேஷ்பாலா அண்ணா வந்து தனித்துவம்ன்னா என்னன்னு கேட்டிருந்தார். அதுக்கு நாங்கள்ல்லாம் ஜாலியா கருத்துப் போட்டோம்... அந்தத் தனித்துவத்தை உங்க தனித்துவம் ஞாபகப்படுத்திருச்சு என்றேன் சிரிப்புடன். 'உங்களுக்கு கேலி கிண்டல் சகஜம் போல... நண்பர் கதை எழுதுவீங்கன்னு சொன்னார்... அதான் உங்களுக்குன்னு ஒரு நடை இருந்தா நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்... தப்பா எடுத்துக்காதீங்க...' என்றார். அட எதுக்குங்க தப்பா எடுக்கணும் என்றபடி,  என்னோட நடை எப்பவுமே வேகமாகவும் இருக்காது... மெதுவாகவும் இருக்காது... ஆனா எம்புட்டுத் தூரம் வேணுமின்னாலும் நடப்பேங்க... பழனிக்கே நடந்து போயிருக்கேங்க என்று சிரிக்காமல் சொல்லவும் 'ராசா.... நீ கதை எழுது... கவிதை எழுது... எது வேணுமின்னாலும் எழுது... எனக்கென்ன வந்துச்சு...' என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தவர், 'எல்லாப் பயலுக்கும் பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு' என்று தனக்குள் சொல்வது போல் சொல்லிச் செல்ல, மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமாச் சொல்லிட்டீங்க என்றதும் 'அவனா நீயி'ன்னு என்னை ஒரு பார்வை பார்த்துட்டு நண்பரின் கட்டிலில் அமர்ந்தார் என் பக்கம் திரும்பாமலே. ஆனாலும் அவரு எல்லாப் பயலுக்கும்ன்னு சத்தியமா யாரைச் சொன்னாருன்னு தெரியலை.

இப்பல்லாம் எழுத முடியாத மனநிலைதான் என்றாலும் என் கணிப்பொறிக்கு ஏதோ ஒரு சீக்கு வந்தாச்சு.... கருத்து இட முடிவதில்லை... பதிவை கூகுள் பிளசில் இணைக்க முடிவதில்லை... 'ள்' அடித்தால் 'ல்' வருவதும் 'ன்' போட்டால் 'ண்' வருவதும் 'ண்' வேண்டுமென்ற போது வராமல் அழிச்சாட்டியம் பண்ணுவதுமாய் ரொம்பத் தொல்லை பண்ணுது. முகநூல் அரட்டையில் நட்புக்கள் என்னடா இவன் தப்புத்தப்பா டைப் பண்ணுறான்னு நினைக்கலாம்... இதெல்லாம் கணிப்பொறியில் எழுத்துக்கள் மாறி மாறி வந்து கடுப்படிப்பதால் ஏற்படுவதுதான்... அப்படியிருந்தும் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை குறையும் போது சிலரையேனும் வாசித்து கருத்து இட்டு வருகிறேன். அதற்கும் இனி பிரச்சினைதான்... ஆமாம் இனி வரும் வாரங்கள் வேலைப்பளூ கூடுதலாகத்தான் இருக்கும். இன்னும் ஆறு மாதத்தில் 90% வேலை முடிக்க வேண்டும். 21 மாத புராஜெக்ட்... 15 மாசமா 10% பணிதான் முடிச்சிருக்காங்க... இனி எல்லாத்தையும் மொத்தமாக நம்ம தலையில் இறக்குவாங்க... கடுமையா வேலை பாக்கணும். சம்பளத்தை மூணு வருசமா அப்படியே வச்சிருக்கியேடான்னு நேற்று லெபனானில் இருந்து வந்திருந்த புராஜெக்ட் டைரக்டர்கிட்ட டைரக்ட்டாக் கேட்டா, அவன் கேரளாவில் இருந்து வந்து இறங்கிய 15 பேர் கொடுத்த தெம்பில் இருந்தா இரு இல்லாட்டி போங்கிற மாதிரி... இப்ப குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைக்குது. இப்ப சம்பளத்தைக் கூட்ட சாத்தியமில்லைன்னு சிரிக்கிறான். மாலை ஊருக்குக் கிளம்பும் போது பொயிட்டு வாரேன்னு சொல்லிச் சிரித்தான். எனக்கு சிரிப்பு வரலை.

அலுவலகத்தில் வலை வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை சட்ட விரோதமானதே என்றாலும் தொடர்பு நீடிக்க கருத்து இட்டு வந்தேன். இனி வரும் நாட்களில்  சட்டத்துக்கு உட்பட்டுக்கூட  வாசிக்க இயலாது. மின்னிதழ்களுக்கும் தற்போது பத்திரிக்கைகளும் அனுப்பி வந்தாலும் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தேன்... குறிப்பாக இணையத்தில் நடத்தப்படும் போட்டிகள். அதேபோல எல்லாப் போட்டிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பினாலும் பிரதிலிபி போட்டிகளில் ஒரு சில காரணங்களால் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தேன். கதை கதையாம் போட்டிக்கு கூட நினைவூட்டல் மின்னஞ்சல்கள் வந்த காரணத்தாலும் தேர்வு முறையில் மாற்றம் செய்திருந்ததாலும் இறுதி நாளில்தான் அனுப்பி வைத்தேன். அதன் முடிவுகள் ஏதோ காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. முடிவு வரும் வரை அந்தக் கதையை எங்கும் பகிர முடியாது என்றாலும் நண்பர் ஒருவர் குறும்படமாக எடுக்க அந்தக் கதையை கேட்டிருக்கிறார். முடிவு தெரிந்ததும் தருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். திரைக்கதை அவர் எழுதிக் கொள்வதாய்ச் சொல்லியிருக்கிறார். இப்போது பிரதிலிபியின் ஓடி விளையாடு பாப்பா போட்டிக்கும் எழுதும் எண்ணம் இல்லை.... இருப்பினும் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதாய் களம் அமைக்க வேண்டும் என்பதாலும் நினைவூட்டல் மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருந்ததாலும் முன்னதைப் போலவே இறுதி நாளில் எழுதி அனுப்பினேன்... அத்துடன் ஒரு கட்டுரையும் சேர்த்து எழுதி அனுப்பினேன். இப்ப கட்டுரைகள் எழுத ஆர்வம் இருக்கிறது... முன்பு அகல் மின்னிதழில் குழலியின் தேவன் என பொன்னியின் செல்வன் பாதிப்பில் எழுத, அதன்பின் தொடர்ந்து அகலில்  நாலைந்து கட்டுரைகள் மனதுக்கு நிறைவாய் எழுதியிருக்கிறேன் என்பதால் இந்த கட்டுரையும் மனநிறைவாய் எழுதியிருப்பதாகவே நம்புகிறேன். வாசிப்பவர்கள்தான் சொல்லணும் அதன் வாசனையை.

பிரதிலிபி போட்டியில் இருக்கும் 'தலைவாழை' சிறுகதையையும் 'பதின்மம் காப்போம்' கட்டுரையையும் வாசித்து தங்கள் கருத்தை இங்கு சொல்லுங்கள். என் கதைகளின் களங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் மாற்றிக் கொள்ள இது வசதியாக இருக்கும்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 28 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...

ழுத்து...

இந்த எழுத்து எதைக் கொடுத்து விடப்போகிறது..?

இது உனக்கான வருமானத்தைக் கொடுத்துவிடுமா..?

இது உனக்குச் சோறு போடுமா..?

இதன் பின்னே போனவர்களில் ஜெயித்தவர்களை விட காணாமல் போனவர்களே அதிகம் என்பது தெரியுமா..?

உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு என்பதை யோசித்துப் பார்த்தாயா...?

என இது மாதிரியான எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுத்தின் பின்னே பயணித்த பலரும் சில வருடங்களுக்கு முன்பு வரை கண்டிப்பாக கேட்டிருக்கக் கூடும். இப்போது இந்த வார்த்தைகளை அதிகம் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் இன்னும் இந்த வார்த்தைகளின் காரம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருமா... வருமா... எனக்காத்திருந்து வரமாலேயே போக, முயற்சிகளை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்து சில மாதங்களிலேயே வெறுப்பின் உச்சத்தில் எழுத்தின் நாதத்துக்கு சுருக்கிட்டுத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்... பல நல்ல எழுத்தாளர்களை இரண்டாயிரத்துக்கு முன்னான காலம் தொலைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

இன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் எல்லாருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் வாய்ப்பை இணையம் கொடுத்திருக்கிறது. நாம் எழுத, நமக்கான ஒரு களத்தை ஏற்படுத்துவதுடன் நம் எழுத்தைப் பகிர பல இணைய மின்னிதழ்களும் திரட்டிகளும் வந்துவிட்டன. இதன் காரணமாகவே இணைய வெளியில் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் பூத்துக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை விதமான எழுத்துக்கள்... வார்த்தை அலங்காரமில்லாத... வர்ண ஜாலம் காட்டாத... பட்டிக்காட்டுத்தனமாய்... பட்டவர்த்தனமாய்... வாழ்க்கைக் கதை பேசிகள் பலர் இன்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் நம்மை அந்த வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இழுத்துச் சென்று வாழ வைக்கிறார்கள். என் எழுத்து பத்திரிக்கையில்தான் வரணும் என்றெல்லாம் நினைப்பதில்லை... சிந்தையில் உதிர்த்ததை சிறகு விரித்துப் பறக்க வைத்து இணையத்தில் விதைக்கிறார்கள்.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் இல்லை என்பதையும் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பனின் கதைகளை வாசித்துத் திருத்திக் கொடுத்த எங்கள் பேராசான் 'நீங்களும் எழுதுங்கய்யா' என்று சொல்லி ஒரு கதை எழுத வைத்து... அது மிகக் கேவலமான கதை என்றாலும்... கல்லூரியில் படிக்கும் வயதில் என்ன கதை பெரிதாய் எழுதி விடப்போகிறோம்... எங்கு சுற்றினாலும் அது காதல் கதையில்தானே வந்து நிற்கும்... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற கருவில் உதித்த கதை பாடலில் ஆரம்பித்து பாடலில் முடியும். அதையும் பொறுமையாக வாசித்து, நான் ஒரு பக்கம் என் நண்பன் ஒரு பக்கம் சைக்கிளை உருட்ட, நாடு நாயகமாய் தன் கேரியல் இல்லாத சைக்கிளை உருட்டியபடி, எங்கள் பேராசான் குடியிருந்த தேவி பவனத்தில் இருந்து கவிஞர் பாலு அண்ணா வீட்டிற்கு நடந்தே... திருப்பத்தூர் ரோடு, குதிரை வண்டிச் சந்து (இப்ப ஸ்டேட் பாங்க் ரோடு), கருதாவூரணி வழியாக கதைகள் பேசி நடந்தபோது 'கதை நல்லாயிருக்குய்யா... இன்னும் நல்லா எழுதணும்... சமூகப் பிரச்சினைகளைப் பார்த்து அதைக் கதையாக்கணும்.. (இது வரைக்கும் சமூகப் பிரச்சினைகளை கதையாக்கியிருக்கிறேனா தெரியலை...:)) வாழ்க்கையை கதையை மாற்றும் கலை தெரிஞ்சிக்கணும்.' (இது ஓரளவு வந்திருச்சின்னு நினைக்கிறேன்) என்றெல்லாம் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய கதையையும் பல முறை சொல்லிவிட்டேன். ஐயா வீட்டில் நான் எப்பவும் செல்லப்பிள்ளை... இப்பவும் கூட என்பதில் பெருமை எனக்கு.

புதுசாக் கல்யாணம் பண்ணினவன் பொண்டாட்டிய சுத்திச் சுத்தி வர்ற மாதிரி எப்பவும் பேப்பரும் பேனாவுமா அப்பா கணக்கெழுதுற மேசையை தூக்கிப் போட்டு கதை எழுதுறேன் பேர்வழின்னு... ஏன்னா ஐயா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாருல்ல... அதனால எழுதி... எழுதி... எழுதிக் கிழிக்க... (இதெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் என்பதை நினைவில் கொள்க.) அப்புறம் கவிதை எழுதுறேன் பேர்வழின்னு பல பயலுக காதலுக்கு கவிதை எழுதிக் கொடுத்த கதையெல்லாம் பல தடவை சொல்லியாச்சு... மறுபடியும் சொன்னா இவனுக்கு வேற வேலையில்லையான்னு திட்டிடப் போறீங்க... விவசாய நேரத்துல ராத்திரி மழை பெய்திருக்கும்.. காலையில 'வாகமடையை அடைச்சிட்டு வா...', 'அந்த வயல்ல யூரியாவைத் தூவிட்டு வா...', 'பனிப்பதத்துல பூசிமாவைத் தூவிவிட்டா கப்புன்னு புடிச்சிக்கும்...' என்றெல்லாம் அப்பா வேலை சொல்ல, நாமதான் கதாசிரியன் கனவுல இருக்கோமோ... பேனாவை கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கையை விட்டு இறக்காமல் அதெல்லாம் முடியாது எனச் சொல்ல , 'இதெல்லாம் எங்க உருப்படப் போகுது... எல்லாத்துக்கும் நாந்தான் போவனும் தொரைக (நானும் தம்பியும்)  ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்லு சமஞ்சபுள்ளயளாட்டம்... தம்பி கத எழுதுதாம்... கத... இது கதயெழுதி என்னத்தைக் கிழிக்கப் போவுது' என அப்பா கத்திவிட்டு மம்பட்டிய எடுத்துக்கிட்டு போக, அம்மா அடுத்த அர்ச்சனையை ஆரம்பிக்கும். அப்பா திட்டு கொஞ்சந்தான்... ஏந்திட்டு இம்புட்டுத்தான் உங்கம்மா திட்டு கப்பல்ல வருதுன்னு சொல்லாம சொன்ன மாதிரி செமையாத் திட்டு விழும். அதுக்கு மேல உக்கார முடியாத நிலையில வாய்க்குள்ளயே முணங்கிக்கிட்டே வயலுக்கு போன நாட்கள் மறக்க முடியாதவை. இப்ப எங்கம்மாக்கிட்ட கேட்டா அது எங்க வய வேல பாத்துச்சு... அது இப்ப மாதிரித்தான் அப்பவும் எழுதுறேன்னு கிறுக்கிக்கிட்டு கெடக்கும் என்றுதான் சொல்லும்.

'என்னத்தை கிழிக்கப் போறான்..?' - இது அப்பாவின் வார்த்தைகள்... இதுவரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம்... ஒண்ணுமே இல்லை... என் கதைகள் கல்லூரிக் காலத்தில்... அதன் பின்னான வருடங்களில்... சென்னை வாழ்க்கையில்... அபுதாபி வாழ்க்கையில் என அடிக்கடி பிரேக் போடப்பட்டு பின்னர் மீண்டும் உதித்து இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமயத்திலும்  வேறு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து இப்போது கொஞ்சம் மன நிறைவாய் மலர ஆரம்பித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த எழுத்து வாழ்க்கையை நகர்த்தும் பணத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முதல் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாய் பெற்று இன்று போட்டிகள் தவிர்த்து இதழ்களில் வெளியாகும் போது ஐநூறு வரை கிட்டியிருக்கிறது. இது பணத்துக்கான... பணத் தேவைக்கான எழுத்து அல்ல... மன நிறைவுக்கான... நிம்மதிக்கான எழுத்தே... அப்பா சொன்ன வாசகங்கள் போல் எதையும் கிழிக்கவில்லை என்றாலும் நிறைய நேசமுள்ள மனிதர்களின் மனங்களைக் களவாடியிருக்கிறேன் அல்லவா..? வாழ்க்கை நகர்த்துதலுக்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என் வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் என்னை நேசத்தோடு கொண்டாடவும் கூடிய மனங்களை உலகெங்கும் உறவாகக் கொடுத்திருக்கிறது அல்லவா...? இதை விட வேறு என்னத்தை மகிழ்வோடு கிழிக்க முடியும் சொல்லுங்கள்.

இந்த வாரத்தின் இரு தினங்களும் எனக்கு மிகச் சிறந்த நாட்களாக அமைந்தன. நேற்றைய பொழுதில் ஒன்பது வருடங்களாக பாலைவனப் பூமியில் இருந்தாலும்... குடும்பம் வந்திருந்த போது பாலைவன மண்ணில் கொஞ்சமே கொஞ்சத் தூரம் குழந்தைகளுடனும் மனைவியுடனும் நடந்து சென்றதுடன் சரி... அந்த மண்ணில் அமர்ந்து ஓடி சந்தோஷப் படும்படியான நாட்கள் எனக்குக் கிட்டவில்லை... நேற்று அந்த சந்தோஷத்தை புகைப்படக் கவிஞன் அண்ணன் சுபான் பாய் அவர்களும் சுமையாவைச் சமைத்த எழுத்தாளர் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மாலை நேரத்தில் பாலை மண்ணில் ஒரு அஞ்சாறு பேர் போட்டோக்களைச் சுட்டுத் தள்ளினோம்... கதாநாயகன் கனவுப்பிரியன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்... சூரியனைப் பந்தாடினோம்... கொண்டாடினோம்... காற்று மணலுடன் காதல் கொண்டு எங்களை ஊடல் கொள்ள வைத்தது... அள்ளி இறைத்தாலும் அன்பாய்த்தான் உடலில் அமர்ந்து கொண்டது. மணலில் நாயகனாய் நடை பழகினோம்... இன்று அந்த வீடியோ பின்னணிப் பாடலுடன் பகிரப்பட, 'இவருக்கு சூர்யான்னு நெனப்பு... சும்மா இருக்கமாட்டாரு போல...' என்று விஷாலின் கருத்து வந்ததாய் ஊரிலிருந்து மனைவி ரொம்ப மகிழ்ச்சியாய்ச் சொன்னது சொல்லக்கூடாத கதை என்றாலும் சொல்லத் தோன்றும் கதையாகிவிட்டது.

நேற்றைய பொழுது மணலில் கழிய இன்றைய பொழுது மகிழ்வில் கழிந்தது. போன பதிவைப் பகிர்ந்த பின்னர் 'குமார் உங்க போன் நம்பரை என் மெயிலுக்கு அனுப்புங்க' என்ற அழைப்பு... அதன் பின் அனுப்ப, உடனே தொடர்பு கொண்டு பேசி, 'வார இறுதியில் நாம் சந்திக்கிறோம்' என்றார் அவர்  அன்பாய்... நேற்று இரவு மீண்டும் அழைப்பு... 'நாளை மதியம் எங்க வீட்டிற்கு வாரீங்க... சாப்பிட்டு எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்லலாம்' என்றார். திடீர் அழைப்பு... சாப்பாடு செய்கிறோம் என்று வேறு சொல்கிறார்... அவரைச் சந்தித்ததும் இல்லை... அதிகம் பேசியதும் இல்லை என்ற எண்ணம்... சரி சாப்பாடு என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்... அந்த அன்பிற்காக அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம் என காலையில் போன் செய்து 'நாம சந்திக்கலாம் சார்... சாப்பாடெல்லாம் வேணாம்' என்ற போது 'சமையல் முடிஞ்சாச்சு... வாங்க பேசிக்கிட்டு இருந்திட்டு... சாப்பிட்டுப் போகலாம்... யோசிக்காதீங்க... உங்க வீடு மாதிரி நினைச்சிக்கங்க' என்றார் போனில் சிரித்தபடி... இவனுக்கிட்ட பேசணுமின்னா காசு கொடுக்கணும் என்ற பேரு ஊருக்குள்ள இருந்ததெல்லாம் ஒரு காலம். புதியவர்கள் என்றால் பேச்சுக்கூட அளந்துதான் வரும். இப்பக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும்... பலர் கூடினால் குறைவாய் பேசியது நாமாகத்தான் இருக்கும். என்னையும் கவியரங்கில் கவிபாட வைத்த பெருமை எங்க பேராசானுக்கு உண்டு. அதுவும் தேவகோட்டை பூங்கா எதிரே... அப்ப நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மெண்ட் வீக் கதைதான்.. துரை.செல்வராஜூ ஐயா இங்கு வந்த போது அவரும் கில்லர்ஜி அண்ணாவும் நான் ஸ்டாப்பாய் பேச, நான் மட்டும் மௌனியாய் இருந்ததை ஐயா ஒரு பதிவில் கூட சொல்லியிருந்தார். எப்பவுமே அதிகம் பேசுவதில்லை... அது அப்பவே ஒட்டிக்கிட்டது.... இன்னும் தொடருது.... இனிமேல மாறப் போகுது... ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.. :)

கிளம்பி அவர் சொன்ன கட்டிடம் சென்று போன் செய்து அவர் இருக்கும் தளத்துக்குச் சென்றால் புன்சிரிப்போடு வரவேற்றார். புதிதாய்ப் பார்ப்பவனைப் போலில்லாமல் அவர்கள் வீட்டில் ஒருவனாய் அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த அன்போடு பேசினார்கள். அவரின் குட்டிப் பையன் அவ்வப்போது ஒரு சிரிப்பை உதிர்த்து விஷாலை நினைவில் நிறுத்திக் கொண்டே இருந்தான். பெண் எங்க ஸ்ருதி போல்தான் என்று நினைக்கிறேன்... புதியவர்கள் வந்தால் எட்டிப் பார்ப்பதில்லை போலும். சனிக்கிழமை பெரும்பாலும் சைவம்தான் என்பதாலும் சைவத்தின் மீதே விருப்பம் அதிகம் என்பதாலும் சிக்கன், மட்டன்னு வச்சி தாளிச்சிடாம சைவமாச் சமைச்சிருந்தால் மகிழ்வாய் இருக்குமென நினைத்துச் சென்றால்...  மிகச் சிறப்பான சைவச் சமையல்... நம்ம வீட்டில் சாப்பிட்டதொரு நிறைவு... நிறையப் பேசினார்... எல்லாம் நிறைவாய்... அவரின் பணிகளுக்கு இடையே வலைப்பூவில் எழுதும் எழுத்தாளர்கள் எல்லாரையும் வாசிக்கிறார் என்பது எத்தனை சந்தோஷம்... ஜோதிஜி அண்ணா, தேனக்கா, முத்துநிலவன் ஐயா, மணிகண்டன், மதுரை செந்தில்குமார் சார், கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் என எல்லாருடைய எழுத்தையும் பற்றிப் பேசினார். எல்லாரைப் பற்றியும் அவர் சந்தோஷமாய்ப் பேச எனக்குள் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா... இலக்கணம், இலக்கியம் எல்லாம் நமக்கு ரொம்பத் தூரம்... அவர் முழுக்க முழுக்க வலை எழுத்தை லயித்துப் பேசினார்... கொஞ்சமே கொஞ்சம் அரசியலும் பேசினோம். அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுப் பேசி வந்த இன்று மதியம் மறக்க முடியாது. அவரைச் சார் என்றுதான் சொன்னேன்... ஆனாலும் மனசுக்குள் அவர் அண்ணனாய் உயர்ந்து நின்றார் திரு. பூபதி. தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல் இந்த வாழ்க்கையில் கிடைத்த இன்னொரு உறவு இவர்கள்.

இந்த எழுத்தால் என்னத்தைக் கிழிச்சோம் என்றால் இப்படி எத்தனை எத்தனையோ அன்பான மனிதர்களைப் பெற்றது போதாதா... வேறு என்ன வேண்டும்... உன் தொடர்கதை நாவலாக வேண்டும்... நான் அதைச் செய்கிறேன் குமார் என பேசும்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நிஷா அக்கா, எல்லாரும் புக் போட்டுட்டாங்க... மண்ணின் மனத்தோட இருக்கிற உன் கதைகள் எப்ப புத்தகமாகுறது அடுத்த வேலை நமக்கு அதுதான் என பார்க்கும் போதெல்லாம் சொல்லும் தேவா அண்ணன்... உங்க கதைகளுக்கு நான் அடிமை அண்ணா என்று முகநூலில் தட்டிவிட்ட மேனகா சத்யா, குமார் நான் இதை எழுதியிருக்கிறேன்... உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் எனச் சொல்லும் ஆர்.வி.சரவணன் அண்ணன்... என்ன உதவி என்றாலும் உடனே செய்து கொடுக்கும் தனபாலன் அண்ணன்... உங்க எழுத்தை வாசிக்க எனக்கு ஒரு லிங்க் மட்டும் கொடுங்க குமார் எனச் சொல்லும் கவிஞர் மீரா செல்வக்குமார்.. போனில் கூப்பிடுங்களேன் என்று உரிமையோடு சொல்லும் கில்லர்ஜி அண்ணா, மிக அருமையா எழுதுறீங்க என்று சொல்லும் ஜம்புலிங்கம் ஐயா, பாலசுப்ரமணியம் ஐயா, என் எழுத்தில் சந்தோஷிக்கும் ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, குடும்பத்தில் ஒருவரான காயத்ரி அக்கா, என் நண்பன் தமிழ்க்காதலன், தம்பி தினேஷ் இப்படி எத்தனை உறவுகளைப் பெற்றிருக்கிறேன்.இங்கு சொன்னவர்களை விட சொல்லாதவர்கள் அதிகம். இப்படி எத்தனை எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பெற்றிருக்கிறேன்... எல்லாரையும் சொல்லிக்கிட்டே போகலாம்... எல்லாரையும் பற்றி எழுத ஆசைதான் ஆனா நாலஞ்சி பதிவு எழுத வேண்டியிருக்கும் என்பதால் எல்லாரும் மனசில் இருக்கீங்கன்னு சொல்லிகிறேன்.  

இந்த எழுத்து ஓட்டுக்காகவும் முன்னணி ரேசுக்காகவும் எழுதுவதில்லை.. என் ஆத்மா திருப்திக்கான எழுத்து... இப்போது என் எழுத்து மீண்டும் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் என கிளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதைவிட நிறைய உறவுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது... எத்தனை மனங்களைப் பிடித்திருக்கிறோம். இதைவிட நிறைவாய் இந்த எழுத்தால் என்னத்தைக் கிழித்து விடப் போகிறோம்..?
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : பாதித்த பாடல்

சில பாடல்களைக் கேட்கும் போது அது தொடர்பான நினைவுகளை நம்முள்ளே மீட்டெடுக்கும். இந்தப் பாட்டைக் கேட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போகும் என்றும் இந்தப் பாட்டென்றால் எனக்கு அவள் முகம் ஞாபகத்தில் வரும் என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்படியான பாடல்களும் அது தொடர்பான நிகழ்வுகளும் எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும்... யாரும் விதிவிலக்கல்ல அப்படியான பாடல்கள் பல சமயங்களில் மீட்டெடுக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் முழுவதும் நம் மனதைச ஆக்கிரமிக்கும். சந்தோஷமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சந்தோஷமாகவும், சோகமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சஞ்சலமாகவும் ஆக்கும் தன்மைகள் கொண்டவை இந்தப் பாடல்கள்.

கடந்த வாரத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருக்கும் போது எனது மொபைலில் வள்ளி திருமண நாடகம் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்... கவனிக்க பார்த்தபடி இல்லை... கேட்டபடி... அது வீடியோவாக இருந்தாலும் ஆடியோ மட்டும் ஓடிக்கொண்டிருக்கும்... போன் ஸ்கிரீனை 'ஆப்' செய்து வைத்துவிட்டு வேலையில் தீவிரமாக இருந்தேன் என்பதையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும். என்னடா இவன் வள்ளி திருமணம் நாடகத்தைப் பார்க்கிறானே... அம்புட்டு வயசானவனா என்று கூட நீங்கள் நினைக்கலாம். வயசெல்லாம் ஆகல... நிறைய வரலாறுகளை அறிய முடிகிறது என்பதால் மட்டுமே.

படிக்கும் காலத்தில் பக்கத்து ஊரில் கூத்து (நாடகம்) நடந்தால் கூட போக விரும்புவதில்லை. கண்டதேவி தேரோட்டத்தின் போதோ, கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் சிவராத்திரியின் போதோ இரவு கோவிலுக்குச் சென்றால் நாடகம் பார்ப்பதுண்டு. அதிலும் வள்ளி திருமணம் என்றால் நம்பிராஜன் வந்ததும் கூட்டம் கலைய ஆரம்பிக்கும்... நாங்களும் நகர்ந்து விடுவோம். அப்படித்தான் நாடகம் பார்த்திருக்கிறோம்.. சில நாடகங்களை மட்டுமே முழுவதும் பார்த்த அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் நாரதர்-வள்ளி தர்க்கம் என்பது சில நடிகர்கள் நடித்தால்தான் மட்டுமே நல்லாயிருக்கும் என்பார்கள். எல்லாரும் சிறப்பாக தர்க்கம் பண்ணுவதில்லை என்று தீவிர நாடக விசிறிகள் சொல்லக் கேட்டதுண்டு. நாம தீவிர விசிறியில்ல... அப்பல்லாம் ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலின் விசிறி நான்.

சரி நாம நாடகம் கேட்ட விஷயத்துக்கு வருவோம்... இப்ப எல்லா நாடகங்களும் இணையத்தில் சில நண்பர்களால் பதிவேற்றப்படுகின்றன. இது மிகவும் நல்ல விஷயம்... நம் கிராமியக் கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணம் போற்றுதலுக்குரியது. நாடகங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அதாவது எங்கள் பக்கத்தில்தான் அதிகமாக நடத்தப்படுகின்றன என்பதில் தெற்கத்திக்காரனாய் பெருமை உண்டு. எப்பவுமே கிராமியக் கலைகளைப் போற்றுவதில் தென் மாவட்டங்களே முன்னணியில் இருக்கும். அப்படி நடக்கும் நாடகங்களை இணையத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்வான விஷயம்.

இன்று நாடகங்களில் நடிக்கும் பபூன்கள் நாரதருடன் விவாதிப்பது நல்ல வரலாற்று விஷயங்களை என்பது பாராட்டுக்குரியது.... சும்மா வந்தோமா... டான்ஸாக நடிப்பவருடன் இரட்டை அர்த்த வசனம் பேசினோமா... வள்ளியையும் கேலி பேசினோமா என்றில்லாமல் நிறைய விஷயங்களைப் பேசுகிறார்கள்... வள்ளி - நாரதர், வள்ளி -முருகன் என தர்க்கங்களில் எல்லாம் வரலாறுகளையும் ஆன்மீகச் செய்திகளையும் மட்டுமே முக்கியானதாக எடுத்துக் கொள்கிறார்கள். வள்ளியும் பபூன் டான்சுடன் ஆட்டம் போடுவதைப் பார்த்து இணையத்தில் எந்த வள்ளி டான்ஸ் ஆடியிருக்கு என்று வந்த கருத்துக்களைப் பார்த்து இனி வள்ளியாக நடிப்பவர்கள் மேடையில் ஆடக்கூடாதென சங்கத்தில் முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் பார்த்த ஒரு நாடகத்தில் சொன்னார்கள். நல்ல முடிவு.

மறைந்த நாரதர் முத்தப்பாவிடம் யாராலும் வரலாறு குறித்தோ கடவுள்கள் குறித்தோ தர்க்கம் பண்ணமுடியாது என்று சொல்வார்கள்... நானும் வீடியோக்களில் பார்த்திருக்கிறே. எதை எடுத்தாலும் அதை விளக்கமாய்ச் சொல்வார்... ஆனாலும் கொஞ்சமல்ல நிறையவே முன்கோபி... பல மேடைகளில் அவரின் தர்க்கம் சண்டையில் முடிந்திருக்கின்றன. அவரின் வீடியோக்களும் இணையத்தில் இருக்கின்றன. தற்போது பெருமாள்ராஜ், முத்துச்சிற்பி, வெங்கடேஷ் என பலர் தர்க்கத்தில் கலக்குகிறார்கள். வரலாற்று விஷயங்களைக் கேட்டபடி வேலை பார்த்துக் கொண்டிருப்பது இப்போது வாடிக்கையாகி இருக்கிறது.

அப்படித்தான் சென்ற வியாழன் கலைமகள் - முத்துச்சிற்பி விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களின் விவாதம் ஆரம்பிக்கும் முன்னர் ஆர்மோனியம் வாசிப்பவர் பாடிய பாடல் எனக்குள் பழைய நினைவுகளை மெல்ல வருடி விட, என்னையறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பாடலை மீண்டும் ஓடவிட்டேன். என் நினைவுகள் எங்களை எல்லாம் சுமந்து... தற்போது தம்பி வீடு கட்டுவதின் காரணமாக இடிக்கப்பட்ட ஐம்பதாண்டு கால ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது.

அந்தச் சிறிய ஓட்டு வீட்டில்... ஒரு திண்ணை... ஆல்வீடு... சாமி அறை மட்டுமே... சின்னப் பிள்ளைகளாக இருந்த போது அடுப்படி பனைஓலையில் கட்டப்பட்டிருக்கும்... பின்னர் அடுப்படி ஓடு அணிய திண்ணை, அடுப்படி டாணா வடிவில் இருக்கும். இரண்டுக்கும் முன்னே கல்கால் ஊன்றி ஒரு கீத்துக் (கிடுகு-பின்னிய தென்னை ஓலை) கொட்டகை போட்டு சுவரெடுத்தார் அப்பா. வீட்டின் பின்னே ஒரு மாட்டுக் கசாலை... அது எருமை, பசு என எத்தனை மாடுகளைப் பார்த்த இடம் தெரியுமா..? இப்ப கசாலையும் இல்லை... மாடும் இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் பாதைகேட்டு போட்ட கேஸ் மட்டும் இன்னும் பிரச்சினையாய் ஓடிக்கிட்டு இருக்கு.

நாங்கள் எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக பண்டிகைகளைக் கொண்டாடினோம் தெரியுமா... எத்தனை சந்தோஷங்களைச் சுமந்தது அந்த வீடு... நாங்க படிக்கும் போது எங்க பெரியண்ணன் வெளியூரில் வேலை பார்த்தார்... இப்பவும் அதே ஊரில்தான் வேலை பார்க்கிறார். நானும் என் தம்பியும் படித்ததே அவரால்தான்... தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது தவறாது துணியெடுத்து எங்களுக்கு டிரஸ் தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இரண்டு டிரஸ் என்பது மிகப் பெரிய விஷயம். அது எங்களுக்கு பள்ளியில் படித்த நாட்களில் இரண்டாகவோ மூன்றாகவோ கிடைக்கும்.

பின்னர் கல்லூரி சென்ற போது லூஸ் பிட்டிங் சட்டை என தொம்பாத் தொம்பா சட்டைதான் பேமஸ்... அப்போ நாங்க தைக்கும் சட்டைகள் எங்க அண்ணன்களும் போடலாம்... அவங்க தைக்கிற சட்டை நமக்கும் சரியா இருக்கும். யார் கழட்டிப் போட்ட சட்டை என்றாலும் நல்லாயிருந்தால் அது அடுத்தாளு உடம்பில் இருக்கும். இப்படி சட்டைகளை மாற்றி மாற்றிப் போடுவதும்... ஊருக்கு கிளம்பும்போது இந்தச் சட்டை நல்லாயிருக்கு நான் எடுத்துக்கிறேன் என பெரியண்ணன் எங்க சட்டைகளை எடுத்துச் செல்வதும்... சின்ன அண்ணன் கழட்டிப் போட்ட சட்டையை காலேசுக்குப் போட்டுச் செல்வதும் எப்போதும் வாடிக்கை.

எங்க அம்மா படுத்திருக்க, நால்வரும் (சில வேளைகளில் சின்ன அக்காவும்) நாலு பக்கமும் தலைவைத்துப் படுத்திருந்த நாட்கள் எல்லாம் எப்போதும் மறக்க முடியாதவை. அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என சந்தோஷமாய் கும்மாளமிட்ட வீடு அந்த சிறிய ஒட்டு வீடு.... அன்னைக்கு ஒண்ணுக்கு ரெண்டு என்றிருந்தபோது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது. இப்போது ஒத்தையாய் பெத்து வைத்து அதற்கு அண்ணன் தம்பி பாசம் எப்படிப்பட்டது என்பது கூட தெரியாமல் வளர்ப்பதில் உறவுகளின் உன்னதத்தை இழக்க ஆரம்பித்து விட்டோம்... பெண் குழந்தைகளுக்கு கூட ஒரு கட்டத்துக்கு மேல் அதோட முக்கியமான பிரச்சினைகளைச் சொல்லி, விவரம் அறியவும் ஆறுதல் தேடவும் முடியாத நிலைதான் இருக்கிறது.

திருமணம் முடிந்து அவரவர் குடும்பம் எனப் பிரிந்தாலும் அந்தப் பாசக்கயிறு மட்டும் பல வீடுகளில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. அப்படியான பாக்கியம் எங்கள் வீட்டிலும் உண்டு என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் நால்வரும் ஒருமித்து சந்தித்தல் என்பது நடவாத காரியமாகிவிட்டது. பெரியண்ணனுடனாவது வாரம் ஒரு முறை பேச முடிகிறது. சின்ன அண்ணன் மற்றும் தம்பி சிங்கப்பூரில் என்பதால் பேசுவதும் குறைவு... பார்ப்பதும் அரிது.

நான் ஊருக்கு இதுவரை திருவிழா நேரத்தில் வரும்படியாக மே மாதத்தைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். இந்த முறை மே மாதம் என்பது சாத்தியமாக வாய்ப்பில்லை என்பது தற்போதைய புராஜெக்ட்டின் போக்கில் தெரிகிறது. வருடாவருடம் செல்ல முடியும் சூழல் என்றாலும் சிங்கப்பூர்வாசிகளான அண்ணனும் தம்பி இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வருவார்கள். இந்த முறை தம்பியைச் சந்தித்தால் அடுத்த முறை அண்ணன்.... இரண்டு வருடம் ஒரு முறைதான்... குடும்பங்கள் எல்லாம் சில விஷயங்களில் அன்னியப்பட்டு நிற்கும் நிலைகளும் மெல்ல மேலோங்க ஆரம்பித்திருந்தாலும்... பலரின் வீரியமான விஷ வித்துக்கள் உறவுக்குள் விரிசலை உண்டாக்கி மன வேதனைகளைக் கொடுத்தாலும்... பாசம் என்பது இன்னும் அழகாய்த்தான் முளைவிட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் எட்டிப் பார்த்து கன்னத்தில் இறங்கியது... எல்லாரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கிடந்த அந்த நாட்கள் இனி வருமா...? அந்த அன்பு இனி கிடைக்குமா...? அம்மாவின் மடியில் அந்த கோபுரக்கரைச் சேலை வாசத்தை நுகர்ந்தபடி படுத்திருக்க, நிகழ்ந்த சண்டைகளை இனி மீட்டெடுக்க முடியுமா...? வானம் பார்த்து வாசலில் படுத்தபடி அம்மா சொன்ன கதைகளை இனி அதுபோல் கேட்க முடியுமா..?எங்களை எல்லாம் சுமந்த அந்தச் சிறிய ஓட்டுவீடு  கொடுத்த மகிழ்வையும் சந்தோஷத்தையும் மறக்க முடியுமா...? இப்படி கேள்விகள் பல எழுந்தாலும் காலங்களும் வாழ்க்கையும் பல விஷயங்களை மெல்லக் கொன்று தின்று விட்டு இடைவெளியை மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது என்பதே உண்மை... இனி அப்படி ஒரு காலம் வருமா என்ற நினைப்பே கண்ணீராய் கரைந்து ஓடியது.

அந்தப் பாடல் 'முத்துக்கு முத்தாக... சொத்துக்குச் சொத்தாக...' எவ்வளவு அருமையான பாடல். ஆர்மோனியக்காரர்கள் பலர் ஏதேதோ பாடி பாட்டைக் கொன்று எடுத்துவிடுவார்கள். ஆனால் இவரோ அவ்வளவு அருமையாக... அழகாகப் பாடி மக்களிடம் கைதட்டு வாங்கியதுடன் அவர்களிடம் பண அன்பளிப்பும் பெற்றார். அந்தப் பாடலில் வரும் வரிகளான 

'ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா'

இதைக் கேட்டதும் நினைவுகள் மெல்லத் தாலாட்டி அண்ணன் தம்பிகளின் பாச நாட்களை அசை போட வைத்து கண்ணீரை வெளிக் கொணர்ந்தது.

-'பரிவை' சே.குமார்.