மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்


வெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.

தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.

விழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் அதிகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...


விழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..

நடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சிகள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.

இப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...

“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”

“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற பேரு அமலாபால்”

“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”

“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”

எனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”

“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”

“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”

“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”

நம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ அவரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.

குழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.

மொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.

கடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்வையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.

மொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

அடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.

-‘பரிவை’ சே.குமார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தவறு சரியாகுமா?


ராமசாமி செட்டியாருக்கு
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...

மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!

'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!

அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!

பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!

'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'

திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!


யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!

தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வணக்கமுங்க...

எல்லாருக்கும் வணக்கம்...

பதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.

முதலில் பிரச்சினைகள்...

வேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...

வீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...

அபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.

அறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...

ஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...

நாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....

இப்ப சில சந்தோஷங்கள்...

எனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...

கோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...

நண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....

ரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....

எனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...

எனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...

என இன்னும் சில சந்தோசங்கள் என்னுள்ளே...

மீண்டும் சில சோகங்கள்....

எனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.

சில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.

இதனிடையில்...

நேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...

இனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...

அதுவரை....

பிரியங்களுடன்

சே.குமார்.

புதன், 14 மார்ச், 2012

அக்னி வளையம்



 காலையில் எழும்போதே பக்கத்து வீட்டில் ராமசாமி கத்திக் கொண்டிருந்தான். இது தினமும் நடக்கும் கதைதான்... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவன் பேச்சுத்தான் திருப்பள்ளி எழுச்சி. விடியும் போதே அவனுக்கு எப்படி சரக்கு கிடைக்குமோ தெரியலை. ஒருவேளை ராத்திரி குடிக்கும் போது மிச்சம் வைப்பனோ... இல்லை அவனுக்காக காலையிலயே கடையை திறந்து வச்சிருவாங்களோ என்னவோ.. சரி நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி. பக்கத்துல வீடுக இருக்கு அதுலயும் மனுசங்க இருக்காங்கன்னு அவனுக்கு தோன்றதே இல்லை.

குடிச்சிட்டு வந்துட்டா... வந்துட்டா என்ன எப்பவும் தண்ணிதான். வாயில வந்த வார்த்தையெல்லம் பேசுவான். அவன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு ஊரில் உள்ளவனையெல்லாம் புருசனாக்கிப் பேசுறதுதான் அவனது வேலை. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பன் என்பதை மறந்து தண்ணியே உலகம் என வாழும் மிருக மனிதன் அவன். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்கள். பலர் அவனைப் பார்த்தால் நரகலை மிதித்ததுபோல் ஒதுங்கிப் போவார்கள்.

அவன் பொண்டாட்டி பேருதான் பாக்கியம் ஆனால் வாக்கப்பட்டு வந்த நாள் முதலா அவள் படும்பாடு சொல்லி மாளாது. யார்க்கிட்டயாவது சிரித்துப் பேசினால் போதும் அவனை வச்சிருக்கியான்னு கேட்டு அடிப்பான். ஆரம்பத்தில் புன்னகை சுமந்து இருந்த அவள் முகம் இப்பல்லாம் எதையோ இழந்தது போல் எப்பவும் வெளிறியே இருக்கிறது. முன்பெல்லாம் அவனிடம் எதிர்த்துப் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வாள்.ஆனால் இப்ப ரொம்ப பழகிட்டா அவன் பேசும் போது எதுவும் பேசுவதில்லை. எருவ மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி அவ பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சிட்டா.

ஊருல உள்ள எல்லார்கூடவும் அவனை இணைச்சுப் பேசிட்டான். ஏன் ஒருநாள் என்னையக்கூட அவ புருஷன்னு சொன்னான். கேட்டுக்கிட்டு இருந்த நான் கோபப்பட்டு அவனை அடிக்கப் போக, அந்தக் குடிகாரனப்பத்தித்தான் தெரியுமே அவன் பேசுறதை கேட்டு சண்டைக்குப் போனா நமக்குத்தான் அசிங்கமுன்னு சொல்லி என் பொண்டாட்டி தடுத்துட்டா. எல்லார்கூடவும் இணைச்சிப் பேசினாலும் மில் முதலாளி ராஜகோபால்கூட மட்டும் இணைச்சிப் பேச மாட்டான். ஏன்னா பாக்கியம் அங்கதான் வேலை பாக்குறா. அவ வேலைக்குப் போகமா பொயிட்டா செலவுக்கு எங்க போறது அதனால அவரை மட்டும் திட்டமாட்டான்.

இரண்டு வீட்டுக்கும் இடையில் இருக்கும் முள் தட்டியின் ஓரமாக முகம் கழுவியபடி மெதுவாக எட்டிப்பார்த்தேன். குழந்தைகள் இருவரும் அப்பன் பேசுவதை சட்டை செய்யாமல் பள்ளிக்கு கிளம்புவதில் குறியாக இருந்தார்கள். வாசலில் போட்டிருந்த விறகடுப்பில் பாக்கியம் எரியாத விறகை ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள். ராமசாமி மாட்டுத் தொட்டிலின் மேல் அமர்ந்து அவிழ்ந்த கைலியை இடுப்பில் கட்டாமல் ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருந்தான்.மறு கையில் பீடி புகைந்து கொண்டிருந்தது.

"கோத்தா... ஊரு... மேயுரியாடி ஊரு... அந்த பரமுப்பயகூட உனக்கு... என்னடி பேச்சு. பரதேசி முண்ட... நா... காசு கேட்டா இல்லயின்னு சொல்லிட்டு... மீனு வாக மட்டும் காசு.... காசு எப்படிடி வந்துச்சு... அந்த நாயி கொடுத்தான்னா..." நா குழற கத்தினான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

"நாங்... கேக்குறது உன்னத்தாண்டி ஏ... மசுரு மவளே... நா... வெளியில பொயிட்டா... நிறைய தெரு நாயிங்க இங்கதான் கெடக்காமே... இ...ன்னை...க்கு.... இன்னைக்கு... நா... இங்கதாண்டி இருப்பேன்... எந்த நாயி வருதுன்னு... பாக்குறேன்..." சத்தமாக கத்தினான்.

அது என்னவோ தெரியலை...தண்ணி போட்டா பேசிக்கிட்டே இருக்கச் சொல்லும் போல... அதுவும் நல்லதை மட்டும் பேசாம மோசமான வார்த்தைகளை மட்டுமே பேசச் சொல்லும் போல... ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம். எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவர் மற்ற நேரங்களில் பேசும் போது நல்லா பேசுவார்... நல்லதையே பேசுவார். ஆனா தண்ணி உள்ள பொயிட்டா அவருக்கு இங்கீலீஸ் மட்டும்தான் வரும். அதுலயும் இந்த ஆக்சுவலி படும்பாடு இருக்கே... அப்பப்பா அவரு பேசுற கொச்சைப் பேச்சுக்கு முதல் முடிவு எல்லாத்துலயும் ஆக்சுவலி போடாம பேசமாட்டாரு.

"முகம் கழுவியாச்சா... காப்பி ஆருது வாங்க..." என்ற குரல் கேட்டது. எங்க நான் பாக்குறது அவனுக்கு தெரிஞ்சு சத்தம் போட்டுடுவானோன்னு பயத்துல எம் பொண்டாட்டி கூப்பிட்டா. நான் அங்கு நடப்பதைப் பார்க்க இலகுவாக படிக்கட்டில் சாய்ந்து அமர்ந்தவாறு காபி குடிக்க ஆரம்பித்தேன்.

"எ.... என்னடி நா... எது கேட்டாலும்... நீ பேச மாட்டேங்கிறே... அவ்வளவு திமிராடி... உனக்கு... உடெம்பெல்லாம் கொழுப்பாயிருச்சிடி உனக்கு..."

"இப்ப என்ன வேணும் உனக்கு?" பாக்கியம் வாய் திறந்தாள்.

"உனக்கும்... பரமுப்பயலுக்கும்... என்னடி கூட்டு...? அதைச் சொல்லுடி..."

அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் " சொல்ல மாட்டேடி... சொல்ல மாட்டே... எப்படி கள்ளப் புருஷனை... காட்டிக் கொடுப்பே..." அவனாகவே சொல்லிக் கொண்டான்.

"அம்மா... நாங்க பள்ளிக்கொடத்துக்குப் போறோம்" என்றபடி மறக்காமல் தட்டை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினர். இப்ப எங்க ஊர்ல எல்லாருடைய பிள்ளைகளும் இங்கீலிஸ் மீடியத்துல படிக்குதுங்க. பாக்கியம் அப்புறம் இன்னும் சிலர் பிள்ளைகளும் பக்கத்து ஊர் பிள்ளைகள் சிலரும்தான் எங்கள் ஊர் ஆரம்பப் பள்ளியில் படிக்குதுங்க. மொத்தமே பத்துப் பதினோரு பிள்ளங்கதான் இருக்கும். அஞ்சாப்பு வரைக்கும் ஒரே வாத்தியார்தான்.

ஒரு தடவை நாங்கூட பாக்கியத்துகிட்ட ' என்ன பாக்கியம் பிள்ளைங்க படிப்பு ரொம்ப முக்கியம்... நல்ல ஸ்கூல்ல சேர்த்தா என்னனு கேட்டப்போ, அட ஏங்கண்ண நீங்க வேற... நாஞ் சம்பாரிக்கிற காசுல அந்தாளு குடிச்சது போக எதோ மிஞ்சிது அதுல அதுகளுக்கு நல்ல கஞ்சி காச்சிக் கொடுக்க முடியலை...எதோ ஒரு நேரமாவது நல்ல சாப்படு கிடைக்குதுன்னு அனுப்புறேன். அதுக தலயெழுத்து எப்படியோ அதுபடி நடக்கட்டும்ன்னு கண்கலங்க சொல்லிச்சு. அப்ப நா ஆறாப்புக்கு எங்க ஸ்கூல்ல செலவு இல்லாம படிக்க ஏற்பாடு பண்ணுறேன்னு சொன்னேன்.

"ஆமா... இவுக கலெக்கிட்டருக்குப் படிக்கிறாங்க... படிக்கிறாவளாம்... படிக்கிறாவ... ரொம்ப முக்கியம்..." அவன் கத்தலை அவர்கள் கண்டு கொள்ளாமல் கிளம்பினர். பெண் பிள்ளைகள் அப்பா மேலதான் பாசமாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். மனசுக்குள் பாசம் இருந்தாலும் மிருகமாகிப் போன அப்பா நமக்கு தேவையில்லை என்பது போல அந்தப் பிள்ளைகள் நடந்து கொண்டது எனக்கே கஷ்டமாக இருந்தது. இந்த வயதில் அரவணைக்கும் அப்பா வேண்டும் என்று எல்லாக் குழந்தைகளும் நினைக்கும்... பாவம் அவர்கள்.

பிள்ளைகள் சென்ற சில நிமிடங்களில் பாக்கியமும் வேலைக்குக் கிளம்பினாள். " நான் வேலைக்குப் போறேன்... கஞ்சியிருக்கு... ஊத்திக்குடிச்சிட்டு இங்க இருந்தாலுந்சேரி... வெளிய போனாலுஞ்சேரி... வெளிய போனாக்க தட்டிய இழுத்துவிட்டுட்டுப் போ" என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.

"துத்தேரி... ஊரு மேயப் போகுது... வரட்டும்... சாயங்காலம் வச்சுக்கிறேன்..." என்றபடி அப்படியே தரையில் படுத்தான். இனி எப்ப எந்திரிக்கிறானோ அப்போ மீண்டும் அவனுக்கு சரக்கு அடிக்கணும்... சரி நம்ம கிளம்புற வேலைய பாப்போம் என்றபடி எழுந்தேன்.

"எதுக்கு தேவையில்லாத வேலை...அவன் பாத்திருந்தா இந்நேரம் நாரத்தனமா பேசியிருப்பான்" என்றாள் என் தர்மபத்தினி.

"பாவம்டி அந்தப்புள்ள.. கட்டுன நாள் முதலா இந்தக் கஷ்டத்தைதான் அனுபவிக்குது... அதுக்கும் ஆசாபாசம் இருக்காதா... என்ன. மத்த பொம்பளைகளைப் பார்க்கும் போது இப்படியெல்லாம் நாமும் இருக்கணுமின்னு நினைப்பு வருமில்லையா? அந்தப் பிள்ளைகளைப் பாரு நம்மளையும் அப்பா வண்டியில கூட்டிப்போகணும் அப்படி இப்படின்னு எண்ணம் வருமா இல்லையா... நா... அவங்கிட்ட பேசுறேன்... திருந்துறானான்னு பாப்போம்..."

"எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை... நாளக்கி உங்களுக்கு அர்ச்சனை பண்ணுவான். நம்ம வேலய பாருங்க..."

"இப்படி எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான் அவன் இவ்வளவு கேவலமா நடந்துக்கிறான்... அந்த பிள்ளங்க முகத்துக்காக நா... அவங்கிட்ட பேசுறேன்... என்ன தலைய ராவிப்புடுவானா... பாக்கலாம்..."


ன்றைய பணியில் மூழ்கியதால் ராமசாமி குறித்த எண்ணம் எனக்குள் தோன்றவேயில்லை. மாலை வரும்போதுதான் பாக்கியம் ஞாபகம் வந்தது. எப்படியும் ராமசாமிகிட்ட பேசியாகணும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆற்றங்கரையில் வந்து திரும்பும்போது ராமசாமி நடந்து போவது தெரிந்தது. அவனருகில் வண்டியை நிறுத்தி ஏறுப்பா என்றேன்.

"இல்ல... நீங்க போங்க... நா... நடந்து வாறேன்."

"அட... சும்மா ஏறுப்பா... அங்காளி பங்காளியா இருந்துக்கிட்டு... எவ்வளவு தூரம் நடப்பே... வா" என்று நான் விடாமல் வற்புறுத்த ரொம்ப பவ்யமாக ஏறினான்.

வண்டி மெதுவாக போய்க்கிட்டு இருந்தது... எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தபடி வண்டியை ஓட்டினேன். சரி ஆனது ஆகட்டும் என்ன நடந்தாலும் சரியின்னு 'ஏம்ப்பா எதாவது வேலைக்குப் போகலாமே?' மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவனிடமிருந்து பதில் வரவில்லை.

"என்னப்பா... நா... கேட்டதுக்கு பதிலைக் காணோம்..."

"என்ன வேல இருக்கு?" திருப்பி அடித்தான்.

"என்னப்பா நீ... படிச்சவனாட்டம் நா படிச்சபடிப்பு வேலையில்லையின்னு சொல்லுறே... செங்கக் காலவாய், மண் அள்ளுறது, வயல் வேல... ஏன் மில் வேலை இப்படி எதாவது ஒண்ணப் பாத்த பத்தாதா..."

"...."

"ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு தகப்பன் காலையில இருந்து இரவு வரை குடி கூத்தியான்னு இருந்தா குடும்பம் என்னத்துக்கு ஆகுறது..." நேரடியாக கேள்வியைத் தொடுத்ததேன்.

"அட்வைஸ் பண்ணத்தான் சும்மா போனவன வண்டியில ஏத்துனியளோ... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இரு... எதுக்கு இம்புட்டு கோவம்... குடியால குடி மட்டுமில்ல உன் உடம்பும்தானே கெட்டுப் போகும்... சொல்லு"

"..."

"இங்க பாரு உனக்கு பாக்கியம் மாதிரி ஒரு பொண்டாட்டி அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம்... அதை கெடுத்துக்காதே. உன் பிள்ளைகளை நெனச்சுப்பாரு... இன்னைக்கு இந்த வாழ்க்கை இனிக்கும்... ஆனா ரெண்டும் வயசுக்கு வந்து கல்யாணத்துக்கு காத்து நிக்கும்போது இந்த வாழ்க்கையால என்ன செய்ய முடியும் சொல்லு... பாக்கியம் பாக்குற வேலை ஒரு நேரம் கஞ்சிக்கு மட்டும்தான் உதவும். உதவாக்கரை ஆம்பளைய வச்சிக்கிட்டு அது எப்படி ரெண்டு பொட்டப்புள்ளகள கரையேத்த முடியும்... யோசிப்பா... நா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..."

"இங்க பாருங்க... எனக்குத் தெரியும் எது நல்லது எது கெட்டதுன்னு... அடுத்தவங்க சொல்லித்தான் தெரியணுமின்னு இல்ல... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இல்லப்பா... எதுக்கு சொல்லுறேன்னா..."

"யோவ் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்... எனக்குத் தெரியும் உன் வேல என்னவோ அதை மட்டும் பாரு... புள்ளங்களுக்கு மட்டும் பாடம் எடு போதும் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்... நீ எடுத்தாலும் எனக்கு ஏறாது... எனக்கு ஏறுற ஒரே விசயம் போதை மட்டும்தான்... புரியிதா.. சொந்தக்காரன்னு பாக்கிறேன் இல்லேன்னா இந்நேரம் பொழந்திருப்பேன்... பொழந்து... ஞாயம் பொழக்க வந்துட்டாக... வண்டிய நிறுத்துய்யா..."

இதுக்கு மேல் பேசினாலும் நல்லது இல்லை... அவனை இறக்கிவிடுவதே இப்போதைக்கு நல்லது என்று வண்டியை நிறுத்தினேன். இறங்கியதும் இடுப்பில் சொருகியிருந்த பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தான். நாம நின்னா எதாவது ஏழரையை கூட்டுவான் என்பதால் கண்டு கொள்ளாதது போல் வண்டியை கிளப்பினேன்.



"என்ன வாத்தியாரே... பக்கத்து வீட்டு பரதேசிக்கு கிளாஸ் எடுத்தீங்களோ" என்றபடி அருகில் வந்தாள் என்னவள். படித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வனை விடுத்து அவள் பக்கம் திரும்பி " ஆமா அதுக்கென்ன இப்போ?" என்றேன்.

"வெளியில இப்பதான் உங்களுக்கு கச்சேரி ஆரம்பிச்சிருக்கான். போய் பாருங்க... எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத வேலை... மனுசனுக்கு அட்வைஸ் பண்ணலாம் ஜடத்துக்குப் பண்ணலாமா... நீ கையில வச்சிருக்கிறது பீயின்னு சொன்னா இல்ல சந்தனமுன்னு மாருல தேக்கிற மூதேவி அவன்... அவனுக்கு எதுக்குங்க உபதேசமெல்லாம்.... சரி கச்சேரி களை கட்டுது... வாங்க"

வெளியில வந்ததும் அவன் பேசுவது நன்றாக கேட்டது. "என்னடி பரமு கசந்துட்டானோ பக்கத்து வீட்டுக்காரனை பிடிச்சிருக்கே... நீ சொல்லாமயா அவன் எனக்குப் புத்தி சொல்லுறான்... கோத்தா அவன தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன்... சரி வாத்தியாரா இருக்கான்னு விட்டுட்டேன்... உம்மேல அம்புட்டு கரிசனம் அவனுக்கு எப்படிடி வந்துச்சு..." அவன் எதேதோ பேச இதெல்லாம் மண்டை மண்ணுக்குள்ள போற வரை திருந்தாது என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் பாக்கியம் அவள் என்ன செய்வாள்... அவளுக்கு விதிச்ச விதி இது... அனுபவித்துத்தானே ஆகணும். எனக்கு அத்ற்குமேல் அங்க நிற்கப் பிடிக்காமல் வீட்டுக்குள் சென்றேன். என்னவோ தெரியலை 'இறைவா... அந்தப் பெண்ணுக்கு நிரந்தர விடுதலை கொடுன்னு' ஊரு எல்லயில இருக்க சுடலைமாடனுக்கிட்ட வேண்டிக்கிட்டேன்.

-'பரிவை'சே.குமார்.

Thanks : image from google

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உருகும் உயிர் ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு போட்டிக்கான கதை)

நேசம் மற்றும் யுடான்ஸ் இணைந்து நடத்தும் பாராட்ட வேண்டிய விழிப்புணர்வுப் போட்டி. இதில் கலந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. பரிசு வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு மாத காலமாக எழுதாத நான் ஜனவரி 31 இரவு 10 மணிக்கு எழுதிய கதை இது. நல்லாயிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்காக...

நட்புடன்

-'பரிவை' சே,குமார்.

*******




ன்னவாம்... உங்காத்தா போன் பண்ணினோன தனியா போயி பேசினிங்களே என்ன?” முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கேட்டாள் தாரிணி.

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையாம்... அதான் அம்மா போன் பண்ணுச்சு...” வெறெதுவும் சொல்லாமல் தரையை பார்த்தபடி நின்றான் அருண்.

“ம்... என்னவாம் கிழத்துக்கு....”

அவளை முறைத்துப் பார்த்தான். “சரி... உங்கப்ப்ப்ப்பாவுக்கு...” அழுத்தமாக சொன்னாள்.

“தெரியலை... காச்சலா இருந்துச்சாம்... நைட்டெல்லாம் வாமிட் எடுத்தாராம்... ரொம்ப டயர்டா இருக்காராம்... ரங்கசாமி மாமா எதோ பச்சிலை மருந்து கொடுத்தாராம்... இருந்தும் பயமா இருக்குன்னாங்க...”

“சும்மா காச்சலுக்கு எதுக்கு ஊரைக் கூட்டுதாம்... நல்லாத்தானே நங்கு... நங்குன்னு திரியிறாரு... இவ்வளவு ஏன் ஒரு வாரம் முன்னாடி பானுமதி மக கல்யாணத்துல பிரசர் இருக்குன்னு இல்லாம ஆட்டுக்கறிய தின்னு தீத்தாரே... அவருக்கு என்ன வரப்போகுது...”

“ஏண்டி... உடம்பு முடியலைன்னு அம்மா போன் பண்றாங்க... வயசான அவங்களுக்கு நாமதான் ஆதரவு... ஆறுதலா நாலு வார்த்தை சொல்லாட்டியும் எதுக்கு இப்படி பேசுறே... நான் போயி என்ன எதுன்னு பாத்துட்டு வாரேன்...”

“அதானே பாத்தேன்... எங்க இன்னும் கிளம்பக் காணுமேன்னு பாத்தேன்... உங்கண்ணன் என்ன பண்றாராம்... ஒவ்வொரு முறையும் நாமதான் அழணுமா என்ன...”

“சும்மா இருடி... பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு கணக்குப் பாத்துக்கிட்டு...”

“ஆமா... கொட்டிக்கெடக்கு... அவருக்கு போன் பண்ணி வரச்சொல்லி பாருங்க... சும்மா எப்ப பாத்தாலும் உங்காத்தா ஆ... ஊன்னா இங்கதான் போன் பண்ணும்... அவரையும்தானே பெத்தாங்க...”

“சரி... உம் பஞ்சாங்கத்தை மூடு... நான் பாத்துக்கிறேன்... எனக்கு தெரியும் என்ன பண்றதுன்னு...” என்றபடி ஊருக்கு கிளம்பினான்.

------------------------------------

வாப்பா...”

“என்னம்மா... அப்பாவுக்கு என்ன... எதுவும் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுட்டாரா?”

“இல்லப்பா... கொஞ்ச நாளாவே அசதியாவே இருக்கும்பாரு... நேத்து ராத்திரியில இருந்து காச்சல்... வாந்தின்னு கெடக்குறாரு... பச்சில மருந்து கொடுத்தும் சரியா வரலை... டவுனு டாக்டர்கிட்டதான் பாக்கணுமாம்... அதான்...”

“அண்ணனுக்கு போன் பண்ணுனியா?”

“பேசினேன்... அவனுக்கு வேல இருக்காம்... தம்பிய கூட்டிக்கிட்டுப் போன்னு சொல்லிட்டான்...”

“ஆமா... அவருக்கு எப்பவும் வேலதான்... நா மட்டும் சும்மா இருக்கேனாக்கும்... செலவழிக்க அவருக்கு கஷ்டம்...”

“....” ஒன்றும் பேசாத தாய் மனம் பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு ரெண்டு பேருக்குமே மனசில்ல... என்ன பண்றது... நாம பெத்த நேரம் அப்படின்னு நினைத்துக் கொண்டது.

“ஒண்ணும் பேச மாட்டியே... சரி... அப்பாவை கெளப்பு போவோம்...”

------------------------------------



ருண்... அப்பாவை நல்லா செக் பண்ணியாச்சு... அவருக்கு ஒண்ணுமில்ல... சாதாரண காய்ச்சல்தான்... ஆனா... அவரு புகையிலையை நிப்பாட்டுறது நல்லது...”

“எங்கே டாக்டர்... யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாரு... ஒரு தடவை மஞ்சக் காமாலை வந்தப்போ சுருட்டை நிப்பாட்டியிருந்தாரு.... அப்புறம் வாய் நமநமன்னு இருக்குன்னு ஊர்ல அப்ப அப்ப புகையிலை வாங்கிப் போட்டாரு...... அப்புறம் பாக்கெட் பாக்கெட்டா வாங்கித்திங்க ஆரம்பிச்சிட்டாரு... அதனால எதாவது...” அப்பாவை பார்த்தபடி கேட்டான்

“என்ன நீங்க இப்படி கேட்டுட்டிங்க... படிச்சிருக்கீங்க... புகையிலைப் பழக்கத்துல இருக்கவங்களுக்குத்தான் அதிகமா புற்று நோய் வருது... அவருக்கு இப்ப இருக்க கண்டிசன்ல புற்று நோய் வர அதிக வாய்ப்பிருக்கு... வாயெல்லாம் அரிச்சிருச்சி... இதுவரைக்கும் சரி... இனி கண்ட்ரோலா இல்லைன்னா அனுபவிச்சித்தான் ஆகணும்... ஐயா புகையிலை போடுறத நிப்பாட்டிக்குங்க... ” என்று நிறைய புத்திமதிகள் சொன்னார்.

வெளியில் வந்ததும் “என்ன டாக்டர் சொன்னது புரிஞ்சதா... போயலை போடக்கூடாதாம்... போட்ட புத்து நோய் வந்து அவதிப்படணுமாம்... அந்த சனியனை நிப்பாட்டுங்க... சரியா...”

“ஆமா... சாவு எப்ப வரணுமின்னு இருக்கோ அப்ப வரத்தான் போகுது... போயலை போடுறதாலதான் வருதாக்கும்... அட போடா”

“அதானே நாம யார் சொல்லி கேட்டிருக்கோம். அம்மா.... நீ சொல்லி வையி... எதையாவது இழுத்து வச்சிக்கிட்டா நா வந்து பாக்க மாட்டேன்... ஆமா... சொல்லிப்புட்டேன்.”

------------------------------------



ன்ன அப்பாவுக்கு பாத்து விட்டுட்டு வந்தாச்சா... ஆமா உங்கண்ணன் வந்திருக்கமாட்டாரே... அவரு பொழக்கத் தெரிஞ்சவரு... நம்மளமாதிரியா...”

“இப்ப என்னடி... எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கே... உங்கப்பாவுக்கு உன்னோட அண்ணன் தம்பி பாக்கலையின்னா எப்படி துடிக்கிறே... எங்கப்பா அம்மாவுக்கு நா பாத்த மட்டும் கத்துறே... நாளைக்கு உனக்கு உம்பிள்ள பாக்காம விடுறப்போதான் இந்த வலி தெரியும்... சும்மா கத்துறதை நிப்பாட்டிட்டு வேலயப் பாரு...”

“என்னய அதட்டுங்க... நாந்தானே உங்களுக்கு கெடச்சேன்...”

“சை...” என்றவனின் மொபைல் சிணுங்கியது... “அடுத்த என்ன அழைப்பு... எதாவது வந்துக்கிட்டே இருக்குமே...” என்றாள் சத்தமாக.

“என்ன திவாகர்...”

எதிர்முனை சொன்னதைக் கேட்டதும் “என்னடா சொல்றே... சுப்பண்ணனா... எதோ உடம்பு முடியலைன்னாங்க... அவங்க மகன் சென்னையில வச்சிப் பாக்கிறதா சொன்னாங்க... எப்படிடா...”

“அப்படித்தாண்டா சொன்னாங்க... ஆனா அவருக்கு ரத்தப் புத்து நோயாம்... ஆள உருக்கிருச்சு... பச்சப் புள்ள மாதிரி கெடக்காருடா... இங்க காரியம் செய்யணுமின்னுதான் சென்னையில இருந்து கொண்டாந்திருக்காங்க... உடனே எடுத்துடுவாங்க... சீக்கிரம் வா...”

“சரி... வாறேன்...”

சுப்பண்ணனின் இறுதிச் சடங்கின் முடிவில் புற்று நோய் ஒழிப்புக்கான உறுதி மொழியை தோழர்கள் எடுத்துக் கொள்ள, தனது மொபைலில் அம்மாவை அழைத்து “அப்பா நமக்கு வேணும்மா... அவரை போயலையை குறைக்கச் சொல்லும்மா... இந்தா லெட்ச லெட்சமா செலவழிச்சும் காப்பாத்த முடியாம போயி சேர்ந்திட்டாரு... அப்பாவ மட்டுமில்ல நம்ம ஊர்ல போயலை, சிகரெட்டு பிடிக்கிற எல்லார்கிட்டயும் சொல்லி விடச் சொல்லும்மா...” என்றான் தேம்பலாய்...


-‘பரிவை’ சே.குமார்.

புதன், 16 நவம்பர், 2011

மனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)



மூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

***********************************

1. சவால் மற்றும் வம்சி

திரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.

இந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

முதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்

இரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்

மூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்

வெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

சவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,

ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா?

ஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல? ‘  என்று கேட்டிருந்தார்.

உண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

சவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்பர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

*********

2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...

கோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...


உங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.

*********

3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...

ஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...

நாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

டிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...

அப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில்  இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

அப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.

அப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.

இப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.

-பரிவை’ சே.குமார்