மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 மே, 2023

மனசின் பக்கம் : வைகையில் அழகர் சில நினைவுகள்

ந்தக் கட்டுரையை இங்கு பதியும் நேரத்தில் பச்சைப் பட்டுடுத்தி - இப்போதெல்லாம் பச்சை மட்டும்தான் - கள்ளழகர் வைகையில் எழுந்தருளி, லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தாக் கோஷத்தை மகிழ்வாய் ஏற்று, மனநிறைவுடன் காட்சி கொடுத்திருக்கிறார்.

சென்ற வருடம் நீண்ட விடுமுறையில் இருந்ததால் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியையும் அழகரையும் நன்றாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் மீனாட்சி தேரை அவ்வளவு கூட்டத்துக்கு இடையே நீந்திப் போய், தேர் கோவிலில் இருந்து வந்து திரும்பும் இடத்தில் நின்று பார்த்தது மெய்சிலிர்க்க வைத்தது.
அதேபோல் அழகரின் பின்னே தல்லாகுளம் வரை நடந்து, ரசித்து, தரிசித்து, மறுநாளும் வைகையில் இறங்கப் போனவரை தேவர் சிலை அருகில் நின்று, ஜன நெருக்கடிக்குள் சிக்கி - சக்கையாக வெளியில் வந்தது வேற கதை - கூட்டம் நகர்த்தி செல்ல முன்னே போய், பின்னே வந்து ஒரு வழியாக தரிசித்து வீடு திரும்பினோம்.


சின்ன வயதில் அழகர் கோவிலுக்குப் போவது என்பது பெரிய விஷயமாக இருக்கும். ஊரில் இருந்து வந்து திரும்புவதற்கான செலவை யோசித்தே எப்பவாவதுதான் அழைத்து வருவார்கள். பெரும்பாலும் வருடம் ஒருமுறை என்பதாய்த்தான் அது இருக்கும். குடும்பத்துடன் வேன் எடுத்துப் போய் சாமி கும்பிட்டு வருவதுண்டு. வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தாலோ அல்லது குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கவோ கோவிலுக்குப் போவதுண்டு. அழகர்மலைப் பயணம் என்பது ஒருநாள் சுற்றுலா போல அமையும் என்பதால் அத்தனை மகிழ்வாக இருக்கும்.
அழகர் ஆற்றில் இறங்குவதற்கு எல்லாம் கூட்டிப் போகவும் மாட்டார்கள், போக விடவும் மாட்டார்கள். எங்கள் பகுதியில் சில ஊர்களில் இருந்து மாட்டு வண்டி கட்டி அழகர் கோவில் வந்து அழகருடன் மதுரை போய்த் திரும்பி வந்து கதைகதையாகச் சொல்வார்கள். நம்மால் கதை மட்டுமே கேட்க முடியும்.
ஊருக்குள் சன் டிவி - டிஷ் - எட்டிப் பார்ப்பதற்கு முன்னர் தூர்தர்ஷன் செய்திகளில் எல்லாம் அவ்வளவாகச் சொல்லமாட்டார்கள். நாளிதழ்களில் மறுநாள் வரும் போட்டோவைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். அந்தப் பேப்பரை நாளைக்கு எனக்குத் தாங்கன்னு தெரிந்த பெட்டிக்கடை அண்ணனிடம் சொல்லி வைத்து அழகரை மட்டும் வெட்டி எடுத்து நோட்டில் வைத்துக் கொள்வதும் உண்டு. இப்போதெல்லாம் பெரும்பாலும் பச்சைப் பட்டுத்தான் உடுத்தி வருகிறார். அப்போதோ இந்த வருடம் என்ன பட்டு உடுத்தி வந்தார் என்பதுதான் பேசு பொருளாகவே இருக்கும், வருடா வருடம் பட்டின் கலர் மாறிமாறி வரும்.
திருமணத்துக்குப் பின் - அபுதாபி வரும் முன் - வருடா வருடம் அழகரைத் தரிசிக்க முடிந்தது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி, சீர் பாதம் தூக்கிகள் தூக்கி வரும் தங்கக் குதிரை வாகனத்தைத் தொட்டுக் கும்பிடுவது என்பது எத்தனை பெரிய ஆனந்தம். அதை வருடா வருடம் அனுபவித்து, அழகனின் ஆட்டத்தில் மயங்கி இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டுப் போவோமே என மணிக்கணக்கில் நின்று பார்த்தது உண்டு. ஒருவேளை சிறுவயதில் பார்க்க முடியாததால்தான் இப்போது கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தோன்றி இருக்கலாம் என்றாலும் அந்த அழகை பக்கத்தில் இருந்து பார்க்கும் போது கிடைக்கும் பேரானந்தத்துக்கு அளவே இல்லை.
இந்த வருடம் சித்திரைத் திருவிழா ஆரம்பித்ததில் இருந்து சென்ற ஆண்டு கிடைத்த நிறைவான தரிசனம் மனசுக்குள் எழுந்து இந்த வருடம் அழகனைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வருத்தம் நிறைந்து நின்றது. பள்ளி விடுமுறை விட்டதும் மதுரை போன விஷால் இந்த முறை எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்து வீடியோ, போட்டோ என எடுத்து அனுப்பியவண்ணம் இருப்பது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அழகர்மலையில் இருந்து கிளம்பும் அழகர், பதினெட்டாம்படிக் கருப்பனிடம் பொறுப்பை ஒப்படைத்து உத்தரவு வாங்கி வருவதைப் போல் நாங்கள் கோவிலுக்குப் போனாலும் பதினெட்டாம்படியானைத் தரிசித்து, மொட்டை அடிக்க வேண்டியவர்களுக்கு அடித்து, மலையேறிக் குளிரும் நூபுர கங்கையில் குளித்து, கொண்டு போன கேன்களில் தீர்த்தம் பிடித்து, ராக்கச்சியம்மனை வழிபட்டு, அங்கிருந்து கீழிறங்கி பழமுதிர்சோலை முருகனை வழிபட்டு,மலையிறங்கி வந்து, அழகர்மலையானைத் தரிசித்து, சுந்தரவல்லித் தாயாரை, பிற தெய்வங்களைக் கும்பிட்டு, பிரசாதங்கள் வாங்கி, குரங்கிடம் கொடுத்து விடாமல் சாப்பிட்டு, பதினெட்டாம்படிக் கருப்பனிடம் வந்து, தீபம் பார்த்து, ஒரு சிதறு காயை உடைத்து விடைபெற்று மீனாட்சியைக் காணச் செல்வோம்.


மேலே சொன்னது போல் அந்த ஒருநாள் பயணம் அத்தனை மகிழ்வாகவும் சிறப்பாகவும் அடுத்த பயணம் போகும் வரை நூபுர கங்கை நீரின் சுவையைப் போல அந்தப் பயணத்தின் மகிழ்வைச் சுமந்து திரிவோம்.
முதல் சிறுகதைத் தொகுப்புக்கு 'எதிர்சேவை' என்ற பெயரும் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகரும், கோபுரமுமாய் அட்டைப் படமும் தசரதன் முடிவு செய்த போது ஆச்சர்யமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான் அது. அப்படி எதார்த்தமாய் அமைந்ததால்தானோ என்னவோ வருடாவருடம் ஒரு புத்தகம் என நான்கு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. திருவிழா நாவலில் ஓரளவுக்கு அழகர் திருவிழாவை எழுதியும் இருக்கிறேன். புத்தகங்கள் தொடர்ந்து வருவதற்கான அறிகுறியாய் சில நிகழ்வுகள் என்னை நகர்த்திக் கொண்டே இருக்கின்றன.
தங்கக் குதிரையில் குதித்து வரும் அழகனைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த முறை அந்தக் கொடுப்பினை இல்லை என்றாகிவிட்டது. அடுத்த மே மாதம் ஊருக்குப் போகும்போது கோவிந்தனின் தரிசனம் கிடைக்க பதினெட்டாம்படியான் அருள் புரியட்டும்.
-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நினைவுகள் அருமை...

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல நினைவுகள்.  நான் மதுரையில் புதூரிலும், ரேஸ் கோர்ஸ் காலனியிலும் குடி இருந்தேன்.  திருவிழாவை முழுமையாக அனுபவித்திருக்கிறேன்.