ஒரு பெண்ணுக்கு இரு வேறு சூழலில் இரு வேறு மனநிலையில் ஏற்படும் காதல்கள்தான் கதை...
கதையின் ஆரம்பமே நாயகி தியா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இரயில் தண்டவாளத்தில் நிற்பதில்தான் துவங்குகிறது... இரயில் அருகில் வரும்போது சாகும் எண்ணத்தில் இருந்து மாறி தப்பித்துக் கொள்பவள் செத்தே ஆவதென மீண்டும் தண்டவாளத்தில் போய் நிற்கிறாள்.
அவள் ஏன் சாக நினைக்கிறாள் என்பதாய் காட்சிகள் விரிகின்றன...
பயோடெக்னாலஜி மாணவியான தியா ஸ்வரூப்புக்கு தனது சீனியரான ரோகித் மீது காதல்... அதைச் சொல்ல நினைத்து ஒருவித பயத்தினாலேயே சொல்லாமல் விட்டு விடுகிறாள்... மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் அவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் பெங்களூர் வரும்போது இருவரும் எதிர்பாராத விதமாக லிப்டில் சந்திக்கிறார்கள்... அவள் வசிக்கும் அதே பிளாட்டில் அவனும்... அதுவும் அவள் வீட்டுக்கு எதிரே இருக்கிறான்... சொல்லவா வேண்டும்... மெல்ல மெல்லக் காதல் மலர்கிறது... முதல் சந்திப்பிலேயே ரோகித்தைத் தியாவின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை... அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஊர் சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.
ஒருநாள் சினிமாவுக்குச் சென்று திரும்பும்போது விபத்து... இருவருக்கும் பலத்த அடி... தியா பிழைத்துக் கொள்ள, ரோகித் இறந்துவிட்டான் என அவளின் அப்பா மற்றும் மாமாவால் சொல்லப்படுகிறது. அவனின் உடலைக் கொண்டு போவதையும் அவள் பார்க்கச் செய்கிறார்கள். அவளால் ரோகித்தின் இழப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன அழுத்தில் தவிக்கிறாள்.
அவளின் நிலையை உணர்ந்த அப்பா, அவளை மாறுதலுக்காக மும்பையில் இருக்கும் உறவுக்காரப் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு போன பின்னும் அவளால் ரோகித்தின் இழப்பை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அப்போதுதான் சாகும் முடிவை எடுக்கிறாள். அதன் காரணமாகத்தான் மருத்துவமனை செல்ல வேண்டியவள் தண்டவாளத்தில் இரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அதுவே படத்தின் ஆரம்பக் காட்சி.
அப்போது அவளுக்கு ஒரு போன்... தற்கொலை செய்து கொள்ள வரும் போது அவளின் கைப்பையை ஒருவன் பறித்துக் கொண்டு ஓட, அவனை விரட்டிப் பிடிக்கும் ஆதி, அவளைக் காணாமல் அவளுக்குப் போன் செய்கிறான். போன் நம்பர் எப்படிக் கிடைத்தது என்பதை பிறிதொரு சமயத்தில் நண்பனிடம் சொல்கிறான் என்பதால் எப்படி போன் பண்ணினான்... லாஜிக் ஓட்டை என்றெல்லாம் என்ன வேண்டாம்... நம் தமிழ்ப்படங்களில்தான் இன்னும் பைக்கும் காரும் சாவியோட ரோட்டில் நிற்கும்.
அந்தப் போனால் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிகிறது. ஆதியை மருத்துவமனையில் வைத்துச் சந்திக்கிறாள்... அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை... ஆனால் அவன் அவளை விடுவதாய் இல்லை. ஆதியின் அம்மா மருத்துவர்... மகன் மீது தீராத பிரியம் கொண்டவர்... அம்மாவை 'லக்கி' என்றுதான் அழைக்கிறான். ஆதியின் பேச்சும் செயல்பாடுகளும் அவளுக்குப் பிடித்துப் போக நண்பர்களாகிறார்கள். அவளை ஆதி தியா சூப் என்று அழைப்பது அழகு.
ரோகித்தின் மரணம் பற்றிய பேச்சு வரும் போது, அவளிடம் அவனை நினைத்து வருந்திக் கொண்டிருக்கப் போகிறாயா... அல்லது அதை மறந்து உன் பாதையில் பயணித்து மகிழ்வாக வாழப் போகிறாயா... இது இரண்டில் ஒன்றை நீதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறான் ஆதி. இவர்களின் அன்பு இன்னும் இறுக்கமாகும் போது இருவருமே இது காதல் இல்லை... நட்பு மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அவள் பெங்களூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, அவளுடன் கார்வார் என்னும் அவனின் ஊர்வரை பயணிப்பவன் நாம் அவரவர் இடத்தில் இறங்கலாம்... சொல்லிக் கொள்ளாமல் செல்லுதல் நல்லது என்பதாய்ச் சொல்லி, அதன்படி தூங்கிக் கொண்டிருக்கும் அவளிடம் சொல்லாமல் இறங்கி விடுகிறான். விழித்துப் பார்ப்பவள் அவன் இல்லாததை உணர்ந்து தானும் இறங்கி அவன் வீட்டிற்குப் போகிறாள். அங்கே அவன் அவளைப் பார்த்துக் கொள்ளும் முறையால் அவளுக்குள் காதல் மெல்லத் துளிர்க்க ஆரம்பிக்கிறது.
அவள் மீது அவனுக்குள் மெல்ல மெல்லக் காதல் மலர் ஆரம்பிக்கிறது... அவளிடம் சொல்லத் தயக்கம்... அம்மா சொல்லச் சொல்கிறாள்... ஆனாலும் அவன் சொல்லவில்லை... அப்போது ஒருவருக்குள்ளும் கேள்விகள்... காதலைச் சொல்லச் சொல்லி எழும் எண்ணங்கள்... அவளை இரயில் ஏற்றி விட்டுப் பிரியும் இடத்தில் ஒரு வழியாக காதல் சொல்லப்படுகிறது. நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாகப் பிரிகிறார்கள்.
பெங்களூர் செல்பவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது...
ஆம் ரோகித் உயிருடன் இருக்கிறான்... இரு குடும்பமும் பேசி திருமணம் செய்து வைக்கும் முடிவிலும் இருக்கிறார்கள். ஆதியிடம் போனில் விபரத்தைச் சொல்ல, அவனோ நீ ரோகித்தைத் திருமணம் செய்வதுதான் சரி என்று சொல்லி இத்துடன் நம் நட்பை முறித்துக் கொள்வோம்... நீ அவனுடன் மகிழ்வாய் வாழ் என்று சொல்லி விடுகிறான்.
அவளின் திருமணம் குறித்து உறவுக்காரப் பெண் மூலமாக அறிந்து கொள்ளும் ஆதி, பெங்களூர் சென்று கடைசியாக அவளைப் பார்க்க நினைக்கிறான். எல்லாத்துக்கும் சரியெனச் சொல்லும் அம்மா, அவன் போகக்கூடாதெனத் தடுக்கிறாள்... அம்மாவிடம் சொல்லாமல் கிளம்பிவிடுகிறான்.
தியாவின் திருமண நிச்சயத்தில் என்ன நடக்கிறது..?
தியாவை ஆதி சந்தித்தானா...?
ரோகித்துக்கு தியா-ஆதி காதல் விபரம் தெரிந்ததா..?
அம்மாவை மீறிச் சென்றதால் ஆதி சந்தித்த பிரச்சனை என்ன..? என்பதையெல்லாம் மிக அழகான படமாகத் தந்திருக்கிறார்கள்.
படத்தின் முடிவு எதிர்பாராதது... அந்த ஒரு விநாடி நம்மை உறைய வைத்து விடுகிறது.
தமிழில் 96 வந்த போது கொடுத்த தாக்கத்தைக் கொடுக்கும் படம் இது... மற்ற மொழிகளில் எல்லாம் 96 வந்த போதும் ஜானுவாக த்ரிஷாவைத் தவிர வேறு எந்த நடிகையும் வாழவில்லை என்பதைப் போல்தான் தியாவாக வரும் குஷி ரவி, இந்தப் படத்தை எந்த மொழியில் எடுத்தாலும் குஷி கொடுத்திருக்கும் தாக்கத்தை, நடிப்பை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது.
ரோகித்தாக வரும் தீக்சித் ரெட்டி கவரவில்லை... எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் ரோபோ மாதிரி நடிக்கிறார். ஆதியாக வரும் ப்ரித்வி ஆம்பர் அடித்து ஆடியிருக்கிறார்... சின்னச் சின்ன உணர்ச்சிகளைக் கூட முகத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்.
ஆதியின் அம்மாவாக பவித்ரா லோகேஷ், 'எவரு' தெலுங்குப் படம் பார்க்கும் போது நாயகனின் அம்மாவாக வரும் பெண்ணைப் பார்த்து இந்தம்மாவை எங்கயோ பார்த்த ஞாபகம் இருக்கேண்ணு யோசிச்சா இதே பவித்ராதான்... அழகான அம்மா.
படத்தில் ஆதி தன் அம்மாவிடம் ஒரு லெட்டரை வாசிக்கிறான்... அதை அவன் இரண்டு மூன்று இடங்களில் வாசிக்க நினைத்தும் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை... அதில் அம்மாவை ஏன் லக்கி என்றழைக்கிறேன் என்று எழுதியிருக்கிறேன்... வாசிக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வான். அதை அம்மா தெரிந்து கொண்டாளா..?
கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ சுவர்ணலதா புரொடெக்சன் தயாரிப்பில் கே.எஸ்.அசோகாவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு பி.அசனீஸ் லோக்நாத் இசை அமைத்திருக்கிறார். எடிட்டர் நவீன் ராஜும் ஒளிப்பதிவார்கள் விஷால் விட்டலும் சவுரப் வாக்மோரேயும் படத்துக்கு கூடுதல் பலம்.
படத்தில் குறை இல்லாமல் இல்லை ஆனால் நிறை அதிகமிருப்பதால் குறை தெரியவில்லை.
ரோகித் மரணித்துவிட்டான் என்னும் போதே அவன் உயிருடன் வரக்கூடும் என்பது நமக்கு தோன்றத்தான் செய்கிறது... அதேபோல் அம்மாவிடம் லெட்டரைப் படித்துக் காட்டும் போது முழுவதும் படிக்க முடியாமல் போவதன் காரணத்தையும் ஊகித்துக் கொள்ள முடியும்... மேலும் 'லக்கி' என ஏன் சொல்கிறான் என்பதையும் உங்களால் ஊகிக்க முடியலாம். அம்மாவின் சொல்லை மீறாத பிள்ளை, அதை மீறிச் செல்லும் போது அதனால் எப்படியான இழப்பு இருக்கும் என்பதையும் உணர முடிகிறது என்றாலும் படத்தின் கதையும் அதைச் சொல்லிச் சென்ற விதமும் குஷியின் நடிப்பும், ஆதி - குஷியின் அழகான காட்சிகளும் வசனங்களும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகின்றன. இப்படி முடித்திருக்க வேண்டாம் என வருந்தவும் வைக்கிறது.
மெல்ல நகரும் கதைதான் என்றாலும் அருமையானதொரு படம்...
முடிந்தால் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.
7 எண்ணங்கள்:
பார்க்க முயற்சிக்கிறேன். மெல்ல, விறுவிறுப்பு இல்லாமல் நகரும் படம் என்றால் கொஞ்சம் தயக்கம்தான்!
பாத்துடலாம்
அருமையான படம் போல... நன்றி குமார்...
உங்கள் விமர்சனம் ஈர்க்கிறது. அருமையாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. எதில் வரும்? ஃப்ரீயாகக் கிடைக்குமா? மொபைலில் மட்டுமே பார்க்க இயலும்.
துளசிதரன்
குமார் நீங்க சொன்ன படம் தானே புரிந்துகொண்டேன். ஃப்ரீயா எதிலாவது வந்துச்சுனா பார்க்கிறேன். நல்லாருக்கு கதை ப்ளஸ் உங்க விமர்சனம்
கீதா
பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம்.
இதமான படம் போல...
கண்டிப்பாக பாடல்கலாவது பார்க்கிறேன்
நல்ல விமர்சனம்
கருத்துரையிடுக