காலையில் பக்கத்துக் கட்டிடம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் விழுந்தடித்துத் தூங்கும் அறை நண்பர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் எழுந்து குளித்துக் குளிரும் பனியில் அருகிருக்கும் பூங்காவை இரண்டு மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு அருகிலிருக்கும் பெங்காலி கடைக்கு டீக்குடிக்கச் சென்றேன்.
இங்கு வார விடுமுறை என்றால் இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று தண்ணியடித்தல்... மற்றொன்று மதியம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குதல்... நமக்கென்னவோ இரண்டிலும் நாட்டமில்லை. மற்ற நாட்களைப் போலத்தான் வார விடுமுறை தினமும்... ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டோ அல்லது குளிக்காமலோ நடைப் பயிற்சிக்குக் கிளம்பிவிடுவேன். ஆறு மணிக்கு மேல் படுத்திருந்திருந்தாலும் தூங்காமல் செல்போனில் முகநூலோ வேறெதுவோ நோண்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் கீழிறங்கிச் சென்று விடுவதுண்டு.
பெங்காலி கடையில்தான் டீ நன்றாக இருக்கும். மலையாளி கடையில் போடும் டீ நம்ம ஊரில் திருவிழாக்களில் போடப்படும் கடைகளில் அல்லது பழனி நடைப்பயணத்தில் ரோட்டோரத்தில் முளைத்திருக்கும் கடைகளில் குடிக்கும் டீ என்ற சுடுதண்ணீரை விட கேவலமாக இருக்கும் என்பதால் பெங்காலி கடை டீயே போதுமானதாய் இருக்கிறது.
சிறிய கடைதான் அது... காலை நேரத்தில் கூட்டமிருக்கும். அடிக்கடி செல்வதால் பெங்காலி நம்மைப் பார்த்ததும் சிரித்து வைப்பார். சில நேரம் 'என்ன சாப்பிடுது... சாதா சாயாவா?' அப்படின்னு மலையாளத்தில் கேட்பார். டீயும் ஒரு புரோட்டாவும் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
பெங்காலி கடை புரோட்டா என்பது எண்ணெய்யில் வேக வைத்த புரோட்டா... மொறுமொறுன்னு இருக்கும். இது நம்ம விருதுநகரில் போடும் புரோட்டா போல்தான்... இந்த விருதுநகர் புரோட்டா ரொம்ப பேமஸ்... எங்க தேவகோட்டையில் உறவினர் ஒருவர் ஹோட்டல் ஆரம்பித்த போது புரோட்டாவை கல்லில் வேக வைத்து எண்ணெய்யில் பொறித்தெடுத்து விருதுநகர் புரோட்டா என்று விற்க, வரும் கூட்டமெல்லாம் அந்த புரோட்டாவுக்காகவே வந்தது.
பெங்காலிகள் பெரிய தோசைக்கல்லில் நிறைய எண்ணெய் விட்டு பெரிதாக புரோட்டாவைத் தேய்த்துப் போட்டு நல்லா வேகவைத்துக் கொடுப்பார்கள். அவர்கள் கடையில் இந்தப் புரோட்டாவுக்கும் பாயாவுக்கும்தான் கூட்டமே. பாயா அருமையாக வைப்பார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் ஆட்டுக்கால் பாயா என்று வைப்பதில் கிடக்கும் பெரிய பெரிய எலும்புகளைப் பார்க்கும் போது நமக்கு அது ஆடுதானா என்ற எண்ணம் தோன்றுவதால் பாயா பக்கம் பாய் விரிப்பதில்லை.
ஒரு புரோட்டாவும் சாதா டீயும் காலை நேரத்துக்கு போதுமானதாய் இருக்கும். பெங்காலி கொண்டு வந்து வைத்த புரோட்டாவை பேப்பரில் சுற்றிச் சுற்றி ஒரளவு எண்ணெய் நீக்கி, சூடாய் கொஞ்சம் பிய்த்து வாய்க்குள் வைத்து டீயை ஒரு உறிஞ்சு உறிஞ்சிய போது எதிரே ஒரு பெங்காலி வந்து உட்கார்ந்தான். கொஞ்ச வயசுக்காரன்தான். சில பெங்காலிகள் சாப்பிடுவதைப் பார்த்தாலே நமக்கு சாப்பிடத் தோன்றாது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்
எதிரே அமர்ந்தவன் மூன்று புரோட்டாவும் கடலைக்கறியும் கேட்டான். கடைக்கார பெங்காலி மீண்டும் மீண்டும் மூன்றா என்று கேட்டார்... அவரின் கேள்வியில் தொக்கி நின்றது வியப்பா என்பது குறித்து ஆராயவில்லை. அவனும் ஆமா என்று சொல்லி ஆராய விடவில்லை. மூன்று புரோட்டாவும் கடலைக்கறியும் வர, பிய்த்துச் சுருட்டி வாய்க்குள் வைத்தான்.
ஒருபக்கம் புரோட்டாவை வேக வைத்து அடுக்கிக் கொண்டே இருக்க, மறுபக்கம் விற்றுக் கொண்டே இருக்கிறது. இதில் எதற்கு மொத்தமாக வாங்கி அடுக்க வேண்டும். ஊரில் சாப்பாடு போடும் போது அள்ளி வைத்துக் கொள்பவர்களை 'எதுக்கு அவக்களிஞ்ச மாதிரி வச்சிக்கிறே.... கொஞ்சமா வச்சிச் சாப்பிடு... சட்டிக்குள்ளதான் இருக்கும்... எங்கயும் போயிடாது' என்பார்கள். அப்படி ஒவ்வொன்றாக சூடாக வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். அவன் விற்றுத் தீர்ந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ யாருக்குத் தெரியும். அங்கு இருந்தோர்... வருவோர்... போவோர் கண்கள் எல்லாம் அவன் தட்டின் மீதுதான் என்பதை அறியாமலோ அறிந்தோ இருந்திருக்கலாம் அவன்.
சிறிது நேரத்தில் நாலு பிலிப்பைனிகள் வரும்போதே பாய் மத்தன் கறி, பரோத்தான்னு கத்திக் கொண்டே வந்தார்கள். நால்வரும் அமர, மீண்டும் ஒருவன் மத்தன் கறி, பரோத்தா என்று ஆர்டர் சொல்ல ஆரம்பித்தான். பிளைன் இருக்கா என்று ஒருவன் கேட்டான்... பெங்காலிக்கு மட்டுமல்ல அங்கிருந்தவர்களுக்கும் என்ன என்பது புரியவில்லை. மறுபடியும் அவனிடமிருந்து பிளைன் இருக்கா... இப்பவும் புரியலை... உடனே தலையில் கைவைத்து பிளைன்... பிளைன்... என்று விளக்கமாய் கேட்க, இப்ப பெங்காலிக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே புரிந்தது அது பிளைன் அல்ல பிரைன் என்பதாய்.
பிரைன் இல்லை என்றார் பெங்காலி... யாருக்கு...? என்று கேட்கும் ஆவல் வாய் வரை வந்து நின்றது. நமக்கு வாய்தான் எதிரியே...பெங்காலி சூப்பர் பாயா... பாயா... வேணுமா என்றார் உடனே பிலிப்பைனி ஒருவன் காலைத் தொட்டுக்காட்டி இதுவா என்றான். ஆமா எனத் தலையாட்ட வேண்டாம் என்று சொல்லி, தால் கறி, மத்தன் கறி, பரோத்தா என ஆர்டர் அடுக்கி முடிக்க, அதுவரை காத்திருந்தவன் போல ஒரு பிலிப்பைனி மூணு மத்தன் கறி எனக்கு ஒரு பாயா என்றான். ஆர்டர் சொல்லப்பட்டது. கதபுத என்ற பேச்சுக்களோடு அதன் வருகைக்காக காத்திருந்தார்கள்.
நான் எழுந்து டீக்கும் ஒரு புரோட்டாவுக்கும் இரண்டு திர்ஹாம்களை பெங்காலியிடம் கொடுக்க அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவரின் சிரிப்பில் மூணு புரோட்டாக்காரனும் நாலு பரோத்தாக்காரர்களும் எனக்குத் தெரிந்தார்கள். அவருக்குள் அப்படித்தானா என்பதை எப்படி அறிவது..? கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தேன்.
மீனை வாங்கி சுடு தண்ணியில் வேகவைத்துச் சாப்பிடும் பிலிப்பைனிகள் இப்ப மசாலா அயிட்டத்தை அதுவும் நல்ல உரைப்பாக சாப்பிடப் பழகி விட்டார்கள். பிரியாணி வாங்கினால் ஸ்பைசியாகத்தான் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
பெங்காலி கடை டீயும் புரோட்டாவும் நம்மைப் போல் அவர்களுக்கும் பிடித்து விட்டது போல.
கொஞ்சம் பனி விலக, சில்லென்ற காற்றை உடலில் வாங்கியபடி அறைக்கு வந்தால் குறட்டைச் சத்தம், மழை நேரத்தில் எங்க வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தண்ணீரில் கத்தும் தவளைகள் போல ஆர்ப்பரிக்க அறைக்குள் இன்னும் விடியவில்லை. மணி அதிகமில்லை பத்துத்தானே ஆகிறது.
நான் எனது கட்டிலில் அமர்ந்து போனில் முகநூலில் மூழ்கினேன்...
அமீரக வாழ்க்கையில் ஒரு விடுமுறை நாள் மெல்ல நகர ஆரம்பிக்கிறது... மதியம் மீன் பிரியாணி என்ற நினைப்போடு.
-'பரிவை; சே.குமார்.
9 எண்ணங்கள்:
பங்ஸ்கள் அதிகாலையிலேயே பாயா சாப்பிடுவதை காணும்போது எனக்கு அருவெறுப்பாக இருக்கும்.
காலை நேர உலா - எனக்கும் பிடிக்கும். ஆனால் ஒன்றும் சாப்பிடுவதில்லை. தேநீர் மட்டுமே.
எங்க பழைய வீட்டுக்கு பக்கத்துக்கு வீடு இவங்கதான் :) அவங்க என்ன மசாலா போடறாங்கன்னே தெரியாதது ஆனா எனக்கு மூச்சு திணறும் பக்கத்துவீட்டுகாரங்க சமைக்க ஆரம்பிச்சா :) மூணு வேலையும் அசைவம் சாப்பிடுவாங்க
பிலிப்பைனிகள் போல தான் இங்குள்ள பிரிட்டிஸ்காரங்களும் அனியன் பஜ்ஜி சமோசாக்கு ஆசைப்பட்டு சாப்பிடுவாங்க ..
விடுமுறையை நகர்த்திய காலை காட்சிகள் அப்படியே கண் முன் தோன்றியது
காலைநேர உலாவிலேயே பரோட்டாவா
தம=1
பரோட்டா பக்கம் எல்லாம் போவதேயில்லை..
ஒருநாள் பாயாவை மூன்று நாளைக்கு கொதிக்க வைத்துக்
குடிக்கின்றார்கள் - இங்குள்ள மஞ்சப் பொடிகள்!..
எத்தனை அனுபவம்
உங்களின் காலை அனுபவத்தை சொல்லி சென்ற விதம் அருமை... நீங்கள் சொல்லும் அனுபவத்தை நான் சென்னையில் பேச்சுலராக வாழ்ந்த காலத்தில் அனுபவித்து இருக்கிறேன். அப்போது எல்லாம் செல்போன் எல்லாம் கிடையாது... உங்களைப் போலவே காலையில் எழுந்துவிடும் பழக்கம் என்னிடம் உண்டு
இப்போதும் காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு என் நாய்குட்டியுடன் வாக்கிங்க் அதுவும் இஸ்லாமிய பெண்களை போல முகத்தை எல்லாம் மறைத்து கொண்டுதான் காரணம் குளிர் மிக அதிகமாகிவிட்டது
இந்த மாதிரியும் ஒரு அனுபவம்! சுவாரஸ்யம்தான்.
ஹ்ஹ ஹா பிரைன் பிளைன் ஆனதா அவர்களுக்கு சரியா கேட்டு இருக்காங்களோ ஒருவேளை
கருத்துரையிடுக