லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்த லால், மோகன்லாலை வைத்து எப்படியும் படம் இயக்க வேண்டுமென முயற்சித்து அதில் வெற்றியும் பெற்ற நிலையில் படத்தில் ஜெயித்தாரா?
இந்தக் கேள்வியோடு ஆரம்பிப்போம் படம் குறித்தான பார்வையை...
வெளிப்பாடிண்டே புஸ்தகம்...
இந்தப் பேரைக் கேட்டதும் என்ன புஸ்தகம் இது எனத் தோன்றலாம்.
இந்தப் படத்தின் பாடலொன்று உலகெங்கும் பிரபலமானதே அந்தப் பாடலைச் சொன்னால் உடனே ஞாபகத்தில் வந்துவிடும்தானே இது என்ன புஸ்தகம் என்பது...
ஆமா அது என்ன பாடல்...?
அட ஷெரில்... அதாங்க கல்லூரிப் புரபஸர் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் ஆட்டம் போட்டுச்சே... உடனே நம்ம பயக, புள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு ஆட்டம் போட்டு யூடியூப்பை நிரம்பி வழிய விட்டார்களே...
இன்னும் ஞாபகத்தில் வரலையா...? அட நம்ம ஊரு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், இணையச் சேனல்கள் எல்லாம் இந்தா இருக்கிற நெடுவாசல் போய் போராட்டம் நடுத்துனவங்களை எடுத்து போட முடியவில்லை என்றாலும் அந்தப்புள்ளை வீடு தேடிப்போயி பேட்டியெல்லாம் எடுத்துப் போட்டானுங்களே...
ம்... சும்மாவா மில்லியன் கணக்குலயில்ல லைக் போட்டிருக்கோம்... அதுல லைக் போட்டதுல நம்ம தமிழனுகளுக்குத்தான் முதலிடமாம் தெரியுமா..?
ம்... அதே தாங்க... 'எங்கம்மாட ஜிமிக்க்கி கம்மல்'... ம்.... இப்ப ஞாபகத்தில் வந்திருக்குமே அந்த ஷெரில்... ச்சை... படம்.
சரி படம் எப்படி..?
ஒரு கிறிஸ்தவக் கல்லூரி... அதில் மீனவ மாணவர்கள் மற்றும் எங்கும் இடம் கிடைக்காமல் இங்கு வந்து படிக்கும் பெரிய இடத்து மாணவர்கள் என இரண்டு குரூப்புக்குள் எப்பவும் மோதல்... நாங்க படிக்கும் போது இருந்த எங்க தேவகோட்டைக் கல்லூரி மாதிரித்தாங்க... எங்க கல்லூரியில் தேவகோட்டை - திருவாடானை மோதல் எப்பவும் இருக்கும்... சாதாரண அடி தடியில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடிக்கும் பெரிய அடிதடி வரை அடிக்கடி நிகழும். இப்ப நிறைய மாற்றம்... மாற்றம் நல்லதுதானே...
கல்லூரித் துணை முதல்வராய் இருக்கும் புரபஸர் பிரேம்ராஜ் (சலீம் குமார்)... செக்ஸ் பட பிரியர் என்பதால் மாணவர்களால் செல்லமாக காமராசு என அழைக்கப்படுகிறார். மாணவர்களின் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன் பார் என சிசிடிவி கேமரா வைக்க, அதன் மூலம் அவருக்கே பிரச்சினை வருகிறது. அதன் காரணமாக துணை முதல்வர் பதவி போய் சாதாரண புரபஸராகிறார். அவருக்குப் பதிலாக... துணை முதல்வராக கல்லூரிக்குள் நுழைகிறார் பாதர் மிக்கேல் இடிகுலா (மோகன்லால்).
இரண்டு பிரிவுகளின் தலைகளையும்... அதாங்க மீனவர் பிரிவின் தலைவன் பிராங்கிளின் (அப்பானி சரத்), பெரிய இடத்துக் குழுத் தலைவன் சமீர் (அருண் குரியன்) இருவரையும் இணைக்கும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.
மிக்கேல் பாதர் என்பது கல்லூரிக்குள் தெரியாது... மேலிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடந்தாலும் அதிமுகதான் ஆள்கிறது என நாம் முட்டாள்தனமாக நம்புவது போல் திருமணம் ஆகாத மிக்கேல் தன்னைக் கட்டிக் கொள்வார் என முட்டாள்தனமாக நம்புகிறார் புரபஸர் மேரி (அன்னா ராஜன்), இந்தக் காதலை மிக்கேலிடம் சொல்ல சக புரபஸரும் தோழியுமான அனுமோல் (சினேகா ஸ்ரீகுமார்) முயல, மிக்கேலோ குர்பானாவுக்கு சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்ல, அங்குதான் அவர் பாதர் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருட்டுக்குள்ளயே கிடக்கின்றன இங்கே... எப்ப அவற்றின் மீது வெளிச்சம் படும்?
மேரி நல்ல பெண் என்றும் அவளுக்குத் தனக்குத் தெரிந்த நல்ல பையனை பேசி முடிப்பதாகவும் சொல்லி அதன்படி செய்கிறார். கல்லூரிக்குச் சைக்கிளில்தான் வருவேன் என வரும் மிக்கேல்... இங்க வார்டு கவுன்சிலரே ரெண்டு கார்ல போறாரு... துணை முதல்வர்... அடிக்கடி துணை முதல்வர்ன்னு சொன்னதும் நீங்க அவருன்னு நினைச்சிறாதீங்க... நான் அந்த தர்மயுத்தத்தைச் சொல்லலை... இவரு கல்லூரி துணை முதல்வருங்க... சுத்தமான தமிழில் சொன்னா வைஸ் பிரின்ஸ்பால்.
கல்லூரித் துணை முதல்வர் சைக்கிளில் போறாரே... அப்ப எப்படி மாணவர்கள் மதிப்பாங்கன்னு யோசிக்காதீங்க... ஏன்னா அது கேரளாங்க... முதல்வரே சர்ச்சுக்குள்ள இடமில்லைன்னு வெளியில உக்காந்திருந்தாருதானே... விடுங்க.. நம்மூரா இருந்தா சர்ச்சுக்குள்ள இருந்த எல்லாரையும் வெளிய போகச் சொல்லிட்டு முதல்வர் மட்டும் உள்ள இருந்திருப்பாரு இல்லையா... அப்ப இசைக்கத் தெரியாத அம்மணி அதுவும் செரிதான்னு அசால்டா பேட்டி கொடுக்கும். நமக்கெதுங்க அரசியல்... பதிவர் அரசியலே படு பயங்கர இருக்கும்போது நாட்டரசில் தேவையா...?
சரி வாங்க பொஸ்தவத்தை தொடர்ந்து வாசிப்போம்.
எங்க விட்டோம்.... ஆங்.... சைக்கிள்லதானே... ஒருநாள் மாலை சைக்கிளில் போகும்போது ஒரு குடிகாரனைச் சந்திக்க, அவனை சைக்கிளில் ஏற்றி வீட்டில் கொண்டுபோய் விட வேண்டிய சூழலில் சிக்குகிறார் பாதர். அந்த சிறிய குப்பத்து வீட்டுக்குப் போனால் அது பிராங்க்ளின் வீடு... அந்த குடிகாரன் அவனின் அப்பா வர்க்கி (பிரசாத்). பால் இல்ல கட்டங் காபிதான்... குடிப்பியலா... டம்ளர்ல மீன் வாசம் இருக்கும் என அவனின் அம்மா கொடுத்த காபியை வாங்கிக் குடித்து நல்லாயிருக்கு என்று சொல்லிக் கிளம்பும் போது உன்னோட சிறுகதை படித்தேன், ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொல்லிச் செல்கிறார். ஆக பிராங்க்ளின் ஒரு எழுத்தாளன்... அதிலும் சிறுகதை எழுத்தாளன் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.
கல்லூரியில் பாய்ஸ் ஹாஸ்டல் கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதற்கு வேண்டிய பணத்தை எப்படிப் புரட்டுவதென நடக்கும் பேச்சு வார்த்தையின் முடிவில் சினிமா எடுப்பதென தீர்மானம் நிறைவேறுகிறது. இதை எல்லாக் கல்லூரிகளும் தொடர்ந்தால் அன்புச் செழியன் போன்றவர்கள் சினிமாவில் வளர மாட்டார்கள்... கோடிகளும் புரளாதுதானே.... நம்ம சொன்னா எவன் கேக்குறான்.
பாதருக்குத் தெரிந்த தயாரிப்பாளர் விஜய்பாபு (படத்திலும் நிஜத்திலும் விஜய்பாபுதான்) ஒன்னறைக் கோடி முதலீடு செய்வதாகச் சொல்லி, சினிமாவில் பெரிய நடிகர்களைப் போடுவதைவிட நாமளே நடித்தால் செலவைக் குறைக்கலாம் என்றும் சொல்ல, அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு கல்லூரி பாடம் துறந்து படம் எடுக்க ஆரம்பிக்கிறது. அட இந்த வரி நல்லாயிருக்கே..! எனக்கு நானே ஆச்சர்யக் குறி போட்டுக்கிறேன்.
விஜய்பாபுவால் நம் சிறுகதை எழுத்தாளனின் கதை நிராகரிக்கப்பட, குறும்படம் எடுத்து அனுபவம் உள்ள சமீர் இயக்குநராக, எந்தக் கதையை எடுக்கலாமென யோசிக்கும் போது தாமரைக் குளத்துக்குள் ஒற்றை அல்லி பூத்திருப்பது போல், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் கலையரங்கத்தில் பாதர்களுக்கு மத்தியில் குங்குமப் பொட்டுடன் சிரிக்கும் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வம் கவர்கிறார். ஆமா யார் இந்த விஸ்வம்..?
விஸ்வம் யாருன்னு பார்க்கும் முன்னால இதைச் சொல்லிடுறேன்... கிறிஸ்தவப் பள்ளிகளில் சர்ச்சுக்கு எல்லா மாணவர்களும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்... ஆனால் அவர்கள் கொடுக்கும் திராட்சை ரசத்தில் நனைத்த பிரசாதத்தை மட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பதும் கட்டாயம்... இதெல்லாம் அனுபவம்... ஆராய்ச்சியில்லை. அப்படியிருக்க பாதர்களுக்கு நடுவே எப்படி விஸ்வம்..?
அதுக்கு ஒரு கதையிருக்கு... அதன் முடிவுதான் படத்தின் ஆரம்பக் காட்சியில் மழைநாளில் விஸ்வத்தின் கொலை...
அந்தக் கிறிஸ்தவக் கல்லூரி வரக்கூடாதுன்னு சொல்லுற ஒரு பெரிய மனிதர் மாதன் தரகன் (சித்திக்).. கல்லூரி வந்தே தீரும்ன்னு போராடி கல்லூரியைக் கொண்டு வரும் விஸ்வம். விடுவாங்களா... அதுதான் ஆரம்பக் காட்சிக் கொலையாய் அரங்கேறுகிறது ஒரு மழை நாளில்... மாதனுக்கு உதவியாய் அவரின் வலக்கை காக்கா ரமேஷன் (செம்பான் வினோத்) கொலைப்பழியில் சிறைக்குப் போகிறான்.
விஸ்வத்தின் கதை வியப்பைத் தருவதால் அதையே எடுப்போமென முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்குகிறார்கள். படமென்றால் நடிகர் தேர்வு இருக்கணுமே... எந்தக் கதாபாத்திரத்துக்கு யார் என்ற தேர்வு ஒரு சுபயோக சுபதினத்தில் நடக்கிறது.
விஸ்வத்தின் நெருங்கிய நண்பனாயிருந்து குடிகாரனானவர் வர்க்கி... அதாங்க பிராங்க்ளின் அப்பா... அவர் கதாபாத்திரத்தில் பிராங்க்ளின்... ஆம் கதை நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்தவனை கதாபாத்திரமாக்கி சரிக்கட்டி விடுகிறார்கள்.
விஸ்வத்தின் மனைவி ஜெயந்தியாக புரபஸர் மேரி... மாதனாக புரபஸர் காமராசு... இப்படி எல்லாக் கதாபாத்திரமும் ஓகேயாக விஸ்வமாக யார்...? என்பது கேள்விக்குறியாகிறது... இதுவே தயாரிப்பாளரை விலகிக் கொள்ளலாம் என முடிவெடுக்க வைக்கிறது.
நாயகன்தானே சுமக்கணும்... அதுதானே சினிமா விதி... பாதர் பக்கா அடியாளாக அதாங்க விஸ்வமாக உருவெடுக்கிறார். விஸ்வத்தின் வீட்டில் மனைவி ஜெயந்தியிடம் (பிரியங்கா) அனுமதி வாங்கி அங்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். பாதரைப் பார்க்கும் போது ஜெயந்திக்கு விஸ்வம் ஞாபகம் வருகிறது.
விஸ்வத்தின் முதல் குழந்தை கொல்லப்படுவது... இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது விஸ்வம் கொல்லப்படுவது... என கதைக்குள் மற்றொரு கதை சினிமாவாய் பயணிக்க, மாதன் பிரச்சினைக்கு வருகிறார். பின் அவரே விஸ்வத்தைத்தான் கொல்லவில்லை என்பதையும் சொல்கிறார்.
ஒரு பாடல் காட்சி பாக்கியிருக்கும் நிலையில் இறுதிக் காட்சி எடுக்கப்பட்ட பின்னரே விஸ்வத்தை யார் கொன்றார்கள் என்பது தெரிய வர, மீண்டும் காட்சியை மாற்றி எடுக்க வேண்டுமென பாதர் சொல்ல, இயக்குநரான சமீர் மறுக்கிறான். மீண்டும் இவர்களால் படத்துக்குப் பிரச்சினை வருகிறது.
பாதர் குறித்து அவர் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்பவர் சொல்லும் உண்மையில் உரைகிறது மாணவர் கூட்டம். அந்த உண்மை... அவர் ஒன்றை மனம் ஒத்து செய்தால் அதாகவே மாறிவிடுவார் என்பதுதான்... அவரின் படப்பிடிப்பு சமயத்திலான செயல்கள் எல்லாம் விஸ்வத்தை ஒத்திருப்பதை உணர்கிறார்கள்.
சரி இப்ப சஸ்பென்ஸ் கிளைமேக்ஸ்க்கு வருவோம்.
விஸ்வத்தைக் கொன்றது யார்..?
விஸ்வத்தின் முதல் குழந்தையை கொன்றது யார்..?
பாதர் மீண்டும் நடிக்க வந்தாரா இல்லையா..?
இறுதிக்காட்சியில் மாற்றம் பண்ணினார்களா இல்லையா..?
அந்த கதாபாத்திரமாகவே மாறிய பாதர் விஸ்வத்தைக் கொன்றவர்களை என்ன செய்தார்..?
மாதனாக நடிக்கும் காமராசு... ச்சை... பிரேம்ராஜ் தொடர்ந்து நடித்தாரா அல்லது நிஜ மாதனால் மிரட்டப்பட்டாரா...?
மேரிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்ததா...?
ஜெயந்தியும் குழந்தையும் என்ன ஆனார்கள்..?
இப்படி நிறையக் கேள்விக்கு இறுதிக் காட்சிகள் விடையாய்...
பாடம் நடத்தும் கல்லூரி ஒரு ஹாஸ்டல் கட்டுவதற்காக படமெடுக்குமா..? என்ற கேள்வி எழும்போதே படம் ஆளில்லாத ரோட்டில் 20கிமீ வேகத்தில் போவதுபோல் ஆகிவிடுகிறது.
ஒரு சர்ச் பாதர்... கல்லூரி துணை முதல்வர்... இதைச் செய்வாரா..? என்ற கேள்வி எழும்போது துணை முதல்வர் மீதான மதிப்பும் டமார்... இங்கயும் தர்மயுத்தத்தைச் சொல்லலை... அதுக்கு மதிப்பு இருந்தாத்தானே உடையும்..?
மிகப்பெரிய ஆள் ஒருவரால படப்பிடிப்பை நிறுத்த முடியாதா..? என்ற கேள்வி எழும்போது கதை மெல்லப் படுத்து 20-வதில் இருந்து 10 கிமீ வேகத்துக்கு வந்துவிடுகிறது.
பெரிய மனிதரால் ஒரு படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது வெளியாக இருந்த படங்களான விஸ்வரூபத்தையும் துப்பாக்கியையும் கதற விட்ட நம்மாளுங்கதான் ஞாபகத்தில் வந்தார்கள்... என்ன மெர்சலா... அதில் மிகப் பெரிய அரசியல் இருக்கு... அதெதுக்கு நமக்கு.
மோகன்லால் - லால் ஜோஸ் இணைந்த முதல் படம் எப்படியிருக்க வேண்டும்... சும்மா அதிர வேண்டாம்... வேண்டாம் அட தூள்ன்னாச்சும் சொல்ல வைக்க வேண்டாம். எப்ப கல்லூரி சினிமா எடுக்குறேன்னு களத்துல இறங்குதோ அப்பவே மனசுக்குள் சுபம் போட்டு விடுகிறது கதையின் போக்கு.
அப்ப படம்...?
'ஜிமிக்கி கம்மல்' மட்டுமே அழகாய் ஆடுகிறது... எத்தனை ஷெரில் ஆடினாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்... படம் பார்க்கும் போது நான்கு முறை திரும்பத் திரும்ப பார்த்தேன்... செம.
ஜிமிக்கி கம்மல் மட்டுமே அழகு என யார் சொன்னது...? நெற்றியில் சிறியதாய் ஒரு குங்குமப் பொட்டும் வைத்தால்தானே இன்னும் அழகு... இல்லையா..?
இயக்குநர் கம்மலை அழகாய் ஆடவிட்டு கதை என்னும் குங்குமப்பொட்டை சரியாய் வைக்கவில்லை... ஸ்டிக்கர் பொட்டுத்தான் வைத்தார் போல அதான் பாதர் சினிமா எடுக்க ஆரம்பித்ததும் கீழ விழுந்துருச்சு... கடைசிவரை விழுந்த பொட்டை எடுத்து ஒட்டவும் இல்லாமல் புதிய பொட்டை எடுத்து வைக்கவும் இல்லாமல் வெற்று நெற்றியாய்த்தான் இருக்கிறது.
இசை ஜிமிக்கி கம்மலில் ஆட்டம் போடுகிறது... இசையாய் ஷான் ரஹ்மான்.
கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்... எழுதிய பென்னி பி.நாயரம்பலம்.
ஒளிப்பதிவில் கலக்கலாய் விஷ்ணு சர்மா.
(ஷெரில் ஆடாத பாடல் படத்திலிருந்து)
முக்கியமாக ஒரு விஷயத்தில் மட்டும் இந்த மோகன்லால், மம்முட்டியைப் பாராட்டலாம்... எதில்..?
அதாங்க நாயகியுடன் டூயட் பாடாமல் தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களாய் தேர்ந்தெடுப்பதில்தான்.... ஏன்னா தமிழ் நாயகர்கள் இப்படி எப்போது மாறுவார்கள் என ஏங்க வைக்கிறார்களே... அறுபதிலும் இருபதோடு ஆடிக்கொண்டு... ம்... சொன்னா நீ யாருடா சொல்லன்னு அவங்க கேக்குறாங்களோ இல்லையோ பால்குடம் எடுக்கிற நாங்கள் கேட்போம் நமக்கெதுக்கு... நாம் சேட்டன்களைப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம். கருத்துச் சொல்றேன்னு ஆளும் அரசின் அமைச்சர்கள் போல் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்காம....
பாலா ஒத்தை வார்த்தையை வைத்து தூங்கிக்கிடந்த மாதர் சங்கத்தை எழுப்பியது போல் ஜிமிக்கி கம்மலை வைத்து கல்லாக் கட்டலாம் என நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள்.
அப்ப படம் பாக்கலாமா..?
விருப்பமிருந்தால் பார்க்கலாம்... போரடிக்காது என்பது கேரண்டி.
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
தமிழ் படம் பார்க்கவே இங்க முடில. இதுல மலையாள படமாம்...
அப்புறம் ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நான் லைக் போடலைன்னு தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்
குமார் உங்கள் விமர்சனம் வழ்க்கம் போல் நன்றாக இருக்கிறது. படம் ஓகே தான்...மற்றபடி ரொம்பச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை...
துளசித்சரன் சொல்கிறாரில்லையா அதனால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
நல்ல விமர்சனம் எழுதறீங்க படம் போரா இருக்குமா??படத்திலும் வந்தாச்சா ஜிமிக்கி கம்மல் பற்றி ....
வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
படம் போரடிக்காது... பார்க்கலாம்.
கதையின் போக்கு கல்லூரியில் இருந்து சினிமாவுக்குள் போயிடும். அவ்வளவே.
ஜிமிக்கி கம்மல் பாட்டு படத்தில் சூப்பர்... மியூசிக் செம... ஆட்டமும் கூட.
பாருங்கள்.
வணக்கம் அக்கா...
இங்க பொழுதுபோக்கு வேற என்ன இருக்கு...
எல்லா மொழிப்படமும் பாக்க வேண்டியதுதானே... ஹிந்தி மட்டும் ஏனோ பிடிப்பதில்லை.
மலையாளப் படங்களில் நல்ல கதைக்களும் அழகான இடங்களும் இருக்கும்.
ஜிமிக்கி கம்மல் ஷெரில் ஆடுனதுக்கு நானும் லைக் போடலை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துளசி அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாம் படம் பார்க்கலாம்... போரடிக்காது...
இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்....
ஆனாலும் எதிர்பார்ப்பை சினிமா எடுக்கிறேன் என கதையின் டிராக்கை மாற்றுமிடத்தில் தகர்த்துவிட்டார்கள்...
படம் நல்லாமே கல்லாக் கட்டிருச்சுன்னு செய்திகள் பார்த்தேன்.
வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாம் துளசி அண்ணா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
விமர்சனம் நன்று பார்கலாம்....
பெரும்பாலும் படங்களை பார்ப்பதில்லை!
அரிசோனா தமிழ் பள்ளி குழந்தைகள் ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஆடினார்கள். இரண்டு மூன்று குழு இதே பாட்டுக்கு தான் ஆடினார்கள்.
//இசைக்க தெரியாத அம்மணி//
என்னா குசும்பு இந்தாளுக்கு. யக்கோவ் டுமீலிசை வந்து என்னா ன்னு கேட்டுட்டு போ.
விமர்சனம் நன்றாக உள்ளது பாராட்டுகள்
கருத்துரையிடுக