நான் எழுதிய சிறுகதைகள் சிலவற்றில் இருந்து சில பகுதிகள்...
'உயிரே ஒரு கடிதம்' - என்னும் கதையில்....
'உயிரே ஒரு கடிதம்' - என்னும் கதையில்....
காதலிக்கும் போது இருக்கும்
நேசம், புரிந்து
கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல்
திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய
கோலமாக மாறி... 'அப்பவே
சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே
கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன்
அம்மாவின் வாக்கு வேதவாக்காகி இது என் உயிரை எடுத்துச் சென்றுவிட்டாய்.
விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம் என்கிறார் உங்கப்பா... விவாகரத்து... அது
யாருக்கு வேணும்...? உயிர்
போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..?
நான் மாறிவிட்டேன் என்கிறாய்
நீ..? எப்போதும்
சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த
பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று
இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி பறந்தது... இன்று கொஞ்சம்
முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை
ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக...
ஓடிக் கொண்டிருக்கிறேன்... என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்காக தேனைச்
சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே...
இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... இமயம் அளவு கூடிக்கொண்டேதான்
போகிறது, என்னைப்
புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக
இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா
மணித்துளிகளை...
***
'உறவு சொல்லும் கதை' என்னும் சிறுகதையில் சில பகுதிகள்...
"அட
ஏம்மாமா நீங்க வேற... நீங்க ரெண்டு பேரும் என்ன உறவுன்னு கேட்டதுக்கு மாமன்
மச்சானா இருக்கும்ன்னு சொன்னாப்புல..." என்றதும் இருவரும் மீண்டும் விழுந்து
விழுந்து சிரித்தனர்.
"மாமன்
மச்சானா... இவரு என்னோட தம்பி... கூடப்பிறந்த தம்பி..." என தனுஷ்கோடியின்
தோளில் கைபோட்டு அணைத்துச் சொன்னார் தணிகாசலம்.
இப்படி ஒரு அண்ணன் தம்பியா என
ரவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனது ஆச்சர்யத்தைப் பார்த்த சேகர் மெல்ல
"ரவி... தணிகாசலம் இருக்காரே அவருக்குத்தான் எங்க அத்தையைக் கட்டியிருக்கு...
இவங்க நாலு பேரு அண்ணன் தம்பி... இன்னும் ரெண்டு பேரு வரலை... வந்திருந்தா இந்த
இடம் அமர்க்களம்தான்... அண்ணன் தம்பி மாதிரி இருக்கமாட்டாங்க... கேலி கிண்டல்ன்னு
மாமன் மச்சான் மாதிரித்தான்.... இவங்களை கேலி பண்ண மாமன் மச்சான் தேவையில்லை
இவங்களே போதும்... வித்தியாசமானவர்கள்... ரெண்டு பேருமே பேரன் பேத்தி
எடுத்துட்டாங்க... பேசி சிரிக்கிறதைப் பாத்தியா..?" என்றார்.
இவர்கள் பேசும் போது அவர்கள்
இருவரும் ஏதோ பேசி ஒருவர் தொடையில் ஒருவர் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ரவி பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்தான் தேவதை இருந்த இடத்தில் நகைக்கடை ஒன்று
அமர்ந்திருந்தது.
***
'தேவி இறந்துவிட்டாள்' என்னும் சிறுகதையில் சில பகுதிகள்...
பெட்டில் கிடந்த அவளைப்
பார்த்தபோது எனக்கு உயிரே நின்றுவிட்டது. வலது பக்கம் முழுவதும் வீங்கியிருந்தது.
என்னைப் பார்த்ததும் உடைந்து அழுதாள். 'என்ன
வியாதியின்னே தெரியலை புவி... உடம்பு ஒரு பக்கம் மட்டும் வீங்குது... டாக்டர்கள்
என்னென்னமோ சொல்றாங்க... பயமில்லைன்னு சொல்றாங்க... ஒரு வாரமாச்சு... இப்ப கொஞ்சம்
குறைஞ்சிருக்கு... சில நேரத்துல வலி பொறுக்க முடியாம கத்துற... ரெண்டு நாளாவே புவியைப்
பாக்கணும் வரச் சொல்லுங்கன்னு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சா... அதான் தம்பி உனக்கு
போன் பண்ணுச்சு... நாங்கூட வேணான்னுதான் சொன்னேன்... நீ இம்புட்டுத்தூரம்
பிள்ளைகளை விட்டுட்டு வரணுமில்லையா என்றார் தேவியின் அம்மா. 'அட என்னம்மா
நீங்க...? இதுக்கெல்லாம்
வராம இருக்குறதா..? அண்ணன்
போன் பண்ணினதும் உடனே வரணுமின்னு நினைச்சேன்... முடியலை... இன்னைக்கு பொறுப்பை
அவருக்கிட்ட விட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்' என்றேன்.
அதன் பின்னான நாட்கள் தேவிக்கு
தீராத வலியைக் கொடுத்த நாட்கள்... சில நாள் எப்பவும் போல பட்டாம்பூச்சியாய் வலம்
வருவாள். திடீரென மறுபடியும் வீங்கிக் கொள்ளும். மாதத்தில் பாதிநாள்
ஹாஸ்பிடலில்தான்... மாதங்கள் ஓட அவளின் உடம்பு ரொம்ப மோசமானது... மருந்து மாத்திரை
கொடுத்த பலனால் அவளின் முடிகள் கொட்ட ஆரம்பிக்க, அழகிய பட்டாம்பூச்சி நிறமிழக்க ஆரம்பித்தது. எவ்வளவோ செலவு
செய்தும்... என்ன வியாதி.. எதனால் உடம்பு வீங்குகிறது... எப்படி இதை சரி பண்ணுவது
என்று தெரியாமல் மருத்துவர்கள் விழித்தார்கள்.
இரண்டு வருடத்துக்குள்
படுத்த படுக்கை ஆனாள்.
***
'முடிவுகள் திருத்தப்படலாம்' என்னும் சிறுகதையில் இருந்து...
"இப்ப
சாட்டர்டே, சண்டே
யமுனா எங்கூடத்தான் என்னோட வீட்ல இருக்கா மாமா... அவள நான் லவ் பண்றேன்...
உங்களுக்கெல்லாம் தெரியாது... படிக்கிற காலத்துல இருந்து அவ மேல எனக்கு லவ்...
அத்த அப்பாக்கிட்ட எனக்கு கட்டணும்ன்னு கேட்டப்போ, அப்ப ஒத்துகலை... என்னால அவங்ககிட்ட சண்டை போட்டு யமுனா
கட்டிக்க முடியல... ஏன்னா எங்கம்மா மருந்தக் குடிச்சிருவேன்னு சொல்லி
மிரட்டினாங்க... எனக்குப் பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க...
அப்படியிருந்தும் ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னேன்... ஆனா அதுக்கு அம்மா
செத்துருவான்னு அவ ஒத்துக்கலை... நல்ல இடம்ன்னு பாத்துத்தான் அத்த கட்டுச்சு...
ஆனா அவங்க... அதான் உங்களுக்கே தெரியுமே... பஞ்சாயத்துக்கு எல்லாம் போனியதானே...
உங்களுக்குத் தெரியுமா... நாங்க லவ் பண்ணுனது ஊருக்கு மட்டுமில்ல எங்க
வீட்டுக்கும் தெரியாது... தெரியாத வரைக்கும் நல்லதுதான்னு விட்டுட்டு அவங்க அவங்க வாழ்க்கைப் பாதையில பயணிச்சோம்.
எங்கிட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் போன்ல பேசுவா... நானும் பேசுவேன்...
சத்தியமா அதுல காதல் இல்ல மாமா... அத்த பொண்ணு... மாமா மகன்கிற உறவு மட்டுமே
இருந்துச்சு... ஆனா விதி வலியது மாமா... " பேச்சை நிறுத்தி ஜிகர்தண்டாவை
கொஞ்சம் குடித்து குளிர்ச்சியாகிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.
***
என்னடா இவன் நாலு கதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டிருக்கான்னு பாக்குறீங்கதானே... கஷ்டப்பட்டு எழுதி, அதை இங்கு பகிர்ந்து மற்றவர் தனது கதை போல் வெளியிடும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... பகிர்ந்து கொண்டாலும் பரவாயில்லை... அவர்கள் பெயரில் பத்திரிக்கையில் வருவதும்... இன்னும் கொஞ்ச நாள் போனா பலரது கதைகளைத் திருடி எழுதாத எழுத்தாளர் ஒருவர் புத்தகம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... எனவே இனி மனசு தளத்தில் சிறுகதைகள் பதியப்படமாட்டாது... அது புத்தகம் ஆகுதோ ஆகலையோ... இங்கும் பதியும் எண்ணமில்லை... போட்டிகளுக்கான கதைகள், ஒருவேளை பத்திரிக்கையில் வந்தால்... மின்னிதழ்கள், இணைய இதழ்களில் வெளியானால் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படும்...
மற்றபடி மனசு தொடர்ந்து கட்டுரைகள். கவிதை, சினிமா விமர்சனம் என்று பயணிக்கும்.
-'பரிவை' சே.குமார்.
18 எண்ணங்கள்:
ரசித்தேன்.
உண்மைதான் நண்பரே நமது எழுத்துக்கு மற்றவன் உரிமையாளர் என்று போட்டு இருப்பதை காணும் பொழுது அவன் கையில் கிடைத்தால் கொல்லவேண்டும் போலவே தோன்றும்.
அற்புதமான சிந்தனைக்குறிய வரிகள் அருமை புத்தகமாக வெளியிட முயலுங்கள்
நாம் அறிந்தது ஒன்றிரண்டு. அறியாமல் எத்தனையோ. நமது எத்தனை படைப்புகள் புத்தகங்களாகி உலவுகின்றனவோ ? யாரறிவார் ?
உண்மைதான் நண்பரே
எழுத்துத் திருட்டு என்பது இன்று எளிதாகிவிட்டது
//நான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ..? எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்... என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்காக தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.//
மிக அழகிய வரிகள்!
இதே பிரச்னை தான்...
சிற்சில பதிவுகள் கருத்துகள் -
வேறொரு பெயரில் உலவுவதால் ஆர்வம் குறைகின்றது..
அருமையான கதைகள்..குமார். எல்லா கதைகளிலுமே அழகான வரிகள் மின்னுகின்றன...ரசித்தோம் அனைத்தையும்...
உங்கள் தளத்தைக் காப்பி செய்ய முடியாமல் செய்யலாமே குமார். டிடி, மதுரைத்தமிழன், கில்லர்ஜி, கூட்டாஞ்சோறு செந்தில்குமார், துரைசெல்வராஜு ஐயா போன்றவர்கள் செய்திருப்பது போல்...
கதைகளின் சில வரிகள் அருமை. முழுக்கதையும் இங்கே வெளியிட்டு அதை வேறொருவர் தனது பெயரில் வெளியிடும்போது மனதுக்கு சங்கடம் தான். பலரின் பதிவுகள் இப்படி வெளியாவது கண்டு வருத்தம்.
புத்தகங்களில் வெளியாக வாழ்த்துகள்.
வணக்கம் அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் சகோதரி....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் ஐயா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் அம்மா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் ஐயா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் துளசி சார்...
செய்யலாம்... டிடி அண்ணாவிடம் பேசணும்... இருந்தாலும் திரட்டிகளில் இணைக்கும் போது பாதுகாப்பில்லைதானே...
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
எப்போது புத்தகமாக்க போறீங்கப்பா
வணக்கம் அக்கா...
புத்தகமா????
கருத்துரையிடுக