மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 டிசம்பர், 2014

வாசமில்லா மலரிது

"சார் வேற யாரையாச்சும்...?" மெதுவாக இழுத்தான் பரத்.

"இங்க பாருங்க பரத், இது உங்களுக்கு கிடைக்கிற முக்கியமான அசைன்மெண்ட்... நீங்க இங்க வந்துட்டு சொல்லிக்கிற மாதிரி எந்த ஒரு அசைன்மெண்டும் பண்ணலை... இது உங்களுக்கு நல்ல சான்ஸ்... சொல்றதைச் செய்யுங்க..." குழல் பத்திரிக்கையின் ஆசிரியர் சந்தானம் ஆர்டர் போடுவது போலச் சொன்னார்.

"இல்ல சார்.... வேற அசைன்மெண்டுன்னா பரவாயில்லை... இது..."

"வேறயின்னா... நடிகையோட பேட்டியா... அதுனாத்தான் அம்புட்டுப் பயலும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு நான் போறேன்னு நிப்பீங்களே...."

"சார் நான் நடிகையோட பேட்டி எடுக்கப் போறேன்னு சொல்லலையே... ஒரு அரசியல்வாதியோ... இல்லை ஒரு ரவுடியோன்னாக் கூட பரவாயில்லை.. இது..."

"என்னய்யா... இது.... இதுன்னு சும்மா புலம்பிக்கிட்டு.. உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன்... அதுக்குள்ள கவர் ஸ்டோரி ரெடி பண்ணிக்கிட்டு வா..."

"சார்... கண்டிப்பா இந்த கவர் ஸ்டோரி வேணுமா?"

"சொல்லச் சொல்ல இன்னும் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறே.... எனக்கு அடுத்த இதழுக்கு உன்னோட கவர் ஸ்டோரி வந்தாகணும்... இந்த அசைன்மெண்ட் முடியிற வரைக்கும் உனக்கு வேற எந்த அசைன்மெண்டும் இல்லை... புரிஞ்சிதா... இங்க நின்னா எதையும் புடுங்க முடியாது... போயி ஆக வேண்டியதைப் பாரு... சரியா?" கடுப்பாக சொன்ன எடிட்டருக்கு கோபம் வந்தால் வார்த்தைகள் எது வேணுமானாலும் வந்து விழுகும்.

இனி இங்கு நின்னால் இன்னும் மோசமான வார்த்தைகளைக் கேட்க நேரிடும் என்பதால் "ஓகே... ஓகே சார்.... எப்படியும் கவர் ஸ்டோரியோட வாறேன்..." என்றபடி ஆசிரியரின் அறையில் இருந்து வெளியேறினான் பரத்.

"என்ன மாப்ளே சொல்றே... ?" சிக்கனை வாயில் வைத்தபடிக் கேட்டான் தாமு.

"ஆமாடா அந்த ஆளு இந்தக் கவர் ஸ்டோரிதான் வேணுமாம்..."

"இதுல என்ன இருக்கு... நீ ரெடி பண்ணுடா..."

"என்னடா நீயி... உங்கிட்ட சொன்னா நீ இப்படிச் சொல்றே... எப்படிடா,,,"

"என்னடா... பத்திரிக்கை துறைக்கு வந்துட்டு இது பண்ண மாட்டேன் அது பண்ண மாட்டேன்னா எப்படி... பேட்டி எடுக்கத்தானே போகப்போறே...என்னமோ அங்க..."

"நிறுத்துடா... "

"என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு... அன்னைக்கு நாம அரவாணிகளை மதிச்சோமா இல்லையில்ல... அலி, ஒம்போதுன்னு எவ்வளவு கேவலமாப் பேசினோம்... ஆனா இன்னைக்கு அவங்க திருநங்கைகளா எல்லா இடத்துலயும் வேலைக்கு வந்துட்டாங்க... சில நாளைக்கு முன்னால ரெயில்ல ஒரு பொண்ணுக்கு பிரசவ வலி வந்தப்போ எல்லாரும் வேடிக்கை பார்க்க ரெண்டு திருநங்கைகள்தான் பிரசவம் பார்த்து அடுத்த ஸ்டாப்பிங்க்ல ஆஸ்பிடல்ல சேர்த்து பிச்சை எடுத்து கையில் வச்சிருந்த காசையும் கொடுத்துட்டுப் போயிருக்காங்க... இன்னைக்கு திருநங்கைகள் எல்லாத் துறையிலும் சாதிக்கவும் நாம இப்ப அவங்களோட சாதனைக்காக தேடிப் போயி பேட்டி எடுக்கப் போகலையா..."

"அதுக்காக..."

"சும்மா நொதுக்காக... நொதுக்காகன்னு பொலம்பாதே மச்சி.... சில பேரைப் பிடிச்சி அவங்ககிட்ட பேசி விவரம் வாங்கி ஒரு கவர் ஸ்டோரி எழுதுறதுக்கு என்ன உனக்கு..."

"அதுக்கில்லைடா... எந்த ஒரு அனுபவமும் இல்லாம எப்படிடா..."

"இதுவரைக்கும் கவர் ஸ்டோரி பண்ணுன அனுபவம் உனக்கு இல்லையா...?"

"அது இருக்கு... ஆனா இப்படி ஒரு கவர் ஸ்டோரி... எப்படிடா... இது என்ன சினிமாவா... அவங்க கூட இருந்துக்கிட்டு அவங்களை பேட்டி எடுக்க... வாழ்க்கைடா... நடைமுறையில இது சாத்தியமாகுமா...?"

"நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... நாம அனுபவம் வந்த பிறகுதான் எல்லாமே செய்யுறோமா... இல்லையே அந்தந்த வயசுல செய்யிறதை செஞ்சிக்கிட்டுத்தானே இருக்கோம்... படிக்கும் போது பாலத்து மறைவுல இருந்து சிகரெட் குடிச்சோமே... முன் அனுபவமா இருந்துச்சா... காலேஸ் படிக்கும் போது ஆஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம பீர் வாங்கியாந்து முதன் முதல்ல குடிச்சோமே... முன் அனுபவமா இருந்துச்சா... இல்ல உமாவை உயிருக்குயிரா காதலிச்சியே... அதுக்கு முன் அனுபவம் இருந்துச்சா..... இன்னொன்னு நல்லாச் சொல்லுவேன் ஆனா... வேணாம்.... எதையுமே அனுபவமில்லாமச் செஞ்சாத்தான் அதுல அனுபவம் கிடைக்கும்... "

"ம்... நீ சொல்றது சரிதான்டா... ஆனா அவங்ககிட்ட போயி எப்படி..."

"உன்னைய கவர் ஸ்டோரிதானே எழுதச் சொல்லியிருக்கார்... அனுபவ ஸ்டோரி இல்லையே... இந்த ஒரு கவர் ஸ்டோரி நீ எப்படிப் பண்ணிக் கொடுக்குறியோ அதைப் பொறுத்து நீ அவர்கிட்ட நல்ல பேர் வாங்கலாம்... அப்புறம் நல்ல நல்ல அசைன்மெண்ட் எல்லாம் உனக்குக் கொடுப்பார்.... பாத்துக்க..."

"நா... எங்க போயி... யாரைப் பார்த்து... முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான்..."

"உனக்கு என்ன இப்போ... எல்லாமே முடியும்ன்னு நெனச்சா முடியும்... எனக்குத் தெரிஞ்ச நாலஞ்சு பேரோட நம்பர் தாறேன்... என்ன ஒரு மாதிரி பாக்குறே.... நானும் ஒரு கட்டுரைக்காக பாத்தவங்கதான் இவங்க... அவங்கிட்ட பேசு... அப்ப அவங்களோட வாழ்க்கையும் வலியும் உனக்குப் புரிய வரும்... அப்புறம் கவர் ஸ்டோரி கலக்கலா தயாராயிடும்..." என்றவன் அவனிடம் சில நம்பர்களைக் கொடுத்தான்.

பாரதி பூங்கா வாசலில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். காதோரத்தில் ஒற்றை ரோஜா அழகாக வைத்திருந்தாள். 

அவளைப் பார்த்ததும் "நீங்க சாவித்திரி...." மெதுவாக இழுத்தான்.

"ஆமா..." என்றவள் "தாமுவோட பிரண்ட் பரத்தானே நீங்க..? என்று சிநேகமாய்க் கேட்டுச் சிரித்தாள்.

"வாங்க... பூங்காவுல போயி உக்காந்து பேசலாம்... இங்க வேண்டாம்..." அவசரமாகச் சொன்னான்.

"ஏன் யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்களா? ஏன் சார் எங்களைப் பற்றி கவர் ஸ்டோரி பண்ணனும்... எங்க கதையைக் கேட்டு அதை உங்க பத்திரிக்கையில பக்கம் பக்கமாய் எழுதி பேர் வாங்கனும்... ஆனா எங்க கூட நின்னு பேசவோ... எங்க வீட்டுக்கு வரவோ உங்களுக்குப் பயம்... இந்தச் சமூகத்துல நாங்க இன்னைக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றோம்ன்னா அதுக்கு யார் சார் காரணம்... உங்கள மாதிரி ஆம்பளைங்கதானே..." சொல்லியபடி அவன் முகம் பார்த்தாள்.

அவள் இவ்வளவு வேகமாய் பேசுவதைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற பயத்துடன் எதுவும் பேசாமல் நின்றான். அவளே தொடர்ந்தாள். 

"எத்தனை இரவுகள் மரக்கட்டை மாதிரி அழுதுக்கிட்டே கிடந்திருப்போம் தெரியுமா... ஒரே இரவுல எத்தனை பேர் எங்களோட வேதனை தெரியாம மாறி மாறி சுவைத்திருப்பாங்க தெரியுமா... எதுத்துக் கேட்டா காசு கொடுக்கிறோமுல்ல அப்புறம் என்னடி பத்தினி மாதிரி பேசுறேன்னு கேட்டு அடிப்பாங்க... எல்லாம் எதுக்காக வழி மாறிப்போன வாழ்க்கைக்காகத்தானே சார்... இதை விரும்பியா ஏத்துக்கிட்டோம்.... இவன் நல்லவன்னு நம்பி குடும்பத்தை விட்டு ஓடியாந்து... அவனால ஏமாத்தப்பட்டு... இன்னைக்கு இந்த நெலமையில இருக்கிறது... நான் மட்டும் இல்ல என்னைய மாதிரி நிறையப் பேர்... " பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

அவனுக்கு தேவையில்லாம வந்துட்டோமோ என்ற எண்ணம் ஓட முகமெல்லாம் வேர்த்தது. அவனைப் பார்த்து மெலிதாக சிரித்தவள் "எங்ககிட்ட பேசப் பயம்... எங்க கூட ரோட்டுல நிக்கப் பயம்... எங்க வீட்டுப் பக்கம் வரப் பயம்... ஆனா மீசை முளைக்க ஆரம்பிச்சவன் கூட எங்ககிட்ட படுக்கப் பயப்படலையே சார்... ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு இடத்துக்குப் போகச் சொன்னாங்க... போனா... அங்க மீசை கூட முளைக்காத நாலு பசங்க... இவனுகளுக்காக இங்க வந்தேன்னு போன்ல கூப்பிட்டா... கேட்டதைவிட அதிகமா காசு கொடுத்திருக்கானுங்க பேசாம இருந்துட்டு வான்னு சொன்னாங்க... என்னோட தொழில்... தலைவிதையை நினைச்சிக்கிட்டு மனச கல்லாக்கிக்கிட்டு....." அதற்கு மேல் பேச முடியாமல் கண் கலங்கினாள்.

பரத் பேசாமல் நிற்க, கண்ணீரைத் துடைத்தபடி "நாங்க மெஷின் இல்லையே சார்... எங்களுக்கும் மனசு இருக்கு சார்... அதை ஏன் சார் யாருமே புரிஞ்சிக்கலை... நீங்க பத்திரிக்கைக்காரர் முற்போக்கா சிந்திப்பீங்கன்னு பார்த்தேன்... ஆனா நானும் சாதாரண ஆம்பளைன்னு நிரூபிச்சிட்டீங்க... உடம்பை விக்கிறதால சமூகத்துல எங்களுக்கு கிடைக்கிற மரியாதை சார் இது... சாரி சார்... இது வலி... எங்கயாவது இறக்கி வைக்கணும்ன்னு நினைச்சேன்... நீங்க எங்க வீட்டுக்கு வரமாட்டேன் வீதியிலயும் நின்னு பேசமாட்டேன்னு சொன்னதும் கொட்டிட்டேன்... சரி விடுங்க... நீங்க என்ன பண்ணுவீங்க... சமூகத்தின் பார்வைக்கு பயப்படுறீங்க... தப்பா நினைச்சிக்காதீங்க... என்ன எதுன்னு சொல்லுங்க... என்னால என்ன முடியுமோ அதைச் சொல்றேன்... ஆறு மணிக்கு கிளம்பிடுவேன்... ஹோட்டல்ல பார்ட்டி காத்திருப்பார். சரி வாங்க பூங்காவுக்குள்ள போகலாம்..." மெலிதாக புன்னகைத்தாள்

"வேண்டாங்க... உங்க வார்த்தை ஒவ்வொன்னும் சாட்டையடிங்க... உங்ககிட்ட நிறையப் பேசணும்... இதுதான்னு இல்லாம இது தவிர்த்து நிறைய பேசணும்... அவசரமான பேச்சு சரியா இருக்காது... நீங்க இன்னைக்கு கிளம்புங்க... நாளைக்குப் பேசுவோம்... ஆனா இங்க இல்லை... டீ ஷாப்ல டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்..." என்று அவளை அனுப்பிவிட்டு வண்டி நோக்கி நடந்தவன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதைப் பற்றி பக்கம் பக்கமாய் கதை எழுதி பரிசு பெற்றதும் எல்லாரிடமும் பாராட்டுப் பெற்றதும் நினைவில் வந்து மறைய வெட்கத்தோடும் வேதனையோடும் வீதியை வெறித்துப் பார்த்தான். பக்கத்து டீக்கடையில் இருந்து 'வாசமில்லா மலர் இது... வசந்தத்தை தேடுது..' என்ற பாடல் காற்றில் கரைந்து அவன் காதுகளில் தஞ்சம் புகுந்தது. 
-'பரிவை' சே.குமார்.

31 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடலுக்கேற்ப கதை... மனம் கவர்ந்ததை விட மனம் கனத்தது...

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கோமதி அரசு சொன்னது…

மனம் கனத்து போனது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனம் கனத்துத்தான் போனத நண்பரே
மனிதர்களை மனிதர்களே மதிக்காவிட்டால்....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

படிக்கும் பாது மனதில் சோகம் இளையோடியது.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

பாடலுக்கு ஏற்ற கதை! பண்பான உரையாடல்! பாராட்டு குமார்!

துரை செல்வராஜூ சொன்னது…

சாட்டையடி!..

தொடர்க.. குமார்.. வாழ்த்துக்கள்!..

ஸ்ரீராம். சொன்னது…

சாட்டையடி வார்த்தைகள் தேவையாய் இருக்கிறது இவர்களின் மனம் மாற....

ம்ம்.....

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே,,,
த.ம. 7

Unknown சொன்னது…

#இன்னொன்னு நல்லாச் சொல்லுவேன் ஆனா... வேணாம்....# :)
த ம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சில மாற்றங்கள் மெதுவாகத் தான் நிகழும் . இதற்கும் அப்படித்தான் போல் இருக்கிறது. மனதை தொட்ட சிறுகதை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உரையாடல்கள் மனதில் நிற்கின்றன. வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் சிறப்பான கதை! கதைக்கான களமும் கருவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யாழ்பாவாணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வாக்கிற்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க புலவர் ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுரேஷ் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

உரைக்கும் வரிகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனம் கனத்துவிட்டது.....கதையில் லயித்துப் போனதால்....