'இயக்குநர் இமயம் நான்' என்ற செருக்குடன் பாரதிராஜா கையிலெடுத்த கள்ளிக்காட்டுக் காதல்கதையான 'அன்னக்கொடி' அவரது செருக்கை உடைத்து நொறுக்கிவிட்டது என்ற உண்மை அன்னக்கொடி(யும் கொடிவீரனும்) பார்த்த அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
ஸ்டுடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமத்து வயல்வெளிகளிலும் நீர்நிலைகளிலும் பயணிக்க வைத்தவர் பாரதிராஜா. 16வயதினிலே மூலம் கதைக்களத்துக்கே கேமராவை தூக்கிச் சென்ற முன்னோடி...கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள் என மக்களை வியப்பில் ஆழ்த்திய கதைகளை கதை மாந்தர்களோடு அழகியலாய் கொடுத்தவர் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து அருமையான பாடல்களையும் அழகான படங்களையும் கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.அதற்காக இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுடன் காணாமல் போய்விட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் பிறகும் கருத்தம்மா, கிழக்கு சீமையிலே என நல்ல படங்களையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.
ஒரு மகா கலைஞன் எங்கே சறுக்கினார்... எல்லா அப்பனும் தன்னோட பிள்ளை தன்னோட காலத்துக்கு அப்புறம் நல்ல நிலையில் இருக்கணும் என்று ஆசைப்படுவது என்னவோ உண்மைதான். டாக்டர் தனது வாரிசை டாக்டராக்க நினைப்பதும் வக்கீல் தனது வாரிசை வக்கீலாக்க நினைப்பதும் அரசியல்வாதி தனது வாரிசை அரசியல்வாதியாக்க நினைப்பதும் சினிமாவில் இருப்பவர் தனது வாரிசை அதற்குள் நுழைக்க நினைப்பதும் காலம் காலமாக நடப்பதுதான். பாரதிராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
மகனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து தாஜ்மஹால் கட்டினார். அருமையான பாடல்கள் இருந்தும் மகனை கிராமத்தானாக பார்க்கவோ காட்டவோ மனமில்லாமல் ஜீன்ஸ் மாட்டிவிட்டு ஜீன்ஸ் கிராமம் என்றார். படம் போன இடம் தெரியவில்லை. அதன் பிறகான முயற்சியில் மகனும் ஜெயிக்கவில்லை. தானும் வெற்றியை கொடுக்க முடியாமல் திணறினார்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் எனது கனவுப்படம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் கனவுப்படம் அவரது காலை வாரிமட்டும் விடவில்லை... ஒடித்தே விட்டது. படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து நாட்களாகிவிட்டன. இது படம் குறித்த விமர்சனத்திற்கான பதிவல்ல. சிறந்த கலைஞன் ஒருவன் எப்படி இப்படி ஒரு தவறை செய்தான் என்ற கேள்விகளின் தொகுப்பே இது.
பல வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதையாக சொல்ல நினைப்பதால் மின்சாரம் இல்லாத கிராமம், ரவிக்கை அணியாத பெண்கள், டவுசர் போட்ட போலீஸ் என காட்டியிருக்கிறீர்கள். நாயகனின் பாட்டி கூட ரவிக்கை போட்டிருக்கும் போது நாயகி உள்ளிட்ட சில பருவம் அடைந்த பெண்கள் ரவிக்கை அணியாமல் வருகிறார்களே... அன்றைய கிராமத்தில் இப்படி இருந்ததா இமயம் அவர்களே..?
நாயகி தனது புருவம் திருத்தி உதட்டுச் சாயம் பூசி ஆடு மேய்க்கிறாள்... எந்தக் கிராமத்துப் பெண் புருவம் திருத்தி உதட்டுச் சாயம் இட்டுத் திரிகிறாள்... இதுவே படத்தின் முக்கியமான சறுக்கல் இல்லையா... கவனிக்கவில்லையா.. இல்லை இதெல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டாய்ங்கன்னு ஒரு நெனப்பா...?
நாயகி தனது புருவம் திருத்தி உதட்டுச் சாயம் பூசி ஆடு மேய்க்கிறாள்... எந்தக் கிராமத்துப் பெண் புருவம் திருத்தி உதட்டுச் சாயம் இட்டுத் திரிகிறாள்... இதுவே படத்தின் முக்கியமான சறுக்கல் இல்லையா... கவனிக்கவில்லையா.. இல்லை இதெல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டாய்ங்கன்னு ஒரு நெனப்பா...?
ஆண்கள் எல்லாம் பட்டாபட்டி டவுசர் போட வேண்டும் என்பது அந்த ஊரின் நாட்டாமை வகுத்த தீர்ப்பா என்ன..? நாயகன், வில்லன் என படத்தில் வரும் ஆண்களுக்கு எல்லாம் டவுசரை மாட்டியிருப்பதற்கு தங்களின் பட்ஜெட்டும் காரணமாக இருக்குமோ..?
கிராமங்கள் என்றாலே பல சட்ட திட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் பல வருடங்களுக்கு முந்தைய கிராமம்... பெண்கள் ஆண்களுடன் பேசுவது என்பதே பெரிய விஷயம்... சில நாட்கள் பழகியவுடன் ஒரு பெண் எப்படி ஒரு ஆணின் தோளில் அமர்ந்து பயணிக்கச் சம்மதிக்கிறாள்... குட்டைப் பாவடையோடு தோளில் பயணிக்கும் போது தொடையில் முத்தம் வேறு... இது எப்படி... கட்டுப்பெட்டிக் கிராமத்தில் சாத்தியமா..?
பட்டாபட்டி டவுசர் போட்டு அடிக்கடி வேட்டியை அவிழ்த்து தோளில் போட்டுக் கொள்ளும் வில்லன் மைனர்... காட்சிக்குப் பொருந்தவேயில்லையே... இதை வடிவேலு செஞ்சா அதில் காமெடி இருக்கும்... சிரிக்கலாம்... ரசிக்கலாம்... அதையே வில்லன் செஞ்சா தலைவலி என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லையா?
'சஞ்சனக்காஞ் சனக்குதான் சடையன் போட்ட கணக்குத்தா'ன்னு அடிக்கடி வில்லன் பாடிக்கொண்டே பயணிக்கிறாரே... அப்படி என்ன கணக்குப் போடுறார்... கொலைகள்தானே செய்கிறார்... கடைசி வரை யோசித்துப் பார்த்தால் நாயகியை திருமணம் பண்ணியதைத் தவிர அவரு வேற என்ன கணக்குப் போடுறாரு என்பது விளங்கவே இல்லையே... எதற்கு அந்தப் பஞ்ச்...?
திருமணத்திற்குப் பின்னர் கணவன் முரடனாக இருக்க பயந்து கிடக்கும் நாயகி வீட்டை விட்டு வெளியே வந்து ஆடு மேய்க்கும் இடத்தில் தனது முன்னாள் காதலனைச் சந்தித்து அவன் பாதுகாத்து வைத்திருந்த கடித்தெடுத்த நகத்தில் மூச்சுக்காற்றை விடுகிறாளே... நாயகி பத்தினியா... இல்லை பரத்தையா...?
மாமனார் காமவெறி பிடித்தவன் என்பதைக் காட்ட கடனை அடைக்க முடியாத வீட்டில் இருந்து பெண்களைக் கொண்டு வந்து வைத்திருப்பதாக காட்டினீர்கள் சரி, மருமகளின் இடுப்பைத் தொடுவதும்... விரலைச் சப்புவதும்... ஷகீலா படத்தை மிஞ்சிவிட்டனவே நல்ல இயக்குநர் இது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா..?
மனைவியை வில்லன் கொன்று விட்டான்... பின்னணியில் பாடல் ஒழிக்க நாயகன் அழுகிறான்... அடுத்த காட்சியில் அவளை அப்படியே விட்டுவிட்டு வந்து வில்லனிடம் மாட்டிய நாயகியைக் காப்பாற்றுகிறான்... கட்டிய மனைவி பிணமாக கிடக்க நாயகியை கைபிடித்து கூட்டிச் செல்கிறான்... இந்த அநியாயம் எங்கு நடக்கும்... உங்கள் முடிவுப்படி பார்த்தால் நாயகன் மனைவி சாகட்டும் காதலியை வச்சிக்கலாம்... மன்னிக்கவும் கட்டிகலாம் என்று இருந்தானோ என்று எண்ணத் தோன்றுகிறதே..?
ஆமா... வயல்வெளிகளையும் நீர் நிலைகளையும் சுற்றித் திரிந்த பாரதிராஜா இந்தப் படத்தில் பெண்களின் முதுகின் மீதே பயணித்திருக்கிறாரே ஏன்? நாயகியை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். அரை... இல்லை முக்கால் நிர்வாணமாக ஓடவைத்தும் சந்தோஷப்பட்டிருக்கிறீர்களே... இதுதான் அறுபதிலும் ஆசை வரும் என்பதோ..?
நாயகன் ஒருவன் இருக்கிறான் என்பது பாடலுக்கு மட்டுமே... படம் முழுவதும் 'சஞ்சனக்காஞ் சனக்குத்தான்...' என்று கரைபடிந்த பற்களுடன் பாடிக்கொண்டு மாட்டு வண்டியில் திரியும் மனோஜ்தான் ஆக்கிரமித்திருக்கிறார். ஒரு தகப்பனாக தாங்கள் மகனை தூக்கிவிட நினைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் அவர் எந்திரித்து வரமால் உங்களைக் கவிழ்த்து விட்டாரே... எதற்காக அவருக்கு இந்த சகிக்காத வில்லன் முகம்... இவன் அதுக்கு சரிப்பட்டு வருவானா என்று நீங்கள் யோசிக்கவில்லையா..?
இப்படி நிறைய கேள்விக்ளை அன்னக்கொடி மூலம் இமயத்தைக் கேட்டுக்கொண்டே போகலாம்... பதிவின் நீளம் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்...
மொத்தத்தில் பாரதிராஜா என்ற அற்புதப் படைப்பாளியின் படத்தில் இருக்கும் அழகியலோ, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோ அன்னக்கொடியில் இல்லைவே இல்லை. மேலும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் பி கிரேடு படங்களுக்கு நிகராக காட்சிகளை அதிகம் படமாக்கியிருப்பதைப் பார்க்கும் போது தாங்கள் எதார்த்தம் என்ற இமயத்தில் இருந்து சறுக்கி கவர்ச்சி என்னும் சாக்கடைக்குள் விழுந்து விட்டீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
மேலும் 'வெடக்கோழி குழம்புதான்... வௌஞ்ச கம்பங்கூழுதான்... சஞ்சனக்காஞ் சனக்குதான்... இது சடையன் போட்ட கணக்குதான்...' என்று உங்களின் மைனர் காட்சிக்கு காட்சி பாடுவது படம் முடியும் போது எங்களின் காதுக்குள் 'சஞ்சனக்காஞ் சனக்குத்தான்... எங்கப்பனுக்கு சங்குதான்...' என்றே திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.
மணிரத்தினத்தின் கடல் உள்வாங்கியதும்... உங்களின் அன்னக்கொடி படரும் முன்னே காய்ந்து போனதும் கர்வத்தை உடைத்த நிகழ்வுகள் என்றாலும் மீண்டும் ஒரு அழகிய கிராமத்துத் தாலாட்டோடு எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவாக சறுக்கிய இமயம் மீண்டும் உயிர்தெழ வேண்டும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
என்னங்க இப்புடி சொல்லிப்புட்டீங்க?பிரேமுக்குப்,பிரேம் அந்த மூஞ்சி (மனோஜ்) தானே பாத்தோம்?கதாநாயகன் னு ஒருத்தர் இருக்காரெங்கிறதையே மறக்க வைக்கல?போங்க நீங்க!!!
விமர்சனத்துக்கான பதிவல்ல என்கிறீர்கள். பரவாயில்லை. மிகச் சிறந்த ஆய்வு என்கிறேன் நான். சரிதானே?
பாராட்டுகள்.
//மீண்டும் ஒரு அழகிய கிராமத்துத் தாலாட்டோடு எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவாக சறுக்கிய இமயம் மீண்டும் உயிர்தெழ வேண்டும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...//
இமயம் சிறிது சரிந்த மாதிரி தான் உள்ளது... நீங்கள் சொல்வது போல் சிகரமாக காத்திருப்போம்... நல்லதொரு அலசலுக்கு வாழ்த்துக்கள்...
வாங்க யோகராஜா...
அதாங்க பிரேமுக்கு பிரேம் வில்லனான மகனை ஹீரோவா காட்டிருக்கிறார் இமயம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க காமக்கிழத்தன்..
ஆய்வு என்று நீங்கள் சொல்கிறீர்கள்... அந்தளவுக்கு ஒர்த் இல்லைன்னு நான் நினைக்கிறேன்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
ஆமாக்கா... நல்ல படம் கொடுப்பார்ன்னு நம்பிக்கையோடு காத்திருப்போம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்...
சரிந்த இமயம் சிகரமாக சீக்கிரம் எழட்டும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக