இந்த மனசு இருக்கே அது எதையாவது பிடிச்சா உடும்புப் பிடிதான் போங்க. காலையில எழும்போதே 'என்னவளே... அடி என்னவளே...' பாட்டு ஞாபகத்தில் வந்தால் அன்று முழுவதும் நம்மையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடலாக அதுதான் இருக்கும்.
அதுமாதிரிதாங்க இன்னைக்கு காலையில எழும்போதே பக்கத்து வீட்டு பரஞ்சோதி மாமா ஞாபகம் மனசுக்குள் மணியடித்துக் கொண்டிருந்தது.
எனக்கே ஆச்சர்யம். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை, பேசிக்கொள்வதில்லை. இருந்தும் அவர் ஞாபகம் மீண்டும் மீண்டும் மனசுக்குள்.
எங்காவது போகும்போது ரோட்டோரம் அழகான பொண்ணு போனாப் போதும், நம்ம அறியாமலே இந்த மனசு உடனே படம் பிடித்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்து உறங்கினாலும் அந்த முகத்தையே ஞாபகப்படுத்தி நம்மை ஒரு வழி பண்ணும். என்னதான் முயன்றாலும் மனதின் முன் நாம் தோற்றுவிடுவோம் என்பதே நிதர்சன உண்மை.
மனசு சம்பந்தமான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அம்மாவின் குரல். எழுந்து வெளியில் வந்தபோது அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மனசு எதிர் வீட்டு மாமாவை நினைவூட்ட எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கம் பார்த்தேன். சத்தியமா அவரைப் பார்க்கத்தாங்க நினைச்சேன். ஆனா அவரு மக நின்னா. பிளஸ் டூ படிக்கிறா. பல வருட சண்டையால அவ கிட்ட இதுவரை பேசியது கூட இல்லைங்க. என்னவோ நான் அவளை பார்க்கிறதா நினைச்சு உள்ள இருந்து வந்த பரஞ்சோதி மாமா 'அங்க என்னம்மா பண்றே..? கண்ட காலிப்பயலுக வேலியில ஓணானாட்டம் திறியிறானுங்க... உள்ள வா.' என்று சத்தம் போட்டார். எங்க வீட்டுப் பக்கம் நிக்கும் போதே காலிப் பயலாம். என்ன செய்ய, திட்டு வாங்கத்தான் மனசு அவர ஞாபகப்படுத்தியதோ என்னவோ. நல்லவேளை அப்பா காதுல விழலை என்று நினைத்த என் மனதுக்குள் பரஞ்சோதி மாமா மறைந்து அவர் மகள் உட்கார்ந்து கொண்டாள்.
காலேசுக்கு கிளம்பும்போது மறக்காமல் நான் எழுதிய முதல் கதையை எடுத்துக்கொண்டேன். என்னடா திடீர்னு கதை அது இதுன்னு போறானேன்னு நினைக்கிறிங்களா..?. இதுக்கும் மனசுதாங்க காரணம்.
போன வியாழக்கிழமை சவரிமுத்து ஐயா தமிழ் வகுப்பு எடுத்தப்ப யார் யாரு கதை, கவிதை எழுதுவிங்க என்று கேட்டார். பதிப்பேர் கையை தூக்க நான் உட்பட சிலர் கை தூக்கவில்லை. நமக்கு தெரியலைன்னா என்னங்க பண்ணமுடியும்.
அவரு எல்லாரையும் விட்டுட்டு என்னய பார்த்து 'என்ன சார், நமக்கு எதுவுமே வராது படிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். எதுக்குத்தான் வர்றோமோ. பாவம் பெத்தவங்க.' என்றார் நக்கலாக. வகுப்பே கொல் என்று சிரித்தது. குறிப்பா மல்லிகா சிரிப்பு மட்டும் தனியா கேட்டது. ரெண்டு நாளா இந்த மனசு வேற அவ சிரிச்சதையே ஞாபகப்படுத்தி கஷ்டப் படுத்திருச்சுங்க.
சை... எல்லாரு முன்னாலயும் அவமானப்படுத்திட்டாரே. அதுவும் மல்லிகா முன்னால வச்சு கேவலப்படுத்திட்டாரே... அவரே எல்லாரு முன்னாலயும் புகழனும் அதுக்கு ஒரே வழி கதை எழுதுறதுதான் என முடிவு செய்து ரெண்டு நாளா யோசிச்சு நேத்து காலையில கம்மாக்கரையில உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன். அதை இன்னைக்கு அவர்கிட்ட கொடுக்கணும்.
மாமாவையும் மாமா மகளையும் மறந்த மனசு சவரிமுத்து ஐயாவையும் மல்லிகாவையும் பற்றிக் கொண்டது.
நேராக தமிழ்த்துறைக்குச் சென்று ஐயாவிடம் கதையை நீட்டினேன். என்னப்பா இது..? என்று புருவம் உயர்த்தினார். 'கதை' என்றேன். ஓற்றைச் சொல்லில். என்னை ஏற இறங்க பார்த்தார். 'சரி படிச்சுட்டு கருத்தை சொல்லுறேன். மதியம் வந்து பாரு' என்றார்.
'உங்க கருத்தை நான் தனியா கேட்க விரும்பலை. நீங்க உங்க வகுப்புல எல்லாரு முன்னாலயும் சொல்லுங்க. கேவலப்படுத்துறப்ப மட்டும் தனியா வரச்சொல்லியா பண்ணினிங்க.' என்றேன்.
'ம்... தனியா சொல்றது உனக்கு நல்லதுன்னு பார்த்தேன். அப்புறம் உன் இஷ்டம்.' என்றார். 'பரவாயில்லை' என்று கிளம்பினேன்.
நம்ம கதைய படிச்சுட்டு ஐயா நல்ல கருத்தை வகுப்பில சொல்லட்டும் அப்புறம் பாரு மல்லிகாவை என்ன பண்ணுறேன்னு. அவளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே என் கதையின் நாயகி பேர மல்லிகான்னு வச்சேன்.
மதியம் முதல் பிரிவேளை தமிழ் ஐயா வந்தார். வந்தவர் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனது கதை பற்றி எதுவும் கூறவில்லை. மனசு சொல்லுவாரா மாட்டாரான்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பாடத்துல எப்பவும் கவனம் போகாது. இன்னைக்கு சுத்தமா இல்ல. அடிக்கடி என்னய பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். அவரு மேல கடுப்புதான் வந்தது.
வகுப்பு முடிய பத்து நிமிடம் இருக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி செல்வம், ஒரு கதை எழுதி எங்கிட்ட கொடுத்து படிச்சு கருத்துச் சொல்லச் சொன்னார். அதுவும் வகுப்புலதான் சொல்லணுமுன்னு கேட்டுக்கிட்டார் என்றதும் எல்லோரும் என்னய திரும்பிப் பார்த்தனர்.
மல்லிகா மட்டும் நக்கலாக சிரித்தாள். அவளுக்கு எப்பவுமே எல்லாத்திலும் தானே முதல் என்ற கர்வம் உண்டு. அவ நல்லா கதை, கவிதை எழுதுவா. கல்லூரியில வர்ற எல்லா கையெழுத்துப் பிரதியிலயும் எழுதுவா. அழகா வேற இருப்பாளா தேடி வந்து கதை வாங்குவாங்க. அதனால நாம கதை எழுதினா அவளுக்கு நக்கலாத்தான் தெரியும்.
ஐயா தொடர்ந்தார், 'முதல்ல கதை எழுதணுங்கிற அவரோட ஆர்வத்தை பாராட்டுறேன் என்றதும் நான் மத்தவங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தேன். 'ஏம்மா மல்லிகா... சமீபத்துல மூன்றாம் பிறை படம் போட்டானா..?' என்று வினவ, நம்ம கதைக்கும் இவரு கேக்குற கேள்விக்கும் என்ன சம்பந்தம்? என்ற என் யோசனையை 'ஆமா ஐயா... வியாழக்கிழமை கே டிவியில போட்டான்' என்ற மல்லிகாவின் பதில் கலைத்தது.
'ம். அதானே பார்த்தேன். யாரும் படம் பாக்கலைன்னா இந்த கதைய வாங்கி படிங்க. பேர் மாற்றத்தோட கதை அப்படியே மாற்ற்மில்லாம இருக்கு. ஆத்திரப்பட்டா மட்டும் போதாது தம்பி, சுயமா சிந்திச்சா கண்டிப்பா நல்ல கதை உங்களாலயும் எழுத முடியும்.' என்றார். உடனே வகுப்பு முழுவதும் கோரஸாக கத்தியது.
எனக்கு என்னவோ போலாகி விட்டது. சே... இந்த மனசு இப்படி கேவலப்பட வச்சுடுச்சே. கதை எழுதணுமுனு நினைச்சு உட்கார்ந்தப்ப, பார்த்த படத்தோட கதைய அப்படியே ஞாபகப்படுத்தி... சை... நன்றி கெட்ட மனசு. யார் முகத்திலும் முழிக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டேன்.
'எல்லாருக்கும் ஓண்ணு சொல்லுறேன். யாருக்காகவும் எழுதாம நீங்களா முயலுங்கள். கண்டிப்பா உங்க திறமை வெளிப்படும். அப்புறம் நம்ம கல்லூரியில ஒரு சிறுகதைப் பட்டறை நடக்கப் போகுது. நிறைய கல்லூரியில இருந்து பசங்க கலந்துக்க இருக்காங்க. அதுக்காக நம்ம கல்லூரியில கதை தேர்வு நடக்க இருக்கு. அது தொடர்பான சுற்றறிக்கை முதல்வர்கிட்ட இருக்கு. விரைவில் உங்களுக்கு வாசிக்கப்படும். நல்ல கதையா குடுங்க. நம்ம மல்லிகா பொருளாதார பசங்க நடத்துற மனசு பத்திரிக்கையில இந்த மாதம் எழுதியிருக்க ஜன்னலோர ரோஜா அருமையான கதை. அம்மா மல்லிகா, அதையே கொடு. கண்டிப்பா பட்டறைக்குப் பிறகு நடக்கப்போற கதை தேர்வுல முதல் கதையா வரும்.' என்று எனக்குள் கனன்ற கோபத்திற்கு எண்ணெய் வார்த்துச் சென்றார்.
மனசு முழுவதும் மல்லிகா ஆக்கிரமித்தாள். வேறு எதை நினைத்தாலும் மனசு அவளிடமே வந்து நின்றது. சே... வெட்கம்கெட்ட மனசே அவளை நினைப்பதை நிறுத்து என மனசோடு சண்டையிட்டேன். ஆனால் ஜெயித்தது என்னவோ மனசுதான்.
அடுத்த பிரிவேளையை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தால் அம்மா, 'ஏண்டா, வரும்போது அக்கா வீட்டுக்குப் போயி விதை நெல்லு மூட்டை தூக்கியாரச் சொன்னேனே. தூக்கியாரலயா..?' என்று கோபமாக கேட்க, காலையில் கிளம்பும் போது அம்மா சொன்னது இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது. எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் மனசு இதை மட்டும் மறந்துவிட்டதே. என்ன மனசு இது என்று மனசை திட்டினேன்.
'அவருக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கப் போகுது. பக்கத்து வீட்டுப் பக்கமுல்ல ஞாபகம் போகுது.' படுத்திருந்தபடி அப்பா சொல்ல, ஏனோ தெரியவில்லை பரஞ்சோதி மாமாவும் அவரது மகள் யாழினியும் மனசுக்குள் மணியடித்தனர்.
-'பரிவை' சே.குமார்
சிறுகதைகள் வலைப்பூவில் எழுதியது மீள்பதிவாக...
8 எண்ணங்கள்:
அலை பாயும் மனசு அப்படித் தான்...
அடுத்து யாழினியிடம் 'கதை' தொடருமா...?
ஹஹா..தம்பி கதை எழுத மல்லிகாதான் காரணமா..? :)
நல்லா இருக்கு..:)
மனம் ஒரு குரங்கு ந்னு சொல்றீங்க,கதை நல்லாருக்கு...
அருமை அருமை நண்பரே
சிவாவின் கற்றதும் பெற்றதும்
மிக அருமை. குமார். அப்புறம் அந்த கதாநாயகன் கதை எழுதினானா? என்று தெரிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது.
தொடருமா ?? ஏனோ முடிவில்லாமல் நிற்பது போல் தோன்றுகிறது
அருமை:)!
அருமையான இருக்கு படிக்க..
கருத்துரையிடுக