அதீதம் இணைய இதழில் வெளியான எனது 'விசாலம் அக்கா' என்ற சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதீதத்தில் வெளியாகும் மூன்றாவது சிறுகதை இது.
கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------
நல்ல உறக்கத்தில் இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது கனவு. நெஞ்சு படக் படக்கென அடித்துக் கொள்ள எழுந்து அமர்ந்தேன். தண்ணீர் அருந்தினால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்பதால் அருகில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீர் அருந்தினேன். கொஞ்சம் படபடப்பு குறைந்தது. சின்ன வயதில் என்னைப் பாதித்த நபர்களை அவ்வப்போது நினைப்பதுண்டு. எங்க வீட்டில் வேலை பார்த்த கருப்பண்ணன், பால்கார வீராயி, மீன்காரி முனிம்மா, எனக்கு ரொம்ப பிடித்த விசாலம் அக்கா என எல்லோரும் கனவில் வந்து செல்வார்கள். அடுத்த நாள் கனவில் வந்தவரின் நினைவுகள் எனக்குள் எட்டி எட்டிப் பார்க்கும் அதன்பின் நான் அவர்களை மறந்துவிடுவேன் என்பதே உண்மை. ஆனால் இன்று வந்த கனவு ஏனோ என் மனதை கஷ்டப்படுத்தியது. கொஞ்ச நேரம் அப்படியே உட்காந்திருந்தேன். படபடப்பு குறைய என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்தேன்.
கண்களை மூடியபடி வந்த கனவை மீன்டும் மீட்டிப் பார்த்தேன். கனவில் வந்த விசாலம் அக்கா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பாப்பா, நான் ரொம்ப கஷ்டப்படுறேன்”னு அழுகுறா… மறுபடி மறுபடி அதையே மீட்டிப் பார்க்க எனக்கு ஒண்ணுமே புரியலை… விசாலம் அக்காவுக்கு என்னமும் ஆகியிருக்குமோ இப்ப எங்க இருக்கு என்ன பண்ணுது என்று யோசித்து விடை கிடைக்காமல் சரி கனவுதானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உறக்கதை அணைத்துக் கொள்ள கண்களை மூடினேன். உறக்கம் வருவதற்குப் பதில் விசாலம் அக்காவின் நினைவுகள் மெல்ல எட்டிப் பார்த்தன.
எங்க பிரேமா அத்தை கல்யாணத்துக்கு முறுக்குச் சுடத்தான் விசாலம் அக்கா எங்க வீட்டுக்கு முதன்முதலில் வந்தாள். எப்பவும் பொன்னம்பல மாமாதான் விசேசங்களுக்கு முறுக்கு சுடுவார். எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் சின்னதா ஒரு வருத்தம் சரியா பேசிக்கிறதில்லை. அதனால பாட்டி முறுக்கு சுட ஆளு வேணுமின்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தாங்க. மீன்கார முனிம்மாக்காதான் கூட்டி வந்துச்சு.
என்ன முனிம்மா முறுக்கு சுட ஆள் கூட்டியார சொன்னா சின்ன புள்ளய கூட்டியாந்து இருக்கே… சும்மா சுட்டுப் பாக்க ஆள் கேக்கலை ஒரு கல்யாணத்துக்கு செய்யணும்… இவ செஞ்சிருவாளான்னு பாட்டி சந்தேகமாக் கேக்க… என்ன ஆத்தா அப்புடிக் கேட்டுப்புட்டே… விசாலத்தோட கைப் பக்குவத்துக்குப் பக்கத்துல யாரும் நிக்கமுடியாது தெரியுமா… இவ சுத்துற முறுக்கை சாப்பிட்டுப் பார்த்தா அப்புறம் இவதான் வேணுமின்னு கேப்பே அப்படின்னு முனிம்மா சொல்ல, என்னமோ போ பேசிப்பேசி மீன் விக்கிற உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என பாட்டி சலித்துக் கொண்டாள்.
மாவைப் பிசையும் விசாலம் அக்காவைப் பார்த்தேன்… முப்பத்தஞ்சு வயசுக்குள்தான் இருக்கும். கண்டாங்கி சேலையை நாட்டுக்கட்டு கட்டியிருந்தாள். பெரிய கொண்டையும் வட்டப் பொட்டுமாய் அக்மார்க் கிராமத்துப் பொம்பளையாய் தெரிந்தாள். யாருடனும் பேசாமல் மாவைப் பிசைவதில் கவனம் செலுத்தினாள். தலையைத் தூக்கும் போது எங்களைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தாள். அவளின் கழுத்தில் மஞ்சள் இழந்த நூல் கயிறு கிடந்தது.
ஏன்டியம்மா உனக்கு கல்யாணம் ஆயிருச்சில்ல… வீட்டுக்காரன் என்ன பண்றான் என்ற பாட்டியின் கேள்விக்கு ஏறிட்டுப் பார்த்து சிரித்தாள். என்னடி ஆத்தா பேச காசு கேட்பே போல கலகலன்னு பேசிக்கிட்டு வேலை பார்த்த வேலை போறது தெரியாது…. அலுப்பும் இருக்காதுல்ல என்று பாட்டி சொல்ல என்ன பெரியம்மா கேட்டே கண்ணாலம் ஆயிருச்சான்னா அதெல்லாம் ஆயி முடிஞ்சு போச்சும்மா என்றபடி வேலையை தொடர்ந்தாள்.
என்னடி சொல்றே… ஆயி முடிஞ்சு போச்சா… அப்படின்னா நீ இப்போ புருசன் கூட இல்லையா… என்ன? என அம்மா கேட்கவும் எங்களை எல்லாம் ஏறிட்டுப் பார்த்தவள் எங்க வூட்டுல கடனவொடன வாங்கி கஷ்டப்பட்டு என்னய கட்டிக்கொடுத்தாங்க… மொத ராத்திரி அன்னைக்கே அந்த ஆளு புல்லா குடிச்சிட்டு வந்தான்… எங்க சாதி சனத்துல நண்டு சிண்டு எல்லாம் குடிக்குதும்மா அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல… ரெண்டு மாசம் நல்லாத்தான் போச்சு… அதுக்கப்புறந்தான் தெரியும் அந்தாளுக்கு பக்கத்தூருல கூத்தியா இருக்கது… என்ன செய்ய… நாயா கத்திப் பாத்தேன்… சண்ட போட்டுப் பாத்தேன்… என்னால முடியல… அவன் அதுக்கு அப்புறம் அவளை வீட்டுக்கே கூட்டியாந்து ஒண்ணா இருக்கச் சொன்னான்… அவளும் இளிச்சுக்கிட்டு வந்தா… நான் வெளிய வந்துட்டேன். ஆயி அப்பன்கூட இருந்தாலும் அவுகளுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு இப்படி வேலக்கிப் போறேன்… எதோ வருமானம் வருது…” அவள் பேச்சை நிறுத்தியதும் சினிமாவுல மாதிரி கண்ணு கலங்கியிருக்கான்னு ஊடுருவிப் பார்த்தேன் ஆனால் அது தீர்க்கமாய் இருந்தது.
தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்குங்கள் உறவுகளே...
-'பரிவை' சே.குமார்
11 எண்ணங்கள்:
அதிர்ச்சியான முடிவு...
சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் குமார்.
இயல்பான எழுத்து நடை.வழக்கம் போல் மனதை தொடும் கதைக் களம்.
அழகான மொழிநடை நண்பரே..
வாழ்த்துக்கள்...
முழுவதும் படித்தேன். நெஞ்சைத் தொட்ட கதை.மகனும் விசாலத்தைக் கைவிடுவதாக முடிவு அமையும் என்று நினைத்தேன். என்திர்பாராத முடிவு நன்று.
மிதமாக ரசிக்க முடிந்த கதை, ரசித்தேன் குமார்...!
மற்றும் வாழ்த்துக்கள்...!
ரசித்துப் படித்தேன்!
Well written.
மன உணர்வுகளை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் குமார்!! இனிய பாராட்டுக்கள்!!
அதீதத்தில் வாசித்தேன் குமார்.விசாலம் அக்கா மனதில் நிக்கிறா !
ஆஹா! மிக மிக அற்புதமான பதிவு, இன்று இந்த பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். சூப்பர்.
நிறைய எழுதி இருக்கீங்க இதுநாள்வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இதோ இப்போது முதல் உங்களை பின்தொடர்ந்து வந்து முடிந்தவரை படிக்கிறேன்.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.
http://semmalai.blogspot.com/
கருத்துரையிடுக