'அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வா... சிறகடித்துப் பற...' என்பதை குஞ்சனின் அப்பா அவளிடம் சொல்கிறார்... இதுதான் உத்வேகமான வார்த்தை... இதுதான் அவளைச் சிறகடித்துப் பறக்க வைக்கிறது.
தன் மகளின் கனவை நனவாக்க அந்தத் தந்தை தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டே இருக்கிறார். தாய் மற்றும் சகோதரனின் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கார்கில் போர் களத்தில் இராணுவ வீரனாக மகனும் விமானியாக மகளும் களத்தில் நிற்க, ரெண்டு பிள்ளைகளையும் இப்படி விட்டுட்டிங்களே என வருந்தும் உறவுக்கு அம்மா சொல்லும் பதில் 'எல்லாரும் இப்படி ஒதுங்கிட்டா அப்புறம் யார்தான் நாட்டைக் காப்பாற்றுவது' என்பதேயாகும்... நாட்டுப்பற்று ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வெளிப்படும் விதம்தான் மாறுபடுமே தவிர... நம்நாடு என்ற எண்ணம் மாறாது... மாறவும் கூடாது. ஆட்சியாளனைக் கேலி செய்கிறோமென நாட்டைக் கேலி செய்வது நம்மை நாமே கேலி செய்து கொள்வதற்குச் சமம்.
குஞ்சன் சக்சேனா ஒரு உண்மைக் கதை... 1999 கார்கில் போர் விமானியாகச் செயல்பட்ட, இராணுவத்தின் முதல் பெண் விமானியான குஞ்சனின் கதை... இக்கதைக்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது... இராணுவத்தைத் தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்றும்... குஞ்சன் முதலாவது பெண் விமானி அல்ல என்றும் குரல்கள் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன... எது எப்படியோ கார்கில் போர்க்களத்தில் நாற்பது முறை இராணுவ ஹெலிகாப்டரில் பறந்து இராணுவ வீரர்களுக்கு உதவியிருக்கிறார் குஞ்சன். அவரே முதல் பெண் விமானி என்றும் பல தகவல்கள் சொல்கின்றன. இராணுவ வீரரகள் தங்கியிருக்கும் இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்றும் இதில் சொல்வதெல்லாம் பொய் என்றும் குரல்கள் எழும்பினாலும் உண்மை மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்... காட்சிப் படுத்தப்பட்டிருக்கலாம்... ஆனாலும் ஒரு பெண் விமானியாக, பட்ட கஷ்டங்களை கண் முன் நிறுத்துகிறது குஞ்சன் சக்சேனா.
குஞ்சனாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்... அம்மாவைப் போல் இல்லை... ஆனால் நடிப்பில் சிறப்பு... குஞ்சனாகவே வாழ்ந்திருக்கிறார். சிறுமியாக விமானத்தில் பறக்கும் அவள், அடைக்கப்பட்ட சன்னலைத் திறக்குமிடத்தில் அண்ணனின் கோபமும், விமானப் பணிப்பெண் காட்டும் கரிசனமும், விமானியின் அன்பால் விமானத்தை வலம் இடமாகத் திருப்புவதிலும் பறந்து விரிந்த வானத்தின் மேகக்கூட்டங்கள் காட்டும் ஜாலங்களும் அவளுக்குள் விமானியாகும் ஆசை துளிர்விடக் காரணிகளாகின்றன.
விமானத்தை ஒட்டுறவங்களை ஆண் பெண் பேதம் பார்த்து அழைப்பதில்லை... விமானி என்றுதான் அழைப்பார்கள்... விமானத்துக்கும் தன்னை ஓட்டுவது யாரென்ற பேதமெல்லாம் இல்லை... நீ விமானத்தை இயக்க வேண்டும் என்பது இறைவன் எண்ணமென்றால் யாராலும் மாற்ற முடியாது என்பதே அப்பாவின் சொல்லாய்...
அதேபோல் ரேகா, பதினைந்து கிலோ எடையைக் குறிப்பிட்ட தினத்தில் குறைத்து தனது கனவு கதாபாத்திரத்தில் நடித்தார் எனும் போது ஏன் உன்னால் முடியாது... முயற்சி செய்வது தப்பில்லை என்பதும் அப்பாவின் வாசகமே...
அப்பா இங்கே மகளின் வளர்ச்சியில் உரமாய் நிற்பது மகனுக்குப் பிடிக்கவில்லை... பெண் குழந்தைகள் எப்போது அப்பாவின் செல்லம்தானே... என்னை நண்பர்களின் தங்கைகளுடன் விளையாடும் போது திட்டுவீர்கள் அவளை அப்படிச் சொன்னதில்லை... இந்திய விமானப் படையில் ஒரு பெண் எப்படி இருக்க முடியும் அப்பா புரிஞ்சிக்கங்கப்பா என எதிர்த்து நிற்கும் மகனிடம் நீ குடிக்காமலேயே உளறுகிறாய் என்று சொல்லி எழுந்து செல்லும் அப்பா, பின்னொரு நாளில் மகள் இந்த வேலையே வேண்டாமென வந்து நிற்கும் போது ஒரு பெண்ணாய் நீ எவ்வளவு கஷ்டப்படுவாய் என்பதை நான் உணரவில்லை என உன் அண்ணன் சொல்கிறான் எனக்கு எல்லாம் தெரியுந்தான்... நீ உன் கனவில் ஜெயிக்கணும்... அடுப்படியில முடங்கிப் போறவள் அல்ல நீ... சிறகு விரிக்கப் பிறந்தவள்... விரித்துப் பற... என்பார்.
தன் ஆசையின் கனவு ஒரு செண்டிமீட்டர் உயரத்திலும் ஏழு கிலோ அதிகரிப்பிலும் உடைந்து போனபோது குஞ்சன் உடைந்து நிற்க, அவளின் உள்ளம் சோர்வடைந்து விடக் கூடாது என்பதில் அந்தத் தந்தையின் பங்கு அதீதமாய் இருக்கும்... மகளுக்காய் ஓடி... மகளுக்காய் சைக்கிள் ஓட்டி... மகளுக்காய் குதித்து... மகளுக்காய் பாகற்காய் குடித்து... இப்படி எல்லாமே மகளுக்காய் செய்யும் அப்பா, மனைவி பேசும் போதெல்லாம் 'நான் வேணா ஒரு ஓரமா...' என்று இழுத்துச் சொல்லும் போது நம்மையும் சிரிக்க வைக்கிறார். ஓய்வு பெற்ற கர்னலான அவர் தன் மகன் இராணுவ வீரனான போது மகிழ்ந்ததை விட மகள் சிறகடித்துப் பறந்து நிற்கும் போது மகிழ்வது அதிகமே.
போராடி வெற்றி பெற்று ஒற்றைப் பெண்ணாய் இராணுவ பயிற்சிக் கூடத்தில் அவள் படும் பாடு... ஆண்கள் கொடுக்கும் டார்ச்சர்... அதையும் மீறி அவள் எழும் போதெல்லாம் மூத்த அதிகாரி அடித்து அடக்கி வைப்பது... அதிலிருந்து மீள முடியாமல் கோபத்தில் போங்கடா நீங்களும் உங்க விமானப் பயிற்சியும் என வீட்டுக்கு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்பதுமாய் ஜான்வி நமக்கு குஞ்சன் சக்சேனாவாகத்தான் தெரிகிறார். இந்தப் பெண் தன் கனவினை அடைய எத்தனை கஷ்டத்தை அனுபவித்திருக்கிறாள் என நம்மை வாட வைக்கிறாள்.
(நிஜமும் நிழலும்) |
மனித மனங்களே இல்லாப் பூமியில் ஒரே ஒரு மனிதம் பூப்பது எல்லா இடத்திலும் நிகழ்வதுதானே... அப்படித்தான் பதினோரு மணி நேரங்கள் மட்டுமே பயிற்சி எடுத்திருக்கிறாள் என்பதை அறிந்து ஏன்...? எதனால்..? என்ற கேள்விகளை அடுக்கி, தானே அவளுக்குப் பயிற்சியும் கொடுத்து... வீட்டுக்கு ஓடியவளை திரும்பி வரவைத்து கார்கில்லுக்கு அனுப்பி வைக்கும் ஆண்மையுள்ள ஒரு அதிகாரி குஞ்சனுக்கு கிடைத்ததாலேயே கார்கிலில் அவர் 40 முறை களம் கண்டிருக்கிறார். பதினோரு மணி நேரம்... ம்... இது வேலைக்காகாது... நீ போய் வீட்டில் சாம்பார் வை எனச் சொல்லாமல், ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டில் இல்லை... எப்படித் தரையிறக்குவாய் என அவளைத் தடுமாற வைத்து அதில் வெற்றி பெற வைக்கும் போது... அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்பதாய் ஏளனம் செய்த அண்ணன் அடிபட்டுப் போகிறான்... நீ பொம்பள உனக்கு மனவலிமை இல்லை என்ற ஆணவக் குரல்களும் அடிபட்டுப் போகின்றன.
கார்கில் போரில் அடிபட்ட வீரர்களைக் காப்பாற்ற, பாகிஸ்தான் ராணுவம் குடிலமைத்திருக்கும் இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டிய நிலையில், வேறு பைலட்டுகள் யாருமில்லாத காரணத்தால் கார்கிலில் இருந்து உதம்பூருக்கே போ எனச் சொல்லப்பட்ட குஞ்சன் விமானத்தை இயக்க வேண்டிய சூழல்... அப்போதுதான் அவள் தன்னை, தன்னுடைய மனவலிமையை, தேசத்தின் மீதான நேசத்தை நிரூபிக்கிறாள்... அடிபட்டுக் கிடக்கும் மேலதிகாரி தன் கையை அவளை மடக்கச் செய்து இன்னும் ஒரு முறை செய் குஞ்சன் எனச் சொல்லும் போது அவள் சாதித்துவிட்டாள் என்ற பூரிப்பு அவளுக்குள்ளும்... அவளை விட நமக்குள்ளும்.
கார்கில் போரைப் பெரிதாக காட்டவில்லை... காட்டும் சில காட்சிகளில் அதன் உக்கிரம் தெரிகிறது... தேசபக்தி எனக்கில்லை எனச் சொல்லும் பெண் தேசத்துக்காக தன் உயிரைக் கூட ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்னும் போது அவளுக்குள் நாட்டின் மீதான பற்று எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டும் போதே அவள் தேசபக்தி உள்ள பெண்ணாக உருமாறி நிற்கிறாள்.
மலைகளுக்கு இடையே அவள் விமானத்தில் பறக்கும் போதும்... குண்டுகள் உரசிச் செல்லும் போதும் குஞ்சன் நீ ஜெயிக்கப் பிறந்தவள் எனக் கத்தத்தான் தோன்றுகிறது. உன்னிடம் மனவலிமை இல்லையெனச் சொல்லி அவளின் கையை இன்னொரு ராணுவ வீரன் ஒவ்வொரு முறையும் மேசையில் டக்கெனச் சாய்க்கும் போது துளிர்க்கும் கண்ணீர்த்துளி, வீரப்பெண்ணாய் எல்லார் முன்னும் நிற்கும் போது, 'உனக்குப் பாதுகாப்பில்லைன்னு நான் அடிக்கடி சொல்வேன் குஞ்சு... இப்ப எனக்கு ஒரு பிரச்சினையின்னா நீ இருக்கே என்னைக் காப்பாற்ற...' என அண்ணன் கட்டிக் கொள்ளும் போது வெற்றிப் பெருமிதத்தில் சாதித்த சந்தோஷத்தில் துளிர்க்கிறது... நமக்குள் அக்கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
ஜான்வி சிறப்பான தேர்வு... அருமையான நடிப்பு... அப்பா, அண்ணன், அம்மா, இராணுவ அதிகாரிகள், சக பைலட்டுகள் என எல்லாருமே தேர்ந்த நடிப்பு. படம் குறித்து ஆயிரம் கருத்துக்கள் எழலாம்... இது தவறு... அது தவறு... அப்படியில்லை... இப்படியில்லை எனச் சொல்லலாம்... ஏன் குஞ்சன் சக்சேனாவையே இதில் பாதி கட்டுக்கதை எனச் சொல்லச் சொல்லலாம்... எது எப்படியிருந்தாலும் நாம் பார்க்க, பார்க்க வேண்டிய நல்லதொரு படம் 'குஞ்சன் சக்சேனா'.
இயக்குநர் ஷரன் சர்மா, இசையமைப்பாளர் ஜான் ஸ்டூவர்ட், ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன், எடிட்டர் நிதின் என எல்லாருமே சிறப்பான பங்களிப்பு... அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
குஞ்சன் சக்சேனா உண்மையில் இந்த உயரத்தை அடைய இன்னும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம்... படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது கொஞ்சமே என்றாலும் நம்மை அதற்குள் ஈர்த்துக் கொள்கிறது... வலியை யும் வேதனையையும் கொடுத்து இறுதியில் அவள் சாதித்து நிற்கும் போது ஆரம்பம் முதல் தலைதூக்கி ஆடிய ஆணாதிக்கம் கைதட்டி வாழ்த்துச் சொல்லி தலை குனிந்து நிற்கிறது... குஞ்சன் நெஞ்சம் நிமிர்த்தி நடக்கிறாள்... அவள் ஆரம்பம் முதலே அப்படித்தன் நடக்கிறாள்... நாம்தான் வலிமையில்லை எனச் சொல்லிச் சொல்லி தட்டி வைக்கப் பார்க்கிறோம்... அவள் அப்பாவின் வார்த்தைகளான சிறகை விரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு சிறகை விரிக்கிறாள்... பறந்து சிரிக்கிறாள்.
நம்ம பக்கமும் ஒருத்தர் நாட்டுப் பற்றுள்ள கதைகளில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்... அவரும் நாயகனாய் நடிப்பதை விட்டுவிட்டார்... இப்ப நாம சாதிக்குள்ள சிக்கிட்டோம்... அதுவும் நான் மட்டும்தான் சாதியைச் சொல்லி படமெடுப்பேன்... அது சமூகக் கருத்துள்ள படம்... ஆனால் நீ எடுத்தால் அது சாதீயப் படம் என்ற எண்ணம் மேலோங்கும் இயக்குநர்களின் கையில் தமிழ்த் திரையுலகம் இருக்கும் போது நாமெல்லாம் இப்படியான படங்களை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது.
குஞ்சன் சக்சேனா (த கார்கில் கேர்ள்) நல்லதொரு படம்... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
பார்த்தே ஆக வேண்டும் எனும் எண்ணம் எழுகிறது குமார்... ஆழ்ந்த விமர்சனம் அவ்வாறு என்றால், தமிழ் திரையுலக பார்வையும் உண்மை...
அற்புதம்
தங்களின் விமர்சனம் படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது
நன்றி
கருத்துரையிடுக