சனி, 29 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 58

முந்தைய பதிவுகளைப் படிக்க...



58.  வெளிச்ச முகம் தெரிகிறது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க மணியை யாரோ தாக்கிவிடுகிறார்கள். நண்பர்கள் துணையுடன் அக்கா வீட்டிற்குச் செல்கிறான்.


"என்ன ஒரு மாதிரி இருக்கே... வந்தப்பவே கேட்டேன்... ஒண்ணுமில்ல சும்மாதான் மயக்கமா வந்துச்சுன்னு சொன்னே... முகமே சரியில்லையே..." என்றபடி மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி கேட்டார் புவனாவின் அப்பா.

"அதான் சொன்னேன்ல திடீர்ன்னு மயக்கமா வந்திருச்சுன்னு... அதான் சோர்வா இருக்கு... அம்புட்டுத்தான்..." என்றபடி அவருக்கு அருகே அமர்ந்தாள்.

"இல்ல ஆத்தாளும் மகளும் எதாவது சண்டை கிண்டை போட்டியளோன்னு சந்தேகமா இருந்துச்சு..."

"ஆமா நாங்க சண்டை போட்டுக்கிட்டே இருக்கோம் பாருங்க... நா மயக்க வருதுன்னு உக்காந்ததும் அவதான் ஓடியாந்து தண்ணி கொடுத்து படுக்க வச்சி காலெல்லாம் பிடிச்சிவிட்டா..."

"அதானே... எம்மவ எங்காத்தா மாதிரியில்ல... நீ வேணுமின்னா அவகிட்ட நையி நையின்னு நிப்பே..."

"ஆமா மகள மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க... என்னங்க நம்ம புவனா விருப்பப்பட்டபடி படிக்கட்டுங்க... இப்ப கலியாணம் பண்ண வேண்டாங்க... அவளோட கனவை நாம ஏன் கலைக்கணும்"

"நாமன்னு என்னையும் சேத்துக்கிறே... நீயும் உன்னோட மவனுந்தான் மேல படிக்க வேண்டாம் படிச்சது போதும் கலியாணம் பண்ணி வைப்போமுன்னு குதிச்சீங்க... பத்தாததுக்கு திருப்பத்தூர்காரன்... அதான் ஒந்தொங்கச்சி புருஷன் அவனும் சேந்துக்கிட்டு பேசினான்... ஆனா இப்ப என்ன திடீர் ஞானோதயம்... எம்மவ பரிதவிச்சு காலெல்லாம் பிடிச்சு விட்டதாலயா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... நம்ம சாதி சனத்துல யாரு பொட்டப்புள்ளங்கள அதிகம் படிக்க வைக்கிறாங்கன்னு பாத்தோம். அதுபோக படிச்ச படிப்புக்கு மாப்ள கிடைக்கிறது குதிரைக் கொம்பால இருக்கு... அதான் படிச்சது போதும் கலியாணம் பண்ணலாம்ன்னு சொன்னோம்... நல்லாப் படிக்கிறா... அவளுக்கும் மேல படிக்கணுமின்னு ஆசை... படிக்கட்டுமே..."

"ம்... அப்புறம் அந்தப் பயலால பிரச்சினை வராதா?"

"எ.... எந்தப் பய...?"

"இங்க பாருடா... தெரியாத மாதிரி நடிக்கிறா... ஒண்ணாப் படிக்கிற புள்ளக பேசத்தான் செய்யுங்க.... பழகத்தான் செய்யுங்கன்னு சொன்னேன்... நீங்க கேக்கலை.... உங்கொழுந்தன் அவனை ஆள் வச்சி அடிச்சிருக்கான்.... ம்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு போன் வந்துச்சுல்ல... அதுல வந்த செய்தி என்னன்னு தெரியுமா... நம்ம புவனாவை பொண்னு கேட்டானுங்கள்ல அந்த மணிப்பயல... எவனோ போட்டுட்டானுங்களாம்... ஆளு சீரியஸாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்கானுங்களாம். பிழைப்பானான்னு தெரியலையாம்... இது அடிதடி கத்திக் குத்துன்னு தொடரும்.... நம்ம பயல மதுரைப் பக்கம் போகச் சொல்லனும்... இது இங்க திரிஞ்சா அடிதடி அது இதுன்னு போக ஆரம்பிச்சிரும்... இதை எதுக்குச் சொல்ல வாறேன்னா என்ன மோட்டிவ்ல அவனை அடிச்சானுங்கன்னு தெரியாது. ஆனா அதுல நம்ம பொண்ணோட பேரு வந்துடக்கூடாது.... அதான்... அந்தப் பயகூட பழகுறதை பெரிசு பண்ணாம அவள படிக்க விடுறதா இருந்தா படிக்க வைப்போம்... இல்லேன்னா வந்திருக்க மாப்ளயில்ல நல்ல பயலாப் பாத்து கட்டிக் கொடுத்துருவோம்..."

"மணிப்பயல வெட்டிட்டானுங்களா?"

"அதை விடு அது வேற... நாங்கேட்டதுக்கு பதில் சொல்லு..."

"ம்... படிக்கட்டுங்க... அவனால தொந்தரவெல்லாம் வராது..."

"எப்படி இம்புட்டு தைரியமாச் சொல்றே...? உங்கிட்ட பேசினானா?"

"இ...இல்ல... பிரண்டாத்தானே பழகியிருக்காங்க... இனி ரெண்டு பேரும் ஒரு காலேசுக்கா போகப்போறாங்க... "

"சரி... படிக்கட்டும்.... அவ படிப்பு முடியிற வரைக்கும் கலியாணம் பண்ணனும், நல்ல மாப்ள வந்திருக்குன்னு எங்கிட்ட வந்து நிக்கக்கூடாது... செரியா?"

"ம்... அவ படிப்பு முடியிற வரைக்கும் எதுவும் பேசலை... "
"ம்... உன்னோட மவன் எங்கே?"

"எங்கிட்டோ போச்சு இன்னும் வரலை...."

"நா கிளம்பிப் போனதும் வந்தா மறுபடிக்கும் வெளிய போக விடாதே... எல்லாப் பக்கமும் கூகூன்னு கிடக்கு..."

"சரி..."


"என்னடா திடீர்ன்னு போன் பண்ணியிருக்கே? மல்லிகா ஆச்சர்யமாகக் கேட்டாள்.

"ஏன் நான் உனக்கு போன் பண்ண மாட்டேனா?" எதிர்முனையில் ராம்கி கோபப்படுவது போல் கேட்டான்.

"சரி... சரி... சும்மாதான் கேட்டேன்.... என்ன விஷயம் சொல்லு..."

"நான் புவியைப் பார்த்துப் பேசணும்.... நான் போன் பண்னினா எதாவது பிராப்ளம் வரும்... அதான்..."

"ஓ... எனக்கு இன்னும் இந்த வேலை இருக்கு போல.... சரி உனக்கு அப்படி என்ன அவசரம்?"

"முக்கியமா பேசணும்... ப்ளீஸ்ப்பா..."

"சரி... சரி... அவகிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்.. ஆமா மணியைப் பற்றி எதாவது செய்தி?"

"தெரியலை... சேகர் மதுரைக்குப் போயிருக்கான்... வந்தாத்தான் தெரியும்..."

"சரி... சரி... நீ எதுக்கும் பாத்து இரு..."

"எதுக்கு எல்லாரும் என்னையப் பயமுறுத்துறீங்க..?"

"பய முறுத்தலை.... உன்னைய அடிக்க ஆள் வச்சதா அண்ணாத்துரைதான் சொன்னான். அதான் சொன்னேன்..."

"சரி... சரி... ஆள் வச்ச அவனே எந்திரிப்பானான்னு தெரியல... என்னைய அடிக்கிறானுங்களாம்... விட்டுத்தள்ளு... நாஞ் சொன்னதை கொஞ்சம் உடனே ஏற்பாடு பண்ணு..."

"சரி.... அவ வீட்டுக்குப் பேசிட்டுக் கூப்பிடுறேன்..."

"ம்..."


"என்னடா மணி எப்படியிருக்கான்?" சேகரிடம் வினவினான் ராம்கி.

"சொல்ற மாதிரி இல்ல மச்சான்... அவனோட அப்பா அம்மா புலம்புறதைப் பாக்க சகிக்கலை... ஐசியூலதான் வச்சிருக்கானுங்க... பொழச்சாலும் எந்திரிச்சு நடமாட முடியுமான்னு தெரியலை... ஆனா அவன் மேல ஏவனோ இம்புட்டு வெறியா இருந்திருக்கான்... "

"ம்... இவனும் எத்தனை பேரை வெட்டியிருக்கான்... அந்தப் பாவமெல்லாம் சும்மாவா விடும்... ஆனா பெத்தவங்கதான் பாவம்..."

"அம்புட்டுத்தூரம் பழகிட்டு என்னோட மச்சான்னு தெரிஞ்சும் உன்னையுந்தானே மாப்ள குத்துனான்..."

"ஆமா... இப்பக்கூட புவனாவுக்காக என்னையப் போட முயற்சி பண்ணியிருக்கான்...."

"அது சரி.... அதான் கடவுள் அவனை எந்திரிக்க முடியாமப் பண்ணிட்டாரு...."

"ம்..."

"ஆமா அயித்தை எங்க?"

"அங்கிட்டுத்தான் உங்க வீட்டுப்பக்கமா போச்சு... எங்க பேசிக்கிட்டு இருக்கோ " என்று ராம்கி சொல்லும் போது போன் அடித்தது.

"இரு மச்சான் வாறேன்..." என்றபடி வீட்டிற்குள் சென்று போனை எடுத்தான்.

எதிர்முனை சொல்வதைக் கேட்டு "ம்... பேசிட்டியா.... வாறேன்னு சொன்னுச்சா?... ம்... நாளைக்கா.... உங்க வீட்லயா? சரி... ரொம்ப நன்றி மல்லிகா..." என்று போனை வைத்து விட்டு வந்தான்.

"யாருடா போன்ல... யார்ய் வாறேன்னு சொன்னா..." அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் சேகர் கேட்டான்.

"அதுவா... புவிய வரச்சொல்லச் சொன்னேன்..."

"எதுக்கு...?"

"கொஞ்சம் எங்க லைப்பைப் பத்திப் பேசத்தான்.."

"அது சரி... இப்ப என்ன அவசரம் வந்துச்சு... எல்லாப் பக்கமும் பிரச்சினையா கிடக்கும் போது கொஞ்சம் அடங்குடா..."

"இல்லடா அதுக்கிட்ட முக்கியமாப் பேசணும்..."

"வரச்சொல்லி பேசுற அளவுக்கு அப்படி என்னடா முக்கியமான விஷயம்... ?"

"பேசிட்டு சொல்றேன்டா... உனக்கிட்ட சொல்லமயா..." என்றதும் சேகர் 'ஆஹா.... கூட்டிக்கீட்டிக்கிட்டு ஓடலாம்ன்னு பிளான் பண்ணுறானோ... இவன் என்ன ஏழரையைக் கூட்டப் போறானோ தெரியலையே' என மனசுக்குள் நினைத்தபடி அவனைக் கலவரமாய்ப் பார்க்க ராம்கி மர்மமாய்ச் சிரித்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 மார்ச், 2014

'குக்கூ' வசீகரித்ததா?


னந்த விகடனில் தனது வாழ்வில் நிகழ்ந்த, பார்த்த, ரசித்த நிகழ்வுகளை மிக அழகாக சுவராஸ்யமாக எம்பதுக்கும் மேற்பட்ட வாரங்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்த திரு. ராஜூ முருகன் அவர்கள் குக்கூ மூலம் இயக்குநராய் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திற்கு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குநருக்கு முதலில் வாழ்த்துக்கள்.

காதல் கதை என்றாலே சந்தோஷம், சோகம், காதலர்களைப் பிரிக்கு ஒரு வில்லன் என இருக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கை ஒன்று தமிழ் சினிமாவில் உண்டு. அதற்கு விதிவிலக்காக சில படங்கள் வந்து வெற்றியும் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படிப்பட்ட கதைகளைக் கையாளும் இயக்குநர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் காதல் கதை என்றால் வில்லன், பிரிவு என்றிருந்தால்தான் ஒரு பரபரப்பும் படபடப்பும் ரசிகனை ஆட்கொள்ளும் எந்த அதீத நம்பிக்கையில் வரும் படங்களின் வரிசையில் குக்கூவும் வந்திருக்கிறது.

பிறவியிலேயே கண் பார்வை இழந்த இருவருக்குள் நுழையும் காதலில் அவர்கள் ஜெயித்தார்களா என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். முதன் முதலில் பார்க்கும் போது மோதலில் ஆரம்பித்து கொஞ்சம் நட்பாகி... பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி... நகர்கிற கதையில் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்படுவதைக் காண முடிகிறது. இருப்பினும்  கதையின் போக்கோடு போகும் போது தொய்வு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

கச்சேரியில் பாடுவது, இரயிலில் எதாவது விற்பனை செய்வது என தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் கண் பார்வையற்ற நாயகனாக அட்டக்கத்தி தினேஷ்.... இதில் நடித்திருக்கிறார் என்பதைவிட தமிழாக வாழ்ந்திருக்கிறார். முகபாவனைகள்... கண் அசைப்பு... நடை... உடை... என அனைத்திலும் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார். இது அவரை தமிழ்ச் சினிமாவில் நல்லதொரு இடத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கொடியாக கேரளத்து வரவு மாளவிகா... கண் பார்வையற்ற பெண்ணின் இயல்புகளை மிகச் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் முதல் முத்தம் கொடுக்கும் காட்சியில் எனக்கு இதெல்லாம் பிடிக்காது... நான் போறேன் என்று கிளம்பும் இடத்தில் அந்த படபடப்பை கண்ணிலும் கைகளிலும் அருமையாகக் காட்டியிருக்கிறார். தினேஷ் தனியாக செஞ்சுரி அடித்தார் என்றால் இவர் தினேஷூடன் இருக்கும் இடத்திலும் செஞ்சுரி அடித்து மொத்தத்தில் நடிப்பில் டபுள் செஞ்சுரி அடித்து தினேஷைவிட நடிப்பில் கலக்கியிருக்கிறார் என ஆட்டநாயகி விருதைத் தட்டிச் செல்கிறார்.

நாயகனின் நண்பராக வருபவரின் 'வொண்டர் வொண்டரும்' அந்த 'கே...கே...கே...' சிரிப்பும் பார்ப்பவர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். இசைக்குழுவை நடத்தும் சந்திரபாபு முகச் சாயல் கொண்ட நடிகரும், புரட்சித் தலைவராக வரும் நடிகரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்திரபாபு ரெண்டு பொண்டாட்டிக்காரராக இருந்து மூணு பொண்டாட்டிக்காரராக மாறி பின்னால் வருந்திச் சொல்லும் இடத்தில் மனதில் நிற்கிறார் என்றால் புரட்சித் தலைவராக வருபவர் படம் முழுவதும் வசனம் பேசாமல் புரட்சித் தலைவர் போலவே நடனம் ஆடி... அவர் போலவே முகபாவங்கள் செய்து நாயகன் உதவி என்று வந்து நிற்கும் போது தனது கழுத்தில் கிடக்கும் செயினைக் கழட்டிக் கொடுத்து நெஞ்சில் நிற்கிறார்.

தங்கைக்கு ஆசிரியை பணி கிடைத்தால் நாம் சுகமாக வாழலாம் என்பதால் நண்பன் மூலம் பணம் வாங்கி அவனுக்கே தங்கையைக் கட்டிக் கொடுக்கத் துடிக்கும் அண்ணனும் கொடியை அடையத் துடிக்கும் அவனின் நண்பனும் வில்லன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கொடி தப்பிப் போகும் போது மெயின் ரோட்டில் கார்கள் செல்வதைப் பார்த்து  ரோட்டைக் கடக்க முடியாமல் பதறி நிற்கும் போது தனது வேனில் ஏற்றிச் செல்பவர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் போது எல்லாப் படத்திலும் போல் இதிலும் நாயகியை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்தை இயக்குநர் இங்கு வைத்திருக்கிறாரோ என்று எண்ணும் போது அவரே அடிபட்டுக் கிடக்கும் நாயகனையும் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுவதாகக் காட்டும் போது மனித நேயம் மிக்க மனிதராக நம்மில் உயர்கிறது அந்தக் கதாபாத்திரம்... அப்புறம் ஏன்யா அடிக்கடி அந்தாளு கொடியை ஒரு மாதிரி பாக்குறமாதிரிக் காட்டணும்... பாக்குறவன் பதைபதைக்கணுமின்னா...


ஆடுகளத்தில் தனுஷின் நண்பராக வருபவர் இதிலும் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். மேலும் நாயகியின் தோழியாக வருபவர், இரயில்வே நிலையத்தில் இருக்கும் கிழவன், சந்திரபாவுவின் மனைவிகள், கொடிக்கு ரீடராக வருபவன், காலையிலேயே கிளம்பும் போது ரெண்டு குடும்பத்துக்கு நல்லது செய்யணுமின்னு வருவேன்னு சொல்லும் அரசியல் கட்சிக்காரன் என எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 

 'உங்குரலைக் கேட்டா ரோஸி சிஸ்டர் ஞாபகம் வருவாளே அதான் நீ... நீ அடிச்சப்ப ரத்தம் வந்துச்சே அதான் நீ...' இது போன்று படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கின்றன. கண் பார்வையற்ற இருவரின் காதலை மிக அழகாக பேசியிருக்கிறது குக்கூ. பாடல்கள் ரசிக்க வைத்தாலும் பின்னணி இசையில் முன்னணியில் நிற்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்திருப்பதாக செய்தியில் படித்தேன். 

படத்தில் இந்தக் கதையைச் சொல்பவராகவும் காதலர்கள் சேர்வதற்கு காரண கர்த்தாவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இயக்குநர்கள் நடிகர் ஆவது என்பது தமிழ்ச் சினிமாவில் ஒரு தொற்று வியாதி போல... உங்கள் இயக்கங்களால் ரசிகர்களின் மனதில் உயர்ந்து நில்லுங்கள் இயக்குநரே.. நடிகனாக ஆசை வேண்டாம்.


படம் அருமை... நடிப்பு அருமை... முதல் படத்தில் முத்திரை பதிச்சிட்டாரு ராஜூமுருகன்னு சொன்னாலும் வீட்டில் இருந்து ஓடிப்போன நாயகி மும்பையில் இருக்கும் செய்தி அறிந்து  கண் தெரியாத ஒருவன் தனியாக மும்பைக்குப் கிளம்பிப் போவதாகக் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்... இது போன்ற சில சினிமாத்தனமான காட்சிகளும் இழுவையான பின்பாதியும் இன்னும் செதுக்கப்பட்டிருந்தால் குயில் இன்னும் அருமையாகக் கூவியிருக்கும். இசைஞானியின் பாடல்கள் படம் முழுவதும் இளையோடுவது ரசிக்க வைக்கிறது என்பது உண்மைதான்... ஆனால் இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது படம் ஜெயிக்க வேண்டும் என்பதாலா? நாயகன் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடவே இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்கள் முதல் படத்தில் பிரமாண்டமான வெற்றியுடன் முத்திரை பதித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் சரக்கில்லாதது போல் சொதப்பலான படங்களை எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.... ராஜூ முருகன் சார் வரும் படங்களில் இன்னும் சிறப்பான கதைக் களத்துடன் களமிறங்கி நான் எப்போதும் ஜெயிக்கப் பிறந்தவன் என்று வெற்றிக் களிப்போடு முன்னணி இயக்குநராய் வாருங்கள் சார்.

மொத்தத்தில் பின்பாதியை நீட்டி முழக்காமல் சினிமாத் தனங்களைக் குறைத்திருந்தால் 'குக்கூ' இன்னும் வசீகரித்திருக்கும் இருப்பினும் தமிழ்ச் சினிமாவில் இந்த கண்ணிழந்த குயில்களின் 'குக்கூ' ஓசை கண்டிப்பாக அனைவராலும் பேசப்படும்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 26 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் -57

முந்தைய பதிவுகளைப் படிக்க...


57.  சாண் ஏறினால் முழம் சறுக்குதே

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க அக்கா வீட்டுக்கு கிளம்பும் அவனை சரவணன் அவசரமாக அழைக்கிறான்.

இனி...

"என்னடா அவசரமா வரச்சொன்னே... அப்படி என்ன அவசரம்?" சரவணன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனிடம் வினவினான் ராம்கி.

"வா அங்கிட்டுப் போய் பேசலாம்" என்று அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் பின்னே நிற்கும் மாமரத்தடிக்குச் சென்றான்.

"அப்படி என்னடா ரகசியம்? அக்கா வீட்டுக்கு வேற போகணும்"

"இருடா... அண்ணாத்துரையும் வர்றேன்னு சொன்னான்... உக்காரு..."

"என்னடா... என்ன பிரச்சினை... புவி வீட்ல எதுவும் பிரச்சினையா? எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே? அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்னடா பிரச்சினை...? " என்றபடி மரத்தடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.

"புவனாவுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..."

"அப்புறம் என்ன சொல்லித் தொலைடா... சும்மா டென்சனை ஏத்திக்கிட்டு..." கடுப்பானான்.

"மணியைப் போட்டுட்டானுங்கடா..." மெதுவாகச் சொன்னான்.

"என்ன... என்ன சொன்னே..."? புரியாமல் கேட்டான்.

"மணியைப் போட்டுட்டானுங்கன்னு சொன்னேன்..."

"என்னடா சொல்றே...? எப்படா...? ஆளுக்கு என்னாச்சு...." பதட்டமாய் கேட்டான்.

"ரொம்ப சீரியஸாம்... மதுரைக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்களாம்... அண்ணாத்துரைதான் சொன்னான்... இப்ப வந்துருவான்... அவன் வந்தாத்தான் தெரியும்..."

"ம்... எதுக்குடா அவனை..." வார்த்தையை முழுங்கினான்.

"தெரியலை... ஆனா இன்னொன்னுடா..."

"என்ன..?"

"சொன்னதும் ஷாக் ஆயிடாதே... அவன் உன்னைப் போட ஆள் தயார் பண்ணி வச்சிருந்தானாம்..."

"எ...எ.....ன்....ன...டா..... சொ....ல்...றே....? எ... என்னையா....?? எ.... எதுக்கு...??"

"ம்... அவன் கட்டிக்க விரும்புற பொண்ண நீ பிக்கப் பண்ணுனா.... அதுக்குத்தான்..." நக்கலாகச் சொன்னான்.

"அதுக்காக என்னைய போடப்பாத்தானா... இதை யாரு சொன்னா...?"

"இரு இப்போ அண்ணாத்துரை வந்ததும் எல்லாம் விவரமாத் தெரியும்..." என்று அவன் சொல்லும் போதே "என்னடா மாப்ளையை பயமுறுத்துறியா?" என்றபடி வீட்டுக்குள் இருந்து கொல்லைப் பக்கமாக வந்த அண்ணாத்துரை கட்டிலில் அமர்ந்தான்.

"என்னடா மணிய..." மெதுவாக இழுத்தான்.

"ஆமா மாப்ள... ஆளை தாறுமாறாப் போட்டுட்டானுங்களாம்... ஆத்துப் பாலம் தாண்டி தனியா வண்டியில போய்க்கிட்டு இருந்திருக்கான்... வேவு பார்த்து வச்சிருந்திருப்பானுங்க போல சரமாரி போட்டுட்டானுங்களாம்... காலு கையெல்லாம் நல்ல வெட்டாம்..."

"அய்யய்யோ பாவம்... பிழைச்சிருவானா?"

"கஷ்டம்தானாம்... இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்களாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்காங்களாம்... என்ன ஆகும்ன்னு தெரியல..."

"எதுக்குடா அவனைப் போயி..."

"மாப்ள எத்தனை குடும்பத்துப் பாவம்... அவனைச் சும்மா விடுமா..."

"அதுக்காக... பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்... யாருடா பண்ணியிருப்பா.."

"தெரியலை மாப்ள... ஆனா அவன் உன்னைய போட ஆள் ஏற்பாடு பண்னியிருக்கான்.... இந்த நேரத்துல அவனை யாரோ போட்டுட்டானுங்க... ஒருவேளை உனக்கு வேண்டியவங்க யாரோதான் பண்ணியிருக்கனும்..." சிரித்தபடி சொன்னான் அண்ணாத்துரை.

"அடப்போடா... சும்மா காமெடி பண்ணாம..."

"இல்ல மாப்ள... உன்னையப் போட ஆள் ஏற்பாடு பண்ணினது பசங்க மூலமா வைரவனுக்குப் போயாச்சாம்... ஒருவேளை வைரவன் ஆள் வச்சிப் பண்ணியிருக்கனும்... ஆனா கன்பார்ம் இல்ல..."

"வைரவனா.... அவரைப் பொறுத்தவரை என்னை போட்டுட்டா நல்லதுதானே... எதுக்கு எனக்காக அவனைப் போடணும்..."

"நீ தப்புக் கணக்குப் போடுறே மாப்ள... அவனைப் பொறுத்தவரை ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்... புரியலை... உன்னைய இப்போ சாகவிட்டா அவன் தங்கச்சியோட உயிருக்கு உத்திரவாதம் இல்லை.... இன்னும் ரெண்டு மூணு வருசம் படிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு நீங்க முடிவு பண்ணிட்டதாலா அவனுக்கு இப்போ பிரச்சினை இல்லை... இன்னும் மூணு வருசத்துல எப்படி வேணுமின்னாலும் மாறலாம்ல்ல... அதோட புவனாவை கல்யாணம் பண்ணனுங்கிறதுக்காக எந்த லெவலுக்கு வேணுமின்னாலும் போக நினைக்கிற மணியையும் சத்தமில்லாம ஒழிச்சிட்டா உன்னைய காப்பாத்தின மாதிரியும் ஆச்சு...  எப்பவும் பிரச்சினையா இருக்கிற மணியையும் ஒழிச்ச மாதிரி ஆச்சு... எப்படி அவனோட பிளான்..."

"என்னமோ நீ பிளான் போட்ட மாதிரி பேசுறே...?"

"நம்பத் தகுந்த தகவல்களை வச்சிப் பார்க்கும் போது எனக்கு  இப்படித்தான் தோணுது..."

"இங்க பாரு மாப்ள என்னைய மீறி எவனும் புவனாவைத் தொட முடியாது... தெரியுமில்ல..."

"அடியே... உன்னையவே தூக்குறதுக்கு ரெடியாயிருக்கானுங்க... புவனாவைக் கிழிக்க முடியாதாமுல்ல... உங்க காதலுக்கு வைரவன்தான்டா இப்போதைக்கு பாடிகாட்.."

"சும்மா வெளியில போயி அவருதான் பண்ணுனாருன்னு சொல்லிக்கிட்டு திரியாதியடா... எவனோ பண்ணப் போயி பாவம் அவருக்குப் பிரச்சினை வந்துடாம..."

"இங்க பாருடா அண்ணா.... மச்சானுக்கு சப்போர்ட்டை... அது சரி... இன்னும் தாலி ஏறலை அதுக்குள்ள மச்சானுக்காக நம்மளை திட்டுறான்டா..."

"விடுடா... விடுடா... புது மாடு வெறிக்கத்தான் செய்யும்... பழகப் பழக தெளிவாயிடும்... என்ன மாப்ள... இது எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் சொன்னது... ஆனா அவரே சந்தேகத்தோடதான் சொன்னாரு... நானும் மணியோட பிரண்ட்ஸ் எதிர் பார்ட்டிகள்ன்னு எல்லாப் பக்கமும் விசாரிச்சேன்... யாரு எதுக்குப் பண்ணினான்னே தெரியலை... அது போக வைரவன் பண்ணினாருன்னு எவனும் சொல்லலை... வைரவன் இம்புட்டுத் தூரம் போக மாட்டாருன்னு எனக்கும் தெரியும்... இதுல எதோ வேற முக்கியப் பிரச்சினை இருக்கலாம்... எப்படியும் வெளிய வந்திரும்... நீ கவனமா இரு மாப்ள... எப்ப எவன் கத்தியை சொருகுவான்னு தெரியாது..."

"என்னடா பயமுறுத்துறீங்க...?"

"இல்ல மாப்ள அவனைப் போட்டுட்டானுங்க... ஒருவேளை அவன் ஆள் ஏற்பாடு பண்ணியிருந்தா.... வாங்குன காசுக்கு வேலை பாப்பானுங்கள்ல... எனக்கு அரசல் புரசலா ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்... உங்கிட்ட சொல்ல வேண்டாம் பாத்துக்கலாம்ன்னு இருந்தேன்... ஆனா உனக்குப் போன் பண்ணிட்டு வச்சதும் இந்தச் செய்தி வந்தாச்சு... இனி நாம கவனமா இருக்கணும்... தனியா எங்கயும் போகாத... "

"இப்ப அக்கா வீட்டுக்குப் போறேன்..."

"அங்கெல்லாம் ஒண்னும் போக வேண்டாம்.... சொன்னாக் கேளு..."

"அடப்போங்கடா... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயி... எப்ப போகணுமின்னு இருக்கோ அன்னைக்கு போயித்தானே ஆகணும்... அடச்சி வச்சா போற உசிரு போகாதா என்ன... அக்கா வீட்டுக்குப் போகலைன்னா அம்மாவுக்கு யார் பதில் சொல்வா..."

"சரி நாங்களும் வாறோம்... அப்படியே மச்சானையும் பாத்துட்டு வரலாம்... அப்புறம் பேசாம திருப்பூர் பக்கம் சேவியர்கிட்ட போயிக்கிட்டு கரஸ்ல படிடா... அதுதான் நல்லது..."

"என்னடா சொல்றே... புவி காரைக்குடியில படிக்கலாம்ன்னு சொல்லுது..."

"இங்க பாரு... ரெண்டு வருசம் இங்க இருந்து ஒரே இடத்தில படிச்சு... சண்டை சச்சரவுகள்ன்னு இல்லாம..... அங்கிட்டுப் பொயிட்டியன்னா நல்லது கெட்டதுக்கு வரும்போது அவளைப் பார்த்துக்கலாம்... அதுதான் உன்னோட உயிருக்கும் பாதுகாப்பானது. அவகிட்ட விவரமா சொல்லு புரிஞ்சிப்பா... காதல் முக்கியம்ன்னா... அந்தக் காதல் நிலைச்சிருக்க உன்னோட உயிரும் முக்கியம்.... சரி வா அக்கா வீட்டுக்குப் போகலாம்..."

அவர்களுடன் குழப்பமான மனநிலையில் அக்கா வீடு நோக்கிப் பயணித்த ராம்கி, நண்பர்கள் விவரமாக எடுத்துச் சொல்ல, மனசுக்குள் எல்லாத்தையும் பற்றி யோசித்துப் பார்த்தான். அவர்கள் சொல்வதுதான் எல்லாத்துக்கும் நல்லது என்ற அவனுக்கும் தோன்றியது. எப்படியும் புவியை நேரில் பார்த்து விவரமாச் சொல்லி புரிய வைக்கணும் என்று நினைத்துக் கொண்டவன் "நீங்க சொல்ற மாதிரி செய்யிறதுதான் சரியின்னு படுதுடா...." என்றான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 25 மார்ச், 2014

மனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி

(அன்பு மகளுக்காக)

களைப் பெற்ற அப்பாவாய் சந்தோஷிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானோர் விரும்புவர். மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றால் கணவனுக்கு பெண் குழந்தை பிறந்தால் நல்லது என்று தோன்றும். ஒத்த அலைவரிசை என்பது அற்பமாகத்தான் அமையும். அப்படி ஒரு ஒத்த அலைவரிசையில் நாங்கள் இருவரும் விரும்பியது பெண் குழந்தையைதான். எங்கள் மகளுக்கு அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் போதே பெயர் எல்லாம் தேர்வு செய்து வைத்துவிட்டோம். எண் கணிதப்படி எல்லாம் பெயர் தேர்வு செய்யவில்லை எங்கள் இருவரின் மனம் பொருந்தி வந்த பெயரையே மகளின் பெயராக தேர்வு செய்தோம்.

மதுரையில் பூமா மருத்துவமனையில் மனைவிக்கு லேசான வலி வந்ததும் சேர்த்து விட்டோம். இன்னும் வலி சரியாக வரவில்லை காலையில்தான் நல்லா வலி வரும் என்று சொல்லி இட்லி சாப்பிடச் சொன்ன மருத்துவர் அடுத்த சில நிமிடங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அவசரப்படுத்தி ஸ்கேன் எடுத்து உடனே ஆபரேசன் பண்ண வேண்டும் என்ற போது பட்ட வேதனையை இங்கு எழுத்தில் வடிப்பது என்பது இயலாத காரியம். எல்லோரும் ஒத்துக் கொண்டாலும் ஆளுக்கு ஒரு பக்கம் அழுது கொண்டிருக்கிறார்கள். என் மனைவி மாமாவின் செல்லம். ஹோட்டலுக்கு போய் விட்டு வருகிறேன் என்று அப்போதுதான் ஹோட்டலுக்குப் போன மாமா செய்தி அறிந்ததும் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓடோடி வந்தார். 

மனைவியை உள்ளே கொண்டு செல்ல அங்கிருந்த மாடிப்படிகளில் அமர்ந்து தனியாளாய் கண்ணீருடன் நிமிடங்களைக் கடத்தினேன். சில நிமிட வேதனை கடத்தலுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார்கள். யாருமே குழந்தையைப் பார்க்கும் எண்ணத்தில் இல்லை. பெற்றவர்களோ மகளுக்கு என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். நானோ மாடிப்படியிலே நிற்கிறேன் அழுகையோடு... உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க... குழந்தையைப் போயிப் பாருங்க என்றதும் எல்லாரும் சென்றார்கள். எனக்குள்ள குழந்தையைவிட என் மூத்த குழந்தையைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இமயமலையாக உயர்ந்து நின்றது. மனைவியைப் பார்த்த பின்னே என் அன்பு மகளைப் பார்த்தேன்.

அழகிய பூவாய் துண்டில் சுற்றித் தூக்கிய அந்த முதல் ஸ்பரிசம் எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. தலை நிற்கவில்லை பார்த்துத் தூக்க வேண்டும் என்று சொன்னாலும் எப்பவும் தூக்கியே வைத்திருப்பேன். வளர வளர அப்பாவின் தங்க மீனானாள். நானோ அன்பு மகளின் செல்ல நாய்க்குட்டி ஆனேன். தத்தக்க பித்தக்க என்று நடக்க ஆரம்பித்த நேரம் கல்லூரிக்குக் கிளம்பும் போது பின்னாலே தொத்தி வர எனது வண்டியில் வைத்து ஒரு சுற்று சுற்றி விட்டுவிட்டுப் போக வேண்டும். மதியம் வரும் போது வாசலில் வண்டியை நிறுத்தும் போது சூடான சிமெண்ட் தரையில் குதித்து ஓடி வருவார்.

படுக்கும் போதும் அப்பா மேல்தான் படுக்க வேண்டும்.... குளிக்க வைக்க... பாத்ரூம் போக வைக்க... என எல்லாம் அப்பாவே செய்ய வேண்டும். சென்னையில் தினமணியில் இருந்த போது எல்.கே.ஜி. வேலம்மாளில் சேர்த்திருந்தோம். இரவுப் பணி முடித்து அதிகாலை வந்து படுப்பேன். பள்ளிக்குப் போக அம்மா கிளப்பினால் மெதுவாக என்னருகில் வந்து அப்பா... அப்பா என்று எழுப்ப ஆரம்பித்து விடுவார். அப்பா இப்பத்தாம்மா வந்தார் தூங்கட்டும் என்றாலும் கேட்காமல் உரசி உரசியே எழுப்பிவிடுவார். பின்னர் குளிக்க வைத்து பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துதான் தூக்கத்தைத் தொடருவேன்.

மூச்சுக்கு மூச்சு அப்பா... அப்பா... காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அப்பா... அப்பா... இப்போது வீட்டில் அக்காளுக்கும் தம்பிக்கும் அதிகமான சொற்போர் நடப்பது அப்பா புராணத்தால்தான்.... மே மாதம் வருகிறேன் என்று சொன்னதும் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டார். அம்மா விழுந்து விழுந்து பார்த்தாலும் சொல்லும் செயலும் அப்பா என்றே பூத்துக் காத்திருக்கிறது எனது அன்பு ரோஜா. கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறேன் என்று சொன்னால் போதும் நா எப்பவும் உங்ககிட்டதான் இருப்பேன் என்று அழுக ஆரம்பித்து விடுவார். 

பள்ளி விடுமுறை என்பதால் மதுரைக்குச் சென்று விட்டார்கள். ஐயா வீட்டுக்குப் போனாலே ஆட்டம் போடத்தான் நேரம் இருக்கும் என்பதால் நானும் போன் செய்யவில்லை. நேற்று போன் பண்ணியபோது பேசிய மகள் ரெண்டு நாளாச்சுப்பா ஏன் பேசவேயில்லை என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார். பிறந்த நாளுக்கு என்னடா வேணும் என்று கேட்டதற்கு எதுவுமே வேண்டாம் நீங்க வந்தாலே பிறந்தநாள் சூப்பரா இருக்கும்ப்பா என்று சொல்லிவிட்டு நீங்க எடுத்துக் கொடுக்கிற டிரஸ்தான் பிறந்த நாளுக்கு வேண்டும் என்று சொல்லி உறவினர் போகும் போது கொடுத்தும் விட்டாச்சு.

காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது. நேற்றுத்தான் அந்த முதல் ஸ்பரிசத்தை அனுபவித்தது போல் இருக்கிறது. அதற்குள் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. ஆம்... நாளை எங்கள் அன்பு மகளுக்குப் பிறந்தநாள்... எங்களுக்கு இறைவன் மிகப்பெரிய சந்தோஷத்தை... எங்களின் முதல் சொத்தைக் கொடுத்த நாள்... வேசமில்லா பாசமும் எதிர்பார்ப்பில்லாத நேசமுமாகப் போகும் எங்கள் வாழ்வு இப்படியே கழிய வேண்டும்... எத்தனையோ கஷ்டமான நேரங்களில் எல்லாம் எங்களை விழாமல் எழ வைத்ததவர் எங்கள் அன்பு மகள்.

இந்த நாளில் நான் என்ன சொல்லப் போகிறேன்... எப்பவும் சந்தோஷமா இருடா என்பதைத் தவிர்... நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் அன்புச் செல்லத்தை...

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 மார்ச், 2014

சில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா?

டந்த வாரத்தில் ஒரு சில காரணங்களால் இணையத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. எழுதும் எண்ணமும் கொஞ்சமும் இல்லை. நண்பர்களின் எழுத்துக்களையும் வாசிக்கவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் சில தமிழ்ப்படங்களைப் பார்த்தேன். அவற்றின் விமர்சனமாக அல்லாமல் சும்மா ஒரு பதிவாக பகிரலாமே என்று எழுத ஆரம்பித்ததுதான் இந்தப் பகிர்வு. இல்லைன்னா ஆளைக் காணோம் கடையை மூடிட்டான்னு நினைச்சிருவீங்கன்னுதான் இந்தப் பகிர்வு. தொடர்கதையைக் கூட கடந்த வாரத்தில் தொடர முடியவில்லை. அதைப் படிக்கும் ஒரு சிலரும் சரக்கு தீர்ந்து போச்சு போலன்னு நினைச்சிடக்கூடாது பாருங்க... அதனால இந்த வாரம் எப்படியும் அதைத் தொடரணும்... சரி வாங்க சினிமாவுக்குள்ள போவோம்.

நினைத்தது யாரோ


நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த படம். காதலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் ஒரே வீட்டில் தங்கி காதலை எதிர்க்கிறார்கள். சினிமா இயக்குநர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் இடத்தில் அவரது காதல் கதையை இவர்களிடம் சொல்ல முடிவில் இவர்கள் மனம் மாறினார்களா என்பதை விக்ரமன் தன் பாணியில் சொல்லியிருக்கிறார். புதுமுகங்கள் இயக்குநர் சொல்லியதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் இயக்குநராக வரும் ரெஜித் மேனன் நல்ல தேர்வு. சமீப காலமாக தமிழ் சினிமாவில் தாடி, மீசையுடன் பரட்டைத் தலையோடு அறிமுகமாகும் நாயகர்களில் அழகாக காட்டப்பட்டிருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். நாயகி நிமிஷா அழகாக இருக்கிறார். அக்மார்க் விக்ரமன் நாயகியாக படத்தில் வந்து போகிறார். பாடல்கள் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை. படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்குநர்கள், சூர்யா, விமல் எல்லாம் வருகிறார்கள்.


தெகிடி



குறும்படம் இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ரமேஷின் முதல் படைப்பு இந்த தெகிடி. க்ரைம் கதையை காதல் கலந்து முற்றிலும் புதுமையான வடிவத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். கிரிமினாலஜி படித்த நாயகனுக்கு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க விரும்பிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கொடுக்கும் வேலைகளைச் சிறப்பாகச் செய்கிறார். இவர் யாரைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறாரோ அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கிடையே தான் இவரைப் பற்றித்தான் விவரம் சேகரிக்கப் போகிறோம் என்று தெரியாமல் காதலில் விழ, அவரைக் காப்பாற்ற போராடுகிறார். போலீஸூக்குப் போனாலும் நாயகன் தானே எல்லாவற்றையும் செய்வது ஏற்புடையதாக இல்லை. நல்ல திரில்லர் கதை, வித்தியாசமான கதைக்களம் இருந்தும் படத்தில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போவது சலிப்பாக இருக்கிறது. முடிவில் முக்கிய வில்லன் இன்னும் இருக்கிறான் என்பது போல் அவனது விசிட்டிங் கார்டைக் காட்டுவது இரண்டாம் பாகத்திற்கான வாடிவாசலாகத் தெரிகிறது. இருந்தும் படம் விறுவிறுப்புக் குறைந்தாலும் ஏமாற்றவில்லை. நாயகன் அசோக் செல்வன் சிறப்பாகச் செய்திருக்கிறார். நண்பராக வரும் காளி நகைச்சுவை கலந்து கலக்கியிருக்கிறார். நாயகி ஜனனிக்கு வந்து போகும் வேலை மட்டுமே. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.


ரம்மி


அடியே என்ன ராகம் நீ பாடுறேங்கிற பாடலால் என்னைக் கவர்ந்த படம். படம் நல்லாயில்லை என்ற விமர்சனங்கள் நட்பு வட்டத்தில் இருந்து வந்தாலும் பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் கதையில் இரு நாயகர்கள். இருவருக்கும் வேறு வேறு சூழல், காதலை எதிர்க்கும் கிராமத்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு காதலிக்கவும் செய்கிறார்கள். காதலித்தால் உயிரை எடுக்கும் தலைவரின் மகளைக் காதலித்ததால் உயிரை விடுகிறான் ஒருவன். தன் தந்தையையே கழுத்தறுக்கிறாள் மகள். விஜய் சேதுபதியின் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே போகிறது. இனிகோ கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். நாயகிகளும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். சூரி இதில் ரொம்பப் பேசிக் கொல்லவில்லை. நகைச்சுவைக்கும் பஞ்சம்தான். தலைவரின் மகள் என்று ஆரம்பக் காட்சிகளில் காட்டவேயில்லை ஏன்? ஊரில் காதலிப்பவர்களை எதிர்க்கும் தலைவரின் மகளுடன் ஒரே கிணற்றில் குளிக்கும் போது யாருமே பார்க்காதது ஏன்? என படத்தில் ஏகப்பட்ட ஏன்கள்... லாஜிக் இல்லாத காட்சிகள் இருப்பதால் படம் பார்ப்பவர்களை கவரவில்லை. ஆனால் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. தென் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு நல்ல கதைகளைச் சொல்லமுடியும் என்ற போதிலும் மதுரைக்கு அந்தப் பக்கம் என்றாலே அரிவாளும் கொலைகளும் மட்டுமே காட்டப்படுவது இதிலும் தொடர்கிறது என்பது வேதனையான விஷயமே.

இன்றிரவு வட்டியும் முதலும் ராஜூ முருகனின் ....


பார்த்துவிட்டு விரைவில் பேசலாம்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 மார்ச், 2014

மனசு பேசுகிறது : சிட்டுக்குருவி


ன்றைக்கு சிட்டுக்குருவிகள் தினமாம். நம்ம ஊரில் சிட்டுக்குருவிகள் என்பது அரிதாகிவிட்டது. அதற்கு செல்போன் டவர்களே காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கின்றன. எங்கள் அறைச் சன்னல் பக்கமாக புறாக்களும் சிட்டுக்குருவிகளும் தினமும் வந்தமர்கின்றன.

எங்க ஊரில் சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கும். ஆனால் இப்போது அரிதாகிவிட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னர் இருந்த நாச்சியம்மத்தா கோவிலின் இடிந்த சுவரில் இருக்கும் ஓட்டைக்குள் கூடு கட்டி குடி இருந்தது. எப்போதும் தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்க்கும். திடீரென விருட்டென்று பறக்கும். எப்போதும் அந்த இடத்தில் பத்து இருபது சிட்டுக்குருவிகள் இருந்து கொண்டே இருக்கும்.



எங்கள் வீட்டிற்குள்ளும் விருட்... விருட்டென்று பறந்து வரும். நாங்கள் சாப்பிடும் போது எங்கள் அருகில் வந்து அமர்ந்து மெதுவாக குதித்துக் குதித்து அருகாமையில் வந்து சப்தம் இடும். சாப்பிடும் சோற்றை கொஞ்சம் அள்ளி வீசினால் குதித்துப் பறந்து மீண்டும் அருகே அமர்ந்து சோற்றைக் கொறிக்க ஆரம்பித்துவிடும். ஒரு கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கும்.



தேன் சிட்டு, பூஞ்சிட்டு என்ற வகைகளும் இதில் உண்டு. சின்னச் சின்னதாய் அழகாய் இருக்கும் சிட்டுக் குருவிகள் மழைக்காலங்களில் ஈசல் பிடித்துச் சாப்பிடுவதற்காக எங்கெல்லாம் ஈசப்புற்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் பறந்து பறந்து அமரும். நடந்து இலக்கை அடைவது கிடையாது. சாய்வாக அமர்ந்தபடி குதித்துக் குதித்துத்தான் இலக்கை அடையும். அப்படி குதிப்பதும் அது கொடுக்கும் சப்தமும் மிக அழகாக இருக்கும்.



சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பார்க்கும் போது எங்கள் வீட்டில் எங்களுடன் சிட்டுக்குருவிகளும் சாப்பிட நினைவுகள் மன்சுக்குள் சந்தோஷத்தை மீட்டிப் பார்க்கச் செய்கின்றன.


வீடியோ தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 17 மார்ச், 2014

நண்பேன்டா : முத்தரசு பாண்டியன்


னது நட்பின் வரிசையில் அடுத்து வருபவன் முத்தரசு பாண்டியன். தேவகோட்டைக்கு அருகில் பூங்குடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் மற்றும் இவன் ஒரு குழுவாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குழுவில் இணைந்தாலும் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் அளவுக்கும் இவன் எங்களுடன் ஒட்டவில்லை. 

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் ஒட்ட ஆரம்பித்தவன் பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைப் பயணத்தில் இணைந்து கொண்டான். கலைஞரின் மேல் தீவிரப் பற்றுக் கொண்டவன். திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து மணிக்கணக்கில் பேசுவான். எப்பவும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அந்தச் சட்டப்படி இந்தச் சட்டப்படின்னு பாயிண்ட் எடுத்துத்தான் பேசுவான். அதனால்தான் இன்றைக்கு தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான்.

எங்கள் நட்பில் எல்லாருடைய வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். ஏனோ தெரியவில்லை ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் இவ்ன் வீட்டிற்குச் செல்லவில்லை. காலையும் மாலையும் நாங்கள் அனைவரும் கூட்டாகச் செல்லும் போது இவனையும் திருநாவையும் லேசாக மோதவிட்டு விட்டால் போதும் கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வரை எங்களுக்கு எந்த அலுப்பும் தெரியாது.

திருநாவுக்கு கருணாநிதியை அறவே பிடிக்காது. பக்கா அதிமுகக்காரன். இவனோ திமுக பேர்வழி அப்புறம் என்ன சொல்லவா வேண்டும். ஆள் குட்டையாகத்தான் இருப்பான். கையை ஆட்டி ஆட்டி 1967 என்று ஆரம்பித்தால் போதும் எத்தனையோ விவரங்களை அள்ளி விளாசுவான். திருநாவும் இதற்குச் சளைத்தவன் இல்லை... இவன் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கத்துக்கும் திருப்பி பதில் கொடுத்தபடி வருவான். எங்களுக்கு எல்லாம் ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேலை.

இவனும் ராமகிருஷ்ணனும்தான் எப்பவும் பேசிக்கொண்டே இருப்பார்கள். வகுப்பறையில் இருந்து ஒரு பிரிவேளை கூட வெளியில் வரமாட்டான். மற்ற வகுப்புக்களிலும் அதிக நண்பர்கள் வைத்துக் கொள்ளமாட்டான். எதிலும் அலட்டிக் கொள்ளமாட்டான். ம்... அப்படியா என்று சொல்வதுடன் சரி. பிரான்சிஸ் உடல்நிலை சரியில்லாத போது அவனுக்காக.... அவன் சரியாக வேண்டும் என்பதால் பெரும்பாலான நேரங்களை அவன் வீட்டில் கழித்தவன்.

படிப்பதிலும் சரி.... பொது அறிவிலும் சரி இவனுக்கு நிகர் இவனே. யாருடனும் அதிகம் பேசுவதில்லை... கல்லூரியில் அடிதடி சண்டை என்றாலே எங்கள் அணி பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பதுடன் சரி... வகுப்பறை வாசலில் நின்றால் கூட எங்க பேராசிரியர் கே.வி.எஸ். சார் என்ன இங்க எதுக்கு நிக்கிறீங்க... வீட்டுக்குப் போங்க... என்று அன்பாக விரட்டி விடுவார். சார் விரட்டும் முன்னரே வாங்கய்யா போவோம்... இங்க நின்னு என்ன பண்ணப் போறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

துறைத்தலைவன் தேர்தல் என்பது எங்கள் கல்லூரியில் நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை இல்லை. மூன்றாம் ஆண்டில்தான் தேர்தல் வைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது. எனவே சேர்மன் தேர்தல் எல்லாம் இல்லை துறைத்தலைவர் தேர்தல் மட்டும் வைக்கப்படும் எனச் சொல்ல, எங்கள் வகுப்பில் நாங்கள் தனியாக இருப்போம். இன்னும் இரண்டு குழுவும் இருந்தது. அவர்களுக்குள் எப்பவும் பாம்பும் கீரியும்தான். நாங்கள் யாரை ஆதரிக்கிறோமோ அவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை. எங்களை இருவரும் கவிழ்க்கப் பார்க்க, நாம் ஏன் ரவுடிக் குரூப்புக்குப் பின்னால நிக்கணும்... நம்மள்ல ஒருத்தர் நிக்கலாம் என ராம்கிருஷ்ணனை முன்மொழிந்தவன் இவன்தான்.

சென்ற முறை சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் தம்பி ஒருத்தனைப் பார்க்கப்போகும் போது இவனைப் பார்த்தேன். நீண்ட நேரம் பேசினான். நீதிபதி ஆகணும்டா... அதுக்காகத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்படியும் ஆயிடுவேன் என்று சொன்னான். அப்படி அவன் ஆகும் பட்சத்தில் மிகச் சிறந்த நீதிபதியாகத் திகழ்வான் என்பதில் எனக்கு நூறு சதவிகித நம்பிக்கை உண்டு.

நண்பனின் எண்ணம் நிறைவேற உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

நட்பு இன்னும் உலா வரும்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 15 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 56

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                      பகுதி-50     பகுதி-51    பகுதி-52    பகுதி-53     பகுதி-54

56.  வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுதா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். அந்தப் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமா என்று மகளிடம் கேட்கிறாள்.

இனி...


மூச்சுக்கு முன்னூறு தடவை புவி புவியின்னு சொல்றானே அவனைத்தான் என்றதும் புவனா பதிலேதும் சொல்லாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

"என்னம்மா...ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறே..?"

"எனக்கும் பிடிக்கும்... ஆமா அதுக்கு என்னம்மா இப்போ...?"

"இல்ல அவன்தான் பேசினான்... உன்னைய படிக்க வக்கச் சொன்னான்..."

"ம்..."

"நீ தொடர்ந்து படிக்கணுமாம்... அதுக்காக அவன் உங்கிட்ட பழகுறதைக்கூட விட்டுடுறானாம்..."

புவனாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மாவை கலவரமாகப் பார்த்தாள்.

"நான் சொல்லலைம்மா... அவன்தான் சொன்னான்... புவிய படிக்க வையுங்க... என்னால ஒரு பிரச்சினையும் வராதுன்னு..."

"இது ராம் சொன்னாரா... இல்ல நீங்களா சொல்றீங்களாம்மா?"

"என்னம்மா இது... அவன் சொன்னதைத்தான் நான் சொல்றேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா.... இப்பத்தான் அவன் பேசினான்... ஆரம்பத்துல கத்துன என்னையே பேச்சால மயக்கிட்டான்..."

"நம்பாம இல்லம்மா... ராம் இப்படி சொன்னாரான்னுதான் டவுட்டா இருக்கு..."

"வேணுன்னா போன் பண்ணிக் கேளு..."

"அம்மா...." அதிர்ச்சியாய் அம்மாவைப் பார்த்தாள்.

"என்னடா யாருடி போன்ல.... அவன் எதுக்குடி உனக்கு போன் பண்ணுறான்... அப்படியிப்படின்னு கத்துற அம்மா போன் பண்ணச் சொல்றாளேன்னு அதிர்ச்சியா இருக்கா?"

"...."

"தாராளமாப் போன் பண்ணு... அவனோட பேச்சுல உண்மை இருந்துச்சு.... ஆனா நீ பேசுறதுக்கு முன்னால ஒண்ணே ஒண்ணு... உன்னோட படிப்பைத் தொடரணும்ன்னா நீ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்... படிச்சு முடிக்கிற வரைக்கும் அந்தப் பையனைப் பாக்க மாட்டேன்... பேச மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்..."

"அம்மா..."

"என்ன கத்துறே... உன்னைய படிக்க அனுப்பிட்டு நீ அங்க அவன் கூட பேசிக்கிட்டு இருந்தே... சினிமாத் தியேட்டர்ல பாத்தோமுன்னு யாரும் சொல்லக்கூடாது பாரு...."

"அதுக்காக..."

"அவனைப் பாக்கக்கூடாதுன்னு சொல்றேன்..."

"முடியாதும்மா.... என்னால முடியாது..."

"அப்ப படிக்க முடியாது... கல்யாணந்தான்..."

"என்னம்மா மிரட்டுறீங்களா? உங்க மிரட்டல் எங்க காதலை ஒண்ணும் பண்ணாது தெரிஞ்சுக்கங்க..."

"இதுல மிரட்ட என்ன இருக்கு... அந்தப் பையன் உன்னோட படிப்புக்காக என்ன வேணுமின்னாலும் செய்யிறேன்னு சொன்னான். நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதெல்லாம் விட்டுட்டு எவனோ ஒருத்தனுக்கு உன்னைய கட்டிக் கொடுக்க நாங்க என்ன பைத்தியமா?"

"உங்க சாதியையும் கௌரவத்தையும் குப்பையில போடுங்க... எங்க மனசுக்குப் பிடிச்சிருக்கு அம்புட்டுத்தான்... ரொம்ப பாசமாப் பேசினதும் அம்மா மாறிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்... சாதியும் கௌரவமும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்துடாதும்மா... நல்ல மனசும்... நம்மளை விரும்புற மனசும் வேணும்... உங்களுக்கு வேணுமின்னா பதினெட்டு வயசுல இவர்தான் கணவன்னு ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்... ஆனா எனக்கு மனசுக்குப் பிடிச்சவன்தான் கணவனா வரணும்... அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணுமின்னாலும் போவேன்... நான் உங்க மக... உங்ககிட்ட இருக்க பிடிவாதக் குணம் எனக்குள்ளயும் இருக்கும்... அதே நேரம் அப்பாக்கிட்ட இருக்க ரவுடித்தனமும் எனக்குள்ள இருக்கு... ஞாபகம் இருக்கட்டும்..."

"என்னடி மிரட்டல் விடுறியா?" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

"இதுல மிரட்ட என்ன இருக்கு... உண்மையைச் சொன்னேன்... அவ படிக்கட்டும்... என்னால அவ படிப்பு முடியிற வரைக்கும் பிரச்சினை வராது. அதுக்கு அப்புறம் உங்க மனசுக்கு எங்களைப் பிடிச்சா சேர்த்து வையுங்கன்னு சொல்லியிருப்பார்... அதை மறைச்சு பேசுறீங்க... அம்மா... நா எவன் கூடவும் ஓடிப்போகனுமின்னு நினைக்கலை... அப்படி ஒரு கெட்ட பேர் உங்களுக்கு என்னால வராது. ஆனா ராமைத் தவிர வேற யாரைக் கட்டச் சொன்னாலும் என்னோட பொணத்தைத்தான் பாப்பீங்க..." 

"என்னடி சொன்னே...?" என்று வேகமாக எழுந்தவள் வாசலில் கணவரின் வண்டிச் சத்தம் கேட்கவும் பேசாமல் அமர்ந்தாள். புவனா அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

"என்னடா மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்கிடக்கே.... எங்கயும் சுத்தப் போகலையா?" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.

"ம் எங்க போகச்சொல்றே.. இந்த வெயில்ல... எதாவது காலேசுல இருந்து லெட்டர் வந்தாத்தானே மேக்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்..."

"ஏன்... அந்த மேனா மினுக்கிய உங்க நொய்யா வீட்டுக்கு வரச்சொல்லி கொஞ்சிக் குலாவிட்டு வரவேண்டியதுதானே..."

"அம்மா... எதுக்கு வந்ததும் வராததுமா தேவையில்லாம பேசுறீங்க... என்னோட எப்பவும் சண்டை போடணுமின்னே நிக்காதீங்கம்மா... நான் இப்போ எவளையும் பாக்கப் போகலை..."

"ம்.... அப்ப மாட்டுக்குள்ள போயித் தொலஞ்சிருந்தா நா ஒரு எட்டுப் போயி சீதையைப் பாத்துட்டு வந்திருப்பேன்... அவ கண்ணக் கசக்கிட்டு கிடக்கா... இல்ல சும்மா படுத்துக் கிடந்தவன் அங்கன போயி அவளப் பாத்துட்டு வந்திருக்கலாம். எல்லாத்தையும் நானே சுமக்கணும்... நேரா நேரத்துக்கு வடிச்சிக் கொட்டணும்... மாடு மேக்கணும்... எல்லாத்துக்கும் நானே ஓடுறேன்... இப்போத்தானே எனக்கு பதினாறு வயசாவுது..."

"காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே... போயிருப்பேனுல்ல... சொல்லாம மாட்டை அவுத்துக்கிட்டு ரொட்டு ரொட்டுன்னு ஓடுனா..."

"ஆமா நா சொல்லப்போயி கலெக்கிட்டருக்கு படிக்கிறவுகளுக்கு கவுரவக் கொறச்சலாயிட்டா.... வந்து கொட்டிக்கிட்டு மறுபடிக்கும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்க.... என்னைய சோத்துக்கு ஏவுனவளுகளை நாஞ் சோத்துக்கு ஏவணும்..."

"சாப்பிட்டு நான் போறேன்... நீங்க ஒண்ணும் போக வேணாம்... ரெஸ்ட் எடுங்க... சாயந்தரம் வந்திட்டு அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வாறேன்..."

"ஆமா ரெஸ்ட்டு எடுக்கிறாக ரெஸ்ட்டு... கட்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் எனக்கு ரெஸ்ட்டுத்தான் கொறச்சல்... நானே போறேன்... நீ முடிஞ்சா அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வா..."

"சரி..." என்று சாப்பிட ஆரம்பித்தான் போன் அடித்தது. அவனை பார்த்தபடியே நாகம்ம்மா "இந்த நேரத்துல எவுக கூப்பிடுறாக.... தொரைக்காத்தான் இருக்கும்... போயி எடு..." என்றாள்.


போனை எடுத்து "அலோ" என்றதும் எதிர்முனையில் அண்ணாத்துரை பேசினான்.

"என்னடா ஒரு போனைக்கூடக் காணோம்.. புவனா அம்மாக்கிட்ட பேசுனியா என்ன... என்னாச்சு... "

"ம்..."

"என்னடா இம்முன்னா.... என்ன அர்த்தம்... ஆமாவா இல்லையா?"

"ஆமாதான்... ஆனா இப்போ விவரமா பேசமுடியாது... அம்மா இருக்காங்க..." என்றான் மெதுவாக.

"ஓ... அப்ப சாயந்தரம் சரவணன் வீட்டுக்கு வா... பேசுவோம்... சரியா?"

"சரி.. இப்போ அக்கா வீட்டுக்குப் போறேன்... சாயந்தரம் அப்படியே வாறேன்டா..."

"சரிடா... ஆமா எப்ப அத்தானை சுளுக்கெடுக்கிறது.." 

"அக்காவை பாத்துட்டு வந்து விவரமா பேசலாம்டா" என்றபடி போனை வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

"என்னடா... என்ன மறைச்சி மறைச்சிப் பேசுறே... அவ பேசுனாளா?"

"ஐயோ இல்லம்மா.... அண்ணாத்துரை பேசினான்... அம்புட்டுத்தான்..." என்றபடி வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கிளம்பினான். அப்போது மீண்டும் போன் அடித்தது.  எடுத்த சைக்கிளை வைத்துவிட்டு வேகமாகப் போய் போனை எடுத்தான். போனில் பேசிய சரவணன் "டேய் உடனே கிளம்பி வீட்டுக்கு வா உங்கிட்ட முக்கியமாப் பேசணும்..." என்றான்.

"அப்படி என்னடா அவசரம்? அதுவும் மத்தியானத்துல..."

"போன்ல சொல்லிக்கிட்டு இருக்க முடியாது... நீ உடனே கிளம்பி வா" என்றபடி போனை வைக்க குழப்பத்துடன் சைக்கிளை எடுத்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.