மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 ஜனவரி, 2023

புத்தக விமர்சனம் : சிவமணியின் 'ஆதிராவின் மொழி'

 திராவின் மொழி-

எழுத்தாளர் சிவமணியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
சிவமணிக்குப் பிடித்த இரண்டு முக்கியமான விசயங்களில் ஒன்று எழுத்து, மற்றொன்று இளையராஜா.
அவரைப் பார்க்க வீட்டுக்குப் போனால் இளையராஜாவின் இசையோடு விடியவிடிய எழுத்தைப் பற்றியே பேசுவார்... பேசிக் கொண்டிருப்பார். இந்த முறை நாங்கள் சென்ற போது தான் புதிதாக எழுதிய சில கவிதைகளை வாசித்துக் காட்டினார். அத்தனை கவிதையும் அருமை, அழகு - அந்தக் கவிதைகள் எல்லாம் அவரின் முதல் கவிதை நூலான 'மௌனச்சிதறல்கள்' தாங்கி வந்திருந்த கவிதைகளை விட மெருகேறி இன்னும் சிறப்பாக வந்திருந்தன, அதை நாங்கள் அப்போதே சொல்லி வாழ்த்தினோம். அதுதான் அடுத்த புத்தகமாய் வரும் என்று நம்புகிறேன்.
அதேபோல் இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அவரின் முதல் சிறுகதை நூலான 'ஸ்னேஹி'யை விட மெருகேறியிருந்தனவா..? கதைகள் ஈர்த்தனவா..? தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதால் தனது எழுத்தில் - சிறுகதையில் - மாற்றம் கொண்டு வந்திருக்கிறாரா..?


ஆதிராவின் மொழியில் மொத்தம் 12 கதைகள்...
அக்கதைகளுக்காக அவர் எடுத்துக் கொண்ட களங்கள் எல்லாமே சிறப்பு.
அதிலும் குறிப்பாக சிறப்புக் குழந்தைகளுக்கான கதைக்களங்களை பெரும்பாலும் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அந்த விசயத்தில் சிவமணி அந்த களங்களில் சிறப்பான கதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். மகிழ்ச்சி.
அட்டைப் படம் இந்தப் புத்தகத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்திருப்பதும், ஒவ்வொரு கதைக்கும் படம் சேர்த்திருப்பதும் அந்தப் படங்கள் கதையை நன்கு புரிந்து சேர்க்கப்பட்டதாக இருப்பதும் சிறப்பு. அதைச் செய்த பௌர்ணமி கிராபிக்ஸ் ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.
இந்த புத்தகத்தில் இரண்டு அணிந்துரைகள்... இருவரும் பிரபல எழுத்தாளர்கள். சிவமணிக்காகவே வாசித்து எழுதியவர்கள் என்பதை அவர்களின் எழுத்துச் சொல்கிறது.
'எந்த அலங்காரமுமில்லாமல் சட்டென கதையைத் தொடங்கிவிடும் சிவமணியின் கதைகளுக்குள் வாசிப்பு ருசி கொண்ட எவரும் தயக்கமின்றி உள்நுழையலாம்' என்றும் 'சிவமணியின் கதை சொல்லும் முறையில் நேரடியான சொல்லாடல் இடம்பெறுகிறது. சற்றே சுற்றி வளைத்துச் சொல்லுதல், புற வர்ணனைகளோடு கதையை நீட்டித்தல் ஆகிய தன்மை இல்லை.ஒவ்வொரு கதையிலும் வாழ்வின் ஒவ்வொரு மணம்' என்றும் பால புரஸ்கார் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்கள் தனது அணிந்துரையில் சொல்லியிருக்கிறார்.
'ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்று இல்லை என்பார் சுஜாதா. இந்த பழக்கூடையில் இருக்கும் பன்னிரண்டு மாங்கனிகளும் இறுதிவரை விரும்பிச் சுவைக்கும் இனிய சுவையுடையது' என்று தனது அணிந்துரையில் எழுத்தாளர் முனைவர் ஆதிரா முல்லை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
'நிறைய வாசிக்க ஆரம்பித்து இருந்தாலும், வாசிப்பது போலவே எழுதுவதும், அதில் கரைவதும், அந்த கதாபாத்திரமாக வாழ்வதும் பெரும் போதையைத் தருவதால் எழுதுவதிலும் சரிபாதி நேரத்தைச் செலவு செய்தேன்' என்றும் 'எறும்பூர கல்லும் தேயும் என்பது போலதான் ஒரு நாள் பெரிய இலக்கை அடைவதற்கே இந்த படைப்பை உங்கள் முன்னால் வைக்கிறேன்' என்றும் இந்நூலின் ஆசிரியர் சிவமணி தனது என்னுரையில் தெரிவித்துள்ளார்.
'இனியாவின் சிரிப்பு' என்னும் முதல் கதை இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பான கதை என்று சொல்லலாம். ஒரு சிறப்புக் குழந்தையையும் அதன் மீது தீராத அன்பு கொண்டிருக்கும் தாத்தாவையும் வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையில் அந்தக் குழந்தைக்கு ஆபரேசன் செய்வதையும், எதையும் சொல்ல முடியாமல் தனக்குள்ளயே வைத்துக் கொள்ளும் அந்தக் குழந்தை அதை எப்படித் தாங்கியிருக்கும் என்பதையும் விவரித்த விதம் உண்மையில் மனதைக் கரைத்தது. இக்கதைக்காக ஆசிரியரைத் தனியாக வாழ்த்தலாம்.
அப்பாவின் ஆசைக்காக தன் ஆசைகளை எல்லாம் துறந்து வாழும் வெண்பாவுக்கு அவளின் அம்மா தன்னுடைய திறமைகளை அதே அப்பாவால் அழித்துக் கொண்டு வாழ்வது தெரிய வரும்போது என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் 'கனவுகள் ஆயிரம்'.
'ஆயிரம் காலத்துப் பயிர்' - திக்குவாயைக் காரணம் காட்டி தனக்குப் பெண் தர மறுத்ததால், அதன் பின் பத்து வருடங்களுக்கு மேல் திருமணம் செய்யாமல் இருக்கும் நாயகன் திருமணத் தகவல் மையம் வழியாக ஒரு சில பெண்களின் ஜாதகத்தைக் கொண்டு வந்து அதில் ஜாதகம் பொருத்தி வந்த ஒருத்தியுடன் வாட்ஸப் வழி பேசப்போக சில விசயங்கள் வெளிவருகிறது. அதன்பின் அவர்களது திருமணம் நடந்ததா என்பதைச் சொல்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி வித்தியாசமாக யோசிக்கும், அதைப் பற்றியே பேசும் ஒருவனை அவனின் நட்பு வட்டம் மட்டுமல்ல இந்த உலகமே பைத்தியக்காரனாய்த்தான் நினைக்கும் அப்படி ஒரு கதைக்களம்தான் 'பிரபஞ்சபித்தா'.
முளைப்பாரி - இக்கதை இன்று பல ஊர்க்களில் நடக்கும் திருவிழாப் பிரச்சினைதான். பல வருடங்களாகத் தொடரும் பிரச்சினையைக் களைய நினைக்கும் ஒருவனுக்கு அந்த ஊரிலும், குடும்பத்திலும் கிடைக்கும் பேர் என்ன என்பதைப் பற்றிப் பேசும் கதை இது.
ஒரு பெண்ணைப் பல வருடமாக அவளுக்கே தெரியாமல் அருகிலிருந்து ரசித்து, அவளின் குரலைக் கேட்டுக் காதலிக்கும் ஒருவன் அவளைச் சந்தித்து தனது காதலைச் சொல்லும் கதைதான் 'ஆதிராவின் மொழி'.
தன் கணவனுக்காகவே வாழும் நான்சி, அவளின் திறமைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வெளியில் தெரிய வர, அவளை நீ சமைத்துப் போட்டால் போதும் என அடுப்படியில் அடைத்து வைக்காமல் அவலின் திறமைகளைப் பாராட்டி அவளை மேடை ஏற்றி மகிழ்கிறான் கணவன். இந்நிலையில் அவளின் எதிர்பாராத இறப்புக்குப் பின் கணவனின் மனநிலை மனைவியை மட்டுமே சுற்றிச் சுற்றி வர, முடிவு என்னாகிறது என்பதைச் சொல்லும் கதைதான் 'அர்த்தநாரி'.
'பனிக்குடத்துப் பட்டாம்பூச்சி' - கவிதையான தலைப்பு, கனமான கதை. குழந்தை உருவானபின் அதைக் கலைக்க நினைப்பது பாவமும் கொடுமையும் என்றால் தன் வயிற்றில் ஒரு புழு பூச்சி இல்லையே எனக் குழந்தைக்காக ஏங்கித் தவிப்பது கொடும் வேதனை. நாத்தனாரின் மகள் கருவைக் கலைக்க மாத்திரை சாப்பிட்டதால் வயிற்று வலியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவளைப் பார்க்கப் போகும் கதை நாயகியின் மனநிலைதான் கதையாய் விரிகிறது. இந்தக் கதையை நான் முன்பே வாசித்த ஞாபகம் இருக்கிறது. எப்போதேனும் சிவமணி வாசிக்கக் கொடுத்திருக்கலாம்.
சூழலால் விலைமாதாக மாறிய ஒருத்தி பல வருட வேதனை வாழ்க்கைக்குப் பின் ஒரு எட்டு நாள் ஒரு வீட்டில் வந்து தங்கி, தனது மனசுக்குப் பிடித்தபடி வாழ்கிறாள். அந்த நேரத்தில் ஒரு யூடிப் சேனலுக்குத் தன்னைப் பற்றி, தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேட்டி ஒன்று கொடுக்கிறாள். அந்தப் பேட்டி வெளியாகும் அன்று அவள் அந்த வீட்டில் இல்லை... எங்கே போனாள்..? அவளின் எதிர்காலம் என்னாச்சு..? என்பதைப் பற்றிப் பேசும் கதைதான் 'அந்த 8 நாட்கள்'.
'அவளும் நானும்' - மனைவியைப் புரிந்து கொள்ளாமல் அவள் எது கேட்டாலும் முதலில் மறுத்துத் திட்டி, அதன் பின் வாங்கிக் கொடுக்கும் மனநிலை கொண்ட கணவன் ஒருவன் தங்கள் அலுவலகத்தில் நடக்கும் ஒரு மீட்டிங்கிற்குப் பின் தன் மனநிலைக்காக வருந்தி , இனியாவது அவளைப் புரிந்து வாழ வேண்டும் என நினைத்துக் காத்திருக்கும் கதை, அந்த மனைவி பயந்து பயந்து வாழப் பழகிவிட்ட நிலையில் பிரசவத்துக்காக அம்மா வீடு சென்றவள் இவனின் மனநிலை மாற்றத்தினை ஏற்று வாழப் பழகி விடுவாளா என்பதை வாசகரின் யூகத்திற்கு விட்டிருக்கும் கதை.
தன் குடும்பத்தைச் சுமக்கும் பெண்ணொருத்தி, குடும்பச் சூழலுக்காக வெளிநாடு சென்று வேலை செய்யும் போது தன்னைப் புரிந்து கொள்ளாத குடும்பம் குறித்து வருத்தி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவங்களுக்காகவே வாழ்வதைப் பற்றிப் பேசும் கதையாய் 'நீர்க்குமிழிகள்'.
வாடகை டாக்ஸி டிரைவர்கள் செய்யும் செயல்களையும், தன் வாழ்வை நேசித்து வாழக் கற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் உண்மையான கோபத்தையும் சிறப்புக் குழந்தையான அபிராமியை வைத்துச் சொல்லியிருக்கும் கதைதான் 'அபிராமி அந்தாதி'.
இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் வித்தியாசமான கதைக்களத்தில் இருப்பது சிறப்பு. இக்கதைகள் மருத்துவம், அறிவியல், உளவியல், மானுடம், சமுதாயம் எனப் - இதை ஆதிரா முல்லை அவர்களும் தனது அணிந்துரையுல் சொல்லியிருக்கிறார் - பரந்துபட்டுப் பேசியிருக்கிறது.
இப்படிப்பட்ட கதைக்களங்களை தனது சிறுகதைக்காக எடுத்துக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
'ஸ்னேஹி'யை விட இத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்ததா..?
இக்கேள்வியை எனக்குள் கேட்டபோது என் மனதிற்குள் தோன்றியதைச் சொல்வதென்றால் ஸ்னேஹியில் பல கதைகள் ரசித்து வாசிக்க வைத்தது. இதில் அது மிஸ்ஸிங். ஒவ்வொரு கதையின் கருத் தேர்வில் சிரத்தை எடுத்துக் கொண்ட எழுத்தாளர் சிவமணி அதைக் கதையாக விரிக்கும் போது இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்... ஒருமுறைக்கு இருமுறை திருத்தி எழுத்தை ரசித்து வாசிக்கும்படி மாற்றியிருக்கலாம். அடுத்த தொகுப்பு இதைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதைவிட, ஸ்னேஹியை விடச் சிறப்பாக மலர வேண்டும் என்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
முதல் கதை அத்தனை சிறப்பாய் நம்மை அந்தக் குழந்தையின் பின், தாத்தாவின் பின் இழுத்துச் செல்லும் போது அடுத்த கதை அதைத் தக்க வைக்க வேண்டுமே தவிர தகர்த்து விடக்கூடாது. இங்கே அடுத்த கதையே பக்கத்தை நகர்த்தாமல் நம்மை இழுத்து நிறுத்தப் பார்க்கிறது. அதன் பின் நல்ல கதைகள் இருந்தாலும் ரெண்டாவது கதையே தொடர்ந்து வாசிக்க விடாமல் பண்ணிவிடும் என்பதே உண்மை. இரண்டு மூன்று கதைகளாவது வாசிப்பவரை உள்ளிழுக்கும் கதையாக அமைந்தால் அடுத்தடுத்த கதைகளையும் அவர்கள் கண்டிப்பாக வாசிப்பார்கள். இதைச் சிவமணி தனது அடுத்த தொகுப்பில் கவனிக்க வேண்டும்.
'இனியாவின் சிரிப்பு', 'அர்த்தநாரி', 'பனிக்குடத்துப் பட்டாம்பூச்சி', 'அபிராமி அந்தாதி' என்னைக் கவர்ந்தது.
அடுத்த புத்தகத்தில் கதைகளின் போக்கில் இன்னும் கவனம் செலுத்தி. சிறப்பானதொரு தொகுப்பை சிவமணி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கதைகளின் களங்களுக்காக இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாக வாங்கி வாசிக்கலாம்.
இந்தப் புத்தகத்தை 'இருந்திருந்தால் என்னிடத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பி இருப்பார்' எனச் சொல்லி மறைந்த அவரின் சித்தப்பா திரு. செல்வம் அவர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார், சிறப்பு.
பாலாஜி பாஸ்கரன் அவர்களின் கேலக்ஸி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 152 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.180.
வாங்கி வாசித்து உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
நன்றி.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்த விமர்சனம்...