மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : படைப்பின் மீதான நம்பிக்கை

 பரிவை படைப்புகள்-

இந்த முறையும் நாவல்தான் வரும்ன்னு நினைச்சிருந்தேன் என்றார் நண்பர் ஒருவர். நானோ இந்த முறை இதுவே வரவேண்டாம்ன்னுதான் நான் நினைத்தேன் என்றேன் சிரித்தபடி. நீங்க வேண்டான்னாலும் உங்க நண்பர் கொண்டு வந்திருப்பார் என்று சொல்லிச் சிரித்தார். அவர் சொன்னது உண்மைதான், அதுதான் இந்த முறை நடந்தது.

ஊரில் இருக்கும் போது ஒரு மழை நாளில் பழனி புத்தகக் கண்காட்சிக்கு நான் போனபோது பேருந்து நிலையத்துக்கு நண்பரின் ஆக்டிவாவில் வந்து கூட்டிச் சென்றார் தசரதன். பெரும் மழையினூடே ஒரிருவர் வந்து புத்தகங்களைப் பார்த்துச் சென்று கொண்டிருக்க, நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது 'அண்ணே டிசம்பருக்கு ஒரு நாவல் தயாரா வச்சிக்கங்க' என்று சொல்லித்தான் அன்று மதியச் சாப்பாட்டுக்குப் பின் என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டார். 


மூச்சுக்கு முன்னூறு தடவை 'அப்பா முருகா' என்று சொல்லும் நான் அப்போதைய மனநிலையில் மலை அடிவாரத்தில் புத்தகக் கண்காட்சி என்றாலும் முருகனைத் தரிசிக்காமல்தான் திரும்பினேன். 'அண்ணே சாமி கும்பிட்டுப் போகலாமே' என்று தசரதன் சொன்ன போது சிரித்துவிட்டு அப்புறம் பாத்துக்கலாம் எனச் சொல்லி வந்தவன் ஊரில் ஆறு மாதம் இருந்தும், இரண்டு மூன்று முறை மகளைக் கூட்டிக் கொண்டு கோயம்புத்தூருக்குப் பயணித்த போதும் முருகனை ஒருமுறை கூட தரிசிக்க பழனியில் இறங்கவில்லை.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரெண்டு மாத விடுமுறை என அனுப்பப்பட்டவன் ஒன்பது மாதங்களுக்கு மேல் ( ஊரில் ஆறு மாதம் + இங்கு மூன்று மாதம் ) மிகவும் கடினமான வாழ்க்கையை எதிர்கொண்டு, இன்னமும் தேடல் தொடர்ந்தாலும் இப்போதைக்கு இதுவே ஆசுவாசமெனக் கடந்த வாரத்தில்தான் என் சகஜ நிலைக்கு மாறியிருக்கிறேன் என்ற நிலையில் இந்த வருடத்தில் நான் நாவல் எழுதும் மனநிலையில் எல்லாம் இல்லை என்பதால் போன வருடத்தின் இறுதியில் ஆரம்பித்து ரெண்டு அத்தியாயம் எழுதியதுடன் கிடக்கும் அந்த நாவலைக்கூட என்னால் தொடர்ந்து எழுதமுடியவில்லை என்பதே உண்மை.

இப்படிப்பட்ட சூழலில் புத்தகம் வந்தால் அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டு இருந்தான், ஆனா புத்தகம் மட்டும் கொண்டு வந்திருக்கான் எனப் பலர் சொல்லக்கூடும் என்பதால்தான் தசரதனிடம் வேண்டாமெனச் சொன்னேன். 'அண்ணே நாந்தான் புத்தகம் கொண்டு வரப் போறேன்... உனக்கென்ன பிரச்சினை... பிரச்சினை இல்லாத மனிதன் இல்லண்ணே.... அது வரும்... போகும்... அதுக்காக இது வேணான்னு முடிவு பண்ணாதே...' என்றார்.  

சரி யோசிப்போம் எனச் சொல்லிச் சில நாளில் இப்போதைக்கு நாவல் எதுவும் இல்லை... அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொன்னதும் 'அதான் நிறையச் சிறுகதை வச்சிருக்கேயில்ல அதுல எனக்கு நல்லதா பனிரெண்டு கதை போதும்... இப்ப அதைக் கொண்டு வருவோம்... அடுத்து நாவல் கொண்டு வரலாம்' எனச் சொல்லி, என்னிடமிருந்து கதைகளை வாங்கினார்.

'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்புக்கு நான் முப்பத்தி ஆறு கதைகள் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். அதில் அவர் கலவையாய் பனிரெண்டு கதைகளைத் தேர்வு செய்து புத்தகம் கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் இந்த முறை இருபத்து மூன்று கதைகளை அனுப்பி, உங்களுக்குப் பிடித்த பனிரெண்டு கதைகளை எடுத்துக்கங்க என்று சொல்லியிருந்தேன். வேலைகளுக்கு இடையே வாசித்துவிட்டு 'அண்ணே இருபத்தி இரண்டு கதைகள் எடுத்திருக்கிறேன். ஒரு கதை மட்டும் இதுகளோட ஒட்டாம இருக்கதால வேண்டான்னு முடிவு பண்ணியிருக்கேன்' என்று சொன்னார்.

அனுப்பிய இருபத்து மூன்றில் ஒன்று தவிர மற்றதெல்லாம் எடுத்திருக்கிறேன் என்றதும் அதிலிருந்து சிறந்த பனிரெண்டு எடுப்பார் என்று பார்த்தால் 'அண்ணே... இருபத்தி இரண்டு கதையும் வருது...' என்றார். உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட இவருக்கு என் மீது அல்லது என் எழுத்து மீது அப்படியென்ன நம்பிக்கை இருக்கிறது என்ற ஆச்சர்யமே எனக்குள் எழுந்தது, இந்த ஆச்சர்யம் எனக்கு 'எதிர்சேவை' வந்தப்பவே தோன்றியதுதான். ஏன்னா அன்னைக்கு நான் யாருன்னே தெரியாத நிலையில் பிரபு சொன்னதன் பேரில் கதைகளை வாசித்துப் புத்தகம் கொண்டு வாரேன் என்ற முடிவுக்கு வந்தவர்தான் அவர்.

சென்ற ஆண்டு 'திருவிழா' நாவலை கொண்டு வரும் முடிவுக்குப் பின் அதைப் பிடிஎப்பாக மாற்றிய போது 650 பக்கங்களுக்கு மேல் இருந்தது. இவ்வளவு பெரிய புத்தகம் வேண்டாமே என முடிவு செய்து அதிலிருந்து அம்மா - மகன் பற்றிய பகுதிகளை மொத்தமாக நீக்கி, நூறு பக்கத்துக்கு மேல் குறைத்தாலும் கிட்டத்தட்ட 550 பக்கங்கள் இருந்தது. இதுக்கு மேல குறைக்க முடியாது... இவ்வளவு பெரிய புத்தகமெல்லாம் போட்டால் அது உங்களுக்குத்தான் கஷ்டம் எனச் சொன்னதும் அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புத்தகத்தைக் கொண்டு வந்தார். 

புத்தகம் விற்பனைக்கு வந்தபோது இந்தப் புத்தகத்தைப் படித்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் புத்தக விலையின் இருமடங்குக்கு கலக்கல் ட்ரீம்ஸின் வேறு புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்தார். அப்போதே அவர் என் எழுத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை புரிந்ததுதான் என்றாலும் இந்த முறையும் இருபத்தி இரண்டு கதைகளைப் புத்தகமாக்குகிறேன் என்ற போது கிட்டத்தட்ட 250 பக்கங்களைத் தொடுமே என யோசித்தேன். அவரோ அதை நான் பார்த்துக்கிறேன் என்ற அதே வார்த்தையைச் சொல்லி, அட்டைப்படமும் தயார் செய்து அடுத்தகட்ட வேலைகளில் இறங்கிவிட்டார்.

இருபத்தி இரண்டு கதைகளுடன் 'பரிவை படைப்புகள்' சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருகிறது.

நம்பிக்கைக்கு நன்றி தசரதன்.

#பரிவை_படைப்புகள்
#கலக்கல்_ட்ரீம்ஸ்
#சென்னைப்_புத்தகக்_கண்காட்சி_2023
#parivai_padaippugal
#kalakkal_Dreams
#Chennai_Book_Fair_2023

-பரிவை சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  உங்கள் இந்த புதிய புத்தகமும் விறபனையில் வீர நடை போடட்டும்.  முருகன் அருள்.

Thulasidharan thilaiakathu சொன்னது…

வாவ்! குமார் உங்களுக்கு இப்படி ஒரு நண்பர், உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கையும் உங்கள் மீது அன்பும் உள்ள நண்பர் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள்!

உங்கள் வேதனைகள் யாவும் சந்தோஷ மலர்களாய் விரியும்! இன்னும் பல படைப்புகள் வெளி வர வேண்டும் குமார். வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி தனபாலன் அண்ணா.

**

நன்றி ஸ்ரீராம் அண்ணா.

**

நன்றி கீதாக்கா.
ஆம்... எனக்கு வாய்த்த சிறந்த நண்பர் அவர். நான் விட்டாலும் அவர் விடமாட்டார் என்பதற்கு உதாரணம் இந்த முறை புத்தகம் கொண்டு வந்தது.