அப்பன்-
இடுப்புக்குக் கீழ் செயல்படாத உடம்போடு, கட்டிலுக்கு நேர் மேலே கட்டப்பட்டிருக்கும் கயிரைப் பிடித்து எழுந்து தன்னைத் தலையணையில் சாய்த்துக் கொள்ளக் கூட அடுத்தவர் உதவி தேவைப்படும் நிலையில் கூட தனது அதிகாரத்தை, குடும்பத்தினர் மீதான தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள, எல்லாரையும் தீட்டித் தீர்க்கும் அப்பன் இட்டி (அலஞ்சியர் லே லோபஸ்) எப்போது சாவான் எனக் குடும்பத்தினர் மட்டுமின்றி ஊரே காத்துக் கொண்டிருப்பதுடன் அவனை எப்படிச் சாகடிக்கலாம் என்றும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு ஊரே இத்தனை வன்மத்துடன் ஒருவன் சாவுக்காக காத்திருக்கிறது என்றால் இளமையில் அவன் படுத்தியபாடு அப்படி.
இட்டி தனது இளம் வயதில் ஊருக்குள் மன்மதனாய் திரிந்தவன், பல குடும்பத்துப் பெண்களை தன் வலைக்குள் விழ வைத்தவன், ஊருக்குள் பலருக்கு அவன்தான் அப்பனாக இருக்கக் கூடும் என்ற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அவனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் ஜெயிலில் இருக்கிறான். தன்னால் எழ முடியாத நிலையிலும் ஆட்டம் போடுபவன் ஜெயிலில் இருப்பவன் வெளியில் வந்துவிட்டான் என்றதும் உயிர் பயத்தில் நடுங்க ஆரம்பித்து விடுகிறான்.
அப்பனால் தன் குடும்பம் ஊருக்குள் பட்டுக்கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து விடுபடத் துடிக்கும் மகன், ஒரு கட்டத்தில் அவரைக் கொன்று விட நினைப்பது, அவரைக் கொன்றுவிடலாம் என ஊரார் சொல்லும் போது அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தவிப்பது, இறுதியில் அவரைக் காப்பாற்ற நினைப்பது, தன் மீது நேசம் வைத்திருக்கும் அம்மா தன்னை வெறுக்கும் போது வேதனையில் தவிப்பது என சன்னி வெய்ன் தனது பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
அப்பாவைப் பார்க்க அம்மா வீட்டுக்கு வரும்போது தனது அண்ணி நான் அம்மா வீட்டுக்குப் போகணும் அதான் நீ வந்துட்டியல்ல நீ பாத்துக்க எனச் சொன்னதும் நான் இங்க ஓய்வெடுக்கத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்வதுடன் அப்பாவின் சொத்தை அடைய நினைத்து கணவனையும் வரச் சொல்லி அழைப்பதுடன் ஒரு கட்டத்தில் பயந்து குடும்பத்துடன் வீட்டை விட்டு ஓடும் மகளாய் வரும் கிரேஸ் ஆன்டணி கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கிறார்.
மாமியார் மெச்சும் மருமகளாய் வீட்டுக்குள் - பெரும்பாலும் அடுப்படிக்குள் - இருக்கும் மருமகளாய் அனன்யா நடித்திருக்கிறார்.
எனது சொத்து உங்களுக்கு வேண்டுமென்றால் தனது வீட்டுக்கு எதிரே இருக்கும் தன் சின்னவீடு இங்கு வந்து எனக்குப் பணிவிடை செய்ய வேண்டும் எனச் சொல்லி, அவளை வெறுக்கும் வீட்டாரை விட்டே அழைத்து வர வைத்து அதன்பின் இட்டி போடும் ஆட்டம்தான் படத்தை சிறப்பாக்கியிருக்கும், அதேபோல் அவரின் மனம் கவர்ந்தவளாய் வரும் ராதிகா ராதாகிருஷ்ணன்தான் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்து அவர்களில் ஒருத்தியாகி, தான் எப்படி இட்டியின் ஆசைநாயகி ஆனேன் என்பதைச் சொல்லி, படத்தின் இறுதிக்காட்சியை மிகச் சிறப்பானதாய் மாற்றியிருக்கிறார். இட்டி செய்யும் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு வாழும் அவள் அதற்கான விடையை இறுதியில் எழுதிவிடுகிறாள்.
இட்டியின் மனைவியாய் வந்து, அவரை வெறுத்து, இந்தக் கிழம் எப்போது செத்துத் தொலையுமோ என அடிக்கடி தன் வேதனையை வெளிப்படுத்தி, அப்பனையே கொல்லத் துணிந்த தன் மகன் தன்னையும் கொல்வானோ எனப் பயந்து, தன் கணவனின் ஆசைநாயகியை வெறுத்து ஒரு கட்டத்தில் அவள் மீது நேசம் கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பவுலி வல்சன்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் படம் போகப் போக இட்டியின் பக்கத்தில் நம்மையும் கட்டில் போட்டு அமர்ந்து அவரின் சேட்டைகளைப் பார்க்க வைத்துவிடும்.
டைனி ஹேண்ட்ஸ் புரடெக்சனுக்காக ஜோஸ்குட்டி மாடத்தில் மற்றும் ரஞ்சித் மனம்பரக்கத் தயாரிப்பில் உருவான இப்படத்தை மஞ்சு இயக்கியிருக்கிறார். அவருடன் இணைந்து ஜெயகுமார் இணைந்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
பாப்புவின் ஒளிப்பதிவும் கிரண்தாஸின் எடிட்டிங்கும் டான் வின்சென்ட்டின் இசையும் படத்துக்குச் சிறப்பு.
நம் படங்களில் அப்பாவை அவன் இவன் என்று அழைத்தாலும் அப்பாவை இப்படியொரு வில்லனாய் காட்டியதில்லை என்று நினைக்கிறேன். அப்பனை வில்லனாய் அதுவும் வீட்டில் இருக்கும் அனைவரும் அவர் சாக வேண்டும் என்று நினைப்பதும் கோபத்தின் உச்சத்தில் கொல்ல நினைப்பதும் இந்த படத்தில்தான் காட்டப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
-பரிவை சே.குமார்.
3 எண்ணங்கள்:
வித்தியாசமான படம் தான்...
படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறதுகதை.
கீதா
கருத்துரையிடுக