மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 22 அக்டோபர், 2022

புத்தக விமர்சனம் : தமிழணங்கு (இடவியல் வரலாறு)

மிழணங்கு-

நண்பர்களின் எழுத்துக்களை அச்சுக்குப் போகும் முன் வாசிக்கும் பாக்கியம் பெற்றவன் நான். அதில் மகுடமாய் எழுத்தாளர் கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி' புத்தகமாவதற்கு ஒரு வருடம் முன்னரே எனக்கு வாசிக்கக் கிடைத்ததுடன் அது குறித்தும், அதன் பின் என் எழுத்து குறித்தும் அவருடன் நீண்ட உரையாடல்கள் எல்லாம் நிகழ்ந்தேறியதுடன் இன்றுவரை மரப்பாலம் கொடுத்த நட்பு உறவாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஏழு மாதத்தில் வாசிப்பு என்பது சுத்தமாக இல்லை என்பதே உண்மை. சென்றமுறை சகோதரர் சிவசங்கர் ஜெகதீசன் அவர்களின் வாசிப்பு போட்டியான Books and Readers-ல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி பரிசுக்கோப்பை எல்லாம் வாங்கியவன் இந்த முறை இதுவரை எழுதவேயில்லை.



ஊரில் இருந்த ஆறு மாதத்தில் சங்கப்பலகை, கணேஷ்பாலா அண்ணனின் போட்டிக்கு மட்டுமாவது சிறுகதைகள் எழுதினேன். இங்கு வந்தபின் அதுவுமில்லை, எழுதும் வாசிக்கும் எண்ணம் எழாத  மனநிலைதான் இப்போதும் தொடர்கிறது. வாழ்வின் கடினமான பக்கம் என்பது மார்ச்சில் இருந்து இன்று வரை மடியில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கிறது. விரைவில் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடுதான் தூக்கமில்லா இரவுகள் விடிகிறது.

தமிழணங்கு என்ற பெயரில் முகநூல் நட்பில் இருக்கும் உமாமகேஷ்வரி, ஆனந்த் தங்களது நாவலை வாசிக்கச் சொன்னபோது , ஊருக்கு வரும்போது வாங்கிப் படிக்கிறேன் என்று சொல்ல, அவர்களோ தங்களின் கருத்து வேண்டும் எனச் சொல்லி PDF-ஆக அனுப்பித் தந்தார்கள். மேலே சொன்ன மனநிலையில் வாழ்வை நகர்த்தலுக்கான தேடுதலுக்கு இடையே வாசிப்பதென்பது நடக்காத காரியம்தான் என்று நினைத்திருந்தேன் என்றாலும் அவர்கள் இத்தனை அன்போடு அனுப்பித் தந்ததற்கு வாசித்துச் சொல்வதுதான் மரியாதை என்பதால் வாசித்து என் கருத்தையும் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். அதையும் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள்.

கோயம்புத்தூரின் இடவியல் வரலாற்று ஆய்வுக் கட்டுரைதான் தமிழணங்கு. ஆய்வுக் கட்டுரையாகக் கொடுத்தால் வாசிப்போருக்கு அயற்சியைக் கொடுக்கும் என்பதால் தமிழணங்கைத் தமிழ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதையாக நகர்த்திச் செல்லும் நாவலாக்கியிருக்கிறார்கள்.

ஆதிவாசிகளின் இட அபகரிப்பில் ஆரம்பிக்கிறது நாவல். முதல் அத்தியாயம் முழுக்க முழுக்க ஆதிவாசிகளின் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே மொழி புரியாதவர்கள் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கொடுத்திருக்கும் கதைச் சுருக்கதைப் படித்துத் தெரிந்து கொண்டு அடுத்த அத்தியாயம் போகலாம் என்று சொல்லியிருந்தாலும் ஆதிவாசிகளின் மொழியைப் படிக்கும் போது நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது. இலங்கைத் தமிழையே நாம கேலிதானே பேசுகிறோம் அப்படியிருக்க ஆதிவாசித் தமிழை எப்படிப் புரிந்து கொள்வோம் என்று ஆசிரியர்கள் நினைத்திருக்கலாம் என்றாலும் நமக்குப் புரியவே செய்கிறது.

இன்று அழைக்கப்படும் பெயர்கள் எல்லாம் அன்று இப்படித்தான் இருந்தனவா இல்லை மருவி வந்திருக்கின்றனவா என்ற ஆராய்ச்சியுடன் ஆறுகள், இடங்கள், மலைகள், ஊர்ப்பெயர்கள்,ஆதிகுடிகள் என எல்லாவற்றிலும் எத்தனை எத்தனை மாற்றங்கள். அதற்கான தேடல் என்பது மிகவும் பாராட்டுக்குரியது, அத்தனை செய்திகளை இந்த நாவலில் உள்ளடக்கியிருக்கிறார்கள். இதுதான் இது என்று சொல்லிக் கடந்து செல்லாமல் இது ஏன் ஏற்ப்பட்டது, எதனால் இந்த மாற்றம், இந்த மாற்றத்துக்கு யார் காரணம் என்றெல்லாம் தீவிரமான ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

நாவல் என்றதும் கதைக்குள்ளயே பயணிக்கும் என்று நினைத்தால் அதுவும் இல்லை... நாவலுக்குள் ஆய்வுக்கட்டுரையின் வடிவமே மேலோங்கி நிற்கிறது. விரிவான பார்வை, விளக்கம் என பல பக்கங்களை ஆய்வின் தொகுப்பே ஆட்கொண்டிருக்கிறது. ஆய்வுப் பார்வை நம்மை ஆயாசப்படுத்தாமல் இருக்கவே தமிழும், கிழவி ரங்கியும், கவினும், குறவனும், கவிநிலாவும். சித்தர்களும், முனிவர்களும், ஒடிக்களும், ஆதிவாசிகளும் புத்தகத்தில் உலாவுகிறார்கள்.

இதில் கல்வி அரசியளும் சோழர்கள், பாண்டியர்களின் இடவேட்கையும் பேசப்பட்டிருக்கிறது. கோயம்பத்தூர் இடவியலாய் மட்டுமில்லாமல் தமிழகத்தின் இடவியலையே ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். ஆறுகள், மலைகளின் முதல் பெயர் கால மாற்றத்தில் மருவி... மருவி இப்போதிருக்கும் பெயரால் நாம் அழைக்கும் போது எவ்வளவு அழகான தமிழ்ப் பெயர்களை நாம் இழந்திருக்கிறோம் தெரியுமா..? இப்படியான பெயர் மாற்றத்துக்கு யார் காரணம்..? என்பதையெல்லாம் தங்கள் தீவிர ஆய்வின் வழி விளக்கியிருக்கிறார்கள்.

பெரியார், கடவுள் மறுப்பு என்பது பல இடங்களில் சொல்லப்பட்டாலும் ஒடியர்களின் கதையைக் கிழவி கோவிலில் சாமி ஆடித்தான் சொல்கிறாள். மாயோன் பற்றிய ஒரு இடம் வரும்போது சிரித்துக் கடந்தேன், ஏனென்றால் மாயோன் - அழகர்மலையான் எங்கள் குலதெய்வம். மறுப்பதும் ஏற்பதும் அவரவர் விருப்பம் அல்லவா..? ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்த போது அதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும்.

சோழ, பாண்டிய தேசத்தில் பயணிக்கும் ஆய்வில் சிறு தொடுதலாய் தேவகோட்டை விருசுழி ஆறு வரை வந்திருக்கிறார்கள். 

மாயோனின் குதிரையின் பின்னால் ஓடியபோது படக்கென பிடித்து நிறுத்தியதைப் போல் முதல் பாகம் முடிவுக்கு வந்தது. இன்னும் ஒடிக்கள் குறித்த முழுமையாக அறிய அமாவாசை அன்று கிழவி ரங்கியின் முன் காத்திருக்கும் தமிழைப் போல நானும் அடுத்த பாகத்தின் வாசிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

மிகச் சிறப்பான நாவல்...

நிறைய செய்திகள்...

நமக்குத் தெரியாத செய்திகள்... தெளிவான விளக்கம்...

தமிழணங்கு அனைவரும் வாசிக்க வேண்டிய ஆய்வு நாவல்.

தமிழணங்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும்.

ஆய்வு மேற்கொண்டு அதை நாவல் வடிவில் கொண்டு வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் விமர்சனமே தனி ரகம்... அருமை...

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் சிறப்பாக இருக்கிறது நண்பரே.

ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை