மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 1 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி


'பொறு புள்ள பூவழகி
சத்த நேரம் பேசிக்கிறேன்...

பொழுதும் போகவில்லை
உன்னத்தான் யோசிக்கிறேன்...

மனசெங்கும் பூப்பூத்து
மச்சினியே காத்திருக்கு...

படக்குன்னு நீ வரவே
பாதையிலே பாத்திருக்கு...

திருநா பேரழகே
உனக்காக நான் பொறந்தேன்..'

கிராமியப் பாடல்களை எழுதுவதில் கில்லாடி ராசி.மணிவாசகன் அவர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல் இது. நாடக நடிகர் (நாரதர்/ முருகன்) முத்துச் சிற்பி சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவரின் 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் ஆந்தக்குடி இளையராசாவைப் பிரபலமாக்கியது. 'பொறு புள்ள பூவழகி' முத்துச்சிற்பிக்கு கிராமியப் பாடல்களில் முகவரி கொடுத்திருக்கிறது.

(வள்ளி மனோரஞ்சனியுடன் முத்துச் சிற்பி)

கிராமியப் பாடல்களைக் கேட்பதில் எப்போதும் ஒரு சந்தோஷம் எல்லாருக்குமே உண்டுதானே... அதை விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனோ... பரவை முனியம்மாவோ... கொல்லங்குடி கருப்பாயியோ.... புஷ்பவனம் குப்புசாமியோ... அனிதாவோ... கோட்டைச்சாமி ஆறுமுகமோ... இன்னும் யார் யாரோ பாடினாலும் அந்த வரிகளைச் சுமக்கும் கிராமிய இசை அப்படியே அணைத்துக் கொண்டு, நம்மை அறியாமல் ஆட்டம் போட வைக்கும்.

சமீபத்திய கிராமியப் பாடல்கள் முழுக்க முழுக்க கிராமியச் சாயல் இல்லாவிட்டாலும் மிகச் சிறப்பான வரிகளால் நம்மை ஈர்க்கின்றன. இப்போதைக்கு தஞ்சை சின்னப்பொண்ணு... ஆந்தக்குடி இளையராஜா... விஜய் சூப்பர் சிங்கர்... (இப்படிச் சொன்னாத்தான்  தெரியும்ங்கிற மாதிரி ஆக்கிட்டானுங்க) செந்தில் கணேஷ் எனப் பலர் சிறப்பான முறையில் கிராமியப் பாடல்களை மேடைகளில் அரங்கேற்றி வருகிறார்கள். கரகாட்டம் காம ஆட்டமாக மாற, கிராமியப் பாடல்களுக்கான மேடைகள் விரிய ஆரம்பித்துவிட்டன.

முன்னெல்லாம் கிராமியப் பாடல்களை பெரும்பாலும் அவர்களே எழுதி அவர்களே பாடி வந்தார்கள்... அது ஒரு தனிச்சுவை. இப்போது பாடல் வரிகளை எழுதுவதற்கென்றே பலர் இருக்கிறார்கள்... அந்தப் பாடல்களை பல இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பாகப் பாடி தங்களின் திறமையை நிருபிப்பதுடன் கிராமியக்கலையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

புஷ்பவனத்தின் 'ராஜாத்தி உன்னை எண்ணி' பாடலைப் போல ஆத்தங்குடி இளையராஜா பாடிய 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. எந்தத் திருவிழா என்றாலும் யார் நடத்தும் கிராமியக் கலை நிகழ்ச்சி என்றாலும் அதில் 'அங்கே இடி முழங்குது' என கருப்பரை ஆட விடாமல் இருப்பதில்லை. அப்படித்தான் இந்த 'அத்த மக உன்ன நெனச்சி' பாடலும். இந்தப் பாடல் குறித்து முன்பு ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அதனால் அத்த மகளுக்கான பதிவு இது இல்லை என்பதால் பூவழகி பின்னே போகலாம்.

'வள்ளி திருமணம்' நாடகம் பார்க்கும் நாடக ரசிகர்களுக்கு நாரதர் முத்துச்சிற்பியைத் தெரியாமல் இருக்காது. தன் குரல் வளத்தால் 'சிம்மக்குரலோன்' என்றும் 'இசையருவி' என்றும்  அழைக்கப்படுபவர், பாடல்களை மட்டுமே பாடி பிரபலம் அடைந்து விடலாம் என்றெண்ணாமல் நிறையப் புராணங்களைப் படித்து மிகச் சிறப்பான தர்க்கம் பண்ணக் கூடிய இளைஞர். இவரோடு தர்க்கம் பண்ணுகிறவர்களோடு பாட்டும் புராணமுமாய், குறிப்பாக அடித்துக் கொண்டு நாறாமல் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடிய மனிதர். ராதாகிருஷ்ணன், ராஜா, சூர்யா போன்ற பபூன்களுடன் நடத்தும் சிரிப்புத் தர்க்கமும்... கலைமகள், அபிராமி, மனோரஞ்சனி போன்றோருடனான புராணத் தர்க்கமும் சிறப்பாகவே இருக்கும் என்றும்... எப்போதும்.

நல்ல பாடகரான இவரின் முதல் கிராமியப் பாடல்கள் தொகுப்பான 'சிற்பிக்குள்ள முத்தப்போல' சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பாடல்களாக அவரின் யூடிப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். பகிர்ந்த பாடல்கள் அனைத்துமே சிறப்பாக வந்திருக்கிறது. அம்மாவுக்கு ஒன்று... குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒன்று... காதல் பாடல்கள் என அடித்து ஆடியிருக்கிறார். எல்லாம் அருமையின்னாலும் பூவழகியே எனக்கு முதன்மையாய்.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் இன்றைக்கு கிராமத்துப் பாடல்களை எழுதிக் கொடுப்பவர்கள் மிகச் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் ராசி.மணிவாசகன்.... அவர் வரிக்கு வரி வசியம் பண்ணுகிறார். வார்த்தைகள் வசதியாய் வந்து அமர்கின்றன அவரின் பேனாவுக்கு... மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கப் போற கவிஞர், கிராமியப் பாடலாசிரியர். இவரின் வரிகளுக்கு முத்துச்சிற்பி தன் குரல் வளத்தால் உயிர்கொடுத்திருக்கிறார்.

பொறு புள்ள பூவழகியில் என்ன அழகான வரிகள்... அருமையான இசை... முத்துச்சிற்பியின் குரல் அவருடன் இணைந்து பாடும் 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிஷாவின் ஈர்க்கும் குரல் என கலக்கலாய் வந்திருக்கிறது. ராசாத்தி உன்னை எண்ணி போல... அத்தமக உன்ன நினைச்சி போல... இந்த பூவழகியும் இனி எல்லா மேடைகளிலும் வலம் வருவாள்.

பொறு புள்ள பூவழகியில் வசீகரிக்கும் வரிகளாக 'திருநா பேரழகே உனக்காக நான் பொறந்தேன்...', 'வா புள்ள ஒண்ணால பூங்காத்தா மாறணும்...', 'உன்னோடு நான் வாழ பல ஆயுள் தேடுவேன்...', 'மாறாத காதலும் மனசோரம் பாடுது...', 'பருவத்து நேசங்கள முதுமைக்கும் சேர்த்து வைப்போம்...',உருவம் சிதஞ்ச பின்னும் உள்ளத்தால சேர்ந்திருப்போம்...', 'நிலவொன்னு ராத்திரியில் நித்தமும் தேடுதைய்யா...' இப்படி நிறைய வரிகளைக் சொல்லிக் கொண்டே போகலாம்.

(பொறுபுள்ள பூவழகி...)

முத்துச்சிற்பியின் குரல் வளம் குறித்துச் சொல்லத் தேவையில்லை. மைக்கே இல்லாமல் பல மைல் தூரம் கேக்கும். சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவிற்கு என்ன ஒரு அருமையான குரல் வளம். அப்படி நம்மையும் பாடலோடு இழுத்துச் செல்கிறது.

மிகவும் அருமையானதொரு ஆல்பம். முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியை எட்டிப்பிடித்திருக்கும் முத்துச்சிற்பியை வாழ்த்துவோம்.

-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

தங்கள் கருத்து என்னை வெகுவாக கவர்ந்தது நன்றி அன்புள்ளமே நன்றி

கோமதி அரசு சொன்னது…

பூவழகி பாடல் இனிமையாக இருக்கிறது.
முத்துச்சிற்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீநிஷாவும் நன்றாக பாடியிருக்கிறார்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

நன்றி

Unknown சொன்னது…

நன்றி

துரை செல்வராஜூ சொன்னது…

வருக வருக...

பற்பல பதிவுகளைத் தருக...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பூவழகி பாடல் மனதைக் கவர்ந்தது. பாராட்டுகள்.

பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன் அண்ணன்:

இனிமை... வாழ்த்துக்கள்.

கருத்து கைதவறுதலாய் நீக்கப்பட்டுவிட்டது அண்ணா... மன்னிக்கவும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப மகிழ்வாய்.... உங்கள் கருத்து எனக்கு கிடைத்ததில்...
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அம்மா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா...

Unknown சொன்னது…

அருமையான வாழ்த்து திரு.பரிவை சே.குமார் அண்ணன் & க.மீனாட்சி சுந்தரம் நான் நா.முத்துக்குமார் அண்ணன் பாடல் வரிகளை காதலிப்பவன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நன்றாக இருக்கிறது குமார்..வாழ்த்துகள்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பகிர்விற்கு மிக்க நன்றி

கீதா