எதிர்பாராமல் நிகழும் சில நிகழ்வுகள் கொடுக்கும் சந்தோஷத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. அப்படி ஒரு நிறைவான மாலையாக நேற்றைய மாலை நகர்ந்தது. சென்னையில் மழை என்ற செய்திகளைக் கேட்டபடி பாலை வெயிலில் பணிக்குச் செல்லும் தேசாந்திரிகளின் வாழ்வில் எப்போதேனும் இப்படியான நிகழ்வுகள் மனசுக்குள் சாரலாய் இறங்கி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும். அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய மாலை நிலவின் சுகந்த ஒளியில் தாஜ்மாகாலைப் போன்ற அழகோடும் நேர்த்தியோடும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அபுதாபி கிராண்ட் மாஸ்க்கில் (SHEIKH ZAYED MOSQUE) நிகழ்ந்தது.
ஒரு எழுத்தாளனின் ரசனை மிகுந்த பேச்சை, ஒரு ஹாலில் ஆயிரம் பேர்களுடன் அமர்ந்து கேட்கும் போதும், தனியே வீட்டில் அமர்ந்து வீடியோ அல்லது ஆடியோ வழியாகவோ கேட்க்கும் போதும் கிடைக்காத ஆத்ம திருப்தி அந்த எழுத்தாளருடன் ஆசுவாசமாய் அமர்ந்து ஆத்மார்த்தமாக பேசும் போது கிடைக்கும்... இதன் சுவை அலாதியானது... அளப்பரியது. இது எப்போதும் கிடைக்காத பேரின்பம்.
கல்லூரியில் படிக்கும் போது எங்கள் பேராசான். மு.பழனி இராகுலதாசனின் செல்லப்பிள்ளைகளாக மாலைவேளைகளில் அவர் இல்லத்திலும் அவருடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தபடியும் அந்தப் பிரம்மாவின் எழுத்தோடும் பேச்சோடும் நகர்ந்த நாட்களை நினைவில் மீட்டியெடுத்த அருமையானதொரு நிகழ்வு.
கல்லூரியில் படிக்கும் போது எங்கள் பேராசான். மு.பழனி இராகுலதாசனின் செல்லப்பிள்ளைகளாக மாலைவேளைகளில் அவர் இல்லத்திலும் அவருடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தபடியும் அந்தப் பிரம்மாவின் எழுத்தோடும் பேச்சோடும் நகர்ந்த நாட்களை நினைவில் மீட்டியெடுத்த அருமையானதொரு நிகழ்வு.
இப்படியான ஒரு நிகழ்வில், எங்கள் ஒரு சிலருக்காக மட்டுமே அந்த எழுத்தாளர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார்... அதுவும் அருகில் அமர்ந்து... தோளில் கை போட்டபடி... ஒன்றாய் நடந்து... உணவருந்தியடி.. டீக்குடித்தபடி... இன்னும் இன்னுமாய் ஒரு நிலாக்காயும் இரவை தமிழ் பருகும் இரவாக்கித் தந்தார். எத்தனை விவரங்கள்... எத்தனை ஆச்சர்யங்கள்... எண்ணிலடங்கா கருத்துக்கள்... எப்போது கிடைக்கும் இனி இது போன்றொரு தருணம்.
தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருடன் இலக்கியச் சிந்தனை நிறைந்த சிலர் மட்டுமே அளவளாவுவது என்பது எப்போதேனும் இந்தப் பாலையில் நிகழும் நிகழ்வாக இருக்கலாம்... அது நேற்று எங்களுக்கு நிகழ்ந்தது. அதாவது எழுத்தாளர் மற்றும் அந்த ஒன்பது சிந்தனையாளர்களுடன் பத்தோடு பதினொன்றாய் ரசிகனாய் நானும் இருந்தேன்.
மற்ற நண்பர்களைப் போல் அவரின் எழுத்துக்களை அதிகம் வாசித்தவனில்லை... கேள்விக்கனைகள் தொடுக்கும் அளவுக்கு இலக்கிய அறிவும் இல்லை... சிறுகதைக்கு அவர் சொன்ன இலக்கணத்தில் சிறிதேனும் கடைபிடித்து எழுதுபவன் என்பதால் நட்புக்களுக்குள் எழுத்தாளனாய் அறியப்பட்டவன் என்பதைத் தவிர வேறு சிறப்புக்கள் இல்லை என்றாலும் இலக்கிய அருவிகள் கொட்டித் தீர்க்கும் போது அதில் மணிக்கணக்கில் ஆனந்த குளியல் செய்வதில் அலாதிப் பிரியம் எனக்கு.
நேற்றைய மாலை சாம்பார் வைத்து விட்டு கணிப்பொறியில் வெள்ளியன்று எழுதிய 'அப்பத்தா' சிறுகதையில் திருத்தங்கள் செய்துவிட்டு படம் பார்க்கலம் என்று நினைத்திருந்தவனை 'அவரு வர்றாருங்க... கெளம்பி வாங்க' என்றழைத்த அண்ணன் கனவுப்பிரியன், 'அட கெளம்பி வாங்கங்க... சும்மா முடிஞ்சா வாரேனு இழுக்காம' என்ற அன்புக் கோபம் கொள்ள. அதன் பின்னான நிமிடங்களின் இறுதியில் அண்ணன் சுபான் அவர்களைப் பிடித்து அவருடன் பெரிய பள்ளிக்குச் சென்றோம்.
துபையில் இருந்து நேற்று எனக்கு நண்பரான நந்த குமார் என்பவரின் காரில் வந்திருந்தார். கை குலுக்கலுக்கும் போது உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். இது நாம் சொல்ல வேண்டியதல்லவா.?. அதே மகிழ்வோடு மெல்ல நடை போட்டு பள்ளியின் பாதுகாப்புச் சோதனை மையத்தைக் கடந்தோம்.
இலக்கியவாதியின் அருகில் நடப்பது கூட வரம்தான் போலும். இப்படியான ஒரு நிகழ்வு... அதுவும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நானும் நண்பன் முருகனும் மதுரையில் இருந்து தேவகோட்டைக்கும் தேவகோட்டையில் இருந்து மதுரைக்கும் திரு.இறையன்பு அவர்களுடன் காரில் பயணித்த தினத்தில் கிடைத்தது. மீண்டும் நேற்றைய பொழுதில்... பெரிய பள்ளியைக் கண்டு அவர் வியந்து ரசிக்க, அவரோடு பேசிக் கொண்ட நடந்த நாங்கள், காலம் மெல்லக் கரையக் கரைய அந்தப் பேச்சில் அப்படியே கரைந்து... ரசித்து... வியந்தோம்.
இலக்கியவாதியின் அருகில் நடப்பது கூட வரம்தான் போலும். இப்படியான ஒரு நிகழ்வு... அதுவும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நானும் நண்பன் முருகனும் மதுரையில் இருந்து தேவகோட்டைக்கும் தேவகோட்டையில் இருந்து மதுரைக்கும் திரு.இறையன்பு அவர்களுடன் காரில் பயணித்த தினத்தில் கிடைத்தது. மீண்டும் நேற்றைய பொழுதில்... பெரிய பள்ளியைக் கண்டு அவர் வியந்து ரசிக்க, அவரோடு பேசிக் கொண்ட நடந்த நாங்கள், காலம் மெல்லக் கரையக் கரைய அந்தப் பேச்சில் அப்படியே கரைந்து... ரசித்து... வியந்தோம்.
எல்லாராலும் எல்லோரையும் பேச்சால் கட்டிப் போட முடியாது. பேசும் திறமை இருந்தாலும் வரும் வார்த்தைகள் உணர்ச்சிகளை மட்டுமே கொடுக்காமல் உள்ளத்தைக் கவரும் விதமாக அமைந்தால் மட்டுமே கேட்க்கும் மனங்களை மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அப்படியானதொரு பேச்சு... ரசனையாய்... ரகளையாய்... கட்டுண்ட மனம் ஜிமிக்கிக் கம்மலாய் ஆர்ப்பரித்தது.
இப்படி எங்களைப் பேச்சால் ஆட்கொண்டு அலப்பரிய மகிழ்வைக் கொடுத்தவர் எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன்.
தன்னுடைய கதையில் ஒரு வயதான அம்மாளின் வைராக்கியம் குறித்துச் சொன்னபோது அப்படியான ஆட்களைப் பார்த்திருப்பதாய்ச் சொன்னார். பிரபு கங்காதரன் அவர்கள் கூட உறவினர் ஒருவர் இதுபோல் இருப்பதாகவும் கணவர் இறந்தால் வருவியா என்றதற்கு சாகட்டும் என்று சொன்னதாகவும் சொன்னார். நானும் ஒரே வீட்டுக்குள் இருபது வருடங்கள் பேசாமல் வாழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்... பல வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்குள் பேச்சு என்பது மீண்டும் துளிர்த்தது.
பிடிவாதம் என்ற கதையில் நாயகி ஒவ்வொரு விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதையும் அதனால் குடும்பம் படும் கஷ்டத்தையும் முடிவில் கணவன் உன்னோட பிடிவாதத்துக்கு முடிவு கட்ட நானே உன்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல, அவள் அழுவதாய் முடித்திருப்பதாய் சொல்லி, பிடிவாதம் பிடிக்க ஒரு பிடிமானம் வேணுமில்லையா.. அது இருந்தால்தானே பிடிவாதம் வரும். அது இல்லைன்னா வரதுல்ல என்றவர், பிடிவாத விஷயத்தில் கூட நாம் மகளின் பிடிவாதத்திலும் மனைவியின் பிடிவாதத்திலும் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கும் வேறுபாடுகளைக் குறித்தும் பேசினார்.
சிறுகதைகள் எழுதுவது குறித்துப் பேசும் போது ஒரு பொற்கொல்லர் சிறிய ஜிமிக்கி செய்யும் போது அதற்குள் நுட்பமாக நகாசு வேலைகள் பார்ப்பது போல்தான் மிகுந்த நேர்த்தியுடன் சிறுகதைகளை கையாள வேண்டும்... சிறுகதைகள் எழுதுவதென்பது அவ்வளவு சுலபமில்லை... எழுதிக் கொண்டே இருந்தால்தான் சிறுகதை எழுத்தாளனாய் நீடிக்க முடியும் என்ற போது சிறுகதைகள் எழுதுதல் கடினம் என்கிறீர்கள் என்று கேட்க, ஆம் சிறுகதை எழுதுதல் என்பது எல்லாராலும் முடியாத ஒன்று என்று சொன்னார்.
சிறுகதை எழுதுபவர்களுக்கு அந்தக் கதையே கனவில் வருமாமே என்று ஒரு நண்பர் கேட்க, எனக்கும் அப்படி வருவதுண்டு. முழுக் கதையும் எழுதி முடித்தது போல் வரும்... கணிப்பொறியில் அமர்ந்து எதிரே பேப்பரில் எழுதி வைத்திருப்பதைப் போல கடகடன்னு அடிச்சிடுவேன். சில கதைகள் எழுத அமரும் போது வார்த்தைகள் வரவே வராது.. உளிகொண்டு மெல்ல மெல்லத் தட்டி வார்த்தைகளைக் கொண்டு வர வேண்டியிருக்கும் என்றார்.
கதைகளுக்கான கருக்கள் எப்படி எடுப்பீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு பார்த்த, கேட்ட, வாசித்த செய்திகள், வாழ்வில் நடந்தவை என எல்லாமே என் கதைகளுக்கான கருவாக மாறும் என்றார். இதுவரை 250 சிறுகதைகள் எழுதியிருப்பதாய்ச் சொன்னார். நானும் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிக்கைகளில் வந்தவை, வலைப்பூவில் எழுதியவை, இணைய இதழ்கள் எழுதுபவை, எழுதி எதற்கும் அனுப்பாமல் இங்கும் பதியாமல் வைத்திருப்பவை என மனதிற்குப் பிடித்த மாதிரியான கதைகளில் டபுள் செஞ்சரி அடித்து விட்டேன் என்பதை அங்கு சொல்லவில்லை இங்கு சொல்லிக்கிறேன்.
பல்லவர்களின் கட்டிடக்கலை, முற்காலச் சோழர்களின் கற்கோவில்கள்... சிவகாமியின் சபதத்தால் வாதாபியை வென்ற கதை என எல்லாம் பேசி, திருப்புவனம் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிறிய சிற்பங்கள் குறித்துப் பேசும்போது ராஜா வெற்றிலை மடித்து ராணிக்கு கொடுப்பதையும் சிறு வெற்றிலைத் துகள் வாயில் ஒட்டியிருப்பதையும் சிற்பி வடித்திருக்கிறான், மழையில் சிற்பங்கள் நனைந்த நாளில் தடவிப்பார்த்தால் சிறிய வெற்றிலைத் துகள் தெரியும் என்றார். இராமாயணக் காட்சிகள் சிற்பமாய் இருப்பதில் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்ததை சிற்பமாக்கி, அறுபட்ட மூக்கை மட்டும் தனி சிற்பமாக அடித்தும் வைத்திருக்கிறான். அப்ப அந்த சிற்பிக்கு அறுபட்ட மூக்கை ஜூம் பண்ணத் தெரிந்திருக்கிறது பாருங்கள் என்றார்.
வரிசையாக பார்த்துக் கொண்டே வந்த சிற்பத்தில் 18-ஆம் நம்பர் சிற்பத்தைக் காணவில்லை... அது எங்கே போனதெனத் தேடினால் மேலே உடைந்த இடத்தில் அதை வைத்து ஒட்டி வைத்திருக்கிறான் பழுது பார்த்தவன். அங்கிருப்பவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் இனி என்ன பண்ண முடியும் என்கிறார்கள். இப்ப பதினெட்டாவது சிற்பத்தை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் என்றார். உண்மைதான் பெரும்பாலான கோவில்களில் சிதிலமடைந்த சிற்பங்களை எல்லாம் சிமெண்ட்டால் பூசிவிட்டார்கள்.
சமீபத்தில் மரணமடைந்த மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் விருதுநகருக்கு அருகில்தான் என்பதால் அவரின் மளிகைக்கடைக்கு சாமான் வாங்க வரும்போது தன்னைத் தேடி வந்து பார்த்து பேசிச் செல்வார் என்றும் சில சமயம் தம்பியிடம் சாமான்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் வருவார் என்றும் இருவரும் சினிமாவுக்குச் செல்வோம் என்றும் வாழ்வியல் கதைகள் எழுதிய அந்த மளிகைக் கடைக்காரரைக் குறித்த நினைவைப் பகிர்ந்தார்.
தன்னைப் பற்றிய சுய விவரங்களைச் சரிவர எழுத முடியாமல் திணறுபவன்தான் நான்.. ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பிறந்ததேதியை கூட சரியா எழுதத் தெரியாதா என்று என்னைக் கேட்கும்படி எழுதியவன் நான். நிறையப் படிப்பேன்... படித்ததை எப்போது கேட்டாலும் சொல்வேன்... இதெல்லாம் என் ஒரு பக்க மூலையில் இருப்பவை... அது நல்லா வேலை செய்யும்... இன்னொரு பக்க மூலை வாழ்க்கை சம்பந்தமானது... அது சரியா வேலை செய்யாது. அதனால் அந்த மூளைக்குப் பதிலாய் எனக்கு என் மனைவி...
பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்ன நம்பரையும் இப்போது சொல்வாள். பல வருடங்களுக்கு முன் எனக்கு வந்த கடிதத்தின் முகவரி தெரியாமல் விழித்தபோது இதுதானே அது என்று அவர் சொல்ல, முகவரிக்கு சொந்தக்கார நண்பர் வியந்து போனார். 16 இலக்க வங்கி எண்ணைக் கூட பார்க்காமல் படபடவென படிவத்தில் நிரப்பிவிடுவார்... பார்த்து எழுதினாலும் நான் தப்பாத்தான் எழுதுவேன் என்று சிரித்தார். சுபான் பாய் என் வீட்டிலும் அதேதான் என்று சொன்னார். நம்ம வீட்டிலும் எஜமானி அம்மா இல்லை என்றால் நாம ஜீரோதான்... மதுரையில் செல்லமாய் வளர்ந்து தேவகோட்டைக்கு வந்து இரண்டு வீடு என் துணையில்லாது கட்டி, தற்போது குழந்தைகள், குடும்பத்தின் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் தனி மனுசியாய் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.
பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்ன நம்பரையும் இப்போது சொல்வாள். பல வருடங்களுக்கு முன் எனக்கு வந்த கடிதத்தின் முகவரி தெரியாமல் விழித்தபோது இதுதானே அது என்று அவர் சொல்ல, முகவரிக்கு சொந்தக்கார நண்பர் வியந்து போனார். 16 இலக்க வங்கி எண்ணைக் கூட பார்க்காமல் படபடவென படிவத்தில் நிரப்பிவிடுவார்... பார்த்து எழுதினாலும் நான் தப்பாத்தான் எழுதுவேன் என்று சிரித்தார். சுபான் பாய் என் வீட்டிலும் அதேதான் என்று சொன்னார். நம்ம வீட்டிலும் எஜமானி அம்மா இல்லை என்றால் நாம ஜீரோதான்... மதுரையில் செல்லமாய் வளர்ந்து தேவகோட்டைக்கு வந்து இரண்டு வீடு என் துணையில்லாது கட்டி, தற்போது குழந்தைகள், குடும்பத்தின் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் தனி மனுசியாய் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.
கேள்வி மேல் கேள்விகள்... எல்லாவற்றிற்கும் மகிழ்வாய்... விரிவாய்... எடுத்துக்காட்டுக்களுடன் பதில்கள்.. சலிப்பே இல்லாமல் வார்த்தைகள் மடைதிறந்து வாய்க்காலில் சலசலத்து ஓடும் தண்ணீரைப் போல் பாய்ந்தோடி வந்தன. இடையிடையே எங்களுடன் புன்னகையுடன் புகைப்படம்.. கனவுப்பிரியன் அவரின் பேச்சுக்களைக் கரைத்துக் குடித்திருக்கிறார் என்பதால் அதிகம் அவரிடம் கேள்விகள் கேட்டவராய்... சுபான் பாய் கேமராக் கவிஞனாய்... நான் வாசகனாய்.
ஒரு பதிவுல முடிச்சிடணும்ன்னுதான் எழுத ஆரம்பித்தேன்... எப்பவும் போல் நேற்று மாலை கேட்டவை எல்லாம் வரிசையாய் என்னை எழுது என்னை எழுது என்று நிற்க, மெல்லச் சிலவற்றை விலக்கி கொஞ்சாய் எழுதாலாமென எழுதியும் பதிவு நீளமாகிவிட்டது. இது எப்பவும் நடப்பதுதானே... இதன் தொடர்ச்சி அடுத்த பதிவாய்...
பசி - காமம், ஏழை - பணக்காரன், கலாச்சாரம் - பண்பாடு, ஐந்திணைகள், இராமநாதபுரம் மாவட்டம், இடைக்காட்டூர் சர்ச், ஓரியூர் சர்ச், ஆர்.எஸ்.மங்களம் கண்மாய், பிறன்மலைக் கள்ளர்களுக்கும் இஸ்லாமியருக்குமான தொடர்பு இப்படி நிறைய, நிறைவாய் அவர் பேசியவை குறித்தும் பார்ப்போம்.
பிரிதிவிராஜின் ஆடம் ஜோன் பாக்க இருந்த மாலையை ஒரு அழகிய மாலை ஆக்கிய அன்பின் அண்ணன்கள் சுபான், கனவுப்பிரியனுக்கு நன்றி.
போட்டோ அடுத்த பகிர்வில்...
(தொடரும்)
போட்டோ அடுத்த பகிர்வில்...
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
இனிய மாலை, இனிய அனுபவம் போலும். படங்களை இந்தப் பதிவிலேயே இணைத்திருக்கலாம்!
சிறுகதைகளை வடிப்பதே ஒரு கலை..
வரம் பெற்றிருக்க வேண்டும் அதற்கு!..
சிறுகதை ஆசிரியருக்குக் கதை நினைவில் வருவது போல, கவிஞர்களுக்குக் சிறந்த கவிதைகள் நினைவுக்கு வரும். சிந்திக்கிறேன், தாங்கள் சிறப்பாப் பகிர்ந்த பதிவை எண்ணி.
எழுத்தாளர் ராமகிருஷ்ணனுடன் ஒரு பொன்மாலைப் பொழுது என்பது மகிழ்ச்சியான தருணம்தான். தொடர்கின்றேன்.
ம்மனசுக்கு பிடித்த விஷயத்தை எழுதும் போது பிரேக் போட முடியாது எழுத்தாளரின் அனுபவத்தை அவர் வாய் மொழியாக கேட்டு ரசிப்பது சுகம் தான்
இருநூறு கதைகள் எழுதிய இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்!
-இராய செல்லப்பா சென்னையில் இருந்து
பதிவு அலுவலகத்தில் பணி இல்லாத வேளையில் தட்டிவிட்டேன்.
மதியம் பணி வந்துவிட்டது... இனி ஓய்வில்லை.
படங்கள் நண்பர் எடுத்திருந்ததால் அவரிடம் இரவு வந்துதான் வாங்கினேன்.
அடுத்த பதிவில் போடுகிறேன் அண்ணா..
இலக்கில்லா பேச்சின் இனிமை
நல்லதொரு கொலாஜ் ஓவியத்தைப்போல,,/
மகிழ்வான தருணங்கள் தொடரட்டும் நண்பரே
தம +1
நண்பருக்கு வாழ்த்துக்கள்!
கதை எழுதுவ்து சுலபமல்ல நம்கற்பனைக்குள் வரும் விஷயங்களை சுவையாகக் கோர்த்து தரவேண்டும் என்கதைகளில் கரு உயிர்ப்புடன் இருக்க நிஜ வாழ்க்கைச் சம்பவங்களே முன்னுரிமை பெறும்
இனிய அனுபவம் குமார். நீங்கள் சொல்லி வந்த போதே கணித்தேன் எஸ் ராவாகத்தான் இருக்கும் என்று. அதே போல். இனிய தருணங்கள் குமார்! பொக்கிஷம் உங்களுக்கு!! 200 கதைகள் எழுதியமைக்கும் வாழ்த்துகள் குமார்!
கீதா
சுவாரசியமான உரையாடல்.டபுள் செஞ்சுரி அடித்திருக்கும் எங்கள் சகோவுக்கும் அன்பு வாழ்த்துக்கள். :)
கருத்துரையிடுக