கடந்த சில வாரங்களாக தொடரும் அளவுக்கு அதிகமான அலுவலகப் பணி கொடுக்கும் சோர்வின் காரணமாக எழுதுவது குறைந்து விட்டது. மேலும் அறைக்குத் திரும்பி சமைத்து சாப்பிட்டு அமரும் போது முதுகுவலியின் சுமை அதிகமாவதால் படுத்துக் கொண்டே பலரின் எழுத்துக்களை வாசித்தாலும் கருத்து இடுவது என்பது இயலாமலே போய் விடுகிறது. நேற்று முதல் நாளை வரை விடுமுறை என்பதால் கொஞ்சம் வாசிக்கவும் கருத்திடவும் முடிகிறது. இருப்பினும் இனி தொடர்ந்து வாசிக்கவும் கருத்துப் பரிமாறவும் முடியும் என்று நினைக்கிறேன்.
தமிழக வெள்ளச் சேதத்தில் அரசின் மெத்தனமும் அந்த மெத்தனத்தால் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஆணித்தரமான அரசை அகற்றும் எண்ணத்தைப் போக்கும் விதமான காய் நகர்த்துதலும் பார்க்கும் போது ஏற்படும் வேதனையானது மனசில் எழுத அமரும்போது பெரும்பாலும் அரசியல் பகிர்வுகளாகவே வருகிறது. நம்ம பாட்டுக்கு அம்மாவுக்கு எதிராக எழுதப்போய் நம்ம சைட்டை தூக்கிட்டா நம்ம வாழ்வாதாரம் போயிடுமில்லையா... அதனால சினிமா பதிவு எழுதாதே என்று என் அன்பு நண்பன் சொல்லிக்கொண்டே இருந்தாலும் எண்ண மாறுதலுக்காக இந்தப் பதிவு சினிமாப் பதிவுதான்... கொஞ்சம் நம்மளும் ரிலாக்ஸ் ஆகிக்குவோமே... என்ன நாஞ்சொல்றது..?
சரி வாங்க தங்கமகனைப் பார்ப்போம்... இது மாமானார் நடித்த தங்கமகன் இல்லை மாப்பிள்ளை நடித்த தங்கமகன்... சரி வளவளன்னு பேசாம படம் நல்லாயிருக்கு... நல்லாயில்லையின்னு நீயும் ஏதாவது சொல்லிட்டுப் போ... நாங்க அதைப் பார்த்து முடிச்சிட்டு பசங்க-2 பாத்துட்டோம்ன்னுதானே சொல்ல வாறீங்க... என்னங்க பண்றது கொஞ்சம் ரிலாக்ஸாக நமக்கு ஒரு பதிவு வேணுமில்ல... அதான்... சரி வாங்க தங்கமகனைப் பாக்கலாம்.
தன் அப்பாவின் மீது விழுந்த பலி, அவரை தற்கொலை பண்ணிக் கொள்ள வைக்கிறது. அப்பாவின் தற்கொலைக்கு காரணம் என்ன..? அவர் மேல் விழுந்த பலிக்கு யார் காரணம்..? என்பதை தங்கமகன் அலசி ஆராய்ந்து சுபமாய் முடிப்பதே இந்தத் தங்க மகன்.
தனுஷ்... நடிக்கத் தெரிந்த நடிகன்... கல்லூரி மாணவனாய் மீசையில்லாமல் சதீஷூடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியாகட்டும், எமியை விரட்டி விரட்டி அவர் பின்னே அலைந்து காதலிப்பதிலாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். துள்ளுவதோ இளமைக்கால தனுஷை மீசையில்லாமல் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அதில் நடிப்பில் எப்பவும் போல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் அந்த முகத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் பரிதாபமாகவே தெரிகிறது. திருமணம் முடிந்து குடும்பத் தலைவனாய், அப்பாவின் மறைவுக்குப் பின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் போது மீசையுடன் வரும் தனுஷ்... கலக்கல்.
எமி... தனுஷைக் காதலிக்கிறார். இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுக்கிறார். தண்ணி அடித்துவிட்டு தனுஷை அறைந்து ரகளை செய்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாய் பொருந்திப் போகிறார். மேலும் தனுஷைப் பிரிந்து அவரின் அத்தை பையனுக்கே மனைவியாகப் போகிறோம் என்று தெரிந்ததும் நாம உறவுக்காரங்களாகப் போறோம்... எதையும் மனதில் வைத்துக்காதே என தனுஷிடம் பேசுகிறார். கணவன் செய்யும் செயல்களை எதிர்க்கிறார்... ஒரு கட்டத்தில் கணவனை எட்டி அறைந்தும் விடுகிறார்... அவரின் நடிப்புக்கு ஆண்ட்ரியாவின் இரவல் குரல் சும்மா சூப்பாரா பொருந்தியிருக்கு.
சமந்தா... இவரை பெரும்பாலான படங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உரித்துக் காட்டுவார்கள். இதில் சேலை கட்டி, மூக்குத்தி போட்டு கணவனின் மனசைப் புரிந்து கொண்ட, நடுத்தர வர்க்கத்து மருமகளாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தை அழகாய் நிரப்பியிருக்கிறார்.
ராதிகா... தனுஷின் அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். மகனிடம் செல்லமாய் எகிறுவதாகட்டும், கணவனிடம் பேசுவதாகட்டும், கணவனை இழந்து தவிப்பதாகட்டும். தன் கணவனின் சாவுக்கு காரணமானவன் யார் என்று தெரிந்ததும் அவனை விடாதே என்று மகனிடம் சொல்வதாகட்டும்... ராதிகாவுக்கா நடிக்கச் சொல்லித் தரணும்.
கே.எஸ்.ரவிக்குமார்... ஒரு பாசமுள்ள அப்பா, எதையும் மறந்து விட்டு புலம்பும் கதாபாத்திரம். அதனாலேயே சிக்கலில் மாட்டி உயிரை விடுகிறார். அவரின் முகம் அவருக்கு வயதாகிவிட்டதை பறை சாற்றுகிறது. அவருக்கே உரிய எகத்தாளமான பேச்செல்லாம் இல்லாமல் அப்பாவாகவே வாழ்ந்து மடிகிறார். இனி வரும் படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் இவரை அதிகம் பார்க்கலாம்.
சதீஷ்... இவர்தான் படத்தின் காமெடியன். இவரை நம்பி காமெடி டிராக் பண்ணுவது என்பது கடினம்தான் என்றாலும் இவருடன் தனுஷூம் இணையும் போது கலக்கல்தான்... இவர்களின் வசனங்களே படத்தின் ஆரம்பக் காட்சிகளை கலகலப்பாய்க் கொண்டு போகிறது. இடைவேளைக்குப் பின்னான படத்தில் இவர் அதிகம் தலைகாட்டவில்லை.
அப்பாவின் சாவுக்கு காரணமான வில்லனாக வந்து திருந்தும் அத்தை பையனாக நடித்திருப்பவர் பரவாயில்லை ரகமே. முக்கிய வில்லனாய் வரும் ஜெயப்பிரகாசத்திற்கு நடிக்க வாய்ப்பில்லை. அப்படியே எம்.எஸ்,பாஸ்கரும்... இவர்கள் எல்லாமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
தனுஷ் வீட்டிற்கு வரும் எமியை சமந்தாவும் ராதிகாவும் தங்கும்படி வற்புறுத்த அவர் படுப்பதற்காக தனுஷ் ரொம்ப சிரத்தையுடன் பெட்டை சரிசெய்வதும், அதன்பின் வெளியில் படுத்திருக்கும் தனுஷ் அருகே வந்து சமந்தா படுத்ததும் 'இங்க கொசுக்கடிக்கும் நீ எதுக்கு இங்க வந்தே' என்று கேட்க, 'உங்களோட கேர்ள் பிரண்ட் அங்க நிம்மதியாத்தான் தூங்குறா' என்று சமந்தா சொன்னதும் அதை மறந்து 'நீதான்டி என்னோட உயிர் ஐ லவ் யூடி' என்று சொல்வார் தனுஷ். உடனே 'ஐய்யய்யோ இப்பத்தான் லவ் யூ எல்லாம் வருது' என்று சமந்தா சீண்டவும் 'நீ அது கூட சொல்லலையே' என்று தனுஷூம் பதிலுக்கு சீண்டுவார். உடனே சமந்தா 'லவ் யூ... லவ் யூ...' என்பாரே பார்க்கலாம்... செம.
எமியை விரட்டும் தனுஷிடம் 'உன் பேர் என்ன..?' என்று எமி கேட்க, 'தமிழ்' என்றதும் 'அப்ப உங்க அப்பா பேரு என்ன இங்கிலீஸா?' என்று கிண்டலடிப்பார். இதெல்லாம் கேட்ட வசனம்தான் என்றாலும் படத்தில் பார்க்கும் போது உதட்டில் புன்னகை துளிர்க்கத்தான் செய்கிறது.
முதல் பாதி படம் ரகளையாய் போனாலும் இரண்டாம் பாதி செண்டிமென்ட் கலவை கொஞ்சம் அதிகமாகி சீரியல் கணக்காத்தான் இருக்கிறது. இருப்பினும் தனுஷின் உடம்புக்கு மீறிய மாஸ் காட்சிகள் இல்லாமல் பயணிப்பதால் சீரியஸ் குடும்பக் கதையாக பயணித்தாலும் பரவாயில்லாமல் நகர்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் வேதாளத்தில் பாத்திர பண்டங்களை உருட்டி ஆக்ரோஷித்து இருந்தது போல் இல்லாமல் இதில் கொஞ்சம் பரவாயில்லாமல் பண்ணியிருக்கிறார்.
காதல், குடும்பம், செண்டிமென்ட் என பயணிக்கும் கதையில் தனுஷின் நடிப்பில் தொய்வே இல்லை... மனிதர் அடித்து ஆடியிருக்கிறார். தமிழை அழிக்க முடியாது என்றெல்லாம் பஞ்ச் பேசுகிறார். மச்சானுடன் மோதும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். ரசிகர்கள் விரும்பும் தனுஷின் ஆட்டம் இதில் குறைவு என்றாலும் அவர் இதுபோன்ற குடும்ப செண்டிமென்ட் படங்களிலும் அவ்வப்போது நடித்தால்தான் அவரின் மாஸ் நடிப்பை விட தனுஷிற்குள் இருக்கும் நடிகனின் நடிப்பை பார்த்து ரசிக்க முடியும். அதை இதில் அருமையாக செய்திருக்கிறார்.
இயக்குநர் வேல்ராஜ், வேலை இல்லாப் பட்டதாரி அளவுக்கு நிறைவாய் கொடுக்கவில்லை என்றாலும் நல்லாவே எடுத்திருக்கிறார். மனிதருக்கு காதலில் நிறைய அனுபவம் இருக்கும் போல வசனங்களில் களம் கட்டி ஆடுவதுபோல் எமி-தனுஷ் போர்ஷனில் சும்மா அடித்து ஆடியிருக்கிறார். அந்த முத்தக் காட்சியில் கமலை மிஞ்சிவிட்டார் தனுஷ்... காதல் அனுபவம் இல்லாத இயக்குநரால் இப்படி எல்லாம் எடுக்க முடியுமா என்ன.. பின்பாதிக் கதையின் இழுவையைக் குறைத்திருக்கலாம். சமந்தா வாயைத் திறக்காமல் பேசுவது ஏன்னு தெரியலை... நல்லா பிரியாப் பேச விட்டிருக்கலாம்... எதுக்கு கஷ்டப்பட்டு பல்லைக்கடிச்சிகிட்டு பேசணும்.
படத்தின் குறைகளை எல்லாம் பார்க்காது தனுஷ் படம் என்று பார்த்தால் தங்கமகன் ரொம்ப நல்லாவே இருக்கு. தனுஷை மாஸாகப் பார்த்தவர்களுக்கு இழுவையாகத் தெரியலாம்... எனக்கு பிடித்திருந்தது. தங்கமகன் தனுஷின் வெற்றிப் படங்களின் எண்ணிக்கையில் கூடுதலாய் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும்.
-'பரிவை' சே.குமார்.
16 எண்ணங்கள்:
விமர்சனம்அருமை
நன்றி நண்பரே
தம +1
காதலை சொல்வதற்கு ஒருவர் காதலித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உள்வாங்கிகொள்தல் இருந்தால் போதும். அந்த கதாபாத்திரமாக மாறி வசனம் எழுதினால் போதும்.
நான் பத்திரிகையில் பெண்கள் பிரச்சனை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு வாசகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டு கிடைத்தது. அதில் பெரும்பாலான கடிதங்கள் ஒரு பெண்ணின் பிரச்சனை ஒரு பெண்ணுக்குத்தான் புரியும் என்று வந்திருந்தது. நான் அந்தக் கட்டுரையை 'கண்மணி ப்ரியங்கா' என்ற புனைப் பெயரில் எழுதியிருந்தேன். அவர்களுக்கு அது ஆண் என்று தெரியாது. பெண்ணின் இடத்தில் நாம் இருப்பதாக கற்பனை செய்து பெண்ணின் மனதோடு பார்த்தாலே அந்த பிரச்னையை புரிந்து கொள்ள முடியும். அதற்கு நாம் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு காதலுக்கு இத்தனை விளக்கமா என்று நீங்கள் முறைப்பது தெரிகிறது. முடித்துக் கொள்கிறேன்.
த ம 3
தங்கமான விமர்சனம்...உங்கள் பார்வையும்...எழுத்தும் அழகு...
விமர்சன நடை அழகு நண்பரே
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//காதலை சொல்வதற்கு ஒருவர் காதலித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.//
ஹா... ஹா... நானும் இதைத்தான் சொல்வேன். இங்கு வசனங்களின் வீச்சில் காதல் இருப்பதை வைத்து அப்படிச் சொல்லியிருந்தேன். எங்கள் சேனைக்குழுவில் காதலித்தால் கவிதை வரும்ன்னு சொன்னவரிடம் இதற்காக விவாதமே பண்ணியிருக்கிறோம்.
//ஒரு காதலுக்கு இத்தனை விளக்கமா என்று நீங்கள் முறைப்பது தெரிகிறது. முடித்துக் கொள்கிறேன்//
அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லலைங்க... நாம் ஏதாவது ஒன்றின் மீது அன்பு வைத்தாலே எழுத்தில் ஒரு பற்று வரும். அது காதலாக இருக்க வேண்டும் என்றில்லை அல்லவா...
வாங்க சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
தங்கள் பார்வையில் விமர்சனம் சிறப்பு வாழ்த்துக்கள். த.ம4
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விமர்சனம் மிக அருமை!
குமார் அம்சமான விமர்சனம். தனுஷ் மிகச் சிறந்த நடிகர்!! எங்களுக்கும் அவரது நடிப்பு அதுவும் மிகவும் இயல்பான நடிப்பு அதனால் ரொம்பப் பிடிக்கும். டயலாக் டெலிவரி கூட அழகாகச் செய்வார். இனிதான் பார்க்க வேண்டும்...
விமர்சனம் நன்றாக இருக்கிறது. சரி படம் பார்த்து விடுகிறேன்.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் பக்கம் வந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வாங்க அம்மா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக