செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது விவசாயக் காலங்கூட கிடையாது. பயித்துல மேஞ்சுச்சுன்னு பிடிச்சிக் கட்டி வைக்க, நல்ல வெயில் காலம்... ராசுதான் அவுத்து விட்டுட்டு வந்தான்.. அப்பவே ரெங்கநாயகி காளைக்கி கத்திக்கிட்டு நிக்கிது... அவுத்துவிட்டு எங்கிட்டும் ஓடிறாமன்னு கத்திக்கிட்டுத்தான் இருந்தா. எங்க போவப்போகுது... மேச்சலுக்குப் போற இடத்துல கோயில் காளைக வருமுன்னு அவுத்துவிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டான்.
மத்தியானம் வீட்டுக்கு தண்ணிக்கு வர்ற மாட்டைக் காணாமேன்னு எப்பவும் மேயுற பக்கம் போயி பாத்தா கிடேரி, கருத்தப்பசு, பில்லைப்பசுவெல்லாம் செவனேன்னு மேஞ்சிக்கிட்டு நிக்கிதுக.. செவலையை மட்டும் காணோம். 'ஆத்தி அப்பவே சொன்னாளே... கொலையை அறுக்கப்போறாளே'ன்னு தேடி ஆத்துப்போயித்தான் வீட்டுக்கு வந்தான். 'அப்பவே சொன்னேன் கேட்டீகளா? காளைக்கி கத்திக்கிட்டு எங்கிட்டுப் போச்சோன்னு ஒப்பாரி வச்சவ, சேலையை அள்ளிச் செருகிக்கிட்டு முத்துப்பயலையும் கூட்டிக்கிட்டு தேடிப் பொயிட்டு எட்டுமணிக்குத்தான் வந்தா. அதே மாதிரி ராசு ஒருபக்கமும் சீதா ஒருபக்கமுமாத் தேடி ஆத்துப்போயித்தான் வீட்டுக்கு வந்தாக. தேடித்தேடி காலுதான் வலிச்சதே ஒழிய மாட்டைக் கண்டுபிடிக்கவே முடியலை.
"எங்க போச்சுன்னே தெரியலை... மூணு நாளாத் தேடுறோம் கண்டேபிடிக்க முடியாம மாயமா மறைஞ்சிருச்சே... எவனோ பிடிச்சி வித்துப்புட்டானோ என்னவோ?" புலம்பினாள் ரெங்கநாயகி.
"பால் மாடா இருந்தாலோ இல்லை போடுஞ் செனையா இருந்தாலோ பிடிச்சி வித்திருப்பானுங்கன்னு சொல்லலாம்.. காளைக்கி கத்துற மாட்டை எவன்டி புடிச்சி விப்பான்... காளை நோக்கத்துல எங்கிட்டாச்சும் போயிருக்கும்..." மனைவியைத் தேற்றினான் ராசு.
"ஏங்க குறி பாத்தா என்ன... முத்தம்மாக்காவுட்டு எருமை காணமப்போயி குறிகாரர் சொன்னபடி ஆறு மாசத்துக்கு அப்புறம் கிடைச்சதுல்ல.. அது மாதிரி எதாவது சொன்னாங்கன்னா.. முத்துப் போட்டுப் பாக்கலாங்க..." வேகமாகக் கேட்டாள் ரெங்கநாயகி. அவள் சொல்வது சரிதான்... முத்தம்மாக்காவுட்டு எருமையை பிடிச்சி வச்சிக்கிட்டானுங்க... அவங்களும் தேடாத இடமில்லை... குறி கோடாங்கின்னு அலைஞ்சாங்க.... அப்படியும் கிடைக்கலை... அப்பத்தான் கைகாட்டியில முத்தையான்னு ஒருத்தர் முத்துப் போட்டுப் பார்த்து சொல்ற குறி அப்படியே பலிக்கிதாம்... சொன்னா சொன்னபடி நடக்குதாம்... ஓடிப்போன பிள்ளை இங்கதான் இருக்கு போயி பாருன்னு சொன்னா அது அப்படியே பலிக்கிதாம்... ரொம்ப பிள்ளைங்களைப் பிடிச்சாந்திருக்காகளாம்ன்னு சவுந்தரம் தம்பி தங்கையா வந்தப்போ சொல்ல, அங்க போனாங்க... மாடு காணாமப் போயி ஆறாவது மாசம் அதுவா வரும்ன்னு சொன்னாரு. இவுகளும் நம்பினாலும் ஆறு மாசத்து அப்புறமான்னு கொஞ்சம் அவநம்பிக்கையோட இருந்தாங்க. ஆனா அந்தாளு சொன்ன மாதிரி ஆறாவது மாசம் முடியிறதுக்குள்ள மாடு அதுவா வீட்டுக்கு வந்திருச்சு. அந்த நம்பிக்கையிலதான் சொல்றா.
"ம்.. நாளக்கி காலையில பொயிட்டு வாறேன்.." என்றான். செவலப்பசு, அப்படி ஒண்ணும் பிரமாதமாக் கறக்குற மாடு கிடையாது. காலையில ஒண்ணரை லிட்டரும் மத்தியானம் ஒரு லிட்டரும் கறக்கும்.. மயிலப்பசு போட்ட கன்னுக்குட்டிதான் இந்த செவலைப்பசு... கண்ணுக்குட்டியா இந்த கசாலைக்குள்ள ஓடித்திரிஞ்சதுதான்... முத்துப்பயலுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது பொறந்தது. அவனுக்கு இது ரொம்பக் குளோஸ்.. இதோடதான் விளையாட்டே... கட்டிப் பிடிச்சிக்கிட்டு கிடப்பான். அப்படியே வளந்து கிடேரியாச்சு.. அப்புறம் முதக் கன்னுக்குட்டி போட்டதும் சீதாவும் முத்துவும் கிடேரியை செவலைப்பசு ஆக்கிட்டாங்க. ஒரு தடவை பக்கத்துல போன மாமனாரைப் பாத்து கொம்பாட்டவும் கண்ணச் சுத்தி கருப்பு கெடக்கு மாப்ள.. பிள்ளைகளை குத்திக்கித்திப் பிடாம பேசாம வித்துப்புடுங்கன்னாரு... அடப்போங்க மாமா, சீதாவும் முத்துவும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கிடப்பாகன்னு சொல்லிச் சிரிச்சான். அந்தச் சமயத்துல முத்துப்பய அதுக்கிட்ட போக அவனை நாக்கால நக்க ஆரம்பிச்சிச்சு... அட ஆமா அதுக்கும் தெரியிது பாருங்கன்னு மாமனாரு பொயிட்டாரு. அந்தப் பாசந்தான் ரெண்டும் சோறு கூட தின்னாம அழுதுக்கிட்டு கிடக்குக.
சாயந்தரம் ஒருக்கா ஒரு ரவுண்டு பொயிட்டு ராத்திரித்தான் வந்தான். மாடுகளுக்கு அள்ளிப் போட்ட வைக்கோலையெல்லாம் அங்கிட்டும் இங்கிட்டும் இழுத்துப் போட்டு படுத்துக்கிடக்க, 'ஏய்...ஏய்... இம்பா'ன்னு எழுப்பி, அதையெல்லாம் காலால் தள்ளி குமிச்சி வச்சிட்டு திரும்பியவன் செவலைப்பசு கட்டுமிடம் வெறுமையாகத் தெரிய, அந்தக் கல்லு மேலே உக்காந்து கண் கலங்கினான். அதுக்கு பாதச்சுழி கெடக்கு வீட்டுக்கு ஆகாதுன்னு எத்தனையோ பேரு சொல்லியும் அது இங்க பொறந்தபுள்ள... அதை விக்கவே மாட்டேன்.. செத்தாலும் இங்கதான் சாகணும்... அந்தா அந்த மாமரத்துக்கு கீழதான் அதைப் புதைக்கணுமின்னு சொல்லி மறுத்துட்டான். அந்தச் சுழி அவங்களை ஒண்ணும் பண்ணலை... நல்லாத்தான் இருக்காக. சீதா வந்து அப்பா அம்மா கூப்பிடுதுன்னு சொல்ல கண்ணைத் தொடச்சிக்கிட்டுப் போனவன், 'ம்ம்மா'ன்னு செவலப்பசு கூப்பிடுற மாதிரி இருக்க திரும்பிப் பார்த்தான். அந்த இடம் வெறுமையாய் இருந்தது. கருத்தப்பசுதான் சொர்ருன்னு மூத்தரம் பேஞ்சது. கருத்தப்பசு எப்பவும் அப்படித்தான் மூத்தரம் பேஞ்சா கசாலைக்குள்ள இருக்க தாவெல்லாம் நிரம்புற மாதிரித்தான் பெய்யும். எம்புட்டுத் தண்ணிதான் குடிக்குமோ தெரியலை.
மயிலப்பசு போட்ட கன்னுக்குட்டிகள்ல ரெண்டுதான் பொட்டைக் கன்னுக்குட்டி, மத்ததெல்லாம் காளைகதான்... பொட்டைகளை மட்டும் வச்சிக்கிட்டு காளைகளை எல்லாம் வித்துட்டான். மூத்தது கருத்தப்பசு, இளையது செவலைப்பசு. கருத்தப்பசுவும் நாலு கன்னுக்குட்டி போட்டிருச்சு. ஆத்தா மாதிரி கெட்டியா மூணு லிட்டரு கறக்கும். என்ன ஒண்ணு கண்ணுக்குட்டிக்கு ரெண்டு முணு மாசத்துக்கு அப்புறம் பால் கொடுக்காது. மாருல வாயை வச்சாலே படக்குன்னு வெட்டும். பக்கத்துலயே ஒரு ஆளு நின்னு 'ஏய்ய்ய்ய்..'ன்னு அதட்டிக்கிட்டே நிக்கணும். ஏழெட்டு மாசத்துல பால் பீச்ச விடாம உதைய ஆரம்பிக்கும். அப்புறம் காலைக்கட்டித்தான் பீச்சணும். ஆனா செவலைப்பசு கறக்கும் போது கன்னுக்குட்டிக்கின்னு பாலை மடியில ஏத்தி வச்சிக்கிட்டு அப்புறம் கன்னுக்குட்டிய அவித்து விட்டதும் கொடுக்கும். பாரு மறைச்சிக் கொடுக்கிறதைன்னு ஒரு சில சமயம் ரெங்கநாயகி மறுபடியும் பீச்சிக்கிட்டு வந்துருவா. ஒண்ணறை லிட்டருனாலும் கிட்டத்தட்ட ஒரு வருசம் கொடுக்கும் அப்பறந்தான் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு பால் வத்திப்போகும்.
"என்ன வந்ததும் வராததுமாக அங்க போயி உக்காந்துட்டீக... செவலைப்பசு கிடச்சிடுங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு... குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க...கருக்கல்ல கைகாட்டி போகணுமில்ல... " என்றாள் ரெங்கநாயகி, மாடு காணாமப் போன அன்னைக்கித்தான் ஆட்டம் போட்டா... இந்த மூணு நாளா அவன் படுற பாட்டையும் அலைச்சலையும் பாத்து அவனைத் திட்டலை.... திட்டி என்னவாகப் போகுது... தொலையட்டுமின்னா அவுத்து விட்டாரு... நம்ம நேரம்... அவரு என்ன பண்ணுவாரு... பாவம்... விடிஞ்சதுல இருந்துதான் அலையிறாரு.... எவனோ பிடிச்சிக் கட்டி வச்சிருக்கான்... எப்படியும் வந்துரும்.... என்று தன்னைத் தேற்றிக்கொண்டு அவனை திட்டுவதை விட்டிருந்தாள்.
விவசாய சமயத்துல பக்கத்து ஊரு வயலுகளுல போயி பயிரை மேஞ்சா புடிச்சிக் கட்டிப் போடுவாங்க. அப்புறம் மாட்டுக்காரங்க தேடிப்போயி மாட்டுக்கு பத்தோ இருபதோ கணக்குப் பண்ணி கொடுத்துட்டு அவங்க திட்டுறதையும் வாங்கிக்கிட்டு வருவாங்க. இவங்க ஊர்லயும் ஆடு மாடெல்லாம் பிடிச்சிக் கட்டுவாங்க. ஆனா காசை கோயில் உண்டியல்ல போடச் சொல்லிடுவாங்க. பிடிச்சாந்து கட்டுனவங்க வாங்கிக்க மாட்டாங்க... இப்படித்தான் நாலஞ்சி வருசத்துக்கு முன்னால விவசாய சமயத்துல மேயப்போன மாடுகள்ல சில மாடுகள் காணாமப்போச்சு.. மேய்க்க ஆளுக போயிருந்தும் விளையாட்டு மோகத்துல விட்டுட்டு அழுதுக்கிட்டே வந்து வீட்டுல பூஜை வாங்குச்சுக... அதுல சீதாவும் ஒருத்தி, அப்புறம் தேடிப்போனா பனசமக்கோட்டை பாரி புடிச்சி வீட்ல கட்டி வச்சிருந்தாரு.. பேசிக்கீசி அவுத்துக்கிட்டு வந்தா பஞ்சுப்புள்ளயோட பசுவ மட்டும் கணோம்... ஏழு மாச சினையா வேற இருந்துச்சு. அவனுக்கிட்ட கேட்டா... இங்க கட்டிக்கெடந்த மாடுகளைத்தான் பயக வெரட்டிப் புடிச்சாந்தானுங்க... வெரட்டும் போது எங்கிட்டாச்சும் போயிருக்கும்ன்னு சொல்லிட்டான். ஆனா மாசக்கணக்காயியும் கண்ணாப் பொறப்புலயே காணோம்.
கிட்டத்தட்ட ஒம்போது மாசத்துக்கு அப்புறம் மில்லுல வேலை பாக்குற கண்ணப்பய, கூட வேலைப்பாக்குற காடத்தி கருப்பு வீட்டு விசேசத்துக்குப் போக, பக்கத்து வீட்டுல கட்டிக்கெடந்த மாட்டைப் பாத்து இது பஞ்சம்மா மாடு மாதிரி இருக்கேன்னு மெதுவா கருப்புக்கிட்ட விசாரிச்சி இருக்கான். செனையா இருக்கும் போது அவங்க அப்பா கொண்டாந்து கொடுத்தாரு... கண்ணு போட்டு இப்ப பால் கறக்குதுன்னு சொல்லியிருக்கான். இது பனசமக்கோட்டை பாரி மகவீடுதானேன்னு கேக்க ஆமான்னும் சொல்லியிருக்கான். அப்புறம் என்ன ஆளுப்பேருக போயி பாரியோட சண்டை போட்டு, பஞ்சாயத்து வச்சி... பாரி மக வளத்ததுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டு மாட்டையும் கன்னையும் ஓட்டிக்கிட்டு வந்தாங்க... அத்தனை மாசத்துக்கு அப்புறமும் ஓட்டப்போன பஞ்சைப் பாத்ததும் மூசுமூசுன்னு மூச்சு விட்டு கையை கன்னத்தை எல்லாம் நாக்கால நக்குச்சாம் அந்தப் பசு... பஞ்சு எல்லாருக்கிட்டயும் சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டுச்சு.. ..நினைவுகள் பூக்க வைத்த கண்ணீரைத் துடைத்தபடி அது மாதிரி செவலப்பசுவும் கிடைச்சிரணும் மாரி என்று வேண்டிக் கொண்டாள் ரெங்கநாயகி.
'நீங்கள்லாம் சாப்பிட்டீகளா?"தலையைத் துவட்டியபடி கேட்டுக்கொண்டு வந்தான் ராசு. 'சாப்புட்டோம்... அதுக ரெண்டும் கொஞ்சூண்டு சாப்பிட்டு போதும்ன்னு சொல்லிடுதுக... எனக்கு ரெண்டு வாய்க்கு மேல எறங்க மாட்டேங்குது...' என்றாள். 'எனக்கும் வேணாம்... மனசே நல்லாயில்லை...' என்றான். 'ரெண்டு நாளா ஒழுங்காச் சாப்பிடலைன்னுதான் உங்களுக்குப் பிடிச்ச கத்திரிக்காயும் கருவாடும் போட்டு வச்சிருக்கேன்... அலைஞ்சிட்டு வந்து சாப்பிடாமப் படுத்தா நல்லாவா இருக்கும்... வாங்க... சீதா அப்பாவுக்கு தட்டெடுத்து வையி' என்றவள் அவனைச் சாப்பிட வைத்தாள். வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் படுத்தவன் 'செவலைப்பசு வந்திருமா? எவனும் பிடிச்சி கேரளாவுக்கு அடிமாடு ஓட்டிக்கிட்டுப் போறவனுகக்கிட்ட வித்திருப்பானுங்களோ?' என்று நினைத்தான். எங்க நின்னாலும் ஏய் செவலைன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்த்து 'ம்ம்மா'ன்னு கத்துமே... எங்கெங்கயோ தேடி அலையிறேன்... ம்ம்மான்னு கத்தக் கூடாதா? என்று நினைத்தவனுக்கு கண்ணீர் வந்தது, மாட்டுக்காக அழுகிறானான்னு நினைக்கலாம்... அதை மக மாதிரியில்ல வளத்தான். அழுகாம என்ன செய்வான்... ராசு அலைஞ்ச அசதியில அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினாலும் கனவெல்லாம் செவலைப்பசுவாவே வந்தது.
கருக்கல்ல கிளம்பி கைகாட்டி போனான்... இவனுக்கு முன்னே இரண்டு பெண்கள் வந்து அமர்ந்திருந்தனர். இவன் மூணாவது ஆள்.. முத்தையா குளித்து சாமி கும்பிட்டு குறி பாக்க உக்காரும் போது எட்டு மணியிருக்கும். இவன் முறை வரும்போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. இவன் குறியை எடுத்ததும் 'வளத்த பொருளை தொலச்சிட்டு திக்கித் தெணறி நிக்கிறியேப்பா.. கவலைப்படாதே... உன்னோட வீட்ல இருந்து எதாவது ஒண்ணு போகனுங்கிறது விதி... அது நீ வளத்த பொருளை அனுப்பிருச்சு.. நல்லதுக்குன்னு நினைச்சிக்கப்பா.. இல்லேன்னா நீ வேறா எதையாச்சும் இழந்திருப்பே...' என்றார். 'எம்மாடு கிடைச்சிருமா?'ன்னு மெதுவாக் கேட்டான். 'மூணு நாளைக்குள்ள உங்கண்ணுல காட்டுவேம்ப்பா.... அப்படி காட்டலைன்னா மூணு வருசமானாலும் கிடைக்காதுப்பா...' என்றார். அத்தோடு அவன் குறி முடித்து அடுத்த குறிக்குத் தாவினார்.
'என்ன இவரு... கிடைக்கும் கிடைக்காதுன்னு சொல்லாம மூணு நாளுல கிடைக்கலைன்னா கிடைக்காதுன்னு சொல்றாரு... இதுக்குத்தான் இந்த குறி சோசியத்தையெல்லாம் நம்புறதில்லை... இதுவரைக்கும் கிடைச்சிருமின்னு இருந்த நம்பிக்கை இப்ப செத்துப்போச்சு... ரெங்கநாயகிக்கிட்ட சொன்னா ரொம்ப வருத்தப்படுவா... பிள்ளைகளுக்குத் தெரிஞ்சா கஞ்சியே குடிக்காதுக.... என்ன பண்ணுறது... நப்பன்நாத்தா செத்தப்போ ஒரு வாரம் அழுதுட்டு அப்புறம் வேலையைப் பாக்கலையா.... செத்துட்டாகன்னு இன்னைக்கி வரைக்கும் அழுதுகிட்டு சாப்பிடாமயா கெடக்கோம்... அப்படி கொஞ்சம் கொஞ்சமா மறந்துருங்க.. என்று நினைத்தபடி வண்டியை செலுத்தியவன், பசி வயிற்றைக் கிள்ள கைகாட்டி விலக்கில் இருந்த சின்ன டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான்.
'ஏய் அலமி மாடு கத்துது பாரு.... வக்கலை அள்ளிப் போடு....' என்று கத்திக் கொண்டிருந்தவரிடம் 'அண்ணே சாப்பிட ஏதாச்சும் இருக்கா?' என்று கேட்டான். 'இருக்கு உள்ள வாங்க....' என்றவர் 'நாய்க்கு உக்கார நேரமில்லை... இதுல இவ அண்ணங்காரன் மாட்டைக் கொண்டு இங்க விட்டுட்டுப் போயிருக்கான்... நம்ம மாடுக அவுத்து விட்டா பொயிட்டு வந்திருங்க... இது புதுமாடு... எங்கிட்டாச்சும் ஓடிட்டா அவனுக்கு யாரு எழவு போடுறது... சரி... எங்கதை உங்களுக்கு எதுக்கு... குறி பாக்க போனியளாக்கும்... காலையில இங்கிட்டுப் போறதைப் பாத்தேன்... அந்தாளு சொன்னா சொன்னபடி நடக்குங்க... நமக்கு நல்லதுதானே சொன்னாரு,,' என அவன் முகம் பார்த்தார்., 'மாட்டைத் தொலச்சிட்டு குறிபாக்க வந்தேன்...இழுத்தாப்ல சொல்லியிருக்காரு...' என்றான். 'ம்... அவரு சொன்னா நடக்குங்க....சரி... இட்லி, தோசை, பொங்கல், வடை இருக்கு... உங்களுக்கு என்ன வேணும்?' என்றவரிடம் 'இட்லி இருந்தாக் கொடுங்க...' என்றான்.
அவர் இட்லி எடுக்கப்போக, அன்றைய பேப்பரை விரித்துப் பார்த்தவன், நினைவு வந்தவனாய் 'அண்ணே தேங்காய்ச் சட்னி வைக்காதீங்க.... காரச்சட்னி மட்டும் போதும்' என சத்தமாகச் சொல்ல, ராசுவின் சத்ததைக் கேட்டு கடைக்குப் பின்னாலிருந்து 'ம்ம்மா' என குரல் கொடுத்தது அவனின் செவலைப்பசு.
-'பரிவை' சே.குமார்.
41 எண்ணங்கள்:
அருமை ! கிராமிய மணம்அன்பு பாசம் எல்லாம் கமழும் கதை ..
எங்கள் வீட்டிலும் - முப்பதாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது..
குறி பலித்தது என்பதை விட செவலைப் பசு கிடைத்தது கண்டு மகிழ்ச்சி..
கவி கண்காட்டும் என்பார்கள்
உங்கள் கதையும் கண் காட்டுகிறது.
தொடர்கிறேன்.
த ம 3
செவலைப்பசு கிடைக்கணுமேன்னு இருந்தது. கிடைத்து விட்டது. மனதோடு போகுது கதை.
தம 4
ஐயா... இங்கன நிறுத்திப்புட்டீயளே.. ராசு செவலையப் பாத்தாப்லையா இல்லையா? கவலையா இருக்கில்லே...
வணக்கம்
அண்ணா.
நினைவுகளை மீட்டுச்செல்லும் பதிவு... அன்பு இரக்கம் எல்லாம் ஒருமிக்க அமைய பெற்றுள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்பாடா... கிடைத்து விட்டது...
படிக்கப் படிக்க கிடைக்கவேண்டுமே என்ற ஆவல் எழுந்தது, முடிக்கும்போது ஆவல் பூர்த்தியானது.. நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
கவலைப்படாதீங்க... குரலைக் கேட்டுட்டான்னுல்ல இனி விடுவானா.... எட்டூரு பஞ்சாயத்தைக் கூட்டியாச்சும் மாட்டைக் கொண்டாந்துற மாட்டான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாட்டிற்கும், மனிதனுக்கும் உள்ள அன்பையும், பாசத்தையும் விளக்கும் மண்வாசனை வீசும் கிராமியக்கதையில் வார்த்தைகளும்,வர்ணனைகளும் அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள் நண்பரே...
அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து மாடு கிடைக்க வேண்டுமே என்று கவலைப்பட்டேன். மிக அருமை.
நல்ல கதை. முடித்த விதம் மிக அருமை.
ஐயோ அதை ஏன் கேக்கறீங்க... நாங்களும் சேர்ந்துல்ல பசுவைத் தேடினோம்..!!! அந்த அளவு ஒன்றிப் போகுமளவு இருந்தது....இறுதியில் பசு கிடைத்ததும் ஹப்பா நம்ம தெலுங்கு படம் போல சுபம்......(ஆந்திராவுல படம் சுபமா முடியலைனா ரசிகர்கள் பிச்சிப்புடுவாங்க பிச்சி....ஹஹஹ்)
அருமை நண்பரே! அப்படியே கிராமத்திற்கு அழைத்துச் சென்றீர்கள்!
சிறப்பான சிறுகதை! ரசித்து படித்தேன்! நன்றி!
உண்மையான கிராமத்துக் கதை! நானும் முப்பது வயதுவரை கிராமத்தில் வாழ்ந்தவன் தான்! இது கதையல்ல உண்மை!
வணக்கம் சகோதரரே!
நல்ல கிராமிய மணமுடன் ௬டிய கதை.! படித்து முடிக்கும் வரை பசு மீண்டும் கிடைத்து விட வேண்டுமே என்ற தவிப்புடன்,ராசுவுடன், நானும் அந்த கிராமத்தில் இருந்த பிரமையை உண்டாக்கியது கதையின் நகர்வு.! முடித்த விதம் சிறப்பு.. அருமையான கதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
யதார்த்தமான நடை அழகு
தமிழ் மணம் 10
வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்/ கீதா மேடம்...
ஒவ்வொரு பதிவுக்கும் ரசிச்சு கருத்துப் பகிர்வதற்கு முதல் நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரரே.....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
மாடு மேய்க்கப் போய் மாட்டை விட்டு விட்டு அம்மாவிடம் அடி வாங்கி முள் குத்திய காலோடெல்லாம் மாடு தேடியிருக்கிறேன்...
அந்த அனுபவமே இப்படி ஒரு கதைக்கான களம் அமைந்த போது சிறப்பாக எழுத வைத்தது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கிராமத்து மண் வாசனை வீசும் பதிவு
நன்றி நண்பரே
படித்தேன் மகிழ்ந்தேன்
தம 11
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கிராமிய மணம் வீசும் அழகான கதை. கதையின் முடிவு சூப்பர் !!
உங்கள் காணாமல் போனப் பசுவினால் நானும் கிராமத்துப் பக்கம் போய் வந்த உணர்வு இருந்தது... சுவாரஸ்யம் குறையாமல் படிப்பவர்களையும் தேட வைத்து விட்டீர்கள் குமார்.
அருமையான கதை. பாராட்டுக்கள்.....
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எனது வலைபூ இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றம் ஆண்டு தொடங்குகிறது. இன்றைய பதிவு அசோகா அல்வா ஸ்வீட் பதிவு ! கண்டிப்பாக வருகை தாருங்கள் குமார்.
கருத்துரையிடுக