புதன்கிழமை முதல் இணையத் தொடர்பு இல்லாமல் இருந்தது. தொலைபேசித் துறைக்கு கூப்பிட்டுச் சொன்னபோது இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். எங்கள் தளத்தில் ஆறு அறைகள் இருக்கின்றன. எல்லாருமே இணையம் இல்லை என்றதும் மிகவும் வருந்தினார்கள். வேலை முடிந்து வந்ததும் ஊருக்குப் பேசலாம் என்று நினைத்தால் இணையம் வேலை செய்யவில்லை... என்ன செய்வது என்ற யோசனையோடு நீண்ட நாட்களாக பதிவிறக்கம் செய்து வைத்து பார்க்காமலே இருந்த மம்முட்டியின் முன்னறியிப்பு பார்த்தபடி போனில் ஊருக்கு ஒன்றிரண்டு வார்த்தை பேசினேன். ஊரில் என்றால் இணையப் பக்கமே செல்ல மாட்டோம். இங்கு என்னடா என்றால் இணையம் இல்லை என்றதும் என்னவோ ஒரு கையை இழந்தது போலாகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கையில் இணையத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது அப்போதுதான் தெரிந்தது. ஊருக்குப் பேச முடியாமல் எதையும் பார்க்க முடியாமல் எதோ ஒரு வனாந்திரத்துக்குள் இருப்பது போல இருந்தது. இரண்டு நாள் என்றால் வெள்ளிக்கிழமை விடுமுறையில் என்ன செய்வது என பக்கத்து அறை நண்பர் புலம்பினார். நல்லவேளை நேற்று மாலை அலுவலகம் விட்டு வந்தபோது இணையம் சிரித்தது. ஊருக்குப் போன் பண்ணி காய்ச்சலில் இருக்கும் விஷாலுடன் இரண்டு வார்த்தைகள் பேசியதும்தான் நிம்மதி வந்தது. இரண்டு ஊசி போட்டதால் வலிக்கிறது நாளையும் பள்ளிக்கு மட்டம்தான் என்று எப்பவும் போல் அவன் ஜாலியாகப் பேசியதும்தான் 102 டிகிரி காய்ச்சல், சாப்பிட்டதெல்லாம் வாந்தி என்று மனைவி அடிக்கடி போனில் சொல்லக் கேட்டதெல்லாம் மறந்து மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.
புதன்கிழமை மதியம் அறைக்கு வந்த பிறகு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பெரும்பாலும் புதிய நம்பர் என்றாலே யோசித்துத்தான் எடுப்பேன். காரணம் எதாவது வங்கிக்காரர்கள் போன் பண்ணி கிரிடிட்கார்டு பற்றி கதை அளப்பார்கள். எனவே முதல் முறை எடுக்கவில்லை. அடுத்தும் அடித்ததும் அது அபுதாபி நம்பர் என்றதால் சரி எடுக்கலாம் எனத் தைரியமாக எடுத்தேன். ஏன்னா வங்கிக்காரன் என்றால் பெரும்பாலும் துபாய் நம்பரில்தான் அழைப்பார்கள். அலோ என்றதும் குமாருங்களா... நான் கில்லர்ஜி பேசுறேன் என கம்பீரமாய் எங்கள் தேவகோட்டைக்குரல் கேட்டது. கொஞ்ச நேரம் பேசினாலும் நிறைவாய்... அன்பாய் பேசினார். அபுதாபிக்குள்தான் இருக்கிறோம்... ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.... விரைவில் அந்த மீசைக்கார அண்ணனை சந்திக்க இருக்கிறேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... அப்புறம் கவிஞர் மகேந்திரன் அவர்கள் இங்குதான் இருக்கிறார். ஊருக்குப் போயிருந்தவர் வந்து விட்டாரா என அழைத்துப் பார்த்தால் வந்தாச்சு குமார்... நேத்துதான் வந்தேன்... மழை பெஞ்சதுல ஜலதோசம் பிடிச்சிருக்கு... நைட் வேலை பாக்குறேன்... அப்புறம் கூப்பிடுறேன் என்றார். இவர் தொலைவில் இருக்கிறார்... இன்னும் நேரில் பார்க்கவில்லை.... விரைவில் சந்திக்க வேண்டும்.
எங்களது புராஜெக்ட் ஒரு வழியாக சென்ற வாரம் முடிவுக்கு வந்தது. அடுத்த கவர்மெண்ட் அலுவலக புராஜெக்டில் எல்லோரையும் விட்டாச்சு... இங்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய பணிகள் இருக்கின்றன என்பதால் என்னை மட்டும் விட்டுட்டானுங்க... அலுவலகத்தில் இருப்பதற்கு இங்கு பிரச்சினை இல்லைதான் என்றாலும் நான்கு பேர் இருந்த அறையில் நான் ஒருவன் மட்டுமே இருக்க, கடுப்பாக இருந்தது. அடுத்தநாள் வேறோரு கம்பெனி ஆட்களை இடம் மாற்றி நாங்கள் இருந்த அறைக்குக் கொண்டு வந்து வைப்பதற்காக என்னை எப்போது போவீர்கள் என்று கேட்டார்கள். இன்னும் பத்து நாளாகும் என்று சொல்லி வைக்க, அதுவரைக்கும் கொஞ்சம் இடநெருக்கடி இருக்கும் இவர் பொயிட்டா சரியாயிடும் என்று சொல்லி ஒரு அரபிப்பெண், ஒரு ஆங்கிலேயன், ஒரு பிலிப்பைனி ஒரு பங்களாதேஷ்காரன் என நால்வரையும் அந்த சிறிய அறைக்குள் அடுக்கிச் சென்றார்கள். எனது மேஜை பெரிதாக இருக்கும் பங்களாதேஷ்காரனுக்கோ சிறிய மேஜை, அது மாதிரி இருந்தா நல்லாயிருக்கும் இதுல எப்படி வேலை செய்யிறது என என்னைப் பார்த்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை... பின்னர் மேஜை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தவர்களிடம் சண்டைக்குப் போனான்... அவர்களோ எங்க முதிர் (மேனேஜர் / பெரிய ஆள்) என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்க செய்தோம். எதாயிருந்தாலும் அங்க கேட்டுக்கங்க என்று சொல்லிச் செல்ல புலம்பிக்கிட்டே திரிந்தான். அப்பவே நெனச்சேன் தம்பி ஒவரா சீனைப் போடும் போல என... அன்னைக்குப் பூராம் வேலை செய்யாமல் கத்திக்கிட்டே இருந்தான். காய்ந்த ஓலையில் சிறுநீர் கழிச்ச மாதிரி சொடசொட லொடலொடன்னு பேசினான் பத்தாததுக்கு அரபிக்காரியும் சேந்து கத்துனா... அன்றைய பொழுது அவர்களின் கத்தலில் கழிந்தது.
முந்தாநாள் காலையில் வந்ததும் கொஞ்சம் பில்டப் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்போ பார்த்து இரண்டு பிலிப்பைனி பசங்க வந்தார்கள். இவர்களுக்கு ஆட்டோகேட் வரைபடம் வரைந்து கொடுப்பவர்கள் போல... அவர்களிடம் அது சரியில்லை இது சரியில்லை என்று ஆரம்பித்து ஓவராக கத்த ஆரம்பித்தான். அவர்களும் எல்லாவற்றிற்கும் சிரித்தே பதில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் நீங்க அனுப்புற சேப் (shape) பைல் சுத்தமா சரியில்லை... அதுல எந்த பாயிண்டுமே குறிக்கிறதில்லை அப்படி இப்படின்னு சொன்னான். உடனே வந்தவர்களில் ஒருவன் எங்க வேலை சேப் பைல் ரெடி பண்றது. முதல் முறை சரியாயில்லைன்னு சொன்னீங்க... உடனே சரி பண்ணி இரண்டாவது முறை அனுப்பினோம்... பாயிண்டெல்லாம் எங்க வேலை இல்லை என்றான் கொஞ்சம் சூடாக... உடனே இந்த முறை நான் சரி பண்ணிட்டேன்... அடுத்த முறை மேல புகார் பண்ணிருவேன் என்றதும் எங்க வேணுமின்னாலும் பண்ணிக்க என அவர்கள் நெஞ்சை நிமிர்த்த நால்வரில் ஒருவனான பிலிப்பைனி தங்கள் நாட்டுக்காரர்களுக்கு ஆதரவாக சேப் பைல் சரியாத்தானே இருக்கு... அதில் ஒன்றும் தப்பில்லையே நான் அதை வைத்துத்தான் வேலை பார்க்கிறேன் என்றான். பெங்காளியோ அவர்கள் போகும் வரை ஒன்றும் பேசாதிருந்துவிட்டு போனதும் இந்த பிலிப்பைனிக்கிட்ட அது ஓட்டை இது ஓட்டை எங்க இருக்கு என்ன இருக்கு என சண்டை இடுவது போல் கத்திப் பேச... பிலிப்பைனி அடிச்சான் பாருங்க நெத்தியடி... இப்ப இங்க நீயும் நானும் பேசுறோம்.... நான் எதோ தப்புப்பண்ணி நீ என்னை கண்டிகிற மாதிரி கத்திப் பேசுறே... எதுக்கு கத்திப்பேசுறே... மெதுவா பேசு... எனக்கு கத்திப் பேசுனா பிடிக்காது என சமுத்திரம் படத்தில் வில்லன் அஸ்கி வாய்ஸ்ல பேச சொல்ற மாதிரி படக்கென்று அடித்தான். அத்தோடு சாரி... சாரி என்னோட குரலே அப்படித்தான் என சொல்லி பேசாமல் அமர்ந்துவிட்டான். அப்புறம் வெளியே போன ஆங்கிலேயன் வந்ததும் பிலிப்பைனி சொல்ல அவன் ரெண்டு டோஸ் கொடுக்க, இவனுக்கு ஆதரவாக பேசிய அரபிப்பெண் இருந்த இடம் தெரியலை... அந்த பிலிப்பைனியும் ஆங்கிலேயனும் 'சாரிங்க... இது அடிக்கடி நடக்கும்... அவன் இங்க கத்தி உங்களை தொந்தரவு பண்ணதுக்கு நாங்க மன்னிப்புக் கேட்கிறோம்' என்றார்கள். பங்காளி அன்னைக்கு முழுவதும் பேசவேயில்லையே... நேற்று வந்து மீட்டிங்... அது இதுன்னு பரபரப்பாத் திரிஞ்சான். வேலை பாக்குறவனுகளை விட இந்த வெட்டிப் பந்தாக்களின் அலும்பு எல்லா அலுவலகத்திலும் இருக்கத்தான் செய்யுது.
இன்னும் அவனுங்க கதைதான் தொடருதுங்க... இது நேற்று நடந்ததுதான்... நாங்க இருக்கது சின்ன அறை... அதில் ஏசி குளிரு ரொம்ப இருக்கும். பெரும்பாலும் அரபிப்பெண்கள் இருக்க இடத்தில் ஏசி கொஞ்சம் கூட குறையக் கூடாது. நாம அங்க உக்காரவே முடியாது... ஏன்னா கொஞ்ச நேரத்தில் பிரீசர்ல வச்ச சிக்கன் மாதிரி ஆயிடுவோம்... அதனால நான் பெரும்பாலும் அவர்கள் இருக்கும் இடத்தில் அமர மாட்டேன். அவனுங்க வந்ததுல இருந்து கடுங்குளிர்தான் போங்க... கொஞ்சங்கூட குறைக்க மாட்டானுங்க... போந்தாக்கோழி ஆங்கிலேயன் சொல்லிப் பார்த்தான்... எழுந்து போய் குறைத்துப் பார்த்தான்... ம்ஹூம்... ஒரு கட்டத்தில் அவனால் முடியல ஒரு ஸ்வெட்டரைக் கொண்டு வந்து கழுத்தைச் சுற்றி கட்டிக்கிட்டு உக்காந்திருக்கான். குளிரில் ரொம்ப பாதிக்கப்பட்ட அவன் நேற்றுஎன்னிடம் அவ (அரபிக்காரி) பிரீசர்... இவன் (பங்காளி) பிரிட்ஜ்... ரெண்டுக்கும் இடையில நாம உக்காந்து வேலை பாக்குறது கஷ்டம்தான் என்று சொல்லிச் சிரித்தான்.
முகநூலில் நல்ல நிகழ்வுகளைப் பகிரும்போது நாமும் அதை லைக் பண்ணுறோம் சரி... ஒரு வருத்தமான நிகழ்வு பற்றிய பகிர்வைப் பார்க்கும் போது அதையும் லைக் பண்ணுவது சரிதானா? ஒருவரின் இறப்பைக் கூட நாம் லைக் பண்ணுகிறோம் என்றால் என்ன மாதிரி உலகத்தில் வாழ்கிறோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இன்று கூட ஜாக்கி அண்ணனும் இன்னும் சிலரும் மருத்துவர் புருனோ என்பவரின் மனைவி இளம் வயதில் அகால மரணமடைந்ததைப் பகிர்ந்திருந்தார்கள். அதிலும் ஏகப்பட்ட லைக்குகள். இறந்த மருத்துவர் அவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியிருப்பார்கள். இன்று அவரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரால் மட்டுமல்ல மருத்துவரான அவரின் கணவராலும் முடியாது போனது வருத்தத்திற்குரிய விஷயமே... இளவயது மரணம் என்பது மிகவும் கொடுமையானது. அவரின் இழப்பு அவரின் கணவருக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இனி வருத்தமான நிகழ்வுகளை லைக் பண்ணுவதைவிட நாலு பேருக்குத் தெரியும் விதமாக பகிர்ந்து கொள்ளுவோம்.
மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
17 எண்ணங்கள்:
நான் அழைத்ததற்கு ஒரு பதிவா ?
நண்பர் மகேந்திரன் வந்து விட்டாரா ?
இன்று மாலை தங்களை சந்திக்கிறேன் நண்பரே.
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இனி வருத்தமான நிகழ்வுகளை லைக் பண்ணுவதைவிட நாலு பேருக்குத் தெரியும் விதமாக பகிர்ந்து கொள்ளுவோம் //
ஆம் அவருக்காக பிரார்த்திப்போம்.
வெளிநாடில் தான் இணையம் நம்மை எல்லாவற்றுடனும் இணைக்கிறது.
அது இல்லைனா அவ்வளவுதுதான்.
கில்லர் ஜி மதுரை பதிவர் சந்திப்பில் சுட்டுத் தள்ளிய நிறைய போட்டோகளை காட்டி இருப்பாரென நினைக்கிறேன் !
த ம 2
வெளிநாட்டில் இணையம் இல்லை என்றால் கஷ்டம் என்பது போல், எங்களுக்கும் கஷ்டம் தான் குமார்.குழந்தைகளிடம் பேச முடியாமல் கஷ்டபடுவோம், நீங்கள் ஊருக்கு குழந்தைகளிடம் பேச முடியாத மாதிரி.
//இனி வருத்தமான நிகழ்வுகளை லைக் பண்ணுவதைவிட நாலு பேருக்குத் தெரியும் விதமாக பகிர்ந்து கொள்ளுவோம்.//
நல்ல கருத்து, நானும் வழி மொழிகிறேன்.
துக்க நிகழ்வுகளுக்குக் கூட லைக்கா
அன்பருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
tha ma 3
தனிமையின் வலி போக இப்படி பார்க்கும் அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொள்வதே வழி!அருமை குமார்
அலுவலக அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இருந்தன.
வெளிநாட்டு வாழ்க்கையில் இணையம் இல்லை என்றால் கஷ்டம்தான்! சக அலுவலர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கும் தேவகோட்டையாரின் போன் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி!
சுவையான நடப்புகள்;
சுவாரஸ்யமான நடை!!
***மருத்துவர் புருனோ என்பவரின் மனைவி இளம் வயதில் அகால மரணமடைந்ததைப் பகிர்ந்திருந்தார்கள். ***
பயணங்கள் என்கிற தளத்தில் டாக்டர் ப்ரூனோ எழுதிக்கொண்டிருந்தார். இப்போது எழுதுவதில்லை. பதிவுலகில் முன்பு சஞ்சாரித்த அவரை எனக்குத் தெரியும். Sorry to know about his wife, Kumar! :(
முகநூல் பற்றி சொன்னது சரி...
வெளி நாட்டில் வசிப்பவர்களின் சிக்கல்களை உணர முடிகிறது.
அங்கேயும் கிரெடிட் கார்டு போன் தொல்லைகளா?
செய்தி எதுவானாலும் எழுத்தும் நடையும் சுவையாக இருந்தால் படிக்க தோன்றும்! நன்று!
அலுவலக அனுபவங்கள் நன்று.....
வெளிநாட்டிலும் இது போன்ற பிரச்ஹ்கினைகளா!! இங்குதான் என்றால்!!??
முகநூல் பற்றியது மிகவும் சரியெ!
கருத்துரையிடுக