வெறிச்சோடிக் கிடந்தது
அப்பத்தா இல்லாத வீடு...
வெறுமை சுமந்திருந்தது
நேற்று அவள்
கிடந்த திண்ணை...
எச்சில் பணிக்கனும்
வெற்றிலைப் பெட்டியும்
எடுப்பாரின்றி மூலையில்...
தெருவில் போவோரை
காது தண்டட்டி ஆட
பேரைச் சொல்லிக்
கூப்பிட்டு விசாரித்தபடி
அமர்ந்திருக்கும் நாற்காலி
சுமக்க ஆளின்றி
சும்மா கிடந்தது...
எங்கும் நிறைந்திருந்த
அவளின் நினைவுளின்
சுமையால் அமுங்கிக்
கிடந்தது வீடு...
நல்ல மனுஷி என
முந்தானையில் மூக்கைச்
சிந்தியபடி இன்னமும்
வந்து கொண்டுதான்
இருக்கின்றன உறவுகள்...
அத்தைகள் ஆளுக்கொரு
மூலையில் அழுத வண்ணம்...
அப்பாக்கள் எல்லாம்
அப்பத்தாவைப் பேசியபடி...
அவள் உடுத்திக் களைத்த
கோபுரக்கரைச் சீலை
அவளின் வாசம் தாங்கி
வாசல் கொடியில்...
அவளின் கையிலேயே
எப்போதும் இருக்கும்
ஊன்றுகோல் யாரும்
தேடாமல் வாசலில்
கிடந்தது அநாதையாய்...!
வெத்தலை தண்ணியும்
கொள்ளிக் கட்டையும்
கொண்டு வைக்கும் போது
மறக்காம இந்த கம்பையும்
கொண்டே வைச்சிருங்கப்பா...
யாரோ வெளியே
சொல்லிக் கொண்டிருக்க...
அப்பத்தாவின் வாசம்
மெல்லக் கரைந்து
கொண்டிருந்தது வீட்டுக்குள்...
-'பரிவை' சே.குமார்.
24 எண்ணங்கள்:
இதே சூழல் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது நண்பரே நானும்கூட சிறிது நேரம் பழமையில் மூழ்கி விட்டது உண்மையே...
மறப்போம்,,, மடைமாற்றுவோம்,,,,
//அவளின் கையிலேயே
எப்போதும் இருக்கும்
ஊன்றுகோல் யாரும்
தேடாமல் வாசலில்
கிடந்தது அநாதையாய்...!//
நேற்று இருந்தவர் இன்று இல்லை. நிலையில்லா உலக வாழ்க்கையை அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுகள்.
நிறைய பேர்களின் மனங்களிலும் இப்படித்தான் அன்பிற்குரிய முதியவர்களின் நினைவு இன்னும் மணம் வீசிக்கொண்டிருக்கிறது!
சிறந்ததொரு பாமாலை அப்பத்தாவிற்கு!!
அப்பத்தாவுக்குப் பாடிய பாமாலை உளந்தொட்டது சகோ!
ஒவ்வொரு வீடுகளிலும் இப்படி யாரேனும் நினைவில் நின்று அவர் வாசம் வீச வைத்திருப்பர்.
என் அம்மாவின் வாசம் இன்று நினைத்தாலும் இதோ இப்பவும்...
அருமையான கவிதை அண்ணா!
இது என் அப்பத்தா பற்றிய பதிவு http://makizhnirai.blogspot.com/2014/06/self-estimation.html. நேரம் கிடைக்கையில் படித்து பாருங்க!
அருமை. தோழர் ஜோர்.
தொடர்க
//வெளியிட அல்ல //
த.மா மூன்று
திருமங்கலமாக இருந்தால் நல்லாத்தான் இருக்கும்.
தெருவில் போவோரை
காது தண்டட்டி ஆட
பேரைச் சொல்லிக்
கூப்பிட்டு விசாரித்தபடி
அமர்ந்திருக்கும் நாற்காலி
சுமக்க ஆளின்றி
சும்மா கிடந்தது...//
இப்படி அன்பாய் இனி யார் பேசுவார்கள்?
அப்பத்தாவின் நினைவுகள் நெஞ்சில் பசுமை.
அப்பத்தாவின் நினைவலைகள் அருமை
தம 4
இவ்வளவு அருமையான கவிதையை உங்க அப்பத்தா வாசித்து இருந்தால் ஆந்தத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி இருக்கும். அப்பத்தாவின் மேன்மையை உணர்த்தும் அருமையான கவிபாடி நீங்கள் அவருக்குமேலே உயர்ந்து விட்டீர்கள், குமார்!
கவிதை வரிகளா..
கண்ணீர் வரிகளா?..
இருக்கும் வரை அப்பத்தாவின் அருமை பலருக்கும் புரிவதில்லையே !
த ம 5
நெகிழ்வு.
உணர்வுகளை உருக்கமாக சொல்லும் சிறந்தகவிதை! வாழ்த்துக்கள்!
பழைய நினைவுகளில் மனம் அலைபாய ஆரம்பிதுவிட்டு....
வெறுமையாக ஒடுங்கி விட்டது சகோ
இனம் புரியா அன்பின் கரைசல்..கவிதை நன்றாக இருக்கிறது.
அருமையான கவிதை அண்ணாச்சி!
அப்பத்தாவின் நினைவு பாமாலை மிக அருமை சகோ.
kavalai kavithai...... arumai Kumar.
உலர்ந்துபோன உறவின்
விட்டுப்போன வாசனை
===
நெஞ்சம் உருக்கும் கவிதை சகோதரரே...
வாழ்க்கை என்றால்
இவற்றை எல்லாம்
சந்தித்தே ஆகவேண்டும்
ஆயினும்
எமது உள்ளம்
அமைதியடைய மறுக்கிறதே!
அருமையான கவிதை!
அப்பாத்தா இல்லாத வீட்டின் வெறுமையை கவிதை உணர்ஹ்த்டி விட்டது அருமை குமார்
அப்பாவின் அம்மாவும் அம்மாவின் அம்மாவும் மறக்க முடியாதவர்கள்!
ம்ம்ம் அருமையான கவிதை! - துளசி, கீதா
ம்ம் இதைப் படிக்கும் போது என் பாட்டியின் நினைவு வந்தது!அப்பாத்தா தவிர்க்க இயலவில்லை! - கீதா
கருத்துரையிடுக