மார்கழி... இதை பீடை மாதம் என்பார்கள். ஆனால் மற்ற மாதங்களில் நாம் அதிகாலையில் குளித்து கோயிலுக்குச் செல்கிறோமா என்றால் பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை... விடிந்தும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் செய்வோம். ஆனால் மார்கழியில் மட்டும்தான் பெரும்பாலானோர் அதிகாலையில் குளித்து விடியும் முன்னர் கோவிலுக்குச் சென்று வருவோம். இது பீடை மாதம் அல்ல... பீடையை ஒழிக்க வந்த மாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்கள் ஊரில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது திருவிழா (செவ்வாய்) என்பதே அரிதாகத்தான் இருந்தது. எப்பவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கூட்டம் பெரும்பாலும் சண்டையில் முடிய செவ்வாய் என்பது கனவாகிப் போகும். பின்னர் நாங்களாக அந்த நாளில் சாமி கும்பிட்டோம். அதுதான் தொடக்கம்... பின்னர் ஒரு நல்ல நாளில் செவ்வாய் போடுவதென ஊரார் கூட்டதில் முடிவெடுக்க காப்புக்கட்டும் அன்று அடிதடிகள்... சண்டை... சச்சரவு... என எல்லாம் இருந்தும் அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழாவைத் தொடங்கினோம்.
பின்னர் போலீஸ், நாட்டுப் பஞ்சாயத்துக்கு அம்பலத்தின் அழைப்பு, அதை ஏற்க எங்கள் மறுப்பு என அந்த வருடம் விழா சிறப்பாக... வெகு சிறப்பாக நடந்தது... அது இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது... இனியும் தொடரும்... செவ்வாயை ஆரம்பித்து வைத்தது போல் மார்கழி மாதம் பொங்கல் வைப்பது என்று நாங்களே முடிவு செய்து வீட்டுக்கு 50 ரூபாய் கேட்டபோது பெரியவர்கள் சிலர் எதிர்ப்பு... சிலர் ஆதரவு... ஆதரவாளர்களின் துணையோடு 1500 ரூபாய்க்கு ஒரு மாதம் ரேடியோ போட தெரிந்த பையனை அழைத்து வந்தோம்.
முருகன் சவுண்ட் சர்வீஸ் இதுதான் அவனது கடையின் பெயர். மைக் செட்டை கட்டிவிட்டு வீட்டுக்குப் போனவனை எங்களுக்கு எதிராக செயல்பட்டவருக்கு ஆதரவாக ஒரு பெரும்புள்ளி கூப்பிட்டு ரேடியோவை உடனே அவிழ்க்கிறாய் இல்லை என்றால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்ட, அவன் அந்த ஊர்ல உள்ள பெரியவங்களும், எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களும் சொல்லித்தான் கட்டியிருக்கேன். ஊரே சொல்லிக் கட்டியவன் தனி ஒருத்தருக்காக அவிழ்க்க மாட்டேன் என்று சொல்ல, பின்னர் போலீஸ் வரை சென்று சுபமானது. அம்பலம் ஊருக்கே வந்து அவன் பண்ணியது தப்புத்தான் அவனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றது தனிக்கதை.
ஊரில் எல்லா வயல்களிலும் நெற்பயிர் பொதி கட்டி இருந்த நேரம். பக்கத்து ஊர் கோவில் மாடுகள் வந்து அழித்து விடாமல் இருக்க வயலில் ஆங்காங்கே குடிசை போட்டு பெரியவர்கள் தங்கி இரவெல்லாம் தகரங்களை வைத்து அடித்து ஓசை எழுப்பி காவல் காப்பார்கள். முதல் வருடம் மார்கழி மாதம் சாமி கும்பிடுவது என முடிவு செய்தாச்சு. எல்லாமே பசங்களாக செய்த வேலைதான். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திரிச்சு... குளிச்சி... ரேடியோ போட்டு விட்டு கோவிலுக்கு முன்பாக தயார் பண்ணி வைத்திருந்த கல் அடுப்பில் நாங்களே பொங்கல் வைத்து அஞ்சரை மணிக்கெல்லாம் கோவில் மணியை அடித்து விடுவோம். அஞ்சே முக்காலுக்கு காவலுக்குச் சென்றவர்கள் திரும்பி வர, ஆறு மணிக்கு 'துதிப்போர்க்கு வல்வினைபோம்... துன்பம்போம்...' என கந்தர் சஷ்டி கவசத்தை ஓட விட்டு பிள்ளையார், முருகன், மாரியம்மனுக்கு தீப ஆராதனை பார்த்து சாமி கும்பிட்டு... பொங்கல் வழங்கி கலைந்து செல்வோம்.
மார்கழிக் குளிரில் எரியும் விறகடுப்பின் முன்பு பேசிக்கொண்டு பொங்கல் வைத்த அந்த நாள் ஞாபகம் ஒவ்வொரு முறை மார்கழி கடந்து செல்லும் போதும் நெஞ்சுக்குள் பனித்துளியாய் பரவிச் செல்லும். சில நாட்களில் அதிகாலையில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். அடாது மழை பெய்தாலும் விடாது காரியத்தில் கண்ணாய் இருப்போம். கோவிலுக்குள் ஈர மணலைப் போட்டு பொங்கல் அடுப்பை வைத்து பொங்கல் தயார் பண்ணிவிடுவோம். முதல் வருடம் ஒரு நாள் கூட தாமதித்ததும் இல்லை... தளர்ந்ததும் இல்லை.
எங்களின் இந்த ஆர்வத்தைப் பார்த்து அடுத்த முறை மார்கழிப் பொங்கலை ஊர் எடுத்துக் கொண்டது. சீட்டுக் குலுக்கிப் போட்டு தினம் ஒரு வீடு என்று கொண்டு வந்தார்கள். அப்புறம் வருடங்கள் கரைய ஐயரை வைத்துப் பண்ண ஆரம்பித்தார்கள். யாருக்கு சீட் விழுந்திருக்கிறதோ அவர்கள் ஐயருக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தார்கள்.
செவ்வாயும், மார்கழி மாதமும் நாங்கள் தொடங்கி வைத்து தொய்வில்லாமலும் சிறப்பாகவும் போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கண்மாய்க்குள் மரங்களுக்கு இடையே இருந்த முனியய்யாவுக்கு கல்லாலே மேடை அமைத்து கோவில் கட்டினோம்... சென்ற வருடம் மாரியம்மனின் ஓட்டுக் கொட்டகை கோவிலை கோபுரத்துடன் கூடிய அழகிய கோவிலாகக் கட்டி சில மாதங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருக்கிறது சில கசப்புக்களை சுமந்தபடி...
ஆம் இந்த முறை ஐயரைக் கொண்டு வந்ததில் உடன்படாத எங்கள் இளைஞர்கள் எதிர்ப்பை உருவாக்கி யாருக்கு சீட் விழுந்திருக்கோ அவர்களே பொங்கல் வையுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். ஐயரை வைத்து பண்ணுவோம் இவ்வளவு வரும் என்ன செய்யலாம் என்ற எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் நான் முடிவெடுத்துவிட்டேன் என்று அதிகாரத் தோரணை வந்தபோதுதான் இளைஞர்கள் வீறு கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களது தொலைபேசி செய்திகள் சொல்கின்றன. இது சாதாரண விஷயம்தான்.... இதுவும் கடந்து போகும் எப்போதும் போல் சில சந்தோஷங்களால்...
எல்லாம் ஒரு தாய் மக்கள் என்பதாலும் சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கு என்ற நிலைக்குப் போகாததாலும் சில மௌனங்கள் பல பிரச்சினைகளை உடைத்து விடுவதும் உண்டு. எப்படியிருந்தாலும் திருவிழாக்களுக்கு பங்கம் வரப்போவதில்லை... வருமளவுக்கு வைத்துக் கொள்வதுமில்லை... விடுவதுமில்லை... என்னிடம் பேசிய சேகரிடம் இந்தப் பிரச்சினைகள் செவ்வாய் வரை போய்விடக் கூடாது சித்தப்பு என்றேன். இல்ல மகனே அதெல்லாம் எதுவும் நடக்காது... செவ்வாய்க்கு யாரும் எதிர்க்கக் கூடாதுன்னு கூட்டத்திலேயே சொல்லிட்டோம் என்றான்,
மார்கழியில் ரெண்டு குழாய் ரேடியோவுடன் வந்து மிரட்டல்களை சமாளித்து எங்களுடன் நின்ற ரேடியோ முருகன்தான் இன்று வரை எங்கள் ஊர் திருவிழாவுக்கு மைக் செட் போடுகிறான். இன்று தேவகோட்டையில் பிரபலமான மைக் செட் அமைப்பாளரில் அவனும் ஒருவன். அவனிடம் இன்று ஒரு திருவிழாவுக்கு அல்ல... நாலைந்து திருவிழாவுக்கு உள்ள பொருட்கள் இருக்கின்றன... அவனும் வளர்ந்துள்ளான்... பெருமையாக இருக்கிறது. இந்த வருடம் மார்கழிக்குத்தான் அவனது மைக்செட் இல்லை.... ஏனென்றால் இந்த வருடம் கோவிலுக்கு சொந்தமாக மைக் செட் வாங்கிட்டாங்கல்ல... எங்க அம்மனும் சிறப்பா இருக்கா... எங்களையும் சிறப்பா வச்சுக்குவாங்கிறதுல துளி கூட சந்தேகம் இல்லை...
-படத்துக்கு நன்றி : சக்தி விகடன் முகநூல் பக்கம்
கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்
7 எண்ணங்கள்:
மார்கழி மாத காலை சுகமே தனி தான்... நீங்கள் ஆரம்பித்து வைத்த ஆர்வத்திற்கும், பல இடையூறு வந்தாலும் தொடர்ந்து நடப்பதற்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
எங்க அம்மனும் சிறப்பா இருக்கா... எங்களையும் சிறப்பா வச்சுக்குவாங்கிறதுல துளி கூட சந்தேகம் இல்லை...
- வாழ்க வளமுடன்!..
உங்கள் பகிர்வைப் பார்க்க/படிக்க அவ்ளோ சந்தோஷமாக இருக்கிறது,ஏதோ எங்கள் ஊர்க் கோவிலில் நிகழ்வது போல்!அம்மன் அருள் வேண்டி...............
அழகிய அம்மன் திருப்படத்துடன்
அருமையான நினைவுப் பகிர்வு!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.3
சிறப்பான பக்திப் பதிவு.
மார்கழி மாத காலை சுகமே தனி தான்.
.tha/ma/4
இனிய நினைவுகள்.....
பகிர்வுக்கு நன்றி குமார்.
த.ம. +1
கருத்துரையிடுக