மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மனசின் தோற்றமும் வளர்ச்சியும்...

ல்லோருக்கும் வணக்கம்...

எழுத்து... எழுத ஆரம்பித்ததும் வசந்தத்தை அள்ளி வீசிய சாமரம்... எழுத்து என்னும் மகரந்தம் எனக்குள் சூழ் கொண்டது கல்லூரி நாட்களில்தான். அதுவும் உன்னால் எழுத முடியும்... முயற்சி செய்து பார் என என்னை எழுத்துலகுக்கு ஒருவர் கைபிடித்து இழுத்ததால் கிறுக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து வசப்பட ஆரம்பித்திருந்தாலும் இன்னும் நல்லதொரு எழுத்தாக உருவெடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த கிராமத்து மண்ணுக்குள்ளும் எழுத்து என்னும் விதை முளைக்கும் என்று வலுக்கட்டாயமாக எழுத்துக்குள் இழுத்து வந்தவர் என கல்வித் தந்தை பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை உரித்தாக்குகிறேன்... கல்லூரிக் காலத்தில் நான் எழுதியவைகளை... இல்லையில்லை கிறுக்கியவைகளை எல்லாம் பொறுமையுடனும் பொறுப்புடனும் படித்துத் திருத்தி... நல்லாயிருக்கு என என்னை உற்சாகமூட்டிய தோழர் தோழியருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியினைச் சொல்லிக் கொள்கிறேன்.


மனசு...

இந்தப் பெயருக்கு நான் மட்டுமே சொந்தக்காரன் அல்ல... எங்கள் அறுவர் குழுவுக்கு சொந்தமான பெயர் இது. ஆம் கல்லூரியில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயரே மனசு. நாங்கள் என்றால் மட்டும் போதுமா என்ன... மனசில் அங்கம் வகித்த நட்புக்களின் பெயரை இந்த நேரத்தில் சொல்வதே சாலச் சிறந்ததாகும். கையெழுத்துப் பிரதி உதயமாகக் காரணமாக இருந்தவன் என்னில் பாதியாய் இருந்த கரு.முருகன், இவனது முயற்சியால் கைகோர்த்தவர்கள் இளையராஜா, பிரபாகரன், அம்பேத்கார் என்ற மூன்று முத்தான நண்பர்கள். மற்றொருவர் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் எதற்கும் துணிச்சலுடன் பயணிக்கும் சுபஸ்ரீ இவர்களுடன் நான் என ஆறு பேர் சேர்ந்து மனசு இதழை ஆரம்பித்தோம்.

கல்லூரியில் அப்போது எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவர்களில் அசோகன் மற்றும் நவநீதன் என்ற இரணடு அண்ணன்கள் நீ என்ற பத்திரிக்கை நடத்தி வந்தார்கள். நாங்கள் மனசு ஆரம்பிக்கும் போது எனது சகோதரர் மா.பழனியப்பன் தனது நண்பர்களுடன் இணைந்து ரோஜா என்ற இதழை நடத்தினார். கல்லூரியில் சிறுகதைப் போட்டியெல்லாம் நடத்தி 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற தொகுப்பைக் கொண்டு வந்த பரக்கத் அலி கவி'தா' என்ற இதழை நடத்தினார். ஒவ்வொரு இதழுக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்தது. எங்கள் மனசு எல்லாப் பக்கமும் நல்ல பெயரைப் பெற்றது. 

வலையில் எழுத ஆரம்பித்த போது கவிதை, ஹைக்கூ, மனதில்பட்டது, சிறுகதைக்கென தனித்தனியாக வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். பின்னர் சில நண்பர்கள் ஒரே இடத்தில் பதியுங்கள் எதற்காக இத்தனை வலைப்பூக்கள் என உரிமையுடன் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் சரியெனத் தோன்ற எல்லாவற்றையும் எழுத மனதில்பட்டதை எழுத பயன்படுத்திய எனக்குப் பிடித்த பெயரான மனசை பயன்படுத்திக் கொண்டேன். மனசு எனக்குள் எத்தனையோ இன்பத்தை விதைத்த பெயர். கல்லூரியில் கையெழுத்துப் பிரதியாய் ஆரம்பித்து இன்று எனது வலைப்பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது 'மனசு'.

கல்லூரியில் படிக்கும் போது பத்திரிக்கைகளில் கதை, கவிதை என எழுதி வெளிவரும் போது கிடைத்த சந்தோஷத்தைவிட வலைப்பூவில் எழுதும் போது அதன் நிறைகுறைகளை அப்போதே நண்பர்கள் சுட்டிக் காட்டுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எழுதும் எழுதுக்கு உடனுக்குடன் நண்பர்களால் அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகப் பெரிய பாக்கியமே. அந்தப் பாக்கியத்தைக் கொடுத்தது இந்த வலைப்பூ உலகம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த உடன் கொஞ்ச நாட்களாக விட்டு விலகி இருந்த சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். வலையில் பதிந்து போக எழுதிய மொத்தக் கதைகள் 100க்கு மேல் போய்விட்டது. கவிதைகள், ஹைக்கூ என எழுத்து நீண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியே. ஆரம்பத்தில் சாதாரணமாக எழுத ஆரம்பித்து தற்போது எங்கள் பக்க பேச்சு வழக்கில் கதைகளை எழுதும் போது கிடைக்கும் பாராட்டுக்கள் அதிகமாகவே தெரிகிறது. எல்லாம் சாத்தியமானது வலை நட்புக்களால்தான்...

வலைப்பூவில் எழுத காரணமாய் இருந்த என் இனிய நண்பன் மோ.கணேசனுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தக் காலகட்டத்தில் வலைச்சரத்தில் எனக்கு இரண்டு முறை ஆசிரியர் பொறுப்புக் கொட்டு என்னை பட்டை தீட்டிக்கொள்ள... வலையுலகுக்கு என்னை பிரகாசமாக தெரிய வைக்க உதவிய எங்கள் ஐயா திரு.சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஐயா அவர்கள் எங்கள் குடும்ப நண்பராக குடும்ப விழாக்களில் கலந்து கொள்கிறார் என்றால் அது இந்த வலைப்பூ கொடுத்த மதிப்பான உறவு என்று நினைக்கும் போது மனம் சந்தோஷத்தில் குதிக்கிறது.

எனது எழுத்துக்களை வாசித்து நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும் அம்மா, அக்கா, அப்பா, ஐயா, அண்ணன், தம்பி, தங்கை, சார், நண்பன், தோழன் என எத்தனையோ உறவுகளைக் கொடுத்தது இந்த வலைப்பூ. என்னில் இருந்து என்னை இயக்கும் எனது அன்பு நட்புக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து தங்களது மதிப்புமிக்க கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்துக்களை மேம்படுத்துங்கள் உறவுகளே... இந்த இனிய உறவு வாழ்நாளெல்லாம் அன்போடு தொடரட்டும்...

சில சமயங்களில் வலைப்பூவை விட்டு விலக நினைத்து ஒதுங்கினாலும் உங்கள் அன்பு மட்டுமே அதற்கு அணை போட்டு மீண்டும் எழுதத் தூண்டுகிறது. எழுத மட்டுமில்லாமல் எத்தனை விதமான எழுத்துக்களை (சு)வாசிக்கவும் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைக்கும் போது உண்மையிலேயே அளப்பரிய சந்தோஷம் மடை திறந்த வெள்ளமென கரை புரண்டு ஓடுகிறது.

என்னைத் தொட்டுத் தொடரும் உரிமையான 280 நட்புக்களுக்கும், தொடராவிட்டாலும் வாசிக்கும் எண்ணற்றா நட்புக்களுக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.

ஆமாம்... எதற்காக இம்புட்டு பெரிய நன்றிப் பகிர்வுன்னு பார்க்கிறீங்களா? மனசு வலைப்பூவில் இது எனது 500வது பகிர்வு. மொத்தத்தில் இது நான்கு வலைப்பூவிலுமாகச் சேர்த்து 695வது பகிர்வு. இதெல்லாம் எனக்குள் சாத்தியப்பட காரணம் நீங்கள் மட்டுமே.



படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி.
என்றும் நன்றியுடன்....
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

கார்த்திக் சரவணன் சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.. ஐநூறு பதிவுகளைக் கடந்தவர்கள் வலையுலகில் வெகு சிலரே... அவர்களில் நீங்களும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயம்... இன்னும் பல சுவையான பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்... நன்றி....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவரையும் குறிப்பிட்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்...

500வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

அன்புத்தம்பி(பரிவை பாரதிராஜாவிற்கு) மனமார்ந்த நல்வாழ்த்துகள். மிகசிறப்பான பகிர்வு. கல்லூரி கால நட்புகள், கல்வித்தந்தை என அனைவரையும் நினைவுகூர்ந்திருப்பது மகிழ்ச்சி. அனைவரது மனதையும், மனதிற்கு அழைத்துவந்த உன்னுடைய எழுத்துக்கள் தொடர்ந்து மனதில் மண்ணின் மணம் வீசசெய்யட்டும். நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)

Unknown சொன்னது…

அருமை!வாழ்க!!வளர்க!!!உங்கள் எழுத்துக்கள் எப்போது வரும் என்று காத்துக் கிடப்போரில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி!தொடருங்கள்,தொடர்வோம்!!!

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி. ஐநூறாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள். தொடருங்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
தொடருங்கள்

மாதேவி சொன்னது…

500வது பகிர்வு நல்வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

இன்னும் பலநூறு ஆக்கங்களைப் பதிவு செய்ய அன்புடன் வாழ்த்துகின்றேன்!..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அனைவரையும் நினைவு கூர்ந்த ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…



மனசு நிறைந்த வாழ்த்து! வளர்க! மேலும்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி குமார் தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்....

500-வது பதிவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்....

த.ம. 6

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எனது 500வது பகிர்வு. மொத்தத்தில் இது நான்கு வலைப்பூவிலுமாகச் சேர்த்து 695வது பகிர்வு. //

மனம் நிறைந்த வாழ்த்துகள்..!