சனி, 25 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 46

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                             பகுதி-43      பகுதி-44    பகுதி-45              
------------------------------------------------

46.  காவு கொடுக்குமா காதல்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள  இருபுறமும் விசாரணைகள் தொடங்கின. மணியுடன் போன ராம்கியை தேடி நண்பர்கள் செல்கிறார்கள்.

இனி...

"என்ன மாப்ள என்ன சொல்றார் தம்பி?" என்றபடி வண்டியில் இருந்து இறங்கினார் புவனாவின் சித்தப்பா. 

'ஆஹா... தேவையில்லாம சேகரோட பிரண்ட்டு இந்த தறுதலை நாயி கூப்பிடுறானேன்னு வந்து சிக்கிக்கிட்டோமே... சிதைச்சிடுவானுங்களோ... ம்... சிதையக் கூடாது' என்று நினைத்தபடி வரப்போவதை எதிர்க்கொள்ளத் தயாரானான் ராம்கி.

"எங்க மாமா... இல்லேன்னுதான் சொல்லுறான்... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான்... என்னோட பிரண்டோட மச்சான் வேற... கையக்கால ஒடச்சிவிட்டா நாளைக்கு அவன் வேற வந்து கேப்பான்" என்றபடி சிகரெட்டை முழுவதும் இழுத்து துண்டை கிழே போட்டு நசுக்கியபடி "ஆனா மாமா... கொக்காலி... புவனாவை எவனாவது காதலிக்கிறேன்னு வந்தா அவன் எவனா இருந்தாலும் பொளந்துபுடுவேன் பொளந்து... ஏன்னா அவ யாரு மாமா... நம்ம குடும்பத்துப் பொண்ணு... முக்குலத்து ரத்தம் மாமா... முக்குலத்து ரத்தம்... எவனோ ஒரு  பொறம்போக்கு எப்படி மாமா நம்ம பொண்ண லவ் பண்றேன்னு வரலாம்..." என்று பேசிய மணி கண்கள் சிவப்பாக கிடாவெட்டில் ரத்தம் குடிக்கும் கருப்பராகத் தெரிந்தான்.

"இரு மாப்ள... கோபப்படாதே... கோபம் காரியத்தைக் கெடுத்துடும்... நா விசாரிக்கிறேன்..." என்றபடி வேஷ்டியை தூக்கிக் கட்டிக்கொண்டு சட்டை கையை ஏற்றிவிட்டபடி "இங்க பாருங்க தம்பி... நீங்க யாரு... என்ன சாதி... இதெல்லாம் எனக்குத் தெரியாது... அது தேவையும் இல்ல... என்னப் பொறுத்தவரைக்கும் எங்க வீட்டுப் பொண்ணோட நீங்க சுத்துறதா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். இந்த அடிதடி... வெட்டுக்குத்து... ரத்தக்கறை எல்லாம் நிறைய பார்த்துட்டேன்... இப்ப உங்ககிட்ட எங்க பொண்ணோட பழக வேணான்னு ஜென்டிலாச் சொல்லத்தான் வந்திருக்கேன். என்ன புரியுதா?"

"சார்... நீங்க சொல்றது எனக்கில்லை... எல்லாருக்கும் புரியும்.. பட் புவனா கூட பட்டிமன்றங்களுக்கும் கவியரங்கங்களுக்கும் போவேன். எனக்கு அவங்க நல்ல பிரண்ட்... தட்ஸ் ஆல்... நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல... என்னையும் நீங்க புரிஞ்சுக்கங்க... இவரு என்னமோ மிரட்டுறாரு... மிரட்டுனா இல்லாததை ஒத்துக்கணுமா என்ன... அன்னைக்கு வைரவண்ணனை காப்பாத்துனதுக்காக அடிக்க வந்தாரு. இன்னைக்கு அதே வைரவண்ணனோட தங்கச்சிக்காக அடிக்க வாராரு... ஏன் சார் நாந்தெரியாமத்தான் கேக்குறேன்... காதல்ங்கிற கொலை பாதகச் செயலா என்ன... இல்ல ஒரு பொண்ணுகூட பழகுனா அது காதலாத்தான் இருக்கணுமா... அங்க ஒடுறது முக்குலத்து ரத்தம்ன்னா இங்க ஓடுறது அதுக்கு நிகரான ரத்தம்தான்... "

"ஏய்... என்னடா எகிறுறே... மாமா இவனுக்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது... இவன் பேசுறதை கேக்கவா வந்தோம்... டென்சன் ஏத்துறான் மாமா... டென்சன் ஏத்துறான்... இதுல நீங்க மட்டும் தலையிடலைன்னா இந்நேரம் இவனை போட்டுட்டுப் போய்க்கிட்டே இருந்திருப்பேன்..."

"இரு மாப்ள அவசரப்படாதே... அவரு இல்லைன்னு சொல்றாரு... நாம இருக்குன்னு சொல்றோம்... பேசிப்பாப்போம்... படியலைன்னா பாத்துக்கலாம்..."

"ம்... என்னவோ மாமா... இனி எதாவது ஓவராப் பேசினான்னா போட்டுட்டு எதாவது செங்கக் காலவாயில தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்..." என்றபடி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு தள்ளிப் போனான்.

"தம்பி... இங்க பாருங்க... உங்க குடும்பம் உங்க மேல நம்பிக்கை வச்சிருப்பாங்கல்ல அது மாதிரித்தான் எங்க குடும்பமும் எங்க பொண்ணு மேல நம்பிக்கை வச்சி படிக்க வைக்கிறோம்... இதுவரைக்கும் ரெண்டு பேரும் பழகியிருக்கீங்க... இப்ப விட்டு வெளகிடுங்க... உங்கள் எதுனாச்சும் பணக்கஷ்டமுன்னா சொல்லுங்க... நாஞ்சரிபண்ணுறேன்... எதுக்கு வீணாவுல... ம்... இப்ப இங்க அவனை விட்டா உங்கள செதச்சிட்டுப் போயிடுவான்... ம்... எதுக்காக உயிரை விடணும்..."

"சாரி சார்... நான் உயிரை விட பயப்படலை.... ஆனா மத்தியானம் வைரவண்ணன் வந்தாரு... எப்பவும் போல பேசினாரு... அவரு தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்... ஒத்துக்க மாட்டேங்கிறாஙகன்னு சொல்லி என்னைய கன்வின்ஷ் பண்ணச் சொன்னார். எனக்கு அப்ப எதுவும் புரியலை... ஆனா இப்பத்தான் புரியுது... உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கலைங்கிறதுக்காக நான் பலிகடாவா சார்... சொல்லுங்க..." என்று ராம்கி கேட்டதும் புவனாவின் சித்தப்பா யோசிக்கலானார்.

"என்ன மாமா... ஐய்யய்யோ என்ன யோசிக்க ஆரம்பிக்கிறீங்க... இவன் பேச்சாளன் மாமா... பேச்சாளன். பேசியே உங்கள மயக்கிடுவான்... நீங்க இங்கிட்டு வாங்க... நான் கேக்குற விதமாக் கேக்குறேன்... முக்குலத்துக்கு நிகரான ரத்தத்துக்கிட்ட..." என்றபடி சிகரெட்டை கீழே போட்டான்.

புவனாவின் சித்தப்பா "ம்... கேட்டா சொல்ல மாட்டேங்கிறே... இனி அவனாச்சு நீயாச்சு..." என்றபடி விலகிக் கொள்ள, "என்ன பங்காளி... அறுக்கப்போற ஆடு கணக்கா முழிக்கிறே... சேகர் எனக்கு பிரண்டுன்னுதான் உன்னைய அன்னைக்கு விட்டேன். ஆனா இது புவனா மேட்டர் அவளுக்காக சேகரையே போடணுமின்னா போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்.. என்ன யோசிக்கிறே... இனிமே புவனாவோட பாதையில வரமாட்டேன்னு சொல்லி மாமாகிட்ட ஒயிட் ஷீட் இருக்கும் எழுதிக் கொடுத்துட்டு போய்க்கிட்டே இரு... உன் உயிருக்கு சேதாரம் வராது..." என்றபடி சட்டையைப் பிடித்தான் மணி.

"என்னங்க மிரட்டுறீங்களா? உங்க பொண்ணப் போயி கேட்டுப் பாருங்க... எவனோ சொன்னான்னு எங்கிட்ட வந்து பிரச்சினை பண்ணுறீங்க... ஆமா... அந்தப் பொண்ணோட அண்ணனே எங்கிட்ட நல்லாப் பேசும் போது உங்களுக்கு என்ன வந்துச்சு... சரி அவளோட சித்தப்பா அவருக்கு உரிமை இருக்கு எங்கிட்ட விசாரிக்கிறாரு... நீங்க யாரு? அப்ப நீங்க புவிய லவ் பண்ணுறீங்களா?"

"என்னடா எகத்தாளம்... எகிறுறே.... பயமே இல்லாம பேசுறே... என்ன காதல் கொடுக்கிற திமிரா... ஆமா என்ன சொன்னே... புவியா... பேரு வச்சவங்ககூட புவனான்னு சொல்லும்போது நீ புவி போடுறே...?"


"என்னங்க நீங்க.... எல்லாத்துலயும் குத்தம் கண்டு பிடிக்கிறீங்க... பிரண்ட்ஸ் எல்லாருமே பேரைச் சுருக்கித்தான் கூப்பிடுவோம்... என்னைய எல்லாரும் ராம்கியின்னு சொல்லுவாங்க... ஏன் நீங்க முன்னாடி எல்லாம் அப்படித்தானே கூப்பிட்டீங்க... இன்னைக்குத்தானே புல் நேமையும் சொன்னீங்க..."

"இங்க பாரு... இப்ப மேட்டருக்கு வாறேன்... அவ கூட பழக மாட்டேன்னு சொல்லிட்டு உயிரைக் காப்பாத்திக்கிட்டு ஓடிடு..."

"இல்லேன்னா... என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா? ஆமா அவளை லவ் பண்ணலேன்னு சொன்னாலும் அடிப்பே... பண்றேன்னு சொன்னாலும் அடிப்பேன்றே... அப்புறம் என்ன அடிக்க வேண்டியதுதானே... சும்மா பிலிம் காட்டுறே?" என்று ராம்கி எகிறினான்.

"என்னடா நாயே எகிறுறே.... எங்கிட்ட இம்புட்டு நேரம் பேசினதுக்கே உன்னையப் போடணும்..." என்று கத்திய மணி ஓங்கி ஒரு அறைவிட ராம்கியும் திருப்பி அறைந்தான்.

"ஏய்" என்று புவனாவின் சித்தப்பா கத்திக்கொண்டு வருவதற்குள் வெறி கொண்ட மணி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து ராம்கியின் வயிற்றை நோக்கி இறக்க விலகிய ராம்கி அதை தடுத்தபோது கத்தி கையில் சொருகியது. அதைப் பிடிங்கி மீண்டும் குத்த முயன்றபோது புவனாவின் சித்தப்பா ஓடிவந்து பிடிக்க நடந்த தள்ளுமுள்ளில் ராம்கி கீழே விழுந்தான்.

"என்ன மாப்ள... பேசும் போது இப்படி பண்ணிட்டே... சும்மா ரெண்டு தட்டு தட்டுவேன்னு விட்டுட்டு வேடிக்கை பார்த்தா கத்தி எடுத்துட்டே... வேண்டாம் மாப்ள... நாமளே நம்ம பொண்ணை பற்றி ஊர் பேச வைக்க கூடாது... இதுக்குத்தான் வைரவன் சொன்னான்... நான் கேக்கலை... அவனுக்குத் தெரிஞ்சா என்னாகும்... வா போயிடலாம்... தம்பி.... எந்திரிச்சுப் போயிடு... இங்க நடந்ததை யார்க்கிட்டயும் சொல்லாதே... போகும் போது எதாவது டாக்டர்கிட்ட காட்டிக்கிட்டுப் போ... இந்தா ஐநூறு ரூபாய் என்று பணத்தை அவன் மீது வீச...

அப்போது ராம்கியைத் தேடி எல்லாப் பக்கமும் அலைந்து திரிந்து தூரத்தில் வந்து கொண்டிருந்த நண்பர்கள் ராம்கி விழுந்து கிடப்பதையும் மணியும் மற்றொருவரும் நிற்பதையும் பார்த்து கத்தியபடி ஓடிவர....

"ஏய் மாப்ள... என்னடா ஆச்சு.... எவன்டா அவன்... ஆம்பளையா இருந்தா நில்லுடா..." என முன்னால் கத்திக் கொண்டு வந்த அண்ணாத்துரையைப் பார்த்த மணி, "மாமா குயிக்கா வண்டியை எடுங்க... முன்னால வர்றவன் பூபாலன் அண்ணானோட தம்பி... அவனோட பிரண்டா இவன்... வீணாவுல சண்டை வரும்... வாங்க... அப்புறம் இவனைப் பார்த்துக்கலாம் " என்றபடி வண்டியை எடுத்துக் கொண்டு ஓட...

ராம்கி கையில் வழியும் ரத்தத்துடன் எழுந்து நின்று உடம்பில் ஒட்டிய செம்மண் புழுதியை தட்டிக் கொண்டிருக்க...

ஆளாளுக்கு கத்தியபடி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

"ஹலோ புவனா இருக்காளா?" 

"நீயாரும்மா... என்ன விஷயம்?"

"ஆண்டி.. நான் மல்லிகா... அவகிட்ட முக்கியமா பேசணும்..."

"என்னன்னு சொல்லும்மா... நாஞ்சொல்லிக்கிறேன்..."

"ஆண்டி அவகிட்டதான் சொல்லணும்... கொஞ்சம் போனைக் கொடுக்கிறீங்களா? ப்ளீஸ்..."

"அப்படி என்ன ரகசியம்?" என்றவள் "இரும்மா... இந்தாக் கொடுக்கிறேன்" என்றாள்.

சிறிது நேரத்தில் "ம்... என்னடி சொல்லு... தலவலின்னு படுத்திருந்தேன்... அப்படி என்ன அவசரம்?"

"ராம்கியை கத்தியால குத்திட்டாங்க..." 

"என்னடி சொல்றே... என்னோட ராமையா? யாரு..." கண்ணீரோடு கேட்க அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அம்மா என்னோட ராமில் அதிர....

வீட்டுக்குள் வேகமாக நுழைந்த வைரவன் புவனா கண்ணீரோடு 'யாரு?' என்று கேட்டதைப் பார்த்து எதுவும் புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. சூடுபிடிக்கும் காதல் தொடரட்டும் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. என்ன இது?..

    பேச்சு பேச்சா இருக்கையில கத்தியால குத்திட்டான்!?..

    பதிலளிநீக்கு
  3. இனி..........................பிரச்சின முத்திடும் போல இருக்கே?கலகம் பொறந்து,நியாயம் கிட்டட்டும்,ஹூம்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி