சனி, 25 ஜனவரி, 2014

மண் பயனுற வேண்டும் - பாரதி விழா:1




மீரகத்துக்கான இந்தியத் தூதர் திரு. சீதாராம் அவர்கள் தலைமையில் பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய 'மண் பயனுற வேண்டும்' என்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை இந்திய சமூகம் மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் திரு. சுகிசிவம் அவர்கள் தலைமையில் 'இன்றைய வாழ்க்கை முறை நமக்குத் தருவது நிம்மதியே / நெருக்கடியே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற திண்டுக்கல் திரு.லியோனி அவர்கள் தலைமையிலான பட்டிமன்றம் ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றாலும் ஒரு மாத இடைவெளியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய இந்த மண் பயனுற வேண்டும் ரசிகர்களுக்கு தித்திப்பை அளித்தது. வாழ்த்துக்கள் பாரதி.


சுகிசிவம் என்னும் இலக்கியப் பெட்டகம் பருகக் கொடுத்த பாரதி பற்றிய கருத்துக்கள்... எல்லாரையும் கட்டிப் போட்டு இலக்கிய அமுது படைத்த பேச்சு... குறிப்பாக அவரின் தீர்ப்பு... எல்லாமே அருமை. நான் இங்கு வந்து கண்டுகளித்த பாரதி விழாக்களில் திரு.நெல்லைக்கண்ணன் அவர்களின் பேச்சுக்குப் பிறகு திரு. சுகிசிவம் அவர்களின் நேற்றைய பேச்சு இலக்கியம் பருக வைத்தது. அவர் தமிழ்க்கடல் என்றால் இவர் தமிழ் அமுது... என்ன அருமையான பேச்சு... போவமா... வேண்டாமா என்ற நிலையில்தான் கிளம்பி... வரும்போது உண்மையில் கடல் கடந்து வந்து இதுபோல் எப்பவாவது கிடைக்கும் தமிழமுதை பருகிய சந்தோஷத்தோடு திரும்பினேன்.

எப்பவும் நான் விழா குறித்து ஒரு பதிவிற்குள் எழுதிவிடுவதில்லை. இந்த முறை எழுத நினைத்தேன். ஆனால் முடியாது என்பதால் இரண்டு பதிவாக ஆக்க எண்ணம். பதிவின் நீளத்தின் போக்கைக் கணித்து  ஒன்றா... இரண்டா .. அல்லது மூன்றா... என பார்க்கலாம்.. 

இந்த முறை விழா அழைப்பிதழில் போட்டபடி (சில நொடிகள் தாமதத்தோடு) ஆரம்பமானது. பாரதியின் முந்தைய விழாக்களை திரும்பிப் பார்க்கும் தொகுப்பை வழங்க அதில் கர்ஜிக்கும் சிங்கத்தின் முகம் பாரதியாய் மாறுவது போல் கிராபிக்ஸ் பண்ணியிருந்தார்கள். பொருத்தமாகவும் மிக அழகாகவும் இருந்தது. இதை சென்ற நிகழ்ச்சியிலேயே செய்திருந்தார்கள். பதிவில் சொல்லியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.


விழாவின் தொடக்கமாக திருமதி. ஹேமா கதிரேசன் அவர்கள் இறை வணக்கப் பாடலான 'நீராருங் கடலுடுத்த...' பாடினார்கள்.  அருமையான குரல்... பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருடன் சேர்ந்து பாடியது சிறப்பு. பின்னர் திருமதி. சித்ரா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். திருமதி. ஆஷா நாயர் சென்ற முறை நடனத்தில் சோபிக்கவில்லை என்று சொல்லியிருந்தேன். இந்த முறை இரண்டே நடனங்கள்... இரண்டும் தித்திக்கும் பொங்கலாக... சர்க்கரை அதிகம் சேர்த்த பொங்கலாக கண்ணைக் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பள்ளி எழுச் சொன்ன குமரிகளைவிட காதல்... காதல்... காதல்... என பாரதியின் காதலைச் சொன்ன குட்டிகள் உள்ளம் கவர்ந்தார்கள். ஆடிய அனைத்துக் குட்டீஸ்க்கும் தனியே ஒரு பூங்கொத்து.

விழாவின் தொடக்கமாக சிறப்பு விருந்தினரையும் பாரதி நட்புக்காக அமைப்பின் முக்கியஸ்தர்களையும் மேடைக்கு அழைத்தார்கள். அழைத்தவர் திருமதி. சங்கீதா, அழைத்தது அழகிய ஆங்கிலத்தில்... என்னடா பாரதி நட்புக்காகன்னு வச்சிக்கிட்டு... மீசைக் கவிஞனின் பாடல்களை இசைத்துவிட்டு தமிழ் மேடையில் ஆங்கிலமா என்று பார்த்தால் சிறப்பு விருந்தினர்கள் தமிழர்கள் அல்லவே... அவர்களோடு எல்லாருக்கும் புரிந்த மொழியாக இருக்க வேண்டுமே என்பதால் ஆங்கிலத்தில் பேசினார். விழா மேடையில் சிறப்பு விருந்தினரும் இந்தியத் தூதருமான திரு. சீதாராம்,  பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் திரு. இராமகிருஷ்ணன், திரு.ஷாகுல் ஹமீது, திரு. கலீல் ரஹ்மான், ஜெட் ஏர்வேஸ் பகுதி மேளாலர் திரு. பிஜூ மாத்யூஸ்,  ஐ.எஸ்.சி திரு. ஜக்காரியா மற்றும் மஷ்ரப் வங்கி திரு.பிள்ளை ஆகிய எழுவரும் கடையேழு வள்ளல்களாய் மேடை ஏற சிறப்பு விருந்தினர்களுக்கு பாரதி அமைப்பினர் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பின்னர் ஒவ்வொருவரும் சில வார்த்தைகள் பேச, ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின்னர் தமிழுக்கு மாறினார் திரு. ராமகிருஷ்ணன். திரு. மாத்யூஸ் அவர்கள் ஜெட் ஏர்வேய்ஸ் அபுதாபி-சென்னைக்கு புதிய விமானப் போக்குவரத்தை ஆரம்பித்திருப்பதைச் சொன்னார். நமது இந்தியத் தூதரோ மலையாளி என்றாலும் சென்னையில் பள்ளிப் படிப்பையும் அதே சென்னை லயோலாவில் கல்லூரிப் படிப்பையும் படித்ததால் அவ்வப்போது தமிழ் பேசினார். திரு. ஷாகுல் ஹமீது அவர்கள் பேசும் போது நமது இந்தியத் தூதர் அவர்கள் எல்லாருக்கும் உதவியாக இருப்பார். குறிப்பாக தமிழர்களுக்கு என்றதும் அரங்கில் சிரிப்பொலி எழ, தமிழர்களுக்கு என்றாலும் நாம் எல்லாம் இந்தியர்கள்... மொத்தத்தில் இந்தியர்களுக்கு என்று பேசினார். அனைவரும் பேசி முடிக்க விழா மேடை பட்டிமன்றத்துக்காக தயாரானது.

விழாவிற்கு சென்ற போது இரண்டு வருடமாக பார்க்க வேண்டும் என்று நினைத்த கவிஞர். திரு. சங்கர் அண்ணா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை சுபஹான் அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். நல்லவேளை இவன்தான்யா எழுதுறேன்னு சொல்லி பாரதி நட்புக்காக நிகழ்வுகளைப் பற்றி கிறுக்குபவன் என மற்ற நண்பர்களிடம் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை எனவே இருவருக்கும் நன்றி.

இந்தப் பதிவு பாரதி நட்புக்களுக்காக நண்பர்களுக்காக...

அடுத்த பதிவு பட்டிமன்றத்தின் தொகுப்பாக நாளை மாலை...

புகைப்படம் அனுப்பிக் கொடுத்து உதவிய திரு. சுபஹான் அண்ணா அவர்களுக்கு நன்றி.

-'பரிவை'  சே.குமார்.

7 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி!உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்ற பாரதி கண்ட கனவு நனவாகிக் கொண்டே இருக்கிறது,மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  2. அருமை
    பட்டிமன்ற செய்திகளைப் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. இன்னும் நிகழ்ச்சிக்கு வரவில்லை நீங்கள்.

    பதிலளிநீக்கு
  4. திரு. சுகிசிவம் ஆணித்தரமான ஆழ்ந்த கருத்துக்கள் மனதில் பலவற்றை சிந்திக்க வைக்கும்...

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    இனிய சந்திப்பிற்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு.... வாழ்த்துகள்.....

    பட்டிமன்றம் பற்றிய அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. குடியரசு தின நல்வாழ்த்து

    பதிலளிநீக்கு
  7. Thiru sugi sivam avargalai..
    Abudhabi Saravana bavan unavagaththil kuzhuvinarOdup paarththen.. unavarunthik kondirunthanar.. ethrkaaga vanthiruppaargal enru ninaiththen..

    ippothuthaan therigirathu..!!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி