முந்தைய பதிவுகளைப் படிக்க...
---------------------------------
41. போனில் பேசினார்களா?
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சீதாவின் திருமணப்பேச்சு மீண்டும் சூடு பிடித்தது. கல்லூரி பிரச்சினையின் காரணமாக இழுத்து மூடப்பட புவனாவிடம் பேசுவதற்காக போன் பண்ணினான்.
இனி...
எதிர் முனையில் 'அலோ' என்ற குரல் கேட்டதும் ரீசீவரை கையால் பொத்திக் கொண்டு காவேரியைக் கூப்பிட்டு "புவனா இருக்காளான்னு கேளு, நீ யாருன்னு கேட்டா பிரண்ட்டுன்னு சொல்லு" என்றான்.
"என்னடா என்னைய மாட்டிவிடுறே?" என்று முனங்கியபடி போனை வாங்கியவள் "அலோ...." என்றாள் மெதுவாக.
"யாரு...? என்ன வேணும்...? போன் பண்ணினா பேச மாட்டிங்களா?" எதிர்முனையில் புவனாவின் அப்பா கேள்விகளை அடுக்கினார்.
"அங்கிள் புவனா..." உதடு உலர, நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
"புவனாவா... நீ யாரும்மா?"
"நா... அவ பிரண்ட்டு. காவேரி.. அவகிட்ட கொஞ்சம் பேசணும்...." பயத்தோடு பேசினாள்.
"அப்படியா... ம்.. ஏய்... எங்கடி ஓம்மவ..." குரல் கொடுத்தவர், "அவ அவுக சித்தப்பா வீட்டுப்பக்கம் பொயிட்டாளாம்மா... எதுவும் சொல்லணுமாம்மா...?" கிடைத்த பதிலை அவளுக்கு திருப்பிச் சொல்லி கேள்வியோடு முடித்தார்.
"இல்லங்கிள் அப்புறம் பேசுறேன்.." என்றபடி படக்கென்று போனை வைத்தவள் நெஞ்சில் கைவைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
"ஏன்டா... அவ அப்பா எடுத்தாருன்னா போனை வைக்க வேண்டியதுதானே... என்னை ஏன்டா மாட்டிவிட்டே? எருமை..."
"இல்ல... படக்குன்னு போனை வச்சிட்டா வீணாவுல சந்தேகம் வரும்... அதுசரி அவருக்கு சந்தேகம் வந்த மாதிரி பேசினாரா?"
"அப்படியெல்லாம் தெரியலை... அந்தக் குரலைக் கேட்டாலே பயமா இருக்கே... ஆமா புவனா யாருடா... நீ எதுக்கு அவளுக்குப் போன் பண்ணுறே...?"
"எங்கூடப் படிக்கிற என்னோட பிரண்ட்... சரி நா போறேன்"
"இருடா... பிரண்டுன்னா... பொம்பளப்புள்ளைக்கு வீட்டுக்குப் போன் பண்ணுற அளவுக்கு என்னடா பிரண்ட்டு..." கேள்வியால் மடக்கினாள்.
"ஏன் பொம்பளப்புள்ள பிரண்ட்டா இருக்கக்கூடாதா என்ன... நீ இன்னும் வளரணுன்டி... சும்மா புண்ணாக்குப் பானையை கழுவிக்கிட்டு இருந்தா வெளியுலகம் தெரியாதுடி..." நக்கலாய் சொன்னான்.
"தம்பி புண்ணாக்குப் பானையை கழுவினாலும் ஊருக்குள்ள நல்ல புள்ளைன்னு பேரோட இருக்கோம்... ஆனா காலேசுக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டு காதலிச்சிக்கிட்டு திரியிறிய... நாளைக்கு ஊருக்குள்ள தலை நிமிர்ந்து வரமுடியாதுடி..." அவளும் நக்கலாய்ச் சொன்னாள்.
"உங்கிட்ட பேச முடியாதுத்தா... நா போறேன்... இதை எங்க அக்காக்கிட்ட சொல்லி வைக்காதே..."
"சரி... சொல்லமாட்டேன்... ஆளு எப்படிடா இருப்பா...ங்க..." என்றாள். எங்க அவ இவன்னு கேட்டா கோவப்படுவானோன்னு 'ங்க' சேர்த்தாள்.
"ம்... எங்கக்கா கலியாணத்து வருவாங்க அப்போ பார்த்துக்க..." என்றபடி கிளம்பினான்.
அதே நேரம்...
வெள்ளைச் சட்டையின் கைகளை மடித்தபடி "நம்ம வீட்டுல ஒம்பொண்ணுக்குத்தான் அதிகமா போன் வருது.. அப்படித்தானே?" என்றபடி மனைவியைப் பார்த்தார்.
"ஆமா... அவுகதானே கலெக்கிட்டருக்குப் படிக்கிறாவ..."
"ஏன் எங்காத்தா கலெக்டர் ஆகமாட்டாளா என்ன... என்னமோ உங்காத்தா வீட்டுல இருந்து படிக்க வைக்கப் போற மாதிரி இழுக்கிறே...?"
"அதானே... மவளைச் சொன்னா அப்படியே பொத்துக்கிட்டு வந்துருமே... அவளுக்கு யார் யாரோ போன் பண்ணுறாளுங்க... காலேசு வேற லீவா எப்பப்பாரு போனுல இல்லாட்டி டிவியில இருக்கா... கூடமாட ஒத்தாசை செய்யணுங்கிற நினைப்புக்கூட கிடையாது. இன்னைக்கு கலியாணம் பண்ணிக் கொடுத்தா நாளைக்கு புள்ளப் பெத்துருவா..."
"சும்மா வழவழன்னு எதுக்கு இழுக்குறே... நாங்கேட்டதுக்கு பதில் சொல்லாமா பஞ்சாங்கம் பேசுறே.... சரி ஊர்ல நடக்குறதை எல்லாம் பாக்கும் போது பொம்பளப் புள்ளைகளை கண்டிச்சி வளக்கலைன்னா தலகுனிஞ்சு நிக்கணுங்கிற மாதிரித்தான் இருக்கு... எதுக்கு அவளை அப்பப்ப கண்டிச்சி வையி..."
வெளியில் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்க, எட்டிப்பார்த்தவள் " உங்க சீமந்த புத்ரிதான் வாற... நீங்களே நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டுப் போங்க..."
"நானா... யாருடி இவ... நா எதாவது சொன்னா அவளுக்கு கஷ்டமாயிடும்... அப்புறம் புள்ளைய பேசிட்டோமேன்னு மனசு கெடந்து அடிச்சிக்கும்... கடையில இருக்க முடியாது... எப்பவும் போல நீனே பேசு..."
"அதானே... மகளை பேசணுமின்னா ஐயாவுக்கு மனசு கஷ்டமாயிடும்... நா ஒருத்தி கெடச்சேன்... எல்லாப்பக்கமும் திட்டு வாங்க... செல்லங் கொடுத்தே ஒருத்தனை ரவுடிப் பயலாக்கிட்டிங்க... இவ என்ன ஆகப்போறாளோ..."
"வயசு புள்ள அப்படித்தான் இருப்பான்... இன்னைக்கு அவன் வக்கீலுக்குப் படிக்கலை..."
"ஆமா பெரிய வக்கீலு படிப்பு... எதெது காலேசுல நம்மவுட்டு மாதிரி சுத்துச்சோ அதெல்லாம் இப்போ ஊருக்குள்ள வக்கீலாச் சுத்துது... இதுல பெருமை வேற..."
"வக்கீலாகவும் ஒரு தகுதி வேணும்டி... சரி நா கிளம்புறேன்.. அவ வர்றா..."
"என்னம்மா... அப்பா வாறேன்டா...." என்றபடி அவளைக் கடக்க "அப்பா.... திங்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை... வரும்போது எதாவது வாங்கிட்டு வாங்கப்பா..." என்றாள் சின்னப்பிள்ளையாட்டம்.
"ஆமா சின்னப்பப்பா... இவுக திங்கிறதுக்கு எதுனாச்சும் வாங்கியாந்து கொடுங்க..." என்றாள் அம்மா.
"சரிம்மா... வாங்கிட்டு வாறேன்..." என்றபடி கிளம்பினார்.
"இங்க வாடி... யாருடி அவ காவேரி...?"
"கா...வே...ரி...... ம்... அவளுக்கு என்ன?" என்று இழுத்தாள்.
"போன் பண்ணினா?"
'காவேரி... போனா...' என்று யோசித்தவள் "அய்யய்யோ... பேச முடியாமப் போச்சே" என சத்தமாகச் சொன்னாள்.
"என்ன நோச்சே... அவ யாரு.... புதுப்பேரா இருக்கு... உங்கப்பாதான் எடுத்தாரு... காவேரி யாருன்னு எங்கிட்ட கேட்டாரு...."
அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு " அம்மா... காவேரி எங்க காலேசுதான்.... ஒரு பேச்சுப் போட்டிக்கு தயாராகிக்கிட்டு இருக்கா... அதுக்கு கொஞ்சம் நோட்ஸ் கேட்டிருந்தா... காலேசு லீவாச்சா... நான் மறந்துட்டேன்... அதுக்காக அவ போன் பண்ணியிருப்பா...." என்றாள்.
"ரொம்ப கொஞ்சாதே... வர வர உன்னோட போக்கு சரியில்லை... என்னமோ பண்ணுறேன்னு மட்டும் தெரியுது.. ஆனா என்னன்னுதான் பிடிபட மாட்டேங்குது."
"ஆமா பண்ணுறாக பானையும் சட்டியும்... எதுக்கெடுத்தாலும் சந்தேகம்தான்... அவ என்னோட காலேசு பிரண்டுதான்... கிராமத்துல இருக்கா... அந்த மல்லிகா தெரியுமில்ல அவ கிளாஸ்தான். வேணுமின்னா மல்லிகாகிட்ட போன் பண்ணி கேட்டுக்கங்க... போன் வந்ததுக்கெல்லாம் சந்தேகம்... பேசாம போனைப் பிடிங்கிப் போட்டுடுங்க..." காட்டுக்கத்தலாய் கத்திவிட்டு ஒண்ணும் நடக்காதது போல டிவிக்கு முன்னால் அமர்ந்தாள்.
'ம்... எனக்கு இது தேவையா... அப்பவே அந்த மனுசனுக்கிட்ட சொன்னேன்... அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு.... நா எதாவது சொல்லப் போயி வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்... புள்ளைகளுக்கிட்ட திட்டு வாங்கணுமின்னு தலையில எழுதியிருந்தா மாத்தவா முடியும்' என்று நினைத்தபடி "அடியே கோபக்காரி... காபி வேணுமாடி..." என்றாள்.
"ம்.... ஸ்ட்ராங்க ஒரு காபிம்மா..."
"அதானே.... கோபப்படுறதெல்லாம் சும்மாதானே.... இரு கொண்டாறேன்..."
மீண்டும் கல்லூரி திறந்து பிரச்சினைகள் இல்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் சீதாவுக்கு திருமணம் நிச்சயமாகி, திருமண நாளும் நெருங்கிவர, ராம்கி தனது நண்பர்கள் அனைவரையும் கண்டிப்பாக திருமணத்துக்கு வர வேண்டும் என்று சொல்லியிருந்தான். புவனாவை ஸ்பெசலாக வரச்சொல்லியிருந்தான்.
அந்த நாளும் வந்தது.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
ம்............பார்க்கலாம் எத்தனை நாளைக்கு இந்த சமாளிபிக்கேஷ ன்னு ............ஹ!ஹ!!ஹா!!!!
பதிலளிநீக்குபொறுத்த இடத்தில் தொடரும் என்ற சமாளிப்பு!ஹீ அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர் பார்த்து.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகுமார்(அண்ணா)
நன்றாக உள்ளது....தொடர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பழைய நினைவுகளை அசை போடுவது அலுக்காத ஒன்று. பகிர்வு நன்று.
பதிலளிநீக்கு