வியாழன், 9 ஜனவரி, 2014

மதயானைக் கூட்டம் - தென்மாவட்டக்காரனின் பார்வை


தென்மாவட்டத்தில் நடக்கும் சாதி மோதல்களைப் படமாக்குவது என்பது தமிழ் சினிமாவில் தொடரும் ஒரு கலாச்சாரம்தான். அதில் புதுமையாக ஒரு சாதிக்குள் நடக்கும் வன்மம், குரோதம், சந்தோஷம் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். சாதிகளை மையமாக வைத்து படமெடுக்க வேண்டும் என்றால் தென்மாவட்டங்கள்தான் களமாகின்றன. அதற்கு மதயானைக் கூட்டமும் விதிவிலக்கல்ல. தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை மதுரைப் பேச்சு வழக்கில் வரும் படங்கள் எல்லாமே அருவாளையும் சாதியையும் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் எந்தவிதமான சாதீய மோதல்களும் இல்லாமல் அமைதியாக இருப்பது போல் ஒரு எண்ணத்தை பறை சாற்றுவதாகவே தோன்றுகிறது. 

மனைவி இருக்கும் போது சந்தர்ப்ப சூழலாம் ஒரு மனிதனுக்கு இரண்டாம் தாரமாக ஆகும் பெண்ணின் குடும்ப நிலை எப்பவுமே சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கணவன் இருக்கும் போதும் சரி, இறந்த பின்னும் சரி சமுதாயத்தில் எந்த மரியாதையும் இந்த பெண்மணிக்கு கிடைப்பதில்லை. இரண்டாம் தாரம் என்பவர் மிகவும் பரிதாபத்துக்குரியவராகவே காட்சியளிப்பார். சமூகம் அவரை பார்க்கும் பார்வையே மாறுபட்டதாகத்தான் இருக்கும். அவரின் குழந்தைகளைக் கூட இவனா இவன் இன்னாரின் தொடுப்புக்குப் பிறந்தவன் என்றே சொல்லுவார்கள். 

இரண்டு தாரங்களைக் கொண்ட பெரிய மனிதரைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் எல்லாருடைய மனதிலும் நின்ற படம் கார்த்திக்-பிரபு நடிப்பில் வந்த  அக்னி நட்சத்திரம். அதற்குப் பிறகு மனதில் நிற்கும் படமாக வந்திருக்கிறது ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த மதயானைக் கூட்டம். தேனி மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு கள்ளர் சமூகத்துக்குள் நடக்கும் மோதலை மண் மணம் மாறாமல் தந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாறன்.

ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு குடும்பம். அவர் இரண்டாவது திருமணம் செய்தவுடன் அவரைப் பிரிந்த முதல் மனைவி செவனம்மா தனது அண்ணனுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு மகனும் மகளும்... மகள் மாமனுக்கு வாக்கப்படுகிறாள். மகன் தண்ணி, அடிதடி, ஜெயில் வாழ்க்கை என சராசரி கிராமத்து ரவுடியாக வலம் வருகிறார். இரண்டாம் தாரத்தின் மகன் ஊருக்குள் சுற்றும் சாதாரண இளைஞன். இவர்தான் கதாநாயகன் கதிர். சாதிக்கே உரிய வேகம் இவரிடம் எப்பவும் குடியிருக்கிறது. யார் என்ன சொன்னாலும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போய்விடுவார். மகள் நர்ஸ்க்குப் படித்து பாதியில் அப்பாவின் சவாலால் எம்பிஏ படித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு போகிறார்.


பெரும்பாலும் சினிமாக்கள் சந்தோஷ சம்பவத்தோடுதான் ஆரம்பிக்கும் ஆனால் மதயானைக்கூட்டம் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தில் ஆரம்பிக்கிறது. சாவுக்கு கூத்து வைக்கிறார்கள். அவர்கள் ஜெயக்கொடித் தேவரில் ஆரம்பித்து இரண்டு குடும்பங்கள்... வாரிசுகள்... என விளக்கமாக கதையை சொல்வது போல் படம் நகர்கிறது. கோவில் முதல் மரியாதை விஷயத்தில் ஊருக்குள் இவர்களுக்கு எதிரியாக இருக்கும் ஒருவருடன் தகராறு வர அவரின் தம்பியை கொல்கிறார்கள். போலீசும் கேசை எடுக்கவில்லை. அப்போது அவர் உங்க குடும்பத்துல தொடர்ந்து எழவு விழுகும்ன்னு சாபம் விடுகிறார். அப்படியே நடப்பது போல்த்தான் தொடரும் நிகழ்வுகள் அமைகிறது.

ஜெயக்கொடித் தேவருக்கு எல்லா முறைகளையும் மூத்த குடும்பம் செய்ய இரண்டாவது குடும்பம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அவரை எரித்துவிட்டு வந்து செய்யும் செய்முறைகளில் பிரச்சினை வர, எல்லோரையும் எதிர்த்து அப்பாவின் இரண்டாம் தாரத்து மகனை வாடா தம்பி என்று கூட்டி வந்து சாப்பாடு போடும் போது மூத்தவன் பேசும் நக்கலால் மாமா வீரத்தேவரின் மகன்களுடன் அடிதடியில் முடிய அண்ணனைக் காப்பாற்ற தம்பி முயலும் போது துக்க வீட்டில் மீண்டும் ஒரு எழவு விழுகிறது. கொலைக்கு கொலை என்ற முயற்சிகள் நடக்க, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக கேரளாவுக்கு தப்பியோடும் ஜெயக்கொடித்தேவரின் இளைய மகனை மீண்டும் ஊருக்கே வரவைத்து பழி வாங்க நினைக்கிறார்கள் வீரத்தேவரும் அவரின் மகன்களும்.

ஒரு கட்டத்தில் இளையவளை கொலைகாரக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற தன்னுடன் வைத்துக் கொள்ளும் செவனம்மா, அண்ணனுக்காக அவளை விஷம் வைத்துக் கொல்கிறாள். அம்மா இறப்புக்கு ஊருக்குள் வருகிறான் மகன். அவனை தங்களது வன்மத்தால் கொன்றார்களா.... செவனம்மா இளையவனைக் காப்பாற்றினாளா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்.

நாயகியாக ஓவியா கேரளத்துப் பெண்ணாக வந்தாலும் அதிகம் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. களவாணியில் கால்வாசி கூட தேறவில்லை. எல்லாக் கதாபாத்திரங்களைப் போலவே இவரையும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அரிவாள், ரத்தவெறியில் இருந்த  அழுத்தம் காதல் காட்சிகளில் இல்லை.

தென்மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தில் நடக்கும் சந்தோஷம், துக்கம், கோபம், பழிவாங்கல் என எல்லாவற்றையும் கலவையாய் பரபரப்பான காட்சி அமைப்புடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்த சமூகத்தில் பழிக்குப் பழி வாங்காமல் விடமாட்டார்கள் என்பதை நீருபிக்கும் வண்ணமாக படத்தின் முடிவு இருப்பது வேதனைக்குரிய விஷயம். சாதி என்றும் கொள்ளி எப்போது நெருப்புடன்தான் இருக்க வேண்டும் என்று நினைக்க வைத்த இடத்தில் இயக்குநர் இவங்க இப்படித்தான் என்று சொல்லி பார்க்கும் நம்மை ஏமாற்றிவிட்டார். 


இந்தச் சாதியில் இன்ன இன்ன இருக்கு இவர்கள் இப்படியாக மாறினால் என்ன என்று யோசிக்காமல் எவனா இருந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்தாவது பலி வாங்கியே ஆவார்கள் என்று ஆணித்தரமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். தேவர் மகனில் இவனுக எல்லாம் திருந்தவே மாட்டானுக... போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையிங்கடான்னு சொல்லிச் சென்ற கமலையும் அந்தப் படத்தையும் எதிர்த்த கள்ளர் சமூகம் அடிக்கடி சாதிப் பெயரைச் சொல்லியும் அருவாளை காட்டியும் ரத்த வெறி பிடித்த மனிதர்களாக சித்தரிக்கப்பட்ட போதிலும் அதை ஆமோதிப்பது போல் மதயானை கூட்டத்துக்குள் நுழைந்து சிரிப்பது வேதனையான விஷயம்தான்.

மொத்தத்தில் இயக்குநர் இந்த சாதிக்காரன் மட்டுமல்ல எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் அவனவன் கொள்கையில் பிடிப்பாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். சமீப காலமாக டாஸ்மார்க்கை முன்னிறுத்தி வரும் சினிமாக்களின் சிகரெட் பாக்கெட்டில் உடல் நலத்திற்கு தீங்கானது என்று போட்டிருப்பது போல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் குடியும் கும்மாளமுமாகக் காட்டிவிட்டு கடைசியில் கருத்துச் சொல்வார்கள். இதில் கருத்தெல்லாம் சொல்லவில்லை. இப்படித்தான் இருப்போம் என்று சொல்லி மார்தட்டியிருக்கிறார் இயக்குநர். 

மண்ணின் மனம் மாறாமல் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரத்தையும் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. மொத்தத்தில் மதயானைக்கூட்டம் ஒரு பிரிவினரின் குணத்தின் பிரதிபலிப்பாக வந்திருக்கிறது. இயக்குநராய் விக்ரம் சுகுமாறன் ஜெயித்திருக்கிறார் என்றாலும் சமூக அவலத்தைச் சொல்லிய விதத்தில் தோற்றுவிட்டார். இவரின் அடுத்த படமாவது சாதியை தூக்கி தலையில் வைக்காமல் வரட்டும்.

குறிப்பு : கலையாத நினைவுகள் தொடர்கதை வியாழன் மாலை பதியப்படும்

-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. துரிதமாக செயல்பட்டு உங்கள் விமர்சனத்தை பதிந்திருக்கிறீர்கள்... வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9/1/14, 4:15 AM

    வணக்கம்
    குமார்(அண்ணா)

    படம் பற்றி தங்களின் பார்வையில் நன்றாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. சாதிப்படங்களை எடுத்து இளைய தலைமுறைகளையும் இந்த சினிமா தடம் மாற்றுகிறதோன்னு வேதனையாகத்தான் இருக்கிறது இப்படிப் பட்ட சினிமாக்கள்...!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது போல் பழிக்குப் பழி தான் வேதனைக்குரிய விஷ(ய)ம்...

    பதிலளிநீக்கு
  5. விமர்சனம் நன்று!ஒவ்வொருவர் பார்வையும் வேறுபடும் தான்!ஆனால்,நீங்கள் சொன்னது போல் படத்தின்/கதையின் முடிவு கொஞ்சம் நெருடல் தான்!!!

    பதிலளிநீக்கு
  6. நீங்களும் இப்படித்தான் ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரியும் குமார்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி