புதன், 29 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 47

முந்தைய பதிவுகளைப் படிக்க...

                      பகுதி-43      பகுதி-44    பகுதி-45    பகுதி-46         
------------------------------------------------

47.  காதல்.... காதல்... காதல்...

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள ராம்கியை கத்தியால் குத்தும் அளவுக்குப் போனது.

இனி...

ராமைக் கத்தியால் குத்திட்டாங்கன்னு சொன்னதும் என்னோட ராம்மையா யாரு என்ற புவனா, கண்களில் கண்ணீர் வடிய சூழல் மறந்து மல்லிகாவிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"யாருடி... சொல்லு...?" என்று கத்தினாள்.

"யாரோ மணியாம்... அவன்தான் கூட்டிக்கிட்டுப் போனானாம். அப்புறம் இன்னொரு ஆள் அது யாருன்னு தெரியலையாம்... மற்ற விபரம் எனக்குத் தெரியலைடி...."

"அந்த ஆள் எப்படியிருந்தானாம்...? ராமை  மட்டும் விட்டுட்டு இவனுக எங்க போனானுங்களாம்..?" கேள்வியை அடுக்கினாள்.

"அவனுக விவரமா பேசுற மனநிலையில இல்லைடி... உங்கிட்ட சொல்லச் சொன்னானுங்க..."

"சரி எந்த ஆஸ்பிடல்ன்னு சொல்லு.... நான் இப்பவே போறேன்..."

"உனக்கென்ன பைத்தியமாடி... இந்த நேரத்துல போறேன்னு சொல்றே... கையில தான் காயமாம்... போலீசுக்குன்னு போனா போலீஸ் யாரு பக்கம் பேசுமுன்னு உனக்குத் தெரியுந்தானே.... அதான் அண்ணாத்துரையும் ராம்கியும் மறுத்துட்டாங்களாம்... அப்புறம் அண்ணாத்துரை அப்பா வந்து அவருக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்ட காட்டி தையல் போட்டாங்களாம். ஒண்ணும் பிரச்சினையில்லையாம். அவங்க வீட்டுல கொண்டு போய் விடலாம்ன்னா அவன் வேணான்டா அம்மா ஊரைக்கூட்டிருவாங்க நான் போயிடுவேன்னு பொயிட்டானாம். இதையெல்லாம் அறிவுதான் போன்ல சொன்னான். நீ எதாவது பண்ணி பிரச்சினையை பெரிசாக்கிடாதே... நாளைக்குப் பேசிக்கலாம்..."

"எனக்கு இப்பவே ராமைப் பாக்கணும் போல இருக்குடி... எப்படிடி... அவருக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சு காலையில வரைக்கும் காத்திருக்க முடியும்..." புலம்பினாள்.

"சரி... முடிஞ்சா அவனுக்குப் போன் பண்ணிப்பாரு... ஆனா ரொம்ப கவனமா இரு..." என்றபடி  மல்லிகா போனை வைக்க, "இங்க என்னடி நடக்குது?" கத்தினாள் அம்மா.

"அம்மா என்ன பிரச்சினை... எதுக்கு கத்துறீங்க... என்னடி ஆச்சு... எதுக்கு இப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறே?" கேட்டபடி வைரவன் அவளருகில் வந்தான்.

"ஏண்டா ராமைக் குத்துனீங்க... என்னோட பழகுறதுக்கு அவரோட உயிரோட விளையாடுறீங்களா?" வைரவனைப் பார்த்துக் கத்தினாள் புவனா.

"ஏ... ஏய்.... என்னடி சொல்றே? ராம்கியை குத்தினேனா... நானா... என்னடி ஆச்சு... எப்போ?"

"தெரியாத மாதிரி பேசாதடா... அந்த மணிப்பயலை வச்சி அடிக்கச் சொல்லியிருக்கே... அவனோட போனது யாரு... எனக்குத் தெரிஞ்சாகணும்..."

"மணி... நான்... இங்க பாரு மதியந்தான் அவனை காலேசுல பார்த்துப் பேசினேன். அவனை அடிக்கணுமின்னு எனக்கு எண்ணம் இருந்தா ஏன் அவன்கிட்ட போய் பேசப்போறேன். அவன் எங்கிட்ட இருக்க அன்பைவிட உன்மேல ரொம்ப பாசமா இருக்கான்... அது காதலா... கத்திரிக்காயான்னு நான் குழம்பிக்கிட்டு இருக்கேன். அப்புறம் அவனை எதுக்கு கத்தியால... அதுவும் நான்... இதுல யாரோ விளையாண்ட்டிருக்காங்க... மணிப்பய அவனை அடிக்க... ம்... தள்ளுடி..."

"டேய் அவன எவனோ கத்தியால குத்துனா இவ என்னமோ கதருறா... நீயும் பேசாம அவளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கே..."

"அம்மா... அன்னைக்கு என்னய எவனோ அடிக்கிறான்னு அவன் பாத்துக்கிட்டுப் போயிருந்தா இன்னைக்கு மாலை போட்ட போட்டோவுல சிரிச்சிக்கிட்டு இருந்திருப்பேன். அவனை அடிக்கச் சொல்லி நீங்க யார்கிட்டயாவது சொன்னீங்களா?"

"நானா... என்னடா சொல்றே? திடீர்ன்னு என்னைய கொலகாரின்னு சொல்றே...?"

"அப்ப கொஞ்சம் பேசாம இருங்க..." என்றபடி ரிசீவரை கையில் எடுத்து டயல் செய்தான்.

எதிர்முனை போனை எடுத்ததும் "சித்தி எங்க உங்க வீட்டுக்காரர்?" என்றான் கோபமாக.

"என்னடா கோபமா கேக்குற? தூங்குறாரு..."

"தூங்குறாரா... என்ன வெட்டி முறிச்சிட்டு வந்தாரு..."

"எதுக்குடா இம்புட்டுக் கோபம்? எங்கயோ பொயிட்டு புல்லா தண்ணியில வந்தாரு..."

"ம்... அதானே உம் புருஷனை அந்தப் பையனை கத்தியால குத்தச் சொன்னாங்களா?"

"எந்தப் பையனைடா...? "

"ம்... புவனா... அந்த ராம்கி பயலை..."

"ஓ... அவனையா... நம்ம புள்ள பின்னால சுத்துனா போட வேண்டியதுதானே... அதானே செஞ்சிருக்காரு.. நீ செய்ய வேண்டியதை அவரு செஞ்சிருக்காரு... இதுக்கு எதுக்கு கோபம்?"

"சித்தி கடுப்பக் கெளப்பாதே... அவன எதுக்கு அந்த மணிப்பய கூட சேர்ந்துக்கிட்டு கத்தியால குத்துனாரு... நாந்தான் அவன் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேனே... அவனுக்கு எதாவது ஆச்சின்னா அந்தக் குடும்பத்துக்கு இவரு பதில் சொல்வாரா? எப்ப எந்திரிச்சாலும் என்னைக் கூப்பிடச் சொல்லு..." என்றபடி போனை வைக்க "எதுக்குடா இப்ப அவனுக்குப் பரிஞ்சிக்கிட்டு சித்தப்பனை திட்டுறே... இனியாவது அந்தப் பய நம்ம பொண்ணு பின்னால சுத்தாம இருக்கட்டும்..." என்று கத்திய அம்மாவிடம் "அப்ப எங்க பொண்ணு அவனை லவ் பண்ணுறான்னு நீங்களே தம்பட்டம் அடிக்கப் போறீங்களா..?" என்று பதிலுக்கு கத்தினான். இவன் நல்லவனா கெட்டவனா ஒண்ணுமே புரியலையே என்று நினைத்த புவனா, 'அவனே விழகிப் போனாலும் நான் அவன இழுத்துக்கிட்டு ஓடிப்போயிருவேன்' என்று நினைத்தபடி ராம்கிக்கு போன் பண்ண, அது எங்கேஜ்டாக இருக்க கண்களில் நீரோடு அருகிலிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்.

தே நேரம்...

"நான் தலதலயா அடிச்சிக்கிட்டேன்... அவ கூட்டு வேணாம்ன்னு... கேட்டானா... இப்ப குத்துப்பட்டு வந்து கெடக்கானே..." புலம்பினாள் நாகம்மா.

"அம்மா... சத்த சும்மா இருக்கியா... கத்தி ஊரைக் கூட்டாம..." அவளை அடக்கினான் ராசு.

"என்னய அடக்குடா... அவன ஒண்ணும் கேக்காதே... நம்ம குடும்பத்துக்கு இது தேவையா... இன்னக்கி கத்தியால குத்துனானுங்க... நாளக்கி வீடேறி வந்து அடிப்பானுங்க..."

"அம்மா... சும்மா இருங்க..."

"இருண்ணே... என்னம்மா இப்ப அந்தப் பொண்ணோட பழகுறது தப்பா? நடக்கணுமின்னு இருந்துச்சு... நடந்திருச்சு... விடும்மா... எதுக்கு தேவையில்லாம அவளை இழுக்கிறே?" என்ற ராம்கி "அண்ணே.... நீங்கள்லாம் எப்படியோ அப்படித்தான் அவளும்... எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ அப்படித்தான் அவளும்... யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்கமாட்டேன்... உயிரே போனாலும்...."

"ஏய்... என்னடா சொல்றே..."

"ப்ளீஸ் அண்ணே... புரிஞ்சிக்கங்க... " என்றபடி எழுந்தான். போன் அடிக்க எடுத்தவன் எதிர் முனையில் உடைந்த புவனாவின் குரலைக் கேட்டதும் "புவி..." என்றான்.

"அவதான் பண்ணுறா... குடியைக் கெடுத்தவ... என்ன பேச்சுப் பேசுறான் பாரு... நீ ஊருக்குப் பொயிட்டு இந்தப் பயலை அங்கிட்டு கூட்டிக்கிட்டுப் போயிடு... இது இங்க இருந்தா நமக்குப் புள்ளையா இருக்காது..." கண்ணீரோடு சொன்ன நாகம்மாவை கண்களால் கட்டுப்படுத்தினான் ராசு.

"ஏய் எனக்கு ஒண்ணும் இல்ல.... எதுக்கு இப்போ அழறே..? இங்க பாரு புவி.... எனக்கு ஒண்ணுமில்லம்மா... நல்லாயிருக்கேன்... எல்லாம் நாளைக்கு காலேசுல பார்ப்போம்... ஐ லவ் யூடா..." என்றபடி போனை வைத்தான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. .. கத்திக் குத்து இதெல்லாம் .. என்ன நடக்குது இங்கே?.. பாவம்.. அந்தப் புள்ள அழுவுதில்ல!..

    பதிலளிநீக்கு
  2. அப்புடிப் போடு!சாண் போனா என்ன,முழம் போனா என்ன?

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி