முந்தைய பதிவுகளைப் படிக்க...
------------------------------------------------
48. உறவைவிட காதல் பெரிது
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள அது ராம்கிக்கு கத்திக்குத்து விழும் அளவிற்குச் சென்றது.
இனி...
ராம்கியை கத்தியால் குத்திவிட்டார்கள் என்றதைக் கேள்விப்பட்டு அவனுடன் பேசினாலும் புவனாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரவு சாப்பிடவும் இல்லை... தூக்கமும் இல்லை... எப்படா விடியும் என்று காத்திருந்தாள். சாப்பிடாமல் படுத்தபோது அம்மாதான் கத்தினாள். அம்மாவின் கத்தலுக்கு அப்பா ஊரில் இல்லாதது அவளுக்கு ஆறுதலாக இருந்தது, ராம்கியைக் கத்தியால் குத்தியதைக் கேள்விப்பட்டு இவள் துடித்தபோது அம்மாவுடன் அப்பாவும் இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. இவ்வளவு அமைதியாக இரவு கடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அம்மா அப்பாவிடம் சொல்லாமலா இருப்பாள்... எப்படிப்பட்ட புயல் வந்தாலும் எதிர்க்கொள்ள வேண்டிய நிலையில் அவளைக் காலம் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இனி வருவதை எதிர்க் கொண்டுதானே ஆகவேண்டும் அது நல்லதோ கெட்டதோ என மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
இன்னும் அவளுக்கு புரியாத புதிராக இருப்பது வைரவன்தான். இரவு அம்மா அவளைத் திட்டும்போது அவளுக்கு ஆதரவாக அம்மாவைத் திட்டி அடக்கினான். சித்தி வீட்டுக்குப் போன் பண்ணி சத்தம் போட்டான். இவ்வளவு தூரம் அவன் மாற என்ன காரணம் என்று அவளுக்குப் புரியவேயில்லை. ஒருவேளை அவன் பதுங்குவதைப் பார்த்தால் நேரம் பார்த்து பாய்ந்து விடுவானோ என்று கூட எண்ணத் தோன்றியது. அவள் வேறொரு மனநிலையில் இருந்தால் நீ நல்லவனா... கெட்டவனான்னு அவனைக் கலாய்த்து வம்புக்கு இழுத்திருப்பாள். இப்போதோ உயிரின் வலியை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறாள். சந்தோஷங்கள் எல்லாம் தள்ளி நின்று அவளை வேடிக்கை பார்த்தன. இபோதைய சூழ்நிலையில் வைரவனை நம்புவதா... வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்தாலும் அவளால் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் பொதுவாக நம்பவும் வேண்டும்... நம்பாமல் இருக்கவும் வேண்டும் என்பதே அவளின் தீர்ப்பாக வரும் வாய்ப்பே அதிகம் இருந்தது.
கல்லூரிக்கு வேகவேகமாகக் கிளம்பினாள். சாப்பிட மனமின்றி சாப்பிடாமல் போய்விட நினைத்து வாசலுக்குப் போனவளை அம்மாவின் குரல் தடுத்தது.
"இன்னிக்கு அவ கண்டிப்பா காலேசு போகணுமான்னு கேளுடா" அம்மா வைரவனிடம் சொன்னாள்.
அவனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிய அங்கு நின்றபடி வைரவனின் பதிலுக்கு காத்திருந்தாள்.
"இப்ப என்னம்மா... அவ காலேசுக்குப் போறதால உனக்கு என்ன பிரச்சினை?" உள்ளிருந்து வந்த வைரவனின் குரலில் இருந்த கடுமை அவள் முகத்தில் சோகத்திலும் புன்னகையை அரும்பச் செய்தது.
"எனக்குப் பிரச்சினை இல்லப்பா... அந்தப் பயலக் கத்தியால குத்துனதுக்கு இவதான் காரணமுன்னு காலேசுல பேசினா நமக்குத்தானே அசிங்கம்"
"அசிங்கம் நமக்கு எதுக்கு வருது... நாமலா அவனைக் குத்தினோம்... இல்ல இவ அவன் கூட ஓடிப்போனாளா... வேலையைப் பாருங்கம்மா... பிரண்டா இருக்காங்க... உங்க பழம் பஞ்சாங்கத்தால பிரண்டை ஒருபடி மேல கொண்டு போய் வேற மாதிரி ஆக்கிவிட்டுடாதீங்க... அவ சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டீங்க போல... சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி மாதிரி..."
"என்னமோப்பா... மதுரைக்குப் படிக்கப்போனதும் மீனாட்சி பார்வை பட்டுடுச்சு போல தங்கச்சி மேல இம்புட்டு பாசமாயிட்டே... நாளைக்கு எதாவது ஒண்ணுன்னா நீயும்தான் தூக்கிச் சொமக்கணும்... தெரிஞ்சிக்க... அவரு இருந்திருந்தா ராத்திரியே கொட்டத்தை அடக்கியிருப்பேன்... இவ நல்ல நேரம் அவரும் இல்ல...நீயும் ரொம்ப நல்லவனா மாறிட்டே... சரி அந்த எருமைய சாப்பிட்டுப் போகச்சொல்லு... ராத்திரியும் எதுவும் திங்கல... போகும்போது ரோட்டுல மயங்கி விழுந்து கிடக்காம..." என்று கத்தியவள் "பெரிய பிரண்டாமாம்.... எனக்கென்னவோ நம்ம வீட்டுப் பட்டுக் குஞ்சம் வெளக்குமாறை தேடிப் போயிருமோன்னு இருக்கு... ம்... எல்லாம் அந்த கொல்லங்குடி காளிக்குத்தான் வெளிச்சம்... " என்று மெதுவாக புலம்பினாள்.
"ஏய் புவனா... சாப்பிட்டுப் போ" என்றபடி வெளியே வந்தான் வைரவன்.
"வேணான்....ணா" எப்பவும் டா போட்டுத்தான் பேசுவாள். இன்றைக்கு என்னவோ அண்ணா வந்தது.
"ஆத்தி... சப்போர்ட்டுக்கு சப்பக்கட்டுப் போல.. அண்ணே போடுறாக அண்ணே... இன்னைக்கு மழதான் போ..." அம்மா அடுப்படியில் இருந்து சத்தமாகச் சொன்னாள்.
"சும்மா இருங்கம்மா... நீ வந்து சாப்பிட்டுப் போ..." என்று வைரவன் சொல்லவும் இரண்டு இட்லியை ஏனோ தானோ என்று பிச்சிப் போட்டுக் கொண்டவள் வேகவேகமாக கிளம்பும் போது போன் மணி அடித்தது. அம்மாவும் வைரவனும் வருமுன்னர் வேகமாக போனை எடுத்து "அலோ" என்றாள்.
"நான் சித்தப்பா பேசுறேம்மா..."
"சொல்லுங்க..."
"வைரா எங்க..?"
"வீட்லதான்..."
"கொஞ்சம் கொடேன்..."
"எதுக்கு... எதாவது முக்கியமான விஷயமா?"
"இல்ல ராத்திரி பேசினானாம்... அதான்..."
"என்ன ஒரு அப்பாவிய கொல பண்ணப் பாத்தீங்களே அதைப் பத்தியா?"
"இங்க பாரு புவி... உனக்குத் தெரியாது.... நான் அவனைக் குத்தலை... எதுக்கோ போயி என்னமோ நடந்திருச்சு... இதைப் பற்றி உங்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு... அவன் என்னமோ குதிச்சானாம்... அவன்கிட்டதான் பேசணும்... போனை குடு..."
"ஆமா உங்களை யாரு அவனை குத்தச் சொன்னா?"
"ஏய் என்ன வக்கீல் மாதிரி கிராஸ் கேள்வியெல்லாம் கேக்குறே... எங்க பொண்ணு பின்னாடி ஒருத்தன் சுத்துனா வெட்டுவோம்டி... இப்ப என்னங்கிறே...?" எதிர்முனையில் சித்தப்பா குரலை உயர்த்தினார்.
"என் பெயரைச் சொல்லி எனக்கு வேண்டியவங்களை எதாவது பண்ணினா நான் சொந்தமுன்னெல்லாம் பாக்கமாட்டேன்..." பதிலுக்கு புவனாவிடம் சூடு ஏறியது.
"என்னடி பேச்சு நீளுது... அங்க வந்தேன்னு வச்சிக்க மவளே பொளந்து போட்டுருவேன்... ஏதோ ஒரு எச்சிக்கலை சாதி நாயிக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு கத்துறே.... இங்க பாரு காலேசு போனமா வந்தமான்னு இருக்கணும் அதைவிட்டுட்டு அவன் பின்னாடி சுத்துனேன்னு வையி..."
"என்னய்யா பண்ணுவே... என்னையும் கத்தியால குத்துவியா..." புவனாவின் உடம்புக்குள் சாதி ரத்தம் சதிராட்டம் போட ஆரம்பித்தது. இதுக்கு மேல இவ பேசினா ஏழரையைக் கூட்டிருவா என்பதை அறிந்த வைரவன் அவளிடம் இருந்து போனைப் பறிக்க, "யார்கிட்டடி இம்புட்டு திமிரா பேசினே... உங்க சித்தப்பன்கிட்டயா?" என்று அவளை கேள்வியால் உலுக்கினாள் அம்மா.
"ஆமா... வெட்டுவாராமே... வந்து வெட்டட்டும் பார்ப்போம்... அந்தாளைவிட வீரமான பரம்பரையில பிறந்தவதான் நானும்... வேலு நாச்சியாராட்டம் அம்புட்டுப் பேரையும் சாச்சுப்புட்டு போய்க்கிட்டே இருப்பேன்... " என்று புவனா கத்திக் கொண்டிருக்க வைரவன் போனில் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருந்தான்.
"இங்க பாருங்க சித்தப்பா.... அவனும் இவளும் பிரண்டுதான்... அப்படியே பழகினாலும் எப்படி சொல்லி ரெண்டு பேரையும் மாத்தணுமோ அப்படி மாத்தப் பாக்கணும் அதைவிட்டுட்டு அருவாளைத் தூக்கினா யாருக்கு அசிங்கம் சொல்லுங்க... அவ படிக்கணும் அவளோட ஆசைய கெடுக்காதீங்கன்னு உங்ககிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன். ஆமா அந்த மணிப்பய ஒரு கொலகாரப்பாவி அவனக் கூட்டிக்கிட்டுப் போயி ஒரு சின்னப்பயல கொல்லப் பாத்திருக்கீங்களே... எதுக்கு சித்தப்பா இதெல்லாம்...ம்... தேவையானது எதுவோ அதைச் செய்யுங்க... தேவையில்லா விஷயத்துல எல்லாம் தலையிடாதீங்க... உங்க கட்டப்பஞ்சாயத்தையும் அடிதடியையும் திருப்பத்தூரோட நிப்பாட்டுங்க... தேவகோட்டைக்கு கொண்டு வராதீங்க... புவனா விஷயத்தை நாங்க டீல் பண்ணிக்கிறோம்..."
"இல்லடா அவன் காதலிச்சா என்னன்னு கேட்டதால அந்த மணிப்பய கோபப்பட்டுட்டான்... நான் கத்திக்கிட்டு வர்றதுக்குள்ளே கத்திய ஏறக்கிட்டான்....இருந்தாலும் இப்ப புவனா பேசுனதுல அவ அவனை விரும்புறான்னு என் மனசுக்குப் படுது... அதனால..."
"சித்தப்பா சொல்றது புரியிதா...? எப்படி காயை நகர்த்தணுமோ அப்படித்தான் நகர்த்தணும் அதை விட்டுட்டு நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு கத்திக்கிட்டு நின்னா... கடைசியில நாமதான் கஷ்டப்படணும்... இதை அப்பா வரைக்கும் கொண்டு வராதீங்க... நான் பார்த்துக்கிறேன்..." என்று அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்தவன் "அம்மா இந்தாளு தேவையில்லாம குட்டையில கல் எறியிறாரு... அது கலங்கினா நமக்குத்தான் நஷ்டம்... உங்ககிட்ட பேசினா விவரமாச் சொல்லுங்க... அப்பா வந்ததும் பத்த வச்சிறாதீங்க... நெருப்பை எப்படி அணைக்கிறதுன்னு பாக்குறதுக்கு முன்னாடி பரவாம தடுக்கப் பாக்கணும்... அணைக்கிறேன்னு அவசரப்பட்டு இறங்கிட்டு புல்லா பரவினதும் பொருள் நாசமாச்சின்னு புலம்பக்கூடாது. புரியிதா" என்று அம்மாவைப் பார்க்க அவள் பூம்பூம் மாடு கணக்காக தலையாட்டினாள்.
ஆஹா இவன் என்ன திட்டம் போடுறான்னு தெரியலையே... குண்டக்க மண்டக்க பேசுறானே... எப்படியிருந்தாலும் புவனா நீ உறுதியா இருடி.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என மனதுக்குள் நினைத்தபடி சைக்கிளை எடுக்க "புவனா...நான் அங்கிட்டுத்தான் போறேன்.... உன்னைய காலேசுல விட்டுடுறேன்... சாயந்தரம் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.." என்றபடி வைரவன் வண்டியை எடுக்க ஒன்றும் பேசாமல் அவள் ஏறிக்கொள்ள வண்டி கல்லூரி நோக்கிப் பயணித்தது.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குஅடுத்த தொடருக்காக காத்திருக்கேன் தொடருங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புவனா வுக்கு 'பல்ஸ்' எகுறுதோ இல்லியோ,நமக்கு எகிறுதுங்க!நடக்கட்டும்,நடக்கட்டும்.............ஹூம்!
பதிலளிநீக்குஅடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.. புவனாவிற்கு மட்டுமல்ல எங்களுக்கும்....
பதிலளிநீக்குஇது என்னுடைய வலைப்பக்க முகவரி..
http://pudhukaiseelan.blogspot.com/
ஆவலுடன் அடுத்த கட்டத்தை எதிர் பார்த்து!
பதிலளிநீக்கு