சனி, 9 நவம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 27

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

27. பொங்கல் இனிக்கவில்லை

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  பொங்கலுக்கு ராம்கி ஊருக்கு வருவதாகச் சொன்ன புவனா குடும்பச் சூழல் கருதி செல்ல வேண்டாம் என முடிவு செய்கிறாள். அவளுக்காக மல்லிகாவும் மற்ற தோழியரும் போகும் முடிவை கைவிடுகிறார்கள்.

இனி...

"வாங்கடா... அண்ணே என்னோட பிரண்ட்ஸ் வந்திருக்காங்க..."

"வாங்கப்பா... என்ன சரவணா எல்லாரும் எப்படியிருக்கீங்க..?"

"நல்லா இருக்கோம்ண்ணே..."

"இது சேவியர், அண்ணாத்துரை இவங்களை உங்களுக்குத் தெரியாதுல்ல..."

"ம்... வாங்கப்பா... எப்படிப் போகுது படிப்பெல்லாம்..."

"நல்லாப் போகுதுண்ணே..."

"சீதா தம்பிகளுக்கு சாப்பிட எதாவது கொடு... சரி... நீங்க பேசிக்கிட்டு இருங்க... நான் பொங்க வைக்கிற இடம் சுத்தம் பண்ணக் கூப்பிட்டாங்க பொயிட்டு வந்துடுறேன்..." என்றபடி ராசு கிளம்பினான்.

"உக்காருங்கடா... டேய் சரவணா இங்க வாடா..."

"என்னடா..."

"மல்லிகா வாரேன்னு சொன்னாளாடா..."

"அவளுக தனியா வாரேன்னாளுங்க... வருவாளுங்க... இப்ப என்ன அவசரம்..?"

"அதில்லை... சும்மாதான் கேட்டேன்..."

"எனக்குத் தெரியுண்டா... நீ யாருக்காக கேக்கிறேன்னு உனக்கு இப்பல்லாம் எங்களைவிட அவதான் முக்கியமாயிட்டா இல்ல..."

"அப்படியெல்லாம் இல்ல... வாரேன்னு சொன்னாங்களான்னு கேட்டேன்... விடு... வா அக்கா பலகாரம் வச்சிருச்சு... சாப்பிடலாம்..."

ரே கூடி பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, ராம்கி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். அவர்களிடம் வந்த சேகர் "என்னடா மச்சான்.... பிரண்ட்ஸ் எல்லாம் வந்துட்டாங்களா... ஆமா முக்கியமான ஆளு வந்தாச்சா... ம்ம்..." என்றான்.

"நீ வேற சும்மா இருடா... இதுதான் என்னோட பிரண்ட்ஸ்..." என்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து விட்டு "சரவணா வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்... வாடா..." என்றான்.

"எதுக்குடா...? வீட்ல என்ன வச்சிருக்கே?"

"இல்லடா... பொண்ணுங்க வந்தாங்கன்னா..."

"இன்னும் வருவாங்கன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா... அப்படியே வந்தாலும் வீட்ல அக்கா இருக்காங்க... அப்புறம் என்ன.."

"இல்ல... வரும்போது நாம இருந்தா நல்லதுல்ல..."

"நீ அவளைத் தேடுறேன்னு தெரியுது... எல்லோரும் சந்தோஷமா இருந்தாலும் அவ வரலையின்னு நீ சந்தோஷமாவே இல்லைங்கிறது நல்லாவே தெரியுது... சரி வா..."

"இரு சேகரையும் கூட்டிக்கிட்டுப் போவோம்..."

"அவனெதுக்கு?"

"அவங்க வீட்ல போன் இருக்கு... மல்லிகா வீட்டுக்குப் போன் பண்ணி கிளம்பிட்டாங்களான்னு கேக்கலாம்"

"ஏன்டா ஏழரையைக் கூட்டுறே... அவங்க வீட்ல வேற யாராவது எடுத்துட்டு பசங்க போன் பண்ணுறாங்கன்னு பிரச்சினையாக்கவா... பொண்ணுங்கல்லாம் வர்றதுன்னா சாதாரண விஷயமில்லை... வந்தா வரட்டும்... இல்லைன்னா பேசாம விட்டுட்டு வேலையைப் பாரு... காலேசுல போய் கேட்டுக்கலாம்."

"ம்.. சரி... வா வீட்டுக்குப் பொயிட்டு வருவோம்..."

"ன்னடா... எதுவும் வேணுமா? அம்மா எதுவும் கேட்டாங்களா?" என்றாள் சீதா.

"இல்லக்கா... பிரண்ட்ஸ் வர்றேன்னு சொல்லியிருந்தாங்க... அதான் வந்தாங்களான்னு பாக்க வந்தோம்..."

"யாரும் வரலை... நீ அங்க போய் பசங்களோட இரு... வந்தா நான் கூட்டியாந்து விடுறேன்... என்ன சரவணா... வர்ற பொண்ணுங்கள்ல இவனுக்கு ரொம்ப வேண்டிய பொண்ணு எதுவும் இருக்கா?"

"அப்படியெல்லாம் இல்லக்கா."

"இல்ல... பய நேத்துல இருந்து ஒரு மார்க்கமா இருக்கான்... அப்புறம் புவியோ சவியோன்னு ஒரு கிரீட்டிங்க்ஸ் வந்துச்சு அண்ணன் துருவித் துருவிக் கேட்க, பசங்க அனுப்பியிருப்பாங்கன்னு கதை விட்டுட்டான்..."

புவி என்றதும் சரித்தான் பய மாட்டப்பாத்திருக்கான்... நம்ம மேல பழியைப் போட்டு தப்பிச்சிருக்கான். சரி மாட்டிவிட வேண்டாம் என்று நினைத்தபடி "அதுவாக்கா... நாங்கதான் பிரண்ட்ஸைக் கலாய்க்க இப்படி போட்டோம்... வேற யாரு போடப்போற... இவனுக்குப் புவி, அறிவுக்கு சுபான்னு நாங்களா பொண்ணுங்க பேரைப் போட்டு விட்டோம்... "

"நீங்க பண்ணுன கூத்துதானா அது... ஆனா இவனுக்கு வந்த கோபத்தைப் பார்த்தா வேற மாதிரி நினைக்கத் தோணுச்சு..."

"ஹா... ஹா... பய திட்டு வாங்குனானா... டேய் வாடா போகலாம்... அக்கா பொண்ணுங்க வந்தா கூட்டிக்கிட்டு வாங்க.. வாடா..."

இருவரும் மீண்டும் பொங்கல் வைக்கும் இடத்தை நோக்கி நடக்க, "என்னடா... வாழ்த்தெல்லாம் வர்ற அளவுக்கு போயாச்சா...?"

"பிரண்ட்லியா அனுப்புறது தப்பா..?"

"தப்புன்னு சொல்லலை... ஆனா பிரண்ட்ஷிப்தானா இல்ல அதையும் தாண்டி..."

"பிரண்ட்டுதான்... வேற ஒண்ணுமில்லடா..."

"என்னமோ மறைக்கிறே... நடக்கட்டும் நடக்கட்டும்... எப்படியும் எங்களுத் தெரியாமப் போகாது... ஊரை விட்டு கூட்டிக்கிட்டுப் ஓடினாலும் நாங்கதான் உதவனும்.."

"சும்மா இருடா... கூட்டிக்கிட்டு ஓடுறாக... அது இதுன்னு..."

"சரிடி.. பாப்போம்டி... சேகர் கேக்கும்போதே எனக்குச் சந்தேகந்தான் இப்ப அக்கா சொன்னதும் உறுதியாயிருச்சு..."

"நீ வேற சும்மா வாடா"

ஊர் கூடி பொங்கல் விழாவில் திட்டிக்குழி சுற்றி... ஆடு, மாடுகளுக்கு சாதம் கொடுத்து சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்க புவனா வராததால் எதிலும் மனம் ஒட்டாமல்  நண்பர்களுடன் ஓர் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கேலி முறைக்காரர்கள் திட்டிக்குழி சாதம் எடுத்து ஒருவருக்கு ஒருவர் முகத்தில் தீட்டிக் கொண்டு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள, எப்பவும் தன்மீது சாதம் தீட்டும் ராம்கி இன்று பேசாமல் நிற்பது கண்டு என்னாச்சு இவனுக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் பின்னால் வந்த காவேரி மிளகாய் நிறைந்த சாதத்தை முகத்தில் தேய்த்துவிட்டு ஓடினாள்.

தே நேரம்... 

"என்னடி எப்பவும் ஓவரா ஆட்டம் போடுவே... இன்னைக்கு என்னாச்சு..." என்று உறவுப் பெண்கள் கேட்க, "ஒண்ணுமில்லயே... எப்பவும் போலத்தான் இருக்கேன்..." என்ற புவனா பொங்கல் விழாவில் மனம் ஒட்டாது ராம்கி இந்நேரம் நான் போகலைன்னு வருத்தப்படுவானே என்று தவித்துக் கொண்டிருந்தாள்.


(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. எங்களுக்கும் தவிப்பாகத் தான் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. தொடரகதையா குமார் முன்னர் உள்ளதை முழுக்க வாசித்துவிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  3. என்றாலும் ஏமாற்றம் தான்,நமக்கும்!

    பதிலளிநீக்கு
  4. பொங்கலுக்குப்பதில் பொங்குகிறவை நினைவுகளாக/

    பதிலளிநீக்கு
  5. நாங்களும் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே..
    தங்கள் தொடர் ரசிக்க வைக்கிறது. முன்கதை சொல்லிக் கதையைத் தொடங்குவது சிறப்பு. எங்களுக்கும் தவிப்பு இருப்பதில் ஒரு ஞாயம் இருக்கத் தானே செய்கிறது. தொடருங்கள் தொடர் வாசகர் ஆகி விட்டேன் தங்கள் தொடருக்கு நான். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  7. வாங்க துரை அண்ணா...
    தவிப்பாய் இருந்தால்தான் காதல் சிறக்கும்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஷைலஜா அக்கா...
    ஆமாம் தொடர்கதைதான்.... வாசித்து உங்களது மேலான கருத்தைச் சொல்லுங்கள்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க சகோ. யோகராஜா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க விமலன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜெயக்குமார் ஐயா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ. பாண்டியன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி